Monday, September 7, 2020

விதுரர் விருந்து 

இதிகாச ரத்தினமென்றும் ஐந்தாம் வேதம் என்றும் சிறப்பித்துக் கூறப்படும் பாரதத்துள் பல உத்தமசிகாமணிகளின் வரலாறுகளும் சரிதங்களும் விளங்கித் திகழ்கின்றன. பாரத கதையின் மேன்மைக்கு இவைகளே சிறந்த கருவிகளுமாகும். நாரின் இடையிடையே தொடுக்கப் பட்ட மலர்போல் அவ்வுத்தம புருஷர்கள் பாரதத்துள் பிரகாசிக்கின்றனர்.
அவர்களுள்ளும் தலைசிறந்து விளங்குவோர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பீஷ்மர் விதுரர் யுதிஷ்டிரர் என்பவர்களே யாவர். அவர்களுள் விதுரர் என்பவரின் வரலாற்றைச் சிறிது வரைவாம்.

 

பீஷ்மரின் மாற்றாந்தாயாகிய சத்தியவதி (பரிமளகந்தி) தன் மகனாகிய விசித்திரவீரியன் விண்ணுல கெய்திய பின்னர் மண்ணாள மக்களின்மையால் வேதவியாச மகரிஷியைக்கொண்டு புத்திரப் பேறடையக்கருதி விசித்தி வீரியன் மனைவிகளாகிய அம்பிகை யென்பாளையும் அம்பாலிகை யென்பாளையும் அதற்கிணங்கச் செய்தனள். அவ்வாறே அம்பிகையும் அம்பாலிகையும் இருபுதல்வரை யீன்றனர். ஆனால் அவர்களுள் முன்னவன் குருடனாகவும் பின்னவன் பாண்டு நோயுடையனாகவும் பிறந்தனர். அவர்களே திருதராட்டிரனும் பாண்டு மன்னனும். இவ்விருவரும் அரசாளும் தன்மையற்றவர்களென் றெண்ணிய சத்தியவதி அம்பிகையால் மற்றோ ரரும்புதல்வனை யளித்தல் வேண்டு மென்றருந்தவ வியாதனை வேண்டினாள். ஆனால், அம்பிகை அம்முனிவர்
பாலருவருப்புற்றன ளாகலின், தனக்குப் பதிலாகத் தன் தோழியை நன்றாயலங்கரித் தனுப்பினள். ஆகவே, அவள் பால் ஓர் தனயன் தோன்றினன். அவனே விதுரன். தோழியின்பால் தோன்றினவராகலின் இவ்விதுரர் அரசாளு முரிமை பெறாராயினர். எனினும், அரசகுமாரர்களு ளொருவராகவே மதிக்கப்பட்டு வந்தனர். இவர் இயம தருமனுடைய அமிசமாகப் பிறந்தவரென்று பாரதம் பகர்கின்றது. அதன் வரலாற்றையும் சிறிது கூறுவோம்.

மாண்டவியர் என்னும் முனிவரொருவர் ஒரு நகரை யடுத்த சோலையில் பர்ணசாலை யொன்றமைத்துக்கொண்டு தவம் புரிந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருநாள் கள்வர் சிலர் அரசன தரண்மனையிற் களவாடி யோடிச் செல்வோர் தம்மைக் காவலர் துரத்தி வருவதை யறிந்து பயந்து அம்முனிவரது பன்னசாலையினுட் சென்று பதுங்கி யொளித்தனர். அவர்களைப் பிடிக்க வந்த அரச னேவலர் ஆண்டமர்ந்திருந்த முனிவரை யண்மி வினவ, அவர் ஒன்றுங் கூறாது சும்மா விருந்தனர். உண்மையில் அவர் அவர்கள் வினவியதையும் அறியார். தவத்திலிருந்தா ரன்றோ! காவலர் அவ்வுண்மையை யறிந்தனரேனும் சந்தேகங்கொண்டு உள்ளே நுழைந்து நோக்கிப் பதிவிருந்த கள்வரைப்பற்றிச் செல்லும் போது அம்முனிவர் மீதும் ஐயமுற்று அவரையும் அழைத்துச் சென்று அரசன்பால் விடுத்தனர். அரசன் அவரைக் கழு வேற்றுமாறு கட்டளை யிட்டனன்.

 

பின்னர் அவர் 'கள்வரல்லர்; கடுந் தவசியே' என்பதை யறிந்த அவ்வரசன் அம்முனிவரைக் கழுவினின்று மிறக்கி விட்டான். கழுவினின்றும் விடு பட்ட முனிவர் 'எனக்கு இத்துன்பம் எய்திய தன் காரணம் என்ன? எந்தப் பாவத்தால் இது நேர்ந்தது? இவ்வுண்மையை யறியவேண்டுமென்று நிச்சயித்து எமனிடம் சென்று வினவினார். இயமன் 'சுவாமி! நீர் சிறுபருவத்தில் தும்பி யொன்றைப்பற்றி அதன் வாலில் முள்ளைச் செருகி விட்டீர்கள். அதன் பயனாக இது நேர்ந்தது' என்றான். முனிவர் 'அப்போது எனக்கு வயது என்ன? அறிவற்றபின் யான் இத்தகைய தவறுகளைச் செய்ததாகத் தெரியவில்லை. அறியாப் பருவத்தே செய்திருத்தல் வேண்டும். ஆகவே, அப்பொழுது யான் எவ்ளவு வயபதுடையவனா யிருந்தேன்? என்று கேட்க 'பத்து வயதில் உன்பால் அக்குற்றம் நிகழ்ந்தது' என்று தருமன் சாற்றினான். 'தருமனே! நன்று தீதறியாக் காலத்திற் செய்த குற்றத்தினிமித்தம் இதண்டனை யியர்றுதல் முறையன்றே. பதினான்கு பிராயத்திற்குப் பின் ஆற்றும் பாவச்செயல்களின் பயனை யனுபவிக்கச் செய்தலே முறையாம். அங்ஙனமாக, நீ இங்ஙனம் செய்தாய். ஆதலின் நீ மண்ணுலகத்தில் தாழ்ந்த குலத்திற் சென்று பிறக்கக் கடலை' எனச் சாபமிட்டுச் சென்றார் முனிவர். அதன்படி எமன் இவ்விதுரனாகப் பிறந்தான் என்பது பாரதத்தின் கருத்தாம்.

 

விதூர் திருதராட்டிர மன்னனுக்கு அமைச்சனாயமர்த்தப்பட்டார். இவர் தோழியின் வயிற்றிற் பிறந்தவரென்று முதலிற் சொல்லப்படினும், துரியோதனன் இவர் வேசியின் மகனென். கூறுகிறான். 'விலைமாதர்கள் முதலில் தங்களுக் கொருவன் பொன்னை மிகுதியாகக் கொடுப்பினும், அதினும் மிகுதியான திரவியத்தை வேறொருவன் கொடுத்தால் அவனிடமே அன்பு காட்டுவர். அத்தகைய பொதுமடந்தையின் வயிற்று தித்தோ னல்லனோ இவ்விதுரன்!' என்று துரியோதனன் இழித்துரைக்கிறான். ஆகலின் விதுரர் ராஜஸ்திரீகளிடம் தோழியாயிருந்த ஓர் விலைமாதின் புத்திரர் என்பது அறியக் கிடக்கின்றது.

 

பாரதகதை முழுவதையும் ஊன்றி நோக்கின் விதுரரது உத்தம குணம் வெளியாகும். அரசகாரியங்களைத் தம் பிரியத்தின்படி செய்யத் தகுந்த சுதந்தரத்தை இவர்பெற்றிருக்கவில்லை. திருதராட்டிரன் அரசு புரிந்த வரையில் இவர் செல்வாக்கு மிகுந் திருந்தது. ஆனால் அவன் மகன் அரக்கொடியோன் தலையெடுக்கத் தொடங்கிய பின் இவரது செல்வாக்கை அவன் ஓங்க விடவில்லை. மந்திரியாக இவர் இருந்தமையின் அவர்கள் சொற்படியே எல்லாக் காரியங்களையும் செய்யவேண்டிய நிலைமையிலிருந்தார். எனினும் தக்க சமயங்களில் அவர்கள் கு றங்களை பெடுத்துக்காட்டி, இடித்துப் புத்திமதி புகட்டுவதில் அவர் சிரிதும் பின் வாங்கியதேயில்லை. 'எது எப்படியாயினும் நமக்கென்ன? அரசன் தயவைச் சம்பாதித்துக்கொண்டு நாம் சுகமாக வாழலாம்' என்றெண்ணும் துர்க குணம் அவரிடம் அணுவளவும் இருந்ததே யில்லை.


சமயம்வரின் இடித்துரைப்பார்
      தக்கவழி செலச் செய்வார்
இமயவர் தம் உலகுறவம்
      இருளுலகம் பகையுமாய்
அமையவறி வுறுத்துவார்.


எனக் கூறப்படுகின்ற ஆன்றோர் இயல்பிற்கேற்ப விதுரர் துரியோதனனுக்கும் அவன் தந்தையாகிய அந்தகனுக்கும் கூறிய புத்திமதிகள் இவ்வளவவ்வளவன்று.

 

தமது வார்த்தைகளை யேற்றுக்கொண்டு நல்வழிப்படாதவர்களா யிருந்தும் திருதராட்டிரன் முதலியோரை விட்டுப் பிரிய இவர் மனமிசைந்திலர். பிரிந்து போதலென்பது நண்பருக் கேற்ற செயலாகுமேயன்றி மந்திரித்தொழிலை மேற்கொண்டுள்ள தாம் பிரிந்து போதல் போற்றத்தக்க செயலன்றென்பது அவர் கருத்துப் போலும். உத்தமெனொருவன் தனது நண்பன் தீயநெறியிற் செல்லுங்கால் அவ்வாறு செல்லவிடாமல் தடுக்கத் தன்னாலான
முயற்சிகளை யெல்லாம் செய்தல் வேண்டும். அப்பொழுதும் அவன் திருந்தானாயின் அவனை விட்டுப் பிரிதலே நலமாகும். ஆனால், நம் விதுரரோ அத்தகை நிலையில் இல்லை. பெரிய அரசனோ தமயன். அவரிடத்தில் அமைச்சராயிருந்து அவர் அன்னத்தையுண்ட விதுரர் அறியாமையின் காரணமாகவுண்டாகும் தவறுகளைத் திருத்திக்கொண்டு உடன் உறைதலன்றி கைவிட்டுச் செல்லுதல் தகுதியன்றெனக் கருதியே அவர்களுடன் இருந்திருத்தல் வேண்டும்.

 

எனினும், ஒருமுறை தம் தமயனை விட்டுச் சென்றும் விட்டார். தாம் கூறிய அறவுரையை அசட்டை செய்ததோடு தம்மையும் கடிந்து பேசிய காரணத்தால் காவலனை வெறுத்துக் கானகமுற்றார். ஆயினும், உடனே தம் முன்னவனாகிய மன்னவன் ஓராளிடத்தில் சொல்லி யனுப்பிய சமாதான வார்த்தைகளைக் கேட்ட வளவில் சின மொழிந்து திரும்பினார். "நீர் கிழிய வெய்த வடுபோல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்' என்பது உண்மையுரை யன்றோ? சகல நற்குணங்களும் ஒருங்கே யமையப்பெற்ற விதுரர் விற்போரில் இணையற்ற வீரர்; அசகாய சூரர். இவர் பாண்டவர்களுக்கு எதிரில் துரியன் பக்கத்தில் நின்று வில்வளைப்பாராயின் அவருடன் சமானமாக நின்று பொரத்தக்க வீரரெவரு மிலர் என்பது திண்ணம். அவர் வில்லின் வல்லமைக்கு எதிர் நிற்கத்தக்க வில் விசயனது காண்டீபத்தையன்றிப் பிறிதொன்றில்லை. இராசத் துரோகம் நம்பிக்கைத் துரோகம் முதலிய தீக்குணங்கள் சிறிது மில்லாதவராகலின் விதுரர் துரியன் பக்கலில் நின்று பாண்டவருடன் அமர் புரியுங்கால் அவரை வெல்லுதல் அரிதாகும் என்பதை யறிந்தே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தந்திரமாக விதரர் சண்டை க்குச் செல்லாததவாறு செய்து விட்டனர். அவர் சிறந்த ராஜதந்திரி யன்றோ?

