Tuesday, September 8, 2020

 

ஹிந்து வான சாஸ்திரம்

 

அன்புமிக்க ஆனந்தபோதினி பத்திரிகாசிரியர் அவர்களுக்கு


      ஐயா,

 

எனக்கு வான சாஸ்திரத்தில் மிக்க பிரியம் உண்டு; அதைப் பற்றிய புத்ததம் எது அகப்பட்டாலும் அதை உடனே வாசித்துப் பார்த்து அதன் விஷபங்களை கிரகித்துக் கொள்ள முயற்சிப்பது என் வழக்கம். இவ்வாறிருந்து வரும் நாளில், ஹிந்து வான சாஸ்திரத்தைப் பற்றிய பற்பல விஷயங்களையும், ஆங்காங்கு பற்பல புத்தகங்களில் யான் கண்ணுறும்படி நேரிட்டது.
 

அவைகளில் ஆரிய சித்தாந்தப்படி, பூமியானது துருவ சூத்திரம் என்இற அச்சில் புரளுவதால் தினந்தோறும் இரவு பகல் உண்டாவதாகவும், இன்னும் சில புத்தகங்களில் (உதாரணமாக வராஹமிரர் இயற்றிய பஞ்ச சித் -தந்திகாவில்) ககோளச்சுழற்சியினால் தான் இரவு பகல் உண்டாகின்றனவென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

 

மற்றபடி எல்லா இந்து வான சாஸ்திரங்களிலும் கிரகங்களெல்லாம் பூமியைச் சுற்றி வருவதாகவே சொல்லப்பட் டிருக்கின்றன.

 

அதற்கு வேண்டிய கணக்கு முதலியவைகளையும் அநேக நூற்றாண்டுகலுக்கு முன்னரே நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்களாதலால், அதற்குரியகணித சாஸ்திரங்களையும் அவர்கள் அக்காலத்திலேயே ஏற்படுத்தி யிருக்கிறார்கள்

 

இவைகளை யெல்லாம் ஊன்றி நோக்குங்கால், ஒருவிதத் துணைக்கருவியின் உதவியுமின்றி நம் முன்னோர்கள் இத்துணைக் கணக்குகளையும் எவ்வாறுதான் கணக்கிட்டனரோ என்ற ஐயமும், தற்காலத்தில் மேனாட்டார் தற்போது தான் கண்டுபிடித்ததாகக்கூறும் வானசாஸ்திர விஷயங்களில் அநேகவிஷயங்கள் அவர்களுக்குத் தெரியாமலிருர் திருக்கவில்லை யென்பதும் நன்கு புலப்படுகின்றன.

 

தவிர கிரகசாரம், கிரகஸ்புடம் முதலியவற்றிற் கென்று அவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள கணக்குகளை உற்றுநோக்குங்கால், சந்திரன் ஒன்று தவிர புதன், சுக்கிரன், பூமி முதலிய கிரகங்களெல்லாம் சூரியனைச் சுற்றி வருவதாக ஏற்படுகின்றதே யொழிய பூமியைச் சுற்றிவருவதாக ஏற்படக்காணோம். அவ்வாறிருக்க சூரியன் முதலிய கிரகங்களெல்லாம் பூமியைச் சுற்றி வருவதாக ஏன் சொல்லப்பட்டிருக்கிறது என்று யான் நினைத்து, அதற்கு மாறாகவுள்ள சூரியனை ஸ்திரமாக வைத்து அதன் ஆகர்ஷ்ண வசத்தால் மற்றைய கிரகங்களெல்லாம் அதைச்சுற்றி வருகின்றன என்ற விஷயத்தை அவர்கள் பழைய கிரந்தங்களில் எங்காவது சொல்லாமலிரார்கள் என்றும், நம் கண்ணுக்கு சூரியன் பூமியை வருடமொருமுறை சுற்றிவருதாகத் தோற்றுகிற தோற்றத்தையே அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும், ஆகையால் இப்போது தான் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் விஷயங்களெல்லாம் அவர்கள் அக்காலத்திலேயே நன்கறிந்திருக்க வேண்டும் எனவும் யான் கருதி, அதைப் பற்றிபற்பல பெரியோர்களிடம் கேட்டும், புத்தகங்களில் பார்த்தும் இன்றளவும் அதன் விஷயம் ஒன்றும் புலப்படாமலேயே இருந்தது.

 

இப்படியிருக்க இன்றைய தினம் தற்செயலாய் தங்கள் பழைய ஆனந்தபோதினி சஞ்சிகைகளில் ஒன்றாகிய தொகுதி 6 - பகுதி 4 க்குச் சரியான சென்ற இரௌத்திரி வருஷத்திய ஐப்பசி சஞ்சிகையில் பிரம்மஸ்ரீ சிவானந்த சாகர யோகீஸ்வரர் அவர்களால் எழுதப்பெற்றுள்ள "இல்லறம் - கிரகண காலபலன்'' என்ற மகுடம் பூண்ட வியாச மொன்றை யான் கண்ணுறும்படி நேரிட்டது.

 

அச் சஞ்சிகையில் 142 வது பக்கத்தில் 2 - வது பாராவின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் பின்வருமாறு.

 

"இது நூதன வான சாஸ்திரிகளின் கொள்கையென்று சிலர் கருதக்கூடும். அங்ஙனமன்று; சில தேசத்து வானசாஸ்திரிகள் சூரியன் தந்நிலையில் தானே சுற்றிக்கொண்டே நிற்கிற தென்றும் மற்றைய கிரகங்களெல்லாம் அதைச்சுற்றி ஓடுகின்றன என்றும் கூறுவார்கள். சிலர் பூமி நிலையாக நிற்கச் சூரிய சந்திராதிகள் அதைச்சுற்றி ஓடுகின்றன வென்றும் கூறுவார்கள். நமது தேசத்தில் இவ்விருவகைக் கொள்கைகளும் உண்டு. முக்கியமாகச் சூரியன் தன்னிலையிற் பிரியாது சுழன்று கொண்டே நிற்கின்ற தென்றும், மற்றைய கிரகங்கள் அதன் வேகத்தால் சுழற்றப்பட்டு அதைச் சூழ்ந்து செல்கின்றன வென்பதுமே கொள்ளப்படும். இது வேத சம்மதமாம்.''

 

இதனைக் கண்ணுற்ற எந்தனுக் குண்டான மட்டற்ற மகிழ்ச்சியை யார்தான் அளவிட்டுக் கூறவியலும். மேற்படி வாக்கியங்களினின்றும் தற்போது மேனாட்டார் கூறும் விஷயங்களனைத்தும் அநாதியான நம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிற தென்பது வெள்ளிடைமலை போல் விளங்குகின்ற தன்றோ.

 

ஆனால் இவ்விஷயங்களை யெல்லாம் நன்குணராமல் நம் நாட்டார் பலர் பிடிவாதத்தையே மேற்கொண்டு பூமி ஸ்திரமாக ஆசையாம லிருக்கிறதென்றும் இரவு பகல் கூடக் கோளச் சுழற்சியினால்தா னுற்பவிக்கின்றன வென்றும் வருஷத்திற் கொருமுறை சூரியனே பூமியைச் சுற்றிவருகிற தென்றும், பூமி சூரியனைச் சுற்றுவதாகச் சொல்வது எந்த சாஸ்திரத்திலும் சொல்ல வில்லை யாகையால் அது மேனாட்டார் சொல்லும் புதுமையான கற்பனை யென்றும் சொல்லித் திரிகின்றார்கள்.

 

இஃதிங்ஙனமாக மேற்படி வியாசத்தை வெளியிட்ட பிரம்மஸ்ரீ சிவானந்த சாக யோகீஸ்வரர் அவர்கள் தயவு கூர்ந்து சிரமத்தைப் பாராட்டாமல் மேற்படி விஷயம் வேதசம்மதம் என்பதற் காதாரமாகவுள்ள அவ்விஷயம் எந்த வேதத்தில் எவ்விடத்தில் கூறப்பட்டிருக்கிற தென்பதையும் இன்னும் இந்து வான சாஸ்திரத்தைப் பற்றிய பெருமைகளையும் விவரமாக வெளியிடுவாரேல் என் போன்ற அநேகர் அவருக்கு மிக்க நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருப்பது மன்றி மேற்படி பிடிவாதக்காரர்களின் வாயையடக்க அஃதோர் தகுந்த மருந்துமாகு மெனவும் யான் கருதுகின்றேன்.

ஆகையால் இவ்விஷயத்தைக் குறித்து பிரம்மஸ்ரீ சிவானந்த சாகரயோகீஸ்வரர் அவர்கள் கூடிய சீக்கிரத்தில் தங்கள் ஆனந்தபோதினி பத்திரிகை மூலமாய் ஒருவியாசம் வெளியிடுவாரென் றெண்ணி இவ்வியாசத்தையான் வரைந்துள்ளேன்.

 

இதில் ஏதேனும் குற்றமிருப்பினும் அதைக்கருதாது நீக்கிக் குணத்தையே கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
 

இங்ஙனம், தங்கள் உண்மையுள்ள

கோ. ஸ்ரீனிவாஸய்யங்கார்

புத்தா நத்தம், 3-11-1928

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment