Tuesday, September 8, 2020

 ஸர். தி. முத்துஸ்வாமி ஐயர்

பிறப்பும் வளர்ப்பும்

 

திருவாரூர் முத்துசாமி ஐயர் தஞ்சாவூர் ஜில்லாவிலே உச்சுவடிஎன்னும் கிராமத்திலே ஓர் எளிய குடும்பத்திற் பிறந்தவர். அவர் பிதாவாகிய வெங்கடநாராயண சாஸ்திரியார் அவர் சிறு வயதாயிருக்கும்பொழுதே காலஞ் சென்றுவிட்டபடியால், அவரையும் அவர் சகோதரரையும் சம்ரக்ஷிக்கும் கடமை அவர்கள் தாயாரதாயிற்று. அவ்வம்மையார் தம்மிடத்திருந்த சொற்ப திரவியத்தோடு திருவாரூருக்குப் போயிருந்து அவ்விருவருக்கும் தமிழ் அரிவிரி முதலியன படிப்பித்தனர். அதற்குமேல் படிக்கப் பணம் இல்லாமல் போனதோடு முத்துசாமி ஐயர் அச் சிறுவயதிலேயே சம்பாதிக்கவும் நேர்ந்தது.


படிப்பும் உத்தியோகமும்

 

முதன் முதல் அவர் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் ஒரு கிராமக் கணக்கனுக்கு உதவியாளாக அமர்ந்தார். இந்த அற்ப சம்பாத்தியதைக் கூடஅவர் தாயார் நெடுநாள் அநுபவிக்கவில்லை; சிறிது நாளில் இறந்தனர். தாயார் இளமையில் தம்மை வளர்த்த நேர்மையை முத்துசாமி ஐயர் அடிக்கடி நன்றியறிவோடு சொல்லுவாராம். அவர்க்குக் கல்வியில் அவ்வளவு அபிலாஷை உண்டானது அவ்வம்மையாரால் தான். 1846 - ம் வருஷத்தில் முத்துசாமி ஐயர் அவ்விடத்துத் தாசில்தாராயிருந்த முத்துசாமி நாயக்கரைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு நதியின் அணை உடைப்புண்டதென்று செய்தி வர தாசில்தார் அதன் உண்மையறிந்து வரும்படி யாரையாவது போகச் சொல்வதற்காகச் கச்சேரிக்கு ஆள் அனுப்பினார். கச்சேரியில் முத்துசாமி ஐயர் ஒருவரே இருந்தபடியால், அவர் துணிந்து தாசில்தார் முன் வந்து நின்றார். தாசில்தாரும் காரியம் இன்ன தென்று சொல்ல, அவர் அவ்விடத்திற்குப் போய்ச் சகல விவரங்களையும் அறிந்து கொண்டு வந்து 'ரிப்போர்ட்' செய்தார். தாசில்தார் பிள்ளையாண்டனுடைய ரிப்போர்ட்டை 'உடனே நம்பவில்லையாயினும், தம்முடைய 'ஹெட்கிளார்க்' விவரமெல்லாம் சரியென்று சொன்ன பின் அதிகச்சந்தோஷ மடைக்தார். இன்னொரு முறை ஒரு மிராசுதார் தாசில்தாரிடத்து வந்து தாம்கொடுக்க வேண்டிய வரி பாக்கி எவ்வளவென்று கேட்டார்.

 

அம் மிராசுதாரருக்கு 20- கிராமங்களில் நிலங்கள் உண்டு; அவையும் தாலூகா முழுதும் சிதறுண்டு கிடக்கும். ஆதலால் தாசில்தார் தமக்கு ஒன்றும் சொல்லத் தோன்றாது அருகில் நின்ற முத்துசாமி ஐயரைப் பார்த்தார். அவர் உடனே கணக்குப் பண்ணி வரிபாக்கி எவ்வளவென்று சொன்னார். பின் ஒத்துப் பார்த்த பொழுது கணக்குச் சரியாயிருந்தது. இந்தவிதமாக இரண்டொரு சங்கதிகளில் முத்து சாமி ஐயர் சாமர்த்தியத்தைக் கண்டு முத்துசாமி நாயக்கர் அவரிடத்து மிகுந்த பக்ஷமும் மரியாதையு முடையவரானார்; அன்றியும் அவர் முன்னுக்கு வரக்கூடிய பிள்ளையென்றும் உறுதியாக எண்ணினார்.

 

தாசில்தார் தம்மை எவ்வளவுதான் மெச்சினாலுங் கூட அவர் கச்சேரியிலேயே தங்கிவிட்டால் முன்னுக்கு வருவது எப்படி என்று முத்துஸாமி ஐயருக்கு ஒருவித அதிருப்தி யுண்டாயிற்று. திருவாரூரில் ஒரு ப்ரைமரி "பாடசாலை இருந்தது. தமக்கு ஓய்வான நேரங்களில் அப்பாடசாலைக்குச் சென்று, அவர் முதலாவது இங்கிலீஷ் அரிவிரியைக் கற்றுகொண்டார். அவர் ஊக்கத்தை அறிந்த தாசில்தார், அவருக்கும் தமது மருமகனுக்கும் இங்கிலீஷ் முதல் வாசகத்தைக் கற்பித்துக் கொடுத்தார்.

 

இடையிலேயே கொஞ்சம் நிறுத்தி வைத்துப் பார்த்த பொழுது, தம் மருமகன் தான் விட்ட இடத்திலேயே இருக்க, பிராமணச் சிறுவர் புஸ்தகத்தை முடித்து விட்டதாகக் கண்டார். அவர் விடாமுயற்சிக்கு இதனைவிடவேறு என்ன அத்தாட்சி வேண்டும்! தாசில்தார் அவரை நாகபட்டணத்திற்குத் தம் சகோதரரிடத்து அனுப்பி அங்குள்ள மிஷன் ஸ்கூலில் படிக்கச் செய்தார், முத்துசாமி ஐபர் அங்கு ஒன்றரை வருஷம் தங்கி நன்றாய்ப் படித்தார். அப்புறம் தாசில்தாரே அவரை மதராஸ் ஹைஸ்கூலில் படிக்கும்படி சிபார்சுக் கடிதங்களோடு சென்னைக்கு அனுப்பினார். அந்நாள் கலாசாலைத் தலைவராயிருந்தவர் பவெல் துரை என்பவர்.

 

முத்துசாமி ஐயர் வெகு புத்திசாலி யெனப் பெயரெடுத்து வருஷந்தோறும் பரிசுகளும் 'ஸ்காலர்ஷிப்' களும் பெற்றார். அவருக்குக் கணிதத்தில் வெகு சாமர்த்திய முண்டு. வான சாஸ்திரத்தில் நல்ல பாண்டித்தியம் உண்டாயிற்று. தாசில்தாருக்குச் சிறந்த நண்பராகிய ஸர். ஹென்ரி மண்டகமரியும், கலாசாலைத் தலைவர் பவெல் துரையும் முத்துசாமி ஐயரிடத்து அதிகப்பிரீதி வைத்து அவர்க்கு வேண்டிய உதவி புரிந்தார்கள்.

 

தற்காலத்தில், மாணாக்கர்கள் தங்கள் போதகாசிரியர்களைச் சந்திப்பது அநேகமாய்க் கற்குமிட மொன்றிலே தான். அக்காலத்திலோ, காலாசாலைகளிற் கற்பதிலும் அதிகமாய், மாணாக்கர்கள் போதகாசிரியரோடு புறத்தே சம்பாஷணைகள் செய்வதனாற் கற்றுக் கொள்வது வழக்கமாயிருந்தது; மாணாக்கர்கள் சுருக்கமாயிருந்த அக்காலத்தில் அது சாத்தியமாயிருந்தது. முத்துசாமிஐயர் பவெல் துரையிடத்தில் அம்மாதிரி கற்றதற்கு அளவில்லை. பவெல்துரை இரவு 9- மணி வரை அவரோடு வார்த்தையாடிக் கொண்டிருந்து, பின்தம் வண்டியில் அவரை மயிலாப்பூர் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டுத் திரும்புவாராம்.


சன்மானங்கள்.

 

முத்துசாமி ஐயருக்கு எப்போதும் கல்வியிலேயே நாட்டம். அதனாலே அவர்க்கு அநேக சிறந்த பரிசுகள் கிடைத்தன. 1854 - ல் கல்விச் சங்கத்தார் 500 - ரூபாய் பரிசு ஒன்று ஏற்படுத்தி, ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, இதனைப்பற்றி இங்கிலீஷில் சிறந்த வியாசம் எழுதுபவர்க்கு அப்பரிசு அளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தினர். அதனை முத்துசாமி ஐயரே பெற்றார்.

 

அச்சங்கத்தின் காரியதரிசிகளாயிருந்த ஸர். அலெக்ஸான்றர் அர்பத்நட்துரையும், ஹாலொவே துரையும் முத்துசாமி ஐயர் புத்தியை மிகவும் வியந்தனர். அந்த ஐந்நூறு ரூபாயையும் அவர் கையிற் கொடுக்கும் போது பவெல் துரை, 'இது நீர் பின் சம்பாதிக்கும் பெருஞ் சொத்துக்கு மூலதனமாகும்' என்றனர். முத்துசாமி ஐயர் தாம் சாகும் வரை அந்தத் தொகையில் ஒருபைசா அளவும் செலவழித்தவரல்லர்.


(படிப்பும் உத்தியோகமும்)

 

முத்துசாமி ஐயரை வில் ஸெர்வீஸ் பரீக்ஷையில் தேரிவரும்படி இங்கிலாந்துக்கு அனுப்பவேண்டு மென்று பவெல் துரைக்கு நோக்கமுண்டு. ஆயினும், அவர்க்கு விவாகமாகி விட்டபடியாலும், கப்பற் பிரயாணம் செய்ய அப்பொழுது சம்மத மில்லாமையாலும் தடையேற்பட்டது. தம் படிப்புமுடித்தவுடன் முத்துசாமி ஐயர் ஹைஸ்கூலிலேயே மாதம் 60 - ரூபாய் பெற்றுக் கொண்டு உதவி உபாத்தியாயராய் இருந்தனர்.

 

பின், ஸர் ஹென்ரிமண்ட்சுமரி துரை அவரைத் தஞ்சாவூர்க் கலெக்டர் கச்சேரியில் 'ரெக்கார்ட் கீப்பராய் நியமித்தார். 1856 - ல் கல்வி விசாரணைக் கர்த்தர் ஸர் அலெக்ஸாண்டர் அர்பதநட் துரை அவரை மாதம் 150 – ரூபாய் கொடுத்துத் தம் இலாகாவில் இன்ஸ்பெக்டராக வரவழைத்துக் கொண்டார். அந்த உத்தியோகத்தில் முத்துசாமி ஐயர் நெடுநாள் இருக்கக்கூடவில்லை. மதசாஸ் கவர்ன்மெண்டார் வக்கீல் பரீக்ஷை யொன்று ஏற்படித்தினார்கள். அந்தப்பரீகை அநேக இடங்களில் நடந்தது.

 

கும்பகோணத்தில் நடந்ததற்குப் பலர் வந்தார்கள்; தேரினவர்கள் மூவரே; முத்துசாமி ஐயர் முதல்தரமாகவும், திவான்பகதூர் ரகுநாத ராயர் அடுத்தவராகவும் தேரினார்கள். அவ்விடத்தில் நீதிபதியாயிருந்த பீச்சம் துரை பரீஷையை நடத்தினார். பரீக்ஷையில் ஒரு பாகம், கோர்ட் ரெக்கார்டுகளை வைத்துக் கொண்டு தீர்ப்பு எழுதுதல். ஒரு கேஸின் ரெக்கார்டுகளை முத்துசாமி ஐயரிடத்தும் மற்றையோரிடத்தும் கொடுத்துத் தீர்ப்புச் சொல்லும்படி கேட்டபொழுது முத்துசாமி ஐயர் சொல்லிய தீர்ப்பு பீச்சம் துரை சொல்லிய தீர்ப்பாயே இருந்தது. உடனே துரைக்கு அவரிடத்தில் மிக்க மதிப்புண்டாயிற்று.

 

பீச்சம் துரை முத்துசாமி ஐயரைத் தரங்கம்பாடி முனிசீபாக நியமித்தார். சில நாளில், வேலையை அவர் நன்றாகப் பார்க்கிறாரென்று ஊர் எங்கும் பேர் உண்டாயிற்று. ஒரு தடவை, பீச்சம் துரை முன் அறிக்கையின்றிச் சென்று ஆபீஸ் சோதனை செய்ய எண்ணித் தரங்கம்பாடிக்குப் புறப்பட்டு வந்தார். அவர் வந்ததை யறிந்து முத்துசாமி ஐயர் அவரைத் தம் ஆபீசுக்கு வரவேண்டுமென்றும், தாம் விசாரணை செய்வதைப் பார்க்கவேண்டுமென்றும் வருந்திக் கேட்டார். பீச்சம் துரை அவ்வாறே போய்ப் பார்த்து அதிக வியப்பும் ஆனந்தமும் அடைந்தார். தஞ்சாவூருக்குத் திரும்பிவந்து, 'முத்துசாமிஐயர் என்னைப் போல ஒரு பெரிய நீதிபதியாக இருக்கத்தக்கவர்' என்றனர்.

 

முத்துசாசாமி ஐயர் முனிசீப் வேலையை விட்டு டெபுடி கலெக்டராக இருந்தார். அப்போது கலெக்டர் அவரை விசாரிக்கச் சொன்ன பெருங் கேஸ் ஒன்றில் ஜுன்புரூஸ் நார்ட்டன் வக்கீலாக ஆஜராயிருந்தார். பின்பு நார்ட்டன் துரை சென்னைக்குத் திரும்பி வந்து தமது சிநேகிதர் ஹாலொவே துரையையும், ஸர். அலெக்ஸாண்டர் அர்பத்கட்துரையையும் கண்டபொழுது,'உயர்ந்த நீதிபதிகட்குரிய சாமர்த்தியங்கள் ரெவினியூ இலாகாவில் பயனில்லாது பாழடைகின்றன' என்றுரைத்துப் பெருந் துக்கத்தை யடைந்தார்.

 

இதன்பின் (1865 - ல்) தென் கன்னடத்தில் சப் ஜட்ஜாக நியமிக்கப்பட்டார். 1868 - ல் போலீஸ் மாஜிஸ்ட்ரேட்டாக சென்னைக்கு மாற்றப்பட்டார். இவ் வுத்தியோகத்தி லிருக்கும்போதே ஹாலொவே துரையின் உதவியால் நியாய சாஸ்திரத்தின் அதிநுட்பங்களை நன்கு அறிந்து கொண்டார். அவர் மாஜிஸ்ட்ரேட் உத்தியோகத்தில் இருக்கும் போதே, ஒழிந்த நேரங்களிற் படித்து, பி. எல். பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். அவர் பின்னர் சென்னை ஸ்மால் காஸ் கோர்ட்டில் ஒரு ஜட்ஜாக நியமிக்கப்பட்டார். அவருடைய வேலைத் திறமையை மெச்சி, ஆக்டிங் கவர்னரா யிருந்த ஸர். அலெக்ஸான்டர் அர்பத்நட், அவரைத் தஞ்சாவூர் ஜில்லா ஜட்ஜாக நியமிக்கப் பிரயத்தனப்பட்டார். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை. 1877 - ல் டில்லியில் கூடிய தர்பாருக்குப் போகும்படி மதராஸ் கவர்ன்மெண்டார் அவரை வேண்டினார்கள். அவ்வாறே சென்று ராஜப் பிரதிநிதியால் ஒரு பொற் பதக்கம் அளிக்கப் பெற்றார். 1878 - ல் வி. ஐ. இ. பட்டம் கிடைத்தது. அதேவருஷத்தில் முத்துசாமி ஐயர் ஹைகோர்ட்டு நீதிபதி யாயினார்.

 

இந்தியருள் அவ்வளவு உயர்ந்த பதவிக்கு வந்தவர்கள் அவருக்கு முன் ஒருவரும் இல்லை. கொஞ்ச காலத்திற்குள் சிறந்த ஜட்ஜுகளுள் ஒருவரென எங்கும் அவரின் பெயர் முழங்கிற்று. சிலநாளில் கே. வி. ஐ. இ. பட்டமும் பெற்றார். இந்தியரும் ஐரோப்பியரும் ஒருங்கே இவரை வாழ்த்தினார்கள். 1895 - ம் வருடத்தில் திடீரென்று நோயுற்றுத் தம் தேசத்தவ ரெல்லாம் துக்கமுற இவ் வுலகம் விட்டுப் பரலோக மடைந்தார்.

 

இவர் பாலிய முதற்கொண்டே சுறுசுறுப்பும் பொறுமையும் நன்னடக்கையும் அடைந்தார். கலாசாலையில் வாசிக்கும் போது சிநேகிதரும், உபாத்தியாயர்களும் அவரை மெச்சினார்கள். அடக்கமும் பணிவும் அவரிடத்துக்காணப்பட்டச் சிறந்த குணங்களாகும். இவ்வளவு அருங்குணமும் நுண்ணறிவுமமைந்த இம் மகான் வாழ்க்கை கற்றோர்க்கே அன்றி மற்றுளோர்க்கும் நிதர்சன மாகல் வேண்டி அவரது பிரதிமை யொன்று சென்னைமா நகர் உயர் நீதிஸ்தலத்தில் நீதிபதிகளிருக்கைகளுக்கு அணித்ததாக வைத்துப் போற்றப்பட்டு வருகிறது.

 

ஆனந்த போதினி 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment