Monday, September 7, 2020

 வாலி மோக்ஷம்


 

இராமாயணம் என்னும் இதிகாசத்திலுள்ள சரிதையில் வாலி" மோக்ஷ மென்பது ஓர் பாகமாக விளங்குகின்றது. இராமாயணக் கதையையோ பாரதக் காதையையோ அறியாதாரை நம் நாட்டிற் காண்டலரிது. எனினுமிக்கதைகளாலறியக் கிடக்கும் நீதிகளையும் தத்துவங்களையும் ஆராய்ந்தறிந்தோர் மிகச் சிலரே யாவர். ஆகலின் யாவர்க்கும் நன்கு தெரிந்தகதையையே அரைத்த மாவை அரைப்பது 'போல, மீட்டு மீட்டும் சொல்லிக் கொண்டிராமல் ஆராய்ச்சி முறையில் இக்கதையின் போக்கையும் உண்மையையும் தத்துவத்தையும் வரைவாம்.

 

வாலிமோக்ஷம் என்னுமிச் சொற்றொடர் அதன் பொருளுக்குப் பொருத்தமானதாக விருக்கின்றதா வென்பதை முதலிலாராய்ந்து விட்டுப்பின்னர் கதையில் நுழைவோம்.

 

வாலி யென்னும் வானரவேந்தன் மோக்ஷ மடைந்ததைக் குறித்துக் கூறுதலால் இதற்கு வாலிமோக்ஷம் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் உண்மையில் வாலிமோக்ஷ மடைந்தனனா? எனவோர் ஐயமெழுமாயின், 'இல்லை,' எனவே இதற்கு விடை யிறுத்தல் வேண்டும். ஏனெனில், மோக்ஷமடைதற் கேற்ற நிலையில் வாலி இருந்தானில்லை. அவன் ஞானியல்லன். ஞானமே மோக்ஷத்திற்கு நேர் சாதனமாமென்பது அனைவர்க்கு மொப்ப முடிந்ததோர் விஷயமாகும். ஈண்டு மற்றொரு விஷயத்தையும் நாமறிய வேண்டியவர்களாயிருக்கிறோம். அதாவது, மோக்ஷ நிலையைப் பற்றிப் பல அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ, ஏதோ வோரிடத்தில் கடவுளெதிரில் அவரைத் தரிசித்துக் கொண்டும் திருத்தொண்டு பூண்டுமிருத்தலே போரானந்தப் பெருஞ் செல்வமாகிய மோக்ஷமாமென்பது சிலர்கொள்கை. எங்கும் வியாபகமாயுள்ள பரம்பொருளில் இரண்டறக் கலந்து நிற்றலே வீட்டுநிலை யென்பது வேறு சிலர் கொள்கை. எது எவ்வாறாயினும் கர்ம வசப்பட்டு மீண்டு மீண்டு பிறவாதிருத்தலே மோக்ஷ நிலையா மென்பதில் எவர்க்கும் ஆக்ஷேபமிராது. ஆகவே, அந்நிலையை யடைதல் வேண்டுமாயின் இருள் சேரிருவினையும் சேராதிருத்தல் வேண்டும். வினை வசப்பட்டோர்க்குப் பிறவி யொழிதலில்லை யன்றே? ஆகவே, வாலியானவன் மற்றீண்டு வாராநெறியாகிய முத்திப்பேற்றிற் கருகனா யிருந்தானெனக் கழறுவதற்குச் சிறிதுமாதாரமில்லை. அவன் சிவபூசையிற் சிறந்தவனென்பதிலையமில தெனினும் பல துர்க்குணங்கள் அவனிடம் குடி கொண்டிருந்தன. அகங்காரம் அவனை விட்டுச் சிறிது மகலவில்லை. தம்பியின் மனைவியை யபகரித்ததாகிய பெரும்பாதகச் செய்கைக்கு அவனுட்பட்டிருந்தான். 'இல்லிறப்பான் கண் பகைபாவம் அச்சம் பழியெனும் நான்கு மிகவா'திருக்கு மென்ற பொய்யா மொழியின் படி, பரதாரம் நச்சும்பதகன் பரமபதமெய்தினா னென்கை பொருந்தாக் கூற்றாதல் காண்க. அன்றியும் அவன் பின்னர் வேடனாகப் பிறந்ததாகப் பாரதம் கூறுவது கொண்டும் இஃது உறுதிப்படுத்தப்படும். எனவே, வாலி, மோக்ஷ மடைந்தானென்று மொழிவது, சாதாரணமாக ஒருவன் – அவன் எத்துணைக் கொடிய பாதகனாயினும் - இறந்து படின், பரமபத மடைந்தான், ஆசாரியர் திருவடி யடைந்தான் எனக் கூறுவது வழக்கமா யிருத்தலின், அம்முறைமை பற்றிக் கூறும் உபசாரவழக்கா மென்பதன்றி உண்மைக் கூற்றன்றென்பது துணிபாம். இனி, கதைச் சுருக்கத்தை யீண்டுக் காட்டுவாம்.

 

வாலியென்பா னொரு வானரவேந்தன். கிஷ்கிந்தையில் அரசாண்டிருந்தவன். அவனுக்கோரிளைய சகோதரன் சுக்கிரீவ னெனப்படுவோனிருந்தான். இவ்விரு சகோதரரும் ஒரு தாய் வயிற்றிற் சனித்தோராயினும் தந்தையரிருவர். மூத்தவன் இந்திரன் செம்மல். இளையவன் இரவியின் தோன்றல். அவ்விருவரும் மிக்க ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இத்தகையோரை ஓரற்ப விஷயம் கடும்பகைவராக்கிப் பிரித்து விட்டது. ஓர் காலத்தில் வாலிஓர் சூரனுடன் அமராடி அவனை யடித்துத் துரத்திச் சென்றான். அவ்வசுரன் அஞ்சியோடி ஓர் மலைக் குகைக்குட்புகவே, வாலியு மவனை விடாது துரத்திச் சென்றான். நாள் பல கழிந்தும் வாலி திரும்பாதது கண்ட வானரர்களஞ்சினர். வாலி மாண்டான் எனக்கருதி வருந்தி, அவ்வசுரன் வந்து தங்களை வருத்தாதபடி குகைவாயிலை யடைத்துத் திரும்பினர். சுக்கிரீவன் தமயன் கேட்டை யுன்னி யுன்னிப் பெருந்துயருழந்தா னெனினும் பல முதியோர் மொழிந்ததற் கிணங்கி முடி சூடிப் படி யாண்டிருந்தான்.

 

அசுரனை வதைத்து மீண்ட வாலி வாயிற்றடையைத் தகர்த்தெறிந்து சென்று, தன் தம்பி அரசாண்டிருத்தலை யறிந்து கடுஞ்சின மெய்தி, அரசைக்கவரவே இவன் வாயிலை யடைத்துப் போந்தானாதல் வேண்டு மென்னுந் தவறான வெண்ணங்கொண்டு சினங்கொள்ளலும், அதுகண்ட இரவி சேய் தான்குற்ற மற்றவனெனவும், மூத்தோர் வார்த்தையை மீற முடியாமல் அரசையேற்று நடத்தி வந்ததாகவும், தன் பிழையை மன்னிக்க வேண்டு மெனவும் இரந்து வேண்டியும், அவன் இரங்காமல் ஓடோடத் துரத்தி யடிக்கத் தொடங்கினான் அடிபொறுக்க மாட்டாமல் சுக்கிரீவன் வாலி செல்லக்கூடாத வோர்மலையிற் சென்றொளிந்தான். அம்மலையிற் செல்லின் முன்னமோர் முனிவன் மொழிந்த சாப மொழிப்படி தன்னாயுட்காலம் முடிவடையு மென்பதை யுன்னி வாலி ஆண்டுச் செல்லா தொழிந்தான். மலையிலொளிந்த சுக்கிரீவனுக்கு அனுமான் முதலிய வானர வீரர் பலர் நண்பரா யமர்ந்திருந்தனர். நிற்க,

சிற்றன்னையின் சூழ்ச்சியால் மணிமுடி சூடவேண்டிய நாளில் சடைமுடி சூடித் தம்பியோடும் மனைவியோடும் காகுத்தன் கானுறையுங் காலத்துத் தென்னிலங்கை வேந்தன் மிதிலை வேந்தன் திருமகளின் எழினலனைச் செவியுற்று, நம்பியும் தம்பியு மில்லாத சமயம் பார்த்து அபகரித்துச் சென்று அசோகவனத்தில் அருஞ்சிறை யிட்டனன். தசரதன் மைந்தர் சீதையைக் காணாது நாற்றிசையும் நாடித்தேடிச் செல்லு நெறியில், சவரியென்னு முதியாள், சுக்கிரீவனிருக்கும் மலையைச் சுட்டி, ஆண்டுச் சென்று செங்கதிரோன் மைந்தனுடன் நட்புக் கொள்ளின் அவனுதவியால் சீதையினிருக்கையைக் கண்டறியலாம் எனக் கழறினாள். அங்ஙனமே இராமலக்ஷ்மணர் சுக்கிரீவனைத் தேடிச் சென்று அம்மலை மேலேறிப் போகையில், அவர்களைக் கண்ணுற்ற வாலியின்வல், இவர்கள் வாலியேவலால் நம்மைக் கொல்ல வருகின்றனர் போலுமென்றையுற்று ஒளிப்பிடந் தேடியோட, அனுமான் அவனைத் தேற்றி, வரும்வீரர் யாவரென்பதைக் கண்டறியவெண்ணி, உருமாறிச் சென்று மறைந்து நோக்கினான். " இவர்கள் வாலியா லனுப்பப்பட்டவரல்லர். அருமருந் தன்னதோர் பொருளை யிழந்து அதனைத் தேடுவான் போந்தனராதல் வேண்டும். இவர்கள் தெய்விக முடையோராய்த் தோற்றுகின்றன " ரெனத் தன் நுண்ணறிவா லவர்தம் நிலைமையையோர்ந்த வாயு சுதன் அவரெதிர் சென்றுதானின்னா னென்பதையும் தன துண்மை யுரு வித்தன்மைய தென்பதையும்விளக்கிக் காட்டி, அவர் தம் வரலாற்றையு மறிந்து மீண்டு, சுக்கிரீவன் மாட்டுயாவற்றையும் கூறி, அவனையழைத்து வந்து அவ்விராகவன் முன்னர் விட்டான். இருவருக்கும் நட்புண்டாயிற்று.

 

இரவிமைந்தன் இன்னலைச் செவியேற்ற இரவிகுலத்தோன்றல் மிக்க சினங்கொண்டவராய்,'' சென்றது செல்ல. இனி உனது பகைவர் எனது பகைவர். உன் துன்பம் என் துன்பம். உன் சுகம் என்சுகம்'' என்றியம்பித் தேற்றினர். அனுமான் அப்போது ''ஐயனே! பிராட்டியாரைப் பிரித்தோர் கொடிய அரக்கரே யாவர். அவர்கள் மாயாவிகள். தேவியாரை எவ்வுலகத்தில் சிறையிட்டனரோ! ஒரு சிலர் மட்டும் தேடிச் செல்வராயின் அவரிருப்பிடத்தைக் கண்டறிதற்குப் பல யுகங்களாகும் ஆகலின் வாலியை வதைத்துச் சுக்கிரீவனுக்கு அரசுரிமையை யளிக்கின், வாலியின் வசத்துள்ள எழுபதுவெள்ளம் சேனை யவன் வசப்பட்டு விடும். ஏககாலத்தில் நாலா பக்கங்களிலும் தேடுமாறு சேனைகளை யேவின் சீதையினிருக்கை வெகு விரைவில் அறியப்பட்டு விடும். பின்னர் சேனைகளின் துணையால் சீதையை மீட்கும் காரியமும் எளிதாகும் என்றாலோசனை கூற, இராமச்சந்திரன் அதனை அங்கீகரித்து அக்கணமே வாலி வதத்தினிமித்தம் புறப்படலாயினர்.

 

இரகுகுலோத்தமனால் துன்பந் தொலையுமெனச் சுக்கிரீவன் அகங்களிப் புற்றனனேனும், தன் மூத்தோனாகிய வாலியின் வலிமையை நன்கறிந்தோனாகலின், அவனைக் கொல்லும் வல்லமை இராகவனிடத்துளதாமோ வெனச்சங்கித்து, அநுமானைத் தனியே யழைத்தேகித் தன்னையத்தைச் சாற்றினான். அனுமான் "ஐயனே! ஐயமுறேல்! அகில காரணனான அச்சுதனே அறத்தை நிறுத்துவான் வேண்டி அவனியி லிராமனா யவதரித்தனன்'' எனப் பலவேதுக்களால் அவ்வையத்தை யகற்றி, எனினும் ''மராமரத்தைத் துளைக்கச் செய்தல் வாயிலாக இராமனது இணையிலா வல்லமையைக் கண்டறிவோ''மெனக் கழறிக் காகுத்தனை யழைத்தேகிக் காட்டலும், காகுத்தன் கடுங்கணையொன்றினால் வானுற வோங்கிய தருக்களேழினையும் துளையாக்கினான். வாலியினாற் கொல்லப்பட்டு ஆவி நீத்த துந்துபியினுடலம் மலைபோல் அங்குக் கிடத்தலைக் கண்ணுற்று, அதன் வரலாற்றை யறிந்த கடல் வண்ணத் தண்ணலின்கட்டளையால் இளையவனா மிலக்குவன் காலினாலுந்தலும் அது ககன முகடளவுஞ் சென்று மீண்டது. இவ்வாற்றான் அவர்தம் வல்லமையைப் பரிசோதித்தறிந்த பகலோன் மைந்தன் இவ்விராகவன் வாலிகாலனே யெனத் துணிந்தனன்.

அனைவரும் வாலிவதத்தின் பொருட்டு அவன துறைவிடம் நோக்கிச் சென்றனர். சக்கரவர்த்தி திருமகன் வாலியை வலிய வாதுக்கழைக்குமாறேவினன். அருக்கன் மைந்தன் அவ்வாறே அமர்பொரவருமாறு கூவி ஆர்ப்பரித்தவளவில், வாலி கடுங்கோபமெய்தி வந்து பொருதான். இருவருக்கும் கடும் பூசல் நிகழ்ந்தது. இருவர்க்கும் வேற்றுமை கண்டறிய வியலாமையின் தசரதாத்மசன் ஒன்றும் புரிய வியலாதவராயினர். சுக்கிரீவன் அடி பொறுக்கமாட்டா தோடிச் சென்று முறையிட, பூங்கொடி யொன்றினை அவன் கழுத்திலிட்டுச் செல்கவென் றேவினன் இராமன். சுக்கிரீவன் சுருக்கெனச் சென்று வாலியை யழைக்க மீண்டு மிருவரும் கடும் போர் புரியும் சமயம், வாலி தன்னிளவலைக் கழுத்திலோர் கரமும் இடையிலோர் கரமும் செலுத்தித் தூக்கித்தரை மேல் மோதிக் கொல்லத் துணிகையில், கோசலையின் குலமதலை வன்கணையேவி வாலியை வதைத்தான்.

 

இதுவே வாலி மோக்ஷக்கதைச் சுருக்கம். நாவலரும் பாவலரும் இதனைத் தத்தம் திறமைக் கேற்பப் பெருக்கிக் கூறுவர். வாலி எழுந்து நின்றவளவில் உடுக்குலங்கள் (உடு = நக்ஷத்திரம்) பல பல உதிர்ந்தன வென்பர். மராமரங்களேழையும் கடக்கக் கூடாமையின் சந்திர சூரியர் ஒதுங்கிச் செல்வரென்பர். தருக்களேழையும் துளைப்படுத்திச் சென்ற விராகவன் பகழி ஏழுலகம் ஏழு கடல் முதலிய ஏழென்னுந் தொகை கொண்டவை யனைத்தையு முருவி மேலத் தொகைப் பொருளின்மையால் மீண்ட தென்பர். இன்னும் பலவாறு முரைப்பர். " இப்படியு மிருக்குமோ? " வெனக் கேட்போர்க்கு," இது உயர்வுறவிற்சியணி, இது மிகையுயர்வு நவிற்சியணி, இது தொடர்புயர்வு நவிற்சியணி, உருவகவணி, இல்பொருளுவமையணி " என்பர். இவ்வாறு கூறுவாரனைவரையும் மேற்கொண்டவர் கம்பர் என்னும் கவிச் சக்கவர்த்தியாராவர். அக்கவிச் சக்கரவர்த்தியாரியற்றிய இராம காதையின் கவிநயங்களையும் கற்பனாலங்காரங்களையும் கற்றறிந்த புலவோர் வாலி மோக்ஷக்கதையை நாலுநாளும் போதாதெனுமாறு பிரசிங்கிப்பர். நான்கு நாளல்ல நாற்பது நாள் நவின்றாலும் கதை இவ்வளவே யன்றோ; அணிகளும் அலங்காரங்களும் கற்பனைகளும் நமக்கு வேண்டாம். அவற்றை யறிந்து ஆனந்த மெய்துவோர் எய்துக்க. கம்பர் கவியின்பங் கண்டு களிப்போர் களிக்க. அவை கவிவாணர்க்கும் புலவர்களுக்கும், வித்துவான்களுக்கும் தேவை. கற்பனைக்எனைத்தையும் இவை கற்பனை (பொய்) யென நீக்கி உண்மை காணவேண்டுவோர்க்கு அவற்றாற் பயன் யாது? நிற்க இவ்வாலி சுக்கிரீவரின் சரிதையில் காணப்படு முண்மைகளை யாராய்வாம். முதலில் வாலியை இராமன் கொன்றது சரியாவென்று பார்ப்போம்.

 

நியாயம் சிறிதுமின்றி வாலி தன்னை இம்சித்துக் கொல்லவும் துணிந்ததாகவும் தன் மனைவியையும் அபகரித்துக் கொண்டதாகவும் சுக்கிரீவன் கூறியதை மாத்திரமேற்று இராமன் வாலியைக் கொன்றது முறைமையாகாது. இருவர் தம் சொல்லையு மெழுதரங் கேட்டு நியாயம் வழங்குதல் செங்கோன் மன்னர்க்கு - பொதுவாக அனைவர்க்குமே - உரிய முறைமையாம். ''வாலியை விசாரித்தல் அவசியமன்று. சுக்கிரீவன் அனுமான் இவ்விருவரும் பொய்ம்மொழி புகன்றறியாப் புனிதரென்பதை யவரறிந்த பின்னரே அதற்குடன் பாடுடையவராயினர்'' என்று ஓர் சமாதானம் கூறப்படலாம். இது ஏற்றுக் கொள்ளத் தக்கதே.

 

இனி, வாலிவதத்தைக் குறித்து அது தவறாகுமென்று இலக்குவனே இராமனிடம் இசைத்தனன். வாலியைக் கண்ட காகுத்தன் வியப்புற்று "தம்பி! இவ்வுருவத்தைக் கவனித்துப் பார். இவற்கொப்பாக எவரைக் கூறலாம். எக்கடல் எக்காற்று எவ்வுலகம் எவ்வானம் இவனுரம் பெற்ற வுடலுக் கொப்பாகும்'' என்றியம்ப, இலக்குவன்'' ஏந்தால்! இஃதோர் வியப்பாமோ! இத்தகைய பராக்கிரமம் பொருந்தியவனைத் தன்னுடன் பிறந்தோனென்பதையுமெண்ணாமல் கொல்லக் கருதி, ஓர் காலனை யழைத்து வந்த சுக்கிரீவன் செய்கையன்றோ வியப்பிற்குரித்தாகும், ஓரன்னையி னகட்டிற்றோன்றி, உடனுண்டும் உடுத்தும் உறங்கியும் ஆடியும் பாடியும் உறைந்த முன்னோனையே முடிக்கவெண்ணிய விப்புண்ணியன் பிறரை யென் செய்யான்! இவனை முன்னே முடித்தலே முறையாம். இவன் வார்த்தைக்குடன் பட்டுத் தாங்கள் செய்யக் கருதிய விப்போர் பிறரால் பழிக்கப்படாத போராக விருத்தல் வேண்டுமேயென்னும் கவலை யென்னுள்ளத்தைக் கவர்ந்து நிற்கின்றது' எனத்தன் வெறுப்பை விளக்கி நின்றான். இதற்குச் சமாதானம் அப்பொழுதே இராகவனாலிறுக்கப்பட்டது. அஃதியாதெனின், ''அப்பா! பித்துக் கொண்டாற் போன்ற மிருகங்களின் ஒழுக்கத்தில் நியாயா நியாயங்கள் ஆராயத்தக்கனவாமோ? விலங்குகள் விவேக் சூனிய முடையவை யன்றோ? இங்ஙன மொழுகுதல் அவற்றின் இயற்கைப் பண்பனறோ? விலங்குகளில் மாத்திரமல்ல மனிதருள்ளும் பரதன் போன்ற சகோதரவாஞ்சை யுடையோரைக் காண்ட லரிதேயன்றோ! உலகில் குற்ற மற்றவர்களா யொழுகல் எத்தகையோர்க்கு மியலாததாகும். நல்லொழுக்க முடையோரைக் குறைவாகவும் இல்லாரை யதிகமாகவுமே இவ்வுலகம் பெற்றிருக்கும். ஆகலின் நற்குணத்தைக் கண்டு நட்புக் கோடலே நமது கடமையாம்' என்பதேயாம்.

 

மாதவ வேடம் பூண்ட மன்னன் மைந்தன் வழுத்திய மாற்றம் எத்துணைப் பொருத்த முடையதென வாராய்வோம். ஒழுக்கந் தவறி நடத்தல் அறிவற்ற விலங்குகளுக் கியல்பேயாம் எனத் தம்பிக்குச் சுக்கிரீவனது தீச்செய்கையின் பொருட்டுக் கூறிய சமாதானம் சரியெனக் கொண்ட விவர், வாலியின் வரம்பு கடந்த செய்கையையும் அம்முறையிற் கொண்டிருத்தலவசியமாம். அவ்வாறு கொண்டிருப்பின் வாலியைக் கொல்லத் துணிந்திருப்பரோ? இரார். ஆகவே, இச்சமாதானம் தன் செய்கை சரியன்றெனத் தடுத்த தம்பியை யொருவாறடக்கக் கூறப்பட்ட சமாதானமேயன்றி உட்கருத்துடன் கூறப்பட்டதாகக் கொள்ளுதற் கிடமின்று. அன்றியும், பாணத்தாலடியுண்டு பாரிற் புரளும் வாலி இராகவனை நோக்கி "தசரதன் மைந்தனே! என் மாட்டென் பிழை கண்டனை? யானுனக் கிழைத்த தீமைதான் யாது?'' எனக் கடாவியபோது, தம்பியின் தாரமானவளைக் கவர்ந்த குற்றத்தை யவன் மேல் சாட்ட, அவ் வாலி,'' மிருகங்கள் நாங்கள். உங்களுக்கிருப்பது போன்ற மணவினை முறைக ளெங்களுக் கின்று. உணர்வு சென்றுழிச் செல்வதே எங்குலவொழுக்கம். ஆகலின், என் செய்கை குற்றமுள்ளதாவ தெங்ஙன?'' மெனக்கூறுகிறான். அதற்கு இராகவ னிறுத்த விடை வியப்பிற் குரியதாகும். "ஓ! வாலியே! நீங்கள் சிறந்த தேவர்களுக்குப் புதல்வராகத் தோன்றினவர்கள். அறநெறியைத் திறம்பட வறிந்தோர். ஆகவே, உங்களை விலங்கென மதித்தல் ஏற்புடைத்தன்று' என்பது அவரது விடையின் சுருக்கமாகும். சுக்கிரீவனைக் குற்றமுடையோ னென நவின்ற தம்பிக்குப் 'பித்தாயவிலங்கின் செயலினைப்பேசலாமோ?' வெனக் கழறியவர் இங்கு இவ்வாறு இயம்புவது போற்றத் தக்கதாகுமோ? தம்பியை விலங்கெனக் கொண்டவர் தமயனையும் அங்ஙனங்கொள்ள ஒருப்படாததேன்? இம்மாற்றம் முன்னுக்குப் பின் முரண்பட்டதன்றோ! தவிர,

வாலியை எதிர்த்துப் பொராது மறைந்து நின்று அம்பு தொடுத்துக் கொல்லுதல் யுத்த தருமமாகாது. இக் கேள்வியை வாலியே கேட்டதாகவும் அப்பொழுதே இலக்குவன் தக்கவாறு விடைகூறி அவன் வாயை யடக்கிவிட்டதாகவும் கூறச் சிலர் முன்வாலாம். வாலி கேட்டதும் இலக்குவன் விடையளித்ததும் உண்மையே. "முன்னரே சுக்கிரீவள் என தண்ணனை யடைக்கலம் புகுந்தான். அப்பொழுதே உன்னைக் கொல்வதாக அவனுக்கு அபயப்பிரதானம் பண்ணிவிட்டார். நேர் நின்று பொருங்கால் நீயம் பயந்து அடைக்கல மென்பையாயின் உன்னைக் கொல்லுதல் கூடாது. அதனால் அவர்வார்த்தை (பிரதிஜ்ஞை) பழுதுபடும். இதுவே மறைந்து நின்று கொன்றதன் காரணம்'' என்பதே அவர் சாற்றிய சமாதானம்.

 

சுக்கிரீவனை விட வாலி இராமனை நன்குணர்ந்தவன். அவரது தெய்வத்தன்மையிலும் முறை தவறா நெறியிலும் மிக்க நம்பிக்கை கொண்டவன். சாதாரணமான ஓரரச குமாரனெனக் கருதாமல், அறநெறி நிறுத்த வந்த ஆதிபகவனே இராமனென்று அவன் உறுதியா யெண்ணி யிருந்தான். வாலி போர்க்கெழுங்கால் அவன் மனைவியாகிய தாரை யென்பவள் தடுத்து, நாயக! '' உன்தம்பி தன் சொந்த பலத்தை நம்பி அமர் பொர வழைத்தானில்லை. இராமனென்பா னொருவனைத் தனக்குத் துணையாகக் கொண்டிருக்கின்றானாம். அவனைக் கொண்டுன்னைக் கொல்விக்கும் சூழ்ச்சி யுடையோனாய் வலிந்தறை கூவுகின்றான். செல்லுதல் தவிர்க'' எனச் சாற்றித் தடுத்தனள். அது கேட்டவளவில், வாலி யுளநைந்து ''பெண்ணே! உன் பேதைமையால் பெரும்பிழை செய்தனை. இராமனை யாரென நினைத்தனை! தருமநெறியைத் தன்னொழுக்கத்தால் யாவர்க்கும் காட்டுவா னவதரித்தவப் பெருமான் விஷயத்தில் அபசாரப்பட்டனையே " எனப் பலவாறு இராமனைப் புகழ்ந்து கூறிப் போருக்குச் சென்றான். " ஒருகால் தாரை சாற்றியவாறு இராமன் வந்திருப்பானோ'' வென்னும் ஐயம் அணுவளவு மவனுள்ளத் தெழுந்த தில்லை. அவ்வா றெழுந்திருப்பின் அவன் எச்சரிக்கையோடிருந்திருப்பான். தன் விஷயத்தில் இவ்வளவு நம்பிக்கையோடிருந்தவனை மறைந்து நின்று கொல்லுதல் வஞ்சனையன்றோ? நம்பிக்கைத் துரோக மன்றோ?

 

அவன் அவ்வாறு நம்பி யிருந்தானென்பது இராமனுக்குத் தெரியாதேயென்றோர் சமாதானம் இதற்குக் கூறப்படலாம். உண்மையே. ஆனால், நம்பவில்லை யென்பது மட்டு மெப்படித் தெரியும்? இரண்டுந் தெரியாத போது நம்பியிரானென்பது போல நம்பாதிரானென்பது மெண்ணத் தக்கதேயன்றோ? மேலும், நிராயுதனைக் கொல்லலாகாது என்பது விதி. இதற்கு அவன் சரணாகதி யடைவானே. அதன் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டது என்றோர் சமாதானம் கூறப்பட்ட தன்றோ? அவன் சரணாகதி யடைந்தால் இராகவருக் குண்டாம் நஷ்டமென்ன? அவ்வாறவன் செய்யின் மெத்த நன்மையேயன்றோ? இரு சகோதரரையும் ஒன்றுபடுத்தி யிருக்கலாமே. அதனாற் குறைவென்ன?

 

சொன்ன சொல் தவறா திருத்தற் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டது எனின்: ஒருவனுயிரைக் காப்பதினிமித்தம் சொல் தவறுவதாயினும் உலகம் பழியாதே.'' புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்ம்மையும் வாய்மையிடத்தா' மன்றோ?'' நன்மை பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோருயிர் அச் சொற்களின் பொய்ம்மையானே அதனி னீங்கி இன்புறுதல் " என்றார் அரும்பொருள் கண்ட பரிமேலழகரும். ஆகவே, மன்னுயிர் காத்து நல்வழிப் படுத்தலின் பொருட்டு சொற்றவறுதல் குற்றத்தின் பாற்படாதே. குற்றத்தின்பாற் படுமெனவே வைத்துக் கொள்வோம். இக்குற்றம் நீங்கினும், மறைந்து நின்று நிராயுதனைக் கொன்ற பழியேனும் தொடராமற் போகாதே. ஏதேனும் ஒரு பழியின் வாய்ப்படுதல் தீராது. ஒன்று கொலைப்பழி, மற்றொன்று சொற்பிழைப் பழி. இரண்டனுளொன்றை ஏற்றே தீரவேண்டும். ஆகவே, இரண்டனுள், தான் துன்பந் துய்க்க நேரினும் அதனைப் பொருட்படுத்தாது, பிறனுயிரைப் பேணலே பெரியோர் கண்ட வழக்காம். தவிர, வாலி சுக்கிரீவர்களாகிய சகோதர ரிருவரும் ஒற்றுமைப்பட்டு வாழ்வார்களாயின் சொன்ன சொல் தவறினதற்காகச் சுக்கிரீவன் இராமனைப்பழித்துக்கூறான். ஆகவே எவ்வாற்றா லாராயினும் மறைந்து நின்றது குற்றத்தின் பாற் படாமற் றப்புதற்குச் சிறிது மிடனின்று.

 

வாலி மோக்ஷம் என்ற தலைப்பின் கீழ் தொடங்கிய இவ் வியாசத்தின் முற்பகுதியாக, "வாலி, மோக்ஷமடைந்தா னென்பது உபசாரச் சொல்லேயன்றி உண்மையன்றாம். ஏனெனில், மற்றீண்டு வாரா நெறியாகிய மோக்ஷத்தை யடைதற் கேற்ற நிலையில் அவன் இல்லை. அவன் ஞானியல்லன். அன்றியும் மீண்டும் மறுபிறப்பில் வேடனாகப் பிறந்தானெனப் பாரதம் பகர்கின்றது எனவும், அவ் வாலியின் வரலாறு இன்ன தெனவும், அவனுக்கு மவன் பின்னவனாகிய சுக்கிரீவனுக்கும் பகை நேர்ந்ததன் காரணமின்னதெனவும், அவனது சூழ்ச்சியாலேயே இரகு வீரன் வாலியை வதைத்தானெனவும், அவ்வாறு வதைத்தது நியாயமாகுமா வென்றாராயத் தொடங்கிக் கொன்றது நியாயமன் றெனவும், மறைந்து நின்று வதைத்ததும் நிராயுதனாய்ப்பிறனோடு போர் செய்து கொண்டிருந்தவனைப் பொன்று வித்ததும் அதினும் பெரிய அநீதியா மெனவும்" கடந்த மாத விதழில் வரைந்தாம். இனி, இராமன் வாலியைக் கொன்றது குற்றத்தின்பாற் படாது என்பதற்குக் காட்டும் வேறு சில சமாதானங்களையு மாராய்வாம்.

 

மறைந்து நின்று நிராயுதன்மேல் வாளி யெய்ததற்கு வேறொரு சமாதானம் சாற்றப்படுகின்றது. அதாவது, இராகவன் வாலியை நோக்கி, "கவிகுலக்காவல! வேட்டஞ் செய்தற்குரிய வேந்தர், காட்டி லெதிர்ப்பட்ட விலங்குகளை மறைந்திருந்து கொல்லுதல் முறைமையே யாகும். ஆகலின், விலங்காகியவுன்னை மறைந்து நின்று கணையா லடித்தது குற்றமாகா" தெனக் கூறியுள்ளார் என்பதாம். இச்சமாதானமும் அவருக்குச் சாதகமாகாது. 'இந்திரன் குமாரனாயிருத்தலானும், கல்வி கேள்விகளை யுடையை யாதலானும், சிவபூஜையிற் சிறந்தவனா யிருத்தலானும், அறிவில்லாத மிருகங்களுக்குச் சாத்தியமாகாத இத்தகைய தரும நியாயங்களை யெடுத்துக் காட்டி என்னெதிரிற் பேசுதலானும், நீ மிருகமன் றென்பது திண்ணமாக, 'மிருகங்களாகிய வெங்களுக்கு மணமில்லை, முறையில்லை, பிரியமானவர்களைப் பெண்டாகக் கொள்ளலாம்' என்றியம் புதல் பிழையுடையதாகும்'' எனக் காரணங்காட்டிக் கண்டித்த காகுத்தன், ''நீ மிருகமாகையினால் ஒளித்து நின்று வாளி யெய்தது நியாயமா" மென நிகழ்த்துவது முன்னுக்குப் பின் முரண்படுவதாகுமே! மேலும், விலங்குகளை வேட்டையாடினது வாலி வதத்திற்கு முன்னும் பின்னும் இராமன் பால் நிகழ்ந்ததில்லையே. தம்மெதிர்ப்பட்ட பிற விலங்குகளைக் கோறல் புரியாது இத்தகைய சமாதானம் கூறுவது சரியாகாதே.

 

வாலியைக் கொல்லாது அவனோடு நட்புக்கொண்டிருப்பின், அவ் வாலி, இராவணன் இராகவனுக் கிழைத்த இன்னலையறிந்து, இராவணனை யழைப்பித்து "அடே! அரக்கனே! சீதாதேவியை இக்கணமே ஈண்டுக் கொணர்ந்து விட்டு சீதாபதியின் திருவடிகளில் அடைக்கலம் புகுவா " யென்றோர் வார்த்தை வெளியிடுவானாயின், இராவணனஞ்சி அவ்வாறே சீதையைத் தசரதாத்மஜன்பக்கலிற் சேர்ப்பான். அதனால், இராமனுடைய சங்கற்பப்படியும் தண்டகாரணிய வாசிகளுக்களித்த வாக்குறுதியின் படியும் அரக்கர் வதம் நடைபெறாமற் போய்விடும். அதுபற்றியே வாலியை வதைக்க நேர்ந்ததென வோர் சமாதானம் கூறப்படுகின்றது.

 

இது ஒருவாறு பொருத்த முடையதெனக் கூறலாம். பாரதப்போர் நிகழ்ந்த போதும் பார்த்தசாரதி இவ்வாறே ஒருபாயம் செய்திருக்கின்றார். அருச்சுனன் மைந்தனாகிய அரவானென் போன் கொற்ற வெம்படை யனைத்து மோரம்பினால் ஓர் தினத்திற் கொன்றழிப்பான். அவன் அவ்வாறு செய்திடின் தன் கருத்தின்படி இரு தரத்தார் சேனைகளும் அழிதற்கு ஏதுவில்லாமற் போய்விடும். பாண்டவ ரைவரைத் தவிர மற்றெல்லோரையு மொழித்தல் வேண்டுமென்பது அவரது சங்கற்பம். இவ்வாறு பாரத வமரில் யாவரையும் நீறாக்கக் கருதி யிருப்பதை யறிந்து தான், பஞ்சவரி லிளையவனாகிய சகாதேவன், வந்தடைந்தே மைவரையும் நின்பார்வையாற் காக்க வேண்டும் 'எனக்கேட்டு உறுதிமொழி பெற்றுக் கொண்டான். ஆகவே, அரவான் செய்கைதன் னெண்ணத்திற்கு மாறாக விருந்தது பற்றியே, அவனைத் தொலைத்து விடலவசியமா மெனச் சூழ்ச்சி செய்து, அவனைக் களப்பலி யிடுவித்தனர்.

 

இத்தன்மையை நோக்கும் போது, இந்தவகையில், வாலியை யகற்ற வேண்டியதே யெனத் தோன்றுகின்றதாயினும், வாலியைக் காலன் வாய்ச் சேர்க்காமலே இக்காரியத்தை நிறைவேற்றுதல் அசாத்தியமன்று. மாருதி மைதிலியாரைத் தேடிச் சென்று இலங்கையில் அசோக வனத்தின் கண் கண்ணுற்றுத் தன் வரலாற்றைச் சாற்றிய பின்னர் ''அம்மணி! தாங்கள் ஈண்டிவ்வாறு பரிதபித்துக் கொண்டிருப்பதேன்? அடியேனது தோளின் மீது ஆரோகணித்துக் கொள்ளுங்கள். அரை நொடியில் ஐயனிடம் கொண்டு போய் விடுகிறேன்'' எனக் கூறினான். அது கேட்ட பிராட்டியாரர் "மைந்த! உனதாற்றலில் எனக்கு அணுவளவேனும் ஐயமிலது. சொன்ன வண்ணமே செய்வாய் எனினும், அது விரும்பத்தக்க தல்லவே. அவ்வாறு செய்வது நமதையனாகிய இரகு குலோத்தமருக்குப் பரிகரிக்க முடியாத பழியை நல்குமே! அதனாலன்றோ யானி துகாறும் ஈண்டுச் சிறைப்பட்டிருக்கின்றேன்.

"அல்லல் மாக்களிலங்கைய தாகுமோ?
எல்லை நீத்த வுலகங்கள் யாவுமென்
சொல்லினாற் சுடுவேனது தூயவன்
வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்''


யான் நினைப்பேனாயின் இவ்விலங்கை மாத்திரமோ? எல்லா வுலகங்களையும் சொல்லொன்றினால் நீறுபட்டழியச் செய்ய மாட்டேனோ! கடல் வண்ண மேனி காகுத்தனே வந்து என்னை மீட்டுச் செல்லாமல், யானே விடுவித்துக் கொண்டு செல்வது அப்பெருமானது கோதண்டத்திற்கு அபகீர்த்தி யுண்டாக்கு மென்றல்லவோ அஞ்சினேன்'' எனத் தடுத்துக் கூறியனுப்பி விட்டார். அங்ஙனங்கூறாது அனுமன் வார்த்தைக் குடன்பட்டு வந்திருப்பின் இராவண சம்ஹாரமும் நடைபெறாமற் போயிருக்கு மென்பது திண்ணம். அது போலவே, இராமபிரானும் வாலியை நோக்கி ''நீ எனது இந்தக் காரியத்தில் தலையிடலாகாது. எனக்கு நேர்ந்த பழியைத் துடைப்பதென் கடமையாகும். உன்னால் யான் அதனைப் பெறுவேனாயின் எனக்கும் என் மரபினுக்கும் தீராத வசையையே விளைக்கும்'' எனக் கூறித் தடுத்துத் தன்கருத்தை முடித்திருக்கலாம். ஆகலின் இச்சமாதானம் உறுதியுடைய தன்று.

 

அபராதியைச் சிக்ஷித்து நிரபராதிக் குதவி செய்தல் நிருபர்க்குரிய முறைமையாகலின் சுக்கிரீவனது தாரத்தைக் கவர்ந்த வாலியைத் தண்டிப்பது நீதியேயாம் என்பது மற்றோர் சமாதானம். வாலியைக் கண்டு அவன் குற்றத்தை யவனுக்குக் காட்டி அவன் கவர்ந்த மாதினைத் திரும்பவும் சேர்ப்பித்திருக்கலாம். அவ்வாறு விடுதற்கிசையானாயின் தண்டனை செய்தல் ஏற்றதாகும். ஸ்ரீராமனே இராவணன் தன்னோடாற்றிய முதல் நாள் யுத்தத்தில் தோல்வியுற்று அவமானப்பட்டு நின்ற காலத்து அவனை நோக்கி,


''ஆளையா! உனக் கமைந்தன மாருத மடைந்த
 பூளையாயின கண்டனை. இன்று போய் போர்க்கு
 நாளை வாவென நல்கினன்.''

 

"இலங்கேசா! உன் வீரமெங்கே! உன்னுடன் வந்த சேனைகளெல்லாம் அழிந்தன. நீயும் நிராயுதனாகினை. இப்பொழுதே திரும்பிச் சென்று இன்னும் போர் செய்யலாம் என்னும் வீரமும் விருப்பமுமிருக்குமாயின் நாளைக்கு வா'' எனக் கூறியனுப்பிவிட்டன ரன்றோ! அன்றியும், சீதையைக் கொண்டு வந்து விட்டால் உயிர் வாழ்ந்திருக்கலாம் என அங்கதனிடம் கூறித் தூதனுப்பவில்லையோ! அவ்வாறு வாலியைக் கேட்டு அவன் சுக்கிரீவன் மனைவியை விட்டிருந்தால், அவனைக் கொலை செய்யாதிருந்திருக்கலாம்; விட மறுத்தால் கொன்றிருக்கலாம். அங்ஙனம் செய்யாமல் தண்டித்தது நீதியாகாதன்றோ! எனவே, எவ்வாற்றாலாராயினும் இராமர் வாலியை வதைத்தது நியாமன்றென்பது தெளிவாகின்றது.

 

இதுகாறும் கழறிய ஆக்ஷேபங்கள் ஒருவரிருவர்க்கல்ல. பலர்க்குள். இவ் வாக்ஷேபங்களில் உண்மையில்லாமலுமில்லை. இவை போன்ற வேறு சிலஅதனை ஆக்ஷேபங்களையும் கூறுவரேனும் அவையனைத்தையு மெடுத்துக்காட்டிப் பொழுது போக்குவது ஏற்புடையதாகாது. இனி, இவ்வாலிமோக்ஷக் கதையால் அத்தியாவசியமாக அறிய வேண்டிய உண்மை யொன்றுளது. வற்புறுத்திக் காட்டுவதே இச் சரிதையின் முக்கிய நோக்கமா மென்பது ஆன்றோர் துணிவு. அவ்வுண்மையை யறிந்து கொள்ளின் இத்தகைய ஆக்ஷேபங்களுக்குச் சிறிதுமிடமிராது. ஆகலின், அதனைச் சிறிதளவு ஈண்டுக் காட்டுவாம்.

 

சுக்கிரீவனென்பவன் மோக்ஷாபேக்ஷை யுடையவனான அதிகாரி புருஷன். வாலியென்பவன் தாமத குணம். வாலியால் சுக்கிரீவன் துன்புற்றானென்றது, தாமத குணமாகிய மூடவிருத்தியால் அதிகாரி புருஷன் துன்பற்றானென்பதாம். வாலி சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்தானென்பது, தாமதகுணத்தால் சாத்துவகுண நீக்கம். சுக்கிரீவன் வாலிக்கு பயந்து அவன் செல்லக் கூடாத தோரிடத்தில் வானரங்களோடு வசித்துவந்தா னென்பது, அதிகாரி புருஷன் தாமத குணத்தை யஞ்சி அது அணுகமுடியாத சாது சங்கத்தையடுத்து சாதுக்களோடு வசித்தல். அங்கு வசிக்குங் காலத்திலும் "வாலியையொழித்துத் தன் மனைவியை யடைவதென்றோ?'' என்றேக்கங் கொண்டிருக்தானென்பது, சாதுக்களிடையே வசித்திருந்த காலத்தும் தாமத குணத்தையொழித்து மோட்சானு குணமான சத்துவ குணத்தை யடைவதென்றோ என்றேக்கங்கொண் டிருந்தா னென்பதாம். இராமபிரானைக் காண்டல் சத்குரு தரிசனம். இராமனைச் சரணாகதி யடைதல் சதாசாரியனைச் சரணாகதியடைதலாம். எழு மராமரங்கள் எழு அஞ்ஞான பூமிகள். அவையாவன: (1) பீஜசாக்கிரம். (2) சாக்கிரம். (3) மகாசாக்கிரம். (4) சாக்கிர சொப்பனம். (5) சொப்பனம். (6) சொப்பன சாக்கிரம். (7) சுழுத்தி என்பனவாம். இவற்றுள்,

 

(1) பீஜசாக்கிரம்: - இராக்காலத்தில் படுத்து நித்திரை செய்து காலையில் விழிப்படையுங் காலத்தில் முதன் முதலாக ஒருணர்வு உண்டாகின்றது. அவ்வுணர்வு 'நான்' என்றவ்வளவையே யுடையது. அப்போது தேக உணர்ச்சியும் எங்கு படுத்திருக்கிறோ மென்பது முதலிய உணர்ச்சிகளு முண்டாவதில்லை. அதன் பின்னரே அவையனைத்தும் தோன்றும். அவ்வாறு 'நான்' என்றுள்ள அவ்வுணர்வு நிலை மாயையோடு கூடிய சேதனத்தினின்றுண்டான ஆபாச சேதனமாம். இதுவே தேகோற்பத்தி காலத்தினும், தேகோற்பத்தியின் பின்னுண்டாகி விருத்தி யடையும்படியான சித்தம். சீவன் முதலிய பெயர்களுக்கும் அவற்றின் அர்த்தங்களுக்கும் காரணமாயிருப்பதாம். பற்றியே இது பீஜசாக்கிர மெனப் படுகின்றது. இதனை வித்து நனவு எனவும் கூறுவர்.


''சித்திலே நின்றோ ரறிவுபே ரின்றிச் செறிமல மின்றி மேல் வந்து
 வர்த்தியா நிற்குஞ் சித்த சீவாதி வருபெயர் செயல்களுக் கிடமாய்
 வித்து ரூபமதாய் நின்றிடுமதனால் விதை நனவா முதற்பதமே''


 என ஞானவாசிட்டமும்,

 

      "முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத்திரமதுதான் முதல்வித்தாகும் "


 எனக் கைவல்லிய நவநீதமும் கூறுதல் காண்க.

(2) சாக்கிரம்: - முதலில் தோன்றிய பீஜ சாக்கிரமாகிய 'நான்' என்பது மட்டுந் தோன்றுவதாகிய அவ்வுணர்வு தோன்றிய பின்னர், அதினின்று நாம் இன்னாரென்பதும் இன்னவிடத்தில் சயனித்திருக்கிறோ மென்பதும் தேகவுணர்வும் எழுந்து இன்ன காரியஞ் செய்ய வேண்டுமென்னு மெண்ணமுமாகிய அகங்கார மமகாரங்கள் தோன்றும். அந்த நிலையே சாக்கிர நிலையாம்.


 "இதுவறிவுக்கு முதலவத்தையதா மிதத்துறப் பிறந்தபின் னிவனான்
 இதுவெனப் பண்டிலாமையா னொய்தா யெழுந்துள வறுதியே நனாவாம்''


 என்று ஞானவாசிட்டமும்,


''இந்த வறிவிற் பண்டில்லா வகந்தை முளைப்போலா மிது நனாவாம்''


 என்று கைவல்லியமும் கழறுதல் காண்க.

(3) மகாசாக்கிரம்: - எல்லாப் பிறவிகளினும் இந்த அகங்கார மமகாரங்கள் இடைவிடாது வந்து வந்து பற்றுவது மகா சாக்கிரமாம்.

 

“இத்தனை யொழிய விவனவனானே யிதுவது என்ன தென் றெண்ணும்

இது முதற் பிறப்பிற் றொடர்ச்சியாய்ப் பலர்க்குமிந்த நிச்சயம் பெருநனாவாம்.''


என்று ஞானவாசிட்டமும்,


      “வந்து வந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாநனாவாம்''


என்று கைவல்லியமும் இதனை விளக்குகின்றன.

 

(4) சாக்கிர சொப்பனம்: - சாக்கிரத்தில் முன்னம் பூரணமாய் அறிந்துள்ள விஷயங்களைப் பற்றியோ பூரணமா யறியாத விஷயங்களைப்பற்றியோ மனோராஜ்யம் செய்தலே சாக்கிர சொப்பனமாம்.


''அறிந்துள தெனினு மறியலா தெனினும் அழுந்துறத்தான துவாகிச்
 செறிந்துள நனவிற் சித்த ராச்சியமே செய்வது நனாக்கனவாகும்,''


என்றும்,
      "நந்துமகக் கொடுநனவின் மனோசாச்சியஞ் செயலே நனாக்கனாவே"

 

என்றும், முறையே ஞானவாசிட்டமும் கைவல்லிய நவநீதமும் நவிறல்காண்க.

(5) சொப்பனமாவது: -- சாப்பிட்டு நித்திரை செய்து விழித்து அற்பகாலத்தில் அநேக விஷயங்களைக் கண்டறிந்ததாக மனோராச்சியம் செய்வது சொப்பனமாம்.


''அற்பகாலத்தி லநேகமாஞ் செயல்கண் டறிந்தனமெனுங் கனவழிந்து
 முற்படு செயலை நினைவது கனவாம்."                       (ஞானவாசிட்டம்)


''உண்டுறங்கி மனோராச்சியஞ் செயல் சொப்பனமெனும் பேருடைய தாகும்''                                                                      (கைவல்யம்)

 

(6) சொப்பன சாக்கிரமாவது: - முன்னே சொப்பனங்கண்டு மறந்து போன விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்துவது சொப்பன சாக்கிர மெனப்படும்.

 

"முந்து கண்டதனை நாளகன்று
 பிற்படக்காணும் பொருள்களை மறந்து
 பெரும்பொழு துணர்வுற நோக்கும்
 சொற்பன நனவுபோல் நனவுக்கே தோன்றுமிச் செயல்கனா சனவே"

 

''பண்டுகனாக் கண்டு மறந் ததை மீண்டு
நினைப்பது சொப்பன நனாவாம்"


 என்றார் பிறரும்.


(7) சுழுத்தியாவது: -

 

மிகுந்த இருள் மூடிக்கொள்வது சுழுத்தியாம். அதாவது மேலே சொல்லப்பட்ட ஆறுவகை நிலைகளும் நீங்கி அஞ்ஞானவடிவ இருளால் மூடப்பட்டுச்சடமாயுள்ள நிலையே சுழுத் தியாம். இதுவே ஒன்றுந் தெரியாமல் ஆனந்தமாய்த் தூங்கினேன் என்றியம்பத்தக்க நிலை.


“அறுவகை யவத்தை யகற்றிய சீவன்
 அடைந்துள அவத்தையி னியற்கை
 யுறு சடமாகி மேல் வருந் துயர்கூர்
 உணர்வுள நாமிது சுழுத்தி''


''மண்டு மிருள் மூடுவது சுழுத்தி யாகும்''


அஞ்ஞான நிலைகளாகிய இவ்வேழுமே எழுமராமாங்களாம். இவ்வஞ்ஞான பூமி (அவஸ்தை) களழித்தற்கருமையா யிருத்தல் பற்றியே மராமரங்கள் ஒருவரானும் அழித்தற் கருமையாம்படி வைரம் பெற்றிருந்தன வெனக் கூறுவர். அவற்றை - அவற்றுளே தேனுமொன்றையாவது அழிக்க வல்லவரே, தாமதகுண விருத்தியாகிய வாலியைக் கொல்ல வல்லவராவர். அம்மாங்களேழும் இராமனால் அழிந்தனவென்பது சதாசாரியனால் அஞ்ஞான பூமிகளேழு மழிந்தன வென்பதாம். துந்துபியினுடலை இராமன் தம்பியாகிய இலக்குமணனால் நீக்கினானென்றது, சதாசாரியன் தத்துவ விசாரத்தால் தேகாபிமானத்தை (தேகமே நான் எனக் கொண்டிருந்த அபிமானத்தை) அகற்றியதாம். இராமன் வாலியை மறைந்து நின்று கணைதொடுத்துக் கொன்றானென்றது சற்குருவானவர் இரகசியமாக வுபதேசித்த (இதுவே மறைந்து நிற்றல்) 'தத்துவமசி' மகாவாக்கிய உபதேசத்தால் (இதுவே இராமபாணம்) உண்டானஞானத்தால் சனன மரண சம்சாரத்திற் கேதுவாகிய அஞ்ஞான மென்கிற காரண சரீரம் - " அரிய மெய்ஞ்ஞானத் தீயா லவித்தையா முடல் நீறாகும்'' (கைவல்லியம்) என்றபடி, நசித்தலே வாலி மரணமாம். பின்னர் சுக்கிரீவன் மனைவியை யடைந்து மகுடாபிடேகஞ் செய்யப்பெற்றவனாய்ச் சுகமாசாண்டிருந்தானென்பது, அதிகாரி புருஷன் சத்துவகுணத்தை யடைந்து சீவபாவத்தை யகற்றிக் கூடஸ்தப் பிரமமாகி சச்சிதானந்த சொரூபியாய்ச் சீவன் முக்தனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.

 

எனவே,

“இவனதி காரியானோ னிந்திரியங்களாலும்

புவன தெய்வங்களாலும் பூதபௌதிகங்களாலும்

தவன மூன்றடைந்து வெய்யில் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்

பலமறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறினானே''

 

என்றபடி, அதிகாரி புருஷனொருவன் தன்னை நன்மார்க்கத்திற் செல்லவிடாது தடுத்து அலைக்கழிக்கும் படியான மாயாமய தாமத குணத்திற்கஞ்சி சாதுக்கள் கூட்டத்தைச் சேர்ந்து அச் சாது வாயிலாக சற்குருவைக் கண்டு

 

“வணங்கி நின்றழுது சொல்வான் மாயவாழ்வெனுஞ் சோகத்தால்

உணங்கினே னையனேயென் உள்ளமே குளிரும் வண்ணம்

பிணங்கிய கோசபாசப் பின்னலைச் சின்னமாக்கி

இணங்கிய குருவே யென்னை யீடேற்ற வேண்டும்''

 

என்றடி தொழுது விண்ணப்பிக்க குருதேவரும் அவனைத் தேற்றி, அவனது அஞ்ஞானத்தை யகற்றி, ஆத்மானாத்ம விசாரத்தால் 'உடலை நானென்றும், அந்த உடலைப்பற்றி வந்த பொருள்களை எனதென்றும்' எண்ணும் அகங்கார மமகாரங்களை நீக்கித் தத்துவமசி' மகாவாக்கிய உபதேசத்தால் அஞ்ஞானமாகிய காரணதேகத்தை யொழித்தருளினார். அவ்வளவில் அவ்வதிகாரி புருஷன் ஜீவபாவம் நீங்கப் பெற்றவனாய் சீவசாக்ஷியாகிய கூடஸ்தனே தானென்றறிந்து ஆன்மசாக்ஷாத் காரமெய்தி, சர்வதுக்க நிவர்த்தி பரமானந்தப் பிராப்த வடிவமோக்ஷத்தை யெய்தினான் என்பதே வாலிமோக்ஷக் கதையின் தத்துவமா மென்பது ஆன்றோர் அபிப்பிராயமாம்.

 

ஆனால், வாலி, மோக்ஷமடைந்ததாகக் கூறுதலாலன்றோ இதற்கு வாலிமோக்ஷமென்னும் பெயருண்டாயிற்று? ஆகவே இப்பெயருக்கும் மேற் கூறிய தத்துவத்திற்கும் பொருத்தமில்லையே. இதில் சுக்கிரீவனாகிய அதிகாரி புருஷனல்லவோ முத்திகிலை யெய்தினா னென்று சொல்லப்பட்ட தெனின்; மோக்ஷம் என்பதற்கு விடுதலை யென்பது பொருளாகலின், ‘தமோகுணவடிவ மாயையின் நீக்கம்' எனப் பொருள் கொள்ளின் யாதும் முரணின்றாதல் காண்க.

 

இனி, வாலி மோக்ஷத்தின் அந்தரார்த்தம் வேறு விதமாகவும் ஆன்றோரால் உரைக்கப்படும். எவ்வாறாயினும் இதிகாச முறையில் காணின் பலமுரண்கள் காணப்படுவதியல்பே. ஆகவே, அவ்வாறு முரண்பாடு தோன்று மிடங்களில் இதற்கே தேனும் இரகசியார்த்தங்கள் இருத்தல் வேண்டு மென்றெண்ணி யுற்று நோக்குவோமாயின் பெறலரும் பொருட்களைப் பெறலாம். அன்றியும் இராமாயணகதை முழுவதும் தத்துவார்த்தங்களடங்கியதோர் கதையாகும். அத்தத்துவப் பொருள்களை வேதவித்துக்களும் பிரஹ்ம நிஷ்டர்களுமாகிய பெரியோர்களை யடுத்துக் கேட்போமாயின், அரிப்புக்காரர்களாகிய அப்பெரியோர்கள் பொன்மணி முதலிய அரிய பொருள்களை யெடுத்தளிப்பார்கள். நாமும் அவற்றை யணிந்து ஆத்மாராமனுடைய திருவடிகளி லொன்றி, பேரானந்தப் பெருவாழ் வெய்துவோம். அத்தகைய நன்னெறியிற் செலுத்துமாறு வாலி காலனாகிய (மாயாரகிதனாகிய) ஸ்ரீராமச்சந்திரப் பெருமானை எக்காலும் இறைஞ்சுவோமாக.

 

ஆனந்த போதினி – 1931 ௵ -

நவம்பர், டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment