Tuesday, September 8, 2020

 

ஶ்ரீமதி சரோஜினி தேவி

 

1. பூர்வாங்கம்

 

நீர்வள நிலவளம் நிரம்பிய வங்க நாட்டில் கங்காநதி பாயும் பைரம் நகரம் எனும் ஊரில் புராதன அந்தணர் மரபின் வழித் தோன்றிய சாடர்ஜி வம்சத்தில் அகோர நாத சட்டோபாத்தியாயர் சீருஞ் சிறப்புங் கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் பழையதொரு பிராமண குடியிற் பிறந்தும், நவீன ஆசார சீர்திருத்தங்களையே பின் பற்றி இக் காலத்திற் கேற்றவாறு மேனாட்டுச் சரித்திர சாஸ்திர அனுபவத்தை மேற்கொள்ள கடற் பிரயாணஞ் செய்தார். தென்னிந்தியாவைப் போன்றே, வங்கநாட்டிலும் வைதீகர்கள் கடல்யாத்திரை சாஸ்திர சம்மதமன்று எனுங் கொள்கையைக் கொண்டு கூக்குரலிட்டனர். ராஜாராம் மோஹன்ராய் போன்ற பிராமண பிரமுகர்கள் கடல் கடக்க ஆரம்பிக்கவே, நாளடைவில் இக் கூக்குரல் ஒருவாறு மறைந்து, எண்ணிறந்த இளைஞர்கள் ஆண்டு தோறும் மேனாட்டுக்குச் செல்வாராயினர். அகோரநாதர் இங்கிலாந்திற்குச் சென்று கல்வி பயின்று 1877 –ம் வருடத்தில் எடின்பர்க் எனும் நகரிலுள்ள சர்வகலா சபையில் சாஸ்திர பட்டமும் பெற்றார். இத்துடன் இவர் சாஸ்திர அநுபவம் கொள்ள சொற்ப காலம்பான் நகர சர்வகலாசாலையிலும் இருந்தார். இங்கிலாந்தில் சாஸ்திர பட்டம் பெற்று, இந்தியாவிற்குத் திரும்பினவுடன் இவர் நைஜாம் இராஜ்ஜியத்தின் தலைநகரான ஐதராபாத்தில் நைஜாம் காலேஜ் எனும் சர்வகலா சபை யொன்று ஸ்தாபித்தார். அந்நாள் முதற்கொண்டே இவர் கல்வியின் முன்னேற்றத்திற்காகச் சாலவும் உழைத்து வந்தார். இத்தகைய கல்விப் பிரியரின் ஹீமந்த (மூத்த) புத்திரியே நம் சரோஜினி தேவியார்.

 

2. பிறப்பும் இளமையும்

 

இவ்வம்மையார் 1879 - ம் வருஷம் பிப்பரவரி மாதம் 13ந் தேதியன்று ஐதரபாத்தில் பிறந்தார்கள். பிறந்த குழந்தையைப் பெற்றோர் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துச் சிறுபிராயந் தொட்டே கல்வியும் கற்பிக்கலாயினர். ஸரோஜினி சாஸ்திரத்திலும் ரசாயனத்திலும் மிக்க தேர்ச்சி அடைய வேண்டுமென்னும் பேரவாக் கொண்டு, அகோரநாதர் தன்னருமை மகள் சரோஜினிக்கு இவ்விரு கல்வியையும் நன்கு புகட்டலானார். சரோஜினி ஒரு காலத்தில் சிறந்த கணித நூல் வல்லவளாகவோ அன்றி மேலான சாஸ்திர பண்டிதையாகவோ வரப்போகின்றாளென எண்ணங் கொண்டிருந்த அகோரநாதர் சரோஜினியிடம் கவிப்புலமையின் இயற் கையமைப்பைக் கண்டார். சரோஜினிக்கு பதினோராம் ஆண்டு நடக்கையில் ஒருநாள் பீஜ கணிதத்தில் கணக்கொன்று சரிவரத் தெரியாமல், வெகு நாழிகை பரியந்தம் யோசனை செய்து கொண் டிருக்கையில் திடீரென்று கணக்குக்குப் பதிலாகக் கவிகள் தோன்றின வென்பதை சரோஜினியே பன்முறை கூறியிருக்கின்றனர். அந்நாள் தொடங்கியே சரோஜினியின் கவித்திறமை எண்டிசையும் விளங்கிற்று. சரோஜினி தன் மங்கைப் பருவமான பதின் மூன்றாம் பிராயங் கொண்டிருக்கையில் 1300 அடிகள் நிறைந்த பெரிய பாமாலை யொன்று தொடுத்தனர். இத்துடன் இரண்டாயிரம் சீர்கள் கொண்ட நாடக மொன்றையும் ஆறு நாட்களில் எழுதி முடித்தார். இவ்வம்மையார் 14, 16 பிராயத்தினிடையே படித்த புத்தகங்கள் எண்ணிலாதன. சதா புத்தகமும் கையுமாகவே இருப்பார். சரோஜினி தமது பன்னிரண்டாம் பிராயத்திலேயே சென்னை சர்வகலாசபையின் பிரவேசப் பரீட்சையில் தேறினார். சிறு பெண்ணொருத்தி பிரவேசப் பரீட்சையில் தேறினாளென்னுஞ் செய்தி நாடெங்கும் பரவி, ஸ்திரி புருடர்களனைவருக்கும் ஓர் எழுச்சியை யுண்டாக்கிற்று. சரோஜினியால் உண்டான இப்புதிய கிளர்ச்சி காட்டுத் தீப்போல் எண்டிசையும் பரவி, ஸ்திரீகளுக்குக் கல்வி வேண்டாமெனக் கூறின அறிவிலிகளும் தத்தம் இல்லத்துப் பெண்களுக்கு உயர்தரக் கல்வியைப் போதிக்க முன் வந்தனர். அநேக பெண்பாடசாலைகள் ஊரெங்கும் ஸ்தாபிக்கப்பட்டன.


3. கடல் யாத்திரை.

 

பெண்களுக்குள் ஓர்வித உணர்ச்சி உண்டாகித் தாங்களே விர்த்தியடைய நாடெங்கும் சங்கங்களை ஸ்தாபித்தனர். 1895 - ம் வருஷம் சரோஜினி இங்கிலாந்திற்குச் சென்று, லண்டன்மா நகரத்தில் உள்ள இராஜ கலாசாலையிலும், கர்டன் நகரிலுள்ள கலாசாலையிலும் மூன்று வருடகாலம் கல்வி பயின்று வந்தனர். பதினாறு பிராயம் சரிவர நிறையாத பெண்ணொருத்தி கல்வியினிமித்தம் கடல் கடந்து கண்டங்கள் சென்றதைக் கேள்வியுற்ற அநேகர் ஆச்சரிய முற்றனர். கன்னிப் பருவங் கழியா மடந்தை யொருத்தி ஊரார் அவமதிப்புச் சொல்லையுங் கேளாது, எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளாது, தாய் தந்தையரைப் பிரிந்து, உற்றார் உறவினரையும் துறந்து தன்னந்தனியே கல்விபயில் இங்கிலாந்திற்கு வந்துள்ளாளெனக் கேட்ட அநேக ஆங்கில ஸ்திரீ புருஷர்கள் மிகுந்த ஆச்சர்ய முற்றனர். சரோஜினியின் வருகை இங்கிலாந்திலுள்ள ஸ்திரீ புருஷர்களின் மனதைக் கவர்ந்தது. இந்தியப் பெண்களுக்குச் சரியான சுதந்திரமில்லையென மூடத்தனமாய்க் கூறி வந்த கிறிஸ்தவப் பாதிரிகளின் பொச்சாப்பு வார்த்தையைக் கேட்டுப் பலகாலும் இந்தியர்களைத் தூஷித்து வந்த ஆங்கிலேயர்கள் சரோஜினியின் வருகையைக் கண்டவளவில் கண் விழித்துக் கொண்டார்கள். சரோஜினியின் பிரவேசம் இங்கிலாந்திலுள்ள ஸ்திரீ புருஷர்களின் விபரீத எண்ணத்தை மாற்றிற்று. இந்தியர்கள் நாகரீக மற்ற ஜாதியார்களென நம்பி வந்த சாமானிய ஆங்கிலேய ஸ்திரீ புருஷர்களனைவரும் சரோஜினியின் வருகையால் இந்தியர்களின் சரித்திரத்தையும் நிலைமையையும் உள்ளபடி அறிய ஊக்கங் கொண்டனர். அது முதல் இந்தியர்களிடத்தில் அவர்கள் கௌரவமும் மரியாதையும் பாராட்டி வந்ததுடன், இந்திய ஸ்திரீகள் கல்வி கேள்விகளிலும் மேன்மை கொண்டவர்கள்ளென ஆங்கிலேய ஸ்திரீ புருஷர்கள் கருதலானார்கள். சரோஜினி லண்டன்மா நகரிலுள்ள கலாசாலையில் கல்வி பயின்று வருங்காலையில் இம்மாதின் நுண்ணிய அறிவையும் கவித் திறமையையும் புகழ்ந்து பேசாதார் ஒருவருமில்லை. ஆங்கிலேய ஸ்திரீகளைக் காட்டிலும் இந்திய ஸ்திரீகள் தங்கள் படிப்பில் சிரத்தையையும் ஆசிரியரிடத்தில் பக்தியையும் காட்டுகின்றனர் என்னும் எண்ணம் அக்கலாசாலை உபாத்தியாயர்கள் மனதில் பசு மரத்திலடித்த ஆணிபோல் படியும்படி செய்தனர் தம் சரோஜனி தேவியார்.



 

 

4. இத்தாலிய வாசம்.

 

பொழுதெல்லாம் கல்வியிலேயே கழித்து வந்த நம் சரோஜினி தேகவலிமை குன்றி நோய் கொண்டனர். நோய் நீங்கி தேகசுகம் பெறும் பொருட்டு இங்கிலாந்தை விட்டு இதாலி தேசத்திற்குப் பிரயாணமானார். அந் நாட்டில் சதா தென்றல் வீசுதலால் வேனிற் காலமும் தண்ணென்றிருக்கும். எங்கு பார்த்தாலும் கழனிகளும் சோலைகளும் நிறைந்து விளங்கும். வர்ஜில், தாண்டி முதலிய பல கவிரத்தினங்கள் பிறந்து புகழ் பெற்ற இந்நாடு கவி வாணர்களுக்கு ஏற்ற இடமாதலால் நம் கவியரசியான சரோஜினியும் இந் நாட்டை யடைந்தார்.


5. விவாகம்.


1898 - ம் வருடம் செப்டம்பர் மாதம் சரோஜினி ஐரோப்பாவிலிருந்து ஐதராபாத்திற்குத் திரும்பி வந்தார். இரண்டு மாதங் கழிந்த பிறகு மார்கழி மாதத்தில் டாக்டர் நாயுடு என்பவரைக் கடிமணம் செய்து கொண்டார். உயர்ந்த பிராமண குலத்தில் தோன்றிய மாது வேறொரு குலத்தைச் சார்ந்த ஒருவரை மணம் செய்து கொண்டாரென்னும் செய்தியைக் கேட்ட உலகத்தாரனேகர் கடிந்து பேசினார்களெனினும் யோசிக்கு மிடத்து உண்மைக் காதல் ஏற்பட்ட விடத்தே கடிமணம் புரிதல் நலமெனக் கொண்டு, சரோஜினி டாக்டர் நாயுடுவைத் தம் கணவராக வரித்தார்.


6. சம்பூர்ணம்.

 

சரோஜினி டாக்டர் நாயுடுவை மணம் புரிந்து, ஜயசூரிய, பத்மஜா, இரணதீர, லீலாமணி என நான்கு குழந்தைகளைப் பெற்றார். சரோஜினிதம் இளமை முதற் கொண்டே தேசாபிமான வாழ்க்கைக்குரிய உண்மை நிலைகளை நன்கு அறிந்திருந்தார். தேசிய வாழ்க்கையில் மதுரமாய்க் கவிபாடி ஜனங்களைக் களிப்பிப்பதோடு மதிக்கத்தக்க தேசநல ஊழியமும் புரிந்துவருகிறார். இவ்வம்மையார் நீடூழி காலம் சுகவாழ்வு வாழ அன்னை பாரததேவி அருள்புரிவாளாக.

 

(A. S. கௌட, ஆசிரியர்)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment