Monday, September 7, 2020

 

வேம்பின் குணம்

இந்தியாவிலும் பர்மாவிலும் வேப்ப மரங்கள் ஏராளம். வேம்பைத் தமிழில் வேப்பமரம் என்றும், தெலுங்கில்'' வேப்ப மானு'' என்றும், கன்னடத்தில் " பேவின் மர'' என்றும் ஆங்கிலத்தில் " மர்கோஸா ட்ரீ'' என்றங் கூறுவார்கள். இந்துக்கள் வேப்பமரத்தை தெய்வமாக அதாவது பராசக்தியாகப் போற்றுகிறார்கள். இதனால் மக்களுக்குண்டாகும் பெரும் பயன்கருதி யாரும் வெட்டி அழித்து விடாமல் நன்கு பாதுகாத்து வளர்த்து வரும் பொருட்டு நமது முன்னோர் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துவைத்தனர் என்று கொள்ளலாம்.

 

வேப்ப மரங்களை ஊரைச்சு ற்றியும் தோட்டங்களிலும் வீடுகளிலும் வைத்து வளர்த்தல் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதாரமாகும். வேப்பமரங்கள் அடர்ந்துள்ள கிராமங்களில் வேப்பங்காற்றை உட்கொள்வோ ரனைவரும் தேகாரோக்கியம் வாய்ந்தவராகவும் தூயமன முடையவராயும் காணப்படுவர். இம்மரங்கள் மிகுதியாக உள்ள ஊர்களில் விஷவாயு சம்பந்தமான வாந்திபேதி, பிளேக் சுரம், வைசூரி முதலான நோய்கள் பரவமாட்டா. நமது பெண்கள் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டுச் சேர்ந்து வளர்ந்த வேப்பமரத்தையும் அரசமரத்தையும் வலம் வருதலை நீங்கள் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் நாளொன்றுக்கு நூற்றெட்டுச் சுற்றாக ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் இவ்விதம் செய்வார்கள். இப்படிச் சுற்றி வருவதால் தேகப்பயிற்சி, சுவாச பந்தனம், சுவாசிக்கும் போது வேப்பங்காற்றுக் கலப்பதால் இரத்த சுத்தி, சூதகப்பை வீக்கம், சூதக வலி, சூதகலாயு முதலான வியாதிகள் நீங்கிப் புத்திரசந்தானம் உண்டாகும். புத்திரப்பேறு இல்லாத இளம் பெண்களைச் சாதாரணமாகச் சுற்றச் சொல்வது வழக்கம். அரசமரத்தின் காற்றும் இலையும் கருப்பப்பையின் நோய்களை நிவர்த்தி செய்யும்.

 

வேப்பங்கொத்தை ஒடித்துக் குழந்தைகளின் முகத்திற்கு நேரே விசிறியை வீசுவது போல் வீசி அதன் காந்றைக் குழந்தைகள் உட்கொள்ளும்படிச் செய்தால் அக்காற்றானது குழந்தைகளின் மனச்சோர்வு, அதனாற்காணும் சோகம் அற்பகாம் முதலியவற்றைப் போக்கிக் குதூகலத்தை உண்டாக்கும்.

 

அம்மை நோய் கண்டவர்களிடம் வேப்பிலையை வைத்திருந்தால் அந்நோயின் வேகம் குறைந்து விடுகிறதோம் உடம் பெரிச்சலும் விகாரமும் தோன்றாமலிருக்கும். இரத்தமும் விரைவில் சுத்தியாகிவிடுகிறது. வேப்பிலைக்கு நுண்ணிய அம்மைக் கிருமிகளையும் அவை வியாபிக்கும் போதுண்டாகும் துர்நாற்றத்தையும் தடுத்து இந்நோய் மேன்மேலும் பரவாமற் செய்யும்சக்தி மிகுதியும் உண்டு. வாந்தி பேதி வியாதிக்கும் இம்முறையையே அதுசரிக்க வேண்டும்.

 

புட்டாளம்மை என்னும் வியாதிக்கு வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து மேலே பூச வீக்கம் குறைந்து விடும். நிற்க, இந்த இலையை அரைத்து விரல்களிற் காணும் உகிர்ச்சுற்றுகளுக்கும், வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பற்றுப்போடலாம்.

 

ஒரு பிடி வேப்பிலையும் நாற்பது மிளகும் சேர்த்து அரைத்துச் சுண்டைக்காய் பிரமாணம் காலை மாலைகளிற் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள திமிர்ப்பூச்சிகள் நாசமாகும்; பித்தகுன்ம வியாதிகள் போகும்; அஜீரணம் நீங்கும்; சுரம் குறையும். வீட்டுக்குத் தூரமாகுங் காலத்தில் காணும் வயிற்று வலிக்கு அரைத்த வேப்பிலை சுண்டைக்காய் பிரமாணமும், பெருங்காயம் கடலைப் பிரமாணமும் ஒன்று சேர்த்து வீட்டுக்குத் தூரமான முதனாட்காலை அல்லது வீட்டுக்குத் தூரமான காலத்தில் ஒரு வேளை கொடுக்கக் சூதகவலி நீங்கிக் கருப்பம் தரிக்கும்.

 

காற்படி தண்ணீரில் ஒரு பிடி வேப்பிலையை இடித்துப் போட்டு அரைக்கால் படியாகச் சுண்டக் காய்ச்சி மூன்று மணி நேரத்திற்கொரு முறை ஒருஅவுன்ஸ் வீதம் உட்கொண்டால் விஷசுரம் நீங்கும், இரத்த விருத்தி உண்டாகும். இரத்தக் கொதிப்பு அடங்கும். இந்தக் கஷாயத்தை இரணங்களை அலம்பவும் உபயோகப்படுத்தலாம். ஆசனத்தின் மூலம் ''எனிமா'' எடுத்துக் கொண்டால் ஆசனக் கிருமிகள் நசித்து நமை நீங்கும்.

 

விஷநோய் காணுங் காலங்களில் வீடுகளிலும், அறைகளிலும், வாயிற் படிகளிலும், வீதிகளிலும் வேப்பிலையைக் கட்டி அதன் சத்துக்கலந்த காற்றை நாம் உட்கொண்டால் அவ்விஷ நோய்கள் அணுகமாட்டா.

 

வேப்பிலை 4 பங்கும், மிளகு 2 பங்கும், கொரிபாஷாணம் 1/16 பங்கும் சேர்த்துக் கல்வத்தில் போட்டு அரைத்துக் கடலைப் பிரமாணமாக மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி நாள் ஒன்றுக்கு 3 மாத்திரை காலை, உச்சி, மாலை வேளைகளில் ஒவ்வொன்றாகச் சாப்பிட்டு வந்தால் முறைக்காய்ச்சல், குளிர் சுரம் முதலியவை நீங்கும். சிறுவர்களுக்கு 1 மாத்திரையில் ¼ பங்கு முதல் 1/2 பங்கு வரை கொடுக்கலாம். வேண்டியவர்கள் பிணிக்குத் தகுந்தபடி கொரி பாஷாணத்திற்குப் பதிலாய் வீரம், தாளகம், பூரம், மயில் துத்தம், லிங்கம் ஆகிய இவைகளில் ஒன்றைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். சிலர் இம்முறையைப் புடம் போட்டு பஸ்பமாகவும் உபயோகிக்கிறார்கள். பஸ்பமானால் - கிரெயினிலிருந்து ஒரு கிரெயின் வரை நெய், தேன், வெள்ளாட்டுப்பால், வெண்ணெய், முலைப்பால் ஆகிய இவைகளில் அநுபானித்துக் கொடுக்கலாம்.

 

பாஷாணம் சேர்த்துச் செய்யப்படும் மருந்தை விஷசுரங்களுக்கும் குளிர் சுரங்களுக்கும் கொடுக்கலாம். இதைக் கஷாயங்களிலும் தேனிலுங் கொடுக்கலாம்.

 

தாளகம் சேர்ந்த மருந்தை கபவாத சுரங்களிலும், சுவாச காசங்களிலும் கஷாயம் அல்லது நெய்யில் கொடுக்கலாம்.

வீரம் சேர்ந்த மருந்தை பாரிச வாய்வு, கீல்வாய்வு, உஷ்ணவாய்வு கொடுக்கு வியாதிகளுக்குக் கொடுக்கலாம். அநுபானம் நெய் அல்லது பால்.

 

பூரம் சேர்ந்த மருந்தை விஷசுரம் மாந்தசுரம், பெண்களுக்கு உதிரத்தால் உண்டாகும் சுரம், உதிரச் சிக்கல், மேகப்புண் ஆகிய வியாதிகளுக்குக் கொடுக்கலாம். அநுபானம் முலைப்பால், வெள்ளாட்டுப்பால், தேன். குழந்தைகளுக்கு மிகவும் விசேஷமானது.

 

மயில் துத்தம் சேர்ந்த மருந்தை கல்லீரல் வீக்கம், சுரம், வயிற்றுவலி, வாந்தி ஆகிய இவைகளுக்கு உபயோகப்படும். அநுபானம் தேன், நெய், கஷாயங்கள்

 

லிங்கம் சேர்ந்த மருந்தை மேக சுரங்கள், வாத சுரங்கள், உஷ்ணபேதி சீதபேதிகளுக்குக் கொடுக்கலாம். அநுபானம் நெய், தேன்.

 

5 பலம் வேப்பிலையையும், 5 பலம் கரிமஞ்சளையும் இடித்து 4 படி தண்ணீரில் போட்டு ஒரு படியாகச் சுண்டக் காய்ச்சிக் கருப்பப்பையை அலம்பி வந்தால் அதிலுள்ள இரணம் ஆறி அழுக்கு வெளியாகும். கெர்ப்பஸ்திரீகளுக்கு மிகவும் உபயோகமானது. சரீரத்திலுள்ள எந்த இரணத்தைக் கழுவினாலும் சீக்கிரத்தில் ஆறும்.

 

1/2 வீசை வேப்பிலையை இடித்து 4 படி ஜலத்தில் கலந்து, படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 1 வீசை கற்கண்டு சேர்த்துச் சர்ப்பத்தாகச் செய்து காலை மாலைகளில் அவுன்ஸ் முதல் அவுன்ஸ் வரை உபயோகித்தால் நாட்பட்ட மேகசுரங்கள், விஷசுரங்கள், பலவீனம் முதலிய நோய்கள் நிவர்த்தியாகும். இரத்த சுத்தியையும் புத்தி சூட்சுமத்தையும் உண்டாக்கும்.

 

வேம்பின் ஈர்க்கைக் கஷாயம் வைத்து நாட்பட்ட சுரங்களுக்குக் கொடுப்பதுண்டு. வேறு மருந்தைக் கூட்டியுங் கொடுக்கலாம்.


 வேம்பின் தனித்தனி உறுப்பின் குணமும் உபயோகமும்.

 

வேம்பின் வேர்: - - முறை வியாதிகள், இரத்தசுத்தி, மேகசுரங்களுக்கு
நல்லது.


பட்டை - மேற்கூறிய வியாதிகளோடு சருமப் படைகள், மேகப்புண்களுக்கு உபயோகமாம்.


இலை: வீக்கங்கள், இரத்தசுத்தி, விஷக்கிருமிகளைக் கொல்லல், விஷவாய்வுகளைத் தடுத்துச் சுகாரத்தை உண்டு பண்ணல் முதலியவற்றிற்காகும்.
பழம்: - சுவாசக் குழாயின் இரணங்களை ஆற்றல், மூளைக்குப் பலம்கொடுத்தல், இரத்தத்திலுள்ள விஷங்களை மாற்றல் ஆதியவற்றிற்கு உபயோகமாம்.

 

கொட்டை - (உஷ்ன முள்ளது) சிர ரோகங்களை நீக்கல், கண்களுக்குக் குளிர்ச்சி தருதல்.


வேப்பம் நெய்: - (வேப்பெண்ணெய்) இரணங்களை ஆற்றல், விஷக்கிருமிகளைக் கொல்லல், உஷ்ணத்தை உண்டாக்கல், கல்லீரலின் வீக்கத்தைக் குறைத்தல்.


புஷ்பம்: - (உஷ்ண முள்ளது) இரத்த சுத்தி பித்தசாந்தி.


பிசின்: - இரனத்தை ஆற்றல், மூளைக்குப் பலங்கொடுத்தல், தாது விருத்தி செய்தல்.


வேப்பங்கள்: - - குஷ்ட நிவாரணம், ரசவாடையை நீக்கல், நரம்புக்ளுக்கு ஆண்மையைக் கொடுத்தல், தாது விருத்தி, வயிற்று இரணங்களைஆற்றல்.
 

குறிப்பு: - வேப்பம் பட்டை, வேப்பங் கொட்டை, வேப்பெண்ணெய், வேப்பம் பிசின் ஆகிய இவை மருந்துக்கடைகளில் கிடைக்கும். மற்றவைகளைச் சேகரம் செய்து கொள்ளலாம்.

கால் படி ஜலத்தில் அரைப்பலம் வேப்பம்வேர் சேர்த்து அரைக்கால் படி யாகச் சுண்டக்காய்ச்சிக் கஷாயம் வைத்துக் காலை மாலை 1 அவுன்ஸ் வீதம்சாப்பிட்டால் பித்த உன்மத்தம் நீங்கும்; நரம்புகளுக்குப் பலம் உண்டாகும்; இரத்தம் சுத்தியாகும்.

 

பட்டையின் தூளோடு சமபாகம் சர்க்கரை சேர்த்துக் காலை மாலைகளில் 20 முதல் 40 கிரெயின்ஸ் வரையில் உட்கொண்டால் ஒரு மண்டலத்தில்சருமரோகங்கள் நிவர்த்தியாகும். இரத்தம் சுத்தியாகும். புத்தி கூர்மையடையும். நாட்பட்ட 100 - வருஷத்திய மரத்தின் பட்டை மிகவும் நல்லது.100 வருஷத்திய மரத்தின் பட்டை இனிமையாயிருக்கும். மனம் ஒருமையடையச் சாதனை செய்வோர் உட்கொண்டால் மனச் சோர்வின்மையோடு புத்திசூட்சமமும் பெற்று அவர்கட்கு மனவொருமையும் விரைவில் சித்திக்கும். கால் படி ஜலத்தில் 1 பலம் பட்டையை இடித்துச் சேர்த்து அரைக்கால் படியாகச் சுண்டக் காய்ச்சிக் கஷாயம் வைத்துக் காலை மாலைகளில் 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் விஷ ஜுரம், நாட்பட்ட ஜுரம் ஆகிய இவைகள் நீங்கும். இரத்தசுத்தியும் உண்டாகும். பட்டையை லேகியங்களிலும் சேர்க்கலாம். இளமரத்துப் பட்டை நல்ல தல்ல. சுமார் 60 வருஷத்துக்கு மேற்பட்ட மரத்தின் பட்டையானது சருமவியாதிகளை நிவர்த்தி செய்யும். 100 வருஷத்திற்கு மேற்பட்ட மரத்தின் பட்டை மிகவும் சிரேஷ்டம். 100 வருஷத்திய வேப்பமரத்தின் பட்டையை 10 பலம் எடுத்து நன்றாக இடித்து 2 படிஜலம் விட்டு ஒரு மண்பாண்டத்தில் 12 மணிநேரம் ஊறவைத்து இதனோடு நிலவேம்பு 5 பலம், பற்பாடகம் 2 பலம், தோஷ்டம் 2 பலம், அதிவிடயம் 1 பலம், சுக்கு 1 பலம், பரங்கிச்சக்கை 2 பலம் ஆகிய இவைகளை இடித்துப் போட்டு 1 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு காலை மாலைகளில் 1. அவுன்ஸ் முதல் 2 அவுன்ஸ் வரை உட்கொண்டால் விஷஜுரம் 10 நாட்களில் குணமாகும். மறுபடியும் வராது. கொய்னா கூட மறுபடியும் ஜுரம் வரச்செய்யும். ஆனால் குறைந்த அவுன்ஸ் கொய்னாவைச் சாப்பிட்டால் 10 நாட்களுக்குரிய கஷாயத்தின் வேலை செய்யும். நாள்தோறும் கஷாயத்தைச் சூரிய ரஸ்மில் வைக்கவேண்டும். இல்லையேல் பூசணம் (பூர்ணம்) பிடித்துப் புளிப்பேறிவிடும். இதற்குப் பதிலாக மேற் சொல்லிய ஒருபடி கஷாயத்தில் 10 பலம் நல்ல வெல்லமும் 5 பலம் காட்டாத்திப் பூவும் கலந்து சீலை மண் செய்து 15 நாள் பூமியில் வைக்கத் திராவகமாக மாறி விடும். அல்லது ஓர் அறையின் மூலையில் 40 நாள் அசையாமல் வைக்கத் திராவக மாகிவிடும். இதைத்தான் அரிஷ்டம் என்பார்கள். இத்தகைய அரிஷ்டத்தை நாளொன்றுக்கு 3 அல்லது 4 முறை வேளைக்கு கால் அவுன்ஸிலிருந்து 1 அவுன்ஸ் வரை உட்கொள்ளலாம். இம்மருந்து இரத்தத்திலுள்ள விஷக் கிருமிகளைக் கொன்று இரத்த விருத்தியையும் இரத்த சுத்தியையும் உண்டாக்கும். இரத்தக் கெடுதியால் உண்டாகும் சொறி சிரங்கு, படை முதலிய வியாதிகளைப் போக்கும். மூளைக்கும் பலம் தரும்.

 

மூளைக்குப் பலம் தருவதில் மரப்பட்டையை விட வேரின் பட்டை உயர்ந்தது. பட்டையைக் காட்டிலும் வேர் சற்றுத் தீவிரமாய் வேலை செய்யக். கூடியது.

 

வேரும் பட்டையும் கல்லீரலிலும், மண்ணீரலிலும், இரத்தத்திலும் வேலை செய்யக்கூடியன. இவற்றைச் சிலர் வியாதிகள் வராமல் தடுக்குமென்று சர்க்கரையோடு கலந்து சாப்பிடுவதுமுண்டு. இம்மருந்தைக் கற்பமென்றும் சொல்லுவார்கள்.

 

வேப்பம்பழத்தின் மேல்தோல் மஞ்சளாயும் உட்புறம் ஒருவித வெள்ளை நிறமாயும் இருக்கும். இப்பழங்களைக் காகம், வௌவால் முதலிய பட்சிகள் சாப்பிடும். இதன் தோல் கசப்பாகவும் பழம் சிறிது கசந்த இனிமையாகவும் இருக்கும். இப்பழத்தைப் பிழிந்து தோலை எடுத்துவிட்டு 10 பலம் சத்துடன் பிஸ்தா பருப்பு 1 பலம், பாதாம் பருப்பு 1 பலம், சுரை விதை 1 பலம்,காசினிவிரை 1 பலம், வெள்ளரிவிதை 1 பலம், பனப்ஷா'1 பலம், சும்புலடிப் 1 பலம், தனிய 1 பலம், கர்பூஜ்விதை 1 பலம், சோம்பு 1 - பலம், கித்மிவிரை 1 - பலம், அதிமதுரம் 1 பலம், கொஸ்ப்பான் புஷ்பம் 1 பலம், விரைதிராட்சை 6 பலம் ஆகிய இவைகளுள் தூள் செய்யவேண்டுவனவற்றைத் தூள் செய்தும், அரைக்க வேண்டுவனவற்றை அரைத்தும் சேர்த்துக் கொண்டு 1 வீசை கற்கண்டும் 1 வீசை நெய்யுங்கூட்டி லேகியம் கிளரி கழற்சிக்காய் முதல் கொட்டைப்பாக்கு அளவு வரை உபயோகித்து வந்தால் நாட்பட்ட சுரம், சன்னிபாதசுரம், க்ஷயரோகம், சூதகவாய்வு முதலிய ரோகங்கள் நிவர்த்தியாவதோடு இருதயத்திற்கும் மூளைக்கும் பலம் ஏற்பட்டு தாது புஷ்டி உண்டாகும். இம்முறை பண்டைக்காலத்து நவாப்புகளால் பெரிதும் கொண்டாடப்பெற்று உபயோகிக்கப்பட்டதாகும். இவற்றையே ஷர்பத்தாகக் காய்ச்சுவது முண்டு. ஷர்பத்துக் காய்ச்ச மேற்கூறிய வஸ்துக்களை நன்றாக இடித்து 6 படி ஜலம் விட்டு 1 படியாகச் சுண்டக்காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வேளை 1 - க்கு 3 அவுன்ஸ் வீதம் நாளொன்றுக்கு 3 முறை கொடுக்கலாம். சன்னிபாத சுரங்களுக்கு 4 மணிநேரத்திற்கொரு முறை கொடுக்கலாம். இதை உபயோகிப்பதால் சன்னிபாத சுரங்களில் ஐஸ் வைக்க வேண்டிய பிரமேயம் ஏற்படாது. 102 டிக்கிரிக்கு மேல் போகாமல் சுரத்தைத் தடுத்துவிடும். 22 நாட்களுக்குள் சுகமா யிருக்கக் காணலாம். மேலே குறிப்பிட்ட வியாதிகளுக்குங் கொடுக்கலாம்.

 

விதை பித்தத்தை உண்டாக்கக் கூடியது. இதிலிருந்து நெய் எடுக்கலாம். விதையோடு கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, நெல்லிவித்து, கடுககாய்தோல் ஆகிய இவைகளைச் சமமாய்த் தூள் செய்து பாலி லரைத்துத் தலையில் தேய்த்து ஸ்நானம் செய்தால் மூளைக்குக் குளிர்ச்சி உண்டாகும். கண் எரிச்சல் நீங்கும். எண்ணெய் ஸ்நானம் செய்வதால் உண்டாகும் பலனை விட இந்த ஸ்நானத்தால் விசேஷ பலனைக் காணலாம். அதுவும் ஒரே தடவையில் தெரியவரும். தமிழ்நாட்டுச் சந்நியாசிகள் பெரும்பாலும் இதையே மாதம் ஒருமுறை தேய்த்து ஸ்நானம் செய்கிறார்கள். இதைப் பஞ்சகற்ப ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள்.

 

வீடுகளில் புஷ்பத்தை அநேகநாட்கள் வரை உலர்த்தி வைப்பதுண்டு. நெய்யில் வதக்கிய புஷ்பத்துடன் புளி, மிளகு, உப்பு, சீரகம், கருவேப்பிலை ஆகியவைகளைச் சேர்த்துத் துவையல் செய்து மருந்தாகவும் உணவுப் பொருளாகவும் உபயோகிக்கிறார்கள். சிலர் துவரைப் பருப்போடு சேர்த்து சாம்பார் செய்து பித்த சாந்திக்காக ஆகாரத்துடன் உட்கொள்ளுவார்கள். ரசமும் வைப்பதுண்டு. மற்றுஞ் சிலர் கஷாயமாகச் செய்து காலை மாலைகளிற் சாப்பிடுவார்கள். புஷ்பத்தையும் மிளகையும் நெய்யில் வாட்டி அரைத்துக் குழந்தைகளுக்கு வாரத்திற் கொரு முறை ஸ்நானம் செய்யும் தினத்தில் தாய்மார்கள் சுண்டைக்காயளவு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளின் வயிற்றிலுள்ள கிருமிகள் நாசமடையும்.

 

புஷ்பத்தாற் செய்யப்படும் மேற்கூறிய மருந்துகள் கல்லீரலிலுண்டாகும் பித்தத்தைச் சாந்தி செய்யும். வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மலத்தைத் தள்ளும்.

 

கொட்டையில் 100 க்கு 32 பங்கு எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்க்கு இரணத்தை ஆற்றுங் குணமுண்டு. புரையோடிய இரணங்களுக்குள் கண்ணாடி ஸ்ரிஞ்சு மூலம் எண்ணெயை உட்செலுத்தினால் இரணம் ஆறிவிடும். பாரிச வாய்வுகள் வேப்பெண்ணெயும் பெட்ரோலும் சமமாகக் கலந்து தேய்த்தால் குணமாகும். தென்னாட்டில் வேப்பெண்ணெயைச் சரீரம் முழுவதும் தேய்த்துக் கொள்ளுவார்கள். முக்கியமாய் தன வைசிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள் வேப்பெண்ணெயையே தலைக்குத் தேய்த்துஸ்நானம் செய்வார்கள்.
 

குழந்தைகளுக்கு வேப்பெண்ணெயைப் பலவித வஸ்துக்களிற் கலந்து கொடுப்பார்கள். வேப்பெண்ணெய் மலத்தைத் தள்ளக்கூடியது. கல்லீரலிலும் இரத்தத்திலும் வேலை செய்யக் கூடியது. கசப்புள்ளது.

 

1 வீசை வேப்பெண்ணெயில் 1 வீசை வெள்ளைப்பூண்டின் ரசமும் 1 பலம் பொரித்த பெருங்காயத் தூளும் 50 கோழி முட்டைகளின் மஞ்சட்கருவும் சேர்த்துக் காய்ச்சிக்கொள்ள வேண்டும். கோழி முட்டையின் மஞ்சட்கருவைத் தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு கிளரிக்கொண்டே வந்தால் கருப்பு நிறமாகமாறி எண்ணெய் கசியும்; இந்தப் பதத்தில் மேற்சொல்லிய வஸ்துக்களையும் எண்ணெயையும் கூட்டிக் காய்ச்ச வேண்டும். நெருப்பில் ஒருதுளி எண்ணெய் விட்டால் சிடுசிடுப்பில்லாமல் இருப்பின்பதம் என்று அறிந்து இறக்கி ஆறவிட்டு வடிகட்டிப் புட்டியில் பதனம் பண்ணி வைக்கவும்.

 

குழந்தைகளுக்கு 15 துளி முதல் 60 துளிவரை காலையிலும் 10 முதல் 30 துளிவரை மாலையிலும் முலைப்பாலிற் கலந்து கொடுத்தால் மாந்தம் என்னும் கல்லீரலின் வீக்கம் குறையும் 1 தடவை அல்லது 2 தடவை பேதியுமாகும். மந்தத்தால் காணும் வலி நீங்கும். ஆனால் அதிக சுரத்தால் காணும் வலி நிவர்த்தியாகாது. அத்தகைய வலிகளுக்குச் சுரத்தைக் குறைப்பதற்குரிய மருந்துகளையும் மேல் போடும் சிகிச்சைகளையும் செய்து கொள்ள வேண்டியது.

 

இந்த எண்ணெயில் 1 முதல் 2 அவுன்ஸ் வரை எடுத்து 1 குண்டுமணிஎடை கஸ்தூரியையுங் கலந்து 3 நாள் காலை மாலைகளிற் கொடுக்க சுகஜன்னி நீங்கும். பேச ஆரம்பிப்பார்கள். பாரிச வியாதிகளுக்கும் இதை உபயோகிக்கலாம். காலையில் இந்த எண்ணெயைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் (2 அல்லது 3 ஸ்நானங்களுக்குள்) எத்தனையோ வருஷம் கஷ்டம் கொடுத்து வந் தஒற்றைத் தலைவலி பிடரிவலி முதலியன நீங்கிவிடும். ஸ்நான தினத்தில் மிளகுரசம் சாதம் சாப்பிட வேண்டும். வேறு எத்தகைய வஸ்துக்களையும் உட் கொள்ளலாகாது. அன்றைய தினம் பகல் நித்திரையுங் கூடாது. இந்த எண்ணெயைச் சிறிது சூடேற்றிக் காதில் அடிக்கடி விட்டுவா காது குத்தல் உடனே நீங்கும். சில நாள் உபயோகித்தால் காதிலுள்ள இரணங்கள் ஆறிச் சீழ்வடிதல் நின்றுவிடும்.

 

இந்த எண்ணெயை அண்டத்தைலம் என்று சொல்லுவார்கள். சில வைத்தியர்கள் இந்த எண்ணெயைக் காய்ச்சும் போது இதனோடு 1 பலம் சுத்தி செய்த நேர்வாளத்தை அரைத்துக் கலக்கிக் காய்ச்சுவார்கள். இது அதிகம் பேதியாகச் செய்யும். குழந்தைகளுக்குக் காலையில் 1 வேளையே உபயோகித்தல் வேண்டும். 5 முதல் 300 துளிவரை கொடுக்கலாம். இம்மருர்தைக் காதுக்கும் தலைக்கும் உபயோகிக்கக்கூடாது.

 

சாதாரண வேப்பெண்ணெயும் மஞ்சளின் குழித்தைலமும் சேர்த்து இரணங்களுக்கும் பாரிச வாய்வுகளுக்கும் உபயோகிக்கலாம். இவ் வெண்ணெயில் ஒருதுளி நெருப்பில் விட்டுப் புகையை உட்கொண்டால் சளிப்பு, தொண்டைப் புண் ஆகிய வியாதிகள் நீங்கித் தொண்டைக் கம்மல் வாங்கும்.

 

வேப்பம் பிசின் சிறு கசப்புள்ளது; சிவப்பு நிறமுள்ளது. இதை இரத்த பேதியிலும் சீதபேதியிலும் உபயோகிக்கலாம். அரை அவுன்ஸ் சுத்த ஜலத்தில் 1 பலம் பிசினை ஊறவைத்து அதன் தெளிவை வேளைக்கு 1 அவுன்ஸ் வீதம் நாளொன்று 3 அல்லது 4 முறை கொடுக்கலாம். எத்தகைய காரமும் சேர்க்கலாகாது. இதைத் தாது விருத்தி லேகியங்களிலும் சேர்த்து உபயோகிக்கலாம். இது துவர்ப்புள்ளது; இரணங்களை ஆற்றக்கூடியது; தாது விருத்தி செய்யக்கூடியது.

 

வேப்பங்கள் இரண்டு வகைப்படும். 1. நாட்பட்ட மரங்களிலிருந்து இரண்டு மூன்று நாள் சப்தம் உண்டாகித் தானாகப் பால் வடிவது. இந்தப்பால் 4 அல்லது 5 நாள் வரை வடியும். 2. நமது முயற்சியால் தென்னங்கள் பனங்கள் இறக்குவது போல் இறக்கப்படுவது. இந்தக்கள்ளை உட்கொண்டால் மயக்கம் முதலான துற்குணங்கள் நிகழா. இக்காரணத்தால் இதைச் சிலர் கள் என்னாது பால் என்று சொல்லுவார்கள்.

 

(டாக்டர். மே. மாசிலாமணி முதலியார்.)

ஆனந்த போதினி – 1928 ௵ - அக்டோபர், டிசம்பர் ௴

No comments:

Post a Comment