Tuesday, September 8, 2020

 

ஶ்ரீமத் இராமாயணத்தைப் பற்றி வேதாந்தங்களின் கொள்கை

 

இப்பரத கண்டத்தில் மகிமையும், மேன்மையும் பொருந்திய இதி ஹாசமாகிய சக்கிரவர்த்தி திருமகனார் சரித்திரத்தை யறியாதவர்கள் ஒரு வரும் இல்லை. ஐந்து வயதுக் குழந்தை கூட இராமாயணத்தின் சாராம்சத்தைச்சொல்லும். இத்தகைய சரிதையை மகா தபோசிரேஷ்டரான ஸ்ரீமத் வான்மீகி வடமொழியில் எழுதியுளார். தென்மொழியில் கவிச் சக்கிரவர்த்தியாகிய கம்பர் பாடியுள்ளார்.

 

பூர்வீகத்தில் தேவர் முதலிய ஏனையோர், கொடிய இராக்கதர்களுடைய கொடுமைகளைச் சகிக்க மாட்டாதவர்களாகி வைகுண்ட வாசியாகிய நீலமேக சாமளரூபனான ஸ்ரீமத் சாக்ஷாத் விஷ்ணுவை யணுகித் தமது குறையைத் தீர்க்க வேண்டு மென்று பிரார்த்திக்க, அதற்கு அவர் திருவுளமிரங்கி அப்படியே பூலோகத்தில் தாம் ராமராகவும், சக்கிரம் பரதனாகவும், சங்கு சத்துருக்கனாகவும், ஆதிசேஷன் இலக்ஷ்மணராகவும், தசரதமகாராஜாவிற்கு புத்திரராக ஜனித்து இராவணனைச் சங்காரம் செய்கிறோம் என்று வாக்களித்தனர். தேவர்கள் சந்தோஷமானார்கள். 

 

முறையே பிறந்து, வசிஷ்டரால் சகலமும் தெரிந்துகொண்டு, விஸ்வாமித்திரரால் மிதிலைக்கு அழைக்கப்பெற்று அங்கே வில்லை வளைத்து, ஜனகமகாராசனது புத்திரி ஜானகியை ஸ்ரீராமர் மணம் செய்து கொண்டு வாழுநாளில் சிற்றன்னை உத்தரவின் படிக்கு உத்தம பாதனுக்கு நாட்டையளித்து, தான் தம்பி இலக்ஷமணரோடும் சீதையோடும் 14 வருஷம் ஆரண்யவாசம் செய்யும்காலை, இராக்கதனாகிய இராவணன் சீதையை எடுத்துத் தனது இலங்கைக்கேக, அதை யறிந்து ஸ்ரீராமபிரான் தமது வானர சேனைகளுடன் இலங்கைக்குச் சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து அயோத்தியா புரியில், மண்ணுலகமும், விண்ணுலகமும் புகழ அரசாட்சி செலுத்திப் பூலோகத்தில் தமது நடக்கையினால் அநேக நீதிமுறைகளை நிலைநாட்டித் தாம் வந்த காரியம் முடிந்த பிறகு வைகுண்டத்தில் விஷ்ணுவாய் எழுந்தருளினார் என்பது இராமாயணச் சுருக்கம்.

 

இத்தகைய இராமாயணத்தைப் பற்றி வேதாந்தங்களின் கொள்கை கீழ் வருமாறு: -

 

மோக்ஷமென்னும் அயோத்தியில் பிரம்மமென்னும் தசரதன், ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, யெனும் மூன்று மனைவியருடன் கூடி வாழ்கையில், ஞானசக்தி என்னும் கௌசலையின் கர்ப்பத்தில் ஆத்மா வென்னும் ஸ்ரீராமர் பிறந்து, அவ்வியக்தம் என்னும் பால்யத்தால் தன்னை மறந்து, அஞ்ஞான மயனான சீவனே தானாகத் தேகேந்திரியாதிகளுக்குக் கோனாகிச் சிரவண மென்னும் வசிட்டரை யடைந்து, மனனமென்னும் விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து, வைராக்கிய மென்னும் இலக்ஷமணருடன் நடந்து, பஞ்சமாபாதகமெனும் பர்வதங்கள் காடுமலை வனாந்திரங்களைக் கடந்து, ஆத்மா ராமனென்னும் பரமேட்டி, ஞான மென்னும் பாணத்தைத் தீட்டி, ஆவரணமெனும் தாடகையை மாட்டி, அடியோடு இறந்து போக வாட்டி, இச்சையெனும் மாரீசனுக்குப் பயங்காட்டி, என்னெ திரில் வந்தால் சாவாயென்றோட்டி, விபசாரமென்னும் பாறையை மிதித்து, ஆசார மென்னும் அகலிகையைத் துதித்து, ஏகாந்த மென்னும் மிதிலையிற் சேர்ந்து, சாந்த மென்னும் ஜனகரைச் சார்ந்து, பொறாமை என்னும் கார்முகத்தை யொடித்து, ஆநந்த மென்னும் ஸ்ரீ ஜானகியின் கைப் பிடித்து, மதமெனும் பரசுராமனை எதிர்த்து, மோக்ஷ மென்னும் அயோத்தியிற் புகுந்து, ஜீவன் நானல்லவென்று வந்து பிரம்ம மென்னும் தசரதனைக்கூட, ஜீவத்வமறலென்னும் மகுடாபிஷேகத்தை, நாடக் கிரியை எனும் கைகேயினுடைய சலன மென்னும் ஏவல் வந்தடைய, பிரம்ம மென்னும் தசரதனைப் பிரிந்து, மோக்ஷ மென்னும் அயோத்தி யைத் துறந்து, வைராக்கிய மென்னும் இலக்ஷமணருடனே ஆநந்த மென்னும் வேதகையுடனே சித்த மெனும் சரயூ நதியைத்தாவி, புத்தி என்னும் குகன் றனை மேவி, விட்சேப மெனும் வனத்தினுட் சென்று, தபமென்னும் சித்திரகூடத்தில் நின்று, அகங்கார மெனும் விராதனைக்கொன்று, மனமெனும் காகாசூரனை வென்று, சங்கல்ப மென்னும் கண்ணைக் கெடுத்து, விகல்ப மென்னும் கண்ணைச் கொடுத்து, வீரமென்னும் அகஸ்தியரைக் கண்டு, தீரமென்னும் அஸ்திரம் பெற்று, காமமென்னும் சூர்ப்பநகையைத் தண்டித்து, ஆகாமிய மென்னும் கரதூஷணாதியரைக் கண்டித்து, இச்சை யெனும் மாரீசனாலே, ஆநந்த மென்னும் சீதை யைப் பிரிந்ததாலே, இராசத மென்னும் இராவணனடுத்து, ஆநந்தமென்னும் சீதையை யெடுத்து, இன்பமெனும் வைதேகியை யுருக்கும், துன்ப மெனும் இலங்கையி லிருக்கும் அசுபவாசனை என்னும் இராக்கதர் மொய்க்க, எண்ணமெனும் அசோகவனத்தில் வைக்க, ஆத்மா வென்னும் ஸ்ரீராமர்கடுகி, இச்சை யெனும் மாரீசனை முடுகி, நிராசை என்னும் பூமியின் மேல் சாய்த்து என்றைக்கும் தன் முன்வராமல் மாய்த்து, ஆநந்தமென்னு மைதுலியார் இல்லாமல் ஆத்மராமன் மனம் நொந்து, வைராக்கிய மென்னும் இலக்ஷ்மணருடனே அயர்ந்து, விட்சேபமெனும் கானகத்தில் அலைந்து, சிந்தனை என்னும் கவந்தனைக் கொன்று, சந்தோஷ மென்னும் சவரிபாற் சென்று, நிதித்தியாச மென்னும் அனுமானைக்கூடி, ஆநந்த மென்னும் சீதையைக்கிட்டி, ஜனன மென்னும் சப்த தருக்களைக் கொய்து, பயமென்னும் வாலிமேல் அம்பெய்து, அபயம் எனும் சுக்ரீவனைக் காத்து, சுபவாசனை என்னும் வானரங்களைச் சேர்த்து. நிதித்தியாச மென்னும் அனுமானைத் தூண்டி, மோக மென்னும் சமுத்திரத்தைத் தாண்டி, லோப மென்னும் இலங்கணியைத் தொலைத்து, அசுபவாசனை என்னும் இராக்கதரைக் கலைத்து, ஆநந்த மென்னும் சீதையைக் கண்டு, உல்லாச மென்னு மனுபூதி மேற்கொண்டு, எண்ண மெனும் அசோக வனத்தை யழித்து, சந்தேக மெனும் அட்சயனைக் கழித்து, விபரீத மென்னும் இந்திரஜித்தைப் பழித்து, மயக்க மெனும் பாசத்தை எதிர்த்து, இராஜசமெனும் இராவணனை எதிர்த்து, மௌன மென்னும் அக்கினியைப் பெருக்கி, துன்பமெனும் இலங்கையைச் சுருக்கி, மோக மென்னும் வாரியைச் சுட்டு, திடமெனும் மணையினைக் கட்டி, சாத்வீக மென்னும் விபீஷணனைக் கிட்டி, இங்கே தாமஸ மென்னும் கும்பகர்ணனை வெட்டி, இது இராசத மென்னும் இராவணனை யதட்டி, விபரீத மென்னும் இந்திரஜித்தை முட்டி, மயக்க மென்னும் பலத்தால் மயக்கி, வைராக்கிய மென்னும் இலக்ஷ்மணருடன் மயங்கி, நிதித்தியாச மென்னும் அனுமான் களிக்க, நிஷ்டை யென்னும் சஞ்சீவியை யளிக்க, வைராக்கிய மெனும் இலக்ஷமணர் துதிக்க, விபரீத மென்னும் இந்திரஜித்தைச் சதிரம், சஞ்சித மென்னும் மூலபல மெதிர்க்க, தீரமெனும் மோஹனாஸ் திக்க வதைக்க, அசுபவாசனை யென்னு மிராக்கதர் முடுக்க, சுபவாசனை என்னும் வானரங்கள் அவர்களைக் கெடுக்க, ஆத்மா என்னும் ஸ்ரீராமன் கடுத்து, கெம்பீர மென்னும் கோதண்ட மெடுத்து, இராசத மென்னும் இராவணனை யெதிர்த்து, ஞான மென்னும் பாணத்தைத் தொடுத்து, நானென்னும் மதத்தை யுடைத்து, தகேந்திரியங்களென்னும் தசமஸ்தகங்களை யுடைத்து ஆநந்த மென்னும் சீதையைக் கண்டு மௌனாக்கினியிற் குளியென்று விண்டு, பிரம்மமென்னும் தசரதனை நாடி, ஆநந்த மென்னும் சீதையைக் கூடி, மோக்ஷ மென்னும் அயோத்தியிற் புகுந்து, ஜீவத்வமறலென்னும் மகுடாபிஷேகம் புனைந்து, பிரம மென்னும் தசரதனே தானாகி, மோக்ஷ. மென்னும் அயோத்திக்குக் கோனாகி, கைவல்ய பிரம்மானந்த சொரூப சாக்ஷாத்காரமாய்ப் பிரகாசித்தார்.


பூ. அமிர்தலிங்கம்,

2 - 112, தம்பு செட்டி தெருவு, மதராஸ்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴

 


   

 

No comments:

Post a Comment