Sunday, September 6, 2020

 

வரும் விதி வழியில் தங்காது

 

 இவ்வுண்மை மொழியானது ஜன சமுகங்களால் தினசரிப் பழக்கத்தில் வழங்கப்பட்டு வருகிற தென்ப தனைவரு மறிந்த விஷயமே யாயினும், ''கொட்டினால் தேள் கொட்டா விடில் பிள்ளைப்பூச்சி " என்றபடி இவ்வுரைக்குத் தகுந்தவண்ணம் சம்பவித்தால் அப்போது மட்டும்,'' வரும் விதி வழியிலும் தங்காது'' என்பது வாஸ்தவமே! என்பார். இன்னணம் செப்புவது மானிடப் பிறவிக்கு சகஜம் போலும். யோசிக்குங் கால் கடவுளொருவர் உளர் என்று நிரூபிக்குங்கட்டுரையாம் இது. "இன்னபடி யென்று என் தலையில் எழுதிய " என்றபடி கடவுளால் இன்னின்ன காலத்தில் இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்று விதிக்கப்பட்டபடி அந்நன்மையையோ தீமையையோ நாம் அனுபவித்தலே இதன் பொருள். எதிர்கால சம்பவங்களை அறிதல் எல்லாருக்கும் எட்டாக் காரியம்.'' கேடு வரும் பின்னே, மதிகெட்டு வரும் முன்னே,'''' யானை வரும் பின்னே, மணியோசை வருமுன்னே'' என்றபடி நாம் அடையப்போகும் நல்வினையோ தீவினையோ நமக்குக் கட்புலனாகாவிடினும் நாம் அடையும் கதிக்குத் தகுந்தபடி முன்னாலேயே மனத்தில் ஓர் மாற்றம் உண்டாவது நம் பிற்கால நிகழ்ச்சிக்கு அறிகுறியேயாம். இனி "விதியை மதியால் வெல்லலாம்" என்றது, தான் அடையும் தீவினையை வருமுன்னே மனப்போக்கால் உணர்ந்து சீர்திருத்தல், வந்துவிடினும் (தற்செயலாய்) புத்தி சாதுர்யத்தால் அதினின்றும் மீட்டுக்கொள்ள அல்லது அதன் கடுமையைக் குறைக்க முயல்வதேயாம். சத்தியவானுடைய உயிரை யமன் கொண்ட பிறகு தான் கற்பால் சாவித்திரி அவனை மீண்டும் பெற்றாள். நளன் சூதினால் துர்க்கதி யடைவான் என்பதை உணர்ந்தே யாவரும் அவனைச் சூதாட்டத்தின்றும் எழ எவ்வளவு கேட்டும் எழாதது " விதிக்குப் புத்தி அநுசரணை போலும். எனினும் விதியைத் தடுக்க யாவராலும் முடியாதென்பது தெற்றென விளங்கும்.

 

இது நிற்க, நம் தலையங்கத்தை விளக்க ஈண்டு ஒரு கதை கூறுவாம்: -

 

குருகுலதிலகனான பரீட்சித்து மகாராஜன் ஒரு நாட்டில் வேட்டை யாடச் சென்ற காலத்து, ஓர் வேங்கைப் புலியைத் தொடர்ந்து அது மறைந்து விடவும் காணாது திரும்பி வருங்காலை தவத்திலாழ்ந்திருக்கும் பயிலவ முனியை புலி சென்ற வழியைக் கேட்க அவர் பேசாமையால், கோபங் கொண்ட அரசன் செத்துக் கிடந்த பாம்பை ரிஷி கழுத்தில் போட்டு வீடு சேர்ந்தார். இதைக் கண்ணுற்ற ஒருவர் அக்ஷணம் சிருங்க முனியிடம் சென்று, அவர் பிதாவுக் குற்றதைச் செப்ப அவர் கோபத்தோடு அப்படிச் செய்தவன் ஏழாம் நாள் தக்ஷகனென்னும் பாம்புக்கிரையாவனென்று சபித்துவிட்டுத் தந்தையையணுகிப் பாம்பை எடுத்தெறிந்து விட்டு எதிரில் நின்றார். யோகநித்திரை தெளிந்ததும் முனிவர், மகன் வந்தகாரணம் கேட்டார், நடந்ததை உரை செய்தான். அதைக் கேட்ட பயிலவர் அவ்வா சன் நீதியாலன்றோ நாம் இடையூறின்றித் தவத்திலிருக்கிறோம், சாபத்தை நீக்கு என்றார்.

 

அதற்கு மகன், நான் இன்னும் தவத்தில் அவ்வளவு முற்றுப் பெறவில்லை, என்னால் முடியாதென்றான், இதினின்றும் தப்ப அரசன் முனிவராணைப்படி நடுச்சமுத்திரத்தில் மண்டபம் கட்டி வசித்து வந்தார். இப்படியிருக்க ஏழாம் நாள் தக்ஷகன் சாபத்தை நிறைவேற்றக் கடற்கரைக்கு வரும்போது எதிரில் ஓடி வரும் ஓர் பிராமணனைப்பார்த்துத் தானும், பிராமணவேடம் பூண்டு அப்பிராமணன் எங்கே செல்கிறானென வினவினான், அதற்கவன் இன்று அரசனை சர்ப்பம் தீண்டப் போகிறது. அதற்குச் சிகிச்சை செய்து என் தரித்திரத்தைத் தீர்ப்பேன் என்றான். தக்ஷகன், அது உன்னால் முடி யுமாவென, அதற்குப் பிராமணன், ஆதிசேஷன் முதலாய பாம்புகள் கடித்திடிலும் நான் அரசனை மீட்பேன் என்றான். தக்ஷகன் இதைப் பரீக்ஷிக்க வெண்ணி ஓர் ஆலமரத்தை தன் சக்தியால் நிர்மூலப்படுத்த பிராமணனாகிய காசிபர் அதைத் தளிர்க்கச் செய்தார். இதைக்கண்ட தக்ஷகன் காசிபருக்கு வேண்டிய பொருளீந்து எங்கேயாவது போய்விடச் சொன்னான். யாதும் தடையின்றிப் பிராமணவேடம் பூண்டு அரசனைக் கண்டு ஓர் எலுமிச்சம் பழத்தைக் கொடுக்க, அரசன் அதை முகர்ந்து பார்க்கையில் தக்ஷகன் பாம்பு வேடம் பூண்டு அரசனைக்கடிக்க அரசன் இறந்தான்.

 
K. R. சுப்ரமண்யன்,

உடுமலை.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

 

 

 

No comments:

Post a Comment