Monday, September 7, 2020

 

வஸந்த ஒய்யாரி

(“ரகுநாதன்'')

“மலரினில், நீல வானில்

மாதாரார் முகத்தில் எல்லாம்

இலகிய அழகை ஈசன்

இயற்றினான்."

என்று உளங் களித்துப் பாடுகிறான் கவிஞர் கோமான் பாரதி.

கணத்துக்குக் கணம் புது சௌந்தர்ய ரூபம் பெறும் இயற்கைத்தேவியின் நடனக்கால்களின் சுழற்சியில் அழகு மிகுதியாக இயங்கத்தான் செய்கிறது. தாரகை மல்லிகைகளும், பூர்ணிமைப் பங்க ஜமும் பூக்கின்ற நீலவானக்கடலில் அழகியல் சொக்கு
மேகங்களின் அமிருத தாரையை விரும்பி ஏங்கி நிற்கும் அழகும் கண்ணிற்கு குளுமையானது. காதல் சிருஷ்டியான தாஜ்மஹாலும், குற்றாலத்து அருவியின் வெள்ளித் தாரையும், சொக்குப்பச்சை விரித்த ஹிமாலயக் காடுகளும் அழகுடையவை
தான். ஆயினும், ஒரு அழகிய பெண்ணின் முக அழகுக்கு இதெல்லாம் ஈடாகாது. "காதல் புரியும் இளங் கன்னியரின்” வனப்பும், முக விலாஸமும் ஈசனையுங் கூட, நிலை தடுமாறச் செய்யும். தென் திசை இலங்கை வேந்தனாகிய ராவணன் மயங்கியது,
சீதையின் வனப்பால். பாரத யுத்தத்துக்குக் காரணம் பாஞ்சாலியின் முத்துப்பற்கள் உதிர்த்த முல்லைச்சிரிப்பு. ஹோமரின் காவியம் புகழுகின்ற டிரோஜன் யுத்தம் ஹெலனின் சௌந்தர்ய்க் கவர்ச்சியாலே ஏற்பட்டது தானே! எகிப்து ராணியான கிளியேர் பாட்ராவினால் ஏற்பட்ட புயல்களும் கொஞ்ச நஞ்சமா? இதற்கெல்லாம் காரணம்? மாதரார் முகத்தில் இலங்கும் அழகுதானே!

அழகைப் படம் பிடித்து, கற்பனைக் கோலால் நகாசு வேலை செய்யும் தொழில் சாதாரணமான மனிதனால் முடியாது. அதற்கென்று பிறந்தவன் கவி. அப்படிப்பட்ட ஒரு கவி பிடித்த அழகுச் சித்திரத்தைப் பார்ப்போம்:

குற்றாலக் குறவஞ்சியைப் படித்தவர்களுக்கெல்லாம் வஸந்த ஒய்யாரி நன்கு பரிச்சயமாகி யிருப்பாள். அவளது அழகை, கவி திரிகூட ராஜப்பர் தீட்டுகின்ற விதமே அலாதியானது. அவள் நடந்து செல்லும்போது புலம்புகின்ற கால் சிலம்புகளின் ஓசை கூட, பாட்டில் கேட்கும்படி செய்து விடுவார், அவர்.

மேகங்கள் கன்னங் கருத்து உலாவுகின்றன. காற்றின் அசைவாலும் உற்சாகக் களிப்பாலும், அவை சுருண்டு புரண்டு செல்கின்றன. அந்த மேகங்களைப்போல. சுருண்டிருந்த வஸந்த வல்லியின் அளக் பாரம், அவளது வேல்விழிக் கோணத்தில் ஏற்படும் அலைகள் நமது மனத்தையே சூறையாடி விடும்.

“இருண்டமேகம் சுற்றிச் சுருண்டு சுழி எறியும்

கொண்டையாள்—குழை

ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும் விழிக்

கெண்டையாள்.”

குழலும், கெண்டை விழியும் ஆளை மயக்குகிறது. அடுத்தாற் போல், அவளது அதரங்கள்.

முருக்கம்பூ மொட்டு அரும்பியும், அரும்பாமலும் இரண்டுங் கெட்டான் நிலையிலிருந்து அழகைத் தூவுகிறவேளை எவ்வளவு ரமணீயமா யிருக்கும்? அதைப்போல இருந்தன, அவளது மாதுளம் முத்தின் சிவப்பை யொத்த செவ்வுதடுகள்.
அவளது நெற்றியோ, ரோஹினியின் புன்னகையில் மயங்கி, வானத்திலே தொங்கு ஊஞ்சலாடும் மூன்றாம் பிறையைப்போல ஒளி பொருந்தி யிருந்தது. வளைத்து, நாணேற்றி எய்வதற்குத் தயாராக இருக்கும் வில்லை நினைப்பூட்டுகின்றது, அது.

திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும்

இதழினாள் – வரிச்

சிலையைப்போல் வளைந்து, பிறையைப்போல் இலங்கு

துதலினாள்.

 

கண்ணும், கொண்டையும், நுதலும், இதழும் முடிந்தது. இன்னும் அந்த முகத்திலுள்ளதோ? ......அவளது புருவம்-ஆம்-அதுவும் அழகில் இம்மி கூடக் குறையவில்லை. மனதில் எழுகின்ற வெறியை ஒரே நொடியில் 'ஒரு வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியாவது போல்' தொலைத்து விடக்கூடிய சக்தியுள்ள புருவங்கள், அவை. அவளது பருவமேர் உருண்டு,
திரண்டு, கர்வம் நிறைந்து, திமிறி நிமிர்ந்து பார்க்கும் மங்கைப் பருவம். உள்ளத்தின் துள்ளலும், உவகையின் பெருக்கும் அந்தப் பருவத்தில் கர்வங்கொண் டிருக்கும். இதற்கும் மேலே அவளது சொல்லின் சுவை. கரும்புச் சாற்றையும், அருமருந்தாகிய அமிர்தத்தையும் வடித்தெடுத்த இளம்பாகு மொழிகள், அவளது சொற்கள். அந்தச் சொற்கள் வருடி வருகின்ற பற்களின் ஒளியோ சொல்லி முடியாதது. “எற்றி நுரை கக்கியொரு பாட்டிசைக்கும்'' கடலில் மிதந்து, கரையில் தள்ளப்படும் ஆணி முத்தினங்களை வரிசையாகக் கோத்துப் பதிப்பித்தது போல்வன, அந்தப் பல் வரிசை,

அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை கொல்லும்

புருவத்தாள்

அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கைப்

பருவத்தாள்,

கரும்பு போல் இனித்து மருந்துபோல் வடித்த

சொல்லினாள் – கடல்

கத்தும் திரை கொழித்த முத்துநிறை பதித்த

பல்லினாள்.

 

பல்லழகைக் கூறியதைக் கேட்டது, அந்த மூக்கு. உடனே, "அடடா. அப்படிப் பட்டதா?'' என்று அந்தப் பல்லின் முத்து நிலா விரிப்பை எட்டிப் பார்க்கிறது, அவள் மூக்கு. அந்த மூக்கு எப்படிப் பட்டது? ஹம்ஸ பேஸரி தரித்த அந்த மூக்கில் ஒரு ஒளி முத்து ஊசலாடிற்று. கடைசியில் முக அழகு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே யடியில் சொல்லி விடுகிறார், கவிஞர்:

பல்லின் அழகை எட்டிப்பார்க்கும் மூக்கில் ஒரு

முத்தினாள்-மதி

பழகு வடிவுதங்கி அழகு குடிகொளும்

முகத்தினாள்.

 

சந்திரிகை பழகுவதற்கும் அழகுக்கு இருப்பிட மென்று ஒன்று இருப்பதற்கும் என்றே அமைந்தது, அவளது திருமுகம் என்கிறார் கவி. முகத்தழகு முடிந்தது. இனி மற்றைய அழகைக் கவனிக்க வேண்டியது தான்.

மரத்தோடு மரமாய் ஒட்டியிருக்கும் இளங்கமுகம் பாளையின் வழவழப்பையும் மிஞ்சி இலங்குகிறது, அவளது கண்ட சரம் பூண்ட கழுத்து. அவளது தொய்யில் எழுதிய மார்பின் விம்மலும் நம்மை இழுக்கிறது. அவளது கரங்களோ? வயிரக் கற்கள் பதித்த கடகஞ் செறிந்த கைகள்; தாமரைக் கரங்கள். சரி. சித்திரத்தைப் பார்ப்போம்:

வில்லுப்பணி புனைந்து வல்லிக்கமுகை வென்ற

கழுத்தினாள்-ஜகம்

விலையிட்டெழுதி இன்ப நிலையிட் டெழுதும் தொய்யில்

எழுத்தினாள்

கல்லுப்பதித்த தங்கச் செல்லக் கடகமிட்ட

செங்கையாள்.

 

இப்படியே போகிறது வருணணை. பாற்கடலில் வெடித்துப் பிறந்த அமுத மொத்த மேனியும், காதல் பாலுக்கு, சீனி போன்ற அவளது அழகும், அவளது கொடி போன்ற லாகவமும் புலவர் கவியழகில் இயங்குகிறது. இந்த இயலழகு திரிகூட் ராஜனான ஈசனைக்கூட், மயக்கி விடுகிறதாம்; அவனது உறுதியான உள்ளமும் உருகுகிறதாம்.

வெடித்த கடலமுதை எடுத்து வடிவுசெய்த மேனியாள்- ஒரு

வீமப்பாக மொத்த காமப்பாலுக் கொத்த சீனியாள்

பிடித்த சுகந்தவல்லிக் கொடிபோல் வசந்தவல்லி பெருக்கமே-சக்தி

பீடவாசர் திரி கூடராசர் சித்தம் உருக்குமே!

 

முழுப்பாட்டையும் தாள லயம் தவறாது பாடிப் பார்த்தால், திரிகூடராசர் உள்ளம் மட்டுந்தானா உருகும்? நமது மனமும் வஸந்த ஒய்யாரியின் 'வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த" அழகைக் கண்டு உருகத்தான் செய்யும்!

ஆனந்த போதினி – 1943 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment