Monday, September 7, 2020

வறுமை

 

“கொடிது கொடிது வறுமை கொடிது'' என்னும் நம் நாட்டு அனுபவ மொழியைக் கேளாதாரிலர். இவ்வறுமை யடைந்த மாந்தர் படும்பாட்டுக்கு அளவுமுண்டோ. இதனை வறுமைப்பிணி எனப் பெரியார் கூறியுள்ளதை நோக்குக.


 ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
      ஆம்பி பூப்பத் தேம்பசி யுழல
 இல்வி தூர்ந்த பொல்லா மார்பம்
      சுவைதொறும் சுவைதொறும் பால் காணாது
 குழவி தாய்முகநோக்க, தாயென்முக நோக்க
      நானுமுன் முக நோக்கி வந்தனன் குமணா!


இது, குமணச்சக்கரவர்த்தியை யண்மி தன் வறுமையைச் சிறிது தணித்துச் செல்ல வெண்ணிய வொரு பாவலர் கூற்று. மேற்சொன்ன பாவலர் கதியை யனுபவித்து வரும் மக்கள் நம் நாட்டில் ஏராளமாக உளர். அந்தோ! ஒரேவேளை, அதுவும் கால் வயிற்றுக்குக் கஞ்சியைப்பருகி, யாதொரு தொழிலும் புரியவியலாது தேகமெலிந்து இயமனை வலியவழைக்கும் மாந்தர் நிலையும், திரைகடலோடித் திரிந்து பிறநாட்டில் புகுந்து மேம்பாடுற்றவரது செருப்புதைக்கும், பிரம் படிக்கும், உயிர் வதைக்கும் இலக்காகி அரை வயிறுண்டு உடல் மெலிந்து வெறுங்கையராய் நாடு திரும்பும் கூலியாளர் கதியும், பெற்றோர் வருந்தித் தேடி வைத்த சிறு திரவியத்தைச் செலவு செய்து ஆங்கிலத்தைச் சிறிது கற்று சர்க்கார் வாயில்கள் தோறும் காத்திருந்து நான்கு வருஷங்கள் காயமில்லா வேலையும் பின் மாதம் 35 ரூபா வருவாயில் குமாஸ்தாவாக அமர்ந்து மாதத்தின் முதல் தேதி யன்று (சம்பளம் பெறும் நாள்) மட்டும் வறுமை விலகி மறுநாள் முதல் படும்பாடும், கூற அனந்தனாலுந்தான்ஆமோ? மேற்சொன்ன மூவினத்தாரிலும் மிக்க வறுமையை யனுபவிக்கும் நான் என்னென்று கூறுவேன் என் நிலையை. அம்மம்மா - மாந்தர்காள்! மறந்தும் மறவாதீர்! பிறந்தும் ஆசிரியர் தொழிலிற் புகாதீர்! - கினும் தாலுகாபோர்டு உத்தியோகம் நாடாதீர்! முன் ஏழ் பிறப்பிற் செய்த பாபத்தையனுபவிக்கவே தாலுகா போர்டு ஆசிரியராவது போலும் – இன்னவர்க்குக் கடன் கொடுப்பார் கிடையாது. கொடுத்தாலும் அக்கடனை வசூலிக்க உலகம் தோன்றிய முதல் என்னென்ன முறைகளுண்டோ அவையாவையும் பிரயோகிப்பர். தாலுகா போர்டாரோ மூன்று மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் அனுப்புவர். இதற்குள் ஆசிரியர் நாலூர் மாற்றப்பட்டு அங்கிங்கெனாதபடி என நாலுமூரில் (தொங்கல்) திற்பர். அல்லது ஐந்தாவது ஊர் வந்து சேரினும் சேர்வர். அந்தோ ஏற்பது இகழ்ச்சி எனினும் இவ்வாசிரியர் கதியினும் அது இகழ்ச்சியாமோ?

 

நிற்க, இவ்வாறு வறுமையோ நம் நாட்டில் பெரும்பாலான மக்களைப் பீடித்து நிற்கின்றது. ஆதலின் அதன் கொடுமையை நினைந்து மனம் வருந்தி நொந்து புண்பட்டு, நீரில் விழுந்து நீந்தவறியாது தத்தளித்து உயிர். விடும் விட்டிலைப் போல் ஆவது என்ன பயன். மனோதைரியம் குன்றாமல் அவ்வறுமைக் கடலில் நீந்திக் கரை யேறுவதன்றோ ஆண்மை.


 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
 இடுக்கண் இடுக்கண் படும்
                            - (குறள்)

 

என்றும்,


 இடும்பைக் கிடும்பைபடுப்பர், இடும்பைக்
 கிடும்பை படாஅ தவர்
-                                - (குறள்)


என்னும் திருவாக்குகளைக் கண்டுணர்ந்து அவ்வறுமையே இனிவரும் நன்மைக்கு ஏதுவாகும் எனக்கொண்டு தேறுதலடைய வேண்டும்.

 

உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா - அத்தகைய நிலையில்லாவறுமைக்கு - ஓரிடத்தும் தரித்து இரோம் என்னும் தரித்திரத்துக்கு, பயந்து வாழ்வது மதியீனமாகும்.

 

மேனாட்டுச் சரித்திரத்தை நோக்குங்கால் வெகு உன்னத பதவிக்கு வந்துளோர் அநேகர், இளமையில் மிகுந்த வறிய நிலையிலிருந்தே தங்கள் மனோதிடத்தாலும் விடாமுயற்சியாலும் மஹோன்னத பதவியைப் பெற்றுளார்.

 

'Tis a Common Proof that

Lowliness is young anbition's ladder -

 

என்னும் கவிச்சக்கிரவர்த்தி ஷேக்ஸ்பியர்கூற்றின் உண்மையை நோக்குக.

 

Poverty is the sixth sense - வறுமையே மனிதரின் ஆறாவது புலன் என்னும் ஜெர்மன் பழமொழி யொன்றுண்டு. தரித்திரத்தால் நாம் அடையும் நற்பழக்கங்கள் நம் பிற்கால நல்வாழ்வுக்கு உதவியாகின்றன.

 

மேனாட்டு வர்த்தகர் ஒருவர் தம்மிடம் வேலை பார்த்து வரும் இந்திய குமாள்தாவைக் கண்ணுறுந் தோறும் பேருவகை கொண்டு அன்னவாது உழைப்பின் திறத்தால் தாம் பெற்று வரும் பெரும் ஊதியத்தை நினைந்து உடலம் பூரித்து, ஓர் நாள் அக்குமஸ்தாவை யண்மி, என் அருமைக் குமாஸ்தாவே! உம்முடைய திறமையும் ஊக்கமும் பொறுமையும் நிகரற்று விளங்குகின்றனவே! நீர் எந்தப் பள்ளியிற் படித்தீர்? என்று வினவ, அன்னவர், பிரபுவே! நான் அநேகம் ஸ்கூல்களில் கற்றேன். ஆனால் நான் அதிககாலம் படித்ததும் மிகுதியாகக் கற்றதும் வறுமை என்னும் பள்ளிக்கூடத்தில் தான் என்று மொழிந்தனராம்.

 

ஆ! வறுமை சிறிது நன்மையையும் அளிக்கின்றது. இதனாலன்றோ,

 

Early adversity is often a blessing என்றார் ஓர் ஆங்கிலப் பெரியார்.

 

மேலும் வறுமையானது தெய்வபக்தியை வளரச்செய்யும் சாதனங்களில் நிகரற்றதொன்று. இதனைக் கீழ்வரும் பெரியாரது திருவாக்கே தெளிவாக்கும்.


'வரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே

பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந் துணி

பலதொடுத் திசைத்த வொரு துணி யல்லது

பிறிதொன்று கிடையா தாக, மறுமனைக்

கடைப்புறத் திண்ணை யல்லது கிடைக்கைக்

கிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்கு

உப்பின் றிட்ட புற்கையூ ணல்லது

மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்

ஈகுந ரில்லை யாகநா ணாளும்

ஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி

மெய்த்தவர் குழாத்தொடும் வைகவித்திறம்

உடல் நீங் களவு முதவிக் கடவுள் நின்

பெரும்பத மன்றியான் பிறிதொன்

றிரந்தனன் வேண்டினும் ஈந்திடாததுவே'


ஆதலின் வருமைக்கஞ்சி யுண்டுழலும் மாந்தர்காள்!

இனிவறுமைக்கு அஞ்சி உண்டு உழலாதீர்!

 

('From Log - Cabin to White House') குடிசையிற் பிறந்து அரசையடைந்த பல பெரியாரை நவீன நாகரீக மிலங்கும் அமெரிக்கா பெற்றுளது. நம் பாரதநாட்டிலும் அத்தகைய பெரியார் பலர் தோன்றியுளார். அவரது சரித்திரங்கள் வறுமைப் பிணியாளர்க்குச் சிறந்த சஞ்சீவியாகு மென்பதிற் றடையு முண்டோ.

 

ஒரு எளியவிதவை ‘ஓஹியோ' (Ohio) நகரத்து காடுகளில் தன் பதினெட்டுமாதக் குழந்தையை வைத்துக் கொண்டு ஆ! நாம் எவ்விதம் இக்குழந்தையைக் காட்டு மிருகங்கள் மத்தியில் காப்பாற்றப் போகிறோம் என்று ஏங்கியிருந்தார். சில நாட்களில் அச்சிறுவன் மரங்கள் வெட்டி நிலந்திருத்திப் பயிரிடுவதில் தன் தாய்க்கு உதவி செய்து கொண்டே வந்தான். நண்பர்களிடம் புஸ்தகங்கள் வாங்கிவந்து (தான் விலை கொடுத்து வாங்க இயலாத வறியன்) தன் ஓய்வு நேரங்களில் சிறிது சிறிதாகப் படித்து அவற்றைத் திரும்பக் கொடுத்து விடுவான். 16 - வது வயதில் பொதிக் கழுதைகளை ஓட்டிச் சிறிது ஊதியம் பெற்றுத் தாய்க்கிட்டான். படிப்பில் ஆவல் மிகவே இவன் ஓர் கலாசாலையில் மணியடிக்கும் வேலை ஏற்றுக்கொண்டு அதில் வரும் வருமானத்தை அப்பள்ளியிலேயே தான் கல்வி பயிலச செலவு செய்து கற்று வந்தான். வகுப்புகள் மேலுறவே, இவன் இரவு நேரங்களிலும் ரஜாநாட்களிலும் தச்சுத் தொழிலாளருக்கு உதவி செய்து மரம் அறுத்தும் மற்றும் ஊழியம் செய்தும் பெற்று வந்த பொருளையும் தன் படிப்புக்காக்கினான். இவ்வாறு இவர் உவில்லியம் காலேஜில் பட்டம் பெற்றார். 26 - வது வயதில் செனட் சபைக்குட் புகுந்தார். 33 - வது வயதில் காங்கிரஸ் சபைக்குட் சென்றார். 27 – வருஷங்களில் இப்பெரியார் 'அமெரிக்கா ஐக்கியமாகாணத்தின் தலைவரானார்.' இவரே ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் ('James A Garfield') என்பார்.

 

நீராவி யந்திர நிபுணரான ஜேம்ஸ் வாட் என்பவர் சாஸ்திர ஆராய்ச்சிக்குரிய சாதனங்கள் ஏதுமில்லாத ஏழையாயிருந்தும் தமக்குக் கிடைத்த கெட்டில், அதன் மூடி முதலியவற்றைக் கொண்டு அடுப்பில் கொதித்தெழும் நீராவியோடு விளையாடி பிற்காலத்தில் உலகில் அழியாப்புகழ் எய்தினர்.

 

ஆதலின் சகோதர சகோதரிகளே! வறுமையால் ஏக்கங் கொண்டு நாம் உலகில் ஒன்றுக்கும் உதவவல்லோ மல்லேம் என்று வாளா இருத்தல் கூடாது. எவ்வித முயற்சியாலாவது முன்னோங்க முற்பட வேண்டும். 'I wasted time and now doth Time waste me' என்று ஷேக்ஸ்பியர் கூறுவதற் கிணங்க நேரத்தை வீணேகழித்துத் திரியும் பேதையரைத் தேற்றி உய்விப்பது அறிவுடையோர் கடமையாகும்.


ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

 


No comments:

Post a Comment