Monday, September 7, 2020

 

விநாயக சதுர்த்தி

 

      விநாயகப் பெருமானே நமக்கு முதற்கடவுள் என்று ஆன்றோரால் கூறப்படுகிறது. அவருடைய அவதாரத்தைக் குறித்து நம் தமிழ் மக்கள் ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்வது முக்கிய கடமையாகும்.

 

ஒரு நாள் பிரமதேவன் கொட்டாவி விட, அதினின்றும் சிந்துரன் என்றொரு அசுரன் தோன்றினான். எவரைத் தழுவினாலும் அவர் இறத்தலான வலியை அவன் பிரமனால் பெற்றான். பெற்ற பிறகு தந்தையாகிய பிரமனையே தழுவப்போனான். பிரமன் சிவனிடம் அடைக்கலம் புகுந்தான்.

 

அப்பால் சிந்துரன் தேவர்களை வருத்தித் திரிந்து கொண் டிருந்தான். இவ்வாறு இருக்கும் போது'' உன்னைக் கொல்லப் பார்வதியார் வயிற்றில் ஒரு சிசு வளர்ந்து கொண்டிருக்கிறது'' என்று அசரீரி கூறக் கேட்டு, பார்வதியார் வயிற்றில் வளர்ந்திருந்த விநாயக மூர்த்தியின் சிரத்தைக் காற்றுருவாய்ச் சென்று சேதித்து, அச்சிரத்தை நருமதையாற்றி விட்டான். பின்பு விநாயகர் யானை முகத்தோடு அவதரித்தார். தன்னோடு யுத்தத்துக்கு வந்த சிந்துரனை அவர் கசக்கித் திலகமாகக் கொண்டார்.

 

இங்ஙனம் சிந்துரனை ஸம்ஹரிக்க விநாயகர் யானை முகக் கடவுளாய் அவதரித்த தினம் ஆவணிமாதம் பூர்வபக்ஷம் சதுர்த்தி திதி. அது 11 - 9 - 1926 - ல் இப்போது வருகிறது. பலபெரியோர்கள் அவரைத் தொழுது அவ்வவரெண்ணப்படி தகுந்தபேறு பெற்றதினமும் அத்திதியே ஆகையால் அத்தினம் விநாயக விரதத்துக்கு யோக்கியமானது.

 

இந்தத் தினத்தில் காலையில் எழுந்து ஸ்நாநஞ்செய்து நித்தியானுஷ்டான முடித்துக்கொண்டு, அபிஷேகம், அலங்காரம், அருச்சனை, நிவேதனம், தூபம், தீபம், இவைகளுக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்து வைக்கவேண்டும். பிறகு சுத்தமான இடத்திலிருந்து பொன் முதலிய லோகங்களினாலோ அல்லது மண்ணினாலோ விநாயக மூர்த்தியின் திரு உருவமைத்துக் கலசந் தாபித்து, ஆவாகித்துச் சந்திரனுக்கு அர்க்கியங்கொடுத்து அக் கணேசரை நோக்கிக் கஷ்ட நிவாரணம் செய்யுமாறு பூஜித்து இஷ்டகாமியத்தையடைய வேண்டியது.

 

நமது தமிழ் மக்கள் அனைவருக்கும் இது ஓர் சிறந்த விரதமாகும். பல வித பலகாராதிகளை மக்கள் இத்தினத்தில் உண்டு களிப்பதுடன் சுகவாழ்வை யும் பெறுவார்கள். நாமுமிதனைக் கவனித்து அவ்வாறே செய்துய்வோமாக.


 ''வேழமுகத்து விநாயகனைத்தொழ
 வாழ்வு மிகுத்து வரும்.''

 வ. ச. சூரியநாராயண மூர்த்தி, வாலாஜா.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஆகஸ்ட்டு ௴

No comments:

Post a Comment