Tuesday, September 8, 2020

 

 

 ஶ்ரீ ஆண்டாள்

தொகுப்பு

N. திருவேங்கடத்தையங்கார்.

(ஓரன்பன்)

 

 

 

மாத இதழ்

1927 பிப்ரவரியில் இருந்து 1928 ஜூன் வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 


ஶ்ரீ ஆண்டாள்

ஸ்ரீ மகாவிஷ்ணுவை அன்போடு வழிபட்டவர் பொய்கையார் முதலிய பன்னிருவராவர். அப்பன்னிருவரும், உலகத்திலுள்ள பொருள்களிடத்துப் பற்றுக் கொள்ளாது, பக்தர்க்கெளியனாகி விளங்கும் பரந்தாமனிடத்துப் பக்தி கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் வேறெவற்றிலும் நினைப்பின்றித் தம்மிடத்துப் பெருகிய பக்தியென்னும் பிரவாகத்திலேயே ஆழ்ந்து படிந்திருந்தனர். அங்ஙனம், பகவத்குணானுபவத்தில் ஆழ்ந்திருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டார்கள். ஸ்ரீ ஆண்டாளும், ஆழ்வார்கள் பன்னிருவருள்ளும் ஒருத்தியாவாள். அவதாரகாலந் தொடங்கியே யெம்பெருமானிடத்து மிகுதியும் பக்தி செலுத்திவந்த ஆண்டாள், "இன நலம் எல்லாப் புகழுந் தரும்'' (குறள் - 457) என்னும் பெரியார்கூற்று உண்மையாக, தன் தந்தையின் மேம்பட்ட வொழுக்கத்தால், தனக்கும் வயது ஏறவேற ஞானமும் பக்தியும் வளரப் பெற்று ஏனைய ஆழ்வார்களினும் சிறந்து வினங்கினமையால் "ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்குந் தன்மையள்'' (உபதேசரத்தினமாலை) என்று மணவாள மாமுனிகளால் புகழப்பட்டாள். ஆண்டாள் தன் சிறந்த அறிவால் ஸ்ரீவில்லிபுத்தூரிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் வடபெருங் கோயிலுடையானையே தனக்கு மணாளனாக வரித்து மணந்தனள். அவள் சரிதை வருமாறு:

 

ஸ்ரீ வில்லிபுத்தூர், திருமால் அர்ச்சாவதாரரூபியாய் எழுந்தருளியிருக்கின்றனவும், ஆழ்வார்கள் பாடல் பெற்றனவுமாகிய திருப்பதிகள் நூற்றெட்டனுள்ளும் பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்றாகும். இந்த க்ஷேத்திரம் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய இவர் தம்மால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. இவ்வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் கருடாம்சராய் வேயர் குலத்தில் பதுமையாருக்கும் முகுந்தாசார்யாருக்கும் புத்திரராய் அவதரித்தருளினர். அங்ஙனம் அவதரித்த அவர் வடபெருங்கோயிலுடையான் திருவருளால், அப்பெருமானுக்கு பக்தியுடன் தொண்டு புரிதலே தமக்குச் சிறந்த பேறாவதென்றுணர்ந்தார். கம்சனுக்கு மாலை கட்டி யுதவும் தொழிலை மேற்கொண்டவராகிய ஸ்ரீ மாலாகாரரிடம் ஸ்ரீ கிருஷ்ணபகவான் சென்று மாலையொன்றை விரும்பி வாங்கித் தரித்துக்கொண்டதை நம் பெரியாழ்வார் ஆராய்ந்து, மாலாகாரர் இருந்த இடந் தேடிச் சென்று மாலையேற்ற திருமாலுக்கு மாலை கட்டிச் சாத்துதலே மிகவும் உகந்த கைங்கரியமாகும் என்று துணிந்தார். அங்ஙனம் துணிந்த அவர், தம் கைங்கரியத்திற்குப் போதுமான மலரை நாளும் பெறுதற்குத் திருநந்தவனம் ஒன்றமைத்தார்.

 

அந்நந்தவனத்தில் பல்வகை மலர்களைத் தரும் செடி கொடிகள் செழித்து வளர்ந்தன. ஆழ்வார், ஒருநாள் தாம் மிக்க கவனத்துடன் பாதுகாத்து வரும் அந்நந்தவனத்தில் திருத்துழாய்ப்பாத்தி யமைத்தலை விரும்பிக் கையிற் களைக் கொட்டு ஒன்றுதாங்கி மண்ணைக்கிளறினார். அப்போது ஆங்குப் பூமியிலிருந்து ஸ்ரீ பூமிப்பிராட்டியின் அம்சமாக அழகே யுருவாகக் கொண்ட குழந்தை யொன்று தம் கண்களும் மனமும் குளிரத் தம் முன்பு தோன்றக் கண்டார்.

காணலும் ஆழ்வார் மிகப் பேருவகை கொண்டு அக்குழந்தையை மலரெனத் தம் கைம்மலரிற்றாங்கி "இக்குழந்தை திருமகளோ? அன்றி நிலமகளோ'' என ஆனந்தமுற்று நின்றார். அது பொழுது ஆகாசவாணி அவரை நோக்கி "ஆழ்வாரே! ஆதியில் திருமால் வராக அவதாரமாய் அவனியை மருப்பிற் றாங்கி நின்ற பொழுது பூமிப்பிராட்டியார், அம்மூர்த்தியை வணங்கித் துதித்து 'உமக்கு இனியராவார் யாவர்?' எனக் கேட்டலும், திருமால், 'மாறாத அன்புடன் எனக்குப் பாமாலை பூமாலை செய்தளிப்பவரே இனியராவார்' என்று சொல்லினர். அதுகேட்டு மகிழ்ந்த பூமிப்பிராட்டி அந்நெறியில் நின்று அவனுக்கு ஆட்பட விரும்பி, அவ்வெண்ணம் நிறைவேற அந்நெறியிலேயே நிற்கும் நீர் தனக்குத் தந்தையாக இக்குழந்தை வடிவம் பெற்று உம்மால் பரிபாலிக்கப்படும் இந்நந்தவனத்தில் வந்து அவதரித்தனள்'' என்றது. ஆழ்வார் தாம் கொண்ட உவகை மேலுமதிகமாக ஆகாயவாணி சாற்றியது கேட்டு மகிழ்ந்து தம்மிருக்கை சென்று செவ்விபெறச் செல்வமெனக் கிடைத்த பெறலருஞ் செல்வக்குழந்தையைப் பெரிதும் பாராட்டி வளர்த்து வந்தார். இக் குழந்தையே ஆண்டாள்.

 

ஆழ்வார், குழந்தையுடன் இல்லஞ் சென்றதும், அக்குழந்தையைத் தம்முடைய மனைவியிடம், அதன் வரலாறு கூறிக் கொடுத்தனர். மனைவி தன் கணவர் அவ்வாறு குழந்தையின் பெருமையைக் கூறி வருகையில், மேன்மேலும் அக்குழந்தையினிடத்து அன்பு அதிகரிக்கத் தனது மனமும் கரங்களும் தம்முள் முந்த, இருகைகளாலும் அக்குழந்தையை ஏந்தினாள்; கண் மலர்ந்தாள்; கண்களால் குழந்தையின் அழகைப் பருகினாள்; முகத்தோடு முகஞ் சேர்த்தாள்; முகத்தில் முத்தமிட்டாள்; முறுவலித்தாள்; என்னே! என்றாள்; ஏது? என்றாள்; இன்னது சொல்வதென்று அறியாளாயினாள்; மகிழ்ந்தனள். பெரியாழ்வார் குழந்தையைப் பெற்றது ஊர் எங்கும் பரவியது. ஸ்ரீ கண்ணன் அவதாரங்கேட்டவர், பிள்ளை பிறந்தவிடம் புகுந்து 'நம்பி எங்கு'' நம்பி எங்கு' என்று ஆவலுடன் சென்று குழந்தையைக் கண்டு ஆணொப்பார் இவன் நேரில்லைகாண் "என்றும்,'' திருவோணத்தான் உல காளும் " என்றும் பலபடித்தாகப் புகழ்ந்து மகிழ்ந்தனரன்றோ? அவ்வகையே ஆழ்வாருடைய இல்லத்திற்கும் பலருஞ் சென்று, சந்திரனைக்கண்டு மலரும் நீலோற்பலமெனக் குழந்தையின் மதிமுகங்கண்டு தம் இரு கண்களாலும் அக்குழந்தையின் அழகை ஆரப்பருகி வியந்தனர். சிலர், இக்குழந்தையின் கால் அழகைக் கண்டீர்களா' என்று பாதத்தைப் புகழ்ந்தார்கள்; சிலர் குழல் இருந்தவாறு கண்டீர்களா?' என்று கேசத்தினைப் புகழ்ந்தனர்; இன்னும் பலர் மற்ற அவயவங்களை வியந்து புகழ்ந்தனர். ஆயர்பாடியில் ஸ்ரீ கண்ணன் அவதாரத்தால் பெற்றாரும், உற்றாரும், மற்றாரும், ஸ்ரீ கண்ணனுடைய பிறந்த வைபவம் கொண்டாடியதே போன்று, ஸ்ரீ வில்லிபுத்தூரார் அனைவரும் ஆண்டாளின் வைபவம் கொண்டாடினர். ஆழ்வார், தமக்கும் உலகுக்கும் பேரின்பமே பெருக ஆண்டாள் தமது புத்திரியாக வந்தவதரித்தது கண்டு ஆனந்தம் பெருகியவராய், பெற்ற குழந்தைக்குக் கோதை என்று நாமகரணம் செய்தனர். கோதை, ஏனைக் குழந்தைகளைப் போலவே தன்னைப் பெற்றவர் வளர்க்க வளர்ந்து வந்தாள்.

 

அங்ஙனம் வளர்ந்துவருங்காலத்துத் தாய், நெய்கூட்டியதும், பாலிற் கலந்ததுமாகிய சோற்றைத் தன் இடக்கையால் தலையை யணைத்து உண்பிக்க உண்டும், காலிற் புனைந்த சதங்கை ஒலிக்க, மடநடைப் புறவென்ன நடை கொண்டு, கிண்ணத்திலிட்ட சோற்றைச் சிறு கையிட்டெடுத்துத் தரையிலிட்டும், துழாவியும், வாயாற்பற்றியும், உடலிற்படச் சிதறியும், தன்னைப் பெற்றார் தம் உணர்வு கலங்கித் தன்வயப்பட்டுத் தன்னை வாரியெடுத்துத் தழுவியபடியே வலமிடமாகச் சுற்றி முத்தமிட்டுக் குலாவுமாறு, அன்னாரையும், தன்னைச் சூழவிருந்த மற்றையரையும் மகிழ்வித்து வருவாளாயினள். மேலும் தன்னைப் பெற்றவர், தனது திருந்து தலில்லாத மழலைச் சொல்லைக் காது கொடுத்துக் கேட்டு, 'இது கேட்டார்க்கு வீணையும் குழலும் பாலும் அமுதமும் கைக்கும் கைக்கும்' எனவும், தனது செந்துவர்வாயிடைச் செக்கர் நிறத்து வானில் சிறு பிறை முளைத்தது என்னும்படி சிறுபல் பிரகாசிக்கத் தான் முறுவலித்தல் கண்டு தாமும் முறுவலிக்கவும் காரணமானாள். இவ்வாறு பிள்ளைத் தொழில்களைச் செய்து எவரையும் மகிழ்வித்து வந்த கோதை வளர்ச்சி பெற்றுத் தன்னை நிகர் பருவத்துப் பெண்களுடன் விளையாடத் தொடங்கினாள்.

 

அங்ஙனம் தொடங்கித் தன்னுடைய அழகிலும், செய்கையிலும் எவரும் பாடுபட்டுத் தன்வயத்தவராகுமாறு செய்ததே போன்று, தன்னுடன் விளையாடும் தன் தோழிப்பெண்களும் தன்வயத்தவராக அவர்களுடன் விளையாடி வந்தாள். கோதையின் அன்பு எல்லாப் பெண்களிடத்தும் குடிகொண்டது. கோதைக்கும் மற்றைப் பெண்களுக்கும் இடையே நிகழ்ந்த அன்பு நாளுக்குநாள் அதிகரித்தது. அந்தப் பெண்கள் ஆண்டாளைத் தமக்குத் தலைவியாகக் கொண்டனர். பல்வகை விளையாட்டுப் பொருள்களுடன் விளையாடும் சிறுமிகள், தமக்குள் உறவின் முறைமை வகுத்துக் கொண்டு, ஒருவரையொருவர், 'அம்மாள்' என்றும் 'அக்காள்' என்றும், தங்கை' என்றும் அழைப்பாராய் விளையாடுவதோடு, பெரியார், பிள்ளை பெண்களுக்குக் கலியாணம் நடத்துதல் போன்று தாமும் பாவைகளுக்குக் கலியாணம் செய்து களித்தல் இயல்பாதலின், கோதையும் அவ்விளையாட்டில் விருப்புற்று அதற்குரிய பாவைகளுக்கு ஸ்ரீ திருமாலினுடையவும் ஸ்ரீ இலக்ஷ்மியினுடையவும் பெயர்களைச் சூட்டி அவற்றை அழைத்து அழைத்து மகிழ்ந்தாள்; ஸ்ரீ அரங்கநாதன் பெருமையினைச் சுட்டும் பாடல்கள் பலவும் சொல்லி அவற்றிற்கு விவாஹம் நிறைவேற்றி மகிழ்ந்தாள். மேலும் கோதை, மண்ணாலேயே கோயில் ஒன்றமைத்து அதில் ஒரு பாவையைக் கடவுளென்று வைத்துப் பக்கங்களிலுள்ள பல்நிறத்துப் புஷ்பங்களை மாலையாகக் கட்டி அப்பெருமானுக்கிட்டு, எல்லாப் பெண்களும் அவனைத் தொழும்படி அவர்கட்குக் கட்டளையிட்டாள். பெண்களெல்லாம் மிகவும் பணிந்தவராய் ஆண்டாளிட்ட வழியே செல்வாராயினர். இவர்கள் இவ்வாறு விளையாடி வருதல் இவர்களைப் பெற்றவர்க்கும் பேரின்பம் விளைத்து வந்தது. ஊரிலுள்ளார் எல்லாரும் தத்தம் மக்கள் ஆண்டாளுடன் கூடி விளையாடி வருவதைப் பார்த்துக் களிப்புற்று அதற்கிசைந்திருந்தார்கள். அங்ஙன மிசைந்து, தம் மக்கள் ஆண்டாளுடைய பழக்கங்களைக் கொள்ளுமாறு செய்வதே, தாம் அவர்களுக்குத் தெய்வ சிந்தனையை யூட்டுவதற்குரிய வழியாகும் என்று எண்ணினர். சிலர், ''ஆண்டாள் விளையாட்டிலும் தெய்வவழிபாடு செய்தலைப் பார்த்து," இவள், ஆழ்வார்க்குப் பிறந்த குழந்தையன்றோ; 'தாயைப் போல் பிள்ளை நூலைப்போல் சீரை'; இவள் தகப்பனார் அரிபக்தி கொண்டவரல்லரோ? அவர் பழக்கமே இக்குழந்தைக்கும் " என்று கொண்டாடுவாராயினர். அவருள் ஒருத்தி, 'எல்லாம் இருக்கட்டும்; என்ன இருப்பினும், இக்குழந்தைக்கு இந்த வயதிலே இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்தது? நாமும் வயிறுதிறந்தோம், அசடுகளைப் பெறுதற்கு' என்றாள்; மற்றொருத்தி 'பெண்களுக்கு நற்கணவன் வாய்ப்பதும், சற்புத்திரன் பிறப்பதும், நல்ல பெண் உற்பத்தியாவதும் அவரவர் வினைக் கேற்றபடி அமையும்' என்றாள்.

 

இவ்வாறு அனைவரும் ஆண்டாளின் விளையாட்டையும், அவள் மூலம் மற்றைப் பெண்களுக்கும் உண்டான நல்லொழுக்கத்தையும், நல்ல எண்ணத்தையும் கண்டு அவளைப் புகழ்ந்ததோடு, அவளைப் பெற்ற பெரியாழ்வாரையும், அவர் தம் மனைவியையும் புகழ்வாராயினர். ஸ்ரீ கண்ணனைச் சுட்டி யசோதை, '''இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ' என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா'' என்று சொல்லி மகிழ்ந்தாற் போன்று ஆண்டாளைப் புத்திரியாகப் பெற்ற அவரும், தமக்கு ஆண்டாளால் ஏற்பட்ட பெருமைகண்டு அகம் மகிழ்வாராயினர்.

 

ஆண்டாளுக்கு விளையாட்டுப் பருவத்தில் எழுந்த பக்தி யென்னும் பயிர், அவளுடைய தந்தையின் சீரிய வொழுக்கமென்னும் நீர் பாய, நாளும் வளர்வதாயிற்று. அவள் தந்தையாகிய ஆழ்வார் வடபெருங் கோயிலுடையான் பொருட்டாகத் தாம் ஏற்படுத்திய நந்தவனத்திற்குத் தினமும் விடியற் காலையிலேயே யெழுந்து சென்று மலர்ச்செடிகளுக்கு எருவிடுதல், களைகட்டு தல், நீர் பாய்ச்சுதல் முதலியவற்றைக் காலந்தவறாது செய்து வருவார்; ஆங்கு உரிய காலத்தில் மலரும் பலதிறத்து நறுமலர்களைக் கொய்து மாலை கட்டுவர். கட்டிய மாலைபைத் தூய்தாகக் காப்பர். ஒருவர், பெற்றது அமிருதமே யெனினும் அதனைப் பிறரும் தாமுமாக நுகர்தல் வேண்டுமென்பது பெரியவர் கொள்கையன்றோ? அதற்கிணங்க, பெரியாழ்வார், பகவானைக் கண்களாரக் காணுதல், மனமாரத் தியானித்தல், வாயாரப் புகழ்தல் என்னும் இச்செய்கைகளால் வரும் இன்பத்தையே, உலகத்து ஒருவர், அடையத்தக்க பேறுகளில் சிறந்தபேறாகக் கருதுபவராதலின், அவர், தாம் அனுபவிக்கும் அவ்வின்பத்தை மற்றையரும் அனுபவிக்க விரும்பினர். அதனால் அவர், கண்டவரை யெல்லாம் "வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்'', "இராக்கதர் வாழ் இலங்கை பாழாகப் படை பொருதானுக்கு'', ''அடிதொழுது ஆயிர நாமஞ் சொல்லிப்'' "பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று
 பாடுதும்", "கூடுமன முடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ' என்று அழைத்துச் சென்று, தாம், கட்டிக்காத்த மாலையை ஸ்ரீ வில்லிபுத் தூருறைவானுக்குச் சாத்தி அனைவரும் இன்புறுதல் கண்டு தாமும் இன்புறுவர். இவ்வாறு தினமும் ஆழ்வாரின் நினைவெல்லாம், தன்னை உள்ளன்போடு வழிபடுவாருடைய உள்ளத்தையே தனக்குக் கோயிலாகக் கொள்ளும் பெருமானிடத்துச் சென்றதென்றால், அவர் புத்திரியான கோதைக்கு எம் பெருமானிடத்து எழுந்த பக்தியைச் சொல்லுதலும் வேண்டுமோ? ஆண்டாள், தினமும் தன் தந்தையைத் தொடர்ந்து நந்தவனத்திற்குச் செல்லுதலிலும், மலர்களைக் கொய்தலிலும், தந்தை மாலை கட்ட அவர்க்குத் துணையாக நிற்றலிலும், தன்னையாட் கொள்ளும் பொருட்டாக வில்லிபுத்தூரில் கோயில் கொண்டெழுந்தருளிய வடபெருங்கோயிலுடை யானிடத்துத் தன்னை மறந்து சென்ற சிந்தையளாதலிலும் தன் நாட்களைச் செலவிட்டு வந்தாள். தன்மகளுக்குப் பக்தியை வளர்த்தற்குரிய விஷயங்களைப் போதித்து வந்த ஆழ்வாரின் நினைவைப் போன்றே ஆண்டாளின் நினைவும் திருமாலின் சேவடிச்சென்று தங்குவதாயிற்று.

 

பெற்றவர், ஆண்டாளுக்குக் கற்பித்தனவும், அவளுடைய மனம் திருமாலின் அடிச்சென்று உறைவதற்குக் காரணமாயின. ஆண்டாளின் தாய் தந்தையர், அவள் பிறந்தது தொடங்கியவளைச் சீராட்டும் பொழுதிலும், ஏனைப்பொழுதிலும் திருமாலின் பெருமையையே விளக்கும் பாடல்களையும் சரித்திரங்களையுமே அவள் கேட்கப் பாடியும், சொல்லியும், அவளைச் சீராட்டியும், துயில்வித்தும் வந்தனர். அவர் உரைத்தவற்றுள் அறம் வளரவும் மறம் தேயவும் உலகத்தில் வந்தவதரித்து உலகத்தை உய்வித்த ஸ்ரீராமகிருஷ்ணாதி அவதாரங்களின் பெருமைகளும், அவ்வவதாரங்களில் நிகழ்ந்தனவும் ஆண்டாளின் மனத்தை விட்டகலாவாயின். ஸ்ரீ ராமபிரான், தன்னை நோக்கித் தவங் கிடந்த ஸ்ரீ ஜானகிப்பிராட்டியாரை, அவளுறைவிடஞ்சென்று மணந்ததையும், ஸ்ரீ குகப்பெருமானை வேடுவன் என்றும் ஓடமோட்டி என்றும் கருதாமலே அவனோடு தோழமை கொண்டதையும், தன்னையே சரணாகவடுத்த ஸ்ரீ விபீஷணாழ்வானுக்கு அபயமளித்ததையும் ஆண்டாள் நினைந்து நினைந்து உளம் மகிழ்வாள்; உடல் பூரிப்பாள். மேலும் அவள், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யசோதையின் மைந்தன், தன்னை மணக்கத் தூதனுப்பிய ஸ்ரீ ருக்குமணிப் பிராட்டியாரை மணந்ததையும், தன்னையன்றித் துணைகாணாது சரண் புகுந்த திரௌபதிக்கு ராஜசபையில் நேர்ந்த அவமானத்தை நீக்கியதையும், அடுத்தடுத்துச் சொல்லிச் சொல்லிப் புகழ்வாள்; மனம் மகிழ்வாள். இந்நிலையில் நின்ற ஆண்டாள், இன்னான், இனியான் என்று பாராதே அடைந்தாருடைய குறையை நீக்கித் தனக்கான பெருமையைத் தந்தளிக்கும் தயாளமூர்த்திக்கு ஆட்படாதவராய் மக்கள், தம்மையொத்த மனிதரை இறைஞ்சி வீணே உழன்று திரிதலை நினைத்து நினைத்து மனமழியத் தொடங்கினள்.

 

தம் அனுபவத்தை எவரும் அனுபவித்தலை விரும்பிய ஆழ்வாரின் தன்மையையே அடைந்த ஆண்டாள், தனது மனத்தைத் தன்னுடைய பொன்னடியிற் பிணித்தருளிய பெருமானின் பெருமைகளை நினைக்கத் தனக்குண்டாகும் ஆனந்தம், மற்றவர்க்கும் உண்டாதல் வேண்டுமென்று விரும்பினாள். ஆண்டாளின், அகத்திலெழுந்த இவ்விருப்பத்தை, அவளுடைய முகமும், செயலும் மற்றவர் எவரும் அறியக் காட்டின. மழலை மொழி பேசும் இளங் குழந்தை, தாய் பிரியின் வாடியும், அவள் கூடின் காலிற் கிடந்த கிண்கிணி சப்திக்க, தந்தவரிசை சிறிதுவிளங்க முறுவலித்த முகத்தோடு, இருமலர்க் கைகளையும் பரப்பித் தாயின் முகத்தையே பார்த்தவண்ணம் தரையை நோக்குதலின்றித் தளர்நடையிட்டுப் பாய்ந்து மகிழ்ச்சியோடுந் தாயைத் தழுவி வாட்டம் தவிர்த்து மகிழ்தலே போன்று, ஆண்டாளும், தன்னன் பிற்குரியராகிய துணைவியர் பிரியின் மனமுடைந்தும், கூடின் காலிற்கட்டிய, சிலம்பு ஒலிப்பச் செந்துவர்வாயினிடத்துச் செக்கர்வானத்துப் பிறை எனத் தந்த வரிசை விளங்கப் புன்முறுவல் செய்து, அவரைத் தழுவநினைக்கும் தன்மையை மேதை தருளியவர்க்கும் இவவிரும் லம்பு ஒளரதிய தவிர்த்துடையட்டும் தையே வத்த மனத்தினும் முந்திச் செல்லும் இருகைகளாலும் ஆவல் தோன்ற அவர்களைத் தழுவியும் மகிழ்ச்சியடைவாள். அங்ஙனம் ஆண்டாளும், அவள் துணைவியரும் ஒருவரையொருவர் காணும் போதெல்லாம் எல்லோரும் ஒருமனப்பட்டு எம்பிரானின் உயர்ந்த குணங்களைத் துதித்து எக்களிப்பர்; தமக்குரிய வெப்பொருளும் எழிலார் திருமார்பனுக்கே ஏற்கும் ஏற்கும் என்பர். இவ்வாறு அளவளாவும் ஆண்டாள் உள்ளிட்டாரனைவரும், தாமும், பிறரும், மற்றையவும் திருமாலின் உடைமையென்றும், எவையும், தம்மடியாரடையும் இன்பங் கண்டு இன்புறுவானுக்கு உரியனவென்றும், அவனே ஸ்வாமியாவன் (உடையவன்) என்றும் அறிவாராயினர். அனைவரும், அவரவர் அறிவு அறிந்த வகையிலெல்லாம் ஆயிரம் பணாமுடியையுடைய அனந்தன்மீது அறிதுயிலமரும் அரங்க நகருடையானின் அலகில் விளையாடல்களை நினைந்தும், சொல்லியும், அவன் கோயில் சென்று தொழுதும் வருவாராயினர். அன்றியும் அவர்கள், தம்முள் எதிரெதிர் நின்று ஸ்ரீராமகிருஷ்ணாதி அவதாரங்களின் குணங்களைக் குறித்துப் பாடியும், ஸர்வேஸ்வரனைக் காணவேண்டுமென்று தேடியும், அவனைக் கண்டும் புகழ்வாராயினர்.

ஶ்ரீ ஆண்டாளுக்குக் குழந்தைப் பருவந்தொடங்கியே யெம்பெருமான் பக்கல் வளர்ந்த காதற் பெருக்கு, அவளுடைய கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களையும் எம்பெருமானிடத்திற் சேரச் செய்தது. ஆண்டாளைச் சூழ்ந்த எப்பொருளிலும் அவள் மனஞ் செல்லாததாய் எல்லாம் வல்ல திருமருவு மார்பனைக் காணும் வேட்கையிலேயே தங்குவதாயிற்று. ஆண்டாள் தன்னிடத்து எழுந்த வேட்கையால் அவனுடைய கலியாண குணங்களிலும், கார்த்தண் முகிலும் காயாவும் கருவிளையும் காட்டும் அவனுடைய திருமேனியின் வடிவழகிலும் ஈடுபட்டவளாய், அவன்சீர் பேசி அனுபவானந்தம் கொள்ளத் தொடங்கினாள்.

 

இவ்வகையில் மனத்திலே திருமாலையே காணும் வேட்கையுடையளாகி ஆண்டாள் நின்ற நிலைமையினை மற்றைத் தோழிமார்கள் கண்டு, சிலர் ஆண்டாளைச் சேர்ந்து ஓரினத்தாராகவும், மற்றும் சிலர் சேர்ந்து ஓரினத்தாராகவும் தம்முள் இருதிறத்தவராகி ஆண்டாளின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வா ராயினர்.

 

ஆண்டாள், தன்னினத்தைச் சேர்ந்தவரும் பிறரும் கேட்க, ஸ்ரீ கிருஷ்ணன் ருக்மிணி நங்கையை மணந்த வரலாறு சொல்லிப் பாட விரும்பினள். ஸ்ரீ ஆண்டாள் எல்லாரையும் நோக்கி "கேட்பீராக! நான் ஸ்ரீ கண்ணன் வன்மையைப் பேசுகிறேன். 'சிசுபாலன் ருக்மிணிப் பிராட்டியாரை மணக்கப் போகின்றான்' என்ற வார்த்தை நாடெங்கும் பரவியது. சிசுபாலனும் தனக்குப் பேரின்பமாவது அத்திருமணமே எனத் துணிந்தவனாய், மணம் பூணுதலிலே மையல் கொண்டவனாய், பின் நிகழப்போகும் விளைவறியாதவனாயினான். அவன், தான் தேடின பொருளை யெல்லாம் ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியாரை மணக்கும் சம்பந்தமாகச் செலவிட்டான். 'பிராட்டியாரைக் கைப்பிடிக்க (பாணிக்கிரஹணம் செய்யப்) ப் போகிறோம்' என்று எக்களித்தான்; அண்ணாந்த தலையுடையனாயினான்.

 

இவன் நிலைமை இங்ஙனமிருப்ப ருக்மிணிப் பிராட்டியாரின் உள்ளத் திருந்ததை நீங்களறியச் சொல்லுகிறேன் அறியுங்கள்: சிசுபாலனுக் கென்று காப்புக்கட்டின பிராட்டியார் 'சிசுபாலன் என்னை வந்து தீண்டும் போது என் பிராணன் போகவேண்டும்' என்றும், இல்லையாகில் ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அங்கீகரிக்க வேண்டும்' என்றும் தைவத்தை வேண்டியிருந்தாள். சாக்ஷாத் தைவ ஸப்தவாச்யனான ஸ்ரீ கிருஷ்ணன் பிராட்டியின் எண்ணமறிந்து அவளை அங்கீகரிக்கத் திருவுள்ளம் பற்றியருளினான். அவன், ஸ்ரீ பாஞ்ச ஜன்ய வாழ்வானை வாயிடை மடுத்தூதி அச்சங்கொலி செவிப்பட்டுத் தரிக்கும்படி செய்து ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியாருக்குத் தன் வரவையறிவித்து, மணப்பந்தரிலிருந்த ராஜஸமுஹமும் சிசுபாலனும் வெட்கி முகவொளிகெட, ஆங்கு அவளை விருப்புற்றுப் பாணிக்கிரஹணம் செய்து தேரிலே யெடுத்து வைத்துக் கொண்டு பெரிய இரைச்சலோடே யெழுந்தருளினான். அதுகாலை ருக்மிணிப் பிராட்டியின் தமையனான ருக்மன் இப்படிச் செய்வதென்' என்று எதிர்த்து அவளை மீட்பான் கருதி ஸ்ரீ கண்ணன் முன் நின்று பகைத் தான். கண்ணன் இவனைக் கொல்லின் ருக்மிணிப் பிராட்டியாரின் மனம் வருந்தும்' என்று அவனைப் பிடித்துத் தேர்க்காலோடேகட்டி அவனுடைய வீரத்துக்குப் பங்கமாக அவன் றலையை அம்பாலே சிரைத்துவிட்டான். அண்ணாந்திருந்த சிசுபாலன், எவர் முகத்தையும் பார்க்கவும் லஜ்ஜை கொண்டு அண்ணாந்தவனாகவே யானான். இங்ஙனம் ஸ்ரீ ருக்குமணிப் பிராட்டியாரை மணக்கும் பெருமையை யுடையவனாய் ஸ்ரீ தேவகி வயிற்றில் பிறந்தவனும் பகைவர்களை யொழிப்பதில் சிங்கமாவானுமாகிய, பெறாப்பேறு பெற்று வளர்த்த அசோதை யிளஞ்சிங்கத்தைப் பாடுவோம் " என்று அவன் பெருமையினைப் பேசிப் பாடுவாளாயினள். தோழியர் பலரும், வினயமுடன் ஸ்ரீ கண் ணன் பெருமைகளையெல்லாம் கேட்டவர்களாய் ஸ்ரீ ஆண்டாளுடன்,


 "கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
 திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து

 அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
 பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே''       (நாச் - 11 - திரு - 9 - பா.)

 

என்று புகழ்ந்தும்,


 ''உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
 விருப்புற் றங்கேக விரைந்தெதிர் வந்து
 செருக்குற்றான் வீரஞ் சிதையத் தலையைச்

 சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
 தேவகி சிங்கத்தைப் பாடிப்பற"              (பெரி - திரு - 3 - ப - 9தி - 3 - பா.)


என்று உந்தி பறந்தும் களித்தார்கள். ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியாரின் திருமணம் பேசிக்களித்த ஆண்டாள், வடபெருங் கோயிலுடையானைக் காணும் வேட்கை கொண்டு தன்னைச் சூழவிருந்த தன் பாங்கிகளை அவனிருக்குமிடத்தைத் தனக்கு அறிவிக்குமாறு, கேட்கத் தொடங்கி,

 

''தோழிகாள்! சொல்வேன். அறிந்து உணர்த்துமின். மத்தளவு தயிரும், மடவார்கள் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெயும் வாரி விழுங்கிய மதுரை மன்னனைக் கண்டவருளரோ?'' என்று வினவினள்.

தோழியருள் ஒருத்தி: - "வறண்டு வளர்ந்து நரம்பும் எலும்பும் தோன்றும் படியான பொல்லாத வடிவினையுடைய பேய்ச்சியானவள், கம்சனால் அனுப்பப்பட்டவளாய், தன் வடிவை மறைத்து, யசோதைப் பிராட்டியோ டொத்த வடிவைக் கொண்டு, நஞ்சு கலந்த பாலை ஸ்ரீ கண்ணனுக்கு ஊட்டக்கண்டவருளர்'' என்றனள். பேயென்றும், பொல்லா வடிவுடையாளென்றும் நஞ்சுகூட்டிய பாலை ஊட்டினாள் என்றும் அவள் சொல்லக் கேட்ட, ஆண்டாள், அவன்பாற் சென்ற காதலுள்ளத்தால் தன்னை மறந்தாளாய்த் தரையிற் சாய்ந்தனள். அவள் மனமறிந்தாளாகிய தோழியொருத்தி அவளுக்கு நேர்ந்த மனக்கலக்கத்தைப் போக்கு முபாய மறிந்து, "எங்கள் தலைவியே! பூதனை முடிந்த வரலாறு அறிந்திலையே, வஞ்ச மனத்தினளாய் வந்த பேய்ச்சியின் நினைப்பை எங்கும் பரந்து கண்ணன் அறியானோ? கண்ணனும், தான் அவள் எண்ணம் அறியான் போன்று நடித்து, பால் வேண்டினான் போன்று ஆவலுடன் பருகுவானாய் அவள் தன் ஆவியையே பருகிப் போகவிட்டான்'' என்றாள்.

 

ஆண்டாள், தன் அன்பு படர்தற்குக் காரணமான கொள்கொம்பு போல்வான் வீரம் கேட்டதும் தன் மயக்கம் தீர்ந்து தளிர்த்த முகத்துடன் விளங்கினாள்.

 

ஆண்டாளின் முகம், மாமணிவண்ணன்றன் சீர்குறித்து மலர்தலையும், அவனுக்கு வருந் துன்பங்கேட்டவளவில் வாடுதலையுங்கண்ட தோழி ஆண்டாளுக்கு அவள் கேட்டுச் சந்தோஷிக்கவல்ல அவனின் பெருமைகளையே சொல்லி வந்தார்கள். அவனைக் காணுதலாகிய வேட்கைக் கடலில் ஆழ்ந்த ஆண்டாள் அவ்வேட்கையே காரணமாக உடல் மெலியத் தலைப் பட்டாள்.

 

ஸ்ரீ ஆண்டாளின் எண்ணமெல்லாம் திருவமர்மார்பன் பக்கற்சென்று தேங்குவதாயிற்று. ஆண்டாள், தோழியர், பெற்றார், உற்றாரிவர் களுடன் என்றும் போல் மனம் பொருந்தி உரையாடாது தனித்தவளாயிருந்து வந்தாள். தோழியர் அவள் தன்மையை ஒருவாறு அறிந்திருப்பவர்களெனினும், தம் தலைவியின் சீரிய பெருமையின் ஏற்றத்தால் அவளை யணுகி எதுவும் தமக்குப் புலனாக ஒன்றைக் கேட்டறிய மனங்கொண்டிலர். அவர்கள், ஆண்டாளே தன்வாய் மலர்ந்து தன் மனங்கொண்டதைத் தாம் உணரக்கொடுப்பாளாயின் அவள் செல்லும் வழியே தாமும் செல்வதே தமக்குக்கடமையாம் எனத் தெளிந்தார்கள். ஆண்டாளோ! தனது மழலைமொழிப்பருவர் தொடங்கித் தனது இன்பதுன்பங்களைத் தமதாகப் பாவித்துத் தன்னுடன் பழகிய தோழியர் தன்னிலை கண்டு தளர்ந்திருப்பதை யறிந்தும், தன்பால் மிக்கெழுந்த நாணத்தால் தன் துணிபை அவர்களறிய அருள் செய்திலள்.

 

ஆண்டாளின், தனித்த நிலைமை அவள் தந்தை ஆழ்வாரின் மனநிலைமையை மாற்றியது. ஆழ்வார் தம்மைத் தன்வயமாக்கிக் கொண்ட வாண்டாள் தனித்துறைந்து தளர்தல் கண்டு தாமும் தளர்ந்தனர். தம் புத்திரிதளிர்த்த மனதுடன் அரும்பிய நகையை, மலர்ந்த முகத்திற் கூட்டிக் கனிந்த மொழி கொடுத்துத் தம்மை யின்புறுவித்துத் தந் நெஞ்சைத் தனக்குறையிடனாகக் கொண்ட கோவலனுக்குத் தாம் செய்யுங் கைங்கரியத்தில் பங்கு கொண்டும் வந்தவள் எவ்வினையையு மொழித்துத் தங்கி யிருத்தற்குக் காரணத்தைத் தேர்ந்திலர். அன்றியும், அவர், பூமேலாம் பொற்புடை மங்கை எவரோடும் எக்களித்து வார்த்தையாடுமவள் பித்தேறினர் போலிருந்து வருதற்குக் காரணத்தையும் காணாராயினர். ஆழ்வார் அவள் நிலைமை யறியாராய்த் தாமுமோர் நிலைமையில் நில்லாராய்ச் சிலநாட்களைப் பல்லாண்டுகளாகக் கழித்தனர். மேல் அவர் தமது ஞானச்செல்வி, தமக்கேயன்றித் தன்னுடைய தோழியருக்கும் மனவருத்த முண்டாகத் தனித்துறைதலின் காரணத்தைத் தோழியர் ஆய்ந்துரைத்த சிலவுரையால் உணர்ந்த தம்மனைவி தமக்குச் சிலவுரையிற் சொல்ல, தம் புத்திரியின் மன நேர்மையை யுணரத் தலைப்பட்டார். மனைவியும் ஆண்டாளின் மணம் பற்றித் தம் மனம் கொண்ட மணாளர் பெரியாழ்வாரிடத்தில் வினயமுடன் விண்ணப்பமிட்டனள். ஆழ்வார் தம் வாழ்க்கைத் துணைவி தம் மனங்கொள்ள மொழிந்ததனை நேர்ந்து அருந்தவப்பேறாகப் பெற்ற பெண்பிள்ளையின் அரிய மணவினையைத்தம் மனத்துட்கொண்டனர். நாளும் அவர்க்கு அவ்வெண்ணம் அதிகரித்து வருதலாயிற்று. ஆண்டாளுக்கு அமுதூட்டியும், அவளை ஆதரித்தும், அவள்மழலை மொழி கேட்டும் மகிழ்ந்த அன்னையார் தம் புத்திரியின் மணக்கோலத்தினையும் கண்டு மகிழும் நாளை யெதிர்பார்த்த வண்ணமா யிருந்து வந்தாள்.

 

குளிர்ந்த மனந்தங்கிய கோதை, தம்முடன் குதூகலித்து வந்தவள், தம்முடன் கலத்தலின்றித் தனியளா யிருந்து வருதலைக்கண்ட தோழியர், பெரிதும் கவலை கொண்டனர். ஆண்டாளுக்கும் தமக்கும் இடையிலே எழும் ஆனந்தமே யுணவாக, உணவும் மறந்து உடனுறைந்த தோழியர், அவ்வானம்தத்தைப் பெறாமைக் காரணத்தால் எதுவும் பெறுமெண்ணங் கொண்டிலர். அத்தோழியர்களுள் ஆண்டினிளையா ளெனினும் அறிவின் முதிர்ந்தாள் ஒரு தோழி ஏனையோரின் மனப்போக்குணர்ந்து அவர்களைத் தேற்றுதற்கு ஏற்றன சில வூகித்து உரைப்பாளாயினள். ஆண்டாளின் உள்ளக்கிடக்கையை அவள், அவளுடைய இயல்பான வொழுக்கங்களால் உய்த்துணர்ந்து "ஆண்டாள், விண்ணவர் பெருமானாய்க் குளிரருவிபாய் திருவேங்கடத் துறைவான் பக்கல் தன் மனத்தைச் செலுத்தியிருக்கின்றனள். அவள், மனம் அவனடிக் கீழ்ச்சென்று பக்திவடிவமாய்த் தேங்கிக் கிடக்க நம்முடன், ஆண்டாள் பேசுகிற்றிலள் எனச் சொல்லுவது என்? அவள் தன் மனத்தவளாய்த் தன்னுணர்வு கொண்டவளாயிருந்தாலன்றே, என்றும் போல் நம்முடன் பழகுவள். ஒன்றைப் பறி கொடுத்தவர் ஏதும் நினைத்தலின்றித் தனித்துப்புலம்புவராயின் தன் மனத்தையே பறிகொடுத்து விட்ட ஆண்டாள் தனித்துறைதலை ஒருவர் எடுத்துரைக்கவும் இயலுமோ! நம் தலைவி, உலகத்திற்குத் தலைவனாகும் முழுமுதற் கடவுளாம் அரங்க நகரானடியில் தன்றலையைச் சேர்த்தினள். அவன் அடிக்கீழ் ஆறாத காதலன்பு கொண்டு அவனையே தனக்குத் தலைவனாகக் கொள்ளவும், உலகத்தவரிடம் தான்காட்டும் அருளுக்கு அவனை இணங்குவானாகச் செய்யவும் கருதிவிட்டனள். நிற்க, அருமைத் தாய்தந்தையர்கள் ஆண்டாளுக்கு நல் மணவாளனைத் தேடித்திரிகிறார்களென்றும் அறிகிறேன். சர்வமுணர்ந்த ஆழ்வார் தம்புத்திரியின் ஒழுக்கநெறியினை உணராது போயினரே. தலைவிபால் பெருக்கெடுத்த அன்புடையீர்! அவள் நிலைமைகண்டு நீங்கள் வருந்துதலின்றி யிருத்தலை யான் வேண்டுகின்றேன். என்னுடைய இக்கூற்றையும் ஈதெழ இடந்தந் துறையும் ஆண்டாளின் மனப்போக்கையும் நீவிர் எள்ளி நகையாடுதலுங் கூடும். எனினும் எனது மாற்றமும், ஆண்டாளின் மனத்தின் ஏற்றமும், உரியகாலத்தில் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தருதல் நிச்சயம் என்னும் இவ்வார்த்தையை நீங்கள் மறவாதிருக்கக்கடவீர்கள்'' என்று சொல்லினாள். இவ்வசனம் கேட்ட தோழியருள் ஒருத் தி" உனது ஆழ்ந்துரைக்கும் வன்மை எவரும் மகிழத்தக்கதே; நன்கு வகுத்தும் உரைத்தனை. சர்வவல்லமை யுடையவனும் சரணாகதரக்ஷகனும் சர்வேஸ்வரனுமான நந்தகோபன் குலத்துத் தோன்றும் வள்ளளிடத்து ஆண்டாளுக்குண்டான பக்தியை யறியா தாரெவர்? பக்தியுடையவளாகின்றாள் என்ற அக்காரணங்கொண்டு அவள் அவனையே மணக்க விரும்புகின்றாள் என்கின்றனையே; மணக்க விரும்பினும் அதுதான் இயலுவதாகுமோ? ஆண்டாளும் நம் போன்று ஒரு பெண்ணேயன்றோ. பெண்ணொருத்தி விவாஹத்திற்குரிய பருவமடைய அவளுடைய குண ஒழுக்கங்களுக்கும் அழகுக்கும் ஏற்றவன் ஒருவனை, பெற்றோரன்றே நன்காய்ந்து அவளை அவனுடன் மணத்திற்புகுத்துவர். நீ சொல்லியவாறே உனது மாற்றம் எங்களுக்கு மாறுபட்ட எண்ணத்தையே தருகின்றது. ஏமாற்றம் எங்களுக் கென்று சொல்லினை; அதுவும் காணும் ஆவல் கொண்டோம்" என்றாள். அறிவின் முதிர்ந்த அத்தோழி, "தலைவியாம் ஆண்டாளின் இனத்துப் பழகினீர்! உமக்கு இவ்வெண்ணம் எழுதல் இயற்கையே. இவ்வார்த்தை யெனக்குப் புதிதன்று. எனது வார்த்தை புதியதொன்றே யாதலின் நீங்கள் மாறுபடுவதில் வியப்பில்லை. ஆண்டாள் நம்போலும் பெண்களில் ஒருத்தியே யென்ற எண்ணமுடைய உங்களுக்கு ஒருவார்த்தை சொல்லக் கேண்மின். ஆண்டாள் உலகத்துப் பெண்களில் ஒருத்தியே யென்று அறிவுடையார் மதிக்கப் பெண்ணாகப் பிறந்தவளல்லள். உலகத்தவர் தம் இருகையினையம் தம் தலைமேற் கூப்பித்தொழும் பெருமை வாய்ந்த அவன் றன்னைவிட்டகலாத அருந்தெய்வமே என்று மதிக்கப் பிறந்தவளென்றறியுங்கள். அவர்கள் அவ்வாறு மதிப்ப ரென்றதற்குக் காரணம் அவன்பாற் செல்லும் மாறாத அவளுடைய அன்பே என்று அறியுங்கள். அவளுக்கும் ஏனையவருக்கும்' பெண்' என்ற பேச்சளவிலே ஒற்றுமை யுண்டென்பதை யானும் ஒப்புகிறேன். ஒப்புமைக்கிடமாம் அறிவொழுக்கங்களில் அவளுக்கும் ஏனையருக்கும் உள்ள வேற்றுமையை நீங்களே நன்கு அறிவீர்கள். உலகத்துப் பெண்களில் அவளும் ஒருத்தியாயின், தனக்குரிய மணப்பருவத்தில் பெற்றோரே மணம் புணர்த்தப்பெற்று மணவாளனுடன் மனமொத்துறைந்து இல்லறநெறியில் வாழ்க்கை கொண்டு புத்திரப்பேறு முதலிய பெற்று இல்லறத்தை அது செய்யத் தகுந்த முறைமையிற் செய்வள். ஆண்டாளோ அக்கூற்றிற் செல்லும் எண்ணத்தவளல்லளென்பதை யான் சொல்லிய உண்மையாற் றெளிந்து என்னுரையே பொருளுரையாகக் காணும் காலத்தைக் கருத்திருத்திக் கொள்ளுங்கள் என்பதை மீண்டும் வற்புறுத்துகிறேன்'' என்றாள்.

 

இவ்வகையில் பெற்றவர் ஒருபுறமும் தோழியர் ஒருபுறமும் தந்நிலைமையுணராதவராய் வருந்தத் தனியளாய்ப் பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரையென்னும் திருப்பதியில் நாயகராகி வீற்றிருக்கும் மணவாளன்பாலே ஒடுங்கிய மனத்தினளாய் உடல் மெலிந்தனள் ஸ்ரீ ஆண்டாள். அவள் அவனைக் காணலாகும் நோன்பு முதலிய செய்தலிற் சிந்தையும், அவன்சீர் பரவிப் பல்லாண்டு பாடுகையில் அன்புங்கொண்டு உள்ளுவாருள்ளமே யுறையத்தக்க கோயிலாகக் கொள்பவனாகிய வண்புகழ் நாரணன் திண்கழலிற்றன்னைச் சேர்விக்கும் செய்கையிற் செல்பவளாயினள்.

 

வில்லிபுத்தூர் கோன் கோகை, கன்றினம் மேய்த்துத் திரிந்த கோவலனைத் தன் எண்ணத்திலிருத்திப் பல பல பிதற்றினள். அவள் அவனைச்சுட்டி '' நின்னை அடியார் பக்தவத்ஸலன் என்பர். யான் வாத்ஸல்யத்தை நின்னிடம் காண்கிலேன். உண்டாயின் கன்றை ஈன்ற பசுவினிடமிருந்து, கன்றினிடத்து வாத்ஸல்யம் நெகிழ்தலே போன்று, அது தான் என்போல் வாரிடத்தும் நெகிழ்வதாகும். பசுவின் கன்றோ தாயுடலிருந்து வந்தவப் பொழுது தன்னுடலெங்கும் மிகுதியும் வெறுக்கத்தக்க அசுத்தமே நிரம்பப் பெற்றிருக்கும். அதுகண்டும் அதனை ஈன்ற பசு, கன் கன்றென்னும் வாத்ஸல்யத்தால், அக்கன்றின் உடல் அழுக்கைக் கண்டு முகஞ்சுளித்த லின்றிப் பெற்றோமென்ற வெண்ணமேகொண்டு அகமும் முகமும் ஒருங்கே மலர அவ்வழுக்கைத் தந்தாக்கொண்டு நக்கிச் சுத்தஞ் செய்வதாகின்றது. அவ்வாறே தன்னடியார், எத்துணை இழிந்த, வெறுக்கத்தக்க குற்றமே பொதியப்பெற்றிருப்பினும், வெறுப்பின்றி விருப்பேகொண்டு தன் கிருபையால்அவர் குற்றந் துடைத்துக் குணமாகக்கொள்வகன்றோ வாத்ஸல்யமாவது. தான் ஈன்ற கன்றைக் தூய்தாகவாக்கும் ஆனினத்தையன்றே நீ காப்பவனாகிக் கோபாலன் என்னும் பெயரும் சூடினை. அப்பசுக்களின் சேர்த்தியாலேனும் வாத்ஸல்யமாகின்ற பெருங்குணம் நின்னிடத்துப் பெருவெள்ளமெனப் பெருகுதல் கூடுமே. நீ அதனைக் கொண்டவனாக என் மனங்கொண்டிலதே " என்று புலம்பினாள்.

 

சற்று நேரத்திற்கெல்லாம் ஆண்டாளுக்கு, அவன் வாதஸல்ய முடையான் என்ற உணர்வு உதிததது. அப்பொழுது அவள் வேறு சொல்வாளாயினள்.

 

ஆண்டாள்: - கண்கள் காண்டற்கினியாய்! தன் குற்றங்காணாமே பிறன் குற்றங்காணும் பேதையே போன்ற யான் ஒரு பேதையேன். யான் என் பேதைமையால் உரைத்தவற்றிற்குச் சீற்றங்கொள்ளாதிருக்கப் பிரார்த்திக்கிறேன். கத்திரபந்துவையும் நின்னடிக்குரியனாகச் செய்துகொண்ட நின்னையோ யான் வடுப்படவுரைப்பது! நின்னருள் கைகூடப் பெற்ற வக்காலத்து, கத்திரபந்துவுக்கு நீ ஆகாதெனச் சொல்லிய உயிர்க்கொடுமையை அவன் தன் நெஞ்சில் நிறுத்திலனே. அவன் நெஞ்சில் நிறுத்தியவெல்லாம் நின்னைச் சுட்டு மூன்றெழுத்தாலாகிய 'கோவிந்தன்' என்னும் பெயரொன்றேயன்றோ? அம் மூவெழுத்தினையே அவன் முழுப்பொழுதும் சொல்லி வழுத்தினானாக அவன் குற்ற மத்தனையும் காணாதொழிந்தனையே. மேல், அவன் செய்த விழி தொழில்களெல்லாம் 'பல வென்னலாம்' என்று ஒருவர் சொல்லலாம் படியாகவிருக்க அவனுக்கு உயர்கதியையும் அல்லவா அளித்தனை. நீ அவ்வாறு அளித்தமைதானும்,


''மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்"              (திருமாலை - 4)


என்று, என்றும் புகழும்படியாக வன்றோ நிற்பதாகின்றது. இந்நிகழ்ச்சியறியாதேன் தகாதன சொல்லிப் பிழைத்தேன். நோயுடையான் தீம்பால் கசந்ததென்றால் அப்பாலுக்கு இழிவு வந்ததாகுமோ? அவ்வாறே, யான், என் புல்லிய நாக்கொண்டு உரைத்தன நின்பெருமைக்கு இழிவைத் தருவனவாமோ? இல்லை. இல்லை. ஒன்றுந் தருதல் இல்லை. வெண்ணெய் தொடுவுண்ட கள்வா! பின்னையும் கேள். நீ, நின்னுடையவும் அடைந்தாருடையவும் முன் நிகழ்ச்சிகளை நினையாமே அருளுந் திறத்தாலன்றோ நின்னை, நின்னடியார் 'பித்தன்' என்று அழைப்பர். பித்துத்தன்மையுடையான் நீ என்பதை, நீ பொல்லாவரக்கன் இராவணன் பால் காட்டியவருளால் உலகங்கண்டதில்லையோ. இராவணன் நின்னிடத்துச் செய்த பிழை மனத்தாலும் நினைக்கத் தகாத தொன்றன்றோ. தன்னடியார்க்குத் தான் புருஷாகாரமாய் நின்று உன்னருளால் அவர்கள் இடரை உன்னைக் கொண்டு தீர்ப்பித்து, நினக்குப் புருஷோத்தமன் என்னும் பெயர் வழங்கவும் "அலர்மேல் மங்கையுறைமார்பா " என்று நின்னை அழைக்கும் படியாகவும் நின்மார்வத்தையே யுறையுமிடனாகக் கொண்டு நின்னை விட்டகலாத உலகமாதா ஜானகியார்க்கு அன்றோ அவன் பெரும்பிழை செய்தது. நீ அவ்விராவணனையும் நினது அருளுக்கு இலக்குடையவனாக்க இரங்கினையே. முன்னர், ஸ்ரீ சிறிய திருவடியைத் தூதுவனாக விடுத்து அவனுக்கு இனியன கூறிவர அருளினையே. ஈதொன்றோ! இராவணன், தன்வலியே கருதினவனாய் நின் கருணை விரவிய பேராற்றலை அறிவுடையார் எடுத்துரைக்கவும் கேளானாய் நின்னை யெதிர்த்த ஞான்று கணையொன்றால் அவன் காலத்தை முடிக்கும் வலி நினக்கிருந்தும், நின் வலிகண்டேனும் தன்னறிவு பெற்று உய்வானாக வெண்ணி, அவன் வலிதொலைத்து 'இன்று போய் நாளைவா பொர' என்று விடுத்தனையன்றே. நினது இச்செய்கையில் அவனைக் கொல்லவிருந்த உனது முன்னைய எண்ணத்தை மாற்றி அவனுய்ந்து அடியவனாகவன்றோ வெண்ணினை. இவ்வாறு நினைத்த நீ பித்தனே யன்றோ? ஆதலினாலன்றே, எவ்விழிவினை யுடையவரேனும் நின்னருளால் நின்னருள் பெற்று உயர்கதி காணுதலாகுமென்னுந்துணிபால், கத்திரபந்துவுக்கு நீ பராங்கதி யளித்த திறங்குறித்து "இத்தனையடியரானார்க்கிரங்கும் அரங்கனாய, பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள்பிணங்குமாறே " (திருமாலை - 4) என்று நின் பெருமை பேசக் கிடந்ததூஉம்.
 

இவ்வகையில் உள்ளுவாருள்ளத்துள்ளுறையுஞ் சோதியாம் மெய்ஞ் ஞானக் கண்ணனைக் குறித்துத் தன் பக்கல் எழுந்த காதல் வேட்கையால், பேசரிய வுயர் குணத்துக் கோதை அவன்றன்னை அகலகில்லாது அவனோடு கலந்து வாழ்தற்கு ஆகும் வகையே சூழ்ந்தனள். எம்பிரானைத் தம்முள்ளிருத்திய தகவுடைப் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்த் திருத்துழாய் நறுமணங் கொண்டே அங்குறிக்குமாப் போலே யவதரித்த எம்மாண்டாள் இச்சூழ்ச்சியிலாழ்ந்ததொரு வியப்பேயோ! ஆண்டாளுக்குப் பிறப்புத் தொடங்கியே யெம்பெருமான் பக்கல் எழுந்த காதல் நோய், அவள் தன் தந்தையின் ஒழுக்கத்தாலும், தந்தை அவளுக்கு அவள் இளமை முதல் அடைவிற் சொல்லி வந்த அவன் சீர்குறித்த சரித்திரங்களாலும் செயற்கை வளமுட்கொண்டு நாளும் பெருகுவதாயிற்றன்றே. ஆண்டாள், தனக்குத் தன்னப்பனார், ஸ்ரீ கண்ணன் பக்கல் கோகுலவாசிகளான இடைச் சிறுமியர் வைத்த பிரேமையினையும், அவர்களுடைய எண்ணம் ஈடேற நோன்பு நோற்கும் பேறு அவர்களுக்குக் கிடைத்த காலையில் அவர்கள் கடல் வண்ணனையே தமக்கு நிர்வாஹனாகக் கருதி நோன்பு நோற்ற படியையும் சொல்லியதையும் நினைத்தவளாய்த் தானும் அவர்களே போன்று அவனைக் காணுதலாகுந் திறத்து நோன்பு கொள்ளும் கொள்கை கொண்டாள்.

 

புத்திர வாத்சல்யத்தால் யசோதைப் பிராட்டியாரும், திருமேனியின் 'சௌந்தரியத்தில் ஈடுபட்ட காதலால் கோபிகைகளும் ஸ்ரீகண்ணனைச் சேரவைத்த பிரேமையோ பேசரிது. அவ்வருமையைத் தந்தையார் பேசக்கேட்டிருந்த கோதையார், அப்பேச்சே ஆதரவாக அவன் வடிவைத்தன்மனத்துள் நிறுத்தி, அதனை, அவன்றாயும், தன்னைப்போன்ற கோபிகைகளும் கண்டு களித்தபடியைத் தானுங் காணும் நினைவு கூர்ந்தாள்.

 

கர்ப்பிணிகளான ஸ்திரீகள், தம்முடைய தண்ணளியால், தாம் இருத்தல், நிற்றல், நடத்தல், கண்வளர்தல் என்னுந் தொடக்கத்துத் தொழில்களைப் பயிலுமிடத்துத் தம் கர்ப்பத்திலிருக்கிற பிள்ளைகளுக்கு நலுக்கம்நண்ணாவகை அக்கருப்பத்தைக் காப்பரன்றே! அன்றியும், பெற்ற பின்னும் அப்பேறுகளின் இன்ப துன்பங்களைத் தம்மனவாக வன்றோ அவர்கள் ஆதரித்துத் திரிவதூஉம். அவ்வகையே ஸ்ரீயசோதைப் பிராட்டியும் ஸ்ரீகண்ணனைத் தான் பெற்றாளாகவும் அவன் பிறந்தானாகவும் அன்றோ அறிந்திருப்பவள். அவள் கண்ணனைச் சுட்டி,


"ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை''

(பெரியாழ் - திரு. 3 - ப - 3 - திரு - 1பா)

 

எனப் பேசுதலாலே கண்ணன் பாற் சென்று தேங்கிக் கிடக்கும் அவளுடைய புத்திரவாத்சல்யம் உணர்தற்கும் உரைத்தற்கும் அரியதொன்றென்பது தோன்றக் கிடக்கின்றதன்றே! பிராமணர்க்கு பால்யத்தில் பிர்மசரியமும், மேல் கிருகஸ்தமும் அனுஷ்டிக்கை தர்மமே போல் இடையர்க்கும் இளம்பருவத்திலே கன்றுகள் மேய்க்கையும், பருவம் வந்தவாறே பசுநிறை மேய்க்கையும் ஜாதி தர்மமாகுமல்லவா? ஸ்ரீகண்ணனும் அசதன்மத்தை அனுஷ்டிப்பானாகப் பிராட்டியார், அவனைக் கன்றின் பின் போக்குவாள். எனினும் அடுத்து, அவனுடைய மேனியின் மிருதுத்தன்மையையும் அவன் போகின்ற விடத்தின் கொடுமையையும், பச்சை கண்டவழி ஓடித்திரியும், காலிகளின் சுபாவத்தையும், அச்சுபாவத்தவை செல்லும் வழியே என்றும் தனக்கு இனிய கோவலச் சிறுவள் செல்லவிருப்பதையும் நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணாவள். அஃதன்றியும் அவள் குடையுஞ் செருப்புங் கொடாதே தாமோதரனை,


“பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லேபாவமே "

(பெரியாழ் - திரு - 3 - ப - 2 - திரு - 8 - பா)

 

என ஏங்குவாள். அவளுக்கு வந்த ஏக்கம் இல்லையாக மாலைப் பொழுதில் கன்றுகள் முன்னாக ஸ்ரீகண்ணன் நின்று தன்வரவு பார்த்திருக்குந் தன்தாய்க்குத் தனது முகங்காட்டி நிற்பான். அதுகாலை யசோதை தனது கண்ணிற்கும் மனத்திற்கும் இனியானைக் கண்டு பெரிதும் மகிழ்வாள். என்றாலும் அடுத்து, கன்றுகள் கால் பாய்ச்சியும், கழுத்தெடுத்தும், வால் நீட்டியும் வேகமெடுத்துப் பரந்து செல்லுதலால் எழுந்ததுகள் அவனுடைய திருமேனியில் படிந்திருத்தலையும், திருவடிகளும் கண்களும் முறையே வெதும்பியும் சிவந்து மிருத்தலையும், திருமேனி வாடியிருத்தலையும், குறுவியர்வை முகத்தரும்பியிருத்தலையும் கண்டு காலிப் பின்னே தன்னிளஞ் சிறுகுட்டனைச் செலுத்துகையைத் தவிர்க்கைக்கு நினைப்பவளாய்,


"கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல்

கோலஞ்செய் திங்கேயிரு''             (பெரியாழ் - திரு - 3 - ப - 3 - திரு - 9 - பா)


எனவும் பேசியிருப்பள். பின்னும் அவள், அவனுடைய காதைப் பெருக்க வேண்டி அவனிரு காதுகளிலும் சீலைக்குதம்பை (துணிச்சுருட்டு) இட்டுவிடுப்பாளாகவும், தாய் இடுங்காலையில்,


      "காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்

றென்கா துகள் வீங்கி யெரியில்'"             (பெரியாழ் - 2 - ப - 3 - தி - 10 - பா)


என்னும் தாயைத் தன்வயப்படுத்துஞ் சொல்லை மிழற்றிய எம்பெருமான், ஒரு காதிடத்துத் திரியைச் சடுக்கெனக் கழற்றி யப்பால் போகட்டு விட்டு அத்திரியிருந்தவிடத்தே காட்டகத்தே மலர்ந்த சிவந்த நிறத்தையுடைய மேல்தோன்றிப்பூ (செங்காந்தள் பூ) வை யிட்டுக்கொண்டு வருவான். அன்றியும் அவன், தன் திருமேனிக்குத் தகுதியாகச் சாத்தின பரியட்டத்தோடும் அது நழுவாதபடி அதன்மே லிருகப்பிணித்த விளங்குதலமைந்த அரைக்கச்சோடும், அவள் அலங்கரித்து விட்ட அடைவே குலையாமலும் வருவான். பின்னும் அத்தோன்றல், நல்ல நீர்மையையுடைய முத்தாலே சமைக்கப்பட்டதாய்க் கழுத்திலே சாத்தப்பட்டதாய் காளையன்ன நடை கொள்ளுமிடத்து இடம் வலங்கொண்டு அசைவதான ஆரத்தோடும் தன்னைக் காணுத்லால் தாய் முகந்தழைக்க முகத்தே முறுவல் கூட்டிக் குதித்துக் குதூகலித்துவருவான். இவ்வகையில் தன் துயர் கெடுக்கும் கடல் வண்ணங்கொண்ட மிடுக்கன பாய்ந்து ஆர்த்து வருகைகண்டு, தான் அடையும் ஆனந்தத்தைப் பிறரும் அடையும் ஆதரவுமிக்க அன்னையார்



"சீலைக் குதம்பை யொருகா தொருகாது செந்நிற மேற் றோன்றிப்பூக்
கோலப்பணைக் கச்சுங் கூறையுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்''

(பெரியாழ் - திரு - 3 - ப - - திரு - 1 - பா)


என்று அவன் வேடத்தைப் பிறர்க்குக் காட்டித் தனக்குக் கண்ணனிடத்துள்ள புத்திரவாத்சல்யத்தால் தலையெடுத்த பிரேமையினைப் புலப்படுத்தி உள்ளம் பூரிப்பாள்.

 

தன் பொலிவுகண்டு தாய் உடல் பூரிக்கப் பிறந்த புனித மூர்த்தியாகும் வசுதேவகுமரன், வண்டு மலர்க்குழலார் கோபிகைகளும் தன்பக்கல் காதற் பெருக்கால் பிரேமை மிகுதியுங் கொள்ளத்தக்க கோலமும் கொள்கைகளுங் கொண்டு விளங்கினான்.

 

ஆயர் குலத்துதித்த வரிவளைக்கை நங்கையர், தம் கண்கள் காணத் தமக்கிடைப் புகுந்து தந்தம் மனம் உவப்பன பல செய்து போதருகின்ற ஸ்ரீ யசோதை மகனாரிடம் தத்தம் மனத்தைச் செலவிட்டுச் சிந்தை யொழிந்தவறாய் சித்திர மொத்தனர்    

 

திருவாய்ப்பாடியிலுள்ள பெண்கள், தாம் ஸ்நாநஞ் செய்தற்கு மஞ்சளரைப்பார்களன்றே. ஒருத்தி அரைத்த மஞ்சள் பற்றுதலில் நல்லது, அல்லது காணத் தம் மேனியிலன்றோ ஒரு புறத்துப் பூசிக் காண்பாள். ஆனால் ஆய்ப்பாடிப் பெண்களோ, சுலபனாகித் தோழரோடே வரும் யசோதை மகனார், தாங்கள் ஸ்நாநஞ் செய்யுமிடத்தே வருதலாலே, அவன்றன் திருமேனி யிலேதாம் அரைத்த மஞ்சளின் பற்றுகையைக் காண்கைக்குப் புன்முறு வலித்த முகத்துடன் வலக்கை குவித்துக் " கண்ணா அருகேவா " என்றழைப்பர். அன்பு கொடுத்தழைக்க முன் வரும் எளியன் 'அவர்கள் அழைக்கப் பெற்றோமே' என்ற மகிழ்ச்சியுடன் அவர்கள் முன் சென்று நிற்பன். அப்பொழுது வருகை மகிழ்ந்த அம்மடந்தையர் ஒவ்வொருவரும் தத்தம் மஞ்சளின் பற்றுக்காண அவன் திருமேனியையே இடமாக்கி அரைத்த மஞ்சளைத் தீற்றிப் பற்றுக் கண்டு உள்ளம் மகிழ்வர். ஓரொருவரும் தீற்றப் பெற்றதால் தன் திருமேனியெங்கும் மஞ்சட்பூச்சே கொண்ட அழகன், மீண்டு தன் தோழருடன் பசுக்களை மேய்க்கைக்குச் செல்வான்.

 

ஸ்ரீ கண்ணன் திருவாய்ப் பாடியிலே அவதரித்த காலத்தே அவனோடொத்த ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள் என்பர் பெரியர், ஆகவே பிறப்பாலும், வளாப்பாலும், வயதாலும் ஒருபுடை யொப்பவராகின்ற ஆயப்பிள்ளைகளுடன் ஆயர்குலக் கொழுந்து மகிழ்ந்து பசக்களையும் கன்றுகளையும் மேய்க்கைக்குச் செல்லுவான். ஆயப்பிள்ளைகளும், ஸ்ரீராமபிரானை யன்றித் தனித்துறைதலிற் றரியாத இளையபெருமாளைப் போலே ஸ்ரீ கண்ணனைப் பின்பற்றியே நிற்பவராயினர். பசுக்களை மேய்க்கைக்குச் செல்லுமவர்கள் பகைவரைப் படுத்தற்கும், விளையாட்டிற்குமாகத் தெறி (சுண்டு) வில்லும் சுரிகை (சூர்க்கத்தி) யும் பிறவும் ஆயதங்களாகக் கொண்டு செல்வர். அவர்கள் தமக்குள் ஏற்பட்ட சிநேக விசேஷத்தால் ஒருவர் ஆயுதத்தை யொருவர் பற்றி யோடியும், ஒருவர் மேலாடையை ஒருவர் பற்றி யிழுத்தும் பலதிறப்பட விளையாடிக் குதூகலித்துத் திரிவர், ஸ்ரீ கண்ண ன் அவர்களுடன் கலந்து, புல்லுள்ள விடத்தே ஆநிரைகளை மேயவிட்டுத் தன் கையிற்கொண்ட குழலொலியால் அவைகள் பரந்து செல்லாமல் ஓரிடமே அமைந்து மேய விடுத்துத்தன் தோழரோடு விளையாடி யிருப்பான். மேல், மாலைக்காலமானவாறே ஆனிரைகளுடன் வீடு திரும்புவான்.

 

கோவலர் சிறுவனாகிய கண்ணன், தன்னைச் சூழத் தோழன்மாரும் ஆனிரைகளும் வரப் பெருமிதத்துடன் வருவான். அது காலை, மயில் தோகையால் செய்யப்பெற்றுப் பலவடிவங்கள் அமைந்து தழை, தொங்கல் எனப் பெயர் வாய்ந்த குடைகள் எங்கும் நிறைந்து தோன்றும். ஆயச் சிறுவர்கள் தம் இடுப்பில் கட்டிய சிறிய பறையை ஒலிப்பர். மத்தளியென்ற பெரு முழக்கு வாத்தியம் முழங்கும். இலையாலும், மூங்கிலாலும் செய்யப் பெற்ற குழல்கள் இனிமையான வொலியைக் கொடுக்கும். தம் குலத்திற் கேற்ப ஆயப்பிள்ளைகள் பாடி வரும் பாட்டொலி ஒருபுறம் பரவும். இவ்வகை ஒலிகளுக்கு ஏற்ப அவ்வவ்விடம் அச்சிறுவர் பலதிறப்பட நடித்து வருவர். இம் முறையே கண்ணனுள்ளிட்டா ரனைவரும் கதிரவன் படுகைகண்டு வீடு நோக்கி விளையாடி வருவர். ஸ்ரீ பரந்தாமன், தோழர்களில் உயிர்த்தோழனாய், பிரியனுமாய், இதமே செய்வானுமா யிருப்பானொருவனுடைய தோளை ஒரு திருக்கையாலே ஸ்பரிசித்தும் மற்றொரு திருக்கையிலே பசுக்கள், மேய் கைக்கும், பக்கத்து விலங்காமைக்கும் மீளுகைக்கும் பழக்கும் வேறு வேறு குறிப்பு த்வநியைச் செய்கைக்கு உறுப்பாகவமைந்த சங்கத்தைத் தன் திருப் பவள வாயிடை மடுத்துப் பசுக்கள் தன்னைத் தொடர்ந்து வருதலைக் குறிக்கும் த்வநியைச் செய்து கொண்டே கோகுலத்தைக் கிட்டி வருவான். இந்த த்வநிதானே, காலையில் மஞ்சட்பற்றுக் காண்கைக்கு இடமாகத் தன்னைத் தங்களுக்கு எளியனாக்கித் - தந்த அழகன் (கண்ணன்) வருதலை மாலைக் காலத்தே அவன் வருங் கோலங்காணுதற்கு வழிபார்த்திருக்கும் கோபிகைகளுக்கும் அவன் வரவை உணர்த்துவதாகவுமாகும்.

 

ஆயர் மடமக்களில், சிலர், அவ்வொலி கேட்டுத் தரிக்கமாட்டாராய்த் தாம் இட்டவும் தொட்டவுமாகிய பொருள்கள் அவ்வவ்விடத்தனவாகப் போகட்டு, தலையசைத்துக் காளையென எடுத்த நடையுடன் தம் மனம் குளிர்தற்கு வரும் ஒருவனான அவனைக் காணும் ஓட்டமெடுத்த அடாவினராய், அவன் கோலங்காணப் பலகணியூடு பார்த்திருப்பர். சிலர் அவன் விடுத்த த்வநி கேளாமே அவனே நினைவாக அயர்ந்திருந்தாரை விரைந்துட்புக்குத் துகில் பற்றி யிழுத் தழைத்துக் காட்டி அவர் தம் அயர்வு தீர்ப்பர். சிலர் தமக்குள் ஏற்றன, இன்பந்தருவன, தத்தம் மனம் அறிவன வெளிப்படையாக வாய் விட்டுச் சொல்லியும், குறிப்பால் தம்முள்ளுணர்ந்தும் மகிழ்ந்தயர்வர். சிலர் ஆங்காங்கு இருவர், மூவர் கூடித் தமக்குள் சில பேசி மகிழ்வர்.

 

ஒருத்தி: - தோழி, அவன் திருமேனியழகும், ஒப்பனையழகும், வருவழகுமாகிய ஓரொன்றனையும் எத்தனை அறிவுடையவரும் புகழ்தற்கு ஆகுமோ! யாம் அவனை நம்பக்கத்திலிருத்திக் கண்டு களிக்கும் கருத்துடையோம். அவனோ நம்முள்ள மறிந்த மாயன். நம்முள்ள மறிந்த அவன் நம் எண்ணத்திற்கு இணங்கும் எண்ணம் இல்லாதவனாயின் இவ்வீதியோடு வருதலாகாது. அவன் அறிந்து வைத்தும் இவ்வீதியில், நாமிருக்கும் மிவ்விடை, நம்மிடைப் புகுந்து போகுவானாயின், தோழி, மயக்குக் குழலேந்திய அக்கள்வனை, கண்ணுக்கும் மனத்திற்கும் இனியானை இறுகப் பிணித்துப் பிடித்திழுத்து நம்மிடைத் தகைந்திடுவம்.

 

பிறன்: - தோழி: என் கருத்தே சொல்லினை. நல்லது என்றாலும், நம்நிலைமை யறியாத பேச்சு அதாகும். பெண்கள் அல்லவோயாம். யாம் சென்று சிறியன் குழலேந்திய கையைச் சிக்கெனப் பிடித்து மகிழ்ந்து, மனம் உவக்க இழுத்து வந்து, உடலெங்கும் உவகைபூப்ப நம்மிடை வைத்துக் களிப்பின், வெறும் வாயை மெல்லும் இவ்வூரவர்வாய்க்கு அவலும் அன்றோ கொடுத்தவராவோம். மேலும் தோழர் திரளோடுவருமவனை வளைக்கும் வகையாது?  

ஒருத்தி: - வகை கூறக்கேள். " நாங்கள் மேலிடத்தே பந்து கொண்டு விளையாடினோம். பந்து பலகணியூடு பறந்து அம்மிடுக்கன் அருகு வீழ்ந்தது. அக்கள்வன் அப்பந்து வீழ்ந்த அப்பலகணியூடு, அது எடுக்க முகங்காட்டிய எங்களூடு நோக்கிக் கண்வாங்கிப் பந்து எடுத்துச் சென்றான் ஆதலின் அவன் கை தீண்டப் பெற்ற அப்பந்தே பெறுதற்கு அது செய்தோம் என்பம். இவ்வகையில் அவனைத் தழுவிப்பிடிப்பம். நம் மனம் அறிந்த மாயன் நம் செய்கை கண்டு செந்துவர் வாய் சிறிதே விள்ள முறுவலிப்பான். யாம் அம்முறுவல் கண்டு உவத்தலைச் செய்வோம் தோழி.

 

இவ்வகையில், பற்று மஞ்சள் பூசித் திருமேனிகாட்டிச் சென்ற கோவலச் சிறுவன், காலிப்பின் வருகை காணுதலில், பலகணி யூடுபார்ப்பவரும், காணாதார்க்குக் காட்டி அயர்வு தீர்ப்பாரும் தம்முள் கலந்து மகிழ்வாருமாகிய கோபிகைகள் பலரும் தம் பெண்மையும், வீட்டவர் வெகுளியும், மற்றையவர் சிறு சொல்லையும் பேணாதே, அவன் குழல் தாங்கிய கோலமே பேணித் தம் அகமும் முகமும் மலர அவன் குழலெடுத் தூதும் திறத்தழகில் ஈடுபட்டுப் பாவையராயினர்.

 

ஸ்ரீ குழற்கோவிந்தன், இடப்பக்கம் இடத்தோளைச் சாய்த்தும், இரு கைகளும் குழலிடமாகவும், பண்ணிற்குத் தகுதியாகச் சிறுவிரல்கள் குழல் தடவிப் பறிமாறவும், இடப்பக்கம் சாய்ந்து நிற்றலாலே அவ்வளவே செங்கண்களும் குழல் நுனியை நோக்கக் கோடினவாகவும், " வாய்கடைகூட " என்றபடியே இரண்டு கடைவாயையும் குவித்து ஊதுகிறபோது சிவந்தவாயினது அகவாயிலுண்டான வாயுவினுடைய பூரிப்பாலே குமிழ்க்கவும், உலாவி யுலாவிக் குழலூதுதலாலே ஆயாசம் பொறாமல் ஸௌகுமார்யத்தாலே குறு வியர்வை அரும்பின திருப்புருவம் மேலே கிளர்ந்து வளையவும், இனிய இசையை எவருங் களிக்க உதவினன். மங்கைமார்கள் புஷ்பத்தாலே அலங்க்ருதமான கூந்தல் நெகிழ்ந்து அலைய, ஒப்பித்து உடுத்திய வஸ்திரம் நெகிழ (தலை குலைய அரை குலைய) அக்குழலோசை வழியே யோடி வந்து செவ்வரி கருவரி பரந்த கண்கள் அவனிடத்தனவாக மனமும் அவை சென்ற வழியே செல்ல, சிந்தை யழிந்தவராய்ச் சித்திரமொத்தனர்.
 

இங்குக் காட்டிய முறைமையிலே புத்திரவாத்ஸல்யத்தால் யசோதைப் பிராட்டியாரும், திருமேனியின் சௌந்தரியத்திலும் பிறகுணங்களிலும் ஈடுபட்ட காதலால் கோபிகைகளும் பிரேமை மிகுதியும் கொள்ள, எல்லாம் வல்ல எம்பெருமானாய் எழிலார் திருமருவு மார்பனாய் வேங்கடம் நின்றுஅருள் புரிந்தருளும் ஆதிமூர்த்தியே காரணனாக வந்தவதரித்த கோலவடி வினையும் குணங்களையும் தந்தையார் பேசக் கேட்டுக் கிடந்தனள் அல்லவோ எந்தாய் ஸ்ரீ ஆண்டாள். அவள், அவர்களெல்லாம் காணப்பெற்ற பாக்கியம் தனக்குக் கிடையாமைக்குப் பெரிதும் வருந்தினாள். கோகுலவாசிகளான இடைப்பெண்கள் நோன்பு நோற்கையை வியாஜமாகக் கொள்ள ஸ்ரீ யசோதை மகன் அவர்கள் பக்கல் நீங்காது அந்நோன்பிற்கு நிர்வாகனாய் உறைந்தா னன்றே. அது உணர்ந்த ஆண்டாள், தானும் அந்நோன்பு நோற்கும் கொள்கை கொண்டு அவனைப் பக்கத்தவனாக்கிக் கொள்ளத் துணிந்து அப்பெண்கள் நோற்றபடியைத் தான் எவரும் மகிழ்ச் 'சங்கத் தமிழ் மாலை முப்பது" எனப் புகழ்ப்பெற்ற திருப்பாவை யெனுங் கிரந்தத்திற் சொல்லிய முறைமையே மார்கழி மாதத்தே நோற்றலை மேற்கொள்ளுவாளாயினள்.

 

பிரதிதினழம் விஷ்ணு சித்தர் வடபெருங்கோயிலுடையானுக்குச் சாத்துதற்காகக் கட்டிவைக்கும் மாலையை அவரில்லாத சமயத்தில் எடுத்துத் தன் குழலிலே தரித்துக்கொண்டு 'அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ' என்று அழகு பார்த்து வந்த சூடிக்கொடுத்தாளாகிய ஆண்டாள் நோன்பு நோற்கலானான் என்று கூறினோமல்லவா? அந்த நோன்பின் விளக்கம் வருமாறு: - இந்த நோன்பே திருப்பாவை என்று வழங்கப்பெற்று வருகிறது. பாவை என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லானாலும் இந்த இடத்தில் நோன்பு என்னும் பொருளையே தருவதாம்

.

ஆண்டாள், பூர்வம் ஆயர்மாதர் கண்ண னெம்பெருமானை முன்னிட்டு நோற்ற நோன்பைத் தானும் பாவனார்த்தமாக அனுஷ்டித்துய்ய வேண்டி ''நாமும் நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளிரோ" என்று சொல்லி அதற்குரித்தான அம்சங்களை ஒழுங்குபட வைத்துப் பேசலுற்றாள்.

 

பகவான், இந்த நிலவுலகைத் திருத்தி யாட்கொள்ள, திருவாய்ப் பாடியில் கண்ணபிரானாக அவதரித்து, தனது நகரற்ற கல்யாண குணங்களாலும், அதிரூப சௌந்தரியத்தாலும் அப்பாடியின் கணுள்ள ஐந்துலக்ஷம் குடியிற் பிறந்த பெண்களையும் தன் வசப்படுத்தித் தன்னோடொத்த பருவத்தினரான அப்பெண்களுந் தானுமாய் வாழ்ந்து வருங்காலத்தில், ஆயர்களின் தலைவர்கள் தங்கள் பெண்களையும் கிருஷ்ணனையும் ஒன்று சேர வொட்டாதபடி பிரித்து வைத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் மழை பெய்யாமற் போயிற்று. ''கோவலர்க்குக் கோநிரையே சீரிய செல்வ" மாதலால் அச்செல்வம் குறைவின்றி வாழ்வதற்கு மழையே ஏதுவாம்; ஆகவே மழை பெய்யும் வண்ணம் நோன்பு நோற்குமாறு அவர்கள் தங்கள் பெண்மக்களுக்கு உத்தரவளித்து, கண்ணபிரானை அந்த நோன்புக்குத் தணை செய்யுந் தலைவனாக நியமித்தார்கள். பெண்களும் கிருஷ்ணனும்'' மாதர்களிற் சிறந்த மார்கழி மாதமும் மதிநிறைந்த நாள்களும் நமது நோன்பிற்கு அனுகூலமாக ஏற்பட்டது கொண்டாடத் தக்கதே. நாளைக் காலையில் ஒன்று கூடி நீராடப் போகலாம்'' என்று முடிவு செய்து கொண்டு தத்தமது வீடு போய்ச் சேர்ந்தனர். அடுத்தநாள் " கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே'' என்கிறபடி கண் துஞ்சப் பெறாமையால் முந்துற உணர்ந்தவர்கள், கண்ணபிரானது குணசேஷ்டிதாதிகளை' நினைந்து நைந்துள் கரைந்துருகி' எழுந்திருக்க மாட்டாமல் படுக்கையில் கிடக்கிறவர்களைத் தனித்தனியே சென்றுணர்த்திப் பின்பு எல்லோருமாய்த் திரண்டு சென்று கண்ணனை எழுப்பி அவன் பக்கல் தங்கள் மனோரதத்தை யறிவித்துக் காரிய சித்தி யடைந்து, தாங்களும், தங்கள் தலைவர்களும், ஆனிரைகளுடன் சுக ஜீவியரானார்கள்.



"இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகந் தன்னையிகழ்ந்
தாழ்வார் திருமகளா ராய்.''



''பெரியாழ்வார் பெண்பிளையா யாண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்து பா ராண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு.''


''அஞ்சு குடிக்கொரு சந்ததியா யாழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை யாண்டாளைப் பத்தியுட னாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.''


என்று உபதேச ரத்தினமாலையிற் புகழப்படும் ஸ்ரீ ஆண்டாள், பொங்கித்ததும்பப் பெற்ற பகவத் பிரேமாதிசயத்தால், ஆயர் மாதர்கள் இழைத்த மேற்கூறிய நோன்பை யனுஷ்டித்து நலனடைய வெண்ணினாள்.

 

அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஆண்டாள், விப்பிரோத்தமரான பெரியாழ்வாரின் பெண்மகளாயிருந்தும், யாகம் செய்யத் தொடங்கியவர்கள் தங்கள் உண்மைப் பெயர்களை விடுத்து, யாகம் பூர்த்தியாகுமளவும் 'யஜமானன்', 'அத்வர் யூ' .'ஹோதா' என்பவை போன்ற நாமதேயங்களை வைத்துக்கொள்ளுகிறபடி, தன்னுடைய ஜன்மபூமியாகிய ஸ்ரீ வில்லிபுத் தூரைத் திருவாய்ப்பாடியாகவும், அங்குள்ள ஸ்திரீகளை இடைப் பெண்களாகவும், தன்னையவர்களுள் ஒருத்தியாகவும், வடபெருங்கோயிலை ஸ்ரீ நந்தகோபரின் திருமாளிகையாகவும், அக்கோயிலில் எழுந்தருளியுள்ள பகவானையே கண்ணபிரானாகவும் பாவனை செய்து, அந்தப் பாவனையின் முதிர்ச்சியால் அநுராகம் பெருகி, இடை நடையும், இடை முடியும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் கொண்டு நோன்பு நோற்கப் புகுந்தாள். இந்நோன்பின் விருத்தாந்தத்தையே திருப்பாவை யென்னும் திவ்விய பிரபந்தம் விசதமாக வெளியிடுகின்றது.

 

சம்ஸாரிகளைப் பார்க்கிலும் முனிவர்கள் சிறந்தவர்கள்; முனிவரைவிட ஆழ்வார்கள் சிறந்தவர்கள்; ஆழ்வார்களினும் ஆண்டாள் உத்கிருஷ்டமானவள். சம்ஸாரத்திற் கிடந்துறங்கா நின்ற ஆழ்வார்களைப் பகவான் தானாகவே சென்று எழுப்ப அவர்கள் விழித்துக் கொண்டார்கள். ஆண்டாளோ அவ்வாறின்றி மணத்துடன் முளைக்கும் திருத்துழாயைப் போல பகவான் விஷயத்தில் ஆராவியற்கை யவாவுடையவளாய் உதித்து, தானே அவனது சந்நிதா திரு ஆராததை யவா வகைனத்தை யடைந்து "உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்" என்று திருப்பள்ளி யுணர்த்தினாளாதலால் இவள் மேம்பாடு கருதற்பாலதே. புருஷரைப் புருஷர் கண்டு இச்சிப்பதினும், புருஷரைப் பெண்கள் கண்டு இச்சிப்பது விசேஷமன்றா?

 

ஆண்டாள் ஒரு கொள் கொம்புடன் கூடி வாழ வேண்டிய பருவத்தைப் பெற்றதும், ஞானபக்தி வைராக்கியங்களில் தலையெடுத்து, ''மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்று மானுஷ நாற்றத்தில் விருப்பமில்லாமல் ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வடபெருங்கோயிலுடையானுடன் கலந்து வாழும் பாக்கியத்தையே போக்கியமாக நினைத்தாள். ஆனால் அந்நினைவுக்கு அப்பெருமான் முகங் கொடுக்கவில்லை, பின்னர் ஆண்டாள் "இவ் வெம்பெருமானுடன் கலந்தின்ப மெய்தினவரார்?'' என்றாராய்ந்து பார்த்தாள். ஆய்ப்பாடியிலிருக்கும் அஞ்சுலக்ஷம் குடிகளான ஆயர் மங்கையர் அனைவரும் அப் பகவானுடன் கூடி யானந்த முற்றார்களென்றறிந்து, அச் சம்பந்தம் காலாந்தரத்தில் நடந்ததொன்றாதலின் அதில் நமக்கந்வயம் இல்லை; இனி அவன் உலாவிய அடிச்சுவடும், அவனும் கோபியருமாகத் திளைத்த யமுனா நதியும், ஆனிரைக்காக அவன் எடுத்த கோவர்த்தனகிரியும் கிடந்தனவாகில் அவற்றைக் கண்டாயினும் உயிர் தரிப்போமென்ற துணிகரத்தைக் கொண்டாள். அத்துணிவை நிறைவேற்றத் தான்அசக்தி யுள்ளவளாயிருப்பது நோக்கி "அந்தோ! ஜனகராஜன் தன்மகள் சீதாபிராட்டி பின் திருக்கல்யாணத்தை யுத்தேசித்து 'வில் முறி' என்றும், கும்பர் தம்மகள் நப்பின்னைப் பிராட்டியின் திருமணத்தை நாடி 'ஏறு தழுவுதல்' என்றும் அவதி வைத்தது போல் நமது தந்தை நமக்கோர் அவதியும் கற்பிக்கவில்லையே. இனி நாம் உய்வ தெங்ஙனம்? " என்று வாட்டமுற்றிருக்கையில், 'ஆயர் மங்கையருடன் கண்ணபிரான் ஆடிய குரவைக் கூத்தால் அம்மங்கையர் பெருமகிழ் வெய்திய போது அப்பிரான் அந்த மகிழ்ச்சி ரஸத்தை மாற்றத்தான் மறைந்தருளினன். அப்போது கண்ணபிரானைக் காணப்பெறாத அந்த ஸ்திரீகள் அவன் செய்தருளிய பூதனை வதம், காளிங்க நர்த்தனம், தேனுகாசுர வதம் முதலான செயல்களை அவனைப் போல் நடித்துக் காட்டி ஒருவாறு துயரம் மறந்திருந்தார்கள்' என்று சிலர் சொல்லக் கேட்டு அவை போன்ற பாவனா செயல்களைத் தானுஞ் செய்து சுகமடைந்த விஷயத்தைக் கூறுவது திருப்பாவை எனும் பிரபந்தம்.'வேத மனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்" என்கிறபடி இப்பிரபந்தம் முப்பது பாசுரங்களையுடையது; பல படித்திரங்களான வியாக்கியானங்களைக் கொண்டது; 'பகவானுக்கு ஆட் செய்வதே பரமபுருஷார்த்தம்' என அறுதியிடுதல் இதன் உள்ளுறை.

 

இப்படி ஆண்டாள் தன் மனோபாவத்தைத் தனக்குகந்த காதலனான
கடல் வண்ணன் விஷயத்தில் செலுத்தி, அவனை ஒரு நொடிப் பொழுதும் கூடாதிருக்கப் பொறாதவளாய், அவன் பிரிவையாற்றாத ஆயர் மங்கைகளைப் போல் தானும் நோன்பு நோற்று உயிர் வாழ்பவளாய், அந்த அபிப்பிராயத்தைத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னுந் திவ்ய பிரபந்தங்களின் மூலமாகப் பகவத் ஸந்நிதியிலே விண்ணப்பித்துக் கொண்டு வாழ்ந்திருந்தாள்.

 

இவளது நோக்கத்தை யறிந்த விஷ்ணு சித்தர் நூற்றெட்டுத் திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களுடைய பிரபாவத்தை ஆண்டாளுக் கெடுத்துரைத்து இவர்களில் எந்த மூர்த்தியின் மீது பிரியம் என்று கேட்க, ஆண்டாள் வடமதுரைக் கண்ணபிரானது வரலாற்றைக் கேட்டு மயிர் சிலிர்ப்பும். திருவேங்கட முடையானது வரன் முறையைச் செவியேற்று முகமலர்ச்சியும். திருமாலிருஞ்சோலை மலையழகரின் வடிவழகையறிந்து மனமகிழ்ச்சியும் கொண்டு, ஸ்ரீரங்கநாதனது மகிமை செவிப்பட்டவுடனே அளவற்ற ஆனந்தமடைந்து நின்றாள். அப்பொழுது அத்திருப்பதிகளின் எம்பெருமான்களெல்லோரும் இவளுடைய ஞானக் கண்ணுக்கு விஷயமாக, இவள் ஸ்ரீ ரங்கநாதனிடத்தே மனதைச் செலுத்தி அவனுக்கே தான் மணமகளாக விரும்பக்குறிப்பை வெளிப்படுத்தினாள்.

இதனையணர்ந்த பெரியாழ்வார் 'இவளை நம்பெருமாள் கடிமணம் புரிதல் கைகூடுமோ?' என்று சிந்தித்திருக்க, திருவரங்கச் செல்வன் அவ்வாழ்வாருடைய ஸ்வப்பனத்தில் எழுந்தருளி 'உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு வாரும்; அவளை நாம் அங்கீகரிப்போம்' என்றும், கோயில் ஸ்தானிகர் முதலிய பரிஜனங்களுடைய கனவில் தோன்றி நீங்கள் சகல மங்கள வாத்தியங்களோடும் சத்திரசாமராதிகளோடும் நவரத்தினப் பல்லக்கையும் உடன் கொண்டு வில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளை அழைத்து வாருங்கள்' என்றும் அருளிச்செய்தனன். இச்செய்தியைக் கேள்வியுற்ற ஸ்ரீ வல்லபதேவன் என்னும் அக்காலத்திருந்த அரசனும் ஆழ்வாருடனிருந்து வேண்டியவற்றைக் குறைவற நடத்தி வைத்தனன்.

 

அனந்தரம் பட்டர்பிரான் ஸ்ரீ ஆண்டாள் நாயகியை மணிச்சி விகையில் எழுந்தருளப் பண்ணி, மங்கல வாத்திய கோஷத்துடனே 'ஆண்டாள் வந்தாள்! ,''சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! ''சுரும்பார் குழற்கோதைவந்தாள்! ''திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! ''பட்டர்பிரான் புதல்விவந்தாள்! ''வேயர்குல விளக்கு வந்தாள்'என்று பல சின்னங்கள் பணிமாற, மெய்காப்பாளர் உடன் சூழ்ந்து வர, தாமும் அரசனுமாக இருபுறத்தும் இடைவிடாதிருந்து அழைத்து வந்து திருவரங்கம் பெரிய கோயிலை யடைந்து பெருமாள் முன் மண்டபத்தில் அப்பிராட்டியை நிறுத்திப் பெருமாளைச் சேவிக்கப் பண்ணு விக்கையில் அத்திருமாலின் திவ்ய சௌந்தரியம் இரும்பைக் காந்தம் இழுப்பது போல் ஆண்டாளைக் கவரத் தொடங்கியது.

 

சூடிக்கொடுத்த நாச்சியார், சிலம்பார்க்கச் சீரார்வளை யொலிப்பக், கொடியேரிடையாடக் காதளவு மோடிக் கயல் போல் மிளிரும் கடைக்கண்பிறழ அன்னமென்னடை கொண்டு பெருமாளருகிற் சென்று ஆனந்தக்கடலில் ஆழ்ந்து திருவரங்கன் திருவடி வருடக் கருதி நாகபரியங்கத்தை மிதித்தேறி நம்பெருமாள் திரு மேனியிலே அந்தர்ப்பவித்து அவனை என்றும் பிரியாதிருப்பவளாயினாள்.

 

பெருமாள், ஆழ்வாரை அர்ச்சகர் முகமாக அழைத்து 'ஸீரசமுத்திரராஜன் போல நீரும் நமக்கு மாமனாராய் விட்டீர்' என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரியட்டம், மாலை. ஸ்ரீ சடகோபன் முதலியவற்றை யளித்து 'வில்லிபுர தூருறைவானுக்கே தொண்டு பூண்டிரும்' என்று திருவாய் மலர்ந்து விடை கொடுத்தருளினார்.

 

ஆழ்வார்,

 

"ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்,

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்,

பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற வசோதை,

மருமகளைக் கண்டு கந்து மணாடுப் புறஞ் செய்யும் கொலோ'' - 

                  (பெரியாழ்வார் திரு மொழி கூ - அ - ச)

 

என்று மிகவு முகந்து ஸ்ரீ வில்லிபுத்தூர்க்குச் சென்று வழககம் போல கைங்கரிய எரதராயிருந்தார்.


இப்படி ஸ்ரீ ஆண்டாள் வைபவத்தைப் பெரியோர்கள் வியந்து கூறுகின்றனர்.


''பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேத மனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்து மைந்து மறியாத மானிடரை
வையஞ் சுமப்பதும் வம்பு.''


சுபம்! சுபம்!  சுபம்!!!

 

 

N. திருவேங்கடத்தையங்கார்.

(ஓரன்பன்)

 

ஆனந்த போதினி – 1927, 1928 ௵

 

 

 

 

 

No comments:

Post a Comment