Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Saturday, August 29, 2020

 

ஒற்றுமை

 

 ஒற்றுமையாவது ஒன்றாகுந் தன்மையாகும். இத்தன்மை எல்லா வுயிர்களுக்கும் இன்றியமையாத தொன்றாயினும் மனவுணர்வின் மிக்க மக்களுயிரக்கே சிறப்பாவ தொன்றாகும்.
 

அறிவோடு கூடிய ஆண் பெண் எனு மிருபாலாரும் மக்கள் எனப்படுவர். மக்களே யெனினும் மனமென்பதோர் அறிவுடைய ராகாவழி, அம்மக்கள் மாக்களெனப் படுவாராவர். மனவுணர்ச்சி யில்லாதார் இத்தன்மையராதல்,


 "மாவும் மாக்களு மையறி வினவே
 பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே "
             (தொல். பொரு - மர. 32)

 

என்றதனானும் அதன் உரையானும் தெளிவாம். அறிவொடு புணர்ந்த ஆண் பெண் என்னு மிருபாலாரும் மக்களெனப் படுவாராதல்,


 'மக்க டாமே யாறறி வுயிரே ரையா
 வே யக்கிளைப் பிறப்பே”
                        (தொல். பொருள் - மா. 33)

 

என்றதாற் றெளியப்படும். இச்சூத்திரத்தினுரையில் நச்சினார்க்கினியர் தாமே'எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையார் என்றதற்குச் சிறந்தார் என்பதுங் கொள்க'' எனக் கூறியிருத்தலானே அறிவுசேர்ந்த மக்களே பல்லாற்றானுஞ் சிறந்தாராக ஒற்றுமையுடையராதற் றன்மையராவர். அறிவுடையார் தாம் ஆன்றோர் அருளிய நூற்களையும் அன்னார் வாய்ச் சொற்களையும் முறையே கற்றுங் கேட்டும் தம் நுண்ணறிவாற் கொள்வனவும் தவிர்வனவும இன்னவென்றுணர்ந்து, (சான்றாண்மைதாங்குந் தூண்களாம்) அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையாதி குணங்களாற் சிறந்து, வாழ்க்கைக்குத் தன்னேரிலாச் சிறப்பினதாகிய ஒற்றுமையினைக் குறிக்கொள்வாராவர்.

 

ஒற்றுமைக்குக் காரணமாவன பலவெனினும் முற்கூறிய அன்பாதி குணங்களே சிறந்தனவாம். 'அன்பாவது, ஒருவன் வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல்' எனப் பரிமேலழகியார் விளக்கினர். நச்சினார்க்கினியரும் " ஒப்பு முருவும்......... வென்ப” (தொல். பொரு. பொருளியல் - 53) எனுஞ் சூத்திரத்திற் கிட்டவுரையில் 'அன்பாவது மனைவியர் கண்ணும் தாய் தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின் கண்ணும் மனமகிழ்சசி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்' என்றனர். இக்கூற்றுக்களான் ஒரு குடும்பத்தினர் பலரும் தமக்குள் வேற்றுமை யின்றாகத் தம்முட் பொருந்தி வாழ்தற்பயனைத் தருதற்பாலது அன்பேயாதலின் அன்பு ஒற்றுமை எழுச்சிக்குக் காரணமாவதாம். அன்பென்னுந் தளையான் யாக்கப்பட்டு ஒழுக்கநெறியிற் செல்லும் குடியே உயர்குடியெனப் படுதலின், அக்குடிக்கு

 'இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
 செப்பமு நாணு மொருங்கு''
                                 (குற. குடி. 1)

 

என்றதனான் நாண் இன்றியமையாத தொன்றாம், நாணாவது 'சால்பு, பண்பு முதலிய குணங்களா னுயர்ந்தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதலுடையராந் தன்மை'எனப் பரிமேலழகியார் கூறியதாம். தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதலுடையாரே அடுக்கிய கோடிபெறினும் தம்மொழுக்கங் குன்றும் தொழில்களைச் செய்யாராதலின்


 "குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
 சுற்றமாச் சுற்று முலகு "
                                    (குற. குடி. 5)

 

என்றதற் கிலக்கியமாய் உலகந்தானே சுற்றமாச் சூழ்தலின் ஒற்றுமையுண்டாக வாழ்வாராவர். ஆதலின் நாணும் ஒற்றுமையினை விளைவிப்பதாம்.
 

ஒருவர் நாணேற்று அன்பாற் சுற்றந்தழுவ வேண்டின் உலக நடையினை யறிந்து செய்தலாகிய ஒப்புரவினை யுடைய ராகாராயின் தம்முயற்சியான் அறத்தின் வழி ஈட்டிய வொண்பொருளைத் தம்மவர்க்கும் தக்கார்க்கும் பயன்படுத்த லிலராவர். இலராகவே

 
 ''சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
 பெற்றத்தாற் பெற்ற பயன்''    
                              (குற. சுற்ற. 4)

 

என்பதற் கேற்பத் தம் தாளாண்மையின் பயனாய்வந்த செல்வம் தரும் பயனாகிய சுற்றத்தார் சூழவிருத்தலை யிழந்தவராவர். ஆதலின், ஒப்புரவாற்றலும் ஒற்றுமைப் பயனை அளிப்பதாம். குணமேயுடையார் உலகத்து அரியராகலின் ஒரு குடிப்பிறந்தாருள் ஒருவர் ஒருகால் மிகையாயின செய்வாராயின் அக்குடியிற் பிறந்த மற்றொருவர் மிகையாயின செய்தாரை வெறுத்தல் கூடுமன்றே? அந்நிலைமையில் வெறுக்கு மவர்தாம், கண்ணுக் கணிகலமாம் கண்ணோட்டத்தினை யுடையராயின், அவர் குற்றத்தைப் பொறுத்தாற்றுவாராய்க் குற்றஞ்செய்தார் தாமும், தம்முடன் என்றும் போல ஒன்றிவாழ வாழுந் தன்மையினராவர், ஆதலின், கண்ணோட்டமும் ஒற்றுமையாகிய பலனளிப்பதொன்றாம். அன்பு, நாண் ஒப்புரவு, கண்ணோட்ட மிவைதம்மை யொருவ ருடை யாரேனும் (தீமையாதொன்றுஞ் சொல்லாமையென்னும் இலக்கணத்ததாகிய) வாய்மை யவர் பக்கல் காணப்படாவழி யவரை அறிவுடையார் தம்முள்ளத்தினுள் வைத்தெண்ணார். எண்ணாமைக் காரணத்தான் அவர், பெரியார் தம் இனத்திருத்தலை யிழந்தவராவர். ஆதலின் வாய்மைக்குணனும் பலர் தம்முடன் ஒத்து வாழ்தற்குச் சிறந்ததாவதோடு கருவியுமாகும்.

 

இக்கூறியவாற்றான் ஒருவர் அன்புடையராய் நாண்பூண்டு, ஒப்புரவாற்றிக் கண்ணோட்டத்தோடு வாய்மைக்குணனுங்கொண் டொழுகுவாராயின் அவர் எல்லாரானு மவாவப்பட்டாராய்ப் பல்லாருடைய நட்பும் பெற்று ஒற்றுமை என்னும் உறுதிப்பொருளைப் பெறுவாராவர் என்பது தெளிவாகும். இனி யிப்பெற்றித்தாய ஒற்றுமை யுண்மை யின்மைகளான் வரும் பயன் ஆய்வாம்.

  

ஒற்றுமை யுண்டாகச் சேராப்பயன் எதுவுமின்றாம். ஒற்றுமைதான் முற்கூறிய அன்பு தொடக்கத்துக் காரணங்களானும் இன்சொற் கூறல் நட்புப் பூணலாதி பிற வேதுக்களானு மாவதோர் விளைவாதலின், ஒற்றுமைக் குணனுடையார், பிறர் இடுக்கண் கண்டுழித் தம்மானியன்றன வியற்றி யவ் விடுக்கண்ணினைக் களைவாராகின் றனர். அவர்தம் செய்கையின் பயனுற்றார் நன்றியறிதற் குணத்தராயின் அவர்தம் உயிர்களுக் கிரங்குந் தன்மைகண்டு அத்தகையாரோடு நட்பினராவர். இங்ஙனம் பலர் ஒரு வருக்குத் துணையாயவிடத்து ஒவ்வொருவரும் அவருக்கு ஆக்கந்தருவினைகள் பலவற்றைச் செய்ய விழைவரன்றோ? அந்நிலையில் அவருக்கு வருவதோரிடுக்கணுமுண்டாகுமோ? உண்டாமாயினும் துணையாயினார் வருந் துன்பத்திற்கே துன்ப மிழைப்பரன்றோ? இதனானன்றோ ஒருவர்


 ''உற்றநோய் நீக்கி யுறா அமை முற்காக்கும்
 பெற்றியார்ப் பேணிக் கொளல்''
                        (குற. பெ. துணை 2)

 

வேண்டுமென ஆசிரியர் திருவள்ளுவர் சொல்லிப் போந்ததூ உம். வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனையாள் கண்ணகியைத் துறந்தவிடத்து அவடன்னை அவன் றன்னோடு வாழ்வித்தற்கருதிக் கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார், பரணர் முதலினோர் முயன்றன ரன்றோ? பரணர்,


 "மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
 படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
 கடாஅ யானைக் கலிமான் பேக!
 பசித்தும் வாரேம் பாரமு மிலமே
 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
 நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
 யறஞ்செய் தீமோ வருள்வெய் யோயென
 இஃதியாம் இரந்த பரிசிலஃ திருளின்
 இனமணி நெடுந்தே ரேறி
 இன்னா துறைவி யரும்படர் களைமே'      
                  (புறம். 145)

 

என்றதால் கண்ணகிதன் உற்றநோய் நீக்கிய தன்மை விளங்கக் கிடப்பதாம்.
 

(கண்ணகி காரணமாக ஏனைப்புலவர் பாடிய செய்யுட்கள்புறம் 143, 144, 146, 147 - ல் காண்க)


மற்றும், புல்லாற்றூர் எயிற்றியனார், கோப்பெருஞ் சோழன் தன் மக்களோடு போர்புரிதற் கெழுந்தகாலத்து,


 ''மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
 வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
 பொங்கு நீ ருடுத்தவிம் மலர் தலை யுலகத்து
 நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
 றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்
 அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவர்
 வினைபுங் காலை நீயு மற்றவர்க்
 கனையை யல்லை யடுமான் தோன்றல்
 பரந்துபடு நல்லிசை யெய்தி மற்று நீ
 யுயர்ந்தோர் உலக மெய்திப் பின்னும்
 ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
 அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
 இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
 நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
 வெண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
 நின்பெருஞ் செல்லம் யார்க்கெஞ்சு வையே
 யமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
 இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
 அதனால், ஒழுகதி லத்தைநின் மறனே வல்விரைர்
 தெழுமதி வாழ்கநின் உள்ளம ழிந்தோர்க்
 கேம மாகுநின் றாணிழன் மயங்காது
 செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
 அரும்பெறல் உலகத் தான்றவர்
 விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே''
                (புறம் - 213)

 

என இசைத்துப் போரெழாமற் காத்தனரென்னு மிவ்வரலாறு நோபுறாமை முற்காத்ததனை விளக்கி நிற்பதன்றோ?

 
      இவ்விரு காட்டுக்களானும் கண்ணகி, கணவன் பேகனோடும், கோப்பெருஞ்சோழன், தன் மக்களோடும் ஒற்றுமைப்பாடுடையராய் வாழ்ந்தமை யாராயுமிடத்து முறையே நேர்ந்ததும் நேரவிருந்ததுமாகிய துன்பங்கள் ஒழிந்தனவன்றோ? இதனான் ஒற்றுமையுண்டாக வாகும்பயன் இன்பமே என்பது தேற்றம். மேல் ஒற்றுமை யின்மையான் வரும்பயன் ஆய்வாம்.

     

ஒற்றுமை இல்லாவிடத்து இருப்பனவும் இன்றாக முடியும். துரியோதனனுள்ளிட்டார் நூற்றுவருக்கும் தருமராதி ஐவருக்கும் இடை நிகழ்ந்த நேயம் அறியாதார் யாரே? துரியோதனன் ஐவரையும் முடித்தற்குச் செய்த சூழ்ச்சிகள், உண்மையுணர்ந்து நடுநிற்பார், 'ஆ'ஆ!! பலப்பல என வுடல் நடுங்க வுள்ள முருக வரைத்திடுந் தன்மையனவன்றோ? தருமரோ தந்நேரிளங்கோ வீமன்''......... அரவுய - த்தோன் கொடுமையினும் முர சுயர்த்தோய்! வின தருளுக் கஞ்சினேனே'' எனக் கழறவும் காரணராக வன்றோ, திரௌபதி, தன் வண்டார்குழல் குலைய மானங்குலைய மனங்குலையக் கோச்சபையிற் கோ! கோ! வெனச் சோருங் கொடியாகத் துகிலுரியப் பெற்ற வந்தாள், வீமன் கதைமேற் கைவைக்க, விசயன் சிலைமேல் விழி வைக்க, இருவரும் தங்கருத்திற் சினம் மூட்ட''....... முன்னம் பொறுத்தீ ரின்னம் பொறும்.... (வில்லி. சூது. 230) என்றனர். தருமர் தம் பொறுமை பினைக் கண்டேனும் துரியோதனன் ஒற்றுமையுடன் வாழ்தலை நினைத்தனனோ? இல்லையன்றே. அன்னாரைக் கானகத்துட் புகுத்தியும், ஆண்டும் அவர்க்கு இடையூறன்றோ பல விழைத்தான். இழைத்த இன்னல்களை யியல்பெனவே மதித்த தருமர், கழிக்கவிதித்தநாட்களிற் கானுறைந்து மீண்டு வந்து தம் உரிமையினை முறையிற்பெற விழைந்த காலத்தேனும் துரியோதனன், ஈனமிலாவகைவந்தார் நம் துணைவர் என விரங்கி அவர் தம் நாட்டினை யவர்க்குத்தர இசைந்தனனோ? அவன் இசைந்தது போர் தொடுத்தற்கன்றே? தொடுத்த போரில், திரௌபதி யொருத்தி தன் குழலினை விரித்ததற் காரணத்தானே அந்தப்புரமாதர் பலரும் தத்தம் குழல் விரிக்கப் பொறைக்கடவுள் தருமர் முன் கூற்றுவன்வாய் வீழ்ந்தான் துரியோதனன் என்று ஒற்றுமையின்மையின் பயன் காட்டுதற்கு இலக்காக வன்றோ துரியோதனன் தன் கிளையோடும் கெட்டான்.


மேல் இக்கட்டுரையின் நோக்கங் கூறுவாம்: -


      யாதாமொரு நாட்டின்கண் வாழும் பல வகுப்பினரும் ஒரு குடும்பத்தினரைப் போன்று ஒன்றுபட்டாலன்றி அந்நாடு நாடாகாது. நம் மிர்திய நாட்டிலோ பலமுகமான கொள்கையினையுடைய வகுப்பினர் பலரிருக்கின்றனர். இப்பலரும் அடைய விரும்பும் பலனோ ஒன்றேயாகும். அவ்வொன்றனைப் பெறவே பல திறப்பட்ட கொள்கையினை யுடையாரும் தத்தம் கொள்கையினையே வற்புறுத்துவாரா நிற்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தத்தம் கொள்கையினை நழுவவிடுவதாவென்னும் எண்ணம் உண்டாவது இயற்கையே எனினும் ஒரு வகுப்பினைச் சார்ந்தார் தம் கொள்கையினையே
பிறர்கொள நினைப்பாராயின் மற்றொரு வகுப்பினரும் தம்முடைய நோக்கத்தினையே பிறரும் தழுவுதல் வேண்டுமென நினைத்தல் இயற்கையேயன்றோ? ஆதலின் அனைவருக்கும் ஒன்றாய முடிபு எதுவோ அதனை முடிக்கக்கருதின் ஒவ்வொரு வகுப்பினரும் தம்முடைய கொள்கைகளைப் பிறரும் தம்முடன் கலத்தற்பொருட்டுத் தளர்த்திக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். தளர்த்து தல் பன்னாளாகக்கொண்ட பழக்கவழக்கங்களின் உரிமைக்கும், அடைந்து வரும் பலனுக்கும், பெருமைக்கும் கேடு அன்றோ என்று ஒருவகுப்பினர் நினைப்பின், அவ்வகுப்பினர் எதிர் வகுப்பினரான் ஏற்பட்ட விளைவினை ஆய்ந்துணரும் உணர்ச்சியொழித்து அவ்வகுப்பினரைத் தாக்குதல் வேண்டுமென்ற பேரவா வின் பெருக்கால் உள்ளனவும் இல்லனவும் கூட்டித் தம்மினத்தவர் கையொலி கூட்ட அவ்வகுப்பினரைக் குறைகூறுதல் தானே எழுவதாகும். இவ்வெழுசசி, இரு திறத்தவர் செய்கையினையும் கண்டார்க்குக் கைகொட்டி நகையா தற் பயனளிப்பதோடு அவ்விருதிறத்தாருக்கும், தமக்குக் கிடைத்த அப்பத்துண்டை தம்முள் ஒற்றுமையின்றி ஒரு குரங்கின்பாற் கொடுத்துப் பாகம்பெற முற்பட்ட இரு பூனைகளுக்கு ஏற்பட்ட பலனையே யளிப்பதாகும். ஆதலின் தற்காலம் பெரும்பாலாருடைய உதவியைப் பெற்றவரின் பலாபலன்களை ஆய்ந்து, குறைகாணின் அவற்றை நீக்குதற்கேற்றனசெய்து வகுப்புத் துவேஷத்தை விளைவிப்பனவற்றை வேரறக்களைந்து அனைவரும் ஒன்றுபடின் அவ்வொற்றுமைதானே உறுதிப்பயனை யளிப்பதாகும்.


      இறுகாறும் கூறியவதனான் ஒவ்வொருவரும் அன்பாதிகுணங்களிற் சிறந்து, ஒற்றுமை உண்மை யின்மையின் விளைவினையாய்ந்து, தத்தம் நலங்கருதாமல் ஓரினத்தவராக ஒற்றுமையுடையாராதல் வேண்டுமென்பதேயிக்கட்டுரையின் நோக்கமாகும்.

N. திருவேங்கடத்தையங்கார், தமிழ்ப்பண்டிதர்.
 
C. R. C. High School, Purasawalkam.
 

ஆனந்த போதினி – 1926 ௵ - பிப்ரவரி ௴

 

 

ஒற்றுமை

 

 ஐயன்மீர்!

 

            "ஒற்றுமையில்லாக்குடும்பம் ஒருமிக்கக் கெடும்''

"சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை''

"எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்''

 

என்ற, இத்தகைய மேற்கோள்க ளெல்லாம், ஒற்றுமையின் பொருட்டே உதித்தனவாகும். எல்லாம் வல்ல இறைவனியற்றிய இப்பிரபஞ்சத்திலுள்ள [*1] சராசரங்கள் அனைத்திற்கும், ஒற்றுமை என்பது இன்றியமையாதது. அதனாலுண்டாம் நன்மைகள் பல. ஆகவே, மானிடர்கள் ஒவ்வொரு வரும் பந்துத்வம், பட்சம், பாசம், நேசம், விசுவாசம், அபிமானம், காதல், பக்தி, என இடபேதத்தை நோக்கிப் பலவகைகளான பெயர்களுடன் செலுத்தப்படும் அன்பைச் சற்றும் குறைவுறாது, செலுத்துவார்களேயானால், ஒற்றுமை என்பது தானே உதிக்கு மென்பதற் கைய மில்லை.

 

இத்தகைய ஒற்றுமை, மானிடருக்கு மாத்திரம் உண்டா? உலகத்தில் தோன்றிய மற்ற இயற்கைப்பொருள் முதலானவற்றிற்கு முண்டா? என்பதை சிறிதளவு ஆராய்வாம். முதலில் தாவரத்தைப் பற்றிக்கூறுவோம்:

 

ஆலமரத்தின் கிளை ஒற்றுமையைக் காணின், நமக்குப் பெரும் வியப்பு தோன்றும். எவ்வாறெனின், மீன் சினையினும் சிறிதாயுள்ள ஒரு ஆலின் விதையானது முளைத்துப் பெரிய தருவாகித் தரும் விழுதுகள் பல நூல் போன்ற கிளைகளாக உதித்துக் கீழிறங்கிப் பூமியை எட்டிய உடனே அவையனைத்தும் ஒற்றுமை யடைந்து, வேரூன்றித் தம்முன் தோன்றியனவாகிய கிளைகளைத்தாங்கி அவைகளுக்கு உதவி செய்கின்றன. இவற்றின் இனவொற்றுமையை என்னென்றியம்புவது! சிறு சல்லிகளாகிய இவ்விருதுகள், தங்களால் சுமக்கமுடியாத அத்தகைய கிளைகளின் பாரத்தைச் அசைவன, அசையாமலிருப்பன. சுமப்பதற்குக் காரணம் என்ன? ஒற்றுமையே யன்றோ? இதை ஊகித்தறிய வேண்டிய தவசியமன்றோ? பின்னும்,

 

விருக்ஷத்தை நீக்கி விலங்கினை நோக்குவாம்; இரண்டு எருதுகள் சேர்ந்து, ஒரு வண்டியினை இழுத்துச் செல்லுங்கால், அவற்றின்பா லுள்ள ஒற்றுமையைக் கண்டறியார் ஒரு சிலருமிரார் என்பது வெளிப்படை.

 

நிற்க, புள்ளினத்தை நோக்குவாம்: ''ஆகாயத்தோட்டி'' எனப்பெயர் புனைந்த காகமானது, தனக்கு ஆகாரம் கிடைக்கும் போது தனது இனத்தின் கூட்டத்தைப் பேரிரைச்சலிட்டு ஒருங்கு படத் திரட்டி அவற்றிற்கும் அதனை ஊட்டி உண்ணுவதைப் பார்க்காதவர் யாவர்? புறா என்னும் பறவையானது தன் துணையுடன் இணைபிரியாது இசைந்தொழுகும் குணத்தினை என்னவென் றியம்புவது? கொலைஞனொருவன் தனது கொடியஆயுதத்தால் ஒரு புறாவை உயிர் துறக்கச் செய்யுங்கால் அதை நீங்கின மற்ற புறாவானது தானே உயிர் துறக்குமென்பதை நாம் எல்லோரும் கேட்டே யிருக்கின்றோம். மற்றும், குரங்குகள் என்று சொல்லக்கூடிய பிராணிகள் ஒருமரத்தில் இருக்கும்போது, ஒருவன் ஒரு குரங்கைப் பார்த்துப் பயமுறுத்துங்கால் அது கண்ட பல குரங்குகளும் அன்னவனை உறுமுவதை நோக்கின் அவற்றின் பாலுள்ள ஒற்றுமை நன்கு தெளிவாகின்றது. சமீபகாலத்தில் ஈரோட்டில் நடந்த குரங்குகளின் ஒற்றுமையை நமது ஆனந்தபோதினி பகரக்கேட்டிராதவர் யாவர்? ஆகவே, சகோதர சகோதரிகளே!

 

இப்படி எல்லா இனங்களுள்ளும் நிறையப்பெற்ற ஒற்றுமை யானது, நம் பரதகண்டத்தில் முன் எவ்வாறிருந்தது என்பதைக் கூறுவோம். கேட்பீராக. சூரிய குலத்தைப் பாருங்கள்; ஸ்ரீராமர் வனமேகப் புறப்பட்டதும், கற்பிலக்கணம் வாய்ந்த மனைவியாகிய சீதாதேவியும், ஒற்றுமையே உருவாகத் தோன்றிய தம்பியாகிய இலக்குமணனும் பின்தொடர்ந்ததும், இதைக்கண்ட தசரதர் உயிர் நீங்கினதும், அந்நகரின் ஜனங்கள் யாவரும் இராமபிரானைப் பின்தொடர்ந்ததும், ஓடக்காரனாகிய குகனின் அன்பும், நினைத்துப் பார்க்கில் எவ்விடத்திலாவது ஒற்றுமை என்பது குன்றியதாகக் காணப்படுகிறதா? இல்லையே!

 

மற்றும், சந்திரகுலத்தை நோக்கின், பாண்டவரின் ஒற்றுமை எவரிடத்துண்டு? இவ்வாறு ஒற்றுமையே உருவாகத் தோன்றிய நம்தாய் நாடானது தற்போது ஒற்றுமை என்பது சற்று வேற்றுமை யடைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். நம்பாரதமாதாவின் மக்களனைவரும் ஒருதாயின் பிள்ளைகளாக ஜனித்து, மதம் பாஷை உடை நடை குணம் பாவனை முதலியவற்றில் சிறிது மாறுபாடடைந்ததால் நமக்குள் ஒற்றுமை என்பதும் சிறிது மாறுபாடடைய ஏது உண்டானது போலும். அதுமிகவும் நன்றன்று.

 

இனி நந்தமிழ் மக்களனைவரும் மதத்துவேஷம், குலத்துவேஷம், குடும்பத்துவேஷம், தேசத்துவேஷம், இராஜத்துவேஷம் என்ற இத்தகைய துற்குணங்க ளெல்லாம் ஒழித்து முறையே துவேஷம் என்ற சொல் ''அபிமானம்'' என்று மாறும்படி நடந்தொழுகி இப்பரதகண்டத்தை முன்னிருந்த உயர் பதவிக்குக் கொண்டு வரும்படியான நல்லறிவைப் பெறுமாறு எங்கும் நிறைவுற்ற எம்பெருமான் இனிது கிருபை கூர்ந்தருளப் பிரார்த்தித்து வணங்குவாம். குறையிருப்பின் உலகம் பொறுக்க.


“ஒற்றுமைக்கொடியை உலகத்தோர் நாட்டுக.''


 
S. பூர்ணம் பிள்ளை, துறையூர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

 

 

ஒற்றுமை

 

பூர்வகாலத்தில், நமது முன்னோர்கள் ஒற்றுமையுடன் இருந்து வாழ்ந்து வந்தார்களென்பது வெளிப்படை. தங்களுக்குள், ஏ தேனும் ஒருவிவகாரம் ஏற்பட்டு விட்டால், பட்டக்காரர், பாளையக்காரர், பெரியதனக்காரர், செட்டிமைக்காரர், மணியக்காரர், நாட்டாண்மைக்காரர், கொத்துக்காரர், என்று பல பட்டப் பெயர்களைப் பெற்ற பெரியமேதாவிகளை வைத்துக்கொண்டு தங்களுக் குள்ளாகவே அந்த விவகாரங்களைப் பைசல் செய்து கொள்வார்கள்.

 

இக்காலத்திலோ அப்படி யில்லாது சிலர் வீண்சண்டைகளைச் செய்துகொண்டு கோரட்டுக்குப்போய் பாட்டன் பூட்டன் தேடிவைத்த சொத்துக்களை குமஸ்தாக்களுக்கும், வக்கீல் தரகர்களுக்கும், கொடுத்துத் தங்களுக்கு அநுகூல மாகாவிட்டால், இன்னும் மேல்கோரட்டுக்கு என்றும், கீழ்க்கோரட்டுக் கென்றும் போய்ப் பணத்தை வாரியிறைத்துவிட்டுச் சிவ சிவாவென்று வீட்டுத் திண்ணையின் மேல் ஒரு புறமாகக் குந்தியிருப்பர்.

 

தற்காலத்திலும் கூட, குடும்பர்கள், குயவர்கள், தொட்டியர்கள் ஆகியவர்களுக்குள் கட்டுப்பாடிருக்கின்றது. இவர்களது ஜாதிக் கட்டுப்பாடுகளை என்னென்றுரைப்பது. இந்த ஜாதியாருக்குள் ஏதேனும் குற்றங்குறைக ளுண்டாயின் அதைத் தீர்த்துக் கொள்வதற் கென்றே இவர்கள் வருஷம் ஒரு முறையேனும், அல்லது இரு முறையேனும், மஹாநாடுகள் கூடி, அவர்களுக்குள் முதன்மையான பெரியதனக்காரன், நாட்டாண்மைக்காரன், பெரியபூசாரி, சின்னப்பூசாரி, இவர்களை வைத்துக் கொண்டு அந்த விவகாரங்களைத் தீர்த்துப் பைசல் செய்வதும் தவிர தப்பிதம் செய்தவர்களுக்கு அபராதம் போட்டு வசூல் செய்து அங்கு வந்திருக்கும் உறவின் முறையோர்களுக்கு அந்தப் பணத்தைக் கொண்டு விருந்து முதலிய வற்றிற்குச் செலவிட்டுப் பிறகு இந்தவிதமான குற்றங்களைச் செய்யக்கூடாது என்றும், இன்னவிதமாய் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு செய்து கொண்டு போவார்கள்.

 

இவ்விஷயத்திற்கு அறிகுறியாக நேற்று, கருவூருக்கு அடுத்த மணியம் பாளையம் என்னும் கிராமத்தில் குயவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டங்கூடி, அக்கூட்டத்தில் தங்கள் ஜாதியின் முன்னேற்றத்திற்கான பல விஷயங்களையும், பழைய வழக்கங்களை அறவே ஒழிப்பதையும், இனிமேல் இதரஜாதியாரிடம் நடந்து கொள்ள வேண்டிய சமரசதத்துவத்தையும் கைக்கொள்ள வேண்டியதையும் பற்றிப் பேசி அதன்படி முடிவு செய்து கூட்டம் கலைந்தார்கள்.

 

அவ்வூர்................ கவுண்டர் என்ற ஒருவர் வீதிவழியாய்ப் போகும் போது இவரைக்கண்ணுற்ற குயவனொருவன் பழய ஏற்பாட்டின்படி கும்பிடாமலும், கைகட்டி வாய் பொத்தி நிற்காமலும், மௌனமாகவே யிருந்தான். உடனே கவுண்டருக்கு மீசை நீண்டு, கோபாக்கினி கொழுந்துவிட அவர் சினங்கொண்டு சீறி, " அடா ! அற்பக்குசப்பயல்களே ! ஏது உங்களுக்கு இவ்வளவு ஆணவம்? உங்கள் குலத்துக் குண்டான மரியாதை கொஞ்சமேனும் காட்டாமல் இருக்கிறாயல்லவா? உங்கள் ஜாதிக்கட்டுத் திட்டமா? பார்க்கலாம், நாளை ஊரில் குடியிருப்பது " என்று அக்கோபத்தோடு பேசிக்கொண்டே வீடு சென்றார். கவுண்டர் வீடு சென்றாரோ இல்லையோ? வேலையாட்கள் சிலர் ஓடோடியும் வந்து குயவன் சூளையிலுள்ள பாண்டங்களை உடைத்தும் வீட்டைப் பிரித்தும் குயவனை அடித்து வெளியில் துரத்திவிட்டனர்.

 

அந்தோ! பரிதாபம்! தன் ஜீவனோ பாயத்திற்காகச் செய்து வைத்த பாண்டங்களையிழந்தும், அடியுண்டும், அவஸ்தையுற்ற குயவன் வழியின்றித் திகைத்து "ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளோடொக்கும்'' என்பது போல் தன் இனத்தார்களுடன் சொல்லி முறையிட்டு அழுதான். இதைக் கேட்ட குயவர்களெல்லாம், ஷை கவுண்டருக்குச் சட்டிப்பானைகள் போடக்கூடாது எனக் கட்டுத் திட்டம் செய்து விட்டார்கள்.     

 

இந்து ஜனங்களுக்குக் குயப் பாண்டம் சுபத்திற்கும், அசுபத்திற்கும் உரித்தான தாகையால் மண் பாண்ட மகப்படாத கவுண்டரதுபாடு திண்டாட்டமாய் முடிந்தது. அவர் என்ன செய்வார்? குயவர்களது ஒற்றுமையைக் கண்டு நமது அதிகாரம் இனிக்குயவர்களிடம் செல்லாது எனத் தீர்மானித்த கவுண்டர் குயவர்களிடம் போய் கஷ்ட நஷ்டங்களுக்கு நான் பாத்தியப்படுகிறேன். முன்போலவே எனக்கும் சட்டிபானைகள் போட்டு வரவேண்டும் என்று மரியாதையோடு பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.  

 

குயவர்கள் குலம், கல்வி, செல்வம், இம்மூன்றிலும் தாழ்வு பெற்றிருந்தாலும், ஒற்றுமையாலல்லவோ, உயர்வெய்தினர். கவுண்டர் மேற்சொன்ன மூன்றிலும் சிறப்புற்றவராக விருந்தும், ஒற்றுமைக்குறைவாலன்றோ தாழ்வு பெற நேர்ந்தது. நாம் நம்மிலும் சிலர் தாழ்வு பட்டவர்களென்று எண்ணுவதும், அவர்களை ஏவலாளர்களாக எண்ணி இழிவு செய்தலும், கடவுள் நம்நிமித்தமே அன்னவர்களைப் பிறப்பித்தாரென எண்ணுவது போலாகுமன்றே? அந்தோ! கல்வியிலும், குலத்தொழிலிலும், தாழ்ந்து கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி உயர்வு படுத்துவதற்கு எத்தனையோ மஹான்கள் கங்கணங் கட்டிக்கொண்டிருக்க வில்லையா? அதை இவர் அறியார் போலும்? அன்னோர்களல்வவா உலகம் போற்றும் அன்பும், சமரச தத்துவமும் உடையவராவர்!

 

சகோதர, சகோதரிகளே! நாம் கடவுளுக்கு மாத்திரம் கீழ்ப்பட்டவரென எண்ணி நம்மில் ஒருவர்க் கொருவர் தாழ்ந்தவ ரென்றும் உயர்ந்தவரென்றும் எண்ணாமல் யாவரிடத்தும் அன்புடனே ஒற்றுமையாக உலகம் போற்ற வாழ ஒப்பற்ற முதல்வனை மனத்தில் வைத்துப் போற்றுவோமாக. சுபம், சுபம்.

S. V. பழனியப்பன்,

சாலியாபாளையம்.

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