 

இதுகாறுங் கழறியவற்றால் விகார் இழிகுலத் தாரென்றும், சகல நற்குணங்களும் வாய்ந் தவரென்றும், 'உண்ட வீட்டிற் கிரண்டகம் செய்யலாகாது' என்னும். நீதிமொழியைக் கடைப்பிடித்துச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கவே எவ்வளவோ நன்மதி கூறியும் ஏற்றுக் கொள்ளாத அரவக்கொடி யோன்பா லிருந்தனரென்றும், தன்னயஞ் சிறிது மில்லாதவரென்றும், ராசநீதிகளை நன்குணர்ந்தவரென்றும், அமர் புரியும் ஆற்றலில் ஆண்சிங்கம் போன்றவரென்றும் அறிந்தோம்.

 

இவ்வளவேயோ! அவர் கடவுள் பக்தி மிகுந்தவரென்றும் அந்த பக்திக்கு அடிப்படையான பற்றின்மை (நான் எனது என்னும் அகப்பற்று புறப்பற்றுக்களில்லாமை) அவரிடம் அடைந்திருந்தது என்றும் அறியவேண்டியவர்க ளாகின்றோம்.


"அற்றது பற்றெனில் உற்றது வீடு."


"பத்துடை அடியவர்க் கெளியவன்
பிறர்களுக் கரிய வித்தகன்.''


என்று நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளியபடி, அவனையே பற்றாகப்பற்றிப் பிறபற்றுக்களை யொழித்த அடியார்களுக்குப் பகவான் எளிதிற் கிடைக்கும் என்பது பெரியோர்களின் அபிப்பிராய மல்லவா?


"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."


என்று பொதுமறையும் புகல்கின்றதே.

 

ஆகவே, அத்தகைய பற்றற்ற தன்மையில் “தாமரையிலைத் தண்ணீர் போல் சகத்தோடுங் கூடி வாழ்ந்து" பகவானிடத்துப் பக்தி பூண்டொழுகிய பரமபாகவத சிரோமணியாகிய விதுரர் பகவானருளைப் பரிபூரணமாகப் பெறுதற்குப் பாத்திரராயிருந்தா ரென்பதில் வியப்பொன்றுமில்லை யல்லவா?

 

‘பார் தரும் கருத்து பாம்புக்கொடியுடைய பார்த்திபனுக்கு உண்டோ இல்லையோ?' என்பதைப் பார்த்துவரும் பொருட்டுப் பாண்டவர்க்காகத் தூது சென்ற பகவானை அத்தின புரியில் ஆன்றோர் பலர் எதிர்கொண்டழைத்துச் சென்றனர். வீடுமர் துரோணர் கிருபர் விதூர் ஆதியோரே அவர்களுள் முக்கியமானவர்கள். அரசவீதியில் செல்லும்போது அரிவாசு தேவன் ஆகாயத்தை யளாவும்படி உயர்ந்திருந்த மாடமாளிகைகளைக்ணுற்று 'இது யாருடையது? இது யாருடையது?' என்று கேட்டுக்கொண்டே சென்ற பொழுது, அருகிற் செல்வோர் 'இது என்னுடையது' 'இது என்னுடையது' என்று இயம்பிக் கொண்டே சென்றனர். அவ்வாறு செல்லுங்கால் விதுரர் வீடு வந்தது. அதனையும் அப்படியே கேட்டார் கிருஷ்ணன். அப்போது விதுரர் எதிரில் நின்று 'பெருமானே! இது தங்களுடைய திருமாளிகை' என்று பணிவுடன் பகர்ந்தனர். அவ்வளவில் பகவான் அங்கே தானே நின்று அப்படியா! இந்த நகரத்திலும் எனக்கொரு வீடு இருக்கின்றதா? அவ்வாறாயின் யான் இங்கேதானே தங்குகின்றேன்' எனச் சாற்றி தம்முடன் வந்தோரனைவரையும் விடை கொடுத்தனுப்பி உள்ளே சென்றார்.

 

இவ்விடத்தில் விதுரரது பற்றற்ற தன்மை நன்கு புலப்படுகின்றது. மற்றவர்களெல்லோரும் 'எனது எனது' என்று சொன்னது போல் விதூர் என் சொல்லவில்லை! 'மமதை' அவரிடம் இல்லாமையே அதற்குக் காரண மென்பதைத் தவிர வேறென்ன காரணம் சொல்வது! மமதை இல்லாமலிருக்க வேண்டுமானால் அகந்தை இல்லாமலிருக்க வேண்டும். 'நான்' என்னும் அகந்தை யிருக்கு மிடத்தில் தான் 'எனது' என்னும் மமதையும் மாறாது குடி கொண்டிருக்கும். அகந்தை யொழிந்த விடத்துத்தான் அதன் காரணமாயுண்டாகும் மமதையும் ஒழியும். இது நோக்கியே தாயுமானாரும்,


"எத்தனை விதங்கள் தான் கற்கினும் கேட்கினும் என்
      இதயமு மொடுங்கவில்லை
யான் என்னும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை
      யா தினு மபிமானம் என்
சித்தமிசை குடிகொண்டது.”


என்று புகன்றார்.

 

அத்தகைய பற்றற்ற விடமே பகவான் குடிகொள்ளுதற் கேற்ற விடமாம் என்பதே ஆன்றோர் துணிபாகலின், பகவான் விதுரரிடத்திலே தங்கினார். அஃதன்றோ அவர் தங்குதற்குரிய விடம்! அதைத் தவிர வேறிடம் ஏது?

 

பகவான் தம் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தார் என்பதை நினைக்குந்தோறும் ஆனந்தக்கடலு ளாழ்ந்து கரையேற வறியாத விதுரர் ஆடினார், பாடினார், படியில் விழுந்தார், அடிகளைச் சிரத்திற் சூடினார். சாவாமருந்தை தேவர்களுக்கருளிய மாயோன் விருந்து வந்தானென்றுருகினார். "சுவாமி! தேவதேவா! தங்கள் திருவடி பொருந்த இச்சிறு குடிசை என்ன தவம் செய்ததோ! இது தாங்கள் முன்னே கண் வளர்ந்தருளிய பாற்கடலோ! அல்லது சேஷசயனமோ! அல்லது ஆலிலையோ! அல்லது வேதத்தின் ஆதியோ! என்னவென் றிசைப்பேன்" என்று ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இறப்பையும் பிறப்பையும் ஒழித்தார்.

 

இவ்வாறு துதித்த பின்னர் பகவான் பசியோடிருப்பாரே என்று ஏற்றுக்கணக்கான சமையற்காரரை யழைத்து அறுசுவை யுண்டியை ஆயத்தஞ் செய்யுமாறு ஆஞ்ஞாபித்தார். அதற்குள் பகவான் பக்தராகிய விதுரர்க்கு சதுர்ப்புஜங்களோடு தரிசனந் தரல் வேண்டுமெனத் திருவுளங்கொண்டு "விதுரரே! எனக்குப் பசி மிகுதியா யிருக்கிறது" என்றார். விதுரர் "சுவாமி! சிறிது பொறுத்தருள வேண்டும். இதோ ஒரு நொடியில் தயாராகி விடும்'' என்றார். பகவான், "இல்லை இல்லை, முடியாது, இப்பொழுதே ஏதேனும் சாப்பிடவேண்டும். நீ சாப்பிடுவதற்காகத் தயாரித்து வை வைக்கப்பட்டிருக்கும் நொய்க்கஞ்சியையாவது கொண்டுவா" என்று வற்புறுத்தினார். (விதுரர் நொய்க்கஞ்சியையே உணவாக உபயோகித்து வந்தார் என்கின்றனர்.)

 

உடனே விதுரர் ''சுவாமி! தாங்கள் நொய்க்கஞ்சியையோ உட்கொள்ளுவது!" என்று கூறிக்கொண்டே வாழையிலை யமைத்து அதனில் கஞ்சியை விட்டார். கிருஷ்ணன் அதனைப் புசிக்கத் தொடங்கினார். அது ஒரு பக்கமாக ஓடத் தொடங்கியது. அந்த முனையை ஒரு கையால் தூக்கிப் பிடித்தார். மற்றொருபுறம் ஓடத் தொடங்கியது அந்தக் கஞ்சி. மற்றொரு கையினால் அந்த முனையையும் தூக்கிப் பிடித்தார். மற்றொரு புறம் போக ஆரம்பித்தது. மற்றொரு கையை யுண்டாக்கிக்கொண்டு அப்பாகத்தையும் உயர்த்திப் பிடித்தார். மற்றொரு பக்கத்தில் ஓடியது. இன்னொரு கையை யுண்டாக்கிக் கொண்டு அதனையும் பிடித்துக் கொண்டார். இவ்வாறு நான்கு கைகளாலும் மூலைகளையும் பிடித்துக்கொண்டு தலையைச் சாய்த்து வாயால் உறிஞ்சி யுட்கொண்டார்." விதுரரே! இக்கஞ்சியை என்னென்பது! என்னைப் படாதபாடு படுத்திவிட்டது பார்த்தீரா!'' என்று பரிவுடன் கூறினார். விதுரர் சதுர்ப்புஜங்களோடு கூடிய பகவானது திருவடிவைக்கண்டு களித்தார்.

 

அன்றிரவே அங்குத் தங்கி பகவான் மறுநாள் துரியோதனனிடம் தூது சென்றார்.

 

இத்துடன் இக்கதையை நிறுத்துவோம். இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், பகவா வானுக்கு சாதிபேதம் சிறிதுமில்லை. அவருக்கு வேண்டியது பக்தியொன்றே யாகும். ''இவன் மேல்சாதியான்; இவன் தான் எனக்குகந் தவன்; இவனுக்கே யான் அருள் புரிவேன். இவன் கீழ்ச்சாதியான்; இவன் எனக்குகந்தவனாகான்; இவனுக்கு நான் அருள் புரியேன்'' என்று சாதி பேதத்தைப் பாராட்டி கடவுள் எவர்க்கும் அருள் புரிவது மில்லை; அருள் புரியா தகற்றுவது மில்லை. அவ்வாறு செய்பவர் கடவுளுமல்ல. ஏனெனில் கடவுளியல் அதுவன்று. பக்தி ஒன்றே அவருக்குப் பிரதானம். பக்தபராதீன னென்பதே கடவுளின் திருநாமம். இவ்வுண்மையையறியாமல் கடவுள் சம்பந்தப்பட்ட வரையி லுங்கூட சாதிபேதம் பாராட்டுவது அறிவுடையோர் செயலாகா தென்பதே சர்வசாஸ்திர சம்மதமான விஷயம் என்பது விதுரர் வரலாற்றால் நாம் அறிந்துகொள்ள வேண்டியவர்களாகிறோம்.

 

"சாதிபேத மில்லாமல் அன்பரைப் புரப்பவன் நீ

தானென்பதற்கந்த விதுரன் சாட்சி.''


(குத்தனூர். சின்னசாமி சாஸ்திரிகள்.)

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment