Monday, September 7, 2020

 

விதவா விவாகம் கற்புடைத்தா

 

உலக சரித்திரத்தை ஆராயுமளவில் மனித சமுகத்தாரின் மனப் போக்கும் அவர்களின் சமுதாய வாழ்வும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகின்றதென்பதை மறுக்க வியலாது. மேலும் பல நாட்டார் பலவித மதக் கொள்கைகளையும் பல வித ஆசார ஒழுக்கங்களையும் அனுசரிக்கின்றனர். ஒரு நாட்டாரின் வாழ்வு மற்றொரு நாட்டா ருடையது போலிருப்பது அருமை. வேம்பு தின்றவனுக்கு வேம்புருசி, கரும்பு தின்றவனுக்குக் கரும்பு ருசி'' என்னும் சாதாரண பழமொழிக்கிணங்க அவரவர் செய்வது அவரவர்களுக்கு யுக்தமாகவே தோன்றும். நம் பழக்க ஒழுக்கங்களையும் சமுதாய வாழ்வையும் நம் தேசம்தக் கோட்பாட்டிற்கு இணங்கவும் யுக்தி அனுபவத் திற் கிணங்கவும் இலேசாக மாற்ற முயல வேண்டுமேயொழிய, பிற மதத் தினரையும், அயல் நாட்டாரையும் கண் மூடித்தனமாக, புலியைப்பார்த்து நரி சூடு போட்டுக்கொண்டது போல், பின்பற்றிப் போலி ஆசாரமுடைய வர்களாக லாகாதென்பது மறுக்கக்கூடா உண்மை.

 

நிற்க நமது பத்திரிகாசிரியர் சென்ற சஞ்சிகையில் வரைந்தவாறு பழைய புராண இதிகாசங்களை ஆராய்ந்து நோக்குமளவில் விதவா விவாகம் எவ்விதத்திலேனும் கற்புடையதாகாது என்பது திண்ணம்.

 

ஆயினும், ஒருவிதத் தீர்மானத்திற்கு வருவதற்கு முன் நம் விவாக முறையைப் பற்றிச் சிறிது கூறவேண்டிய தவசியம். இந்து விவாக முறையில் ஒன்றிலாவது ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் தனியாகச் சந்தித்து ஒருவரை யொருவர் காதலித்துப் பின்பு தங்கள் பெற்றோருக் கறிவித்து விவாகம் முடித்துக்கொள்ளுதல் என்னும் விதி ஏற்படவே பில்லை. ஆனால் அனுபவத்திலிருக்கின்றதோ என்றாலோ அதிலுமில்லை.

 

க்ஷத்திரியர்களின் பூர்வ கதைகளின் மூலமாய் ஆராயுங்கால், ஆண், பெண்ணினுடைய ரூபலாவண்னியத்தையும், குண நயத்தையும் கேள்விப் பட்டும், பெண் புருஷனுடைய கீர்த்தியையும் புகழையும், வீரச்செயலையும் கேள்வியுற்றும், ஒருவர்மேல் ஒருவர் கரைகாணாக் காதலுற்று பிறர் மூலமாகத் தம் பெற்றோருக்கு முறையே அறிவித்து, சுயம்வர சார்பாக விவாக முடித்துக் கொள்வதுண்டென்பதை நளசரிதம் போன்ற கதைகள் தென்ளெனக் காட்டுகின்றன.

 

முற்காலத்தில் பால்ய விவாகம் என்பது ஏட்டிலாவது அல்லது வழக்கத்திலாவது இருந்ததாக எங்கும் புலப்படவில்லை. தற்காலம் பால்யவிவாகம் நம்மவருள் வளர்பிறைச் சந்திரன் போல் ஏறுமுகங் காட்டிக்கொண்டு வருகின்றது. அந்தோ! கஷ்டம் கஷ்டம்!! பால் மணம் மாறாப் பசலைகட்கும் கடிமணம் புரிகின்றனரே!

 

எடுத்துச்கொண்ட விஷயத்தை யொட்டிப் பேசுங்கால், ஒரு பெண் புஷ்பவதியான. பின் தாய் தகப்பனார் ஒரு புருஷனுக்கு மணம் செய்வித்த பின்பு, சமீப காலத்தில் புருஷன் இறக்க நேரிட்டால், அவ்விதவை தன் புருஷனைக் காதல் மேலிட்டால் மணக்காவிடினும் அவனை மணந்தபோதே தெய்வமாகப் பாவிக்க வேண்டு மென்பதை ''கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன், மண்ணானாலும் மணவாளன்" என்பது வற்புறுத்துவதால், அவள் வேறு கணவனை இச்சித்து மறு விவாகம் செய்து கொள்வது கற்புக்குப் பங்கமேற்படு மென்பதற் கையமில்லை.

 

ஆனால், விவாகம் இன்னதென்பதும், இல்லற வாழ்க்கை இன்னதென்பதும், கணவன் என்றால் தான் என்ன என்பதுங்கூடக் கனவிலும் கேட்டறியாத 7 அல்லது 8 வயதுள்ள சிறு பெண் விவாகமான மறுவருஷத்திலாவது அல்லது புஷ்பவதி யாவதற்கு முன்பாவது (பாலிய விவாகக் கேட்டால்) விதவையாக நேரிட்டால், அதைக் கண்ணால் பார்த்துச் சகிக்க முடியுமா? அந்தப் பெண் காதலையாவது கற்பையாவது இன்னதென்று காதிலும் கேட்டிருக்குமா? இப்பால்ய விதவை மறுவிவாகம் செய்துகொள்வதில் யாது ஆக்ஷேபம். இதில் கற்பு நிலை குன்று மென்று அறிவுடையார் செப்பத்தரமோ! பச்சைக்கிளி போல் பாவிப் பெண் பர்த்தாவை யிழந்து ஆயுள் முழுவதும் உலக வாழ்க்கையே இன்னதென்றறியாமல் உயிர்விடநேரிடுவதைப் பார்க்கிலும் மறுவிவாகம் செய்து கொள்வதே சர்வ சிலாக்யம் என்பது நுண்ணறிவுடையோர் துணிபு.

 

பால்ய விதவை மறு கலியாணம் செய்து கொள்வதால் கற்பு நிலை மாறாதாகையால் இச்சீர் திருத்தம் நம் சமுதாய வாழ்வில் ஏன் செய்யக் கூடாது என்று கேட்கத் தடையென்ன? ஆகையால் சாஸ்திரத்தையும், அனுபவத்தையும் ஒட்டிப் பேசும் பொழுது, புஷ்பவதியான பின்பு கலியாணமான பெண் விதவையாக நேரிடின் அப்பெண் மறுகலியாணம் செய்து கொள்வது உசிதமல்லவென்பதும், பால்ய விதவை மறு விவாகம் செய்து கொள்வதால் கற்புக்குப் பங்கம் ஏற்படாதென்பதும் அங்கை நெல்லியங்கனி யன்றோ.

 

உண்மையாகக் கூறுமிடத்து, ஒன்று பால்ய விவாகம் என்னும் வழக்கத்தை வேறோடு களையவேண்டும்; அல்லது பால்ய விதவா விவாகம் கற்புடைத்து என்பதைச் சான்றோர் நிலை நாட்ட வேண்டும்.


S. V. L. வெங்கட்டராம், சூலூர்.

 

குறிப்பு: - நமது நண்பர் கூறிய விஷயங்கள் யாவரும் ஒப்புக்கொள்ளத் தக்கனவேயாகும். மலராத மொக்கில் மணமில்லாதது போல், பருவமடையாத கன்னிகைக்கு காதல் இன்னதென்பதே தெரியாதென்பது உண்மையே. அவள் ஒரு ஆடவன் மேல் இச்சை வைத்து அவனை மணக்கப் பிரியங் கொள்வது யாங்கனம்? ஆகையால் அவள் மறுமணம் புரிந்து கொண்டால், முதல் மணந்த கணவன் மேல் அன்பென்பதே யவள் மனதிலில்லாததால், அவள் முதல் முதலாக அந்த இரண்டாவது கணவன் மேலேயே காதல் கொண்டு கணவன் என்ற அன்பு பெறுவாள் - ஆனால் பருவம் வந்தபின் ஒருவனை மணம் புரிந்து, அவன் தன் கணவன் என்ற அன்பு கொண்டு அவனோடு சுகமனுபவித்தவள், அவன் இறந்தபின், தானே இன்னொருவனை இச்சித்து மணம் புரிந்தாலும், முன் அனுபவித்த முதல் கணவனைக் கருதமாட்டாள் என்று ஒருவர் நினைப்பது பெருந்தவறே. குரூபியான ஒரு மனைவியை யடைந்த ஒருவன், அழகு வாய்ந்த ஒரு வேசியிடம் சுகம் அனுபவிக்கையில் தன் அன்பிற்குரிய ஒரு குரூபியாகிய மனைவி யிருக்கிறாள் என்பதை நினைக்காம லிருப்பானே. இது மானிட சுபாவத்திற்கு மாறான தன்றோ.

 

இக்காரணத்தால் பருவ மடைய முன் விதவையாய்விட்ட கன்னிகை மறுமணம் புரிந்து கொள்வதால் கற்பிற்கு ஊனம் என்று கூறுவதற்கில்லை. கற்பு என்பது மனோ நிலைமையைப் பொருந்தியது. மகா கற்பரசியாகிய கபீர்தாவின் மனைவி தன் பர்த்தாவின் கட்டளைப்படி, அவர் அடியார்களுக்கு அமுது செய்விப்பதற்காக அரிசி முதலிய பண்டங்களை யளித்த வர்த்தகனுடைய காம இச்சையைத் தணிக்கச் சம்மதித்துச் சென்றாள். கணவரின் கட்டளையை நிறைவேற்றுவது நமது கடமை யென்ற ஒரு நோக்கமே அவள் அதற்கு ஒப்பிச் சென்றதன் காரணமாதலால், அவள் பதிவிரதாத் தன்மை இன்னும் அதிகமாகப் பிரகாசித்ததேயன்றி அதற்குப் பங்கம் சற்றும் நேரவில்லையன்றோ.

 

இக்காரணங்களால் பருவ மடையுமுன் விதவையானவர்கள் மறுமணம் புரிவதில் குற்றமில்லை யென்பது நியாயமே. ஆயினும் அத்தகை யோர் மட்டும் மறுமணம் புரிந்து கொள்ளலா மென்கிற வழக்கத்தையனுபவத்திற்குக் கொண்டுவரின், நமது நாட்டார் அந்த வரம்போடிருக்க மாட்டார்கள். கொஞ்சங் கொஞ்சமாகப் பிறகு எல்லா விதவைகளுமே மறுமணம் செய்து கொள்வது சாதாரணமாகி விடும். பிறகு கற்பென்பதே நம் புண்ணிய பூமியை விட்டகலும் என்பதும், இக்கலிகாலத்தில் அதனால பெருந் தீங்குகள் விளைந்து இப்புண்ணிய பூமி பாப பூமியாக மாறிவிடு மென்பதும் நாம் கூறாமலே யாவரும் உணரலாம். ஆகையால் இவ்வாலிப விதவைகளின் கோரக்காட்சி யடியோ டொழிவதற்காகப் பாலிய விவாகத்தை நிறுத்தி விடுவதே தகுதியான மார்க்கமாகும். நம்மவர்களிலுள்ள மதத் தலைவர்களும் மற்றப் பிரமுகர்களும் சிரத்தை யெடுத்துக்கொண்டு இப்பாலிய விவாகத்தைத் தடுக்க முயல்வார்களாயின் நம் நாட்டிற்குப் பேருதவி செய்தவர்களாவார்கள். பரம்பொருள் கிருபை புரிவாராக.


ஓம் தத்ஸத்

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴

 

 

 

 

No comments:

Post a Comment