Monday, September 7, 2020

 விக்கிரக ஆராதனை

தி மத்தியாந்த ரகிதராகிய எல்லாம் வல்ல இறைவன் பெருமையைப் பிரகாசிக்கச் செய்யும் இப் பிரபஞ்சத்தில் கடவுள் தன்மை வாய்ந்த மகரிஷிகள் பிறந்த நாடாகவுள்ள இந்தப் பரத கண்டத்தின் கண்ணே வசித்து வரும் இந்துக்களின் முக்காலமுமுணர்ந்த ஞானிகள் கருத்தின்படி அமைந்த மத நூற்களும், அவற்றிலடங்கிய கருமானுஷ்டானங்களும், பல் சமயத்தவர், கடவுளுக்கு, " ஒரு நாமம் ஓருருவமொன்றுமிலார்க் காயிரந் திருநாமம் பாடி'' என்கிறபடி பல நாம ரூபங்களைக் கற்பித்துப் பூசித்து வந்தாலும், அவ்வழிபாடுகள் உலகெலாம் போற்றுமோ ரொப்பற்ற பரம்பொருளாகிய அக் கடவுளையே நாடிச் செல்கின்றன வென்பது வெள்ளிடைமலை போல் விளங்கும்.

 

ஆனால் தற்போதுள்ள சமூக சீர்திருத்தஞ் செய்பவர்கள் தாங்கொண்ட கருத்துக்களை வெளி காட்டி விக்கிரகாராதனை அவசியமில்லை யென்றும், புராண இதிகாசங்கள் வெறுமாபாசக் கதைகளென்றும், இந்துக்கள் ஆராதித்துவரும் விக்கிரகாராதனை அநேக விதமான தெய்வங்களை உண்டு பண்ணி வழிபடுவதாகிற தென்றுங் குறை கூறுவர். ஆழ்ந்து நோக்கி ஆராயுமிடத்து, உள்ளாகவோ புறம்பாகவோ அத்தகைய ஆராதனை ஆஸ்திகர்களனைவர்க்கும் உடன் பாடாகின்றது.


 "யாதொரு தெய்வங் கொண்டீரத் தெய்வமாகியாங்கே
 மாதொரு பாகனார் தாம் வருவர்.''

 

என்று பெரியோர் கூறுவதும் நோக்கத்தக்கது.

 

கடவுளை வழிபடு மார்க்கங்கள் பல உள. என்றாலும், அவை சரியை, கிரியை, யோகம், ஞானமென்ற இந்நான்கினு ளடங்கும். இதனை,


''அங்க சுத்தியு மாலையந்தொழுவதுஞ் சரியை
மங்களத் துடனட்ட மாசித்தியும் வரையுஞ் சக்கரபூசை,
பொங்கமானது கிரியையாம் வாயுவைப் புரண்டிடா திழுத்திட்டு,
தங்கி நின்றதோர் யோகமென்றிதனையே சாற்றிடு மறைதானே. "


"ஞானமேதெனக் கேட்டிடின் தத்துவ நானென வுணர்ந்திந்த,
ஊனை நானென வுரைத்ததை யகன்று பின்னொழி வறத்தனைக் கண்டு,
மானம் வெட்கமுந் துக்கமுங் கவலையும் வஞ்சனை தான் போக்கி
யீனமற்று நான் சிவமெனத் துணிந்தது மிழந்தது முடிவாமே.''

என்பவற்றா லறியலாம். சரியை, கிரியை யென்பவை பக்தி மார்க்கத்திலடங்கும். யோக, ஞான மார்க்கங்கள் சாமானிய அறிவுடையவர்கள் சாதித்துக் கொள்ளத் தக்கவையல்ல வென்பது எவருமே அறிவர். பக்தியால் வேண்டிய பயனெய்த லெளிதாகு மென்பது ஆன்றோர் கருத்து. எண் குணத்தவனான கடவுளை யாதாமோருபாசனா மூர்த்தியாக் கொண்டு பெரியவர்களாலறிவுறுத்திய நாம ரூபத்தினை மனதினால் சங்கற்பித்து மனதை யிந்திரிய விஷயங்களிற் செல்லவிடாமற் றனது லக்ஷியத்தில் நிறுத்தி என்பெலாம்நெக்குருக ரோமஞ் சிலிர்ப்ப உடலிளக மனதழலின் மெழுகாம்படி துதித்துப் பாடியும், தாமனுபவித்து வரும் பொருள்களை அன்பால் நித்திய, நைமித்திய கர்மங்களால் அம்மூர்த்திக் கர்ப்பணஞ் செய்தும் வழிபட்டு வருவது பக்தி மார்க்கம்.


 "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
 புக்கு நிற்பன் பொன்னார் சடைப் புண்ணியன்.''


என்பதும் காண்க. பக்த வத்சலரான கபீர்தாசரென்ற வோர் சிரேஷ்டர் சாப்பிடுவதற்காகத் தாம் வைத்திருந்த ரொட்டியைத் தாழே வைத்து விட்டு வெண்ணெயெடுக்கச் சென்ற சமயம் பார்த்து ஓர் நாய் அந்த ரொட்டியைக் கௌவிக் கொண்டு செல்வதைப் பார்த்தார். உடனே அவர் அந்நாயின் பின்னோடி வெண்ணெயையுங் கூட வைத்துத் தின்றால் நிரம்பவும் ருசிகரமாகவிருக்கு மென்று மிகவும் வேண்டிக் கொண்டாராம்.

 

இதனால், செகத்திடமாகத் தோன்றும் சர்வ சிருஷ்டியும் பிரஹ்ம மயமாகவே அவருக்குத் தோன்றியது. "கல்லினுஞ் செம்பிலும் கடவுளில்லை'' எனப் புகலும் நன்பர்களின் கருத்து ஆராயத் தக்கது. கல்லிலுஞ் செம்பிலுங் கடவுளை அறிதற்கூடும் விதமெவ்வா றெனில், அறம், அன்பு, நீதி முதலியன ஊனப் புலன்களுக்குப் பொருளாகாது அறவோன் வழி அறமும், அன்பன் வழி யன்பும், நீதிமான் வழி நீதியும், உணர்விற் படுதல் போல, மக்களுள்ளம் கடவுளிடத்தே படியும் போது கடவுள் உட்பொருளும், விக்கிரங்கள் உருவெளியாய்த் தோன்றுமில் பொருளுமெனப் புலனாவதாலென்க. ஆனது பற்றி உள்ளுணர்வா லமையுத் தன்மை விக்கிரக ரூபேண வோர் உட்பொருளைக் காண முடியுமென்ப தென துள்ளக்கிடக்கை.

 

மக்கட்கு இயற்கையாகவே தோன்று முலக வின்ப நுகர்ச்சியையே பெரிதாகக் கொண்டவர்கள் பழித்தற்கிடமான தீய வழிகளினாலுண்டாகுமிலாபத்தையே கண் கூடானதென்று களிப்பர். இந்த இலாபம் முதற்கண் ஆக்கம் போற் றோன்றினும், செல்வம், சந்தானம், சுற்றம் முதலிய ஜசுவரியங்கள், தாம் கேடுற்ற பொழுது தமக்குத் துணையாவதற் கேதுவாகாமை பற்றியும், பலவகைத் துன்பங்கட் கிடமாமென்பது பற்றியும், உயிரினும் வேறான உடம்புக்குண்டாகு மிழிவை நினைந்து, அவ்வுடம்பு நீங்கா முன்னமே தவத்தைச் செய்து நித்தியமான கடவுளடியைக் கூடி அழிவில்லாப் பேரின்ப வாழ்வில் வாழ அவர்கள் முயலவேண்டும். அத்தன்மையவர்களுக்கே பெரியவர் 14களாலருளிச் செய்யப்பெற்று தத்துவோபதேச (ஞான) தூற்கள் பயன்படுமே தவிர ஏனையவர்களுக்கு அவை பயன் படா.

 

உலகிற் பிடிவாதத் துடன் பல போக்காக வாழு மறிவுடையவர்களையொரே திற முடையவர்களாக ஆக்க முயல்வது கூடாத காரியம். அதுபோலவே இந்து சமூகத்தி னிடையமையப் பெற்ற நூற்கள் பல உள. அன்றியும் கல்வியிற் தேர்ந்தவர்கள் தமது அறிவிற் கெட்டியவாறு, காயம், பக்தி, யோகம், ஞானமென்றவைகளுக் கேற்றவாறுள்ள நூற்கள் பல வரைந்துள்ளார்கள். இந்நான்கு பிரிவினைகளில் தாம் மேற்கொண்ட நெறியிளை, சுருதி, யுக்தி, அனுபவங்களாலாராய்ந்து, பொருந்த ஒழுகுதல் நன்றாம்.

 

கர்ம காண்டத்திற் கேதுவாகிய நூற்கள், யோக மார்க்கத்தையோ, ஞானமார்க்கத்தையோ அனுஷ்டித்து (பயின்று) வருபவர்கட்கு அனாவசியமாயினும், ஒன்றோடொன்று துடர்புடைத்தா யிருக்கிறதென்பது நிச்சயம். கோவில்களில் நடைபெறுஞ் சில நடபடிக்கைகள், அதாவது, அம்மன் சுவாமிக்குப் பள்ளியறை யலங்கரித்துப் படுக்க வைத்தல், தாசியாடுதல், சுவாமி பரத்தமைத் தொழிலிலிறங்கியதாக உள்ள பல திருவிழாக்கள், சில ஜாதியார் கோவிலுக்குள் வரலாகாதென்பது முதலியன், சிலர் தந்நலங்கருதித் தம் சிற்றறிவிற் கெட்டிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு சாஸ்திரங்களினிடையே பல குப்பைகள் புகுத்தி வைத்ததோர் முரண்பாடாகுமென்பர் சிலர். இவைகள் பழங்காலத்துப் பெரியவர்களா லேற்படுத்தப்பட்டாலும், தற்காலத்துக் கேற்ற பழக்க வழக்கத்தை ஒட்டிச் சீர்திருத்தங்கள் பெற்றுச் சமூகத்தினிடையே வந்தாலொழிய நாம் ஒற்றுமையுடன் கூடி வாழமுடியாது.


''பழையன கழிதலும் புதியன புகுதலும்
 வழுவல கால வகையி னானே.''


 என்னும் விதி இச்சிர்திருத்தங்களுக் கனுகூலமா மென்க.

 

கடவுளுக்கு மனைவி மக்களிருப்பதாகவும், அவர் பல திருவிளையாடல்கள் நடத்தினாரென்றும், புராண கதைகளா லறிகிறோம். ஒரு வஸ்து இருந்தால் அதற்கு உணர்ச்சி, வல்லமை என்று சொல்லப்படுகிற ஒருவித சத்து இருந்தே தீரும். சக்தியில்லாமல் எப்பொருளுமிரா. திருஷ்டாந்தமாக: - ஒரு விருக்ஷம் பட்டழிந்து போயின பின் பார்த்தால் அதற்குள்ள நிலைமையும் அது தன் சக்தியோடு கூடியிருக்கிற பொழுது, அசைதல் நிழல் தரல், பூத்தல், காய்த்தல், கனிதரல் முதலிய தொழில்கள் செய்வதையும் நாம் அருகிறோம். அதுபோல: - நின்மல, நிராமய, நித்திய, நிர்க்குண, நிர்த்தொந்த, நிர்விகார, நியதியாயிருக்கும் கடவுள் நவபேத மெண்முகூர்த்தமா யிந்த அகிலமாகியும், விசித்திரமாகியும் விளங்குவதற்காதாரமாகி தம்மிடத்தெழுந்த உணர்ச்சி, அல்லது வல்லமையாகிய சக்தி உடைத்தாயிருத்தலைக் காண்கிறோம். அச்சக்தி அக்கினியிற் சூடுபோ பின்னமாகியுமுன்ளது. இப்படி நானாவித நாமரூபங்களாய் வியாபித்து விளங்கும், பூதம், பூதபெளதிகம், பூதாத்மிகம் முதலிய எல்லாம் மண்ணினின்றெழுந்து மண்ணிலேயே முடிவிலடங்குவது போல, கடவுளிடத்திலேயே எல்லாம் அடக்கமாகின்றது.

 

விருக்ஷம் தன்னிடத்தில் அபேதமாயுள்ள சக்தியைக் கொண்டு பூத்தல் காய்த்தல் முதலிய கிரியைகளையுஞ் சந்ததிகளையு முண்டாக்கிக் கொள்ளுகிறதே யல்லாமல் ஒருமர மின்னொரு மரத்தைப் புணர்ந்தல்ல வென்பர்பலர். அதுபோல புராணங்களிற் கூறும் கடவுளும் வேறேவோர் பெண்ணைப் புணர்ந்து உலகத்தைப் படைத்த தல்லவென்றும் பேசுவர் சிலர். முடிவாய் நோக்குமிடத்து,

"எவ்வுயிரும் பராபரன் சந்நிதியே யாகும்
இலங்குமுயி ருடலனைத்து மீசன் கோயில்.''


என்பதே என் கொள்கை.

 

குறிப்பு: - இந்த வியாசத்தில் கல் - செம்பு இவற்றில் எங்கும் நிறைந்த கடவுள் இல்லை யென்று சிலர் சொல்வதாகப் பிரஸ்தாபித்து, சமாதானமும் ஒருவாறு பேசப்பட்டுள்ளது. பட்டினத்தடிகள் "கல்லினும் செம்பினுமோவிருப்பானெங்கள் கண்ணுதலே'' என்றும், "உளியிட்ட கல், புளியிட்ட செம்பு " - இவற்றை அனாதரிப்போம் என்றும் பேசி யிருக்கின்றார். இவ்வாறு பேசிய இவரே பல சிவஸ்தலங்கள் தோறும் சென்று விக்கிரகாராதனை செய்திருக்கின்றார். ஆஸ்திகத் திருவாளர்கள் இத்தகைய வாக்கியங்களுக்கு வேதாகம சாஸ்த்ரோக்தமான சமாதானங்களை யுக்தி அனுபவங்களுக்கிசைய எடுத்துக் காட்டி, கடவுள் உண்டு என்பதையும், விக்கிரகாராதனை ஆஸ்திகரனைவர்க்கும் (கடவுளைக் கோயில்களிற் சென்றோ அல்லது மானஸீகமாகவோ வழிபடினும்) ஒருவாறு ஏற்பட்டு விடுகிற தென்பதையும் நிரூபிக்கின்றனர். ஆயினும் மேல் நோக்காகப் பார்ப்போமானால், அன்பர்களின் தூய்மையான மனக்கோயிலில் கடவுள் விளங்குவது போல எனையோரின் மாசுபடிந்த மனக்கோயிலில் விளங்குவதில்லை என்பதை வெளிப்படுத்தவே பட்டணத்தார் கல்லையும் செம்பையும் பிரயோகித்துள்ளார் என்பது விளங்கும். கல் எத்தனை நாள் நீரிலிருந்த போதிலும் ஈரம் பற்றுவதில்லை. அதுபோல மாசுள்ள மனத்தார் எத்தனை நாள் சாதுஜனங்களுடன் பழகினாலும் ஸ்திரமான கடவுள் நம்பகத்தைக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு அவர்களைக் கல்லுக்கு வமித்தார். செம்பைத் துலக்கக் களிம்புப் பற்றினின்றும் அது நீங்கியது போல் சிறிது நாள் காட்டி மீண்டும் களிம்பை யடைகின்றது. அதனை யொப்ப, மாசுள்ளோர் சற்சங்கத்தால் நல்லுணர்வு பெற்றாலும், புராண பிரசவமசான வைராக்கியத்தை அனுசரித்து மீண்டுந் தம் துர்ச்சங்க பழக்கத்தையே கைக் கொள்வர். ஆதலின் அவர்களிடம் கடவுள் பிரகாசிப்பதில்லை. ஆகவே, "கல்லினும் செம்பினுமோவிருப்பான் எங்கள் கண்ணுதலே'' என்றார் என்க. கடவுள் விஷயமாகவெளியுலாவும் உண்டு - இல்லை' என்கிற இருபதங்களும் குணமாக முடிதலின் குணியின்றிக் குணப் பிரஸ்தாபம் எங்ஙனம் வரும்? இவற்றால் கடவுள் உருவமாகவும் அருவமாகவும் இருக்கிறார் என்றே ஏற்படவில்லையா? பெரியாரும்,


 "உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
 உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
 உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
 உளன் இரு தகைமையோ டொழிவிலன் பரந்தே''


என்று பணித்துள்ளார்.

“பத்திராதிபர்”

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment