Monday, September 7, 2020

 

விருந்து

(மு. த. வேலாயுதம்.)

விருந்தென்பது இவ் வாழ்க்கையின் கட்டாயமாய் அனுசரிக்கப் படுவ தொன்றாம். முற்காலத்தில் இல்லறம் நடாத்தும் எழில் சேர் மக்கள் ஒவ்வொருவரும் விருந்து என்பதை நன்குணர்ந்து வந்தனர். இல் வாழ்க்கையில் விருந்தை வள்ளுவனார் எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறார் என்பதை நன்குணரலாம்.

'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்

கைம்புலத்தா றோம்பல் தலை'

 

என்னும் குறளே போதிய சான்றாம்.

விருந்தென்பது சிலர் நினைப்பது போல் சொந்தக்காரர், நேயர் முதலியோரை உபசரிப்பதல்ல. புதிதாய் வருபவரே விருந்தினராவர். பரிமேலழகியார் “விருந்தென்பது புதுமை; அஃது ஈண்டாகு பெயராய் புதிதாய் வந்தார் மேனின்றது' எனக் கூறுதலைக் காண்க. ஆதலின், விருந்தினர் என்போர் புதிதாய் நம்மகத்திற்கு வருபவர் என்பது புலனாகிறது.

பண்டைத் தமிழர்கள் இல்லறங்கட்கு முதலாயது விருந்தெனக் கண்டனர். திருக்குறளிற் காணும் ‘விருந்தோம்பல்' என்னும் அதிகாரமே போதிய சான்றாம்.

செல்வம் பெற்றதாற் பயனென்ன? நச்சு மரம்போல் பயன் தராது வாளா இருத்தலோ? அல்லது, தான் மாத்திரம் உண்டு உடுத்து போக பாக்கியங்களெனச் சொல்லும் புன்வாழ்விற் றினைத்தலோ? அற்றன்று. செல்வத்தாற்பெற்ற பயன் தானும் அனுபவித்துப் பிறர்க்கும் ஈய்ந்து வாழ்க்கை நடாத்துதலே. செல்வர்களின் பெருந் தன்மையைக் கூறவந்த புலவ ரொருவர்,

'படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்

உடைப் பெருஞ் செல்வர்'

 

என்றெடுத்துக் காட்டுகிறார். இதனால் பண்புடைச் செல்வர்கள் எவ்வாறு சமுதாய வாழ்க்கையிற் பங்கெடுத்துக் கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த முற்பட்டனர் என்பதைக் காணலாம்.

விருந்தினரை உபசரித்து ஓம்புதலில் உலகத்திலுள்ள எத் தேயங்களினும் நந்தமிழகம் தலையாயது. வள்ளுவர், இளங்கோ முதலியோ ரனைவரும் ஈந்தமிழ் நாட்டில் நடை பெற்ற விருந்தைச் சிறப்பித்துள்ளனர்.

நல்விருந்தோம்புவோர் அகமகிழ்வுடன் பண்புசால் குணங்களைப் பெற்றோராவர். அன்பும், கருணையும், இரக்கமும் அவர்களிடம் குடிபெறும். விருந்து வரவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சமயம் வாடி யிருப்பரே யொழிய விருந்தை ஒருவாற்றானும் புறக்கணித்ததுண்டோ? இல்லவே இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.

விருந்தோம்புதலிலும் அன்பு நிலவவேண்டும். இவ்வன்பு சிறிதளவேனும் தளறுமாயின் விருந்தினர் முகம் வாடும். அனிச்ச மலர் எவ்வாறு முகரும் பொழுதே குழைகின்றதோ அத் தன்மைத்தே அன்பு குறைந்த பார்வையில் விருந்தினர் முகமும் மாறுபடும்.

'மோப்பக் குழையு மனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.'

 

ஆதலால், எத்தகைய அன்புடன் விருந்தோம்பல் நடத்தப்பெற்ற தென்பதை உணரலாம்.

கோவலன் கண்ணகியைப் பார்த்துத் தான் செய்த அடாத செய்கைகளைக் கூறி இரங்குகின்றான். 'வெய்ய சுரத்தில் நடந்து வந்ததைப் பெற்றோர் காணின் கண்ணீர் சொரிவரே. சிறியனாகிய உனக்குப் பற்பல விதத்தும் இன்னல் இழைத்தேனே' எனக் கவல்கின்றான். கண்ணகியோ அதற்கு மாற்றமாக அன்புடையீர்! வருந்தல் வேண்டாம்.

'அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும்'

 

துறந்த யான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கடப்பாடு உடையேன்' என நவில்கின்றாள்.

என்னே கண்ணகியின் கற்பு! இப் பொற்புடைய கற்புடையாள்
'விருந்தெதிர் கோடல்' பெற்றேனில்லை என்று வருந்துகின்றாள். இல் வாழ்க்கையிற் செய்ய வேண்டிய கடமைகளில் விருந்தோம்பல் மிகச் சிறப்புடைத் தென்று கருதுவதாய் இளங்கோவடிகள் இசைக்கின்றார். எனவே, நிலைமையிற் பிறழ்ச்சியடைந்த காலத்தும், தமிழ்நாட்டுச் கற்பரசி விருந்தோம்பலைச் கண்ணே போல் போற்றுவதை நோக்குழி நாம் பெருங் குடியிற் றோன்றியவ ரென்பதைச் சொல்லுதற் கிழுக்குளதோ?

கற்பின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

'கற்புங்காமமு நற்பா லொழுக்கமு

மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின்

விருந்துபுறந் தருதலுஞ் சீற்ற மோம்பலும்

பிறவுமன்ன கிழவோண் மாண்புகள்'

 

என்பதனால் நன்குணரலாம்.

பரத்தையிற் பிரிந்த தலைவன், தலைவியைக் காண வருகின்றான். தலைவி தலைவன் வருகையை உணர்ந்து புலத்தல் செய்கிறான். தலைவன் தலைவியைச் சேர முடியவில்லை. பாணன் மூலமாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்ள முயற்சிச்கிறான். ஆனால் தலைவனுக்காக வந்த பாணனும் விரட்டப் பெறுகின்றான். தலைவன் தலைவியின் சீற்றத்தை யுணர்ந்து விறலி மூலமாக வேனும் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி விறலியைத் சது விடுகிறான். தலைவியோ விறலியையும் அனுமதித்தாளில்லை. இவற்றைக் கண்ட தலைவன் மனம் நெகிழ்ந்தது. இருப்பினும் ஒருவாறு தன்னையே தேற்றிக்கொண்டான். இறைவியின் பண்பும் நுண்ணறிவும் தெள்ளிதின் அறிந்தோனாதலால் எவ்விதம் அமுதளைய அணங்கின் வாயிற் செல்லலாம் என்றெண்ணினான்.

தன் மனையாட்டி கற்பிற் பொற்புடையவளாதலால் - இல்லறத்திற்றலை
சிறத்தவளாதலால் விருந்தினர் ஒருவருடன் செல்ல எண்ணினான். அங்ஙனம் சென்றால், விருந்தினரை அன்புடன் வரவேற்றுபசரிக்கு முகத்தான், தானும் அவருடன் முட்டின்றிச் செல்வதற் கேதாகும் எனக் கண்டான். அவ்வாறே விருந்தினரொடு தலைவியின் இல்லமடைந்தான். விருந்தினருடன் தலைவர் வந்ததைத் தலைவியிடம் கூற ஓடினாள் உயிர்ப் பாங்கி. தலைவியைக் கண்டாள். 'அம்மா | விருச்தினருடன் தலைவர் வந்திருக்கிறார்' என்று சொல்வதற்கு ‘விருந்தினர்... என்று வாயெடுத்தாள்.
உடனே தலைவிக்குப் புன் முறுவல் பூத்தது. தலைவன் பரத்தையிற் பிரிந்த கோபத்தால் நெற்றியிற் பாய்ந்தோடிய புருவங்கள், இப்போது தம் நிலை வந்தன. சீற்றத்தாற் சிவந்த மேனி முன் போல் பசு மேனியாயிற்று. கண்ணீர் வடித்த அக்காரிகை அன்பின் பெருக்கால் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றாள், தலைவன் உட் செல்லுகின்றான். விருந்தோடு வந்ததால் தலைவி பொறுத்தது கண்டு இறையோன் மகிழ்சின்றான். இதைத் திருவாரூர்க் கோவையில்,

'புற்றி லராவணி யாரூர்த் தியாகர் பொதிய வெற்பிற்

சுற்றிய நல்விருந் தென்றனவே நகை தோற்றியது

நெற்றிபி லோடும் புருவம் முன்போல நிமிர்ந்தனமேற்

பற்றிய செம்மையுங் கண்ணீரும் போயின பைந்தோடிக்கே'

 

என விருந்தொடு வந்துழிப் பொறுத்தது கண்டு இறையோன் மகிழ்தல் என்னும் துறையிற் காணலாம்.

எனவே, பாணன், விறலி இவர்கள் தூதினாலும் தலைவி சீற்றம் தணிந்தாளில்லை. பாங்கி விருந்தொடு என்று சொன்ன மாத்திரத்திலேயே சீற்றம் மறைந்து அன்பு கொண்டு புன்னகை பூத்தாளெனின் விருந்தினரை எவ்வாறு போற்றி வந்தனர் பண்டையோர் என்பதை நன்குணரலாம்.

தமிழர் தம் தொல்சீர் பண்பு நல்விருந்தோம்ப லன்றோ?

ஆனந்த போதினி – 1942 ௵ - மே ௴

 



 

No comments:

Post a Comment