Monday, September 7, 2020

 

வானத்தில் கண்ட ஜோதி

ஏ. கே: பட்டுசாமி

 

எங்களது படகு மஹாபலி புரத்தை யடைந்தபோது இரவு சுமார் எழு மணி யிருக்கும். அன்று பௌர்ணமி. சந்திரன் ஜாஜ் வல்யமான பிரகாசத்துடன் தாரகை மணிகள் புடைசூழ வான வீதியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். கடற்காற்று மி5 உல்லாசமாக வீசிக்கொண்டிருந்தது. மஹாபலிபுரத்தின் லைட்ஹௌஸ்' தனது பிரகாசமான விளக்குகளுடன் மெதுவாகச் சுழலத் தொடங்கியது. “இதோ பார்! இந்த லைட் ஹௌஸுக்கு இரண்டு ஒளி வீச்சுகள். இது சுழலும்போது, ஒரு வீச்சு மற்றொன்றைத் துரத்திக் கொண்டு ஓடிப் பிடிக்க முயல்வது போல் தோன்றுகிற தல்லவா!'' என்றான் ரகுநாதன். ''ஹா ஹா! என்ன வர்ணனை! பெரிய கவிச் சிரேஷ்டன் தான்! இறங்கு படகை விட்டு" என்றுபரிகாசமாக மொழிந்தான் மாதவன். எல்லோரும் படகை விட்டு இறங்கினோம்.

 

எங்கள் கூட்டத்தில், ரகுநாதன், மாதவன், ஸ்ரீ குமாரன் நம்பூதிரி, பசுபதி, நான் ஆக ஐவரிருந்தோம். ரகுநாதனுக்கு கவிதைகளில் பிரேமை அதிகம். சிறு கவிகளும் இயற்றுவான். மாதவன் வான சாஸ்திரம் பயில்பவன். நம்பூதிரி மிகத் தெய்வபக்தியுள்ள வேதாந்தி. தமிழ் பேசினால் புரிந்து கொள்வான். பதில் ஆங்கிலத்தில் கூறி விடுவான். பசுபதி, பண்டைக்கால நாகரீகங்களைப் பற்றியும், பண்டைக்காலச் சிற்பக் கலையைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தான். நாங்கள் மஹாபலிபுரத்துக்குப் புறப்பட்டது அவனது தூண்டுதலால் தான்.

 

கையில் கொண்டு வந்திருந்த ஆகாரத்தைச் சாப்பிட்டு வீட்டு அன்றிரவை எங்கேயாவது ஒரு கற்பாறையின் மீது கழிப்பதென்றும், பொழுது புலர்ந்த பின் பல்லவ மன்னர்கள் நிர்மாணித்து வைத்துள்ள தெய்வீகச் சிற்பங்களைக் காணச் செல்வதென்றும் தீர்மானித்தோம். ஆற்றங்கரைப் படகுத் துறைக்கும் மாமல்லபுரம் பாறைத் தொடர்களுக்கு மிடையே சுமார் அரைமைல் தூர மிருக்கும். ஆகாரம் முடிந்ததும், ஒரு விசாலமான மேடு பள்ளமற்ற பாறையைத் தேடிப் பிடித்தோம். மாதவன், துண்டை விரித்துப் போட்டுப் படுத்துக் கொண்டான். விண் மீன்கள் அவனது கவனத்தைக் கவர்ந்தன. மற்ற நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

 

மணி ஒன்பதிருக்கும். நாங்களிருந்த பாறையின் மேல் இன்னும் யாரோ வொருவர் ஏறி வருவது போன்றிருந்தது. காவி வஸ்திரம் தரித்த ஒரு ஸ்வாமியார் கால்களி லணிந்த பாதக்குறடுகள் “டக் டக்' கென்று சப்திக்க ஏறி வந்தார். வந்ததும் அவர் ஒரு புறமாகத் தனியே உட்கார்ந்து கொண்டார். அவருக்குச் சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். மெலிந்த தேகி. அவரது முகம் துயரம் நிரம்பியதாகக் காணப்பட்டது. இவைகள் தான் அப்போது எங்களால் கவனிக்க முடிந்தவை.

 

நாங்கள், சுவாமியாருடைய வருகையைக் கவனியாததுபோல் பேச்சை ஓட்டிக் கொண்டிருந்தோம். பசுபதி, உலகில் எல்லாருடைய இச்சைகளும் இஷ்டப்படும் போது பூர்த்தி யாவதில்லை. எதற்கும் காலம் வேண்டும்.'' என்றான் பேச்சு வாக்கில்.


“வாஸ்தவமான பேச்சு!'' என்றார் புதிதாய் வந்த துறவி.

 

நாங்கள் அவர் பக்கம் திரும்பினோம். அவர், “இதோ! இந்தக் கடலைப் பாருங்கள். சந்திரனொளியில் இரன் அலைகள், சிவபெருமானின் கைலையங்கிரி யெனும் வெள்ளிமலைத் தொடர்போல் திகழ்கின்றன. சமுத்திரராஜன் தனது வெள்ளி அலைகளாகிய பரிவாரங்களுடன் சீறிக்கொண்டு கரையின் மீது மோதி, அதைத் தாண்டிக் கொண்டு வந்துவிட முயற்சிக்கிறான், ஆனால் அவனது ஆவல் பூர்த்தியடையாது அலைகள் சிதைவுண்டு, இரைச்சலுடன் திரும்புகிறான்! தாங்கள் கூறுவதுபோல் எதற்கும் காலம் வரவேண்டும். அந்தக் காலம் வந்து, சமுத்திர அரசன் வெற்றி பெற்றால்,
அதுதான் பிரளயம். சென்ற முப்பது வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் இந்தச் சமயத்தில் இச் சரீரம் இங்கு வந்து உட்காரும் போதெல்லாம், இதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பது வழக்கம்" என்றார் சுவாமியார்.

 

“முப்பது வருடங்களாகவா! இப்போது என்ன, இங்கு ஏதாவது திருவிழாக் காலமா?" என்று கேட்டேன் நான்.

 

"ஆம்; திருவிழாதான்! கோவிலிலிருக்கும் சுவாமிக்கல்ல. இச் சரீரத்தின் கண்களுக்கு! இன்று ஒரு அற்புதம் நிகழப் போகிறது. அவ்வற்புதம், கடந்த முப்பது வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. அதைக் காண்பதற்காகத்தான் இக் கட்டை வருடந்தோறும் இவ்வூருக்கு வருகிறது."

 

மாதவனும் தனது ஆராய்ச்சி கலைந்து எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து கொண்ட டான். ஐவரும் சுவாமியாருக் கருகில் சென்று உட்கார்ந்து கொண்டு அன்று நிகழப்போகும் அற்புதத்தைப் பற்றிக் கூறும்படி வேண்டிக்கொண்டோம். சுவாமியார் கூறலானார்:

 

“நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த உண்மைச் சரிதை யொன்றைக் கூறவேண்டியதா யிருக்கிறது. அப்போது செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த வேலம்பட்டி யென்னும் கிராமத்தில் ஓர் ஏழைத் தம்பதிகள் வசித்து வந்தனர். கங்காதர ஐயருக்கு--அதுதான் அவ் வேழை கிருகஸ்தனின் பெயர் - தமதென்று கூறிக் கொள்ளக் கூடியவை, அவரது பத்னி கோமதியம்மாள், மூன்று வயதுக்குழந்தை பாலு, அவர்கள் வசித்து வந்த ஒரு ஓட்டை வீடு, இவைகள் தான்.

 

“வருடா வருடம் இவ்வூரில் (மஹாபலிபுரத்தில்) மாசி மாதத்தில், மக நக்ஷத்திரதினம் விசேஷ வைபவங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம். பல திசைகளிலிருந்தும் ஆஸ்திகர்கள் வந்து குழுமுவர். அவ் வருடம் கோமதியம்மாள், மாசி மகோற்சவ தினத்தில், மஹாபலிபுரத்திற்கு வந்து, சமுத்திர ஸ்நானம் செய்து, ஞானபிரானைத் தெரிசித்து அவனருளைப் பெற வேண்டுமென விரும்பினாள். இவ்விருப்பத்தைத் தனது பதியினிடம் தெரிவித்தாள். அவரும் அதற்கிசைந்தார்.

 

“வேலம்பட்டி, இந்த ஸ்தலத்திலிருந்து சுமார் முப்பது மைல் தூரத்திலுள்ளது. கொஞ்சம் “ஐவேஜு" உள்ளவர்கள் வண்டிகளில் வருவர். ஆனால் கங்காதர ஐயர் வண்டி வாடகைக்கு எங்கு செல்வார்? இரண்டு தினங்கள் முன்னதாகவே தமது மனைவியுடனும் குழந்தையுடனும் கால்நடையாகக் கிளம்பினார். அன்று சுமார் இருபது மைல்கள் நடந்தனர். கையிலும் ஆகார மொன்றுமில்லை. களைப்பு மேலிட்டது. கோமதியம்மாளால் நடக்கக்கூட முடியவில்லை. குழந்தை பாலு, "பசி பசி " யென்று கதறுகிறான். காக்கை குருவிகளையும் விருக்ஷங்களையும் வேடிக்கை காட்டிக் கொண்டே வந்தனர். ஆனால் பசியோடிருந்த குழந்தையின் மனம் வேடிக்கைகளில் செல்லவில்லை. பொழுது சாய்ந்து இருட்டி விட்டது. இனி மஹாபலிபுரத்தை யடைந்தால்தான் எங்காவது ஆகாரம் கிடைக்கும். ஆனால் மஹாபலி புரத்துக்கு இன்னும் பத்து மைல் தூ / மிருந்தது. இனி ஓடியும் பெயர்த்து வைக்க முடியாதென்ற நிலைமை ஏற்பட்டவுடன், அன்றிரவை வழியிலேயே கழித்துவிட்டு மறுநாட் காலையில் பிரயாணத்தைத் தொடர்வதெனத் தீர்மானித்தனர்.

 

“இரவு ஒன்பது மணி யிருக்கும். எங்கும் காரிருள் கப்பிக் கொண்டது. கங்காதர ஐயரும் கோமதியம்மாளும், நடந்த அலுப்பில் நன்கு உறங்கி விட்டனர். பாலுவுக்கு மாத்திரம் தூக்கம் வரவில்லை. அவன் அழுதுகொண்டேயிருந்தான். பசி அவன் வயிற்றைப் பிடுங்கத் தொடங்கியது. தூரத்தில் ஒரு விளக்கு வெளிச்சத்தைக் கண்டான். மெதுவாக எழுந்து அதை நோக்கி நடந்து ஒரு சிறிய கூடாரத்தை யடைந்தான். உள்ளே ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் உட்கார்ந்திருந்தார். உற்சவ காலத்தில், ஜனங்களிடையே கிறிஸ்தவ மதபோதனை செய்வதற்காகப் புறப்பட்டவர் அவர். பாலு தைரியமாய்க் கூடாரத்தினுள் நுழைந்தான். பாதிரியார் அக் குழந்தையைக் கண்டதும் ஆச்சரிய மடைந்தார். குழந்தை பாலு அவருடைய தாடியைக் கண்டு பயந்தான். திரும்பிப் போக யத்தனித்தான். அதற்குள் அவர் அக் குழந்தையின் கையில் ஒரு பிஸ்கோத்தைக் கொடுத்துச்' சமாதானப் படுத்தினார். பசியோடிருந்த குழந்தை அதை ஒரே வாயில் விழுங்கியது. அது பசியோடிருக்கிற தென்பதை யறிந்த பாதிரி, மற்றும் சில தின் பண்டங்களையும் கொடுத்தார்.

 

“அக் குழந்தையை யாராவது அழைத்துக் கொண்டு வந்திருப்பார்களென்று நினைத்துக் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார். ஒரே இருட்டாயிருந்தது. ஒருவரும் காணப்படவில்லை. அவர் அக்குழந்தையைக் கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதன் என் நினைத்தார். மறுநாள் அதிகாலையில் அவர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டபோது குழந்தையையும் தம்முடன் கொண்டு போய் விட்டார்.

 

"காலையில், கங்காதரய்யரும் கங்காதரய்யரும் கோமதியம்மாளும் குழந்தையைக் காணாது திடுக்கிட்டனர். சுற்றுப் புறமெங்கும் தேடினர். என்ன பயன்! கோமதியம்மாள் புழுவெனத் துடித்தாள். அவளடைந்த துயரத்தை விவரிக்தல் அரிது. அதற்கு மேலே கூற எனக்குச் சக்தியில்லை. குழந்தையை உயிரோடு பறி கொடுத்து விட்டுத் தாங்கொணாத் துயரத்துடன் ஊர் திரும்பினர்" என்று சற்று நிறுத்தினார் சுவாமியார். அவர் தமது கண்களில் துளித்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

“விதியின் இரும்புப் பிடிகளிலிருந்து விடுபட்டவர் அநேகமாக ஒருவருமிலர். துன்பம் வந்தால் தொடர்ந்து வருகிறது. பட்ட காலிலே படுமென்பது போல் ஏக்கத்தினாலும், வறுமைப்பிணியினாலும் அவ்வருடமே சங்காதர கணவனை யிழந்து, குழந்தையையும் தொலைத்த கோமதியம்மாளின் மனே) நிலை எப்படியிருக்கு மென்பதை நீங்களே யோகித்துப் பாருங்கள். அவளால் எப்படிச் சந்தோஷத்துட னிருக்கமுடியும்! நடைப்பிணம்போல் காலம் கடத்தி வந்தாள். ஆனால் அவளுக்கு மாத்திரம், என்றைக்காவது ஒரு நாள், பாலு தன்னிடம் திரும்பி வருவானென்ற ஒரு அசட்டு நம்பிக்கை யிருந்து வந்தது. அவள் தினந்தோறும் இரண்டு பேருக்குச் சமைத்து வைத்துவிட்டு, நெடுநேரம் வரையில் பட்டினியாய்க் காத்திருந்து, பிறகு சாப்பிடுவாள். அடுத்த வீட்டுக்காரிகள், "நீ ஏன் இரண்டு பேருக்குச் சமைத்து வைக்கிருய்!" என்று கேட்டால், அவள், "என் கண்ணன் திடீரென்று திரும்பி வந்தால் அவனுக்கு நான் சாதம் போட வேண்டாமா?'' என்பாள்.

 

"பாலுவின் தொட்டில், அவனது விளையாட்டுச் சாமான்கள், வீட்டில் அவன் புழங்கிய இடங்கள், அவனுக்குப் பிரியமான கன்றுக்குட்டி இவைகளைக் கண்ணுறும் போதெல்லாம் அவளது துயரம் எல்லையை மீறிவிடும். தெருவில் போகும் சிறுவர்களை பெல்லாம் பார்த்து, “நம் பாலு இருந்தால் இவ்வளவு உயரமிருப்பானல்லவா!” என்று எண்ணிப் பெருமூச் செறிவாள். ஊருக்குப் புதிதாக யாராவது சிறுவர்கள் வந்தால், ஒருக்கால் தனது பாலுவாக இருக்கக் கூடுமோ வென்று, ஓடிப் போய்ப் பார்ப்பாள். கையிலும் பொருளில்லை. மனநோபோடு வறுமை நோயும் சேர்ந்து அவளை வதைத்தது. ஆகவே கோமதியம்மாள், இரண்டு வீடுகளில் வேலை செய்து தன் குழந்தைக்காக உயிர் வாழத் தொடங்கினாள்.

 

''இப்படியே பன்னிரெண்டு வருடங்கள் கழிந்தன. வசந்த காலத்தில் ஒருநாள் காலை கோமதியம்மாள் வயிற்றுப் பிழைப்புக்காக, கணபதி ராமய்யர் வீட்டில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். இம் தருணத்தில், மேனாட்டு உடையணிந்த இரு வாலிபர்கள் வேம்பட்டியின் அக்ரஹாரத்தின் வழியாக மிதி வண்டி (சைக்கில்) சகிதம் நுழைந்தனர். அவர்கள், அக்ரஹாரத்தில் பெரிதாகக் காணப்பட்ட கணபதி ராமய்யர் வீட்டு வாயிலில் வந்திறங்கினர்.

 

"கணபதி ராமய்யரின் வீட்டுத் திண்ணையின் மேல், ராமசேஷய்யர், சுப்பராம தீக்ஷிதர், ஜெகத்ரக்ஷக சாஸ்திரிகள் முதலியோர் உட்கார்ந்திருந்தனர். வருணாச்ரம தர்மத்தைப்பற்றி வம்பளந்து கொண்டிருந்த அவர்கள், புதிதாய் வந்த சிறுவர்களைக் கண்டதும் தங்கள் பேச்சை நிறுத்தினர். ஜெகத் ரக்ஷக சாஸ்திரிகள், வாலிபர்களை நோக்கி, 'நீங்கள் யாரப்பா! யாரைத் தேடிக் கொண்டு வந்தீர்கள்?' என்று கேட்டார். சிறுவர்களிருவரில் கருத்த பையன், ' நாங்கள் சென்னையில் வசிப்பவர்கள். என் பெயர் தேவசுந்தரம்! அவன் பெயர் ஜார்ஜ்!' என்றான்.

 

"பிராமணர்கள் ‘சிவசிவா! பறப்பயல்கள்!' என்று முணுமுணுத்துக் காதைப் பொத்திக்கொண்டனர். திண்ணைக் கச்சேரியின் ஓசை திடீரென நின்று, பிராமணர்கள் யாரையோ விசாரிப்பதை யறிந்த கோமதியம்மாள் வெளியே ஓடிவந்தாள். அச்சிறுவர்களில் சிவப்பாக இருந்தவனைக் கண்டதும், அவன் தனது மகனாக இருக்கக் கூடுமென்று, அவளுடைய மனதில் ஏதோ வொன்று கூறியது.

 

"ராம சேஷய்யர், 'நீங்கள் இப்போது எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார்.

 

“ஜார்ஜ் என்ற அவ்வழகிய சிறுவன், “நான் சென்னையில் ஒரு பாதிரியாரால் வளர்க்கப்பட்டவன். எனக்கு என் தந்தையாரைத் தெரியாது. அப்பாதிரியார் இறந்து போகையில், என்னிடம் அவர் என்னை, மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தையாயிருந்த போது, மஹாபலிபுரத்துக்குச் சுமார் ஏழெட்டு மைல் தூரத்தில் தனியே இருக்கக் கண்டு எடுத்து வளர்த்து வந்ததாகவும், பிறகு தீர விசாரித்ததில், நான் வேலம்பட்டி கங்காதர ஐயருடைய பிள்ளை யென்று தெரிய வந்ததாயும், ஆனால் இவ்வளவு காலமாக என்னை விட்டுப் பிரிய மனமில்லாது இவ்விஷயத்தை என்னிடம் கூறவில்லை யென்றும் தெரிவித்தார். நான் என் தாய் தந்தையர்களைக் காண்பதற்காகவே வந்தேன்'' என்று கூறி முடிக்கு முன், கோமதியம்மாள் என் கண்ணே, பாலு. !' என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக்கொண்டாள். அவளது உணர்ச்சி கரைகடந்து விட்டது. அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.


“அந்தணர்கள், 'சே! பறப்பயலைப் போய்ப் பிள்ளை என்கினள்!'' என்று கூவினர்.

 

"விஷயங்கள் நன்கு விவரிக்கப்பட்டன. கிராமத்தாரில் சிலர் அச்சிறுவனுக்குப் பாலுவின் ஜாடை இருப்பதா - அடையாளங் கண்டு பிடித்தனர். அவ்வாலிபனின் இடது உள்ளங்கையிலிருந்த மச்சம் அதை ஊஜிதப்படுத்தியது. னால் அந்தணர்கள், 'பறையன் வீட்டில் வளர்ந்த பிள்ளையை ஜாதியில் சேர்த்துக் கொள்ளவே கடாது' என்றனர்.

 

கோமதியம்மாள்: - யார் வீட்டில் வளர்ந்தாலென்ன! என் செல்வம் என் வயிற்றில் பிறந்தவனல்லவா! எனது இரத்தம் அவனுள் ஓடுகிறதல்லவா!

 

கணபதிராமய்யர்: - அதெல்லாம் முடியாத காரியம். அவனை உன் வீட்டில் சேர்த்துக் கொண்டால் உன்னை ஜாதிப்ரஷ்டம் செய்து விடுவோம்.

 

கோமதி: - ஐயோ! உங்களுக்கெல்லாம் குழந்தை குட்டிகள் இல்லையா? என் குழந்தையைப் பகவான் இத்தனை வருடங்களாகப் பிரித்து வைத்தார். இனிமேலாவது நான் அவனுடன் என் அந்திய காலத்தைச் சந்தோஷமாய்க் கழிக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களா? உங்களுக்கு இரக்க மில்லையா? - என்று கல்லும் கரையும் வண்ணம் கெஞ்சினாள். ஆனால், அவ்வந்தணர்களுடைய ஹிருதயங்கள் கல்லினும் கடினமானவை. கோமதியம்மாளின் பரிதாபகரமான வேண்டுகோள் அவர்களது மனோ நிலையைச் சிறிது கூட மாற்றவில்லை.

 

ராமசேஷய்யர்: - சரியாய்ப் போச்சு! வருரைச்ரம தர்மம்! உன்னத மான சநாதன தர்மம்! என்ன ஆவது! உனக்காக அவைகளை நாங்கள் தலை முழுகிவிட முடியுமா?

 

ஜெகத்ரக்ஷக சாஸ்திரி: - அவனைக் கூட்டி வைத்துக்கொள்ள வேண்டுமானால் அவனுடன் நீ இந்த ஊரை விட்டுப் போய்விடு.

 

கோமதி: - (தன் மகனைப் பார்த்து) கண்ணே! பாலு வாடாப்பா! என் செல்வமே! நாம் வேறே எந்த ஊருக்காவது சென்று பிச்சை யெடுத்தாவது பிழைக்கலாம்! இவர்களது சநாதன தர்மத்தில் இடி விழட்டும்.


      “பைத்தியம் பிடித்தவள் போல் கூவினாள் கோமதி.

 

"பாலுவின் மனது ஏதோ வேதனை செய்தது. தனது தாயென்று கூறிக்கொண்ட ஸ்திரீயின் மீது அவனுக்கு இரக்கம் உண்டாகியது. பிராமணர்களின் அட்டகாசத்தைக் காணச் சகிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், அந்தப் பிராமணர்கள் ஒருவேளை சம்மதித்தாலும் கூட, அவனுக்கு அந்த கிராமத்தில் வசிக்கவும், இத்தனை காலமாக கிறிஸ்தவர்களின் மத்தியில் வாழ்ந்து விட்டுத், திடீரென்று பிராமணர்களின் மத்தியில் வசிக்கவும் இஷ்டமில்லை. அவனுடன் வந்திருந்த அவனது நண்பன் அவனிடம் ஆங்கிலத்தில் ஏதோ கூறினான். உடனே அவன் கோபதியம்மாளை நோக்கி, அம்மா! நான் உங்களை அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டு போகிறேன். இந்தப் பிராமணர்களுடன் தகராறு வேண்டாம்" என்று கூறிக் கொண்டே தனது நண்பனுடன் மிதி வண்டியிலேறிச் சென்று விட்டான். கோமதியம்மாள், 'என் கண்ணே, பாலு! உனக்காகத் தானேடா நான் இத்தனை நாள் உயிர் வாழ்ந்து வந்தேன்! என்னை விட்டுப் போகாதேடா, என் கண்மணீ!' என்று கதறிக் கொண்டே ஓடினாள். பயனில்லை. சிறுவர்கள் மறைந்து விட்டனர்.

 

"கோமதியம்மாளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவள் பல இடங்களிலும் அலைந்து கடைசியாக மஹாபலி புரத்தையடைந்தாள். காலதேவன் இந்த க்ஷேத்திரத்தில் வந்து அவளது உயிரைக் கவர்ந்து சென்றான்" என்று கூறிப் பெருமூச்சு விட்டார் சுவாமியார்.

ரகுநாதன், “இதற்கும் இன்று ஏதோ அற்புதம் நிகழப் போவதாகக் கூறினீர்களே, அதற்கும் என்ன சம்பந்தம்? அவ்வற்புதம் என்னவென்றே கூறவில்லையே!'' என்று கேட்டான்.

 

சுவாமியார், “பொறுங்கள் கூறுகிறேன். இன்னும் கதை முடிய வில்லை. கோமதியம்மாள் இறந்த பின் ஒரு வருடம் கழித்து, பாலு தன் தாயைப் பார்த்து விட்டுப் போவதற்காகக் கொஞ்சம் பணத்தை யெடுத்துக் கொண்டு வேலம்பட்டியை யடைந்தான். அவளை மகாபலி புரத்தில் கண்டதாகச் சிலர் கூறினர். உடனே இவ்வூருக்கு வந்து ஒரு செம்படவனிடம் விசாரித்தான். செம்படவன் அந்தம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சிருந்து துங்க. எப்பப்பார்த்தாலும் பாலு! பாலுண்ணு கதறிகிட்டிருந்தாங்க. ஒரு நாள் இப்படித் தானுங்க ராத்திரி பத்து மணியிருக்குங்க; அண்ணிக்குப் பௌர்ணமிங்க; நெலவு நல்லா காஞ்சுது. நான் கரையிலிருந்து தோணியைத் தண்ணீலே தள்ளிக் கிட்டிருந்தேன், அந்த அம்மா திடீருண்ணு வந்து 'பாலு! வந்துட்டேன்! ஓடாதே!' ண்ணு கூவிகிட்டே ஓடி வந்து சமுத்திரத் தண்ணீலே உளுந்துட்டாங்க. ஆனா உசிருபூடிச்சுங்க. அப்புறம் ஊரிலிருந்தவங்க வந்து பாத்து எடுத்துக் கொளுத்திட்டாங்க!'' என்றான்.


‘இந்தச் சம்பவம் நடந்து எவ்வளவு காலமாயிற்று?' என்று கேட்டான் பாலு.

செம்படவன் கூறினன்: 'சரியா இண்ணிக்கு ஒரு வருசம் ஆவுதுங்க. எப்படிண்ண அதுக்கு முன் நாள் தான் எங்க மாமன் இரந்துட்டாருங்க. அவருக்கு நேத்து தான் திதி வந்நதுங்க......ஹூம்...... அந்தம்மாவுக்கு உயிர் போனதும் ஆகாசத்துலே ஒரு மின்னல் மின்னிச்சு, பாருங்க... மப்பு இல்லே, மழையில்லே - திடீருண்ணு மின்னிச்சுங்க...'' என்று சுவாமியார் மேலும் கதையைக் கூறிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று ஆகாயத்தில் தோன்றி ஒரு மின் வெட்டு எங்கள் கண்களைப் பறித்தது. சுவாமியார் வானத்தை நோக்கி, "அம்மா" என்று கதறினார். அவருடைய அலறல் எங்களது நரம்புகளை ஒரு தட்டுத் தட்டி எங்களை மயிர்க் கூச்செறியச் செய்தது. ஆகாயத்தை நோக்கினேம். அதோ வடமேற்கு மூலையில் ஒரு பிரகாசமான அகண்ட ஜோதி தோன்றிச் சுமார் பத்து விநாடிகள் தாமதித்துப் பின் மறைந்தது.

 

சிறிது நேரம் மௌனம். சுவாமிகளின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. மனவெழுச்சியினால் அவரால் சிறிது நேரம் வரையில் பேச முடியவில்லை. பிரமை பிடித்தவர் போலிருந்தார். பிறகு ஒரு வாறு தேற்றிக்கொண்டு கூறலானார்.

 

“செம்படவன் கோமதியம்மாள் இறந்த போது வானத்தில் ஒரு மின்னல் தோன்றியதாகத் கூறினைல்லவா! அதேமாதிரி மின்னலும் ஜோதியும், பாலு மஹாபலிபுரத்திற்கு வந்த தினமும் உண்டாயின. அதாவது அன்று ஒரு வருடம் - அவளிறந்து - அது முதல் பாலு வருடா வருடம் தவறாமல் இவ் வைசாகப் பௌர்ணமி தினத்தன்று மஹாபலி புரத்திற்கு வருகிறான் இச் சோதியைக் காண. அவன் தாய் ஜோதிஸ்வரூபமாய் விளங்குகின்றாள்'' என்று கூறி முடித்தார் சுவாமியார். ஞ'னபிரான் சந்நிதி ஆராதனை மணி, அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் “டாங், டாங்" என்று ஒலித்தது.


“அப்படியா
னால் தாங்கள் தான்........." என்றேன் நான்.


“ஆம்! இக் கட்டையைத்தான் பாலு' வென்றழைப்பார்கள்” என்றார் சுவாமியார்.

 

மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது மாதவன் இதைப் பற்றித் தன் அபிப்பிராயத்தைக் கூறினான். வானத்தில் நாம் கண்ட ஜோதி, சந்திரனின் பிரதிபலிப்பே யல்லாது வேறில்லை. இதற்குக் காரணத்தை சவிஸ்தாரமாக நான் வான சாஸ்திரப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கூறுகிறேன்'' என்றான். ஆனால் நம்பூதிரி இதை ஒப்புக்கொள்ளவே யில்லை. மற்ற மூவரும் அபிப்பிராயத்தில் நம்பூதிரியைப் பின்பற்றத் தயாராயிருந்தோம்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment