Tuesday, September 8, 2020

 

ஸ்ரீ பகவன் நாம வைபவம்

 

''அகர முதல வெழுத்தெல்லா மாதி
 பகவன் முதற்றேயுலகு''
                                     - (குறள்) (1)

 

எழுத்துகளெல்லாம் "அ'' கரத்தை முதலெழுத்தாக உடைத்தாயிருக்கின்றன. அதே போல, இவ்வையகம் ஸ்ரீ பகவானையே - கடவுளையே முன்னிலையாகக் கொண்டு உண்டாயிருக்கின்றது. கடவுளில்லையேல் இவ்வுலகுமில்லை. ஆகையால், இவ்வுலகிலுள்ள மாந்தர் அனைவரும் இவ்வுலகந் தோன்றக்காரண பூதனாயுள்ள உத்தமனைப் போற்றி வழிபடல் வேண்டும்.


''ம்ருத் பிண்ட மோகம் பஹுபாண்ட ரூபம்
 ஸவர்ண மேகம் பஹூ பூஷணாத் மகம்
 கோக்ஷர மேகம் பஹுதேனு ஜாதம்
 ஏக பராத்மா பஹுதேஹ வர்தீ ||
                             - (நீதிசா) (2)

 

பாண்டங்கள் பலவகையானாலும் அதன் மூலகாரணமான மண் ஒன்றே. ஆபரணங்கள் அநேக தினுசுகளானாலும் அவைகள் உற்பத்திக்குக் காரணமாகவிருந்த பொன் ஒன்றே. பசுக்கள் பலவகையானாலும் அவற்றினிடத்தினின்றும் உண்டாகும் பால் ஒன்றே. அதேபோல சரீரம் பலவானாலும் அவைகளினிடம் குடி கொண்டிருக்கும் பரமாத்மா ஒருவனே யாவன்.


''எகமேவாத்விதீயம் " என்ற அத்வைத வாக்யம் கவனிக்கத்தக்கது.

 

ஏகமாய், ஸர்வமாய், ஜகத் ஜோதியாய், எல்லாம் வல்ல பரம் பொருளைப்போற்றி வழிபடுவதினாலேயே நாம் இம்மானிடப் பிறவியை யெடுத்ததன் பயனைப் பெற்றவராவோம்.

 
"அரிது அரிது மானிடராதல் அரிது''                             - (ஒளவை) (3)


என்றபடி கிடைத்தற்கரிய இம்மானிடப்பிறவி கிடைத்துள்ள இச்சமயத்தை, "கண்டதே காக்ஷி கொண்டதே கோலம்'' என்றபடி வீண் போக்காமல்," காற்றுள்ளபோழுதே தூற்றிக்கொள்'' என்பது போல எல்லாந்தானாகவுள்ள ஏக, பரம் பொருளை மனமாரப் போற்றி, அவரிடம் இடையறாத பக்தியைச் செலுத்தி அவரது பரிபூரணமான அனுக்கிரகத்தைப் பெற முயல வேண்டும்.

 

"இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ''                               (4)


என்றபடி பெறற்கரிய அறிவாகிய பகுத்தறிவிற்கு ஆதாரமான இப்பிறவியை, ஸ்ரீ பகவத் பக்தியி லீடுபடுத்தி பேரின்பப் பெரும்பேற்றையடைய முயலாவிட்டால் பிறகு எவ்விதமான பிறவி கிடைக்குமோ யாரறிவார்?

 

இக்கலியில் இகத்தில் சுகத்தையும், பரத்தில் பேரின்பப் பெரும் பேற்றையும், - மோக்ஷத்தையும் அளிக்கவல்லதும், எல்லோராலும், எச்சமயத்தாராலும் - எப்போதும் - எச்சமயத்திலும் அனுஷ்டிக்கத்தக்கதும், எவ்விதத்திலும் மிக்க சுலபமானதுமான மார்க்கம், - வழி, ''ஸ்ரீ பகவத் பக்தி'' செய்தலேயென்று பல பெரியோர்களும் கூறிப் போந்துள்ளார்கள்.

பக்தி செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவ் வழிகளுள் ''ஸ்ரீ பகவன் நாமஸ்மரண, - நாம நாமோச்சாரண, - நாமஸங்கீர்த்தன" மே ராஜபாட்டையாகும் என்றும் கூறியுள்ளார்கள்.


 "த்யாயன் க்ருதே யஜன் யஜ்ஞை:
 த்ரேதாயாம் த்வாபரே ஸர்ச்சயன்
 யதாப்நோதி ததாப்நோதி
 கலௌ ஸங்கீர்த்திய கேசவம் ||     
                              (5)

 

க்ருத யுகத்தில் (அநேக வர்ஷகாலம்) த்யானத்தைச் செய்து வந்தவனும், த்ரேதா யுகத்தில் (அநேக) யாகாதி க்ரியைகளைச் செய்து வந்தவனும், த்வாபர யுகத்தில் (ஸஹஸ்ர நாமார்ச்சனை, லக்ஷார்ச்சனை, முதலியவைகள் செய்து அபிஷேகாதி) பூஜைகளைச் செய்து வந்தவனும், எந்தவிதமான பலனை யடைவானோ அதே பலனை இக்கலியில் ஸ்ரீ பகவன் நாமஸங்கீர்த்தனை செய்து வரும் தொன்றினாலேயே அடையப் பெறலாகும். ஸ்ரீபகவன் நாமத்தின் மகிமையைக் கூற ஆயிரம் சிரசுடைய ஆதிசேஷனாலும் முடியாதென்றால் கேவலம் சிற்றறிவு பெற்றுள்ள நம்மால் கூறுவதென்பது முடியுமா?


''பக்தியைச் செய்தால் முக்தியைப் பெறலாம்"

 

நயவஞ்சக சித்தத்துடன் கூடியவர்களாயும், மகத்தான பாபஸம்பந்த மாய் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு வாழ்பவர்களாயும் ஸ்ரீபகவானின் ஆக்ஞாஸ்வரூபமாக வுள்ளதான சாஸ்திர விதி நிஷேதங்களை மீறி நடப்பவர் களாயு முள்ளவர்களுக்கு அப்பாப ஸம்பந்தத்தினின்றும் விடுபட மார்க்க முளதா வெனின்: -


 "கலௌ கல்மஷ சித்தாநாம்
 பாபத்ரல் யோப ஜீவிநாம்
 விதிக்ரியா விஹீநாநாம்
 கதிர் கோவிந்த கீர்த்தநாத்''

 

"இக்கலியில் மகத்தான கபட எண்ணத்துடன் கூடியவர்களுக்கும் பஞ்சமஹா பாபங்களைச் செய்து அதனால் கிடைக்கும் திரவ்யத்தைக் கொண்டு வாழ்பவர்களுக்கும், சாஸ்திர விதிகளைக் கடந்தவர்களுக்கும், (கதியாதெனில்;) ஸ்ரீகோவிந்தநாம ஸங்கீர்த்தனமே கதியாகும்". அதாவது ஸ்ரீபகவந்நாம ஸ்வரூபமான, - ஸ்ரீபகவத் குணாதிசயங்களைப் புகழ்வதான, பாடல்களை உள்ளன்புடன் பாடி, ஸதா பகவந்நாம ஸ்மரணம் செய்து கொண்டிருந்தால், அவனது அற்புதக் கருணாகடாக்ஷத்தால் எப்பேர்க் கொத்த பாபமானாலும் சூரியனைக்கண்ட பனிபோல விலகி விடும்" என்பதாம்.


 "கலேர்தோஷ நிதே ராஜந் நஸ்தி
      ஹ்யே கோ மஹந்குண: |
 கீர்த்தநா தேவக்ருஷ்ணஸ்ய முக்த

பந்த: பரம் வரஜேத் ||"

 

"மகத்தான தோஷங்கள் நிறைந்துள்ளதான இக்கலியில் ஒரே ஒருநன்மை மட்டும் குன்றிலிட்ட தீபம்போல மிகவும் சிறந்து பிரகாசிக்கின்றது.

 

அது யாதெனில், - திவ்யமங்கள ஸ்வரூபனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய உத்க்ருஷ்டமான திவ்ய நாமத்தை உச்சரித்தலாம். அதினாலேயே மானிடர்கள் ஸமஸ்தமான பந்தங்களி னின்றும் விடு பட்டுப் பரமபதத்தை யடையக்கூடும்"

 

காலசக்ரமோ சற்றேனும் நில்லாமல் ஓடிக்கொண்டே யிருக்கின்றது. சென்றகாலம் மீண்டும் வரப்போகின்ற தில்லை யென்பது திண்ணம். காலனோ காலத்தை யெதிர் பார்த் திருக்கின்றான். 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்' என்றபடி காற்றாகிய இச்சரீரம் இருக்கும் பொழுதே தூற்றலாகிய ஸ்ரீபகவந் நாமத்தை உச்சரித்து அவனது அருட்பாத கமலங்களை யடைய முயலவேண்டும்.


 “காலக்ஷே போ நகர்த்தவ்ய:
 க்ஷணமாயு: க்ஷணே க்ஷணே |
 யமஸ்ய கருணா நாஸ்தி
 கர்த்தவ்யம் ஹரி கீர்த்தகம் ||

 

"(உனது) ஆயுளானது நிமிஷத்திற்கு நிமிஷம் தேய்ந்து கொண்டே வருகின்றது. யமனுக்கோ கிஞ்சிற்றும் கருணை என்பதே கிடையாது. ஆதலால் நீ வீண் பொழுது போக்காமல் ஸ்ரீபகவந் நாம வைபவ கீர்த்தனாதிகளைப் படனம் செய்''.


 "ஹரேர் நாமைவ் நாமைவ
 நாமைவ மம ஜீவநம்
 கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
 நாஸ்த்யேவ கதி ரன்யதா''

 

"கலியில் ஸ்ரீபகவந் நாம ஸ்மரணந்தான் எனக்கு ஜீவனமாக உள்ளது. அதுவே மிகச் சிறந்தது. உத்த மோத்தம மானது. அதைவிட்டால் கடைத்தேற வேறு உபாயமே கிடையாது. அப்படிக் கிருந்தாலும் ஸ்ரீ பகவந்நாம ஸ்மரணத்தைப் போன்று எக்காலத்திலும், எல்லோராலும், மிகச்சுலபமாக அவற்றை அனுஷ்டிப்ப தென்பது முடியாது. முக்காலும் சொல்லுகின்றேன். இதிற் கொஞ்ச மேனும் சந்தேகமே கிடையாது.''

ஸ்ரீபகவானே கூறுகின்றார்:

 
''விஸ்ராஜ்ய லஜ்ஜாம் யோதீதே
மந் நமாமி நிரந்தரம் |
குலகோடி ஸமாயுக்தோ
லபதே மாமகம் பதம் ||

 

மனப்பூர்வமாய், - உள்ளன்புடன் கூடி எவனொருவன் எனது நாமத்தைக் கொஞ்சமும் லஜ்ஜை யென்பதில்லாமல் உச்சரிக்கின்றானோ, அவனும் அவனது குலத்தோர்களும் என்றென்றும் அழியாத எனது பதத்தையடைகின்றார்கள். இஃது உண்மை வாக்கே யாகும்.


 "நாமஸங் கீர்த்தனமே
 நல்லதோர் மார்க்கம்''

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment