Monday, September 7, 2020

 விவேகானந்த சுவாமிகள்

விவேகானந்தருடைய இயற் பெயர் நரேந்திரநாத தத்தர் என் வாலிபர்கள் மாட்டு இன்றி யமையாததாய் இருக்க வேண்டிய குதூகலமும் வேடிக்கை விநோதங்களில் பற்றும், இவரிடத்து மிருந்தன. கலாசாலையிற் படிக்கும் போது, சுமார் இருநூறு மாணவர்கள் அடங்கியிருந்த வகுப்புக்கு அதன் ஆசிரியர் வரச் சிறிது காலதாமத மேற் பட்டது. அப்பொழுது நரேந்திரர் ஒரு பாட்டுப்பாடி அவர்களை மகிழ்விக்க வேண்டுமென்று அனைவரும் வேண்டினார்கள். அவரும் அக்கணமே இனிமையான குரலில், கம்பீரமாகப் பாடியதை எல்லாரும் மனம் குவிந்து நிசப்தமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆசிரியரும் பாட்டு முடியும் பரியந்தம் வெளியே இருந்து கேட்டு அனுபவித்துவிட்டு மலர்ந்த முகக்குறிப்புடன் பிரவேசித்து கானரசத்தை மிகவும் போற்றினார்.

 

சங்கீதமன்றி நாடகத்துறையிலும், மேம்பாடு பெற்றிருந்த நரேந்திரர் இவ்வித்தையைக் கசடறக் கற்றுக்கொள்ளுதற்கு சங்கீத வித்துவான்கள் இருவர்களது உதவியைக் கொண்டு, வீணை, மிருதங்கம் முதலிய கருவி வாசிக்கவும், ராகங்கள் பாடவும் பயின்று வந்தார். நானாவித தேகப் பயிற்சிகளிலும், பந்து விளையாட்டுகளிலும், தேர்ச்சி பெற்றிருந்தது போலவே, சிலம்ப வித்தையிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். தேக வலிமையாலே சிறந்தவர்களையும் கூட இவ்வித்தையில் தோற்கடிக்கவல்ல சில மர்மங்களையும் அவர் கற்றிருந்தார். ஒரு நாள் ஒரு சிலம்பப் பந்தயத்தில் வயது முதிர்ந்தவனும் வித்தையில் வல்லவனுமான ஒருவனுடன் எதிர்த்து விளையாட நரேந்திரர் முன்வந்தார். பார்க்க வந்தவர்கள் சிறியவனாகிய இவனுக்குச் சிலம்புப் போர் விளையாட்டில், என்ன ஆபத்து நேரிடுமோ என்று பயந்தனர். ஆனால் வீரம் ததும்பிய அவ்விளைஞர், பேர் பெற்ற அம்மல்லனுடன் நெடுநேரம் எதிர்த்து விளையாடினது மல்லாமல் முடிவில், எதிரியின் சிலம்பத்தடி சின்னா பின்னமாக உடைந்து விழச் செய்தது பார்த்தோர்க்குப் பெருவியப்பூட்டியது.

 

பிறகு விவேகாநந்த சுவாமிகள் தேசசஞ்சாரம் செய்யவாரம்பித்தார். வாரணாசியில், ஒரு தெருவில் போய்க்கொண்டிருக்கையில் குரங்குக் கூட்டமொன்று இவரைப் பின் தொடர்ந்தது. அம்மிருகங்க ளிடமிருந்து தப்பித்துக்கொள்ள இவர் விரைந்து சென்றார். ஆனால் அவைகளும் வேகமாய் அவரைப் பின்பற்றி வந்தன. இவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கும் தருவாயில் இருந்த போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த சன்யாசி யொருவர் ஓடாதே; மிருகத்தை எதிர்த்து நில் என்றுரைத்தது ஸ்வாமிகள் காதில் விழுந்தது. அப்படிச் செய்தவுடனே வானரங்கள் திகைத்து நானாபக்கமும் சிதறி ஓடிவிட்டன. சுவாமிகள் இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாவது, "மிருகத்தை மட்டுமல்ல, மிருகத்தன்மை வாய்ந்த யாவற்றையும், மருளப் பண்ணுகின்ற யாவற்றையும், மயக்கம் வருவிக்கின்ற யாவற்றையும், எதிர்த்து நிற்க வேண்டும், அவற்றுடன் போராட வேண்டும்; திகைத்து ஓடலாகாது'' என்பதாம். சிறிது காலம், மலைநாட்டினுள் வதித் திருந்தார். உலகத்திலே மிகப் பெரியதாகிய இமோத் பர்வதத்தின் கம்பீரமான தோற்றம் சுவாமிகளின் மனத்தை மாண்புறச் செய்தது. அடர்ந்த ஆரண்யம், மலையின் அருவிகள், நீர்வீழ்ச்சிகள் ஓடும் ஓடைகள், அலையெறியும் ஆறுகள், பாடும் பறவைகள், வீசும் இளங்காற்று, ஓசை ஒலி யொன்றும் கேளாத குகைகள் ஆகிய இவைகளுக்கிடையே, பரந்த எண்ணங்கள் எண்ணியும், உயர்ந்த உணர்ச்சிகள் எய்தியும், ஆழ்ந்த நிஷ்டைகள் புரிந்தும் சுவாமிகள் காலம் போக்குவாராயினர். கண்ணுக்கு எட்டியவரையும், அதற்கப்பாலும், ஒழிவிலாதிருக்கும் பனிக்கட்டியினுள் புதைந்து கிடைந்த பர்வதங்களைப் பார்த்தமாத்திரத்திலே, யாருக்கும் பரம சாந்த முண்டாகும். அத்தகைய மகோன்னத மலையிலே, நிலவும் சிவனார் போன்று நம் சுவாமிகளும், மனம் ஒடுங்கப் பெற்றுச் சாந்த மூர்த்தியாகத் திகழ்ந்திருந்தார்.

 

இவர் பிறகு ராஜபுதனம், ஆள்வார் முதலிய இடங்களுக்குச் சென்றார். கற்றவர்களும், மற்றவர்களும், இந்துக்களும், முகமதியர்களும், திரள் திரளாய் இவரிடம் வரலாயினர். இந்து மதம், முகமதிய மதம், மதங்களின் சமரசம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், உருது இத்யாதி விஷயங்களைப் பற்றி சுவாமிகள் அற்புதமாகப் பேசினது எல்லாருடைய மனத்தையும் கவர்ந்தது.

 

ஆள்வார் சமஸ்தானத்தை அடைந்ததும் "ஆங்கிலக் கல்வியில், அளவில் லாத தேர்ச்சிபெற்ற ஒரு மகாபுருஷர் எனது இல்லத்தில் எழுந்தருளியிருக்கிறார்" என்று ஒரு நாள் திவான் மகாராஜாவுக்குத் தெரிவித்தார். அக்கோமகனும், சுவாமிகள் இருப்பிடம் வந்து வணங்கினார். பிறகு அவர்களிடையே கீழ்க்கண்டவாறு சம்பாஷணை நடந்தது.


மகாராஜா: - "பண்டிதராகிய நீங்கள் பணம் சம்பாதியாது பிக்ஷை எடுப்பானேன்)

 

சுவாமிகள்: - "பிரஜைகளைப் பரிபாலிப்பதைப் புறக்கணித்து விட்டு, நீவிர் ஆங்கிலர்களுடன் கூடி வனத்தில் வேட்டையாடியும், கிரிக்கெட்” ஆடியும், நாட்டிற்குரிய பொருளை விரயம் பண்ணியும், வீண் காலம் கழிப்பானேன்?"


கோமகன்: - "அது என் இஷ்டம்.”

 

சுவாமிகள்: - "இரந்துண்பதும் என் இஷ்டம். ஆனால் சமூகத்துக்கு நான் செய்யவேண்டிய கடமையில் தவறுவதில்லை.''

 

மகாராஜா: - (பரிகாசப் புன்னகையுடன்) ''விக்கிரகங்களை வணங்குவதில் எனக்கு விருப்பமில்லை. என் கதி என்னாகும்?"


சுவாமி: - "என்ன ஏளனம் பண்ணுகிறீரா?''

 

மகாராஜா: - "இல்லை; மகாசுவாமி! பாமரர்போன்று நான் கல்லையும் மண்ணையும் உலோகத்தையும், வணங்கேன். இது ஓர் அபராதமெனில், இதற்காக மறுமையில் நான் துன்புற நேரிடுமோ?''

 

சுவாமி: - "நல்லது; ஒவ்வொருவரும் அவரவரது கொள்கையின்படி நடந்து கொள்க.”

 

விக்கிரகங்களின் எதிரே நின்று கொண்டு சுவாமிகளே கசிந்துருகி வழிபட்டதைப் பார்த்தவர்கள் சிலர் அச்சபையின் கண் இருந்தனர். அன்னவர்கள் விக்கிரகாராதனையைக் கண்டிக்க சுவாமிகள் மகாராஜாவுக்கு எப்படி இடர் தந்தாரென்று வியந்தார்கள்.

 

ஆனால் சிறிது நேரத்துக்குள் சுவாமிகள் நிலைமையை அறவே மாற்றி விட்டார். அங்கு ஒரு சுவரில் மாட்டப்பெற்றிருந்த படமொன்றைக் கொணரச் செய்தார். உடனே அதன் மீது காரித்துப்பும்படி திவானை ஏவினார். மற்றவர்களையும் அங்ஙனம் தூண்டினார். ஆனால், அவர்கள் எல்லாரும் மருண்டார்கள்; வெகுண்டார்கள். “ஏன்? இது வெறும் கண்ணாடியும் காகிதமும்தானே! இதன் மீது துப்புவதற்கு உங்களுக்கு என்ன ஆட்சேபம்?''
என்றார். ''அது எங்கள் அரசர் பெருமானது படமல்லவா?'' என்று ஒடுங்கிய குரலில் உரைத்தார்கள் சபையோர்கள் அனைவரும். சுவாமிகள் மீண்டும் "அப்புகைப்பட மானது மகாராஜா, அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். அவர் போன்ற பிரதிபிம்பம் மாத்திரமே அது. எனினும் அதன் மூலம் அவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள். அதுபோலவே, கல்லும் மண்ணும் கடவுளாகி விடமாட்டா. கல்லே, மண்ணே, தாமிரமே என்று யாரும் பிரார்த்திப்பதில்லை. இவ்வஸ்துக்களினால், செய்திருக்கும் விக்கிரகங்கள் அல்லது சின்னங்களின் மூலம் ஏகனாய் எல்லாம் வல்லவனாய், எங்கும் நிறைந்தவனாய் இருக்கும் முழுமுதற் கடவுளையே நினைந்து ஜனங்கள் வணங்குகின்றனர். கடவுரது ஞாபக மூட்டுதற்கே இந்த உருவங்கள் உதவி புரிகின்றன" என்று விளக்
கி காட்டினார். இதை செவியுற்ற ராஜா இது பரியந்தம் அறிவிலியாயிருந்தேன். இப்பொழுது கண் விழித்துக் கொண்டேன்” என்று கைகூப்பி வணங்கி விநயத்துடன் தெரிவித்துக் கொண்டார்.

 

இதன் பின் சுவாமிகள் லிம்பிடி என்ற சமஸ்தானத்துக்குச் சென்றார். சஞ்சாரத்தில் களைத்துப்போய், அவ்வூர் போய்ச் சேர்ந்ததும், சந்யாசிகள் வசிக்குமிடம் அங்கு இருப்பதாகக் கேள்வியுற்று அங்கே சென்றார். அது ஒரு தன்னந்தனியான வீடு. அதில் வசித்திருந்த சாதுக்கள் சிலர் எத்தனை நாள் வேணுமானாலும் அங்கு அமர்ந்திருக்கலாமென்று கூறி அன்புடன் இவரை வரவேற்றனர். அவர்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி சுவாமிகள் முதலில் கவனிக்கவில்லை. ஆனால், அவர்கள் பில்லி சூனியக்காரர்கள். குரூரமான முறையில் மக்களை பலிகொடுத்தும், அருவருப்பான நீசத் தொழில்கள் புரிந்தும், துஷ்ட தேவதைகளை வசப்படுத்துவது அவர்களது நோக்கம். அத்தகையவர்கள் பக்கத்து அறையில் பூசைபோடுவது சுவாமிகள் காதில் விழுந்தது. தீங்கு ஏதாவது நேரிடுமோ என்றெண்ணி அவர் வெளியேகப் பார்த்தார். ஆனால் அந்தோ! வெளிக்கதவைப் பூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் காவலிருந்தார்சள். விபரீதக் கொள்கையும் கொடூரச் செயலும் உடைய ஒரு பாலார் தேவாராதனையின் பெயரால், நீசத்தொழில் செய்வது கண்டு, இவர்களால் தமக்குக் கெடுதியும், ஆபத்தும் நேரிடப்போகிற தென்று பயந்தார்; எனினும் கடவுளை நினைந்து சும்மா இருந்தார்.

இது இப்படியிருக்க, நமது சுவாமிகளைக் கண்டு தரிசிக்க ஒரு பையன் இடையிடையே அங்கு வந்து கொண்டிருந்தான். அவனைப் பற்றி சூனியக்காரர் யாருக்கும் சந்தேகம் ஒன்றும் தோன்றவில்லை. மறுநாட் காலையில் அவனைக் கண்டதும், திடீரென்று யோசனை ஒன்று சுவாமிகள் மனதில் ஏற்பட்டது. தமது அறையிற் கிடந்த ஒரு ஓட்டின் மீது "நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதை இவ்வூர் மகாராஜாவிடம் கொடு'' என்று அப்பையன் காதில் ஓதி ஓட்டைக் கையிற் கொடுத்தார். அவனும் அதை வேஷ்டிக்குள் மறைத்துக் கொண்டு வெளியே போய் விட்டான். ஒரு மணி நேரத்துக்குள் சிப்பாய்த் திரள் ஒன்று அங்கு வந்துவிட்டது. சுவாமிகளும் அப்பாதகர்கள் கைபினின்று மீண்டார். அச்சிறுவன் செய்த உதவியைச் சுவாமிகள் என்றும் மறக்கவில்லை.

 

லிம்படி மகாராஜாவின் அரண்மனையைச் சார்ந்த பண்டிதர்கள் சிலகுடன் சுவாமிகள் சொற்பநாள் அமர்ந்திருந்தார். இப்படி இராஜாக்களுடன் அவர் நெருங்கிப் பழகினது தமது பேருக்கும் புகழுக்கும் அல்ல. சமுதாயத்தில் பொறுப்பு மிகப் படைத்திருந்த அன்னவர்களைச் சீர்திருத்திவிட்டால், அவர்களின் மூலம் ஆயிரக்கணக்கான பிரஜைகள் நன்மையடைவார் கள் என்பதே அவரது நோக்கம். கல்வி, பொருளாளாதாரம், கைத்தொழில், விவசாயம் முதலிய துறைகளில் என்னென்ன அபிவிருத்திகள் செய்யவேண்டுமென்று அரசர்களுக்கும், மந்திரிப் பிரதானிகளுக்கும், திவான்களுக்கும் சுவாமி போதிப்பார்.

 

மகாபண்டிதரெனவும், தேசாபிமானி யெனவும் நாடெங்கும் பிரசித்தி பெற்ற பாலகங்காதர திலகருடன் பத்துநாள் பூனாவில் அமர்ந்திருந்தார் நம் சுவாமிகள். நான்கு வேதங்களையும் கசடறக் கற்றவர் திலகர் பெருமான். ஆதலால் சுவாமிகளும், அவரும் வைதிக வாழ்வே, இந்தியாவின் சிறந்த நாகரீகம் என்றும், அதை ஆதாரமாகக் கொண்டுதான் புதிய முறையில் இந்தியா புத்துயிர் பெற்று எழுந்திருக்கவேண்டும் என்றும் அளவளாவி உரையாடினர். "சதா ஒளஷதம் சாப்பிடும் பழக்கத்துக்கு யாரும் ஆளாய் விடலாகாது. தான் அநேக வியாதிகளுக்குக் காரணம். ஆதலால் மனம் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும், தூய்மை பொருந்தியும் இருந்தால், நோய்கள் பல எளிதில் தவிர்க்கப்படும். அத்துடன் தேகத்தைத் தளர்வுறச் செய்யும் இன்பம் எதிலும், மனிதன் ஈடுபடலாகாது. இரண்டாவது நல்லவனுக்குத்தான் உலகம் நல்லதாகத் தோன்றும். பிறர்மீது குறைகூறாது எல்லார்க்கும் அன்பனாய் நடப்பவனிடத்து, மற்றவர்களும் அன்பாய் நடந்து கொள்வார்கள்” என்று அவர் பெல்காமில் உள்ள ஜனங்களுக்கு உபதேசஞ் செய்தார்.

 

பம்பாய் ராஜதானியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தபோது சுவாமிகள் அநேக மகாராஜாக்களைச் சந்திக்க நேரிட்டதெனினும், அவர் அப்பிரதேசங்களில் உண்ண உணவில்லாது கழித்த நாட்களும் பலவுண்டு. ஒரு முறை அவர் முதுவேனிற் காலத்தில் ரயில் வண்டியில் நெடும் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்பொழுது எந்த ஸ்டேஷனிலும் விலை கொடுத்தாலொழிய குடிப்பதற்கும் ஜலம் கிடைக்காது போய்விட்டது. சுவாமிகளோ கையிற் பணம் வைத்துக்கொள்வதில்லை. ஆதலால் ஒருநாள் முழுவதும் ஜலபானங்கூட இல்லாது அவர் வண்டியிற் போய்க் கொண்டிருந்தார். அவருடன் பிரயாணம் செய்த வணிகன் ஒருவன் அவரைப் பரிகாசம் பண்ணிக்கொண்டே போனான். ஏனென்றால், பணம் சம்பாதியாத சோம்பேறியைக் காண அவனுக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் உச்சி வேளையில் ஒரு சந்திப்பு ஸ்டேஷனில் ரயில் வண்டி மாற்றுதற்காகத் தங்கும் மண்டபமொன்றில் பிரயாணிகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. ஏதோ கொஞ்சம் இனாம் கொடுத்தவர்களை மட்டும், காவற்காரன் மண்டபத்தினுள் உட்கார விட்டான். ஆதலால், ஸ்வாமிகள் மண்டபத்துக்குள் பிரவேசிக்கவும் முடியவில்லை. வேஷ்டி ஒன்றை நனைத்து அதைச் சுடுமணலின்மேல் விரித்து ஒரு கம்பத்தின்மீது சாய்ந்து கொண்டு கொடிய வெயிலில், அவர் உட்கார்ந்திருந்தார்.

 

அவர் எதிரே மண்டபத்துள் அமர்ந்திருந்த வணிகனுக்கு இதெல்லாம் வேடிக்கையா யிருந்தது. ''சன்யாசியாரே பாரும்! நான் கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதிக்கிறேன். ஆதலால் நிழலிலே வீற்றிருந்து பூரி, லட்டு முதலிய பக்ஷணங்கள் புசிக்கிறேன். நீர் உலகைத் துறந்த பெரியோர் அல்லவா? ஆதலால் உலர்ந்த தொண்டையும், ஒடுங்கிய வயிறும் தாங்கி வெயிலில் புழுங்கிக் கிடப்பது தான் உமது கதி!'' என்று பரிகசித்தான். சினம் ஊட்டும் இந்நிலையிலும், சுவாமிகளது முகத்துக்கு அணிகலமாக இலங்கிய சாந்தம் சிறிதும் மாறவில்லை.

 

அப்போது அவ்வூரைச் சார்ந்த மனிதன் ஒருவன் வலது கரத்திலே பெரியதொரு பொட்டணமும், ஒரு லோட்டாவும், இடது கரத்தில் ஆசனமொன்றும், மண் கூஜாவில் குளிர் ஜலமும்பற்றி எடுத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். ஓரிடத்தில், அவசரத்துடன் ஆசனத்தைப் பரப்பி அதன் மீது தான் கொணர்ந்த பண்டங்களை வைத்துவிட்டு ''போஜனம் பண்ண எழுந்தருளும் சுவாமி!" என்று பசித்திருந்த சுவாமிகளை வணங்கினான்.
சுவாமிகள் “நான் உன்னை முன் பின் அறியேன். நீ தேடுபவர் நானென்று தவறாய் எண்ணுகிறாய் போலும்'' என்றார். ''இல்லை; இல்லை, எனக்குக் காண்பிக்கப்பட்டவர் நீர் தான். தயவு கூர்ந்து விரைவில் உணவேற்க வாருங்கள்” என்று பணிவுடன் திரும்பவும் அழைத்தான் அப்புதிய மனிதன். ''நீ என்னை எங்கு காணலுற்றாய்? விவரம் சொல்லுக?" என்று சுவாமிகளும் மிக வியந்து வினவினார்.

 

அதற்கு அம்மனிதன், "அடிகாள்! நான் இவ்வூரிலுள்ள ஒரு மிட்டாய்க் கடைக்காரன். இன்று நான் போஜனம் பண்ணியதும் சிறிது கண்ணுறங்கலா மென்று படுத்தேன். அப்போது ஸ்ரீராமபிரான் என் கனவிற் றோன்றி, தங் களை நன்றாகக் குறிப்பிட்டுக் காட்டி, “என் பக்தன் இரண்டு நாளாய் உண்ண உணவின்றி வருவதைக் காண நான் ஆற்றகிலேன். பூரியும் கறியும் சமைத்து மிட்டாய் வகைகள், குளிர்ந்த ஜலம், அமர்ந்திருக்க ஆசனம் இவைகளை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு ஓடிவா'' என்றார். விழித்தெழுந்த பேதையேன் இது வெறுங் கனவென்றெண்ணித் திரும்பப்படுத்தேன். ஆனால், எம்பெருமான் என்னை மறுபடியும் தட்டி எழுப்பி, இப்பணியாற்ற ஆக்ஞாபித்தார். அவ்வண்ணமே அடியேனும் விரைந்து வந்துளேன். தூரத்தில் வரும்போதே தங்களை அடையாளங் கண்டு கொண்டேன். பசியால், வாடியிருக்கும் பெரியோய் உண்ண எழுந்தருளும்” என்று கைகூப்பி வேண்டி நின்றான். அதுபடியே சுவாமியும் அமுது பண்ணினார். நிகழ்ந்தயாவையும் வியப்புடன் பார்த்து வந்த வணிகன் தனது அபராதத்தை ஷமித்தருளும்படி சுவாமியை வணங்கி வேண்டினான். நிந்தை, ஸ்துதி, மானம், அவமானம் இவை யாவையும் சமமாகப் பார்க்கும் தீர்க்க தரிசியாகிய நம் துறவி வேந்தர் அவனிடம் தாம் வெகுளவில்லை என்று உறுதி கூறினார்.

ஆணவ அகங்காரமுடையவர்களை அதட்டி புத்தி புகட்டவல்ல ஆற்றலும், ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் மிகப் படைத்திருந்தார். ஒருநாள் பிரபு ஒருவர் ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டிக்கு இவருக்குச் சீட்டு வாங்கிக் கொடுத்திருந்தார். பெட்டி படுக்கையின்றி, உணவின்றி, இவர் இரண்டாம் வகுப்பிலே பிரயாணம் பண்ணினது, அவ்வண்டியிலே பிரயாணம் செய்த இரண்டு ஆங்கிலேயர்களுக்கு வியப்பூட்டியது.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 


 

No comments:

Post a Comment