Monday, September 7, 2020

 

வீட்டிலேயே நாட்டம்

(வா. ராமலிங்கம்)

 

உலகில் ஒவ்வொரு உயிரினங்களும் தங்கி வசித்தற்கு ஒரு இடத்தை அமைத்துக்கொள்கின்றன. சிற்சில உயிர்கள் புதர், மரம், செடிகளிலும் வசிக்கின்றன இவற்றுள். அறிவு விசேடம் பெற்ற மக்களாகிய நாம் தங்குதற்குரிய பலவசதிகளோடு கட்டி யமைத்துக் கொள்ளுமிடம் வீடு எனப்படும்.

 

ஒவ்வொருவரும் பொழுது புலர்ந்து கதிரவன் தோன்றியதும் புறத்தே சென்று தத்தம் தொழில் முறைகளைக் கவனித்துக் கருத்துடன் செய்கின்றனர். ஆனால் பொழுது சாயுங்காலம் அதாவது பகற்பொழுது நீங்கினவுடன் வீட்டிற் சேர்வதையே விரும்புகின்றனர். அந்திப்பொழுது கிட்டியதும் தங்களை யறியாமலே மனதினில், 'வீட்டுக்குப் போக நேரமாகி விட்டது' என்ற எண்ணம் உதிக்கின்றது. இவ்வெண்ணம் எழுந்ததும் முறையே கவனித்துக்கொண்டிருந்த பிற வேலைகளிலும் மனம் சரியாய்ச் செல்வதில்லை. ஏனெனில் தாமிருப்பது உழைக்குமிடம். அந்தியிற் சென்று அமரு மிடமாகிய வீடு அவ்வுழைப்பின் களைப்பை மாற்றி இளைப்பாறி இன்புறு தற்கான இடமாதல் பற்றி என்க.

 

இவ்வாறே ஒரு மனிதனின் பிறப்பை அவன் வினைவயத்தால் உழைக்கப்புகுந்த புலர்ந்த காலமாகவும் அவனது ஆயுள் அவ்வுழைப்பின் முடிவாகிய அந்தி காலமாகவும்
கருதலாகும். அப்படிக்கெண்ணுங்கால் பகற் பொழுதில் உழைப்புக்குப் புறம் போந் தவன் எவ்வாறு தனக்குற்ற பணியை வெகு கவனத்துடன் செய்து முடிப்பனோ அப்படியே பிறப்பைப் பெற்ற ஒருவன் அது முடித்தற்கு முன் தான் செய்யவேண்டிய கடமைகளைத் தெளிந்து செய்து முடிக்கவேண்டும். ஒருவன் தனது தினத் தொழிற் கடமையை ஒழுங்குறச் செய்தாற்றான் அதனா ஊதியங் கொண்டு வீட்டில் இளைப்பாறி இன்பமடைகிறான்: அதுபோன்று வாழ் நாளாகிய நற்பொழுதிற் புரியவேண்டிய கடமையாகிய நல்லறங்கள் நாடி வழுவறச் செய்து புலை, கொலை, களவு தவிர்ந்து நன்னிலைக்கண் நின்றால் அந்த நற்பொழுதின் அந்திக்காலமான வேளையில் மோட்சமாகிய வீட்டில் நாட்ட மேற்படும். செய்த நல்வினைப் பேற்றுக்கேற்ப அது சித்திக்கும் என்பது ஒரு தலை. சித்திக்கவே மாலைப் பொழுதில் வீட்டி லேற்படும் நாட்டம் மகிழ்வைத் தந்து உழைப்பின் களைப்பை மாற்றுவ தொப்ப மோட்ச வீட்டின் நாட்டம் முட்டின்றிக் கிட்டிய போது பிறப்பிறப்பென்னும் பெருந் தொல்லையாகிய வினைநீங்கி பூரண இளைப்பாறுதலான இன்பநிலை சித்திக்கும்.

 

எனவே, வந்த வேலை முடிந்ததும் அந்தியில் வீட்டை நாடுவபோல, நம் வாணாள் முடிவிற்குள் மோட்சமாகிய வீட்டில் நாட்டமுடையவராய் அதையடைதற்கான நல்லறங்களை உடனே செய்வோமாக.

 

ஏனெனில், வாழ்நா ளெல்லை இவ்வளவினதென்று யாரும் அறியக்கூடிய தல்லவாகலானும் ஒல்லும் வாயெல்லாம் அறவினையோவாதே செல்லும் வாயெல்லாம் செய்தல் தகுதியாதலாலும் "காலைச் செய்வோ மென்றதைக் கடைப்பிடித்துச் சாலச் செய்வாரே தலைப்படுவார்" ஆகலானும், "ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும், நன்றும் இன்றே செய்யவும் வேண்டும், இன்றும், இன்னே செய்யவும் வேண்டும்" என்பதாலும் என்க.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment