Monday, September 7, 2020

 விடாமுயற்சியும்  தவமும்

 

“முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்.”                                             (குறள்)


முயற்சி செல்வத்தைக் கொடுக்கும்; அம்முயற்சி இல்லை? யல் அவ்வின்மை தரித்
திரத்தைக் கொடுக்கும் என்பது பொருள். இம்முயற்சியானது உலகத்திலுள்ள எல்லாருக்கும் இன்றியமையாதது. நாம் ஒரு காரியத்தில் முயற்சி எடுத்துக் கொள்ளும் போது முதற்கண் கருத வேண்டியது தக்கது இதுதகாதது இது என்பதே. தன் பலத்தைக் கருதாமல் பரோபகாரமான முயற்சியில் தலையிடுவதே சிறந்ததாம். அதனால் அடைய வேண்டும் பலனை அடையலாம். கடவுள் அக்காரியத்தை முட்டின்றி முடித்து வைத்து என்றும் அழியாத கீர்த்தியைத் தருவார். இப்படி ஆராய்ந்து செய்யும் முயற்சியே பகுத்தறிவுள்ள மக்கட் குரிய தாம்.


 "தக்கவின்ன தாதன வின்னவென்று
 ஒக்க உன்னலராயின் உயர்ந்துள
 மக்களும் விலங்கே மனுவின் னெறி
 புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே''


என்று கம்பர் சொல்லியுள்ள பாடல் இங்கு கவனிக்கத் தக்கதாம்.'' முயற்சியின் வாரா ஊதியம் உளவோ'' என்றனர் ஆன்றோர். உலகத்தில் மக்களுக்கு சுகதுக்கங்களைக் கொடுத்து சிற்பதும் உயர்வு தாழ்வுகளை உண்டாக்குவதும், ஒருவனைக் கல்விமானாக்குவதும் கல்லாதவனாக்குவதும் பலசாலியாகச் செய்வதும் பலவீனனாக வைப்பதும் முறையே முயற்சியுடைமையும் அஃதின்மையுமே. விடாமுயற்சி யுடையார்க்கு எந்நலனும் கைகூடும். இம்முயற்சிக்குரிய தக்கவழி,


 "கால மறிந்தாங் கிட மறிந்து செய்வினையின்
 மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம்
 சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
 ஆள்வினை யாளப்படும்''


என்ற நீதி நூலின் கொள்கையே.

 

மற்றும் கொக்கையும் கூகையையும் காகத்தையும் போலும் காலத்தை முன்னிட்டே காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும். காரியம் சித்திக்கும் வரையில் எடுத்துக் கொண்ட முயற்சியில்,

“மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்''


என்கிறபடி கண்ணுங்கருத்துமா யிருக்க வேண்டும்.

 

எக்கருமத்தையும் எளிதில் முடிப்பதற்கு இளமைப் பருவம் ஏற்றதாயினும் அறிவிற் சிறந்த அறிஞர்கள் சொன்ன ஆப்தவசனங்களையுங் கைக்கொள்ள வேண்டும். முயற்சியைக் கையாளுபவரை அது ஈசுவரனுடைய கிருபைக்கும் பாத்திரராக்குவதுடன் அதனாலுண்டாகும் இன்பம் என்றைக்கும் அழிவற்றதாகவும் பிறவி நோய்க்கும் மருந்தாகவும் தோன்றி, புல்லறிவைப் போக்கி நல்லறிவைத் தரும் சோம்பலைக் கொன்று பகுத்தறிவைக் கூராக்கும்; மறதியைப் போக்கி ஞாபக சக்தியை நிலைநிறுத்தும்; அச்சத்தை அகற்றி ஆண்மையைத் தரும்; மடத்தைக் கொன்று அறிவை விசாலப்படுத்தும்; தெய்வ நிந்தையைப் போக்கிப் பக்தியை அளிக்கும்; வீண் பெருமையை ஒழித்து விநயத்தை விருத்தி செய்யும்; பிறர் கூறும் நிந்தனைக்காக நாம் கிலேசப்படலாகாது; யார் எப்படி நிந்தித்தாலும் அதனை மௌனமாகப் பொறுத்துக் கொண்டு நம் விடா முயற்சியைத் தளர விடக்கூடாது. நல்லதுக்கு நாற்பது இடையூறென்பர். புலவர் பெருமான் கம்பர் தாம்பாடிய தேனினுமினிய "ஸ்ரீமத் கம்பராமாயணத்தை'' அரங்கேற்றத் துணிந்த போது கட்டின வீட்டிற்கு நோட்டஞ் சொல்லும் நோட்டக்காரரால் எத்தனை தரம் துன்புற்றார். அப்படி யிருந்தும் அன்னவர் எடுத்துக் கொண்ட விடா முயற்சியால் கம்பர் புகழ் இந்நன்னிலமாகிய தென்னாட்டில் கற்ற கல்வியாளரால் உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு'' என்று நாட்டுக்கே கம்பரை உதாரணமாக எடுத்துப் போற்றப்பட்டு வருகிறது. இது நிற்க,

 

முயற்சியால் ஒன்றும் அடைய முடியாது; எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றும், விதியே வலியதென்றும், மதியே வல்லது என்றும் பலர் விவாதங் கொண்டு மனம் போனவாறு பேசி ஒருவர்க் கொருவர் சண்டையிடுகிறார்கள்.


 "தெய்வத்தாலாகா தெனினும் முயற்சிதன் -
 மெய்வருந்தக் கூலிதரும்"
                             (குறள்)


அதாவது ஊழ்வகையால் காரியம் முடியா விடினும் முயற்சி உழைப்பிற் கேற்ற பலனைத் தரும் என்பதாம். இதனை,


''ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
 தாழா துஞற்றுபவர்''
                            (பொதுமறை)


 என்பது வலியுறுத்தும்

 

பகீரதப் பிரயத்தனம் என்பதொரு பழமொழி. இதை யாவரும் எளிதில் உரைப்பதைக் காண்கிறோம். அதாவது, சூரிய குலத் தோன்றலாகிய பகீரதன் தன் முன்னோரால் பலமுறை முயன்று கொண்டுவர முடியாமல் விட்டுவிட்ட அக்கங்கையை, தன் விடாமுயற்சியால் பூமியிற் கொண்டுவந்து, தம் மூதாதைகள் நற்கதி அடையும் பொருட்டு கருமத்தை நிறைவேற்றினான். பகீரதன் கங்கையை பூமியிற் கொண்டு வந்தபடியால் கங்கை பாகீரதி என்று இவன் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் ''பகீரதப் பிரயத்தனம்" என்று விடாமுயற்சிக்கு இவனையே உலகத்தார் உதாரணமாகக் கூறுகிறார்கள்.

 

முன்னோர்கள் தேடிவைத்த தந்தக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் சயனிப்பதிலும் தாம் தேடிய தாழம்பாயில் படுப்பது சிறந்தது என்று ஒருபழமொழி யுண்டு. நம்மவர்கள் மனமுயற்சியே மிகப் பெரிதாக உடையவர்கள். முயற்சியில்லாதவர்கள் உலக உபகாரிகளாகார்கள். ஒருபொருளை நாம்கைப்பற்றப் பலமுறை முயன்றும் அதிகக் கஷ்டப்பட்டும் காரியம் கைகூடாவிடின் அப்போது நாம் ஊக்கம் குன்றிவிடக் கூடாது. அப்பொருளுக்கும் நமக்கும் தொடர்பு சம்பந்தம் இருந்தபடியால் தான் இவ்வளவு பிரயத்தனம் படவேண்டி வந்தது என்று நம் மனோ முயற்சி குன்றாமல் உழைத்து வருவோமேயாகில் இறைவனருளால் இனிது காரியம் முடிவு பெறும். எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ அவ்வளவும் அப்பொருளால் சுகத்தைப் பன்மடங்கு பெறக்கூடும். பிறகு அந்த நன்மை நம்மை விட்டு நீங்குவதும் அசாத்தியமே.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment