Monday, September 7, 2020

வியாஸ பாரதமும் - வில்லி பாரதமும் 

மகாபாரதம் என்னும் பெயருடைய புராதன நூல் ஒன்றே உலகத்தில் வெளிவந்திருக்கும் எல்லா நூல்களையும் விட விரிவுள்ளதென்பது துணிபு. இத்துணிபு வியாஸ பாரதத்தினால் தான் உறுதிப்படலாம். “கன்றிய வயிரிகள் காதும் காதையாகவே'' பெரும்பாலும் வழி நூல்களாக வெளிவந்துள்ள தமிழ்ப் பாரதங்கள் கொள்ளப்படுவதியல்பு.

 

முதல் நூலாகிய வியாஸ பாரதத்தில் கதாநாயகர்களின் சம்பந்தமான அம்சங்கள் பத்தில் ஒரு பங்குகூட இடம் பெறவில்லை. தருமம், அரசியல் முறை, உலகத் தோற்றம், ஆன்ம விலக்கணம், கடவுட்டன்மை, மெய்யுணர்வு பெறும்தன்மை, தவவலி, மஹாத்மாக்களாக விளங்கிய பாரத நாட்டுப் பெரியோர்களின் வாலாறு முதலிய இன்னம் பலபல அரிய பெரிய விடயங்களாலேயே மிக மிக விரிவுற்றிருக்கிறது. பலனை விரும்பாமல் கர்மம் செய்தல் வேண்டியதாகிய நிஷ்காமிய பிரவர்த்தியையும் அதற்கநுகுணமான பக்தி, ஞான, யோகமர்மங்களையும் உலகிற்கருளிய கீதையைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் பெருமையொன்றே பாரதத்தை அரியாதனத்தில் அமர் வித்ததாகும். உலகச் சிரேஷ்டர்களான லோகமான்யரும் மகாத்மா காந்தியடிகளும் தங்கள் இதயங்களில் முதன்மையாகக் கொண்டு ஆறுதலும் இன்பமும் பெறக் கீதையே காரணமாய் விளங்கியதென்னில் பிற சிறப்பும் வேண்டுமோ?

 

பொதுவாக உலகில் மனித தெருக்கிருக்க வேண்டிய உத்தம குணங்களுக்கும், வைராக்கிய வன்மைக்கும், கலைப்பயிற்சிக்கும், தத்துவ ஞானத்திற்கும், உதாரச் சிறப்பிற்கும், நட்பின் திண்மைக்கும், ஒழுக்கப் பயிற்சிக்கும், ஒற்றுமையின் பெருமைக்கும், புஜபலத்திற்கும் தவ உறுதிக்கும், நிகரில்லாத துன்மார்க்கத்திற்கும், சுயநலத்திற்கும், வஞ்சத்திற்கும், மோசம் பேராசையாகிய கீழ்மைக்குணங்கள் அனைத்திற்கும் தனித்தனி ஒவ்வொருவரைச் சித்தரித்துக் காட்டியுள்ள மிகமிகப் பெரியதும் சிறந்ததுமான இக் காவியத்திற்கிணையாக வரையப்பட்டுள்ளதொரு எழுத்தோவியம் எத்தேசங்களிலும் இராதென்பது திண்ணம். தர்மமும் அதர்மமும், பொறுமையும் கோபமும், இன்பமும் துன்பமும், பாவமும் புண்ணியமும் ஒன்றையொன்று முழுவலியுடன் எதிர்ப்பதென்பதும் முடிவில் தர்மமே ஜெயம் பெறுமென்பதையும் அதர்மம் நசிக்கும் என்பதையும் முடித்துக் காட்டிய சான்றே பாரதமெனல் நுண்ணறிவாளர் துணியத்தகும். இடையிடையே காலக்கிரமத்தில் இதனைக் கையாளும் வாய்ப்பு நேரப்பெற்ற பலரின் விருப்பத்திற் கேற்பப் பல பல இடைச் செருகல்களும் கதை மாற்றங்களும் விரவியதில் வியப்பொன்றுமில்லை.

 

நிகழ்கால வர்த்தமானங்களைக் கூட உள்ள துள்ள படி கொள்ள முடியவில்லை யென்பதும், கூட்டல் குறைத்தல் ஏற்படுகின்ற தென்பதும் அநுபவம். அவ்வாறிருக்க ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த நூலொன்றில் பெரும் பெரும் மாறுபாடுகள் இடம் பெற்றிருக்கக் கூடுமென்பது சர்வ சாதாரணம். எனினும் எல்லாப் பாஷைகளிலும் உரைப் பகுதிகளை மாற்றுவது போல் செய்யுட் பகுதிகளில் மாற்ற முயல்வது எளிதல்ல. அதிலும் வியாஸ பாரதச் சுலோகங்கள், வடமொழியில் விசேஷ பாண்டித்யம் பெற்றவர்கட்கே பொருள் தெளியக்கூடியதாக அமைந்துள. தற்காலத்திலும் அம் மொழிப் புலமையாளர்களில் பலரும் வான்மீகி பகவானால் இயற்றப்பட்ட ராமாயண சுலோகங்கட்குப் பொருள் விரிக்க முந்துவர். ஆனால் வியாஸ பாரதத்திற்கு மிகச் சிலரே பொருள் விரிக்க முற்படலாம். தமிழ் வைத்திய முறைகளைக் கூறும் செய்யுள் வடிவுகொண்ட நூல்கள் பலவற்றிலும் தேரையர் இயற்றியுள்ள வைத்திய பாகத்தைக் குறிக்கும் செய்யுள்கள் எப்படிச் சிறந்து பாவலர்க் கின்பம் பயக்கின்றதோ அவ்வாறே வியாஸபாரத சுலோகங்களும் எனக் கூறுவது மிகையன்று, எனவே இம்மாபெருங் காவிய இன்பம் நந்தமிழ் நாட்டினர்க்கு எட்டாக் கிளையில் கட்டா நின்ற தேன் கூடாகவே யிருந்து வந்தது. இக்குறையைச் சமீபகாலத்தில் நீக்கும் புனித முயற்சியில் கண்ணபிரான் திருவருட் பிரசாத பலத்தினால் ஈடுபட்டு வியாஸபாரத சுலோகங்களின் பொருளைத் தமிழ்மொழியில் வடித்து உதவிய கும்பகோணம் காலேஜ் ஸம்ஸ்கிருத பண்டித மஹாவித்வான் சதாவதானம் ஸ்ரீ. உ. வே. தி. ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்கட்கு இத் தமிழுலகம் என்றென்றும் கைம்மாறிழைக்கக் கடமைப்பட்டுளது. ஒப்புயர்வற்ற எப்பெரு முயற்சியாளர்களையும் ஆதரித்து ஊக்கமளிக்கும் நல்லியற்கை நந்தமிழ் மக்களிடம் ஓங்கி நிற்கவில்லை யென்பதை நாம் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியதே. நாடு செழித்து உரிமை யெய்தினாலன்றி இக்குறை நீங்காதென்றே சொல்லலாம். தலை நிமிர்ந்த இதர தேசங்களை யெல்லாம் விசாரிப்போமாயின் கலை வளர்ச்சியும், மொழி பெயர்ப்பு நூல்களின் பெருக்கமும், பெண்களின் விழிப்புமே தலை சிறந்த காரணங்களாகத் திகழ்வது விளங்கும். இவ்விடயத்தினைப் பற்றி எழுதப்புகின் அஃதோர் கட்டுரையாக விரியும். இனி எடுத்துக் கொண்ட விடயத்தைப்பற்றிச் சிந்திப்போம். மேலேகூறிய பெரியாரின் அரிதினும் அரிய விடா முயற்சியைப் பாராட்டிப் புத்தகவடிவில் அச்சிட்டு உபகரிக்க முன்வந்தவர்களை அடுத்தாற்போல் வணங்கிப் போற்றுதல் அறிஞர் கடனாகும்.

 

இவ்வாறு வெளிவந்த பர்வங்களில் சிலவற்றைக் கண்ணுற நேர்ந்த போது தமியேன் அடைந்த வியப்பினையும் ஆறுதலையும் இங்கு எழுத்தில் விவரிக்கும் ஆற்றல் எனக்கில்லை யென்றே கூறுவேன். என்னையெனின் சுமார் 35 ஆண்டுகட்கு முன், முதல் முதலாக வில்லிபாரதம் படிக்க நேர்ந்தது. அஞ்ஞான்று பழம் பொருந்து சருக்கத்தில் காணப்படும் பாஞ்சாலி கூற்றாக வரையப்பட்டுள்ள,

 

"ஐம்புலன் களும் போல் ஐவரும் பதிகளாகவும் இன்னம் வேறொருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்குருகும் இறைவனே எனது பேரிதயம்

அம்புவி தனிற்பெண் பிறந்தவரெவர்க்கும் ஆடவர் இலாமையினல்லால் நம்புதற்குளதோ என்றனள் வசிட்டன் நல்லறமனைவியே யனையாள்”

 

என்ற செய்யுள் என்னைத் திடுக்கிடச் செய்தது. செய்புளில் அமைந்திருந்த சொல்லின்பமும் எனக்கு வெறுப்பாயிற்று.

 

பெண் தன்மையை உண்மைக்கும் இயற்கைக்கும் மாறாக நடுங்காது கூறப்பட்டிருக்கும் பாக்களை நீதிநெறி விளக்கம் காசிகாண்டம் முதலிய நூல் களின் இடையே கண்டு அருவருப்புற்றதுண்டு. ஆயினும் அவைகளை யியற் றியவர்களின் அறியாமையோ? அல்லது அவரவர் சொந்த அனுபவமோ இவ்வாறு வரையச் செய்ததெனப் புறக்கணிக்க இடமளித்தது. அவ்வாறின்றி ஐந்தாம் வேதமென்று போற்றப்பட்டதும் வேத வியாஸ பகவானால் வரை யப்பட்டதும் ஒப்புயர்வற்ற பகவத்கீதையையே தன்னுட் மாகிய பெரிய இதிஹாஸமாகிய பாரதத்தில் பிரதான அரசியும் அனலிற் பிறந்தவளுமாகிய பாஞ்சால குமாரியே இவ்வாறு உறுதி கூறியதாக வரைந்துள்ள தென்பது எவ்வறிவையும் கலக்கத் தக்கதன்றோ? அதன் மேலும் அப்படிக்கூறிய பெண் வசிட்டரின் தரும் பத்தினியாகிய கற்புக் கடவுளுக்கு ஒப்பானவள் என்றும் சாஸனப்படுத்தியுளது. இத்தகைய அடாப்பழியைத் தமிழ்ப் புலவர்கள் கண்டிக்க முன் வராத காரணம் யாதோ? உண்மையில் பெண் புலமையாளர் குன்றியதினாலேயே இது மறுக்கப்படாமல் இருந்ததென்று எண்ணாமலிருக்க முடியவில்லை. பெண்ணின் இயற்கைப் பெருமையை நம் தமிழ்ப் புலவர்கள் பாதுகாக்க விரைந்தார் இல்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேறும் வேண்டுமோ?

 

இவ்வித நீதியற்றதும் சமூகத்திற்கே அவமானம் இழைப்பதுமாகிய அபிப்பிராயங்கள் முதல் நூலாகிய வடமொழி வியாஸ பாரதத்திலும் உண்டோ? என்னும் ஐயமும் எழுந்தது. அதனையறியும் பொருட்டு அம்மொழிப் பண்டிதர்களை நாடித் தேடி வினாவிய போது பழம் பொருந்து சருக்கம் என்பதே வியாஸபாரதத்தில் கிடையாதென்று கூறினார்கள். அவ்விடை கிடைக்குமளவும் கண்ட கண்ட தமிழ்ப் புலவர்களிடமெல்லாம் இதைப்பற்றிக் கலந்து கேட்பது தான் முதல் வேலையாகவிருந்தது. ஆனால் அனைவரும் ஷசெய்யுளுக்குப் பொருள் வேறுவிதமாகச் செய்யலாமோ? என அமையாத யுக்திகளெல்லாம் புகுத்திப் பார்க்க முந்தினர். அந்தோ! ஆறுதல் தரும் வழிகாண முடியவில்லை. இந்த இல்லாத சருக்கமும் பொல்லாத அநீதியும் வில்லிபாரதத்தில் எப்படி இடம் பெற்றதென்பது இன்னமும் தெளியக்கூடவில்லை. முதல் நூலில் இப்பழிமொழி இல்லையென்பதை யுணர்ந்த நாள் தொட்டு வியாஸ பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பு எவரால் வெளிவரப் போகின்றதென்று தவம் கிடந்த எளியேனுள்ளம், இப்போது கிடைத்த மேலே சுட்டிய மஹா வித்வான் சதாவதானம் ஸ்ரீ. உபய. வே. தி. ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்கள் மொழி பெயர்ப்பு நூலைக்கண்டு ஆறுதல் பெற்றதில் அதிசயம் உண்டோ? இத்தகைய பெருந்தவறு வில்லிபாரதத்தில் எவ்வாறு நுழைந்த தென்பதே எனது வியப்பிற்குக் காரணம். தமிழில் பெருந்தேவனார் நல்லாப்பிள்ளை என்பார் பாரதத்தினை இயற்றியுள்ளார்கள். எனினும் இதனை மறுத்ததாகக் காணப் படவில்லை.

 

சென்னையில் ஹாமில்டன் ஞாபகார்த்த வாராவதி ஆங்கிலம் அறியாத் தமிழர் வாயில் அம்பட்டன் வாராவதியாக வழங்கி, தமிழ் ஆங்கிலம் இரண்டும் உணர்ந்த நம் இளவல்களால் பார்பர்ஸ் பிரிட்ஜ் எனக் கூசாமல் உருவங் கொண்டு தவழ்வதற்கே இதை ஒப்பிடலாமன்றி வேறென் சொல்வது. இது மட்டில் அன்று; வடமொழி வியாஸ பாரதத்திற்கும் தமிழ்ப் பாரதங்களாகிய வழி நூல்களுக்கும் பலப்பல கதை வேற்றுமைகளும் காண்பதற் கெளிதாகவுள். வேற்றுமைகளில் ஒன்றாவது நமது சமூகத்திற்குப் பெருமை தருவதாகவும் இல்லை. அவைகளைத் தனித்தனி ஆராய்ந்து உண்மை காண்பது கற்றோர்தலைக் கடனாகும். ஈண்டு முதலாவதாகக் குறிப்பிட விரைவது பொதுவாகப் பெண்ணின் இயல்பான பெருமைக்குக் கேடு சூழ்ந்தமையைப் பற்றியதே யாகும். பாரத பாத்திரங்களில் பிரதான பட்ட மகிஷியாகிய ஒப்பில்லாத பதி பக்தி உடைய காந்தாரி என்னும் திருதராஷ்டிர பத்தினியை மகா துன்மார்க்க குணமுள்ளவளும், சுயநலமும், வஞ்சகமும் நிரம்பியவளும் பாவகாரியானதன் மகன் துரியோதனனை ஆதரிப்பவளுமாக வழி நூல்களில் வருணித்திருப்பது மிகமிகக் கேவலம் என எண்ணும்படி வியாஸ பாரத வரலாறு சித்தரிக்கப்பட்டுளது.

 

காந்தாரி என்னும் கற்பரசி தனது கணவனாக அமைந்தவர் கண் இல்லாதவர் என அறிந்த வுடனேயே தனது கண்களையும் வஸ்திரத்தால் பொதிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அத்தகைய வைராக்கியம் கொண்டு உலகக் காட்சிகளையே காண வெறுத்தவர் காந்தாரியம்மையார். அவர் துரியோத பாதனன் பிறந்த போது உண்டான உற்பாதங்களைக் கூர்ந்து கவனித்து அந்தச் சிசுவினால் அரசுக்கும் தேசத்திற்கும் விபத்துக்கள் விளையுமென அஞ்சி அத்தகைய தலைமகவின் மீது அன்பை மறந்து தரும சாஸ்திரவிதிப்படி அம்மகவினை இராஜ மாளிகையில் வைத்து வளர்க்கக்கூடாதெனக் கணவனிடம் கூறிய தாகத் தெரிகிறது. பின்னர் துரியோதனனால் குடும்பத்தில் கலகம் நிகழ்ந்த சமயங்களிலெல்லாம் புதல்வனை அரசுரிமையினின்றும் உத்தம குணமுடையவரான பாண்டு மகாராஜனின் புத்திரராகிய தருமகந்தனருக்கு முடிபுனைந்து தருமந் தவறாது செங்கோல் செலுத்தும்படிப் பெரிய அரசனிடம் ஆலோசனை கூறியிருக்கிறதாய்க் காணப்படுகிறது.

 

யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் கூட பல தருணங்களில் அரசனிடம் அணுகி, ஆதிமுதலாகவே தன் ஆலோசனையை யேற்காமல் புத்திரவாஞ்சையினால் அவன் செய்கைகளை யெல்லாம் அவ்வப்போதும் ஆதரித்து வந்து, போலிக் கண்ணீர் வடித்து, தம்பியின் மைந்தர்கட்கு இழைத்த துரோகத்தைச் சுட்டிக்காட்டி, எவராலும் தடுக்க முடியாத போர் மூண்ட பிறகு வருந்துவதில் பயன் உண்டோவென வாதாடியதாகவும் தெரிகிறது. காந்தாரியைப் போன்ற நியாயத்தில் நிலைத்த புத்தியுடைய மாதர்கள் இல்லையென்றே விளங்குகின்றது. தமிழ்மொழியில் உள்ள பாரதங்களைப் படித்தால் காந்தாரிபோன்ற நிந்திக்கத்தக்க ஸ்திரீ இல்லையென்றே எண்ணலாம். அகங்காரமுள்ள பெண்களை காந்தாரி என்றழைக்கும் உலக வழக்கே இதற்குப் போதிய சான்றாகும். எவ்வாறாகவோ பெண்களைக் குறைவுபடுத்துவது ஆண்மகனுக்குப் பெருமை தரும் ஒரு கடமையாக எண்ணிய ஒரு சிலர் - இடைக் காலத்தில் பாமரர்களே யன்றிப் பண்டிதரிலும் இருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் அறியாமைக்கு என் செய்வது? கற்றவர்களிலும் பலர் உலகையறியும் பேரறிவு பெறாமல் எழுத்துக்களைச் சுமந்த புத்தகத் தாள்களைப் போல வாழ்காள் கடத்துகின்றனர். இத்தகையார் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற மூதாட்டியார் வாக்கின்படி நாவின் பழக்கத்தினால் தாம் கற்ற நூல்களில் உள்ள கருத்துக்களைத் தாம் உட்கொண்ட வகைக்கு ஏற்பப் பாடலாகப் புனைந்து விடுகின்றனர். பாடல் வடிவத்தைக் கண்டாலே பயந்து எப்படிப் படிப்பதெனத் தயங்கும் தற்கால இளைஞர்கள் பலருக்கும் உலகமறியாது கவிபாடும் அறிஞர் வாக்குக் கடவுள் வாக்காகப்படுகின்றது. ஆகவே தவறுகளுக்கும் மாமூல் பாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. விரிந்த மனமுடைய சான்றோர்கள் இவற்றைப் புறக்கணியாது களைந்தொழிக்க வேண்டியது உலகிற்கிழைக்கும் அறத் தொண்டாகும்.

 

இதுவன்றி மகாபாரதத்தில் காணப்படும் காந்தாரி யம்மைக்கு அடுத்த அரசி யாகியவரும் பாண்டவரைப் பெற்றெடுத்த பாக்கியவதியுமாகிய குந்திதேவியாரின் அபச நீதி, ஆலோசனைத் திறம், தாயின் கடமை முதலிய பண்புகளைத் தனித் தனி எடுத்துக் காட்டுதல் அவசியம். பாரதப் பூங்காவனம், பரதகுல மாதர்களின் அறிவு, பணிவு, ஒழுக்கம், கற்பு, உறுதி, தியாகம், சாந்திமுதலிய பலவகை மலர்களினால் நறுமணம் வீசிப் பொலிகின்றதாகவே காய்தல் உவத்தல் இன்றிக் காண்போர்க்கு விளங்கும்.

 

திரௌபதா தேவி அரச மன்றத்தில் மாயச்சூதாடி யாகம் இழந்ததாகக் கேட்டபோதும், தருமநந்தனர் தம்மை முதலில் தோற்றுப் பிறகு என்னைத் தோற்றாரா? என்னைப் பணயம் வைத்தாடிய பிறகு தன்னைத் தோற்றனரா? எனக் கேட்ட நீதி நுட்பத்திற்கு விடைபகர முடியாமல் அரசர் கூட்டங்களெல்லாம் ஊமர் சணம் போல் விழித்ததென நமது வில்லிபுத் தூராழ்வாரூம் அறிவுடைய விகர்ணன் வாயிலாக வழங்குகின்றனர். பின்னும் அப்பாஞ்சாலி இறுதியில் தருமரை நோக்கிச் சூதாட்டத்தினால் ஏற்படுத்திக் கொண்ட அடிமைத்தனத்தை சூதாட்டத்தினால் நீக்கிக்கொண்ட பிறகே வனம் புகுதல் வேண்டுமென அறிவறுத்தியதும், பணயப் பொருள் இல்லையெனக் கவன் எறவேந்தருக்குத் தமது தருமத்தை நினைவூட்டியதும் சிறிய சான்றுகளா? ஒவ்வொன்றினையும் விரித்தெழுத விரும்புவதாலும் கட்டுரை நீண்டு விட்டதாலும் இம்முறை இவ்வனவோடு நிறுத்தலாயிற்று.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment