Monday, September 7, 2020

 

வாசிஷ்டம் வைராக்ய ப்ரகரணம் 



ஸ்ரீராமர் குருகுலத்தில் வித்யாப்யாஸம் செய்து அரண்மனைக்கு வந்து சுகமாக வாஸம் செய்துகொண் டிருக்கையில், ஒருநாள்ச் ஸ்நாகம், போஜனம் முதலிய காரியங்களிலும் அவர் சிரத்தையில்லாமல் இருப்பதை அறிந்து தசரதர் அவரை வரவழைத்துக் கேட்க, தனக்கு தீர்த்த யாத்திரை செய்வதற்கு ஆசை யிருப்பதாகச் சொன்னார். அதைக்கேட்டு தசரதரும் லஷ்மணனுடனும், சத்ருக்னனுடனும், தீர்த்த யாத்திரை செய்ய அனுமதித்தார். பிறகு ராமர் தம்பிகளுடன் அநேக தேசங்களில் சஞ்சாரம் செய்து, அநேக புண்ய தீர்த்தங்களைச் சேவித்து அயோத்திக்குத் திரும்பி வந்தார். மறுபடியும் முன்போலவே இருப்பதைக் கண்டு, வசிஷ்டர், ப்ரகு, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, ச்யவனர், உத்தாலகர், உசீனரர், சரலோமர், விஸ்வாமித்திரர், நாரதர், வாமதேவர், வியாஸர், மரீசி, துர்வாஸர், காத்யாயனர் பரத்துவாஜர், ரீசிகர், சர்யாதி முதலிய ரிஷிகளும், தசரதர் முதலிய சக்கரவர்த்திகளும், அநேக சிற்றரசர்களும் நிறைந்த சபையில் ராமருக்கு உபதேசம் செய்தார். ஆகையினால் இதற்கு வாசிஷ்டம் என்று பெயர். அப்படி வசிஷ்டர் உபதேசம் செய்த இப்பெரிய வேதாந்த சம்மிதையை வால்மீகி தமது சிஷ்யராகிய பரத்துவாஜருக்கு பத்தொன்பது நாட்களில் தேசம் செய்தார். இதில் முப்பத்தீராயிரம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது 1. வைராக்ய ப்ரகரணம். 2. முமுக்ஷவிவகார ப்ரகரணம். 3. உத்பத்திப்ரகரணம். 4. ஸ்திதி ப்ரகரணம். 5. உபசாந்தி ப்ரகரணம். 6. நிர்வாணப்ரகாணம் என்று ஆறு ப்ரகரணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறந்த அத்வைத கிரந்தமாம்.

 

இதை வாஸிஷ்டம் என்றும், யோக வாஸிஷ்டமென்றும், ஞானவாஸிஷ்டமென்றும், உத்தர ராமாயணமென்றும், மோக்ஷராமாயண மென்றும் சொல்லுவதுண்டு.


முதல் ப்ரகரணம் முதல் சர்க்கம்

 

சுதீஷணர் என்ற வேதமோதிய அந்தணர் ஒரு அகத்திய முனியின் ஆச்ரமம் சென்று அவரை வணங்கி ஸ்வாமி: - "மோஷத்திற்கு கர்மம் ஹேதுவா? ஞானம் ஹேதுவா? அல்லது இவ்விரண்டும் ஹேதுவா? என்று நிச்சயித்தருளவேண்டும் " என்று வினவ அகத்தியமுனி பக்ஷிகள் எவ்வண்ணம் இரண்டு இறகுகளாலும் ஆகாயத்தில் பறக்கின்றனவோ அவ்வண்ணம் மனிதர்கள் ஞானம் கர்மம் இவ்விரண்டு ஸாதனங்களாலும் மோக்ஷ மடைகிறார்கள். ஆகையால் ஞானமும் கர்மமும் இரண்டும் மோஷத்திற்கு ஹேதுவாகுமென்பது நிச்சயம்.

 

இதற்கு ஆதாரமாக ஒரு கதை சொல்லுகிறேன். முன்காலத்தில் அக்னி வேஸ்யனுடைய குமாரர் காருண்யர் என்ற ஒரு அந்தணர் இருந்தார். அவர் நான்கு வேதங்களையும் ஆறு வேதாங்கங்களையும் குருவினிடம் நன்றாகக் கற்றுத் தமது ஆஸ்ரமத்திற்கு வந்து கர்மானுஷ்டானம் செய்யாமலிருந்தார். அவ்வாறு இருக்கும் தம் மகனைப் பார்த்து அக்னிவேஸ்யர் “ஏன் இப்படி கர்மானுஷ்டானம் செய்யாமலிருக்கிறாய்? கர்மம் செய்யாமல் எப்படி மோஷ மடைவாய்? " என்று கேட்கத் தமது பிதாவாகிய அக்னி வேஸ்யரை நோக்கி '' வேதத்தில் சில வாக்கியங்கள் மனிதர்கள் உயிரோடிருக்கும் வரையில் அக்னி கோத்ரம் முதலிய கர்மங்களைச் செய்ய வேண்டுமென்றும், சில வாக்கியங்கள் கர்மத்தால் பயனில்லை யென்றும் த்யாகத்தால் மாத்திரம் மோக்ஷம் கிடைக்குமென்றும் சொல்லுகின்றன. இவ்விரண்டு விதமான வாக்கியங்களில் எதை நாம் அங்கீகரிப்பது என்று ஐயங்கொண்டு மௌனமாக விருக்கிறேன்'' என்று சொல்ல அக்னி வேஸ்யரும் தமது புத்திரரைப் பார்த்து '' மகனே இதற்கு ஆதாரமாக ஒரு கதை சொல்லுகிறேன்; கதையைக் கேட்டு ஐயம் தெளிந்து, நீ கர்மானுஷ்டானம் செய்வாயாக. அப்ஸரஸ்திரீகளில் ஒருத்தியாகிய சுருசி என்பவள் ஹிமயமலையின் உச்சியில் உட்கார்த்து கொண்டிருக்கும் பொழுது விமானத்தில் ஏறிச் செல்லும் தேவதூதனைக் கண்டாள். 'ஓ தேவ தூதனே! நீ எங்கு செல்லுகிறாய்? என்று கேட்க, தேவதூதன் சுருசியை நோக்கி 'ஓ சுருசியே! பூலோகத்தில் அரிஷ்டநேமி என்ற அரசன் தனது மகனுக்குப் பட்டம் சூட்டித் தான் இராஜ்ஜியத்தை வெறுத்து கந்தமாதன மலையில் தவம் புரிந்து வருகிறான்' என்று மறுமொழி உரைத்தான். அதைக் கேட்டு சுருசியும் அங்கு நடந்த சமாசாரத்தை எனக்குச் சொல்லுவாயாக என்று கேட்டாள். தேவதூதன்' எனது ஸ்வாமியாகிய இந்திரன் என்னைப்பார்த்து 'அரிஷ்டநேமி அரசன், கந்தமாதன மலையில் தவம் வருகிறான். அங்குச் சென்று அவனைத் தரிசித்து இந்திரனிடம் செல்லுகிறேன்' என்று மறுமொழி உரைத்தான். அதைக்கேட்டு சுருசியும் ‘அங்கு நடந்த சமாசாரத்தை எனக்கும் சொல்லுவாயாக' என்று கேட்டாள். தேவதூவன் எனது சுவாமியாகிய இந்திரன் என்னைப் பார்த்து அரிஷ்டநேமி அரசன், கந்தமாதனமலையில் தவம் புரிந்து வருகிறான். அங்குச் சென்று, அவனை விமானத்தில் ஏற்றி இங்கு அழைத்து வா' என்று சொன்னார். அவருடைய உத்திரவைச் சிரஸில் வகித்து அரசனிடம் சென்று இந்திரன் சொன்ன சமாசாரத்தைத் தெரிவிக்க அவனும் என்னைப் பார்த்து'ஓ தேவ தூதனே! ஸ்வர்க்கத்திலிருக்கும் குணதோஷங்களை எனக்குச் சொல்லும். அவைகளை யறிந்த பிறகு அங்கு வருவதா வேண்டாமா என்று யோசிப்பேன்' என்று சொன்னான். அதைக் கேட்ட தேவதூதன் 'ஸ்வர்க்கத்தில் அதிக புண்ணியத்தால், அதிக சுகமும், குறைந்த புண்ணியத்தால் குறைந்த சுகமும அடைகிறார்கள். ஸ்வர்க்கத்திலும் புண்ணியத்திற்குத் தக்கபடி பலத்தில் தாரதம்யம் என்று சொல்ல அப்பேர்ப்பட்ட ஸ்வர்க்கத்தை நான் விரும்பேன். கொடுமையாகத் தவம் செய்து இக்காயத்தை, பாம்பு தனது சட்டையை விடுவது போல விட்டு விடுகிறேன். ஆனதினால் நீ விமானத்துடன் திரும்பிப் போவாயாக' என்று சொன்னான். இதைக்கேட்டு தேவதூதன் விமானத்தில் ஏறி விரைவாக விண்ணுலகம் வந்து, இந்திரனிடம் விருத்தாந்தம் தெரிவிக்க, இந்திரனும் தேவதூதனைப் பார்த்து, " நீ மறுபடியும் அவனிடம் சென்று அவனை வால்மீகிரிஷியின் ஆஸ்ரமம் அழைத்துச் செல். வால்மீகி ரிஷியைப் பார்த்து ஸவர்க்கத்திலும் விருப்பமில்லாத அரசனுக்கு தத்வோபதேசம் செய்யுமாறு சொல்' என்று சொன்னார். பிறகு தேவதூதன் அரசனுடன் ஆஸ்ரமம் சென்று வால்மீகியை வணங்கினான். அரசனும் 'ஸ்வாமி! இப்பிரபஞ்சமாகிய துக்கக்கடலில் மூழ்கி யிருக்கும் என்னைத் தாங்கள் கடத்தி விடவேண்டும் என்று சொன்னான். அதைக் கேட்டு வால்மீகி முனிவரும் 'ஓ அரசரே வசிஷ்டராம சம்வாதமாகிய இக்கதையைக் கேட்டுத் துக்கத்தைப் போக்கிக் கொள்வாயாக? " என்றார்.

 

பிறகு தசரதர் சுமந்திரன் முதலிய மந்திரிகளுடன் மந்திராலோசனை செய்து ராமருக்குக் கல்யாணம் செய்து வைப்பதாக நிச்சயித்து அவரை வரவழைத்து அவர் ஒவ்வொருநாளும் ஏதோ சிந்தையிலாழ்ந்து வருத்த மடைந்து இருப்பதைக்கண்டு " ஓ ராமா! உனக்கு இப்பெரிய கவலை உண்டாக காரணம் என்ன?'என்று பன்முறை கேட்டபோதிலும் ஒன்றும் பதில் செல்லாமல் மௌனமாக இருந்தார்.

 

இவ்வாறு ராமர் வருத்தப்படுவதைக் கேட்டு அந்தப்புர ஸ்திரீகளும் அயோத்தி நகரில் வசிக்கும் ஜனங்களும் ஆறாத்துக்கம் அடைந்தனர். இத்தருணத்தில் தசரத மஹாராஜனைப் பார்க்க விஸ்வாமித்திரர் அயோத்திக்கு வர்தார். தசரதர் தாமாகவே சென்று விஸ்வாமித்திரரை அழைத்து வந்து ஆசனத்தில் அமர்த்தி அர்க்யபாத்யாதிகளால் பூஜை செய்து வணங்கி நின்று “சுவாமீ! தங்களது வரவால் நானும் எனது நகரமும் புனித மாக்கப்பட்டோம். தாங்கள் வந்த காரியம் என்ன? உத்திரவி ட வேண்டும் என்று சொல்லி அஞ்ஜலிசெய்து நின்றார். அதைக்கேட்டு விஸ்வாமித்திரரும் அரசனுக்கு ஆசி கூறி 'ஓ அரசே! நான் ஒரு யாகம் செய்யப் போகின்றேன். அதற்கு இடையூறாக மாயாவிகளான அநேகம் அரக்கர்கள் ரக்தம் மாமிஸம் முதலியவற்றை வர்ஷித்து எனது யாகசாலையை அசுத்தம் செய்கின்றனர். ஆகையால் அவ்வாக்கர்களைக் கொன்று எனது யாகத்தைக் காப்பாற்றத் தங்களது மூத்தகுமார்னான ராமனை என்னுடன் அனுப்பித் தரவேண்டும் என்று கேட்டார்.

 

தபசியே! ராமருக்கு இக்காலம் பதினாறு வயது கூட ஆகவில்லையே! எங்ஙனம் மாயாவிகளான அரக்கர்களுடன் யுத்தம் செய்வான்? நான் அநேகம் அக்ஷெளகினி சேனைகளுடன் அரக்கர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொன்று யாகத்தையும் காப்பாற்றுவேன்'' என்று சொன்னார்.

 

இதைக் கேட்டு விஸ்வாமித்திரர் மிகக் கோபங் கொண்டு உதடு துடிக்கத்தமது காலால் பூமியை உதைத்து நின்று தசரதரைப் பார்த்து "ஓ அரசே! மிகக் கியாதிபெற்ற இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த உனக்கு இது தர்மமோ?" என்று கேட்டார். இச்சமயம் தசரதருடைய குல குருவான வஸிஷ்டர் அவரைப் பார்த்து " ஓ தசரதனே! மூவுலகிலும் கியாதி பெற்ற இஷ்வாகுகுலத்தில் பிறந்த நீ இவ்விதம் அதர்மத்தைச் செய்வது உனக்கும் உனது குலத்திற்கும் அபகீர்த்தியை விளைவிக்கும். இப்பொழுதே ராமரைக் கொடுத்துவிடு. உனக்கும் உனது குமாரர்களுக்கும் மிகுந்த க்ஷேமம் உண்டாகும்" என்று சமாதானம் செய்தார்.

 

தசரதர் தூதர்களைக் கொண்டு ராமரை வரவழைத்தார். இரு பாரிசங்களிலும் பிருகஸ்பதி சுக்கிராசாரியரால் சேவிக்கப்பட்ட இந்திரன் போல் வசிஷ்ட விஸ்வாமித்திரர்களால் சேவிக்கப்பட்ட சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் தமது பிதாவை ராமர் பார்த்து வெகு தூரத்திலேயே சாஷ்டாங்கமாக வணங்கினார். தசரதர், ராம லஷ்மண பாத சத்ருக்னர்களை ஆலிங்கனம்செ ய்து மடியில் உட்காரவைத்து புலகாங்கிதராக ராமரை நோக்கி 'ராமா! நீ ஏன் இச் சிறுவயதிலேயே வருத்தப்படுகிறாய்? உனக்கு இங்கனம் மனக்கவலை உண்டாகக் காரணம் என்ன? " என்று கேட்டார். ராமர் அதைக் கேட்டு, மேகத்வனியால் மயில் சந்தோஷ மடைவது போலச் சந்தோஷமடைந்து "ஒஸ்வாமி! நான் எனது பிதாவின் கிருஹத்தில் வளர்ந்து, கிரமமாக யௌவனத்தை அடைந்து, குரு குலத்தில் வேதாப்யாசம் சாஸ்திராப்யாசம் முதலியவைகளைச் செய்து, அநேக தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, பற்பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்து எனது புத்தியைக் கொண்டு யோசித்தேன். இது என்ன உலகம்? இது என்ன சுகம்? காற்றில் அசையும் ஆல் இலையின் நுனியிலிருக்கும் ஜலபிந்து போல் தக்ஷணத்தில் நாசமடையக் கூடிய இவ்வுலகத்தில் என்ன சுகம் உளது. இங்கு பிராணிக ளெல்லாம் புண்ணிய பாவங்களால் நானாவித யோனிகளில் பிறந்து இறந்து கஷ்டம் அடை இவ்வுலக வாழ்க்கையும் நீரில் வாழ்க்கையும் நீரில் உண்டாகும் குமிழி போலவும், ஆகாயத்தில் தோன்றும் நகரம் போலவும் ஒரே க்ஷணத்தில் அழியும் இயற்கைடையது. இவையெல்லாம் சம்பரனுடைய மாயைக்கு ஒப்பானவை என்று யோசித் தறிந்து நான் வருத்தப்படுகிறேன்'' என்று சொன்னார்.

 

மறுபடியும் ராமர், உலகத்தி லிருக்கும் பாமரர்களுக் கெல்லாம் சகல சுகத்தையும் அளிக்கும் ஐஸ்வரியத்தைப் பலவிதத்திலும் நிந்திக்கிறார். ஐஸ்வரியம் ஓரிடத்திலும் நிற்பதில்லை. ஐஸ்வரியம் வித்துவான்களையும் சாதுக்களையும் கூடக் கெட்ட வழிகளில் பிரவேசிக்குமாறு தூண்டுகிறது. செல்வம் அஞ்ஞானமாகிய மதயானை வாஸம் செய்யும் விந்தியமலை. நற்செய்கைகளாகிய தாமரை மலர்களுக்கு இரவு. துக்கமாகிய ஆம்பல் மலருக்கு சரத்காலத்து நிலா. அறிவாகிற விளக்கை அணைக்கும் புயல் காற்று. காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், பயம் முதலியவைகள் சஞ்சாரம் செய்யும் ராஜவீதி. வருத்தமாகிய விஷத்தை வளர்க்கும் பெரும் வயல். வைராக்யமாகிய கொடியை நாசம் செய்யும் பனி. விகாரங்களாகிய ஆந்தைகள் உல்லாசமாக உலாவும் இரவு. விவேகமாகிய சந்திரனை கிரஹிக்கும் ராகு புயல் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் தீப ஜ்வாலை போல் மிகச் சஞ்சலமானது. பிராணிகளினின் ஆயுளும் ஆலிலை போல் மிகச் சஞ்சலமாகவே இருக்கின்றது. கடலின் அலைகளைக் கயிற்றைக் கொண்டு கட்டலாம். காற்றை ஒரு அறையில் அடைக்கலாம். ஆகாயத்தைக் கத்தியால் வெட்டலாம். ஆனால் ஆயுளைக் கட்ட முடியாது, அடைக்க முடியாது, வெட்டவும் முடியாது. அலையைப் பிடிக்கலாம். ஆகாயத்தைப் பாயாகச் சுருட்டலாம். ஆகாயத்தில் தோன்றும் மின்னல் கொடியையும் பிடிக்கலாம். ஆகாயத் தாமரைப் பூவையும் முகரலாம். ஆயுளைப் பிடிக்கவும் முடியாது, சுருட்டவும் முடியாது. ஆயுள் என்பது 4440 வியாதிகளாகிய பக்ஷிகளைத் தாங்கும் ஒரு பெரிய மரமாம். அகங்காரம் என்பது ஆபத்திற்கெல்லாம் காரணம். அகங்காரமே மனிதர்களுக்கு உண்டாகும் எல்லா வியாதிகளையும் விட ஒரு பெரும் வியாதி. சாந்தகுணமாகிய சந்திரனைப் பிடிக்கும் ராகு. நற்குணங்களாகிய தாமரை மலர்களை நாசம் செய்யும் நீரிடி. ஆகையால் அப்பேர்ப்பட்ட அகங்காரத்தை நான் விட்டு விடுகிறேன். ஓ மாமுனியே! மனம் மிகச் சஞ்சலமானது வஜ்ரத்தைவிட மிகக் கடினமானது. கடல் நீரைக் குடித்து விடலாம். மேரு மலையை அசைக்கலாம். நெருப்பையும் பானம் செய்யலாம். மனதை வெல்ல முடியாது. மனமே சகல துக்கங்களுக்கும் அனர்த்தங்களுக்கும் காரணம். மனதை வென்றால் மூவுலகையும் வெல்லலாம். அஞ்ஞானமாகிய இரவில் ராகத்வேஷாதிகளாகிய ஆந்தைகள் வசிக்கின்றன. அஞ்ஞானமாகிய இருளால் மூடப்பட்ட மனமாகிய பெருங்காட்டில் ஆசையாகிய ஒரு பெண் பிசாசு உல்லாசமாய் நாட்டியம் செய்து கொண்டிருக்கிறது. கத்திமுனையை விடவும், வஜ்ராயுதத்தை விடவும், ஊசியை விடவும் ஆசை மிகக் கூர்மையானது. ஆசை சூரனையும், வித்வான்களையும் கூட ஒரே க்ஷணத்தில் புல்லுக்குச் சமமாக்கி விடும். ஆகையால் ஆசையை ஒழித்து விட வேண்டும். பற்பல அனர்த்தங்களுக்கும் காமக்ரோதங்களுக்கும் ஆசையே காரணமாம்.

 

பற்பல அனர்த்தங்களுக்கும் இவ்வுடலே காரணமாம். இரு கைகளாகியபெரும் கிளைகளை உடைய தாகியும், பற்களாகிய பக்ஷிகளை யுடையதாகியும், இரு கண்களாகிய பொந்துக்களை யுடையதாகியும், சிரஸாகிற பெரும் பழத்தைஉடையதாகியும் இருக்கிற இவ்வுடல் யாரைச் சேர்ந்தது? இதில் நான் என்னுடையது என்ற எண்ணம் வைக்கலாமா?

ஆற்றைக் கடப்பதற்காகக் கூலி பேசி ஏறிக்கொண்ட படகிலும், சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காகப் புண்ணிய பாவங்களைக் கொடுத்து வாங்கிக் கொண்ட இவ்வுடலிலும் ஆசை வைக்கலாமா?

 

இரு தோள்களாகிய பெரும் கந்தங்களையுடையதாயும் கைகளாகிய இலைகளையுடையதாயும், பஞ்சேந்திரியப் பறவைகளுக் காதாரமாயும், காமனாகிற பிரயாணிக்குத் தங்குமிடமாயும், அகங்காரமாகிற கழுகுக்கு வாஸஸ்தானமாயும் இருக்கும் இவ்வுடலாகிய பெரும் ஆலமரம் சுகத்தைத் தருமா?

 

அஹங்காரமாகிய பிரபுவிற்கு உல்லாச அந்தப்புரமாயும், சுகமாகிய போகசாதனங்களை உடையதாயும், துக்கமாகிற குழந்தைகளின் அழுகைக் குரல்நிரம்பியதாயும், கெட்டெண்ணமாகிற தாசியின் உல்லாச இடமாயும், சிந்தையாகிய பெண் குழந்தை விளையாட வீடாயும், ஆசையாகிற துஷ்டக் கருங்குரங்குகளை உடையதாயும், மனமாகிய பெரும் எலியால் சதா நாசமாக்கப்படுகிறதாயும், பிறப்பு முதல் ஒன்றாகவே வாஸம் செய்து இறக்கும் தருணத்தில்ஜீவனைப் பின் தொடர்ந்து செல்லாமல் தனித்திருக்கும் நன்றி யறிவு இல்லாததாயும் உள்ள இவ் வுடம்பை நம்பலாமா?

 

இவ்வுலகில் முன் ஜன்மத்திய புண்ய பாவங்களுக்குத் தக்கபடி மறுஜன்மத்தை அடைந்து, பசி, தாகம், பிணி முதலியவைகள் நிறைந்த பால்யமும், துக்கத்திற்கு மாத்திரம் காரணமாகிறது. ஏனென்றால் தாய் தந்தைகளுக்கும், மற்ற ஜனங்களுக்கும், தன்னைவிடப் பலமுடையவர்களுக்கும் பயப்படவேண்டும். இவ்வாறு எப்பொழுதும் பயத்திற்கு ஆஸ்பதமாய பால்யம்சுகத்தைத் தருமா?

 

பால்யத்தை மிகுந்த கஷ்டத்துடன் கடந்து காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய அநேக அனர்த்தங்களுக்கு ஏதுவானயௌவனத்தை அடைந்தும், தனக்கு இஷ்டமான சுகங்களை அனுபவித்தும், தனது மனமாகிய காட்டில் உல்லாசமாக உலாவிக்கொண் டிருக்கும் காமப்பிசாசால் பீடிக்கப்பட்டுப் பற்பல துன்பங்களை அடைகின்றான். மனிதர்களுக்கு அநேக வியாதிகளையம், தீமைகளையும் விளைவிக்கும் பிரத்தியக்ஷ நரகமான மாம்ச பதுமையான பெண்கள் சுகத்திற்குக் காரணம் ஆவார்களா? மேருமலையின் சிகரத்தில் விளங்கும் கங்கையின் பிரவாகம்போல் பிரகாசமான முத்துமாலைகளை அணிந்திருந்த பெண்களின் ஸ்தனங்களை மயானத்தில் நாய்களும் நரிகளும் தின்பதை நாம் பார்த்ததில்லையா? வண்டுகளின் இறகுபோல்அதி சஞ்சலமாய யௌவனத்தையும் யௌ மளவன சுகத்தையும் நான் விரும்பேன். விவேகத்தால் பரம பதத்தை அடைய யத்தனிப்பேன். பற்பல சுகதுக்கங்களை அனுபவித்து யௌவனத்தைக் கடந்து கவலைகளுக் கெல்லாம் பிறந்த வீடான கிழத்தனத்தை அடைகிறான். அப்பொழுது பற்களெல்லாம் உதிர்ந்து விடுகின்றன. கேசங்கள் நரைக்கின்றன. அங்கங்கள் தளருகின்றன. ஆனால் ஆசை ஒன்று மாத்திரம் அடங்குவதில்லை. இவ்வாறு காலம் மனிதர்களின் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கின்றன. இதை யறியாமல் அவிவேகிகளான ராஜகுமாரர்கள் வேட்டையாடி அநேக பிராணிகளை வதைத்துக் காலங் கழிக்கின்றனர்.

 

காலம், நாடுகளைக் காடுகளாகவும், காடுகளை நாடுகளாகவும், ஆறுகளைப் பாலைவனங்களாகவும், பாலை வனங்களை ஆறுகளாகவும் மாற்றும் திறமை வாய்ந்தது. இவ்வாறு கால சக்தியால் உலகம் ஒவ்வொரு க்ஷணமும் மாறிக் கொண்டிருக்கையில் இவ் வுலகில் ஆசை வைக்கலாமா? க்ஷணப் பொழுதில் அழியக் கூடிய கனவில் கண்ட பொருள் போன்ற இவ் வுலகில் ஜனங்கள் காமவெறி கொண்டு அநேகம் தீச் செயல்களைச் செய்து தங்களது வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளுகிறார்கள். இவ்வுலகில் இருக்கும் தாவரங்களும், ஜங்கமங்களும் கனவில் கண்ட பொருள் போல ஒரு க்ஷணப்போதில் அழியும் இயல்புடையவையாம். இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் வற்றிய கடலைப் போல் காணப்படும் ஒரு பெரும் பாலைவனமும், நாளைக்குப் பெரும் கடலாகலாம். இந்த ப்ரகாரம் தோஷமாகும் பெரும் காட்டு நெருப்பால் வெந்த என் மனதில் இவ்வுலக சுகம் சுகமாகத் தோன்றுவதில்லை. இந்த ராஜ்ஜியமும், அயோத்யாநகரமும், சிங்காரத் தோட்டங்களும், இவ்வழகிய பெண்மணிகளும் எனக்குச் சந்தோஷத்தை அளிப்பதில்லை.

 

விஷய சுகம் கால கூட விஷத்தை விட மிகக் கொடியது. ஏனெனில் விஷம் இக் காயத்தை மாத்திரம் எரிக்கும். விஷய சுகம் அநேக ஜன்மங்களில் உண்டாகும் காயங்களை யெல்லாம் எரிக்கும்.

 

ஆகையால் அநேக ஜன்மாந்தர வாசனைகளாகிற புதருகளால் செல்ல முடியாத துன்பங்களாகிற கூரிய முட்கள் நிறைந்த இப்பெரும் அஞ்ஞானவனத்தை வெட்டி வெட்ட வெளியாக்க ஞானமாகும் ஒரு கோடரியை எனக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் நான் ஆகாரமில்லாமல் இந்தத்தேகத்தை விட்டு விடுவேன்,

 

ஸ்ரீராமருடைய இவ்வரிய வைராக்ய மொழிகளைக் கேட்டு பிரம்ம ஞானிகளில் சிறந்த குல குருவான வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலிய மாமுனிகளும், ஜயந்தன் முதலிய மந்திரிகளும், தசரதர் முதலிய அரசர்களும், கௌசல்யை முதலிய அந்தப்புர ஸ்திரீகளும் ஆச்சரியம் அடைந்து மௌனம் சாதித்தனர். அரண்மனையில் இருக்கும் கிளிகளும் மான்களும், சப்தமில்லாமல் அசைவற்று நின்றன. ஆகாயத்தில் சஞ்சாரம் செய்யும் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், சாரணர்களும், நாரதர், வியாஸர் முதலிய முனிவர்களும், ராமருடைய ரமணீயமான வார்த்தைகளைக் கேட்டு மெளனமாக நின்றனர். சித்தர்கள் எப்பொழுதும் தேவலோகத்தில் சஞ்சாரம் செய்யும் நாம் இது போன்ற மொழிகளை இதற்குமுன் கேட்டதில்லை. இம்மொழிகள் தேவர்களுக்கு தேசிகனான ப்ருகஸ்பதிக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கும். இவைகளுக்கு வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் கூறும் மறு மொழியைக் கேட்க நாம் தசரதருடைய சபைக்குச் செல்லுவோமாக என்று பேசிக் கொண்டு நாரதர் வியாஸர் முதலியவர்களும் தசரதர் சபைக்கு வந்தனர்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment