Tuesday, September 8, 2020

 ஜேம்ஸ் கார்பீல்டன் சலியா முயற்சி

 

‘அதிர்ஷ்டம்' என்பது சோம்பேறியின் வாக்கு. உழைப்பவன் உன்னதம் பெறலாம். உழைப்பதில் உலையா ஊக்கம் வேண்டும். உள்ளத் தளர்வின்றி உழைக்க வேண்டும். உழைத்து உழைத்து உயர்வைக் காணவேண்டும். உயர்ச்சி காணுந்தனையுஞ் சலியா முயற்சியினைக் கைக்கொள்ளல் வேண்டும். குடிசையிற் பிறந்தாலும் குன்றா ஊக்கத்துடன் உழைப்பவன் குபேரனாகி குவலயம் புகழ விளங்குதல் கூடும். இதற்கு ஜேம்ஸ் கார்பீல்டு சரித்திரம் போதிய சான்றாகும்.

 

ஜேம்ஸ் கார்பீல்டு அமெரிக்காவில் ஆரெஞ்சு என்னுமிடத்தில் ஒரு குடிசை வீட்டில் அப்ராம் கார்பீல்டு என்பவருக்கும் எலிஸா என்னும் மாது சிரோமணிக்குமாக 1831 - வருஷம் நவம்பர் மாதம் 19 - ந் தேதியில் பிறந்தார்.

 

இவர் இளைமை முதற் கொண்டே மிக்க சுறு சுறுப்புடையவராயும், எர்தக் காரியத்தையும் சரிவரச் செய்து முடிக்கும் இயல்பினைக் கொண்டவராயும் விளங்கினார். சலியா உள்ளங் கொண்டவர். பொறுப்பும் நிதானமு முடையவர். கர்வம், அற்றவர். இன்னும் பல அரிய குணங்களை இவர் பிறவியிலேயே - மாதாவின் கர்ப்பத்திலேயே பெற்றிருந்தார்.

 

இவர் ஏழைக் குடிசையிற் பிறந்தும் - ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவுக்கு உழைத்து வரும் ஊதியமல்லாது ஒருவழியு மில்லாத வாழ்வினைப் பெற்றிருந்தும் தம்முடைய உள்ளஞ் சலியா உழைப்பினாலும் தளரா ஊக்கத்தினாலுமே உலகம் போற்றும் உன்னத நிலை யடைந்தாரென்ற விஷயம் மாணவர்கள் நெஞ்சிலிருத்த வேண்டிய தொன்றாகும்.

 

கார்பீல்டு கல்வி கற்பதற்காகப் பட்டபாடுகளும் செய்த முயற்சிகளும் அனந்தம். எத்தனையோ முயற்சி பாடுகளில் முயன்று முடிவில் பெரும் பேறு பெற்றார். அத்தனை கஷ்டங்களை அனுபவித்தும் ஒன்றிலும் உள்ளம் பேராத கார்பீல்டு சரித்திரம் போல் மற்றோர் சரித்திரம் காணுதலரிது. கார்பீல்டு சரித்திரம், படிப்பவரின் மனதைப் பரவசப்படுத்தி விடுகிறது. உள்ளத்தைத் தட்டி யெழுப்பி விடுகிறது; உலையா ஊக்கத்தை ஊட்டி விடுகிறது; ஓய்ந்த நெஞ்சுக்கு உறுதி யளித்து விடுகிறது; புதிய பலம் புகட்டிபுத்துயிர் பெற்ற மனிதனாய்ப் பரிமளிக்கச் செய்துவிடுகிறது. தாமே சம்பாதித்துக் கல்வி பயின்று தம் புத்தியின் பலத்தினாலேயே பெரிய மனிதராய்ப் பிரகாசித்தவர் ஜேம்ஸ் கார்பீல்டு ஒருவரே யென்று உறுதியாய்க் கூறலாம்.

 

கார்பீல்டு இளம் பருவத்திலேயே கூரிய புத்தியும் சாதுரியமாய்ப் பேசும் சாமர்த்தியமும் பெற்றிருந்தா ரென்பதை ஒரு சம்பவத்தால் விளக்குவோம். ஒரு சமயம் கார்பீல்டு பள்ளியில் ஏதோ தவறு செய்தாரென்பதற்காக உபாத்தியாயர் தண்டனையாக, கார்பீல்டைப் பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு ஓடு' என்று சொன்னார். இது பையன்களுக்குப் பெரிய தண்டனை - அவமானம். கார்பீல்டு சிறிதும் யோசிக்க வில்லை. உடனே வீடுவரையிலும் ஓடித் திரும்பி வந்தார். என் வந்தாய்?' என்று உபாத்தியாயர் கேட்டார்.' வீட்டுக்குத்தானே போகச் சொன்னீர்கள், அங்கேயே இருக்கச் சொல்ல வில்லையே' என்று கொஞ்சமும் தயங்காமல் கார்பீல்டு பதில் சொன்னார். இது எத்தகைய சமயோசிதமும் விநோதமுமாகும் பாருங்கள்! இன்னும் கார்பீல்டின் அறிவின் திறத்தை எடுத்துக்காட்ட பல நிகழ்ச்சிகளுண்டு.

 

கார்பீல்டு வாசிப்பில் மிகப் பிரியர். கலா விநோதரென அவரை யழைக்கலாம். புத்தகம் கையிலிருந்து விட்டால் சாப்பாடு கூட அவருக்குத் தேவையிராது. புத்தக ருசி யறிந்தவர்கள் அந்த இன்பத்திலேயே ஆழ்ந்து விடுவதை நாம் கண்டிருக்கிறோம். அது எல்லோருக்குமே ஏற்படுவதில்லை" தின்று ருசி கண்டவனும், பெண்கள் ருசி கண்டவனும் விடமாட்டார்கள்''என்று உலகில் பழமொழி சொல்லுவார்கள். அவற்றிற் கேனும் சலித்துவிடுவதற்கான ஒரு எல்லை யுண்டு. படிப்பு ருசி கண்டவனுக்குச் சலிப்பேது? அவன் ஆயுளுள்ள வரையிலும் அவ்வின்பத்தை அள்ளிப் பருகி ஆனந்தமடையலாமன்றோ?

 

கார்பீல்டு புத்தகப் பிரியராயிருந்ததற் கனுகுணமாக அவரிடம் அதிசயஞாபக சக்தி அமைந்திருந்தது. ஒரு முறை அறிந்த நல்ல விஷயங்களை எக்காலமும் மறக்க மாட்டார். ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிரயாசைப் படுவோர்களே எத்தனையோ சங்கதிகளை மறந்து விட்டு மயங்குகிறார்கள். இவர் எந்தச் சிரமமுமில்லாமல் அறிந்த விஷயங்களை அப்படியே மனதில் விழுங்கி விடுவது எத்துணை ஆச்சரியம்! படித்த சங்கதிகளைத் தனிமையிலிருந்து சிந்திப்பதும், பிறர்க்குச் சொல்லிக் களிப்பதும் கற்றவை மறந்து போகாமலிருக்கச் செய்ய ஒரு நல்ல வழி. இதையே வாசி - யோசி -வசனத்து ருசி என்றா ரொருவர்.

 

அறிவிருந்தால் அதை விருத்தி செய்யச் செல்வமில்லா திருப்பதும், பணமிருந்தால் கற்கும் கவலையும் அறிவுமில்லா திருப்பதும் உலகில் கண்கூடு. இரண்டுங் கூடி பரிமளிப்பது எங்கோ அபூர்வம். கார்பீல்டு ஏழ்மையினால் மேலே வாசிக்க வியலாது பன்னிரண்டு வயதிலேயே வயலில் வேலைசெய்யும் துர்ப்பாக்கியம் பெற்றார். அதனால் அவர், மனம் வருந்தினாரில்லை. உற்சாகத்துடன் பகலெல்லாம் வேலை செய்துவிட்டு இரவில் வாசிப்பார். தனக்குத் தெரியாத எந்த நல்ல விஷயங்களையும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆவல் காட்டி வந்தார். தன் தாயாரைக் காப்பாற்ற வேண்டி தச்சுவேலை செய்து சம்பாதித்தார். ஒழிந்த நேரங்களிலெல்லாம் புத்தகமுங்கையுமாயிருந்து கல்வி பயின்றார். வெறும் புத்தகப் பூச்சியாயிராமல் எந்த வேலையையும் இகழ்ச்சி யென்று கருதாமல் விரைவில் கற்றுச் செய்தார். 'கண் பார்த்தால் கை வேலை செய்யும்' என்பது அவரிடம் பூரணமாய்ப் பொருந்தி யிருந்தது. தச்சுவேலை கிடைக்காத போது காட்டில் மரங்களை வெட்டும் வேலை செய்து பொருள் தேடினார். காடழிக்கும் வேலை செய்யும் பொழுது இரவு நெடு நேரம் கண்விழித்து வாசித்தார். கல்வியில் கார்பீல்டுக் கிருந்த பிரியம் போல் யாருக்குமே இருந்திருக்காது.

 

கார்பீல்டுக்குப் பதினைந்து வயதாகும் போது கிளீவ்லாண்டுக்குச் சமீபத்திலுள்ள பார்டன் (Barton) என்பவரின் உப்புக் கிடங்கில் வேலைக்கிருந்தார். அவ்விடத்திலும் கார்பீல்டு தருணங்கிடைத்த பொழுதெல்லாம் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்ச்சி செய்து கொள்வதிலேயே கண்ணாயிருந்தார். கார்பீல்டினிடம் வீன் பொழுது விலைக்குங் கிடைக்காது.

 

ஒரு நான் பார்டன் என்பவரின் மகள் கார்பீல்டைப் பார்த்து 'கூலிக்கு வேலை செய்பவன்' என்று இகழ்ச்சி செய்தாள். அதைப் பொறுக்காமல் கார்பீல்டு உடனே அவ்வேலை வேண்டாமென்று வீட்டுக்கு வந்துவிட்டார். கார்பீல்டு பணிவதிலும் ஆண்மை கொண்டிருந்தார். அன்புக்குப் பணியலாம். அதிகாரத்திற்குப் பணிவது கேவலம் அடிமைத்தனந் தானே? இதிலிருந்து கார்பீல்டு சுதந்தரம் குடி கொண்ட உள்ளத்தின ரென்பது தெளிவு. உப்புக் கிடங்கு வேலை போன பிறகு மரக்கலத்தில் வேலை செய்தார். அதில் கார்பீல்டு அனுபவித்த கஷ்டம் அநந்தம். ஒருமுறை தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கே அபாயம் நேரவிருந்தது. கடவுள் சகாயத்தினாலேயே அவ்வாபத்திலிருந்து பிழைத்தாரெனல் வேண்டும்.

 

கார்பீல்டுக்குப் புத்தக ஆசை அதிகமா யிருக்கிறதைக் கண்ட எலிஸா அவரை எங்ஙன மேனும் படிக்க வைத்துப் பண்டிதனாக்கிவிட வேண்டுமென்று கருதி, செஸ்டர் (Chester) என்னுமிடத்திலுள்ள கல்விச்சாலைக்கு அனுப்புவித்தாள். கார்பீல்டு கல்விச் சாலையில் சேர்ந்தார். ஆனால் கையில் பணம் கிடையாது. பள்ளியில் வாசிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் தச்சுவேலை செய்து சம்பாதித்தார். தானே சம்பாதித்துக் கொண்டு வாசித்து முன்னுக்கு வந்த கார்பீல்டு சரித்திரம் எல்லோராலும் கொண்டாடும் பெருமையுடையது. விளையாட எவ்வளவோ விருப்ப மிருந்தும் அதை லட்சியம் செய்யாமல் வேலையையே விரும்பினா ரென்றால் இவருக்கிருந்த ஊக்கமும் கல்வியபிலாஷையும் இவ்வளவின வென்று வரையறுத்தல் வேண்டுமோ?

 

செஸ்டர் வித்யா சாலையில் புத்தக நிலையம் இருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு புத்தகமாய் வாங்கி இரவைப் பகலாக்கிக் கொண்டு வாசித்தார். கார்பீல்டின் சலியா முயற்சி எத்துணைச் சிரேஷ்டமானது என்பதைக் கண்டீர்களா? இத்தகைய ஓயாவுழைப்பைக் கொண்ட கார்பீல்டே அப் பள்ளியில் முதல் பையனாகத் திகழ்ந்தா ரென்பதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?

 

அப்பால் விடுமுறையில் தான் வீண்பொழுது போக்கினாரா? சிறியபள்ளிக் கூட மொன்றுக்கு ஆசிரியராய் அமர்ந்தார். அப்பொழுதே அவரிடம் போதனாசக்தி மிகுந்திருந்தது.

 

பிறகு கார் பீல்டு வித்தியா பட்டம் பெற விரும்பி ஹைராம் (Hiram) என்னுமிடத்திலுள்ள கல்விச்சாலையிற் சேர முயன்றார். அதற்குப் பணம் வேண்டுமே. அறுப்பு அறுக்கும் வேலை செய்து பணந்தேடிக் கொண்டு கல்விச்சாலையை யடைந்தார். அக்கல்விச் சாலையில் அதிகாலையில் மாணவர்கள் எழுந்திருப்பதற்காக மணியடிப்பதுண்டு. அவ்வேலையையும், கல்விச்சாலையைப் பெருக்கும் வேலையையும் கார்பீல்டு ஏற்றுக்கொண்டு அதனால் வரும் கூலியைக் கொண்டு சாப்பிட்டு வாசித்து வந்தார். சனி, ஞாயிறு முதலிய விடுமுறை நாட்களில் ஓய்வின்றி தச்சு வேலை செய்து பணந்தேடிக் கொள்வார். ஆ! கார்பீல்டு கல்வி கற்க வேண்டி எடுத்துக் கொண்ட பிரயாசைகள் என்னே! மணியடிப்பதும், பெருக்குவதும் ஒரு இழிவாக அவர் நினைக்கவே யில்லை. இவர் கல்வியிற் கரை கடந்த ஆவலுடையவரென்பதை கல்விச் சாலையாதிபர் நன்கறிந்து வியந்து கார்பீல்டுக்கு அப்போதைக்கப்போது வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அக் கல்விச்சாலையிலும் கார்பீல்டு தான் முதன் மாணவர். மாணவர் நிலையிலேயே எத்தனையோ அரிய பிரசங்கங்கள் செய்து கல்வி நிபுணரையும் கலங்கும்படி செய்திருப்பது கார்பீல்டு சரித்திரத்தில் அரியவேண்டிய முக்கிய சங்கதி யாகும்.

 

இங்ஙனம் எந்த வேலையையும் இழிவென்று கருதாமல் அத்தில் சலியா உள்ளங்கொண்டு திறம்பட வேலை செய்து சொந்த முயற்சியினாலேயே கல்வியையும் அபிவிருத்தி செய்து கொண்ட ஜேம்ஸ் கார்பீல்டு, 1881 - ம் வருஷம் மார்ச்சு மாதம் 4 - ந் தேதியில் அமெரிக்கா ஐக்கிய நகருக்குத் தலைவரானார்.

 

கார்பீல்டு சரித்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? எந்த வேலையையும் இழிவென்று கருதாமல் - மனஞ்சலிக்காமல் முயன்றால் முன்னுக்கு வரலாமென்பதே. சலியா முயற்சியுடன் முயலுக. மேன்மேல் மேன்மேல் முயலுக.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment