Tuesday, September 8, 2020

 

ஜீவகாருண்யம்

 

சகோதர சகோதரிகாள்!

 

இதோ நாம் காண்பனவும் நமது கண்களுக்கு எட்டாதனவுமான சகல சராசரங்களும் ஜகதீசனால் அவரது லீலையின் பொருட்டுப் படைக் கப்பட்டனவாக வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன. ஒவ்வொரு ஜீவனும் புல்லாயும், பூடாயும், மரம், பணி மிருகமாயும் எண்ணரிய பிறவிகள் எடுத்துக் கடைசியில் அபூர்வமாகிய இந்த மானிட ஜன்மத்தையும் அடைகிறது. உலகமாகிற பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் ஆகிற ஜீவன் வாசித்து அதிக ஞானத்துடனும், தேஜசுடனும் தனது தாய் வீடாகிற ஈசனைத் திரும்ப அடைவதே சிருஷ்டியின் கருத்தாம். ஈசனை அடைவதென்றால் அவருடைய தேஜோமயமான திவ்விய சொரூபத்தை உள்ளத்தில் உணர்ந்து அதில் அன்புருவாய்க் கலந்து விடுவதே ஆகும். நமது அன்னையாகிய ஒளவை பிராட்டியார்.

 

"உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
      உடம்பினில் உத்தமனைக் காண்''

 

என்று கூறி இருக்கிறாள். அவ்விதம் இந்த மானிட தேகத்தில் ஈசனைக் காண்பதற்கு ஒருவழியே அல்லாது பலவழிகள் இல்லை. அன்பு மயமாகிய ஈசனை அன்பின் வழியாகத் தான் காணலாகும்.


      “அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் மறிகிலார்
      அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
      அன்பே சிவமா யமர்ந் திருந் தாரே''

 

என்று திருமந்திரத்தில் திரூமூலர் அருளியிருக்கிறபடி அன்பு வடிவமான ஜகந்நாதனை நாம் அறிந்து அனுபவிக்க வேண்டுமானால், ஆசாபாசங்களைக் களைந்து, காமாதி துஷ்ட குணங்களை நீக்கி, களங்கம் இல்லாத உள்ளத் தன்மையை அடைந்தால் இந்த தேகத்திலேயே அறிவாகிற கண்ணால் ஈசனைக் காணலாம். ஈசனைக் காண்பது எளிதல்ல. சிலந்திப்பூச்சி தனது வயிற்றிலிருந்து நூல்களை வெளியிட்டு அந்த நூல்களால் பெரிதான வலைவீடு கட்டிப் பார்ப்போர்க்குப் புலப்படாமல், தான் எவ்விதம் மறைந்து கொள்கிறதோ, அதுபோல் சர்வ அந்தர்யாமியான பகவான் அதிக விசித்திரங்களான சகல புவனங்களையும் படைத்துத் தம்முடைய சக்தியை எல்லாவற்றிலும் பரவச் செய்து தாம் மறைந்து கொண்டார். உலகத்தில் ஜீவர்களுக்குத் தாங்கள் செய்த காரியத்தால் அகங்காரம் ஏற்படுவது சகஜம் ஆனதாலும், மானிட சிரேஷ்டர்களை அனுசரித்து இதர ஜனங்கள் நடக்கவேண்டி இருப்பதாலும், சகல புவனங்களையும் சிருஷ்டித்த தான் மானிட வடிவத்தில் சஞ்சரிக்கும்பக்ஷத்தில் சிருஷ்டிகர்த்தா யார்'' என்ற கேள்விக்கு நாமே'' என்ற அகங்காரத்தை உண்டு பண்ணுகிற பதில் கொடுக்க வேண்டிவரும் என்றும், அதை மற்றவர்கள் கேட்டுத் தங்களுடைய செய்கைகளையும் " நாம் செய்தோம் " என்று அகங்கரிப்பார்கள் என்றும் கருதியே ஈசன் தம் உருவத்தை மறைத்துக் கொண்டாரோ என்று தோன்றுகிறது. பழத்தில் ரசமும், பாலினில் நெய்யும் எவ்விதம் விளங்கி இருக்கின்றனவோ அவைபோல் ஈசன் சர்வ வஸ்துக்களிலும் விளங்கு கிறார்; அதனால் சகல ஜீவர்களும் ஈசனது அம்சமே. இப்பொழுது ஆடு, மாடு, கோழிகளாய் நாம் காண்கிற ஜீவன்களை நமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும். நாம் முன் ஜன்மங்களில் ஆடு, கோழிகளாய் இருந்து இந்த மானிட ஜன்மம் எடுத்திருப்பது போல அந்த ஜந்துக்களும் தடையன்னியில் ஜீவ விகாசத்தினால் மானுஷ ஜன்மம் எடுக்க இவ்வளவு பிரயாசைப் படுகின்றன. அவைகளை சகோதரர்களாகப் பாவித்து,


      ''எவ்வுயிரும் பராபரன் சன்னிதியதாகும்
     இலங்கும் உடலுயிர் அனைத்தும் ஈசன் கோயில்''

 

என்று பாராட்டாமல் ஜந்துக்கள் நமது ஆகாராதி சுகத்திற்கு மாத்திரம் சிருஷ்டிக்கப்பட்டவைகள் என்று நினைத்து, அவைகளை நாம் கொல்வதை ஜகத் பிதாவான பகவான் சகிப்பாரா? ஆடு, மாடுகளையும், கோழிகளையும் கொன்று அவையின் மாமிசத்தை யாதொரு இரக்க மன்னியில் தின்று காலம் கழித்த காட்டு மனிதர்கள் கூடவும் நாகரீகத்தால் ஜீவகாருண்யத்தை உணர்ந்து,

 

''செல்வத்திலும் செல்வம் ஜீவகாருண்யமே" என்று கருதி பிராணி ஹிம்சையை நிறுத்தி விடுகிறார்கள். அப்படி இருக்க முழு நாகரீகத்தை அடைந்த நமது இந்திய சகோதரர்கள் புலால் போஜனம் அருந்துவது இன்னமும் நடக்கிறது. சிலர் தமக்கென்று புசிப்பதைப் பார்க்கிலும் தமது தெய்வத்தின் பேரைச் சொல்லித் தின்பது பாபம் இல்லை என்று நியாயத்தைச் சொல்லிக்கொண்டு தாங்கள் தெய்வமாகக் கொண்டாடுகிற மாடனுக்கும் காளிக்கும், ஆடு கோழிகளைப் பலி கொடுத்து அவையின் மாமிசத்தை யருந்துகின்றனர். மிருகபலி தெய்வத்திற்குச் சம்மதம் உள்ள தல்ல என்றும் அதனால் பாபமே உண்டாகுமென்றும் தெரிந்தவர் அறிவிலார்க்குச் சொல்லி உபதேசிக்காமல் இருந்தால் அதனால் உண்டாகிற ஜீவநாசத்தின் கொடிய பாபங்கள் அவர்களையே அணுகும். ஒரு தகப்பனுக்குத் தன் குழந்தைகளின் மேல் உள்ள அன்புக்கு எப்படி வித்தியாசம் இல்லையோ, அதுபோல ஈசனுக்குத் தன் குழந்தைகளாகிய ஆடு கோழிகளில் அவரது கருணையைக் குறைப்பாரா? வாயில்லாத அந்தப் பிராணிகளைக் கொல்வது அவருக்கு சம்மதமாகுமா? அப்படிச் சம்மதப்படுகிற தெய்வம் தெய்வமாகுமா? அதற்கு தெய்வத்வம் உண்டா? அது ராக்ஷதத்வம் அல்லவா?

 

நம்மைப்போலவே ஆடு கோழிகளும் தம் குஞ்சுகளை எவ்வளவு அன்புடன் ஆதரிக்கின்றன வென்பதை நாம் பார்த்ததில்லையா? குஞ்சுகளை, பறவையோ மனிதனோ உபத்திரவம் செய்யத் துணிந்தால் தாய் இனங்கள் கதறி ஓடி எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? ஜந்துக்களை வெட்டும் காலத்தில் அவையின் மனோலிகாரத்தை நாம் சூக்ஷ்மகண்களால் பார்ப்போமானால் ஒரு காலத்திலும் அவைகளைத் துன்பப்படுத்தமாட்டோம். பலி இடுகிற சமயம் ஆடு கோழிகள் கூப்பிடுகிற மிருக பாஷை நமக்குத் தெரிந்து இருந்தால் அவற்றை வெட்டுவதற்கு மனம் தான் வருமா? வாளுடன் கையைத் தான் ஒங்குவோமா?

              K. S. நாராயண அய்யர்.

குறிப்பு: -


      “கொல்லா விரதம் குவலயத் தோர்கள்
      எல்லாம் பெருமினென் றியம்பிய தயாநிதி''


என்று தாயுமானவரைக் குறித்து அவர் சீடராகிய அருளைய சுவாமிகள் தமது அருள்வாக்கிய அகவலில் கூறியது போல் ஒரு ஜீவனையும் வதைக்காமை ஜீவகாருண்யமேயாகும். நமது நாட்டில் இயற்கையாகவே மாமிசபக்ஷணம் செய்யாத வருணத்தினரும், குடும்பத்தினரும் அனேகர் உண்டு. ஆனால் ஜீவகாருண்யம் என்பது இவ்வொன்றோடு முடிந்துவிடவில்லை. அனேகர் மாமிசபக்ஷணம் மட்டும் நீக்கிவிட்டு நாங்கள் சைவம்' என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ஆறறிவுடைய தங்கள் இனமாகிய ஜீவர்களுக்கு இவர்கள் செய்யும் சீவகாருண்ய மற்ற செய்கைகளோ கடவுளுக்கே அற்புதம். மோசம், வஞ்சனை, சூது, துரோகம், செய்ந்நன்றி மறத்தல், முதலியவைகளால் அன்னியருக்குச் சொல்லொணாத் துன்பங்களை யுண்டாக்கி அவர்கள் மனம் புண்படும்படிச் செய்கிறார்கள். இத்தகையோர் நாங்கள் “சைவம்" ஆதலால் ஜீவகாருண்ய முடையோர் என்று கூறிக்கொள்வதில் ஒரு பயனுமில்லை.

 

நாம் ஒரு தின்பண்டம் புசித்துக்கொண்டிருக்கையில் கேட்க வாயில்லாத ஜந்துவாகிய ஒரு பூனையோ நாயோ பயத்தோடும், ஏக்கத்தோடும், ஆவலோடும் நம் முகத்தைப் பார்த்தபடி கத்துகிறது. அதைக் கல்லாலடித்துத் துறத்திவிட்டு நாம் தின்றால் நாம் ஜீவகாருண்ய முடையவராவோமோ? இன்னொருவருடைய துன்பத்தைக் கண்டு மனம் பதைக்காது, அவர்கள் துன்பத்தைத் தீர்க்கமுயலாது பேசாமல் பார்த்துக்கொண்டு செல்வது ஜீவகாருண்யமாகுமோ? நம்மிடம் ஆகாரமோ காசோ இருக்கையில் ஒரு சுத்த ஏழை மிக்கபசி என்று கேட்கும்போது அவனை வைதுத் துறத்திவிட்டு ஊரறிய நூறு பிராமணருக்கு சமாராதனை செய்தல் ஜீவகாருண்யமாகுமோ?

 

ஆகையால் சகோதர சகோதரிகளே! மாமிசம் புசிக்காதிருப்பது மட்டுமே ஜீவகாருண்ய மாகிவிடாது. அதோடு,

 

(1) பிறர் துயரம் நம்துயரம்போல் கருதவேண்டும்.

(2) ஒரு ஜந்துவின் மனம் நோகும் வண்ணம் நம்மால் ஒரு பிராணிக்கு இம்சையுண்டாகும் வண்ணம் நடந்து கொள்ளலாகாது.

(3) பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டால் நம்மாலான வரையில், அத்துன்பத்தை நீக்சத்தக்க உதவியைச் செய்ய வேண்டும்.

(4) உயர்ந்த ஜீவனாயினும் சரி, தாழ்ந்த ஜீவனாயினும் சரி, எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போலவே கருதி நடக்கவேண்டும்.

 

இவ்வாறு மனச்சாட்சிக்குச் சரியாக நடந்து கொள்வதே உண்மையான ஜீவகாருண்யமாகும்.

பத்திரிகாசிரியர்.  

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴

No comments:

Post a Comment