Monday, September 7, 2020

 

வீண் செலவு

 

வீண்செலவு செய்வது அவ்வாறு செய்வோரை மிகத்துன்பத்தி லழுத்திவிடும். வீண் செலவு செய்து கொண் டிருப்போரும்'அது அடாத செய்கை 'யெனவே அறைகின்றனர். பிறரையும் அவ்வாறே இகழ்கின்றனர். தம் குற்றத்தைத் தாம் உணர்வதில்லை.'ஒர்றைக் கண்ணை யிகழ்வது பொட்டைக் கண்ணினியல்பு' போலும். வறியோரும் சுபாசுப காலங்களில் வீணாடம்பரக்காரரானல செல்வரைப்பார்த்து, புலியைப் பார்த்துப் பூனையும் சூடிக்கொள்வது போல், விரலுக்குத் தக்க வீக்கம்போ லிராமல், அனாவசியமான செலவுகளை ஊர்மெச்சச் செய்துவிட்டு முடிவில் கடன் காரரைக் கண்டால் காலனைக் கண்டதுபோல் பயந்து ஒளிகின்றனர். இது விஷயமாய்ப் பல பத்திரிகைகளும், பல நூல்களும், பிரசங்கமேடைகளும் பன்னிப் பன்னிப் பாடிக்கொண்டே யிருக்கின்றன வெனினும், அதனால் எவ்வகையான பயனையேனும் அடைந்தனவோ வென்பதையறி யக்கூடவில்லை. 'ஆனமுதலி லதிகம் செலவானால், மான மழிந்து மதி கெட்டுப், போனதிசை - யெல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய், நல்லார்க்குப் பொல்லனா நாடு, 'பொருடனைப்போற்றிவாழ்,' என்பனபோன்ற நீதி மொழிகளை யறியாதாரும், அறிந்து மதியாதாரும் தங்கள் காரியத்தை நடத்திக்கொண்டே செல்கின்றனர்; வீண்செலவு செய்யலாகாதேயன்றி, வீணல்லாத பிரயோஜனகரமானதும், தமக்கும் பிறர்க்கும் உபயோகமான செல்வத்தைப் பெற்றதாலடைய வேண்டிய இம்மை மறுமைப் பயனாகிய நன்மையைத் தரத்தக்கதுமான செலவுகளைச் செய்தே தீரவேண்டும். செய்தக்கவல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமை யானுங் கெடும்,” என்னு முணர்வில்லாத லோபியரென்னும் பட்டதாரிகள், பணத்தைச் சிக்கனமாகப் பாடுபட்டுத் தேடிப் புதைத்துவைத்துக் காப்பாற்றுகின்றனர்.

 

இவர்கள் விஷயத்தில் வீண்செல வென்பது முயற்கொம்பே. முன்னோரைநோக்க இன்னோர் ஓர் வகையிற்சிறந்தவராவர். ஆனாலும் இத்தகைய லோபிகளும் தங்கள் பொருளை, மிக்க அருமையான பொருளைச் செலவு செய்து விட்டால் மீட்டும் அடையக் கூடிய செல்வத்தைப் போலன்றித் தேடப்படும் பொருளைச் சிக்கனமாகப் புதைத்துக், கோடிக் கொன்றாகக் கொள்ளுகினும் கொள்ளக்கிடையாக் கரும்பொருளை வீணாகக் கொல்லுகின்றனர். ஊதாரிகளோ இதன்விஷயத்தில் சிக்கனமாயிருப்பர்; இல்லையில்லை: ஒரு காலுமில்லை. அதற்காக விசனிக்கவேண்டிய காலமும் வரும். அப்பொழுது செய்யத்தக்கது யாதுளது? மீளாத்துன்பத்தை யனுபவிக்க வேண்டியதே. செல்வ மப்படியல்ல. பத்து ரூபாய் மாதவருமான முள்ள ஒருவன் அதிகமாக ஐந்து ரூபாய் செலவிட்டு விட்டால் எவ்வித முயற்சியாலாவது அக்கடனைத் தீர்த்து விடலாம். ஈண்டு கூறப்படும் பொருள் அத்தன்மையதன்று. ஆகையால் இதனையோ வீண் செலவாகா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆயின் இஃது பொருளைப் போ லன்றி நம்மையு மறியாமல் நம்கட்டுக்கடங்காமல் செலவாய்க் கொண்டேதானிருக்கும். அதை நல்லவர் வீண்செலவாகாமல் உபயோகமுள்ளதாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

 

அப்பொருளெது? அதுதான் காலம் - நமது ஆயுட் காலம். இதன் தன்மையை யறியாது, பொழுது போகவில்லையே, சனிபோன்ற நாட்கள் எப்போது தான் ஒழியுமோ? என்று வருந்துவோர் எத்தனை பேர். காலம் என்ன வேகமாக ஓடுகிறது. இன்றிரா வொழிந்தது; நம் காலத்தில் நாள் குறைந்தது. நமது காலத்தைக் கணக்கிடுபவனான காலன், சூரியனையே அளவு கருவியாக்கொண்டு அளந்து கொண்டே யிருக்கிறான். ஒட்டிய இளமையில் ஓரைந்து நீங்கும்; ஆக்கையிளமையால் ஐம் மூன்று நீங்கும்; இரவில் துயிலாலொருபாதிமாயும். எஞ்சியுள்ள காலமும் பிணி மூப்புகளுக்குட்படும். எல்லாம் கழிய நின்றிருப்பது ஒரு சிறிதே. அதுவும் இவ்வளவென்று நிச்சயமாய் அறியக்கூடாதது. இப்போதோ, பின்னையோ, இன்னும் சற்று நேரத்திலோ எப்போதோ? பின்புறமாகவே விழித்த கண்மூடாது சர்வ சாக்கிரதையோடிருக்கும் மறலி தோளின்மீது கை போட்டுப்பிடிப்பது. இவ்வளவு குறுகிய காலத்தில் செய்யவேண்டிய வேலை யென்ன? பெறுதற்கரிய பிறவியைப் பெற்றதன் பயனையடைய முயல வேண்டுமன்றோ? இவ்வுண்மைகளை யறிந்த பெரியோர் உடல் நடுங்கி ஒரு நொடிப்போதையும் வீண் போக்காது, இம்மை மறுமைக்குரிய அறவினையைப் புரிந்து பயனை யடைந்தும் அடைந்து கொண்டு மிருக்கின்றனர்.

 

"இன்றருணோ தயங்கண்டோ முயர்ககன

முகட்டின் மிசை யிந்தப் பானு

சென்றடைய நாங்காண்பதையமதைக்

காண்கினுமேற் றிசை யிருக்குங்

குன்றடையு மளவுநா முயிர்வாழ்வ

தரிததன் மன் குறுகுங் கூற்றம்
என்றச்சத் துடன்மனமே மறவாம  
      லறவழி பி லேகு வாயே " .........       
என்றபடி

 

உடனே வந்த வேலையை முடித்துக்கொள்ள வேண்டும். மாலைச் செய்வோம், நாளைச்செய்வோ மென்னில், மாலைகிடந்தானெழுதலரிது. நாளை நம்முடை நாளோ, நமனுடை நாளோ! ஆகையால் லௌகிக சம்பந்தமான விஷயங்களைச் செய்யும்போது அதிலேயே அழுந்திக்கிடக்காமல் வேண்டிய வளவு செய்துகொண்டு மற்றக் காலங்களிலெல்லாம் கடவுள் தியானம், அறநெறி முதலியவற்றிலேயே நாட்டத்தைச் செலுத்துவது அத்தியாவசியகம், கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் எதற்கு? எப்படித் தலையில் நீர்க்குடத்தை வைத்துச் செல்லுந் தாதியானவள் குடத்தைக் கைகளாற் பற்றாது, பல விளையாட்டுக்களைச் செய்து, கைகளை வீசிக் கொண்டு நடந்தாலும் “ எங்கே நீர்க்குடம் தவறி விழுந்து விடுமோ'' என்று அதன் பேரிலேயே கவனத்தை வைப்பாளோ' அதைப்போலவும், சோரநாயகி யொருத்தி தன் வீட்டில் எவ்வித தொழிலைச் செய்யினும் தன் சோரநாயகன் மீதே எவ்வாறு கவனத்தைச் செலுத்துவாளோ அவ்வாறாகவும், என்ன தொழிலைச் செய்துகொண்டிருப்பினும், இம்மை மறுமைக்குரிய பயன்களைப் பெறுவதிலேயே நாட்டமுடையோரா யிருப்பது யாவர்க்குங் கடப்பாடாகும்: அருமையான காலத்தை வீண் போக்காது பரோபகாரம், நூல்களைக்கற்றல், போதித்தல், நாட்டிற்கான நன்மைபுரிதல், கடவுள் தியானம் முதலானவைகளில் செலவிட்டோமானால் அது வீண் செலவாகாது. வித்துவான்கள் (வித் = ஞானம்) தங்கள் காலத்தை எவ்வெவ்வகையிற் செலவழித்தனர் செலவழிக்கின்றனர், என்பதை யறிந்து அவ்வழியைப் பின்பற்றவேண்டும். சிறிதேயாயினும் உள்ளது கொண்டு நல்லது செய்யவேண்டும்.


    தேடப் படும் பொருளைச் சிக்கனம! கப்புதைத்துக்
    கோடிக் கொருநிமிடங் கொள்ளுகினும் - கூடாத
    வாணளை வீண்கழிக்கும் மானிடரைப் போன் மயக்கம்
    பூணார்பொய் கண்டு துறப் போர்.......
                       (ஒழிவி லொடுக்கம்).


பூ. ஸ்ரீனிவாசன்,

தமிழ்ப் பண்டிதர், இராணிப்பேட்டை.   

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴.

 

 

No comments:

Post a Comment