Monday, September 7, 2020

 

விளங்குகிறதா?

(வீ. செல்வராஜ்.)

மேருமலையை வில்லாக மாற்றினேன். தேவர்களை அதிற் தொடுக்கும் அம்புகளக மாற்றினேன். இன்னும் என்னென்னமோவற்றை என்னென்னவாகவோ மாற்றினேன். எதற்காக மாற்றினேன்? காரண மில்லாமலில்லை. திரிபுரத்தை அழிக்கத்தான்!

அதிருக்கட்டும், தேவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்கள் வசிப்பது தேவலோகம். அவர்களின் அரசன் தேவேந்திரன். அவர்கள் பாருங்கள். – தாங்கள் என்னென்னமோ வீரப் பிரதாபங்களை யெல்லாம் செய்து விட்டதாகப் பெருமை கூறுவார்கள்; எவனாவது ஒரு அரக்கன் ஏதாவது செய்து விட்டால் போதும் - அவனோடு சண்டை செய்வோம் - சாவோம் அல்லது பிழைப்போம் என்பது கிடையாது. உடனே,
''ஐயோ காப்பாற்று, எங்கள் கூட்டம் போச்சு, ஈசுவரா, மால்மருகா, பிரும்மதேவா!" என்று அலறிக்கொண்டு ஓடி வருவார்கள். அந்த மாதிரியே இப்போதும் என்னிடம் வந்தார்கள்.

அப்போது பார்வதியோடு மனஸ்தாபமாக (அவ்வளவு பெரிய சண்டையல்ல-சின்ன ஊடல் விஷயம் தான்) நான் இந்தப் பக்கமும், அவள் அந்தப் பக்கமுமாகத் திரும்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அப்போது என் மனம் உண்மையாகவே சிறிது வேதனைப் பட்டுக்கொண்டுதானிருந்தது. அந்தச் சமயத்திற்றான் "குய்யோ முறையோ' வென்ற பெருத்த இரைச்சல் கேட்டது. சிவபூஜையில் கரடி குறுக்கிடுவது என்பது இதுதான்.
எனக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. சிறிது நேரத்தில், நந்திப் பயல் வந்து, “எசமான், தேவர்கள் வர் திருக்கிறார்கள். நாரதரும் வந்திருக்கிறார். தங்களைப் பார்க்க வேண்டுமாம்'' என்று வணங்கினான்.

எனக்கிருந்த கோபத்திலே இந்தக் கைலாயத்தையே ஒரு உருட்டு உருட்டிவிட்டு, அதோடு இந்தத் தேவர்களையும் சேர்த்து ஒரேயடியாய் அழித்து விடுவோமா என்று கூட எண்ணினேன். ஆனால் என் பார்வதி! அவளும் அதோடு அழிந்து போவாளல்லவா! அது ஒரு பக்கம் பயம்; “இப்போது பார்க்க முடியாது'' என்று சொல்லி அனுப்பி விடுவோமென்றால், அந்தக் கிராதகன் நாரதப்பயல் இருக்கிறானே - அவன் எல்லோரிடமும் நம் சங்கதியைச் சொல்லி ஊர் சிரிக்க வைத்து விடுவானென்று இன்னொரு பக்கம் பயம். ஒன்று தோன்றாமல், 'வந்து தொலையச் சொல்லு'' என்று கோபமாய் நந்தியிடம் சொன்னேன்.

நந்தி முட்டாள் என்ன செய்து விட்டான் - நான் சொன்னது போலேயே, "வந்து தொலைவீர்களாம்" என்று சொல்லி விட்டான்போலிருக்கிறது. அதுதான், தேவர்களுக்கு “லீடர்" ஆன அந்த நாரதன் வந்ததும் வராததுமாய். “ஏன் சுவாமி, வந்து தொலையச் சொன்னீர்களாமே! தேவரீர் இப்படி வாக்கு விடலாமா?" என்று நாசுக்காகக் கேட்டு விட்டான். அப்போதுதான் கோபத்திலே நான் சொன்னதின் கெடுதல் தெரிந்தது. இதற்கு எப்படியும் பதில் சொல்லி யாக வேண்டும். இல்லா விடில் இந்த நாரதன் நம்ம 'குட்டை' உடைத்து விடுவான் பாருங்கள். எப்பொழுதும் நாரதனைக் கண்டால் உள்ளூரப் பயந்தான். அந்த அகத்தியன் சில நாட்களாக எனக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு
வருகிறான். சிலேடைப் பகுதியை நேற்றுத்தான் சொல்லிக் கொடுத்திருந்தான். அதனால் அந்த ஆயுதத்தைத்தான் உபயோகிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “அப்படி எந்த முட்டாள் சொன்னது? எங்கே அந்த நந்திப்பயல்? 'வந்து தொழச் சொல்லு' என்றால் 'வந்து தொலையச்' சொன்னதாகச் சொல்லலாமா? அந்த அகத்தியனிடம் சொல்லி இவனுக்கும் 'ல' கர 'ழ' கர பேதங்களைச் சொல்லித்தரச் சொல்லவேண்டும். முட்டாள் பயல்” என்று ஒருவாறு முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு, சொல்லி நாரதனை ஏமாற்றி விட்டேன். இதைக்கேட்ட பார்வதியுங்கூட கொல்லென்று சிரித்து விட்டாள். இந்த சந்தர்ப்பத்தை விடாது, (பார்வதியை சமாதானப் படுத்தவேண்டாமா?) நானும் சேர்ந்து சிரித்தேன். அவள் சிரிக்க, நான் சிரிக்க, நாரதன் சிரிக்க, தேவர்கள் சிரிக்க, இந்தச் சத்தத்தைக் கேட்டு என்னவென்று பார்க்கவந்த அந்த நந்தி (காரணம் தெரியாது) சிரிக்க, - இந்தமாதிரி கூட்டத்தோடு கூட்டமாய் நானும் பார்வதியும் மறுபடியும் பேசிக்கொண்டோம்.

எனக்கும் உண்மையாகவே சந்தோஷம் வந்து விட்டது. தேவர்கள் வந்தது நல்ல வேளையாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் நானும் பார்வதியும் ராசியாவது எப்படி? இவ்வளவு சந்தோஷத்திலே தேவர்களுக்கு இரங்கா திருப்பேனா? உடனே, “என்ன நாரதா! என்ன விசேஷம்? எல்லோரும் ஏதோ சந்தோஷத்திலே பூரித்துக் கொண்டிருக்கிறாப்
போலிருக்கே!'' என்றேன்.

"நன்றாய்ச் சொன்னீர்கள்? நாங்கள் படுகிற அவஸ்தை என்ன! -
இதிலே பூரிப்பு வேறா? ஏது, இன்னும் தேவரீர் முகக்குறிப்பை அறிந்து கொள்ள முடியவில்லையே'' என்று ஏளனமாய்ச் சொன்னான் நாரதன். இப்படியே நேரம் போனால் காரியம் கெட்டுப்போகும் என்று பயந்த தேவேந்திரன், குயுக்தியாக, “கைலாச வாசா! திரிபுர அரக்கர்கள் செய்யுங் கொடுமை சகிக்க முடியவில்லை. தேவரீர் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்!" என்று விஷயத்தை பட்டென்று விளக்கினான்.

நானும் நாரதன் சொன்னதைக் கேட்காதவன் போன்று, "ஏன், பிரம்மாவிடம் போகிறது தானே?' என்றேன்.

''அங்குதான் முதலில் போனோம். அவர், ''ஐயையோ, அந்த அரக்கர்களைப்பற்றிக் கேட்டாலே நடுக்க மெடுக்கிறது; இந்தக் காரிகம் என்னாலாகாது-வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டார்" என்றான் இந்திரன்.

"பூ! இவ்வளவுதானா பிரம்மன் சக்தி! உம். அப்புறம் உங்கள் திருமால் இருக்கிறானே?" என்றேன்.

“இருக்காமலென்ன? அங்கும் போனோம், அவரும் இதே போன்று தான் சொல்லிவிட்டார்'' என்றான்.

''என்னென்னமோ, ராவணன், இரண்யன் சூரன்-கீரன் முதலியோரை வென்றதாகச் சொல்லுகிறார்கள் - இதற்கு இப்படிப் பயப்படுவானென்று நான் கனவிலும் நினைக்கவேயில்லை" என்று நான் ஏளனமாய்ச் சொல்லிக் கொண்டு போவதைத் தடுத்து, “ஆமாம் உங்கள் வெளிச்சம் தெரியாதாக்கும். சும்மா அம்மட்டோடு நிறுத்துங்கள்" என்று ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டாள் பார்வதி தன் அண்ணனுக்குப் பரிந்துகொண்டு. நான்
யாரிடம் வழக்கடித்தாலும் பார்வதியிடம் வந்து செய்வதென்றால் என்னால் முடியாது. அதிலும் சற்று முன்புதான் சமாதான மாயிருக்கிறோம். அதற்குள் இந்த வம்பு எதற்கென்று அவள் சொன்னதைக் கேளாதவன் போன்று, தேவர்களைப் பார்த்து, “சரி, இனி ஆகவேண்டிய கதை சொல்றுங்கள்" என்றேன்.

"ஆக வேண்டியதென்ன- தாங்கள் தான் அரக்கர்களை அழிக்கவேண்டும். இதைச் சொல்லிச் சிபார்சு பண்ணவே தேவர்கள் என்னை அழைத்து வந்தனர்'' என்றான் நாரதன். நான் ஏதோ யோசிக்கிறவன் போன்று சற்று மௌனமா யிருந்துவிட்டு, “விஷயமோ பெரியதாய்த் தோன்றுகிறது. திருமால், பிரம்மாவும் கூட மாட்டோமென்று சொல்லி விட்டனர் என்று நீங்களே சொலுகிறீர்கள். ஆகையினால் என் ஒருவனால் மட்டும் இக் காரியமாகாது போற் தெரிகிறது. ஆதலால் நீங்களும் உதவிக்கு வர வேண்டும்" என்றேன். அவ்வளவுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தார்கள். சற்றுநேரம்
சற்றுநேரம் ஏதோ குசுகுசுவென்று பேசினார்கள். கடைசியாக, என்ன நினைத்தார்களோ, எல்லோரும் சரியென்று ஒப்புக் கொண்டார்கள்.

அப்போதுதான் நான் முன் சொன்னதுபோல் அவர்களை ஒவ்வொரு ஆயுதமாக மாற்றிக்கொண்டு திரிபுரம் வர்து சேர்ந்தேன். இனிச் சண்டை தொடங்க வேண்டியது தான். கோட்டையைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமா யிருந்தது. அரக்கர்களோ பெரும் மூர்க்கர்கள். எனக்கோ யோசனை பலமாக வந்து விட்டது. சட்டென்று ஒரு வழி தென்பட்டது.

“தீயைத் தீயினால் அவிக்க முடியுமா? அதற்குத் தண்ணீர் வேண்டும். மிருக பலங் கொண்ட இவ் வரக்கர்களை பலாத்காரத்தால் வென்றால், அதில் இன்னொரு பெரிய பலாத்காரம் ஜனிக்கும். ஹிம்சைக்கு அறிம்சையே விரோதி' என்று எண்ணியவனாய், என் ஆயுத பலத்கையம், கோபத்தையும், கொடூரத்தையும் மறந்து என் முழு அன்பும், ஜீவகாருண்யமும், அஹிம்சையும் ததும்ப அக் கோட்டையைப் பார்த்து ஒரு புன் சிரிப்புச்
சிரித்தேன். என்ன ஆச்சரியம்? கோட்டை சாம்பலாய் எரிந்து விட்டது, எனக்கு வந்த சந்தோஷத்திலே ஒரு திள்ளுத் துள்ளினேன்.

அவ்வளவுதான். பொத்தென்று ழே விழுந்தேன் நான் படுத்திருந்த கட்டிலிலிருந்து. அடடே, எல்லாம் கனவுதானா? ஆமாம் கனவுதான். நான் திரிபுரத்திலில்லை. என் படுக்கை அறையில் தானிருக்கிறேன். நான் கண்டது கனவுதான் - ஆனால் வெறுங் கனவல்ல.
அது என் கற்பனைக் களஞ்யத்தைக் கிளறி விட்டுவிட்டது. “உலகம் போற்றும் மகாத்மா காந்தியடிகளின் அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரஹத்திற்கும், சிவன் அன்று சிரித்தவுடன் திரிபுரம் அழிந்ததற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?'' என்ற கேள்வியைக் கிளப்பி விட்டு விட்டது. கனவு கண்ட நான் இக் கற்பனையில் இறங்கி யுள்ளேன். இன்னும் எனக்கு விளங்க வில்லை. தங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?

ஆனந்த போதினி – 1942 ௵ - டிசம்பர் ௴

 



No comments:

Post a Comment