Monday, September 7, 2020

 

வேதாந்த

ஐய வினாவும் விடையும்


(தமிழ்ப் பண்டிதர் பூ. ஸ்ரீனிவாசன் எழுதியது.)

 

19-May-1929-ல் எடப்பாடி, மண்டி, கோ. வை. சின்ன ஆறுமுக பக்தர் என்னும நண்பரொருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அதில் என்னை வேதாந்த சம்பந்தமான சில கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு விடையிருக்குமாறு எழுதியிருந்தார். தபாற் செலவிற்காக இரண்டணாவும் அனுப்பியுள்ளார். அதுபோது விடுமுறை யாகலின் ஊரிலில்லாமையால் உடனே அவர் ஆவலைத் திருப்தி செய்ய முடியவில்லை. அன்றியும், என்ன எழுதுவது எனத் தோன்றாம லிருந்ததும் மற்றொரு காரணம். தாமதத்திற்காக நண்பர் மன்னிப்பாராக. அவர்க்குண்டானது போன்ற ஐயம் வேறு சிலர்க்கும் உண்டாயிருக்கலா மாகலின், விடையைப் பத்திரிகையின் வாயிலாக வெளியிடுவதே நலமாமெனக் கருதுகின்றேன்.


 அவர்
நிருபச் சுருக்கம்

 

"தாங்கள் எழுதிவரும் (வேதாந்த சாரசங்கிரக வசனம்) ஆனந்தபோதினி வாயிலாகச் சில காலமாகப் பார்த்து வந்ததில் வைகாசி மாதப்பத்திரிகையில் (தத்துவமசி) மகாவாக்கியம், உபதேசம் செய்தது போல் (அது நீ ஆனாய்) என்பது போல் (ஸோஹம்) பிரம்மைக்கிய பாவனையைக் காட்டி விட்டீர்கள். இப்பேர்ப்பட்ட உபதேசரத்தினத்தை அறிந்தவர்கள் தான் அறியக்கூடும். மற்றும் ஏனையோர் இது தெரியவில்லை என்று மயங்குவர். வாசிட்டம் இயற்கைக் குணம் சோதித்து முன்னே பின்னேயாவையுமாம் பிரமம் நீ என்னல் வேண்டும்' என்றும் 'பரம முணர்ந்தவிவேகியர்க்குப் பரம உபதேசம் பகர்வர்' என்றும் கூறுகின்றது. நிற்க,

 

இந்த அடிமை சில ஞான நூல்கள் வாசித்தும் விட்ட லட்சணை விடாத லட்சணை பாகத்தியாக லட்சணை என்பதின் விபரம் என் மனதிற்கு நன்கு கோசரமாகவில்லை. அது விபரம் நன்றாகத் தெரியும்படி எழுதி யனுப்ப வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த மாதப் பத்திரிகையில் தாங்களும் எழுதி யிருக்கின்றீர்கள். அது விவரம் தெரியவில்லை * * *''

 

வேறு சில கேள்விகளும் நண்பர் கேட்டிருக்கின்றார். எனினும் இவ்விரண்டே முக்கியமானவை. இவற்றுள் முதற் கேள்விக்கு விடை சுலபமானதே. அதாவது,

 

வேதாந்த நூல்களை எழுதுவோர் மகா வாக்கியார்த்தத்தையும் நேர் முகமாகவோ மறைமுக மாகவோ எழுதியே தீர வேண்டும். சரீரத்திற்குத் தலை எவ்வளவு அவசியமோ, தலையில்லாவுடல் எங்ஙனம் பயனற்ற தாகுமோ அங்ஙனமே வேதாந்தக் கிரந்தத்திற்கும் மகாவாக்கியமும் அவசிய மென்பதையும், அஃதின்றேல் அக்கிரந்தமே பயனற்றதாகு மென்பதையும் நாம் கூற வேண்டுவதில்லை. கைவல்லியம் முதலிய வேதாந்த நூல்களனைத்தும் மகா வாக்கியத்தை நன்கு விளக்கிக் கூறுவதே இதற்குச் சான்றாம். அங்ஙனம் கூறுவதைக் கொண்டே யாவரும் அதன் தத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வோராகார். வியாதிகளுக் கேற்ற சிகிச்சை முறைகளைக் கூறும் வைத்திய நூல்கள் எண்ணிறந்தனவாக விருப்பினும், தக்க ஆசிரியினிடத்து வைத்தியப் பயிற்சி பெற்றவனுக்கே அவை பயன் படுவதன்றி ஏனையோர்க்குபயோகமாகாமை போல், ஆசிரியன் வாயிலாக முறைப்படி உபதேசிக்கப் பெற்றோர்க்கே மகாவாக்கியார்த்தங்களும் பயன் படுவனவாம். ஆயின் இந்நூல்களாற் பயன் யாதோ வென்னும் வினாத் தோன்றும். அதற்குச் சமாதானம் இதுவாம். அதிகாரிகளின் தாரதம்மியத்திற் கேற்றவாறு சுருக்கமாகவும் பெருக்கமாகவும் பல நூல்கள் தோன்றும். அந்நூல்களை வாசிக்கும் பாக்கியம் பெற்றோரில் சிலருக்கேனும் (எல்லோர்க்கு முண்டாகாது) அதனுண்மையை யுணர வேண்டு மென்னும் ஆவல் தோன்றாதிராது. 'மனம் உண்டானால் வழியுண்டாம்' என்றபடி, அந்த ஆவல் ஆசாரியனிடம் அவர்களை ஈர்த்துச் செல்லும். அதனால் அவர்கள் உய்வு பெறலாம். பஞ்சாட்சரம் இன்னதென்றும் அதன் வகைகள் இன்னின்னவை யென்றும் அந் நூல்கள் கூறுகின்றன. குருவும் அவற்றைத் தான் உபதேசிக்கிறார். எப்படியும், 'தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வரா' தென்பது ஆன்றோர் அனுபவ மொழி யல்லவா?

 

வேதாந்தமானது பெரும் சந்தேகத்திற்கிடமான விஷயம். அவ்வளவு எளிதில் யாவரும் அதனை நம்பிவிட முடியாது. பெரும் ஆராய்ச்சிக் குரியது. விஷயங்களை சுருதிகளாலும் யுக்திகளாலும் நன்றாக அலசி அலசி ஆராய்ந்து அனுபவத்திற் பொருத்திப் பார்த்து நிச்சயிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இன்றேல் உண்மை புலனாகாது. அச்சங்கைகளை யகற்றுதற்கே தர்க்கப் பிர மாணங்களோடு பன்னூல்கள் தோன்றுவன வாயின.  குரூபதேசமாகிய ஒருமொழியே நம்பிக்கையுடைய அதிதீவிர பக்குவிக்கும் பயனடையப் போதும். ஆயினும் அவன் பிறர்க்குச் சந்தேகம் தெளிவிக்கும் ஆற்றலற்றவனாவன். அவன் தானும் பிறர் ஏமுறுத்தலால் மயங்கி நம்பிக்கை இழக்கக் கூடும். ஆகையால் வேதாந்தப் பயிற்சி செய்வோர் பல பல நூல்களை யாராய்ச்சி செய்தும், அத்தகையாரோடு கலந்து விசாரணை செய்தும் வரவேண்டும். வேதாந்தம் மூட நம்பிக்கையல்ல. ஆகவே கடல்போ லகன்றதாயிருத்தலின் ''சங்கிரகம் சங்கிரகம்'' எனச் சொல்லிக் கொண்டு வெளிப்படும் நூல்களும் என்பு நூற்றுக் கணக்கான இதழ்களை யுடைத்தா யிருக்கின்றன. விஷயங்களை மிகுதியாய்க் கொண்டுள்ளனவாகிய நூல்கள் எத்தனை யிருப்பினும் அவை யனைத்தையும் பார்க்க வேண்டு மென்னும் எண்ணம் வேதாந்தப் பயிற்சி யாளர்க் குண்டாவதில் ஆச்சரியமில்லை. பார்த்தே யாக வேண்டும்.

 

என்னைப் பொருத்த மட்டில் நான் கூறும் விடை ஒன்றுதான். அதாவது ஆனந்தனில் 'வெளியிட்டுவரும்' வேதாந்தசார சங்கிரகம் 'ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் செய்தது. அதனை யாவரு முணருமாறு தமிழில் வசனமாக எழுதுவதைத் தவிர நான் செய்வது ஒன்றுமில்லை என்பதே.

 

இனி, இரண்டாவது வினாவிற்கு விடைகூற முயல்கிறேன். இது சிரமமான காரியமென்று நான் அறிவேன். நண்பர் தாம் விசார சாகரம், பஞ்சதசி முதலிய பிரபல கிரந்தங்களைப் பார்த் திருப்பதாகவும், சில பெரியோர்களையும் கேட்டதாகவும் ஆனால் சந்தேக நீக்கம் உண்டாகவில்லை யென்றும் கூறுகிறார். ஆக, நான் எழுதுவது எங்ஙனம் திருப்தியளிக்க வல்லதாகும் என்று அஞ்சுகிறேன். அவர் சங்கை எது பற்றியதோ? என்னும் ஐயம் எனக்கிருப்பினும் 'லட்சணையின் விபரம் கோசரமாகவில்லை' என்று அவர் எழுதி யிருத்தலால், அதற்கு நான் பொருள் கொள்ளுகிறபடி, 'லட்சணை' யைப்பற்றி கூடியவரையில் எழுத முயல்கிறேன். இது நண்பர்க்கும் பிறர்க்கும் உள்ள ஐயத்தை நீக்கக் கூடுமென்பது எனது முழு நம்பிக்கையாம்.

 

லட்சணையின் இலட்சணத்தை விளக்க வேண்டின் அதுவே ஓர் பெருநூலாகும். அவ்வாறு விரித்து வாசகர்களின் மூளைக்கு மிக்க வேலை கொடுத்து மனக்குழப்பம் உண்டாக்குவதினும் யாதும் எழுதாதிருப்பதே உசிதமாம். ஏனெனின், அவ்வாறு விரித்துக் கூறும் விசாரசாகரம் முதலிய பல நூல்களிருத்தலின். ஆகவே, விஷயம் நன்கு புலனாமாறு சுருங்கக்கூறி விளங்கவைத்தலே ஈண்டமை வுடைத்தாகும். லட்சணை என்பது வடமொழிப் பதம். இலக்கண சம்பந்தமானது. நம்மாற் பேசப்படும் சொற்களில் பல தம் பொருளைத் தாமே வெளிப்படையாய் அறிவிக்கும். வேறு சில அங்ஙனம் வெளிப்படையா யுணர்த்தாமல் குறிப்பாக வுணர்த்தும். அங்ஙனம் குறிப்பா யுணர்த்துவனவற்றுள் லட்சணையு மொன்றாம். உதாரணமாக, 'வேலையில் மூழ்கினான்' என்று ஒருவன் கூறுகிறான். இவ்வாக்கியத்தில் கடற்கரை யெனப் பொருள் படும் ஜாபல வேலை என்னும் பதம் (வேலா = கடற்கரை, இது தமிழில் வரும் போது
'ஆ ஈ று ஐ ஆகும் என்னும் விதிப்படி, சீதா என்பது சீதை எனவும் மாலா என்பது மாலை எனவும் வருதல் போல, வேலை எனத் திரிந்து வழங்கும்.) மூழ்கினான் என்னும் அடுத்த பதத்தோடு சேர்த்துப் பார்க்கும் போது சரியான பொருள் தருவதில்லை. ஏனெனில், கடற்கரையில் மூழ்குதல்* எவ்வாறு சம்பவிக்கும்? சம்மவியாதன்றோ? ஆனால் அர்த்தமோ உண்
டாதல் வேண்டும். கடலில் மூழ்கினான் என்று கொண்டால் பொருள் சரியாகும். இருக்கும் பதமோ கடற்கரை (வேலை) யை யுணர்த்துகின்றது. ஆகவே, பொருள் பொருத்த முண்டாம் பொருட்டு இலக்கணை கொள்ளப்படுகிறது அப்படி கொள்ளுவோமாயின் வேலை என்னும் பதம் தன் பொருளாகிய கரையைக் காட்டாமல் தன்னோடு சம்பந்தமுடைய கடலைக் காட்டும். அதனால் பொருளும் பொருந்தும். இவ்வாறு எங்கெங்கே பொருள் பொருத்தமுண்டாகவில்லையோ அங்கங்கெல்லாம் பொருட் பொருத்தமுண்தாம் 'பொருட்டு இலட்சணை கொள்ளப்படல் வேண்டும்; அதனால் வாக்கியப் பொருளின் ஞானம் இடர்ப்படா துண்டாதல் வேண்டும் என்னும் நன்னோக்கத்தோடு ஆன்றோர்களால் லட்சணை அமைக்கப்பட்டது.

 

இனி, இதனை என்னால் சமீபகாலத்தில் எழுதி வெளியிடப்பட்டு 'ஆனந்த போதினி' காரியாலயத்தில் விற்கப்பட்டுவரும் " ஞான சூரியோதயம்” என்னும் வேதாந்த இரகசியார்த்த வினாவிடை " என்னும் நூலில், - வேதாந்தக் கொள்கைகளை யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ள வேண்டியே எளிய நடையில் விளக்கமாக எழுதப்பட்டிருத்தலின் - அதில் உள்ளபடி வரைவாம். " நம்மால் பேசப்படும் வாக்கியங்களிலுள்ள ஒவ்வொரு பதத்திலும் பொருளின் ஞானத்தையுண்டு பண்ணும் சக்தியொன்றிருக்கிறது. கடம் என்று சொல்லுகிற பொழுது, கடம் என்னும் பதமானது குடம் என்னும் ஒரு பொருளின் ஞானத்தை உண்டு பண்ணுகின்றது. அந்த ஞானத்தையுண்டு பண்ணும் சாமர்த்தியம் எதுவோ அதுவே சத்தியாம். அந்தச் சக்தியையுடைய அந்தப் பதத்தின் அர்த்தம் சக்கியார்த்தமாம் அச்சக்கியார்த்தம் வாச்சியார்த்த மென்றும் முக்கியார்த்த மென்றம் சொல்லப்படும். இதில் சொல்லுக்கும் அர்த்தத்திற்கும் நேரான சம்பந்தமிருக்கின்றது.

 

லட்சியார்த்தம்

 

அந்த வாச்சியார்த்தத்தினால் பொருள் பொருத்த முண்டாகாதாயின் அவ்விடத்தில் கற்றுணர்ந்த பெரியோர் பொருள் பொருத்த முண்டாவதற்காக வாச்சியார்த்தப் பொருளை விட்டு லட்சியார்த்தத்தாற் பொருள் கொள்வர். பதத்தின் சக்தியால் அர்த்தம் ஏற்படாமல், அந்த அர்த்தத்தின் மூலமாக, அந்த அர்த்தத்தோடு சம்பந்தமுடைய வேறு அர்த்தத்தைக் காட்டுவது லட்சியார்த்தமாம். இந்த லட்சியார்த்தத்தில் பதத்திற்கும் அதன் பொருளுக்கும் நேரான சம்பந்தமில்லை; சக்கியார்த்தத்தின் மூலமாக வேறு பொருளோடு பரம்பரையாகச் சம்பந்தமிருக்கின்றது. அதாவது,

 

ஒரு சொல்லிற்கும் அதன் அர்த்தத்திற்கும் உள்ள சம்பந்தம் சப்தத்தின் விருத்தி எனப்படும். அந்த விருத்தி சக்தி விருத்தி லட்சணா விருத்தி என இருவகையாம். பதத்திற்கும் அதன் அர்த்தத்திற்கும் உள்ள நேரான சம்பந்தம் சக்தி விருத்தியாம். சக்தி விருத்தியினாலறியப்படும் அர்த்தம் எதுவோ அது வாச்சியார்த்த மெனப்படும். அவ் வாச்சியார்த்தத்தோடு சம்பந்தமுடையது லட்சணா விருத்தியாம். அந்த லட்சணா விருத்தியாலறியப்படும் அர்த்தம் லட்சியார்த்தமாம்.''

 

ஆகவே, யாதாமொரு சொல் சக்க பொருளைத் தராதாயின் அப்பொருள் தோன்றும் பொருட்டு க்ஷணை உபயோகிக்கப்படுகின்றது.


 "ஆற்றல் உடைத்தாகற்பாலதன் சம்பந்தம் இலக்கணை.''
 தாற்பரிய வுணர்வு நிகழாமை இலக்கணைக்குக் காரணம்.''


என்று தருக்க சங்கிரகமும்,

 

"இலக்கணை யென்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொருபொருட்குத் தந்துரைப்பது'' என நன்னூல் விருத்தி யுரையும் கூறுதல் காண்க.

 

இவ்வாறு வடமொழி யிலக்கணம் கூறும் இலக்கணை (லக்ஷணை) யை 'ஆகுபெயர் எனக் கூறும் தமிழிலக்கணம்.


 ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
 தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே.''


என்பது நன்னூற் சூத்திரம். ஆகவே இலட்சணை ஆகுபெயருள் அடங்குகின்றது. ஆகுபெயரையும் உதாரண முகத்தால் லட்சணையோடு பொருந்துமாறு காட்டுவாம். 'சிவப்பு உழுதது'' என்று ஒருவன் கூறுகிறான். இதில் 'சிவப்பு' என்னும் பதம் ஓர் நிறத்தைக் காட்டுகிறது. பக்கத்திலுள்ள 'உழுதது' என்னும் பதத்தைப் பார்க்குமிடத்து இரண்டு பதங்களும் பொருளிற் பொருந்துவதில்லை. ஏனெனில், சிவப்பு நிறத்தினிடத்து உழுதற்றொழில் சம்பவியாது. ஆகலின் சிவப்பு நிறத்தையுடைய எருது எனக் கொள்ளின் பொருள் பொருந்துகின்றது. இதுவே ஆகுபெயர். இங்கு சிவப்பு என்னும் பண்பு (நிறக்குணப்) பெயர் அதனையுடைய எருதுக்கானது பண்பாகு பெயராம். இவ்வாறு பொருளாகு பெயர் இடவாகு பெயர் முதலியனவாக ஆகுபெயர் பலதிறப்படும். அவற்றுள் விட்டவாகு பெயர் விடாதவாகுபெயர் விட்டுவிடாத வாகுபெயர் என்பவையும் அடங்கியுள். இவற்றையே
வடநூலார் ஜஹதிலட்சணை (விட்டவாகுபெயர்), அஜஹதி லட்சணை (விடாதவாகு பெயர்), ஜஹதஜஹதி லட்சணை (விட்டு விடாத வாகுபெயர்) என்பர். இனி, முறையே இம்மூன்று லட்சணைகளையும் விளக்குவாம்.

 

(1) எங்கு வாச்சியார்த்தம் (ஒரு பதத்தில் அர்த்த ஞானத்தை யுண்டு பண்ணும் சாமர்த்தியம் எதுவோ அது சக்தியாம். அந்தச் சக்தியையுடைய அந்தப் பதத்தின் அர்த்தம் (அதாவது பதத்திற்கும் அதன் அர்த்தத்திற்கு முள்ள நேரான சம்பந்தம் சாக்கியார்த்தமாம். அச்சக்கியார்த்தமே வாச்சியார்த்தமெனவும் கூறப்படும்) என்று முன்னர் கூறியதை ஞாபகத்திலுய்க்க). முழுவதும் விடப்பட்டு அதனோடு (வாச்சியார்த்தத்தோடு) சம்பந்தமுடைய பொருளைக் காட்டுவது ஜஹதிலட்சணையாம். உதாரணமாக: -

 

ஒருவன் "கங்கையில் இருக்கிறது அந்தக் கிராமம்'' என்கிறான். இதில் கங்கை என்னும் பதத்திற்கு நதியின் வெள்ளம்' என்பது வாச்சியார்த்தம். கங்காநதியின் வெள்ளப் (பிரவாகத்) தில் கிராமம் இருத்தலமையாது. ஆகையால் "கங்காப் பிரவாகம்" என்னும் வாச்சியார்த்தம் முழுவதையும் விட்டுக்க ரையைக் கொள்ளுதல் வேண்டும். ஆகவே, கங்கை யென்னும் பதத்திற்கு 'கரையில் ஜஹதீலக்ஷணை யிருக்கிறது.

 

(2) வாச்சியார்த்தம் முழுவதையும் விடாமலே அதனோடு சம்பந்தமுடைய வேறு பொருளையும் காட்டுவது அஜஹதீலட்சணையாம். உதாரணமாக: -

 

ஒருவன் "சிவப்பு ஓடுகிறது'' என்று கூறுகிறான். இவ்வாக்கியத்தில் சிவப்பு என்பது வர்ணத்திற்காம். அந்த வர்ணத்தில் ஓடுதல் சம்பவியாது. ஆகையால் சிவப்பு வர்ணமுடைய குதிரை என்று பொருள் படுகின்றது. ஆகவே, சிவப்பு என்னும் பதத்தில் சிவப்பு வர்ணத்துடன் கூடிய குதிரையில் அஜஹதி லக்ஷணை யிருக்கிறது.

 

(3) பதத்தின் வாச்சியார்த்தத்தில் ஒரு பாகத்தை விட்டு ஒரு பாகத்தை
 மாத்திரம் அறிவிப்பது விட்டுவிடாத லட்சணையாம். உதாரணமாக: -

 

ஒருவன், ஒருகாலத்தில் சென்னையில் பெரிய வியாபாரியாயிருந்த ஒருவனைச் சில காலத்திற்குப் பின்னர் தஞ்சையில் சன்னியாசியா யிருக்கப் பார்த்தான். பார்த்ததும் இன்னானென்றறிந்து "அவனே இவன்'' என்று நிச்சயித்தான். 'அவனே இவன்' என்னும் வாக்கியத்தில் அவன்' என்பதற்கு சென்னையில் பத்து வருடங்கட்கு முன் வியாபாரியா யிருந்தவனென்பதும் 'இவன்' என்பதற்குத் தஞ்சையில் இப்பொழுது சன்னியாசியா யிருப்பவனென்பதும் வாச்சியார்த்தமாம். இவ்வாச்சியார்த்தத்தில் விரோதபாக மிருக்கின்றது. எவ்வாறெனின், இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும், சென்னைக்கும் தஞ்சைக்கும், வியாபாரத்தொழிலுக்கும் சன்னியாசத்திற்கும் விரோதமிருக்கின்றது. இவ்வாறு இருபதங்களிலும் விரோதமாகவுள்ள வாச்சிய பாகங்களை விட்டு, விரோதமில்லாத ஆள் மாத்திரத்தைக் கொள்ள வேண்டும். இதுவே ஜஹதஜஹதி லட்சணை அல்லது பாகத்தியாக லட்சணையாம்.

 

இதுவரை என்னால் கூடியவரையில் லட்சணையையும் அதன் விதங்களையும் விளக்கினேன். இவற்றை இதுகாறும் அறியாதிருந்தவர்களும் அறிந்து கொள்ளக் கூடுமென்பது எனது நம்பிக்கை. சாத்தியமான வரையில் எளிய நடையிலெழுதி யிருக்கிறேனென்றும் நம்புகிறேன். ஜஹதி முதலிய லட்சணைகளை விளக்க விசாரசாகரம் என்னும் வேதாந்தக் கிரந்தத்தில் வேறு சில உதாரணங்களும் காட்டப்பட்டிருப்பினும், இவ்வளவே போதுமெனக் கருதி அவற்றை வரையாது விடுத்தேன். இனி இந்த லட்சணைமகா வாக்கியத்தோடு பொருந்து மாற்றினை அடுத்த வியாசத்தில் வரைவல்.

 

குறிப்பு: - நண்பர்களுக்கு ஓர் விஷயம் கூற விரும்புகிறேன். நுனிப்புல் மேய்ச்சலாக வாசித்து விடுவதால் எதுவும் தெரிந்து விடாது. அதிலும் இத்தகைய வேதாந்த விஷயங்களை வெகு நிதானமாக மனத்தை ஒரு முகப்படுத்தி ஒவ்வொரு வாக்கியத்தையும் - ன்? ஒவ்வொரு எழுத்தையும் பொருள்கபடுத்திக் கொண்டு வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் செவ்விதினுணரலாம். விஷயங்கள் நன்கு புலனாகும். ஆகையால் அவ்வாறு வாசித்து விஷய வுணர்ச்கியடையுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.


மகாவாக்கியத்தில் லக்ஷணையி னுபயோகம்

 

வேதமானது சோபானக்கிரகத்தில் முதலில் கர்மத்தையும், இரண்டாவதாக உபாசனை அல்லது பக்தியையும், முடிவில் ஞானத்தையும் புகட்டுகின்றது. முடிவாக நாம் அடைய வேண்டிய - அடைந்தே தீர வேண்டியநிலை அதுவே, இதனை 'விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞான மொரு நான்கும், அரும்புமலர் காய் கனிபோ லன்றோ பராபரமே,' எனவும், 'பத்திநெறிநிலை நின்றும்' என்று தொடங்கும் பாடலில்' ஞானமலது கதிகூடுமோ' எனவும் கூறிப்போந்தார் தாயுமான சுவாமிகள். ஆகையால், வேதமுடிவு அல்லது அந்தம் ஞானபாகமாம். அந்த ஞான மின்ன தென்பதை உணர்த்த இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் நான்கு வாக்கியங்களால் அதனை உணர்த்தின. அது பற்றியே அவை (நான்கு வாக்கியங்கள்) மகாவாக்கியம் எனப் படுகின்றன. அவை சித்தார்த்த போதக வாக்கிய மெனவும் படும். அதாவது, விதிநிஷேதங்களின்றிச் சர்வசித்தமாக எப்பொழுதும் பெறப்பட்ட பொருளாகிய பிரஹ்மாத்ம ஐக்கியத்தைப் போதிக்கும் வாக்கியமாம். மற்றையவை விதி நிஷேத வாக்கியங்கள்.

 

(1)    பிரஞ்ஞானம் (இருக்கு வேதம்).

(2)    அகம் பிரஹ்மாஸ்மி (யசுர்வேதம்).

(3)    தத்துவமசி (சாமவேதம்).

(4)    அயமாத்மா பிரஹ்மம் (அதர்வண வேதம்)

 

என்னும் மகாவாக்கியங்கள் நான்கனுள் உபதேச வாக்கியமாயிருத்தலின் தத்துவமசி மகாவாக்கியமே எல்லா நூல்களிலும் பிரதி பாதிக்கப்படுகின்றது.

 

இவ்வாக்கியம் 'தத்'' துவம்'' அசி' எனும் முப்பதங்களா லாயது. இவற்றுள் 'தத்' என்பதற்கு அது' என்பதும், துவம்' என்பதற்கு 'நீ' என்பதும், 'அசி' என்பதற்கு இருக்கிறாய்' என்பதும் பொருளாம். எனவே 'அதுநீயா யிருக்கிறாய்' என்பது திரண்ட பொருளாம். இதில் 'அது' என்பது ஈசுவரனையும் 'நீ' என்பது ஜீவனையும் குறிக்கும். ஆகவே, 'ஈசுவரன் நீயாயிருக்கிறாய்' என்று மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளக் கிடக்கின்றது. இது வாச்சியார்த்தம். ஆனால் இது பொருந்தாது. ஏனெனின்; ஈசுவரனும் ஜீவனும் ஒன்று எனச் சொல்லக்கூடாது; ஒருவர்க் கொருவர் விரோத தரும்முடையவராகலின். எங்ஙனமெனின்; ஈசுவரன் மாயையைச் சுவாதீனமாகவுடையவர். அதனால் சுதந்திரராயும் தன்னை யறிந்து கொண் டிருப்பவராயும் சர்வவல்லமையும் பேரறிவும் வியாபகமு முள்ளவராயும் பந்தமோக்ஷங்களின்றியவராயு மிருப்பவர்; ஜீவன் அவித்தையின் வசப்பட்டவனாயும் அதனால் பராதீனனாயும் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையவனாயு மிருப்பவன். இவ்வாறு பரஸ்பரம் மாறுபட்ட தருமமுடைய இவ்விருவரும் ஒன்றெனக் கூறுதல் ஒளியும் இருளும் ஒன்றெனக் கூறுதல் போலாம்; ஆகையால் அது நீயாயிருக் கிறாய்' என்னும் வாக்கியம் பொருத்த முடையதாகாது. ஆனால் வேதமோ பொய் புகலாது. அதுபற்றி லக்ஷணையால் பொருள் கொள்ளின் பொருந்தும்.

 

'அது' என்பதற்கு பிரஹ்மம் என்று பொருள் கொள்ளின் பொருந்துகின்றது. ஆயின், ஏன் அவ்வாறு கொள்ளலாகா தெனின்; அவ்வாக்கியம் ஈசுவரனைச் சுட்டி யெழுந்தது. எவ்வாறெனின்: சுவேதகேது என்னும் முனி புத்திரன் தன் தந்தையாகிய உத்தாலகரை நோக்கி, 'இவ்வித விசித்திரமாகிய உலகம் யாரால் படைக்கப்பட்டது?' எனக் கேட்டபோது, உத்தாலகர் 'இவ்வுலகத்தைச் சிருஷ்டித்த அது நீயா யிருக்கிறாய். (தத்துவமசி)' என்றார். ஆகவே, தத் என்பதற்கு ஈசுவரனையே கொள்ள வேண்டும்.

 

இங்கு, மாயை, மாயையிலுள்ள ஆபாசன், அதன் (மாயையின்) அதிஷ்டான சேதனம் இம் மூன்றும் சேர்ந்தது ஈசுவரன் என்றும், அவித்தை, அதின் ஆபாசம், அதின் அதிஷ்டான சேதனம் இம்முன்றும் சேர்ந்தது ஜீவன் என்றும் ஈசுவர ஜீவ லக்ஷணம் கூறப்படுகின்றது. இவ்விரண்டினுள்ளும் மாயை அவித்தை, அவற்றாலுண்டாம் சர்வசக்தி அற்பசக்தி முதலிய தர்மங்கள் இவைகளே விரோதாமிசங்கள். இரண்டின் சேதனத்தில் விரோதமின்று. ஆதலின் விரோத பாகங்களை விட்டு அவிரோத பாகத்தை மட்டும் கொள்ளின் ஈசுவர சேதனமும் ஜீவ சேதனமும் ஒன்றே யாகலின் 'அது நீயா யிருக்கிறாய்' என்னும் வாக்கியம் பொருத்த முடையதாகும். இவ்வாறு ஒரு பாகத்தை விட்டு மற்றொரு பாகத்தை எடுத்துக் கொள்ளுதற்கே பாகத்தியாக லட்சணை அல்லது விட்டு விடாத லக்ஷணை யென்று பெயர்.

ஏனை இரண்டு லட்சணைகள் பொருந்துதலில்லை. இதன் விவரத்தை என்னால் எழுதப்பட்ட 'ஞான சூரியோதயம் என்னும் வேதாந்த இரகசியார்த்த விடையில் உள்ளபடி காட்டினால் இனிது விளங்குமாகலின் அதனை அப்படியே எழுதி விடுகின்றேன்.

 

விட்ட லட்சணையால் அர்த்தம் சம்பவியாமை

 

"விட்ட லட்சணையில் வாச்சியம் முழுதும் விடுபட்டு அதன் சம்பந்தியான வேறு பொருள் கிரகிக்கப்படுகின்றது. அதன்படி மகாவாக்கியத்திலும்வாச்சிய பாகம் முழுதும் விடுபட்டு வேறு பொருள் கிரகிக்கப்படல் வேண்டும். அவ்வாறு கிரகிப்பதாயின் அவ்வாச்சி யார்த்தத்தினும் வேறான சூனியம் கிரகிக்கப்பட வேண்டியதாகும். ஆதலின், விட்ட லட்சணையால் அர்த்தம் சம்பவியாது.

 

விடாத லட்சணையால் அர்த்தம் சம்பவியாமை

 

விடாத லட்சணையில் வாச்சியார்த்தம் விடுபடாமல் அதிகமான ஒருபொருளும் கிரகிக்கப்படுகின்றது. அதன்படி மகாவாக்கியத்திலும் வாச்சியபாகம் முழுதும் இருத்தல் வேண்டும். ஆனால் வாச்சிய பாகம் விரோதத்தன்மையுடையதா யிருக்கின்றது. ஆதலால் அதனை முழுதும் விடாதிருத்தலால் விரோதம் நீங்காது. அன்றியும் அதிகப் பொருள் கிரகிக்கப்பட வேண்டுமானால் பிரஹ்மத்தினும் வேறான பொருளைச் சேர்த்தல்வேண்டும். அதுவும் அசங்கதம். இவ்வாற்றால் விடாத லட்சணையாலும் பொருள் கிரகிக்கப்படாது.

 

விட்டுவிடாத லட்சணையால் அர்த்த சம்பவம்

 

வாச்சியத்திலுள்ள விரோத பாகத்தை விட்டு விரோத மில்லாத பாகத்தைக் கொள்ளுதல் விட்டு விடாத லட்சணையாம் என்பது முன்னர் கூறப்பட்டது. அதன்படி, ஆபாச சகிதமாயையும் அவித்தையும் மகாவாச்சியத்தில் விரோத பாகமாதலின் அவ்விரண்டையும் நீக்கி, விரோதமின்றிய பாகமாகிய சேதனத்தைக் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் கொள்ளுமிடத்துக் கடாகாச மகா காசங்களுக்கு அபேத மிருத்தல் போல, ஜீவ சாட்சியாகிய கூடஸ்தனும் ஈசுவர சாட்சியாகிய சேதனமும் ஒன்றே என்பது பெறப்படும். இதுவே தத்துவமசி மகாவாக்கியத்தின் பொருளாம்.'" (ஞான சூரியோதம் என்னும் வேதாந்த இரகசியார்த்த வினாவிடை பக்கம் 144 - 145.)

 

இதுவே மகா வாக்கியத்தின் பொருள் என்பது சிதையாத சித்தாந்தமாம். இனி, இவ்வியாசம் எழுதுவதற்குக் காரணராயிருந்த நண்பர் இரண்டாவதாக எழுதிய நிருபத்தில் பின்வருமாறு எழுதுகிறார். ஒருவர் குடும்பத்திலிருப்பது தான் விட்ட லட்சணை என்கிறார். ஒருவர் சந்யாசியாக இருப்பதுதான் விட்ட லட்சணை என்கிறார். சஞ்சித பிராரப்த ஆகாமிய கர்மங்கள் தான் விட்ட லட்சணை விடாத லட்சணை விட்டுவிடாத லட்சணை என்பது என்கிறார் ஒருவர். இன்னும் பலமாதிரி அபிப்பிராயம் சொல்லுகின்றனர். இந்த அடிமை என்ன செய்வது; எல்லாம் சரிசரி என்று தங்கள் அபிப்பிராயத்தை எதிர் பார்த்துக் கொண் டிருக்கிறது. ஆகலின், விபரமாகப் பத்திரிகை வாயிலாக எழுதி யனுப்புவீர்களென்று நம்புகிறேன்.''

 

நண்பர் கூறுவது போல் பேசும் வேதாந்திகளும் சிலர் இருக்கின்றன ரென்பது உண்மையே யென்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் கூற்றிற்கும் லட்சணைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. இவைகள் வெறும் குயுக்தி அர்த்தங்களேயாம். இத்தகைய குயுக்தி வார்த்தைகளைக் கண்டு யாரும் மயங்கிவிடலாகாது. எனக்குத் தெரிந்த வேதாந்தி யொருவர் ஓரிடத்தில் பேசிக்கொண் டிருந்தபோது,


 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
 துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
 தப்பாமற் சார்வார் தமக்கு.


என்னும் செய்யுளைக் கூறி, திருமேனி என்றதற்கு குப்பை மேனிச் செடி எனப் பொருள் கொண்டு, பரிசுத்தமாகிய குப்பை மேனி என்னும் செடியின் வேரைத் தப்பாமல் சேர்ப்பவர்க்கு வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் * * எனக்கூறி முடித்தார். குப்பை மேனிச் செடி மிக்கச் சிறப்புடையதா யிருக்கலாம். ஆனால் விநாயகர் துதியாகக் கூறப்பட்டுள்ள வாக்குண்டாம்' செய்யுளுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்! அவர்களும் இவரிடத்தில் சேர்ந்தவர்தான். சுருங்கக் கூறுமிடத்து இவ்விபரீதங்களெல்லாம் தக்க பெரியாரிடத்து வேதாந்தப் பயிற்சி பெறாமையா லுண்டாகின்றவையேயாம். இத்துடன் விஷயத்தை முடித்துக் கொள்ளுகிறேன். எவ்வளவு எழுதவேண்டுமோ அவ்வளவையும் எழுதிவிட்டேனென்றெண்ணுகிறேன். ஆனால் வாசகர்களுக்கு இதனால் எவ்வளவு பயனுண்டாகுமோ அறியேன். எல்லாம் வல்ல இறைவன் நற்பயனளிக்குமாறு இறைஞ்சுகின்றேன்.


 ஓம். தத் சத்.

 

பூ. ஸ்ரீனிவாசன், தமிழ்ப்பண்டிதர்,

சித்தூர்,

 

ஆனந்த போதினி – 1929, 1932 ௵

ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், பிப்ரவரி, ௴

 

 

 

 

No comments:

Post a Comment