Tuesday, September 8, 2020

 

ஸ்திரீ தர்மம்

 

(காரைக்குடியி லிருந்து மறைசைக்கிழார் எழுதியது.)

 

இந்தியாவில் ஸ்திரீ தர்மம் இன்னதெனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆன்றோர்களால் நன்கு வரையறுக்கப் பெற்றிருக்கின்றது. ஸ்திரீகளுக்கு இயற்கையாய் அமையப்பெற்ற குணங்கள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, ஆகிய நான்கெனவும் வலியுறுத்தப் பெற்றிருக்கின்றது. இக்குணங்கள் பொருந்தாதவள் காணப்படின் அவள் பார்வைக்கு ஸ்திரீயாக விருந்தபோதிலும் புருடத் தன்மை பொருந்தியவளே யாவள். இவள் இல்வாழ்க்கைக்குத் தக்க வளல்லள் என்பது இந்துக்களின் அடிப்படையான கொள்கையாம்.

 

பெண்களுக்குரிய முதன்மையான கடமை இல்லத்திலிருந்து ஆடவர் கொண்டு வரும் பொருளை வருங்காலமறிந்து சிக்கனமாய்ச் செலவு செய்வதும், புருடர் மனத்துக்கிணங்கி அவருடன் ஒற்றுமையாயிருந்து மக்களைப் பெற்றுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரவேண்டியதுமாகு மென்பதை எக்காலத்தும் எத்தேயத்தும் எச்சாதியாரும் அங்கீகரித்திருக்கின்றனர். மனையாள் கணவனுடன் ஒத்து வாழ்வதே இல்லறமென்பதைக் "காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே யின்பம்" என நமது மூதாட்டியார் கூறியிருக்கின்றனர். கணவன் மனதுக் கிணங்கிப் பெண்கள் நடவாவிடின் இல்வாழ்க்கை செவ்விதாய் நடைபெறா தென்பதையே நமது முன்னோர்கள் பலவாற்றாலும் வற்பு றுத்தியிருக்கின்றனர்.


 ''காதன் மனையாளுங் காதலனு மாறின்றித்
 தீதிலொரு கருமஞ் செய்பவே - ஓதுகலை
 எண்ணிரண்டு மொன்றுமதி யென் முகத்தாய் நோக்கறான்
 கண்ணிரண்டு மொன்றையே காண்.'


 ''மருவிய காதன் மனையாளும் தானும்
 இருவரும் பூண்டீர்ப்பி னல்லால் - ஒருவரால்
 இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான் சகடம்
 செல்லாது தெற்றிற்று நின்று. '

 

 "தருமமெனும் பண்டமிடும் சகடமா மனைவாழ்க்கைக்
 கரும நுகம் பிணித்துமனைக் காதலியுந் தானுமென
 விருவராய்ப் பூண்டிழுப்பி னெத் துணைத்தூ ரமுஞ்செல்லும்
 ஒருவராய்ப் பூண்டிழுப்பி னோரிறையுஞ் செல்லாதால்''

 

எனக் கணவனையும் மனைவியையும் இரு கண்களுக்கும் ஒரு சகடத்தில் கட்டிய இரு காளைகளுக்கும் அழகு பெறவும் பொருத்தமாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர். அன்றியும் மனையாள் கணவனுடன் ஒத்த அன்பினளாயிராவிடின், அதனைவிடக் கொடியது வேறொன்றுமில்லை யென்பதையே நமது ஒளவையாரவர்கள், கொடியது கேட்கின் நெடிய வெவ்வேலோய்


 கொடிது கொடிது வறுமை கொடிது
 அதனிலுங் கொடிது இளமையில் வறுமை
 அதனிலுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
 அதனிலுங் கொடிது அன்பிலாப் பெண்டிர்
 அதனிலுங் கொடிது
 இன்புற வவர்கையி லுண்பது தானே.

 

எனவும், புருடன் மனைவி ஒத்து வாழாவிடின் புருடன் துறவு பூண்பதே சிலாக்கிய மென்பதை


 "பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டானால்
 எத்தாலுங் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
 ஏறுமா றாக விருப்பாளே யாமாகிற்
 கூறாமற் சந்நியாசங் கொள்.''

 

என்னும் வெண்பாவினாலும் பெண்ணினத்தைச் சார்ந்த ஒளவையாரவர்களே விளக்கி யிருக்கிறார்கள்.

 

பெண்களுக்குச் சுயநிர்ணயம் கிடையாதென்பது நமது சாஸ்திரங்களின் கூற்றாம். மங்கையர்க்குரிய நிலைமை இல்வாழ்க்கையில் புருடருடன் கூடி வாழ்வதன்றிப் பிறிதொன்று மில்லை யென்பதும், இவர்கள் எப்போதும் புருடரின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்களே யன்றித் தனியாக யாதொன்றும் செய்யக்கூடியவர்களல்லர் என்பதும் தொன்று தொட்டு அநுபவத்தினால் கண்டறிந்த நமது கொள்கைகளாம். இதற்கு ஆதாரங்களாக நவீன சாஸ்திரோக்தமான நான்கு காரியங்களை எடுத்து விளக்குவாம்: (1) விவாகமாயினபின் ஸ்திரீகளே புருடர் இல்லத்துக்குப் போகிறதன்றிப் புருடர் ஸ்திரீகளின் இடத்துக்குச் சென்று வாழ்தலைச் சாதாரணமாய் எவ்விடத்தும் நாம் காண்பதில்லை. மாமனாரகம் சென்று வாழும் சில மாப்பிள்ளைமார்களின் பெருமையைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. (2) பெண்களுக்கு இயற்கையாகவே, புருடருக்கில்லாத, மென்மையான சரீர அமைப்பேயன்றி, ஸ்தனபாரம் பிரவிடைத் தோற்றங்கள், மகப்பேறுண்டாதல் ஆகிய இவை விசேடமாய் ஏற்பட்டிருக்கின்றமையால், பெண்களின் தேகம் எப்போதும் ஒருவித அசௌக் மயானகியத்துக்கிடமாகியதென தேகதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பின்ளைப் பேறு பெண்களுக்குப் புனர்ஜென்மமாகவே கருதப்படுகின்றது. இவ்வித அசௌகரியங்களினின்றும் பெண்கள் தங்களைக் காத்துக்கொள் வது கஷ்டமாகிறது. (3) குறிப்பிட்ட புருடன் பாதுகாப்பில் இருக்கும் பெண்களை விடத் தனியே யிருக்கும் ஸ்திரீகளே பரபுருடரின் ஆக்கிரமிப் புக்கும் தொந்தரவுக்கும் தப்புவது மிக அரிதாகிறது. (4) பராசரஸ்மிருதியில் விதவாவிவாகத்தைக் கண்டிக்குமிடத்து, புருடரை வித்துக்கும் பெண்டிரை க்ஷேத்திரத்துக்கும் உவமை கூறி, ஒரே வித்தை எவ்விதப் பூமியில் நட்டாலும் அந்த வித்துக்குரிய பயிரே உண்டாகிறதென்றும், ஒரே க்ஷேத்திரத்தில் பற்பல வகையான வித்துக்களைப் போடுங்கால் அவ்வவ்வகையான பயிர்களுண்டாகின்றனவென்றும், இவ்விதம் க்ஷேத் திரமன்றி வித்தே வித்தியாசமான பிறவித்தோற்றங்களுக்குக் காரண மாயிருப்பது போலவே, பெண்டிரல்லாது புருடரே பின் சந்ததியின் தோற்றங்களுக்குக் காரணமாயிருக்கின்றன ரென்பதை விளக்கிக் காட்டியுள்ளார். இதனால் பெண்டிர் தத்தமக்குரிய ஒரே புருடன் விசுவாசம் மாறாதிருத்தல் பின் சந்ததியின் பரிசுத்தத்துக்கு அவசியமென்பது பெறப் படுகின்றது.

 

இவ்வாறு நமது ஆன்றோர் அனுபவத்தில் அறிந்து அவர்களின் வழித் தோன்றல்களாகிய நமக்கு உதவி யிருக்கும் நல்லொழுக்கங்களைச் சென்ற ஐம்பது வருடங்களாக மேல் நாட்டு நவநாகரீகத்தைக் கண்டு, மதிமருண்ட விட்டிற் பூச்சி போல், நம்மவருட் சிலர் அதனை நம் நாட்டிற் புகுதவிடுத்து நமது சிறந்த ஒழுக்கங்களை நிலைகுலையச் செய்து வருகின்றனர். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரையில் மேனாட்டிலும், நம் நாட்டில் போலவே, புருடன் மனதிற் கிசைந்து ஒற்றுமையாய் இல்வாழவேண்டியதும் மக்கட்பெறுதலும் ஸ்திரீகளின் முக்கியமான கடமைகளெனயாவராலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டே அக்காலத்தில் ஷேக்ஸ்பியர் முதலிய கவிசிரேஷ்டர்களால் காவியங்கள் எழுதப்பெற்று இன்றும் அவைகள் யாவராலும் பொன்னேபோல் போற்றப்பெற்று நின்று நிலவுகின்றன. அக்காலத்தில் மேனாட்டில் ஸ்திரீகளை நம்நாட்டில் போலவே அபலைகளென்றும் மெல்லியர்களென்றும் கருதி அவர்களுக்கு ஆபத்துக்காலத்தில் உதவிபுரியும் ஆடவரின் வீரத்தன்மையை (Chivalry) எனச் சிலர் சிறப்பித்துக் கூறி வந்திருக்கிறார்கள். (Knights) சுத்த வீரரெனக் கூறப்பெற்றோர் யாவரும் இவ்வரிய குணத்தைக் கொண்டோராகவே யிருந்தனர். (இக்காலத்தில் இந்தப் பட்டம் சாமான்யர்களுக்கும் பொருள் நனிகொடுப்போருக்கும் தாராளமாய் வழங்கப்படுகின்றது.)

 

சென்ற நூறு வருடங்களாக மேனாட்டில் இராஜரீகம் (Monarchy) போய் (Democracy) குடியரசு தலையெடுத்து வலுவடைந்துவரவே, ஸ்திரீகளுக்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடும் கடமையும் நாளடைவில் தளர்ச்சி யடைந்து, இப்போது வெள்ளை நாரீமணிகள் விவாகக் கட்டுப்பாட்டை வெறுத்து எதேச்சைப் பிரியராய்த் தங்களுக்கே யுரியவிடமாகிய குடும்பத்தை விடுத்து ஆடவருக்கே யுரித்தா யிருந்த எல்லாத் தொழிற்றுறைகளையும் கைப்பற்ற வந்துவிட்டனர். இதனால் இப்போது மேனாட்டில் இல்லம் குலைந்து ஸ்திரீ புருட ஐக்கியம் நசித்து வருகிறது. ஸ்திரீ புருடருக்குள் மிருகசுபாவமான ஸ்பரிசமாம்ச இச்சை யுதிக்குங்கால், அதனை விலங்கு பறவைகளைப் போல் பூர்த்திசெய்து கொண்டு அப்பால் கூடி வாழ இசையாது பிரிந்து அவரவர் போக்குப்படியே போகின்றனர். அநேக ஸ்திரீகள் மக்களைப் பெற்று வளர்க்கும் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காகச் சில குயுக்தியான முறைகளை யனுஷ்டித்துப் புருடருடன் கூடிச்சுகித்து வருகின்றனர். இக்காலத்தில் விவாகம் செய்து கொண்டு ஸ்திரீகளை வைத்து நடத்திவருவது அசாத்தியமான காரியமென்று பயந்து மேனாட்டு ஆடவர் விவாகச் சடங்கை வெறுக்கின்றனர். மேனாட்டுப் பெண்களோவெனில், புருடருடன் கூடி அவர்கள் மனதுக்கிசைந்து வாழ்வதும் மகப்பெறுவதும், சுயேச்சையாய் நடப்பதற்கு இடையூறா யிருப்பதால், முடியாதென்று விவாகத்தை மறுக்கின்றனர். இவ்விதம் முக்கியமாய் பிரான்சில் விவாகம் செய்து கொள்ளக்கூடிய ஆடவரும் பெண்டிரும் பிரமசாரிகளாகவும் கன்னிகைகளாகவுமே மிகுந்திருப்பதால், மரணத்தினால் குறையும் ஜனத் தொகையை ஈடு செய்தற்கு வேண்டியவளவு ஜனனமில்லாது போய்விடுகிறதென்று கண்டு அதிகாரிகள் பலவித நூதனச் சட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். அவற்றில் அதிக மகப்பேறுடையாளுக்கு அரசாங்கத்தார் பரிசளித்தல்; யாருக்குப் பிறந்த பிள்ளையானாலும், பெற்றவட்குச் சிறிது காலம் வரையில் பொருளுதவி புரிதல்; குழந்தைகளின் மரணத்தைத் தடுத்துக் காப்பாற்றுவதற்கு வேண்டிய உதவி புரிதல், இவை போல்வன சிலவாம். ஜெர்மனியிலும் மகாயுத்தத்தின் பலனாக ஆடவர் தொகை குன்றிப் பெண்டிர் தொகை மிதமிஞ்சியிருப்பதால், புருடர் பல பெண்களுடனும் விவாகம் செய்யாமலே கூடிப் பெறும் மக்களை யரசாங்கத்தார் அங்கீகரித்துக் காத்து வருகின்றனர்.

 

இவ்வாறாகக் கீழ்நோக்கிச் செல்லும் மேனாட்டு நாகரீகம் நம் நாட்டில் நுழைந்ததன் பயனாய் நமது பெண்களுக்குள் முன்னில்லாத சுயேச்சைப் பிரியம், நாணமின்மை, அகம்பாவம், கூச்சமின்மை, அடக்கமின்மை இன்னவை யிறவும் தலையெடுத்து ஓங்க வளர்ந்து வருகின்றன. இதனால் இந்த நாட்டில் இந்நாளில் சந்தோஷகரமான இல்வாழ்க்கையைக் காண்பதே அரிதாகி வருகிறது. இப்போது நமது பெண்களின் ஒழுக்கம் எவ்வாறாயினதென்று கூறுவாம்: - (1) புருடனுக்கு அடங்காது எதிர்த்துப் பேசுதல், (2) அவனுக்குத் தெரியாது லேவாதேவி, சீட்டுப்போடுதல் முதலியன செய்தல், (3) அவனுக்குத் தெரியாது பணம் சேர்த்து வைத்தல், (4) அவனுக்குத் தெரியாது ஈன்றார் உடன் பிறந்தாருக்குப் பண உதவியும் மற்ற உதவிகளும் புரிதல். (5) அவன் விருப்பத்துக்கு மாறாக அவர்களைத் தன் இல்லத்தில் வைத்துக்கொள்ளுதல், (6) அவன் அநுமதியின்றி அடிக்கடி தாய்வீடேகுதல், (7) அவன் சம்மதமின்றியும் துணையின்றியும் பிறரகம் செல்லுதலும், விழாக்காணப் போதலும், (8) அவனில்லாத காலத்தில் தன்னை யலங்கரித்துக்கொள்ளுதல், சங்கீதம் பாடுதல், அயலாருடன் கூடி மகிழ்ச்சி கொண்டாடுதல், (9) அவன் பொருளீட்டிக்கொண்டு வரும் வரையில் அவனுடன் கூடிச் சுகித்திருந்து அஃதில்லாத காலத்தில் அவனைக் கடிந்து ஒதுக்குதல், இன்னவை பிறவுமாம்.

 

நமது நாட்டிலும் அகல்யாபாய், மீராபாய், மங்கம்மாள், மீனாட்சி முதலிய பெண்ணரசிகள் புருடரைப் போல வீரம் முதலிய குணங்களுடன் விளங்கவில்லையா என்ற கேள்வி பிறக்கலாம். இதற்கு விடை பகருவாம். எக்காலத்திலும் எந்நாட்டிலும் பொது விதியொன்றிருந்தால் அதற்கு விலக்கான புறநடையும் இருந்தேவரும். எல்லோரும் மகான்களும், சுத்தவீரரும், கவிசிரேஷ்டரும் ஆகிவிடமாட்டார்கள். குறிப்பிட்ட மாதரசிகள் உருவத்தில் பெண்களாயிருந்தாலும், ஆடவரிலும் பெண்டன்மையுடைய நபும்சகர் ஒரு சிலர் காணப்படுமாறேபோல், உள்ளத்தில் புருடரேயாவர். என்றாலும் அவர்களும் குறிப்பிட்ட ஒவ்வோர் ஆடவருக்குள் ஐக்கியமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் பூவுலகெங்கும் தனது திண்ணிய பலத்தால் பிரமிக்கச் செய்து வந்த தாராபாயும் தனது மனத்தையும் உடலையும் ஒரு புருடருக்குச் சமர்ப்பித்தமை யாவரும் அறிவர்.

 

மேற்கூறியவாற்றால் ஸ்திரீகள் புருடரின் கீழ் அடிமைகளாக நடத்தப்பட வேண்டியவர்களென்பது நமது கோட்பாடெனக் கொள்ள நியாயமில்லை. ஆனால் ஈண்டு வலியுறுத்திக் கூறிப் போந்தது, ஆடவர் பெண்டிர் இருவரும் மனமொத்து இல்வாழ்க்கையை நடத்தி வரவேண்டியது இவ்வுலக இன்பத்தை யநுபவித்தற்கு அவசியமென்பதேயாம். இந்நாளிலும் மேனாட்டில் இல்வாழ்க்கையிலிருக்கும் உத்தம ஸ்திரீகள் ஒரே வழிக்காணப்படுகின்றனர். அவர்கள் ஆடவர் மனத்தைக் காந்தமெனக் கவரும் சுலபமான வழிகள் சிலவற்றைப் பத்திரிகை வாயிலாய் வெளியிட்டிருக்கின்றனர். அவையாவன: (1) கணவனுக்குத் தெரியாமல் பணம் சேர்க்காதே, (2) அவனுக்குத் தெரியாமல் எந்தக் காரியமும் செய்யாதே, உன்னைப் பற்றிய காரியங்களில் எதையும் அவனுக்கு மறைத்து இரகசியமாய் வையாதே, (3) உன் தாய்வழி உறவினரை அடிக்கடி உன் இல்லத்திற் கழையாதே, (4) உன் வனப்பையும் அரிய கல்வியறிவையும் அவன் மகிழ்வெய்தும் படியான வழிகளிலன்றி வேறு மார்க்கங்களில் பிரயோகிக்காதே. நமது இதிகாசங்களில் கூட துரோபதைக்கும் சத்தியபாமைக்கும் கணவனை வசப்படுத்தும் வழிகளைக் குறித்துச் சம்வாதம் நிகழ்ந்தகாலத்துக் கணவன் மனதுக்கிசைய நடப்பதைத் தவிர்த்து வேறு இடுமருந்து கிடையாதெனத் துரோபதை சத்தியபாமைக்குப் போதித்ததாக ஒரு கதையுண்டு. இவ்விதமாகப் புருடரை அன்பு என்னும் பாசத்தால் வசப்படுத்தி வாழக்கூடிய பெண்களின் வாழ்க்கை எந்நாளும் சந்தோஷகர மான இன்பவாழ்க்கையாயிருப்பதையும், புருடருடன் ஒத்து வாழ முடியா மல் எதேச்சையாயிருக்கும் மங்கையரின் வாழ்க்கை சதாதுன்பத்துக் கிடமாயிருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

 

நமது பெண்களின் ஒழுக்கம் இக்காலத்தில் மாறுபட்டு வருவதற்கு முக்கிய காரணம், தற்கால மேனாட்டு முறையைப் பின்பற்றிய கல்விப் பயிற்சியேயாம். பிற்காலத்தில் நம் நாட்டுப் பெண்களில் கல்வி பயில்விக்க மிகுதியாய் முன் வந்தோர் கிறிஸ்தவ வகுப்பினரே யாவர். இவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவப் பாதிரிமார்களால் எற்படுத்தப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தமையால், இந்துமதப் பெண்களானாலும் நம் நாட்டுப் பெண்களுக்குரிய நடையுடை பாவனைகளும் ஆசாரங்களும் மாறுபட்டு மேனாட்டு ஒழுக்கங்களையே மிகுதியும் அநுஷ்டித்து வந்தனர். அதன் மேல் பாதிரிமார்களின் பாடசாலைகளில் நமது பெண்கள் கல்வி பயிலுவதால் நேரிடும் விபரீதங்களைக் கண்ணுற்ற நம் ஸநாதந தர்மக்கொள்கையை ஆதரிக்கும் புண்ணிய சீலர்கள் ஆங்காங்கே இந்து தர்மத்தைப் போதிக்கும் தேசியக் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி நமது பெண்மணிகளின் ஒழுக்க ஆசாரங்கள் கெட்டுப்போகாதபடி காப்பாற்ற முன்வந்தனர். பெண்களுக்குப் பெண்களே உபாத்தியாயர்களா யிருப்பது சிலாக்கியமாதல் பற்றிப் பெண் உபாத்தியாயர்களை நியமிக்கப் பார்ப்பதில் விபரீதமாய் முடிந்திருக்கிறது. எவ்வாறெனில், உபாத்தியாயர்களாய் வரும் பெண்கள் இந்து மதஸ்தர்களா யிருந்தபோதிலும் துரைத்தனத்தார் அல்லது பாதிரிமார்களின் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாயிருத்தலால், அவர்களின் ஆசார ஒழுக்கங்கள் நமது ஸநாதந தர்மத்துக்கு முற்றிலும்மாறாகவே யிருக்கின்றன. இத்தகைய ஸ்திரீகளிடம் கல்வி பயிலும் நம் சிறு பெண்கள் நம்முடைய ஆசாரங்களை எவ்வாறு சிலாக்கியமாகக் கொள்வர்? ஆகமொன்றிய ஆர்வலரை அவமதித்து அகலவிடுத்துச் சுயேச்சையாய்த் திரியும் நாரியரோ நம் அருமைச்சிறுமிகளுக்கு நமது ஸநாதந் தர்ம முறைப்படி கற்பியல் பயிலும் இல்லற வொழுக்கத்தைச் செவ்வனே கற்பிக்கவல்ல நல்லாசிரியைகளாவர்?

 

ஆங்கில துரைத்தனத்தார் அல்லது பாதிரிமார் கல்விச்சாலைகளில் உபாத்தியாயர்களின் உள் நடவடிக்கைகளைப்பற்றிக் கவனியாதிருப்பது சகஜமே. ஆனால் மேற்கூறிய பாடசாலைகளின் தீமையை உணர்ந்து அதை விலக்கி நமது பூர்வ ஸநாதந் தர்மக்கொள்கையைக் காப்பாற்றுவதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தேசிய பாடசாலைகளில் உபாத்தியாயர்களின் பாடசாலை வேலைத்திறமையை மாத்திரம் கவனித்து அவர்களின் சொந்த ஒழுக்கத்தைப்பற்றிக் கவனியாதிருப்பது தகுமா, நியாயமா, முறையாமா? தேசிய பாடசாலைகளை வைத்து நடத்துவோர் உபாத்தியாயர் இந்துவா யிருக்கவேண்டுமென வற்புறுத்துவதன் பயனென்னவாகிறது? இவர்களிற் சிலர் இந்து ஸ்திரீகளான போதனா-முறை பயின்ற உபாத்தினிகள் இப்போது கிடைப்பது அரிதாயிருப்பதால், கிடைக்கும் ஒரு சில உபாத்தியாயர்களின் உள் நடத்தையைப் பற்றிக் கவனிக்கப் புகுந்தால், சிறுவர் அட்டமணற் சோற்றில் கல்லாராய்வது போலாகுமாதலால், அதைப்பற்றிக் காதில் போட்டுக்கொள்ளாதிருத்தலே தக்க மார்க்கமெனக் கடைப்பிடித்திருக்கின்றனர். அரசாங்கத்தார் பாதிரிமார் பாடசாலைகளிலும் புருடரையும் மனைவியரையும் பிரித்து வைத்தல் கூடாதென்னும் கொள்கையை யநுசரித்து ஸ்திரீபுருடர் இருவரையும் ஒரே பாடசாலையில் உபாத்தியாயர்களாய் நியமிப்பது வழக்கமாயிருக்க, தேசிய பாடசாலைகளை வைத்து நடத்துவோர் புருடனை விட்டுப் பிரிந்து சுயேச்சைப் பிரியராய் வரும் ஸ்திரீகளை உபாத்தியாயர்களாய் நியமித்துக் கொள்வதே யன்றி ஏற்கனவே ஐக்கியமாகவிருந்த ஸ்திரீபுருடரைப் பிரித்துவிடும்படியான முறைகளையும் அநுஷ்டித்து வருகின்றது எவ்வளவு பரிதாபகரமானது? இவர்களின் கொள்கை நன்று! நன்று!! குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொண்டவாறுபோலும், வேலியே பயிரையழிப்பது போலும் இருக்கின்றது. இந்து ஸ்திரீ உபாத்தியாயர்கள் போதனாமுறை பயின்றவர்களாய்க் கிடைப்பது அரிதென்பது உண்மையே. ஆனால் அதற்காகக் கொள்கையை நழுவவிட்டுவிடலாமோ? இதனால் நன்னோக்கத்துடன் பாடசாலைகளை நடத்திவருவோர் உபாத்தியாயர்களின் ஒழுக்கக்குறைவை ஒருவாறு ஆதரிப்போராகின்றனரன்றோ? எந்த உபாத்தியாயரிடமேனும் தவறான நடத்தை காணப்பட்டால் உடனே ஆரம்பத்திலேயே அதனைக் கண்டித்துச் சீர்திருத்த வேண்டியது தேசீயப் பாடசாலைகளை வைத்து நடத்துவோரின் முதன்மையான கடமையன்றோ? நயத்திலும் பயத்திலும் சொல்லியும் கேளாது தவறான ஒழுக்கத்தைக் கைக்கொண்டிருக்கிற உபாத்தியாயர்களை வைத்துக்கொண்டிருப்பதில் அடையும் பயன் யாது அதைவிட அவர்களுக்குப் பிரதியாக ஆடவரை (வேண்டுமானால் வயது முதிர்ந்தோரை) நியமித்தல் சிலாக்கியமன்றோ?

 

இவ்வாறு நமது ஸ்திரீகளின் தர்மம் சீர்கெட்டு வருகின்றது. இதனைக் காக்கும் பொருட்டு ஏற்பட்ட தேசீயக் கல்விச்சாலைகளினாலும், இப்போது நடைபெறும் முறையில், பிரயோஜனம் யாதும் இல்லை யெனத் தெரிகிறது. ஆதலால், ஸநாதந தர்மத்தை யாதரிக்கும் கனவான்களே, நமது பெண்மணிகளின் கல்வி முறையில் வேண்டிய சீர்திருத்தத்தைச் செய்ய விழிமின், எழுமின்.

 

குறிப்பு: - நமது ஹிந்து மாதர்களும் பெற்றோரும் மேற்கண்ட விஷயத்தைப் பன்முறை வாசித்துணரும்படி மிகவும் வேண்டிக்கொள்கிறோம். நம் நாட்டில் அநேகர் மேல் நாட்டு ஆசாரங்களின் மயக்கில் சிக்கித் தமது பெண்மணிகளுக்கு எத்தகைய கல்வி அவசியமென்பதைக் கருதாமல், தங்கள் பெண்களுக் கவசியமான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றவற்றிற்கு இடையூறு செய்யத்தக்கவைகளும், பெண்சுபாவம் நீங்கி புருட சுபாவத்தை யளிக்கத்தக்கவைகளுமாகிய அனாவசியமான கல்விகளைப் போதிக்கிறார்கள். ஆங்கில பாஷைக் கல்வி நம் ஆடவர்களுக்கே அவர்கள் ஆசார ஒழுக்கங்களைக் கெடுத்துத் தீங்கிழைக்கின்றதென்றால், நம் பெண்மக்களுக்கு அதைக் கற்பிப்பதினும் நாம் அவர்களுக்குச் செய்யத்தக்க தீமை வேறொன்றுமில்லை.

நமது மாதர்களின் க்ஷேமத்தைக் கோரி மிக்க அன்போடு நமது நண்பர் வரைந்துள்ள மேற்கண்ட வியாசத்திலடங்கியிருக்கும் உண்மை நிறைந்த அரிய விஷயங்களை நம்மவர் ஒவ்வொருவரும் கவனமாக வாசித்துண ரும்படி மறுபடி பிரார்த்திக்கிறோம்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment