Monday, September 7, 2020

 வேதாந்த சாஸ்திரார்த்த வாக்கியாமிர்தம்-400

 

1. கல்வி - கேள்வி - அறிவு - ஒழுக்க முடையவரை யடுத்து அவர் கூறியவாறு நடப்பவர்க்கு இம்மையிலும் மறுமையிலும் “இது கிடைக்க வில்லையே" என்னும் ஏக்கத்தால் வருந்துவது சிறிது மில்லையாம்.

 

2. பொருள் தேடுதல் - போகத்தை யநுபவித்தல் என்பவற்றைப் பயிற்சி செய்யும் முயற்சி காலக் கிரமத்தில் எவர்க்குந் துன்பத்தையே தருவதாம்; ஆனால், அல்லல் வாழ்க்கையி னின்றும் நீங்கி ஆநந்த வாழ்க்கையைப் பெறச் செய்யும் முயற்சியே எவர்க்கும் இன்பத்தைத் தருவதாம்

 

3. ஞாநிகளது நட்பு ஒருவர்க்குக் கிடைப்பது மிகமிக அருமையாம்; அது கிடைத்து விடுமாயின், அவர் நம்மனோர் நாவாயில் (கப்பலில்) கடலைக் கடந்து விடுவது போல, அந்நட்பால் பிறவிக்கடலைக் கடந்து விடுதற்குரியராவர்.

 

4. இப்பி கருப்பங் கொள்ளுமாயின், அஃது அதனது நாசத்திற்குக் காரணமா மென்பது பிரசித்தமாம்; அங்ஙனமே, ஒருவன் யாதாவதொரு பொருளைப்பற்றிப் பேராசை கொள்ளுவானாயின், அஃது அவனது நாசத்திற்குக் காரணமாம்.

 

5. சீவர்கள் பிறப்பதற்குக் காரணம் அவர்கள் மரண மடையும்போது கொள்ளும் உலக சம்பந்தமான எண்ணமேயாம்; அவ் வெண்ணமில்லா திறப்பவர் பிறப்பதில்லையாம்.

 

6. பிறர் இறப்பதைத் தாம் பலமுறை கவனித்துக் கண்டிருந்தும், நாம் மாத்திரம் இறக்க மாட்டோம், இமயமலை போல என்றும் இப்படியே யிருப்போம்' என்னும் தீர்மான முடையவர்தாம் மூடர்களுள் முதன்மையான மூடராவர்; அவரோடு நட்புக் கொள்ளுபவர்க்குத் துன்பந் தொடர்பாக வருவதாம்.

 

7. கிழக்கே உதயமாகும் சூரியன் மேற்கே அஸ் தயிப்பது நிச்சயமாம்; மேலே எறிந்த கல் கீழே விழுதலும் நிச்சயமாம்; அங்ஙனமே, பிறந்தவர் இறப்பதும் நிச்சயமாம்; அதனால், நாம் இறப்பது நிச்சயமாம் என்பதை மறவாதிருப்பவர் தீவினை செய்வது சிறிது மில்லையாம்.

8. சீவர்களுக்கு இளமைப்பருவம் அதி சீக்கிரத்தில் மாறிப்போவது உள்ளங் கையிலுள்ள நீர் அதி சீக்கிரத்தில் வற்றிப் போவது போல்வதாம்-அதனால் எவரும் தம் மிளமைப்பருவத்தைக் கண்டு இறுமாந் திருப்பது கூடாது; ஆனால், தம் மிளமைப்பருவம் கழிவதற்கு முன்னே தாம் செய்யவேண்டியவற்றை மறவாதும் தவறாதும் செய்தல் வேண்டும்; செய்தாற்றான் சுகமடைதலாம்.

 

9. வயோதிகரிடத்து ஆசைவளருதல், மழைக் காலத்தில் சுரைக்கொடிவளருதல் போல்வதாம்; அதனால், அவர் உண்பாரைக் கண்டும் உடுப்பாரைக் கண்டும் பொறாமையுற்றுத் துக்கமடைகின்றனர் - யௌவனப் பருவம் உள்ளபோதே நல்லோரது நட்பினால் நிராசையைச் சம்பாதித்துக் கொண்டவன், வயோதிகப் பருவத்தில் பிறரது ஆக்கத்தைக் கண்டு பொறாமை யுற்று வருந்துவதில்லையாம்.

 

10. வெயிற்காலத்தில் குளம் முதலியவற்றுள் நீர் இல்லா தொழிவது போல எவர்க்கும் வயோதிகப் பருவத்தில் அழகில்லா தொழிகின்றது; அதனால், எவரும் எப்போதும் நாம் அழகாயிருப்போ மென்று கர்வங் கொள்வது கூடாது; கர்வங் கொண்டவர் கனம் பெறுவதில்லையாம்.

 

11. சீவர்கள் யௌவனப் பருவத்தில் அநுபவிக்கும் இன்பங்கள் அவர்களுக்கு வயோதிகப் பருவம் வந்தபோது, வில்லாளிகள் வில்லில் தொடுத்த அம்பு அதனை விட்டு நீங்கி வெகு தூரம் சென்று விடுவதுபோல, அவரை விட்டு நீங்கி வெகுதூரம் சென்று விடுகின்றன; அதனால், எவரும் செல்வச் சிறப்பினால் நாம் இன்பமுடை யவரா யிருக்கின்றோம் என்று இறுமாந்திருப்பது கூடாது; றுமாப்பால் கெட்டவர் எண்ணிறந்தவ ராவர்.

 

12. ஒருவனுக்குச் சுகபோகம் மிகுதியாக வருவது அவனுக்குப் பெருவியாதி வருவது போலவாம்; சுகபோகம் மாறும்போது அது தன்னை யுடையவனுக்கு சொல்லுதற்கரிய துன்பத்தைத் தருதலின், பெரு வியாதியினும் மிகக் கொடியதாம்.

 

13. ஒருவனுக்குச் செல்வம் பெருகி வருவது அவனுக்கு ஆபத்து பெருகி வருவதைத் தெரிவிப்பதாம். செல்வமுடையவர் எப்பொழுதும் அச்சமுடையவராயும், காவலுடையவராயும் இருக்கின்றனனர். செல்வமுடையவர் உலோபிகளாக இருப்பராயின், அவருக்குப் பலரும் பகையாகி விடுகின்றனர். அதனால் செல்வம் பெருகி வருவதைக் கண்டு எவரும் களிப்படைதல் கூடாதாம்.

 

14. நாம் சாவதற்குக் காரணம் பிறப்பதேயாம். நாம் பிறவா திருக்கும் நிலையைப் பெறும் பாக்கியமுடையவ ராவோமாயின் செத்துப் பிறக்கும் சங்கடத்திற்குரியவ ராகோம்.

 

15. சூரியனைப் பிரத்தியட்சமாகப் பார்ப்பவருக்கு இருளில்லா தொழிவதுபோல தன்னை (ஆத்மாவை) பிரத்தியட்சமாகக் கண்டவர்க்குப் பிறப்பில்லா தொழிவதாம். நமக்குக் கவலையுண்டாவதற்குக் காரணம் நாம் நீண்ட நாள் நோயின்றி, வறுமையின்றிப் பகையின்றி வாழ வேண்டுமென்று எண்ணும் எண்ணமேயாம். நோயின்றியும், வறுமையின்றியும், பகையின்றியும் வாழ்வது எவர்க்கும் முடியாத தொன்றாம். அடுத்த க்ஷணத்தில் நாமிருப்பது நிச்சயமன்று

 

16. என்னும் ஸ்திர புத்தியுள்ளவர் தாம் கவலையுற்று வாழ்வதற்குரியவ ராவர் -குவலயத்தில் கவலையற்றவனே கடவு ளாவன் என்பது ஒரு பிரசித்தமான பழமொழியாம்.

 

17. துறந்தவர்க்கே வீடுண்டாகுமென்பது சாஸ்திரங்களின் நிச்சயமாம். துறப்பதென்பது எதனை யெனின், அது சரீரத்தில் யான் என்று கொண்டுள்ள விபரீத புத்தியையாம். அப்புத்தியை விட்டவர் தாம் உண்மைத் துறவினராவர். நமக்கு யமன் துறவு ஈவதற்கு முன்னரே நாம் சரீரத்தில் யானென்று கொண்டுள்ள அபிமானத்தை விட்டால் தான் சுகமடைதற் குரியவராவோம்.

 

18. சுகர் - வாமதேவர் - துர்வாசர் - அகஸ்தியர் - வசிஷ்டர் - பராசரர் - வியாசர் , திருமூலர் - சிவவாக்கியர் - ஞாநசம்பந்தர் - அப்பர் - சுந்தரர் - மணிவாசகர் - சட்கோபர்-பொய்கையார்-பேயார் பூதத்தார்-காரைக்கால் அம்மையார்-பட்டினத்தடிகள்-பத்திரகிரியார்-தாயுமானவர்-சிவப்பிரகாசர்-சாந்தலிங்கர்- குமாரதேவர்- சிதம்பர சுவாமிகள் - சச்சிதாநந்த சுவாமிகள் முதலாயினோர் பற்றற்ற பரமஞாநிகளாய் விளங்கியதற்குக் காரணம் அவர்கள் பரமேசுவரனுடைய அருளை முன்னிட்டுச் சற்குரு கிருபையால் தமது யதார்க்த சொரூபத்தை உள்ளபடி சுவசொரூபமாகக் கண்டமையேயாம். அங்ஙனமே நாமும் நமது யதார்த்த சொரூபத்தை ஈசுவரனது அருளை முன்னிட்டுக் சற்குருவின் கிருபையால் சிவசொரூபமாக அறிவோமாயின் பற்றற்ற பரம ஞாநிகளாய் விளங்குவதற்குரிய
வராகுவோம்-அப்போது தான் நாம் அல்லலற்று வாழ்வதற்குரிய வாழ்க்கை யைப் பெற்றவராவோம்.

 

19. பிராணிகளிடத்திற் கருணையும், கிடைத்த வளவில் சந்தோஷமும், எவரிடத்திலும் நட்பும், உலகப் பொருள்களைத் துரும்பு போல் காண்டலாகிய உதாசீனமும் உடையவர் தாம் உண்மையான வேதாந்திகளாவர், இந்நான்கு குணங்களி லொன்றேனு மில்லாத ஒருவர் தம்மை வேதாந்தி யென்று சொல்லிக் கொள்வது உலகத்தாரை வஞ்சிப்பதற்கேயாம்.

 

20. மலரிலுள்ள வாசனை சிறிது சிறிதாக நீங்கி விடுவது மிகப் பிரசித்தமாம். அங்ஙனமே நமது மனத்திலுள்ள கெட்ட எண்ணங்கள் நல்லோரது நட்பினால், சிறிது சிறிதாக நீங்கி விடுமாயின், நாம் சுபமான காரியங்களை மறந்துஞ் செய்தற்குரியவ ராவோம். ஈனத் தொழில் புரிபவர்க்கு இடனைத்தும் சொந்தமாம் என்பது மிகு பிரசித்தமாமன்றோ.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - செப்டம்பர் ௴

 



  

No comments:

Post a Comment