Monday, September 7, 2020

 

வானமுந் தானமும்

 

 வானமென்பது அதிவிருஷ்டி (பெய்து கெடுத்தல்) அனாவிரு ஷ்டி (பெய்யாது கெடுத்தல்) என்கிற குறைபாடின்றி வேண்டுங் காலத்தில் வேண்டிய அளவு பெய்து காக்கும் மழையையும், தான மென்பது மனதாரச் செய்யக்கூடிய பரோபகாரமான ஈகைத் தன் மையையும் இவ்விடத்தில் குறித்து நிற்கின்றன. வானம், தானம் என்னும் இரண்டும் ஒன்றற்கொன்று பெரும்பான்மையும் காரண காரியமாய் அமைந்துள்ளன. வானமாகிய காரியத்திற்குத் தானம் காரணமும், தானமாகிய காரியத்திற்கு வானம் காரணமும் ஆகின்றன.

“மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையுந்

தவமிலா ரில்வழி யில்லை தவமும்

அரசிலா ரில்வழி யில்லை அரசுங்

குடிவாழ்வா ரில்வழி யில்”

 

என்னும் ஆப்த வசனம், மழையால் குடிகளும், குடிகளால் அரசனும், அரசனால் முனிவரும், முனிவரால் வானமும் (மழையும்) சிறப்படைதல் வேண்டும் என்கிற கருத்தை வெளியிடுகின்றது.

 

தொன்று தொட்டுத் தானமாகிற பரோபகாரத்தை நமது முன்னோர் மறவாது திரிகரண வாயிலாகக் கையாண்டு வந்தமையால், நம் தேசம் "அடையா நெடுங் கதவும் அஞ்சலென்ற சொல்லும்'' படைத்த புண்ணிய பூமி என்கிற பிரசித்த பெயரையடைய நேர்ந்தது. ஏராளமான உணவுப் பொருள்களை விளைவிப்போரும், இல்லை யென்னும் சொல்லை யறியாத ஈகையாளரும், குபேர சம்பத்துடைய தனாதிபரும், பேரறிஞருமாகிய மக்கள் வாழப்பெற்ற இந்தப் பரத நாடானது சகல வளங்களுந் தழைக்கப் பெற்று, பிற நாடுகளையும் ஆதரிக்குஞ் சக்திவாய்ந்து, எவரும் புகழும் பாக்கியத்தை யடைந்தது எதனால்? காலத்திற் பெய்ய வேண்டிய வானம் சுருங்காமையாலல்லவா?

 

தான வளம் சிறந்திருந்ததினாலன்றோ இத்தகைய வான வளத்தை நம் நாடு பெற்றது. வானத்துளி நோக்கி வாழும் பொருட்டு, நாம் தானவளத்திற் கண்ணுங் கருத்துமா யிருத்தல் வேண்டும். இந்த அரிய நோக்கத்தை நமது நாடு தன் இருதயத்தில் பசுமரத் தாணிபோல் பதியவைத்து, செய்கையிலும் காட்டி வந்தது.

 

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களை உலகின்கண் நிலை நிறுத்துவதற்குப் பரமாத்மாவின் கட்டளையால் ஏற்பட்ட மழை வளம் சுருங்காதிருக்கும் வண்ணம், யாகாதி சத்கிருத்தியங்களையும், நல்ல தான தருமங்களையும் நாம் செய்துவரல் வேண்டு மென்று புராண நூல்கள் பிடிவாதமாகப் பேசுகின்றன.

 

 மக்களின் உயிர்நிலை முதலிய சகல பொருள்களையுஞ் சுத்திகரிக் கவும், பசிப்பிணியை யொழித்தற்குரிய உணவுப்பொருள்களை விளை வித்துக் கொடுக்கவும், அவற்றைப் பண்படுத்தவும், அவையுண்ணப் படும்பொழுது தானும் ஓர் உணவுப்பொருளாய் உடனிருக்கவும் உதவுகின்ற அமுதம் வானநீரினும் வேறுண்டோ? உலோபியின் கைப்பொருள் இகபரவாசையற்ற யோகியின் கைப்பட்ட மாத்திரத்தில், பரிசவேதியிற் படிந்த லோகம் போல் எப்படிச் சுத்தியடைந்து தோஷரகிதமாகிறதோ அப்படிச் சமுத்திர நீரானது மேகத்தின் கைப்பட்ட மாத்திரத்தில் உப்புத்தன்மை யொழிந்து வான நன்னீ ராய் நமது நன்னாட்டுக்கும் பொன்னாட்டுக்கும் அமுதம் போலுதவு கின்றது. 'நீரே பிராணாதாரம்'' அல்லவா? ஆகவே, இவ்வித உயர்வையுடைய வானத்தின் ஆவசியகத்தை அறியாதார் அறியா தாரே. விரிந்த கடல் நீரும் சுகமடைதற்பொருட்டு இவ்வானத்தையே எதிர்பார்க்கின்றது.

 

இத்தன்மை வாய்ந்த வானஞ் சுருங்கினால் தானமுஞ் சுருங்கும். தானஞ் சுருங்கத் தவமுஞ்சுருங்கும்.


 "தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
 வானம் வழங்கா தெனின்''


 என்றார் முதற் பாவலர்.

 

வானஞ் சுருங்கிய காலத்தில் தானத்திற்கான நெல் முதலிய தானிய வகைகளேயன்றித் தவமுந் தங்காதாகும். உயிரானது உடலில் நிலைத்திருந்தால்தான் தவம் தங்கும். அது நிலைத்தற்கு ஏதாவது உணவேனும் ஜலமேனும் கொஞ்சம் அருந்தித் தீரவேண்டும். அந்த உணவுப் பொருளும் ஜலமும் வானமின்றேல் இல்லையாம். ஆகவே தவமும் தங்காதென்க.

 

தானம் தங்காமை பாண்டியனிடத்தும் தவந்தங்காமை கௌதமர் முதலிய மகரிஷிகளிடத்தும் காணலாம்.

 

சற்றேறக்குறைய இரண்டாயிர வருஷங்களுக்கு முன்னர் மதுரை மாநகரில் பாண்டியனொருவன் அரசுபுரிந்து வந்தான். அவன் கல்வி கேள்விகளிலும் பராக்கிரமத்திலும் நிபுணனாயிருந்தான். அநேகமாயிரம் வித்வ சிரேஷ்டர்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டு பாதுகாத்து வந்தான். அந்தக் காலத்தில் அவனுடைய தேசத்தில் நெடுநாள் மழை பெய்யாமையால் அவன் புலவர்களை ஆதரிக்கக் கூடவில்லை. அதனால் அரசன் அவர்களைப் பார்த்து மன விரக்கத்துடன்'' நீங்கள் எனது நாடு செழுமை பெறுமளவும் வேறெங்கேனும் செழித்துள்ள நாட்டைச் சேர்ந்திருந்து வாருங்கள்'' என்று சொல்லி எல்லோரையும் அனுப்பிவிட்டான். இதனால் தானம் தங்காமை வெளிப்படை. (இறையனாரகப் பொருள்.)

 

கௌதம ரிஷியைப்பற்றி நாம் கேள்வியுற்றிருக்கிறோம். இவர் அகலிகையின் பிராணபதி. முக்காலமு முணர்ந்த முனிவர் பெருமான். திருக்குறளில் நீத்தார் பெருமையைக் கூறவந்த நாயனார்

 

இவருடைய ஆற்றலை ஆங்கே எடுத்துப் பேசியுள்ளார். இந்த மகரிஷி தென்திசையிலுள்ள பிரமகிரியில் தவஞ் செய்து கொண்டிருந்தபோது பல வருஷங்கள் மழையில்லாதிருந்தது. அனேக உயிர்கள் பசிப்பிணியால் இறந்தொழிந்தன. தபோதனர் பலர் தவஞ்செய்ய முடியாமல் மனங்கலங்கினர். உடல் துடித்தனர். பல இடங்களிலும் பிரிவுப்பட்டுச் சென்றனர். இந்தக் காலத்தில் கௌதமர் மாத்திரம் நிலைகுலையாதிருந்து வருணனை நினைத்தார்.

 

வருணன் இவருடைய தவப் பெருமைக்குப் பயந்து இவர் முன் தோன்றினான். மகரிஷி அவனைக் கண்டு மழை வேண்டுமென்று கோரினார். அவனும் அவர் விருப்பத்திற்கிசைந்து என்றும் வற்றாத நீர்நிலை யொன்றை யளித்து விடைபெற்றுச் சென்றான். கௌதமர் அந்த நீர் நிலையினால் சந்தோஷமடைந்து சுகமுடன் வாழலானார். (ஞானசங்கிதை.)

 

இவ்விரண்டு சரித்திரங்களினாலும் வானஞ்சுருங்குமாயின் தானமும் தவமும் சுருங்குமென்பதை நாம் அறியலானோம். ஆதலால் வானஞ் சுருங்காதிருக்கத் தானம் வழங்கவேண்டும்.
 

இக்காலத்தில் செயற்கை வாசனையால் நம்மவர் பலர் நமது பூர்வீக ஆசாரங்களைக் கைவிட்டுத் தம் மனம் போல் நடக்கத் துணிந்து, தான தருமங்களைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாது வீணான டம்பாகாரத்தில் காலங் கழிப்பதை நாம் காண்கின்றோம். இது பற்றியே சரியான காலத்தில் பெய்ய வேண்டிய மழை வளம் குன்றி, அகால மழை பெய்து, நமக்குப் பெரும் நஷ்டத்தையும் பிராணாபத்தையும் உண்டு பண்ணி வருகிறது. இதை நாம் கண்கூடாகக் காணுவதால் இனியேனும் திருத்தமடைந்து நம் பெரியோர் கொள்கை களை அனுசரிப்போமாயின் சுகமடையலாம்.

 

பிறவிகள் பலவற்றுள்ளும் மானுடப்பிறவியே தலைமை வாய்ந்தது. அப்பிறவி கிடைப்பது மிகவும் அருமை; அப்படிக் கிடைத்த போதும் அங்கப் பழுதின்றி வருவது அதனிலும் அருமை; பழுதின்றி வரினும் வருமிடம் நீர்வளம் நிலவளமுள்ள உத்தம ஸ்தலமாகவும், குலம் குற்றமற்ற பாரம்பரியத்தை யனுசரித்ததாயும் அமைவது மேற்சொன்னவற்றிலும் அருமை; இவையெல்லாம் கைகூடினும் கல்வி நலம் சித்திப்பது அருமையினும் அருமை; அந்நலம் சித்தித்த விடத்தும் லௌகிக வைதிக முறைகளை யறிந்து இனிய சொல்வன்மையும், உரிய நல்லொழுக்கமும், அரிய தெய்வ பக்தியும் கொண்டு, குலவிளக்காய் நின்று, சுயநலத்தோடு பொதுநலத்தையும் சமமாகப் பாவித்து, ஒற்றுமையுடன் உழைத்து இசையை நாட்டுவது யாவற்றினும் அருமை.

 

இவ்வித அருமைக்குரிய பிறவியை எடுத்த நாம் அறநெறியைக் கைவிடலாகாது. அறநெறியாவது இட்டுண்டு வாழ்வதாம். "ஈதல் அறம்'' என்றனள் ஒளவைப்பிராட்டி. இந்த ஈதலுக்கே 'தானம்' என்பது மற்றொரு பெயர். இந்த தானத்தால் தான் வானம் கிரமமாகப் பெய்து வரவேண்டும்; நாடு செழிக்கவேண்டும்; ஒற்றுமை வளரவேண்டும்; மற்றுமுள்ள நலன்களெல்லாம் சித்திக்க வேண்டும். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் இவ்வுண்மையைக் கடைப்பிடித்தொழுகத் திடமான சித்தத்தைக் கொள்வோமாக. வான தானங்களின் மகத்துவம் முடிவற்றதாகலின் இப்போது இத்துடன் நிறுத்துவோமாக. தானத்தைப்பற்றி வானத்தைப் பெற எல்லாம் வல்ல பகவான் திருவருள்புரிவானாக.


 ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜுன் ௴

 

 

 

 

No comments:

Post a Comment