Monday, September 7, 2020

 

வித்தியாசத்தை ஒழி

தி. மு. ராமகிருஷ்ணன்.

 

இந்த வரழ்க்கை இனித் திரும்பி வரப்போவதில்லை. அதற்குள் ளாக வாழ்க்கையை நன்றாக அனுபவித்தது தான் கண்ட பலன். ஆகவே, சமுதாயத்தில் பேதங்களை அகற்றி ஒழுங்காகவும் நியாயமாகவும் வாழப் பார், மனிதனே!

 

ஊரிலே ஒன்று சொல்லிக் கொள்வார்கள். “டேய், சுவர்வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும். ஆகையினால் உடம்பை நன்றாய்க் கவனித்துக்கொள்” என்று எங்கள் வட்டாரங்களில் எல்லாருமே பேசிக் கொள்வதுண்டு. அந்தமாதிரி பேச்சுகளுக்கெல்லாம் இடம் கொடுப்பவர்களா நாம்! நாமெல்லோரும் இந்த உடலை எப்படிப் பாபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொண்டோ மல்லவா? சுக ஜீவியம், நீடித்த வாழ்க்கை எந்தப் போக்கிலே மிளிரவேண்டும் என்பதை நாம் அறிய வேண்டியது நமது கடமை யல்லவா?

உலகம் எண்பத்து நான்கு லக்ஷம் ஜீவராசிகளையும் அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். நம் முன்னோர்கள் பரமஞானிகள் தீர்க்கதரிசிகள்.
அறிவாளிகள். ஜீவராசிகள் அனைத்திற்கும் உடல் பல தினுசுகளிலே அமைந்திருந்த போதி லும் உயிர் எல்லாம் ஒரே ரூபம்தான் என்று ரொம்ப நுட்பமான முடிவை கட்டி விட்டார்கள். அது மாத்திரமா? ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை கணக்கு ஜாபிதாகூடத் தயாரித்து
விட்டார்கள். இப்படிப் பல இனங்களாக இயற்கையில் மறைந்து கிடந்த ரகசியத்தை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் அவர்கள் வழி வந்தவர்கள் தான். அவர்கள் பகுத்தறிவு நம்மிடையேயும் பொதிந்து கிடக்கிறது. அதைப் பண்படுத்த வேண்டாமா?
அப்பொழுது தான் மனித இனத்தில் நாம் சேர்க்கப்படுவோம். வெறும் மனித உடல் எடுத்து நூற்று இருபத்தொரு வருஷம் வாழ்வது பெருமை என்று எண்ணுகிறீர்களா?
" 'One crowded hour of glorious life is worth an age without a name' என்று பெரியார் சொல்லுகிறார். பூமிக்குப் பாரமாக வாழ்வதில் பயனில்லை. வீரமான வாழ்க்கையை ஒரு மணி நேரம் இந்த உலகத் காண்பித்தால் போதும். அதில் தான் உயிர் இருக்கிறது. அப்படியில்லாமல், “ஐயோ! என் வாழ்க்கையை வேம்பாக்கி விட்டேனே. வாழ்நாட்களை வீணாக்கி உலகம் என்னை வெறுத்துத் தள்ளும்படி காலத்தைக் கழித்து விட்டேனே. என்னால் இந்த உலகத்துக்கு என்ன பயன் " என்று ஒருவன் மனம் வருந்திச் சாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. "ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில்' என்ற ஸ்லோகத்தை நனவாக்கிய தேவதசிசன் மகான் லெனின் சொல்கிறார். அற்பத்தனமான பாதையில் செல்லாமல் அமரத்வம் நிறைந்த பாதையிலே செல்வோமாக.

 

இந்த நிலைமையில் மனித சமுதாயம் ஒரே பெற்றோரின் புதல்வர்கள் தான் என்பதை உணரவேண்டும். உலகில் பரந்து கிடக்கும் மக்கள் எல்லோரும் நம் உறவினர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. முதல் முதலில் இப்பொழுது வசிக்கிற அவ்வளவு பேரும் வானத்திலிருந்து குதித்து விட்டோமா என்ன? ஒரு வித்திலிருந்து தான் இந்த உலகமாகிய விருட்சம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏற்றத்தாழ்வு காண்பிப்பது எவ்வளவு பேதமை!

 

காலம் மாறிக்கொண்டு வருகிறது. மனித சமுதாயம் முன்னேற்ற மடைந்து கொண்டு தான் வருகிறது. அன்று தொழில்களின் மாறுபாடுகளுக் கேற்பப் பல வகுப்புகள் தோன்றி விட்டன. ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுக்கு ஏற்ற நிலத்தைத் தேடி பிரிந்து விட்டார்கள். அவ்வளவுதான அந்த மூலக்கதைதான் இன்று பல மதங்களாகவும், ஜாதிகளாகவும் மாறுபட்டு விளங்குகின்றன. 'மனிதனின் ஒழுக்கத்துக்கும் உண்மை வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் அமைக்க எழுந்த மதம் நாளடைவில் ஒரு சில வகுப்பாரை
நசுக்கும் தன்மையில் கோர சொரூபமாக மாறிவிட்டது. அஞ்ஞானத்தில்தான் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் கொடுமை! கொடுமை!! கொடுமையை எதிர்த்து நிற்க வேண்டியது நமது கடமை. நாம் எல்லோரும் ஓர் இனம், ஓர் நிறை, இந்த நாட்டு மன்னர் என்ற கொள்கையை நிலைநாட்ட வேண்டும். ஜாதி பேதம், நிற பேதம் நம் மாசற்ற உள்ளத்திலிருந்து அகலவேண்டும்;


ஏ, மனிதனே முதலில் இந்த வித்தியாசத்தை ஒழி.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment