Sunday, September 6, 2020

 

மேனாட்டுத் தத்துவம்

 

கிரேக்க தத்துவ ஞானிகளுக்குப் பிறகு அனேக தத்துவ சாஸ்திரிகள் விளங்கினார்கள். ஆனால் அவர்களுடைய ஆராய்ச்சிகள் அவ்வளவாகப் போற்றத்தக்கனவல்ல. மேலும் தத்துவ விருத்திக்கு அவை காரணமாக மாட்டா. ஆகையால் தற்போது அவைகளைப் பற்றி விவரிக்காமல் சென்ற 300 வருடங்களுக்குள் விளங்கிய தத்துவங்களைப் பற்றியே குறிக்க யோசிக்கிறேன். இதற்கு முன், 300 வருஷங்களுக்கு முன் உலகத்தைக் குறித்து ரஸாயன சாஸ்திரிகள் என்ன கண்டு பிடித்தார்கள் என்பதையும், அவர்களால் அபிப்பிராயங்களில் என்ன மாறுதல்கள் ஏற்பட்டன வென்பதையும் சொல்லுகிறேன்.

 

இதுவரையில் ஜனங்கள் சூரியனே பூமியைச் சுற்றுகிறதென்று நம்பியிருந்தார்கள். இவ்வுலகம் ஒன்றுதான் மனித சஞ்சார முள்ளது. சூரியன் மனிதனுக்காகத்தான் காய்கிறது. மழை மனிதனுக்காகத்தான் பெய்கிறது. நக்ஷத்திரங்கள் நமக்காகத்தான் பிரகாசிக்கின்றன என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அப்போது காலிலியோ முதலிய ரஸாயன வித்வான்கள் பூமியே சூரியனைச் சுற்றுகிற தென்றும், பூமியும் மற்ற நக்ஷத்திரங்களினூடே ஒரு நக்ஷத்திர மென்றும், ஏனைய நக்ஷத்திரங்களிலும் உயிர்கள் வசிக்கலாமென்றும் கண்டு பிடித்தார்கள். அப்படியானால் மனிதன் பிரபஞ்சத்திற்கு அதிக முக்கியமானவல்லன். எத்தனையோ ஜீவராசிகளில் மனிதனும் ஒருவன். அவனுக்கு அஹம்பாவ மெதற்கு என்று ஜனங்கள் பேசிக் கொள்ளவாரம்பித்தார்கள். மேலும் வேத புத்தகங்களில் கூறியவை அனேகம் ரஸாயன சாஸ்திரத்திற்கு விரோதமாக இருந்தன. ரஸாயன சாஸ்திரந்தான் நிச்சயம் என்றும் ருஜுப்பட்டது. அதன் பின் வேத புத்தகத்தில் கூறியவையாவும் உண்மையென்ற கொள்கையை விடவேண்டி வந்தது. புத்தகத்தில் கூறியதை மாத்திரம் சத்தியமென்று நம்பலாகாது. ரஸாயன முறையில் கண்டு பிடிப்பதே உண்மை. ஏனெனில் அதையே ருஜுப்படுத்த முடியும்.

 

அனுபவத்தால் அறிவதெனில், புத்தியே முக்கியமாய் இருத்தல்வேண்டும். புத்தியைக் கொண்டு கண்டுபிடிப்பதுதான் நம்பத்தக்கது. வேதவாக்கியம் புத்தியினால் சரியென்று நிர்மாணிக்கப்படும் வரையில் நம்பத்தக்கதல்ல

 

நாம் கருதப்போகும் தத்துவ சாஸ்திரிகளில் முதலானவர் டேகார்ட் என்பவர் (Descartes). அவர் தமது ஆராய்ச்சியை ஒரு நூதன முறையில் கொண்டுபோனார். அவர் கல்வி முடிந்தவுடன் ஞானத்தைப் பற்றி யோசிக்கலானார். உண்மை ஞானமுண்டா? அதை மனிதர் அடைய முடியுமா? சகலகலைகளையும் கற்பது ஞானமாகுமா? ஆனால் சகல கலைகளைக் கற்றபின், இன்னும் கல்லாதது உலகளவு இருக்கிறதே என்று தோன்றுகிறது. அன்னிய தேசங்களில் பிரயாணஞ் செய்வது ஞானமா? ஆனால் அன்னிய தேசங்களில் பிரயாணஞ் செய்து கொண்டே இருப்பவன் தன் தேசத்தை மறந்து விடுகிறான். முற்காலத்தில் என்ன நடந்ததென்று தேச சரித்திரத்திரங்களைப் படிப்பவன் தன்னுடைய காலத்தை யறிவதில்லை. இம்மாதிரி எந்தக் கல்வித்துறையும் நமக்கு ஞானத்தைத் தருவதில்லை. ஞானம் நம் மனத்திலிருந்தே உண்டாக வேண்டும். தன்னையே யறிந்தவன் தான் ஞானி. ஆகையால் தன்னையே ஆராய்ந்து ஞானத்தை யடையவேண்டு மென்ற எண்ணம் டேகார்டு மனத்தில் தோன்றிற்று.

 

அவர் பின்வருமாறு யோசித்தார். சிறு வயதிலிருந்து எத்தனையோ விஷயங்கள் நாம் பெற்றோரிடத்திருந்தும் உபாத்தியாயரிடமிருந்தும் மற்றுமுள்ளவரிட மிருந்தும் கற்றுக் கொள்ளுகிறோம். இவைகளில் சில உண்மை, சில கட்டுக் கதை, சில அவர் அவர்களுடைய சொந்த அபிப்பிராயங்கள் - இப்படிப் பல விதமாக விருக்கின்றன. இவைகளெல்லாம் நம்பத்தக்கவையல்ல. ஆகையால் உலகத்திலுள்ள வஸ்துக்கள் இதுவரைக்கும் கற்றவைகள் எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொன்றாய் மனத்தால் மாத்திரம் பரிசோதித்துச் சரியா தப்பா என்று பார்க்கவேண்டும். அதாவது கற்றதெல்லாம் விட்டுப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் பிரயத்தனப்பட்டார் டேகார்டு. மூன்று முக்கிய விதிகளை ஏற்படுத்திக் கொண்டார்.

 

(1) மனத்தில் நிச்சயமாய் தோன்றாத விஷய மொன்றையும் உண்மை யெனக் கொள்ளக்கூடாது. அதாவது பிறர் சொல்வதாலோ, என்னுடைய சொந்த அபிப்பிராயத்தாலோ ஒரு விஷயத்தையும் சந்தேகமற்றது என்று சொல்லுதல் கூடாது.

 

(2) ஒவ்வொரு துணுக்கையும் பல்வேறு பாகங்களாய்ப் பிரித்து ஒவ்வொரு துண்டையும் தனியாகப் பரிசோதித்து மனத்தைக் கொண்டு உண்மை பொய் என்று அறிய வேண்டும்.

 

(3) என்னுடைய ஆராய்ச்சிகளை படிப்படியாக ஒழுங்குபடுத்த வேண்டும். முதலில் சுலபமானவையும் தெளிவான உண்மையெனத் தோன்றுபவைகளையும் அஸ்திவாரமாகப் போட்டு அவைகளின் மேல் அவைகளை ஆதாரமாகவுடைய மற்ற விஷயங்களை ஸ்தாபித்து ஞான இல்லமொன்று கட்ட வேண்டும்.

 

இப்போது, முக்கியமாய் இரண்டு கருவிகள் மனத்திற்கு உண்டு. ஒன்று சில விஷயங்களைப் பார்க்குமளவிலேயே உண்மையென அறிதல். இவைகளைச் சந்தேஹிக்க முடியாது. இப்படிப்பட்டவை உண்மையாய்த்தான் இருக்க வேண்டும். இரண்டாவது இப்படி நிச்சயமெனத் தெரிந்தவைகளினின்றும் ஊகித்து அறியும் சக்தி மனத்திற்கு உண்டு. ஒன்று ஸ்வய ஞானம் (Intution) இன்னொன்று ஊகித்தல் (Deduction). டேகார்டு எப்படித் தன் ஆராய்ச்சியை நடத்தினாரென்பதைக் கவனிப்போம். நாம் சாதாரணமாகப் புலன்களால், உண்டாகும் விஷயங்களை நம்புகிறோம். தூங்கும் போதுகாணும் கனவு நம்பத்தக்கதல்ல. அதில் காணும் மனிதரும் மற்ற காட்சிகளும் உண்மையல்ல வென்பது போல் என் நாம் ஜாக்ரத ஸ்திதியில் காணும் பொருள்களும் பொய்யென நினைக்கக்கூடாது. நாமெல்லோரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறோம். இவரே நம்மை ஏமாற்றுவதற்காகப் பொய்யான வஸ்துக்களை நிஜமாகக் காட்டிவரலாகாதா. இவ்வுலகம் மயன் இந்திரப் பிரஸ்தத்தில் பாண்டவர்களுக்கென்று நிர்மித்த அரண்மனையைப் போல் இருந்தாலோ? நம்முடைய புலன்கள் சில சமயங்களில் நம்மை ஏமாற்றி விடுகின்றன. எப்பொழுதுமே என் நம்மை இவை ஏமாற்றிவாலாகாது? இது கடவுளின் லீலையாக என் இருக்கக்கூடாது? ஆனால் கடவுள்நல்லவர் என்று நம்மால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையே வடிவமாகக் கொண்டிருப்பவர். ஆகையால் கடவுள் நம்மை எமாற்றாமல் வேறு பூதமொன்று நம்மை ஏமாற்றலாகாதா? வானம், பூமி, மனித உருவங்கள், இயற்கைப் பொருள்கள் எல்லாம் தோற்றங்கள். நம்முடைய கைகள், கால்கள், சரீரம் முதலியன வெல்லாம் பொய்யே.

 

இதையே ஆதாரமாகக் கொண்டு யோசிப்போம். நம்முடைய தேகம் தோற்றம். நாம் நினைப்பதெல்லாம் பொய். பார்ப்பனவெல்லாம் பொய், புலன்களே பொய். எது தான் நிஜம்? ஒன்றுமில்லை. ஒருகால் எல்லாம் பொய்யென்ற வாக்கியமொன்றுதான் நிஜமாக இருக்கலாம். இது தவிர வேறொன்றும் உண்மையில்லையா? இப்படிப் பொய்யான வஸ்துக்களெல்லாம் உண்மையான பொருள் ஒன்று இருந்தாலென்ன? கடவுளோ அல்லது வேறு சக்தியோ ஒன்று மனத்தில் உண்மையான எண்ணங்களைப் பதியவைக்கலாகாதா? கடவுள் வரையில் போவானேன்? எனக்கே எண்ணங்களைத் தோற்றிக் கொள்ள சக்தியுண்டு. அந்த நான் யார்? அதுவாவது உண்மையான வஸ்துவாக இருக்கலாகாதா?

 

ஆனால் புலன்களும் சரீரமும் பொய் யென்று மேலே சொல்லப்பட்டதே! இருப்பின் என்ன? நான் புலன்களும் சரீரமு மன்னியில் இருக்கமுடியாதா? மற்ற வஸ்துக்கள் இல்லாவிடினும் நான் மாத்திரம் நிச்சயமாயிருக்கிறேன். ஏன்? நான் சிந்திக்கிறேன். சிந்திக்கும் பொருள் நிச்சயமாயிருக்கும் பொருள். ஆகையால் என்னைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் நான் நிச்சயமாய் இருக்கிறேன். இந்த சிந்திக்கும் என்னை சந்தேகிக்க முடியாது. என் சந்தேகிப்பதற்கு நான் இருக்க வேண்டும். என்னுடைய அமைப்பென்ன? சாதாரணமாக மனமும் சரீரமும் சேர்ந்ததாகவே நினைக்கிறேன். சரீரம் விஸ்தீர்ணமும், உருவமும் உள்ளது. ஸ்பரிச முதலிய சக்திகள் அதற்குண்டு. ஆனால் மனத்திற்கு இந்த குணாதிசயங்கள் இல்லை. ஒரு கெட்ட பூதம் நம்மை ஏமாற்றுவதாயிருந்தாலும் சரீர விஷயத்தில் மாத்திரம் ஏமாற்றமுண்டாகும், மனத்தின் சக்தி சிந்தை (Thought). நான் நினைக்கும்போது நான் இருந்தே தீரவேண்டும். நாம் நினைக்காதிருக்கும் போது இல்லை யென்று வைத்துக் கொள்ளலாம். ஆகையால் சிந்திக்கும் பொருள் மனம் என்றோ, புத்தியென்றோ, சித் என்றோ சொல்லலாம். " நினைக்கிறேன் ஆகையால் இருக்கிறேன்'' (Cogito ergo sum - I think, therfore I exist). இதுவொன்றே உண்மை. இவ்விஷயத்தைப் போல் அவ்வளவு தெளிவாக விளங்கும் மற்ற விஷயங்களையும் உண்மையெனக் கொள்ளலாம்.

 

இப்போது நமது மனத்தில் அனேக எண்ணங்கள் உதிக்கின்றன. சிலமனத்திலிருந்தே உண்டாகின்றன. சில வெளிப் பொருள்களினின்றும் நம்மனத்தை யடைகின்றன. ஆனால் இந்த வெளிப் பொருள்களெல்லாம் உண்மையென எவ்வாறு சொல்லலாம். சில விஷயங்கள் நமக்குச் சந்தேக மற்றச்வையாகத் தோன்றுகின்றன. ஆயினும் நம் மனத்திற்குத் தோன்றுவது போலவே பொருள்கள் வெளியிலிருக்கின்றன வென்பது என்ன நிச்சயம்? டேகார்ட் இவ்விஷயத்தைக் காரண காரிய வாதத்தால் நிரூபிக்கிறார். காரணம் நிச்சயமாய் இருந்தால் காரியமும் நிச்சயமானதாக விருக்கும். இல்லாவிடில் காரியத்தில் ஒருபாகம் காரணமே யில்லாமல் உண்டானதாகும். ஒரு விஷயம் நம்மனத்தில் உதிக்கக்கூடாத அவ்வளவு விசித்திரமானதாவும் மிகப்பெரியதாகவும் தோன்றினால் எனக்கு வெளியில் அவ்விஷயத்திற்குக் காரணமிருக்கிறதென்று நிச்சயமாய்ச் சொல்லலாம், சாதாரணமாக எனக்குத் தோன்றும் எண்ணங்கள் என் மனதிலேயே உதிக்கக்கூடியன. ஆனால் கடவுளைப் பற்றிய எண்ணம் மாத்திரம் இப்படிப்பட்டதல்ல. சர்வ வல்லமை, சர்வ ஞானம் முதலிய மகத்தான குணங்களையுடைய ஒரு பரம்பொருள் என் அற்ப மனத்தில் உதித்திருக்குமா? இராது. ஆகவே கடவுள் ஒருவர் எனக்கு வெளியில் அவசியமிருக்க வேண்டும். இதேபோல் மற்றப் பொருள்களும் பல வெளியே இருக்கின்றன வென்று ஊஹிக்கலாம். கடவுளைப் பற்றிய எண்ணம் நான் பிறந்த போது என் மனத்தில் அவர் பதிய வைத்திருக்க வேண்டும். கடவுள் என நிரூபித்தவுடன் அவரும் நம்மை ஏமாற்ற மாட்டார். வேறு பூதம் நம்மை ஏமாற்றவும் விடமாட்டார். ஆகையால் நம்மனத்தால் தெளிவாகச சிந்திக்கக்கூடிய விஷயங்களும் பொருள்களும் உண்மையாகவே இருத்தல் வேண்டும்.

 

வெளியில் இருக்கும் பொருள் மனத்தைப் போலல்ல. ஏனெனில் மனம் சூக்ஷ்மமானது. அது சிந்திக்கும் குணத்தை மாத்திரம் உள்ளது. வெளியில் இருக்கும் பொருள் ஜடப்பொருள். அதன் குணாதிசயம் விஸ்தீர்ணம். இவ்விரண்டிற்கும் சம்பந்தம் ஏற்படுவது கஷ்டம். மனம் ஜடப் பொருளை யறியக் கடவுளுடைய சகாயம் வேண்டும். நம்மனத்தில் தோன்றும் விஷயங்கள் உண்மை யென்பதற்கு அத்தாக்ஷி, கடவுள் நம்மை ஏமாற்றுவதில்லை என்ற கொள்கை. ஆகையால் ஒவ்வொரு விஷயமும் உண்மையாயிருக்கக் கடவுள் அதன் மேல் உண்மை முத்திரை யொன்று போடவேண்டும். உண்மை நமக்கெப்படி விளங்கும்? எது நமக்குச் சந்தேகமறவும் தெளிவாகவும் தெரிகிறதோ அதுவே உண்மை. ஒவ்வொரு விஷயமும் தெளிவாகத் தோன்றும் வரைபில் நம் அபிப்பிராயத்தை வெளியிடக் கூடாது. ஜடப் பொருள் அகண்டஅதை எண்ணிறந்த துண்டுகளாக வகுக்க முடியும். வெற்றி டமென்பதே கிடையாது. ஜடப் பொருள் அசைவற்றது.

 

இப்போது மனமும் ஜடமும் ஒன்றுக் கொன்று நேர்விரோதமாக விருந்தால் இவ்விரண்டும் ஒரு கூட்டில் வாழுவது எப்படி? கடவுளுடைய உதவி வேண்டும் என்று சொன்னோம். ஆனால் சாதாரணமாக இவ்விரண்டும் ஒரிடத்தில் இருப்பது நமது தேகத்தில். சரீரம் ஜடப் பொருள். மனம் சூக்ஷமப் பொருள். மனம் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரி யோசனைக்கு வெளியில் பொருள்கள் இருக்கவேண்டு மென்று அவசியமில்லை. ஆனால் மனம் சரீரத்தோடு ஆத்மாவின் மூலம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகையால் ஜடப் பொருளாகிய தேகம் வெளி உலகத்தை ஸ்பரிசிப்பதால் ஏற்படும் யோசனைகளும் மனத்தில் உண்டாகின்றன. இவ்வெண்ணங்கள் சுத்த சிந்தனையைவிட ஒருபடி தாழ்வானவை. ஆகையால் டேகார்டுக்கு சுத்த சிந்தனையையே மனிதர் அனுசரிக்கவேண்டும் என்று தோன்றிற்று.

 

டேகார்டு என்பவர் பிரபஞ்சத்தை இரண்டாக வகுத்து இரண்டையும் சேர்க்க கடவுள் இருக்கிறாரென்றார். மனம் அல்லது சித் ஒருபுறம்; ஜடமாகிய உலக மொருபுறம். இரண்டுக்கும் ஒரு சம்பக்தமுமில்லை. ஆனால் மனம் உலகத்தை யறிய வேண்டியிருக்கிறது. இதற்குத்தான் கடவுளின் உதவி தேவை.

 

டேகார்டுககுப் பின் வந்த அவருடைய சிஷ்யர்கள் மனம் உலகத்தை அறிய முடியாதென்று தீர்மானித்தார்கள். கடவுள் எப்போது மூன்றாவதாக நிற்கிறாரோ எப்போது மற்ற இரண்டு பொருள்களுக்கும் சம்பந்தம் உண்டாக அவருடைய தயவு வேண்டுமோ - அற்ப விஷயங்களிலும் அவருடைய முயற்சியன்னியில் எதுவும் நடைபெறாது. நாம் கையைத் தூக்கவேண்டு மென்றாலும் கடவுளின் இஷ்டத்தால் தான் நடைபெற வேண்டும். அவருடைய சக்தியால் தான் உலகத்தில் எதுவும் நடக்கின்றது. ஆனால் இச் சக்தி வெளியிலிருந்து பிரயோகிக்கப்படுகிறதே யொழிய உலகத்தையோ மனத்தையோ அல்லது இரண்டையுமோ ஊடுருவிச் செல்லுந்தன்மையதாக வில்லை. இப்படியிருந்தால் அதாவது உலகம், மனம், கடவுள் ஆகிய மூன்றும் சம்பந்த மற்றவையாக விருந்தால் உண்மை ஒற்றுமை இருக்க முடியாது. இம் மூன்றுக்கும் ஒற்றுமையிருந்தால் தான் பிரபஞ்சம் சமசீராக நடைபெறுகிறதற்கு ஏதுவாகிறது. ஆகையால் இம் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. இந்தச் சம்பந்தத்தைக் கண்டுபிடிப்பதே டேகார்டுக்கு அடுத்த முக்கிய தத்துவஞானியாகிய ஸ்பினோட்ஜா (Spinoza) என்பவருடைய கருத்து. பிரபஞ்சம் ஒன்று. அதன் பொருள்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் ஜடத்திற்கும் மனத்திற்கும் வெளியில் இருப்பவரல்ல. கடவுள் தான் பிரபஞ்சம். அவர் ஒருவரே உண்மைப் பொருள். மற்ற விஷயங்கள் அவர்முன்னிலையில் அசத்துக்களே. நாம் காணும் வஸ்துக்கள் அநித்திய முள்ளவை. நமக்கு உலகத்தில் காணும் பொருள்களும் மனிதர்களும் பலவாகத்தோன்றுகின்றன. ஆனால் யோசிக்குமளவில் இது தவறென்று புலப்படுகிறது. ஒவ்வொரு பொருளும்'' நான் ஒரு பாகம். தனிப்பொ பாருள் அல்ல,'' என்று சொல்லுகிறது. உதாரணமாக ஒரு சாளரத்தை எடுத்துக் கொள்வோம். சாளரம் தனிப்பொருளா? இல்லை. சாளரம் சுவரில் ஒரு பாகம். சுவர் தனிப் பொருளா? இல்லை. சுவர் வீட்டின் ஒரு பாகம். வீடு தனிப் பொருளா? இல்லை. பட்டணத்தில் ஒரு அணு. பட்டணமோ? தேசத்தில் ஒரு அணு. தேசமோ? உலகத்தில் ஒரு பாகம். உலகமோ? பிரபஞ்சத்தில் ஓர் அம்சம். இப்படியாக எந்த வஸ்துவை எடுத்துக் கொண்டாலும், அது தனியாக நிற்க முடியாமல் நான் இப் பிரபஞ்சத்தில் ஒரு பாகம் என்று சொல்லாநிற்கிறது. மேலும் தனிப்பொருள் ஒன்று தான் மனதிற்கு உண்மையான -தேய்வு படாத ஆனந்தத்தைத் தரவல்லது. ஆனந்தம் தரவல்லது பணமல்ல, கீர்த்தியல்ல சிற்றின்பமல்ல. தத்துவ ஆராய்ச்சியின் பயன் இவ்வானந்தத்தைக் கண்டு பிடிப்பது தான். இவ்வானந்தம் இவ்வநித்திய உலக மல்லவென்று கண் டோம். கடவுள் ஒருவர்தான் இவ்வானந்தம். அவரை அறிதலே ஆனந்தம். இக் கடவுளுக்கும் நமது உலகத்திற்கும் என்ன சம்பந்தம்?

 

ஸ்பீனோட்ஜா மூன்று பதங்களை உபயோகிக்கிறார். அவை பொருள் (substance) குணம் (Attribute), மாதிரி (mode) என்பன. பொருள் என்பது தனியாக நிற்கக்கூடிய உண்மைப் பொருள். இப்பொருள் கடவுள் தான். வேறு எந்தப் பொருளும் உண்மைப் பொருளல்ல. டேகார்டு ஜடமும் மனமும் கடவுளன்னியில் சம்பந்தப்பட முடியாதென்றா ரல்லவா? ஆகையால், ஜடமும் மனமும் பொருளல்ல, குணங்கள். இவை கடவுளின் குணங்கள். உலகத்தில் காணப்படும் பொருள்களோ? இவை கடவுளின் 'மாதிரிகள்'' அதாவது கடவுள் தன்னுடைய எல்லையற்ற ஸ்வரூபத்தை இவ்வாறெல்லாம் விவரிக்கின்றார். டேகார்டு மனத்திற்கும் ஜடத்திற்கும் சம்பந்தத்தை யேற்படுத்துவது கடவுள் என்றார். ஆனால் மனமும் ஜடமும் கடவுளின் குணங்களாய் விட்டபடியால் இரண்டுக்கும் சம்பந்தம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சார்பாகச் சித்தென்று தோன்றுவது இன்னொரு சார்பாக ஜடமாகத் தோன்றும். ஆகவே மனத்திற்கும் ஜடத்திற்கும் சேர்க்கையில்லா விட்டாலும் நேர்கேராக, இரு தண்டவாளங்களில் செல்பவை போலச் சம்பந்தமுண்டு.

 

கடவுளின் ஸ்வரூபம் யாது? அவருக்கு மனிதனைப் போல் தலையும், கைகளும், தேகமும், கால்களும் உண்டா? இல்லை. அவ்வாறு நாம் கடவுளைநினைப்பது தவறு. மனிதன் கடவுளைப்பற்றி நினைப்பதால் தன் உருவத்துடனிருப்பதாக நினைக்கிறான். புலி சிங்கம் முதலிய விலங்கினங்கள் அவரைப்பற்றி நினைக்கக் கூடுமேயானால் அவரைப் புலியாகவும் சிங்கமாகவும் முறையே கருதுவன வென்பதில் சந்தேகமில்லை. கடவுள் சர்வ வல்லமையுள்ளவர். அவருக்குக் குனறவுபாடுகள் இருந்தால் அவர் நம்மைவிட எப்படி மேம்பட்டவர் ஆவர்? பொது ஜனங்கள் எல்லாக் காரியங்களுக்கும் கடவுளையே ஆதிகாரணமாகச் சொல்கிறார். நாம் உண்பதற்கும் உடுப்பதற்கும், பேசுவதற்கும், தூங்குவதற்கும், நற்காரியஞ் செய்வதற்கும், துர்க்கிருத்தியஞ் செய்வதற்கும் கடவுளே காரணமென்றால் நாமென்ன விளையாட்டுச் சாமான்களா? ஆதி காரணமென்று ஒன்றில்லை. சில ஜனங்கள் கடவுளின் மேல்பக்தியென்று சொல்லிக்கொண்டு, உலகத்தில் உள்ள விஷயங்கள் யாவும் தம்முடைய நன்மைக்காகவே உண்டாயினவென்றும் கடவுள் மற்றவரைவிடத் தம்மை அதிகமாக ஆதரிப்பார் என்றும் நம்பியிருப்பார்கள். கடவுள் நமக்கு நன்மை செய்யவே இவ்வளவும் செய்யின் என் உலகில் பிணிகளும், பூகம்பங்களும், புயற்காற்றுகளு மிருக்கின் றனவெனின் இம் மனிதர்கள் மற்ற மனிதர் கடவுளைப் போற்றாததனால் தான் இவை உண்டாகின்றன வென்கிறார்கள். இது தவறு. சுகமும் துக்கமும் நல்லவர் கெட்டவர் என்று பக்ஷபாதமில்லாமல் இரு திறத்தாருக்கும் உண்டாகின்றன. ஆகையால் அற்ப விஷயங்களிலெல்லாம் கடவள் பெயரை எடுப்பது பிசகாகும்.

 

இவ்வாறு சொன்னால் நன்மை தீமை, சுகம் துக்கம் என்பவைகளுக்கு என்ன காரணம்? ஸ்பினோட்ஜா இவைகளுக்கு மனமே காரண மென்றார். ஸங்கீதத்தை யெடுத்துக் கொள்வோம். சந்தோஷமாக இருப்பவனுக்கு இது ப்ரீதியைத் தருகிறது. துக்கித்துக் கொண்டிருப்பவனுக்கு துன்பம் விளைவிக்கிறது. செவிடனுக்குச் சுகம்துக்கம் இரண்டும் இதனால் உண்டாவதில்லை. நாமே சில விஷயங்களைச் சுகமாகவும் சிலவற்றைத் துக்கமாகவும்கருதுகிறோம். ஒரு பரீக்ஷைக்கு இரு பிள்ளைகள் செல்கிறார்கள். இருவரும்இரண்டாம் வகுப்பிலேயே தேருகிறார்கள். ஒருவன் சந்தோஷப்படுகிறான். இன்னொருவன் துக்கப்படுகிறான். இதற்கென்ன காரணம்? முதலவன் மூன்றாவது வகுப்பில் தேரினாலும் போதுமென்று நினைத்திருந்தான். ஆகையால் இரண்டாம் வகுப்பில் தேரியது அவனுக்கு ஆனந்தத்தை யுண்டாக்குகிறது. இன்னொருவன் முதல் வகுப்பில் தேரவேண்டுமென்று ஊக்கமாய்ப் படித்தும் இரண்டாம் வகுப்பில் தேரியதற்கு வருந்துகிறான். இவைகளுக்கு மனமே காரணம். பொது விஷயங்களிலெல்லாம் இவ்வாறே அபிப்பிராய பேதங்களுண்டு. கடவுளுக்கு விருப்பும் வெறுப்பும் இருக்குமாவென்பது சிலருடைய கேள்வி. அவை இராவென்றே சொல்லவேண்டும். இருந்தாலும் நாம் விருப்பு, வெறுப்பு என்று சொல்பவையும் அவருடைய விருப்பும்வெறுப்பும் ஒரே மாதிரியாக இரா. கடவளுக்கு நம்மைப் போல் மனம், புத்திமுதலியன கிடையா. அவர் நிர்க்குணர். எந்தக் குணத்தைச் சொன்னாலும்அவரைக் குறைவுபாடுள்ளவ ராக்குவோம். பிரபஞ்சத்தை நாம் வருணிக்கமுடியாது. பிரபஞ்சம் சட்டக்கோட்பாட்டை அனுசரிக்கும் ஒரு யந்திரமாகச் சொல்லலா மென்பது ஸ்பினோட்ஜாவின் அபிப்பிராயம். தனி அங்கங்களுக்குச் சாத்துவம் கிடையாது. அப்படியானால் கடவுளுக்கும் நமது உலகத்தினருக்கும் யாது சம்பந்தம்? இவ்விஷயத்தில் ஸ்பினோட்ஜாவின் கருத்துச் சரியாக விளங்கவில்லை. தனி அங்கங்களுக்குச் சத்துவம் கிடையாதெனினும் நாம் பார்க்கும் வஸ்துக்கள் உண்மையென்றே நமக்குத் தோன்றுகிறது. ஆகவே கடவுள் இந்தத் தனி வள் துக்கள் அடங்கிய பெரிய வஸ்துவென்றுசொல்லலாமா? முடியாது. வஸ்துக்கள் ஒன்றோடொன்று நித்திய சம்பந்தம் பெற்றிருக்க வேண்டுமே யொழியத் தனித்தனி நிற்க முடியாது. மேலும்தனிப்பொருள் கடவுள் ஒன்று தான் என்று முன்னமேயே சொல்லப்பட்டிருக்ஒரு சார்பாக பிரபஞ்சம் சட்டக்கோட்பாட்டிற் கடங்கிய யந்திரம்என்று ஸ்பினோட்ஜா அபிப்பிராயப்பட்டாலும் மற்றொரு சார்பாக பிரபஞ்சத்திற்கே கடவுளன்னியில் சத்துவம் கிடையாது என்று நினைத்தார். கடவுளைநிர்க்குணராகச் கருதியபின்பு அந்நிர்குணக் கடவுளினின்றும் எப்படிச் சகுணம் பிரபஞ்சம் உண்டாயிற்று என்று அவருக்கு விவரிக்க முடியவில்லை. அதாவது கடவுளுக்கும் உலகத்திற்கும் யாது சம்பந்தமென்று சொல்லக் கூடவில்லை. ஆனால் தத்துவ ஆராய்ச்சியின் முக்கிய கருத்து, இவ்வனித்திய சகுண உலகம் எப்படி நித்திய நிர்க்குணக் கடவுளிலிருந்து உண்டாகிறது, எப்படி மனிதன் அனேக குறைவுபாடுகள் உள்ளவனாயிருந்தும் அக்கடவுளின் ஸ்வரூபத்தையறிந்து நித்தியானந்தத்தைப் பெறுகிறான் என்பனவே. இஃதெவ்வாறு சாத்தியமாகும்? ஸ்பினோட்ஜா இதற்கு நாம் நம்முடைய இச்சைகளைத் தள்ளிவிடவேண்டுமென்றும் உண்மை விஷயங்களையே கற்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். நமக்குப் பல்வேறு விஷயங்களில் பிரியமுண்டாகிறது. உலகத்திற்குமாறாக நம்முடைய சுய இச்சையை மாத்திரம் கருதி அனேக விஷயங்களைச்செய்ய விரும்புகிறோம். இது தவறு. நமது மனத்தின்கண் அனேக தப்பபிப்பிராயங்கள் உண்டாகின்றன. அவை நம்முடைய அறியாமையினாலேயே உண்டாகின்றன. உண்மை விளக்கை ஏற்றி இவ்விருட்டை நீக்க வேண்டும். உண்மை விளக்கு என்பது கடவுளைப்பற்றிய ஞானம். இஞ்ஞானத்தை வளரச் செய்வனவே நலமானவை. இடர் உண்டாக்குபவை தீயவை. எக்காரியமும் ஞானத்தினாலேயே செய்யப்படவேண்டும். அபிமானத்தாலோ, இரக்கத்தாலோ, வருத்தத்தாலோ செய்தல் கூடாது. ஒரு நோயாளிக்குச் சகாயஞ் செய்வது இரக்கத்தினாலன்று. அவன் நோயைப் போக்கினால் அவன் சுகமடைவான் என்னும் ஞானத்தால். ஞானத்தை யடைந்தவன் கீதையில் சொல்லியிருப்பது போல் பிராமணன், சண்டாளன், பசு, நாய் எல்லாவற்றையும் சமமாய்ப் பாவிப்பவன். என் சர்வம் கடவுளிலேயே இருக்கிறது.

 

டேகார்டு உலகத்தை இரண்டாகப் பிரித்து இவ் விரண்டிற்கும் சம்பந்தத்தை ஏற்படுத்துவது கடவுளின் தொழிலென்றார். ஸ்பினோட்ஜா உலகத்தையே கடவுளின் ஓர் அம்சமாகப் பாவித்தார். இரண்டும் இரண்டு விதமாக இருக்கின்றன. உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாமற் போகுமா? மனமும் ஜடமும் குணத்தில் வித்தியாசப்பட்டிருந்தாலும் இரண்டும் ஒரே உலகத்திலிருப்பதால் வேறுசம்பந்த மில்லாமற்போனாலும் ஒரே உலக வாசிகள் என்ற சம்பந்த மிருக்கவில்லையா? இரண்டு பேர் விரோதிகள் என்று சொல்வதே ஒருவித சம்பந்தத்தை உண்டாக்கி விடுகிறது. ஆகையால் மனமும் ஜடமும் அவ்வளவாக முற்றிலும் வித்தியாசமுள்ளவை யல்ல.

ஸ்பினோட்ஜா இதைச் சற்றே அறிந்திருந்தாலும் இவைகளைக் கடவுளின் குணங்களாக எடுத்துக் கொண்டு விட்டதால் வேறுவித சம்பந்தத்தை ஏற்படுத்தி விட்டார். இதற்குக் காரணம் டேகார்டும் ஸ்பினோட்ஜாவும் ஜடத்தை விஸ்தீர்ணமுள்ளதும் பிரிவு அற்றதுமாகக் கருதினார்கள். ஜடப்பொருள் அசைவற்றது மனம் எங்கும் சஞ்சரிக்கக் கூடியது என்று கருதியதால் ஜடப்பொருள் மனத்தோடு கலக்கமுடியாது என்று நினைக்க வேண்டி வந்தது.

 

இப்பொழுது, ஜடத்தை விஸ்தீர்ண முள்ளதாகக் கருதாமல் அனேக அணுக்களாகச் சிந்தித்தால் இவ்வணுக்கள் அசைந்து சஞ்சரிக்கக் கூடியனவென்று சொல்வதில் தப்பில்லை. உலகம் அகன்ற ஒரே வஸ்து என்றால் தான் சங்கடம். ஆனால் அனேக அணுக்களாக எடுத்துக்கொண்டால் அவை அசையவும் கூடும். மேலும், வெறும் சலனம் மாத்திரம் அவைகளின் குணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்திருக்கிறேன். அதற்கென்ன அர்த்தம்? வேறொருவரும் இந்த நாற்காலியில் உட்காரமுடியாது என்று தாத்பரியம். என்னைத் தள்ளி விட்டால் வேறொருவர் வந்து உட்காரலாம். ஆனால் என்னைத் தள்ளுவதற்கு அவர் பலத்தை உபயோகிக்க வேண்டும். நான் எழுந்திருக்கப் பிரியப்படா விட்டால் நான் என் சக்தியைச் செலுத்தி இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என் எதிரில் ஒரு புத்தகம் இருக்கிற தென்பதற்கு அப் புத்தகம் வேறொரு பொருளையும் அங்கு இருக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

 

இன்னொரு விஷயம். ஒரு மரத்தை எடுத்துக் கொள்வோம். அதில் எத்தனையோ பாகங்கள் இருக்கின்றன. தண்டும், கிளைகளும், காய்களும், பூக்களும், நரம்புகளும் இருக்கின்றன. ஒரு காயை எடுத்துப் பூதக் கண்ணாடியால் பார்ப்போமாயின் அம்மரத்தின் குணாதிசயங்களை அதிலும் காணலாமென்று சொல்கிறார்கள். அதேமாதிரி உலகத்தின் குணங்களை அதின் ஒவ்வொரு பாகத்திலும் காணலாம். அப்படியானால் ஜடமும் மனமும் உலகத்தின் அம் சங்களாகையால், ஒவ்வொரு பாகத்திலும் இவ்விரண்டும் அடங்கியிருக்க வேண்டுமல்லவா? உலகம் ஒரு வஸ்துவாக இராமல் அனேக அணுக்களாக எடுத்துக் கொள்ளுவோமானால் ஒவ்வொரு அணுவிலும் மனமும் ஜடமும் குடி கொண்டேயிருக்க வேண்டும். ஆனால் ஜடம் என்பதற்கு அர்த்தம் சக்தி யென்று மேலே சொல்லப்பட்டது. மனமும் சக்திதானே. ஆகையால், மனமும் ஜடம் சக்தியாக விருப்பதால் இரண்டிற்கும் அப்படிப்பட்ட விரோதமில்லை. சில அணுக்களில் ஜடம் அதிகமாக விருக்கும், மனம் கொஞ்சமாக விருக்கும். சிலவற்றில் ஜடமும் மனமும் சமபாகமா யிருக்கும், சிலவற்றில் ஜடம் கொஞ்சமும் மனம் அதிகமாயு மிருக்கும்.

 

இன்னொன்று. மனம் என்பது வெறும் சித்து, அறிவு, ஞானம் என்று முந்திய தத்துவ சாஸ்திரிகள் நினைத்தனர். இதைச் சற்று ஆராய்வோம். இங்கே நான் எழுதிக் கொண் டிருக்கிறேன். எழுதும் போது எழுத்தின் மேல் என்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே என் மனம் முழுவதும் வேலை செய்கிறது. ஆனால் என் கையில் எழுது கோலைப் பிடித்திருக்கிறேன் அல்லவா? அது கையில் படுவதால் அதுவும் சற்று என் மனத்தில் தங்கியிருக்கிறது. நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியினால் என் மனம் சற்று அசைக்கப்படுகிறது. என் அறையிலிருக்கும் கடிகாரத்தின் ஒலியும் சற்றே என் காதில் பட்டுக் கொண்டிருப்பதால் மனம் அதையும் கவனிக்க வேண்டி வருகிறது. வீதியில் எத்தனையோ சத்தங்கள் உண்டாகின்றன. அவைகளையும் கவனிக்க வேண்டி யிருக்கிறது. சில விஷயங்கள் நமது புலன்களில் படாமலே மனத்திலிருந்து கொண்டிருக்கின்றன. 9 மணிக்கு இன்னது செய்யவேண்டு மென்பது நமது மனதில் இருக்கிறது. காந்தியடிகள் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போவதும் மனதில் இருக்கிறது. ஸர். வி. வி. ராமனின் நூதன ஆராய்ச்சியும் மனதில் இருக்கிறது. இப்படியாகச் சில விஷயங்கள் மனதில் அதிகக் கூர்மையாகவும், குறைவாகவும் சதா இருந்து கொண்டே யிருக்கின்றன. இதை ஸ்பினோட்ஜாவிற்குப் பின் வந்த முக்கிய ஞானியாகிய லைப்னிட்ஜ் (Leibniz) என்பவர் சமுத்திரத்தின் இரைச்சலுக்கு ஒப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு அலையும் சிறிது சத்தம் செய்கிறது. ஒவ்வொரு நீர்த்துளியும் சற்று சத்தம் செய்கிறது. இந்தச் சத்தமெல்லாம் சேர்ந்தே பேரிரைச்சல் உண்டாகிறது. சிறிய துளிகள் சத்தஞ் செய்யாதிருப்பின் பெரிய சப்தம் உண்டாகாது. ஆகவே மனம் என்று சொல்லப்படுவது அனேக சிறிய விஷயங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டே உண்டாவது. ஒரு வஸ்திரத்தில் எத்தனையோ வர்ணமுள்ள நூல்களைச் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு வர்ணமும் மற்றொன்றில் புகுந்து மறைந்து விடுகிறது. இதைப்போல் ஒவ்வொரு அணுவிலும் மனமும் ஜடமும் சஞ்சரிப்பதோடு சிலவற்றில் ஜடம் அதிகமாகவும் சிலவற்றில் மனம் அதிகமாகவும் இருக்கிறதென்று கண்டோம். இவ்வணுக்கள் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சிறிய மனமுள்ள அணுவிலிருந்து வெகு ஜாஸ்தியான அணுவிற்குக் கோவை ஜோடித்து விடலாம். ஒரு பொருட்காட்சி சாலைக்குச் செல்கிறோம். அங்கே 10000 - வருஷங்களுக்கு முன் மனிதர் செய்த கல் பாத்திரங்கள் இருக்கின்றன. அவைகளிலும் தண்ணீரை வைத்துக் கொள்ளலாம். 5000 - வருஷங்களுக்கு முன் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்தார்கள். ஆனால் பின்னே செய்யப்பட்டவை முன் சொன்னவற்றை விட நேர்த்தியாகவே காண்கின்றன. இவைகளை விட ஆயிரம் வருஷங்கள் முன் செய்தவை நேர்த்தியாக விருக்கின்றன. இவைகளை விட நூறு வருஷங்களுக்கு முன் செய்தவையும் இவைகளை விடப் பத்து வருஷங்களுக்கு முன் செய்தவையும் இவைகளை விட ஐந்து வருஷங்களுக்கு முன் செய்தவையும் இவைகளை விட நேற்றுச் செய்யப்பட்டவையும் வெகு அழகாக இருக்கின்றன. இவைகளிலெல்லாம் மண்ணும் வேலைப்பாடுமே இருக்கின்றன. ஆனால் நாள் ஆக ஆக வேலைப்பாட்டின் பெருமை விளங்குகிறது. அதுபோல் சில அணுக்களை விடச் சில அணுக்களில் மனத்தின் அம்சம் அதிகமாக விருக்கிறது. ஆனால் இவ்வணுக்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை யல்ல. இதை லைப்னிட்ஜ் சாளரமற்ற மானட் (Windowless monad) என்று கூறுகிறார். ஒவ்வொரு மானட்டின் அம்சமும் சக்தி, சிலவற்றில் ஜட சக்தி அதிகம், சிலவற்றில் மனோசக்தி அதிகம், ஒவ்வொரு அணுவும் தானாகவே விருத்தியடைகிறது. செடி, கொடி, மிருகம் மனிதன் இவையெல்லாம் தாமே வளர வில்லையா? கடவுளா வளர்க்கிறார்? அறியாமையால் எதையும் கடவுளே செய்கிறார் என்கிறோம். நற்கிருத்தியம் துற்கிருத்தியம் யாவும் கடவுள் செய்து விட்டால் நாம் என்ன பொம்மைகளா? நமது தேசத்தில் பெரும்பான்மையோர் இவ்விஷயத்தைப் பற்றி யோசனை செய்வதில்லை. கடவுளே நம்மை ஆட்டிவைப்பவர் என்றும் நாம் வெறும் விளையாட்டுச் சாமான்கள் என்றும் கருதுவதில் வாஸ்தவமாகவே மகிழ்ச்சி யுண்டாகிறது. நமது பாரத்தை யெடுத்து விட்டது போலவே தோன்றுகிறது. ஆனால் வெறும் மகிழ்ச்சிக்காக உண்மையைக் கருதாமலிருக்கமுடியுமா? கடவள் நம்மை ஆட்டிவைப்பாராயின் பாவம் புண்ணியம் யாவும் அவருடைய பொறுப்பல்லவா? நாம் பாவமாவது புண்ணியமாவது செய்தோமென்று வருந்தவும் வேண்டாம் புகழ்ந்து கொள்ளவும் வேண்டாம். இது தவறு. ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் செய்தால் நமக்குச் சித்தங் கொடுத்து, அறிவ கொடுத்து எதற்காக வைத்திருக்கிறார்? அவர் செய்வதையெல்லாம் சரியா, தப்பாவென்று பார்ப்பதற்காகவா?

 

லைட்னிட்ஜ் இவ்விஷயத்தை யறிந்து ஒவ்வோர் அணுவும் தானே வளருகிறது என்றும் அன்னியவஸ்துவின் ஆக்கினைக்குட்பட்டதன்று என்றும் சொல்லி யிருக்கிறார். அப்படி ஆக்கினைக்குட்பட்டிருந்தாலும் அவ்வஸ்துவின் கட்டளையை நிறை வேற்றச் சக்தியிருந்தால் தானே அதை நிறைவேற்ற முடியும்? அப்படி நிறைவேற்றச் சக்தி யுண்டாயின் அவ்வணுவிற்கே அக்காரியத்தைச் செய்து முடிக்க வேண்டு மென்று கிளர்ச்சி யுண்டாகாதா? அப்படி அதற்கே கிளர்ச்சி யுண்டாகுமாயின் வேறு அன்னிய வஸ்து எதற்கு? கீதையில் அர்ச்சுனனை விளித்துப் பகவான் "ஏ குந்தி புத்திரா! உன்னுடைய இயற்கை காரணமாகவே, அஞ்ஞானத்தால் எதைச் செய்யேனென்கிறாயோ அதை நீயே செய்து முடிப்பாய்'' என்கிறார். இதைப் போன்றது அணுவின் விருத்தியும்.

 

சரி, ஆனால் இவ்வணுக்கள் எல்லாம் சம்பந்த மில்லாமலிருக்க முடியாதே! மேலே சொன்னவாறே, எப்போதும் உலகத்தில் வசிக்கும் அணுக்களோ சம்பந்தமற்றிரா. இச்சம்பந்தத்தை லைப்னிட்ஜ் " பூர்விக ஒற்றுமை" (Pre - established Harmony) என்று கூறினார். ஒவ்வொரு அணுவும் தனித்தனியாக இருப்பினும் எல்லா அணுக்களும் ஒரே காரணத்தை யொட்டியேயிருக்கின்றன. இவ்வுலகத்தைப்பற்றி யோசிக்குங்கால் ஒரு பலனுக்காக ஏற்பட்டிருக்கிறதென்றுதான் நினைக்க வேண்டி யிருக்கிறது. இப்பலன் யாதாயினும் ஒவ்வோர் அணுவும் இப்பலனையே முன்னேற்றுகிறது. ஆகவே இவைகளுக்குள் ஒற்றுமை யுண்டென்று சொல்லலாம். ஒவ்வோர் அணுவும் பளிங்கு போல் மற்ற அணுக்களின் வாழ்க்கையைப் பிரதிபிம்பிக்கிறது. டெனிஸன் என்னும் பெரிய ஆங்கில கவி புஷ்பத்தை வர்ணிக்கும் போது, '' ஏ சிறுபுஷ்பமே, உன்னைக் கொய்து கையில் வைத்துப் பார்க்கிறேன். ஆயினும் உன்னை நன்கறியக் கூடுமாகில், இவ்வுலகத்தையும் கடவுளையு மறிந்தவனாவேன் " என்கிறார். அப்படியே ஓரணுவை யறியின் உலகத்தின் அமைப்பையே அறிந்தவராவோம். சங்கீதத்தில் விதவிதமான வாத்தியங்களை வைத்துக் கொண்டிருப்பினும் எல்லோரும் பாடும் போது ஒற்றுமையிருப்பது போல் இவ்வணுக்களின் விருத்தியிலும் ஒற்றுமையுளது.

 

லைப்னிட்ஜின் தத்துவத்தின்படி மனிதனின் மனதுக்கும் தேகத்திற்கும் எப்படி ஒற்றுமை உண்டு என்பதைக் கவனிப்போம். இரண்டு கடியாரங்களிருக்கின்றன. இவ்விரண்டும் ஒரே மணி காட்டுவது எவ்வாறு? இரண்டையும் ஒன்றோடொன்று இணைத்து விடலாம். இரண்டையும் ஒரே வேலையாளிடம் கொடுத்து அடிக்கடி திருப்பிக் கொண்டிருக்கச் சொல்லலாம். மூன்றாவது முதலில் செய்யும் போதே இரண்டையும் ஒரே மணிகாட்டும் படி நியமிக்கலாம். இம்மூன்றாம் முறையே மனதுக்கும் தேகத்திற்கு முள்ள சம்பந்தத்தை நிரூபிக்கிறது. ஒரே பலனை முன்னேற்றுவதற்காக உண்டான அணுக்களாகையால் ஆதியிலிருந்தே இரண்டும் கடவுளே ஏற்படுத்திய சம்பந்தம் போல் ஒற்றுமையுடன் நடைபெறுகின்றன.

 

ஒரு வகுப்பில் 50 - பிள்ளைகள் படிக்கிறார்கள். உபாத்தியாயர் எல்லோருக்கும் ஒரே பாடம் கற்பிக்கிறார். ஆனால் அதைக் கிரஹிப்பதில் ஒவ்வொருவன் ஒவ்வொரு மாதிரியாகச் செய்கிறான். எல்லோரும் அவரவர்களுடைய புத்திக்கூர்மை, கிரஹிக்கும் சக்தி, மற்ற அனுகூல பிரதிகூலங்கள் முதலியவற்றை யொட்டியே பலன் பெறுகிறார்கள். அதேமாதிரி கடவுளின் ஸ்வரூபமென்பது ஒன்றே. இது ஆதாரமாகக்கொண்டு வளருவது அணுவின் சக்தியினால் தான். அணு தன் இயற்கையால் கட்டுப்பட்ட தென்றாலும் தன்னுடைய சக்தியை உபயோகிப்பதில் பந்தமற்றிருக்கிறது.

 

லைப்னிட்ஜ் உலகத்தில் ஒரு திவ்ய காரணமிருக்கிறது. அக்காரணம் நமக்கு இன்னும் ஏற்படவில்லை. ஏற்படாததால் காரணமில்லையென்று சொல்ல முடியாது. உலகத்தில் நல்லதுமிருக்கிறது கெடுதலுமிருக்கிறது. இக்கெடுதலும் நன்மைதானோ வெனில், ஆம், அதையும் ஒரு நன்மையாகவே கொள்ள வேண்டும். துன்பமேயில்லாமல் நன்மையே யிருப்பின் உலகத்திலிருப்போர் யாவரும் கெட்டவராயிருப்பர். தீமையே மனிதரை நல்லவராக்குகிறது. தீமையை நீக்க அவர்கள் அறிவதற்குத் தீமையிருத்தல் அவசிய மன்றோ! ஆதலின் தீமையிருப்பதற்கும் ஒரு காரணமிருக்கிற தல்லவா? ஆகவே தீமையும் நன்மை யென்றே சொல்ல வேண்டும். மேலும் நாம் சிலவற்றைத் தீமை யென்கிறோம். ஆனால் நமக்கு உலகத்தின் சில வருஷங்களைப் பற்றியே தெரியும். எத்தனை கோடி வருஷங்களாகமிருக்கின்றது. இன்னும் எத்தனை கோடி வருஷங்கள் இருக்கப்போகின்றன. உலகத்தின் முழுச்சரித்திரத்தில் தீமையின் உபயோகம் என்ன வென்று நன்றாய்த் தெரியும்.

 

உலகம் எத்தன்மையதெனக் கண்டோம். அனேக அணுக்களாலாயது. ஒவ்வோரணுவிலும் மனமும் ஜடமும் ஒருங்கே யிருக்கின் றனவென்று கண்டோம். ஒவ்வோர் அணுவும் மற்ற அணுக்களோடு சம்பந்தப்படாமல் ஒருபெரிய அணுவை பிரதிபலிக்கிறதென்று அறிந்தோம். அணுவும் அனுபவமும் அதனுள்ளேயே அடங்கியிருக்கின்றன. வித்திலிருந்து செடி உண்டாவதற்கு வித்திலேயே செடியின் அம்சங்கள் அடங்கியிருப்பது போல் அணுவிலேயே அதன் சாராம்சம் அடங்கி யிருக்கிறதென்பது லைப்னிட்ஜின் கொள்கை.

 

இவருக்குப்பின் தத்துவ ஆராய்ச்சியில் முக்கியமானவர் 'லாக்'(Locke) என்பவர். லாக்கிற்கு லைப்னிட்ஜின் தத்துவம் சரியெனப் புலப்படவில்லை. மனத்திற்கா அவ்வளவு சக்தியென வியந்தார். அப்படி மனத்திற்கு அவ்வளவு சக்தி உண்டாயின், குழந்தைக்கே எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். பிறக்கும் போதே மனிதரின் குணாதிசயங்கள், உலகத்தின் வினோதங்கள், தான் பின்னால் அனுபவிக்கப் போகிறவைகள் முதலியன தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அனுபவத்தில் இப்படியா யிருக்கின்றது? குழச்தைக்கு ஒன்றுமே தெரிவதில்லை. ஒன்று தெரியாத குழந்தையென்று வசனமும் வழங்குகிறது. குழந்தையும் ஒருவஸ்துவைப் பார்த்தவுடன் அது என்னவென்று தெரியாமல் விழிக்கிறது. யாராவது சொன்னால் தான் தெரியும். கருப்புநிறமுள்ள பறவையைக் காண்பித்து '' அது காகம்' என்றால் அதுமுதல் காகத்தை எப்போது பார்த்தாலும் காகமெனத் தெரிந்து கொள்ளுகிறது. அப்படியில்லாமல் மனத்தால் தெரிந்து கொள்வதாயின் காக்கையைப் பார்த்தவுடன் ''எனக்குத் தெரியுமே, அதுதான் காகம்'' என்று சொல்வதில்லை. சூரியனைப் பார்த்தபோது “அதுதான் சூரியன் என்று நாம் சொல்லித்தான் குழந்தைக்கும் தெரியும் '' அது என்ன " என்று குழந்தை கேட்பதைப் பார்க்கிறோமே தவிர அதை முன்னமேயே யறிந்ததாகத் தோன்றவில்லை. அதாவது ஒவ்வொரு பொருளையறிவதற்கு முன் வெளியில் அவ்வஸ்துவை நாம் பார்க்க வேண்டும். இல்லாவிடில் அதையறியவே முடியாது. ஒரு பூனையைப் பற்றி குழந்தைக்கல்ல, அதை முன்னால் பார்த்திராத பெரியவனுக்கும் எவ்வளவு சொன்னாலும் அதைப் பிரத்தியக்ஷமாகப் பார்த்தது போலாகாது. நான்கு கால்கள், ஒரு வால், உருண்டை முகம், சிறிய காதுகள், மிருதுவான சரீரம் என்று சொன்னாலும் இவைகளை வைத்துக் கொண்டு பூனையை யறிய முடியாது. அதாவது ஒவ்வொரு விஷயத்தையும் பிரத்தியக்ஷமாகக் காணவேண்டும். மனம் ஒரு சுத்தமான பலகை போன்றது. நாம் காண்பது, கேட்பது, ஸ்பரிசிப்பது, சுவைப்பது, முகருவது ஆகிய அனுபவங்கள் வெளியிலுள்ள வஸ்துக்களிலிருந்து கிளம்பி மனதில் படிகின்றன. இவை மனத்தில் படிவதால் தான் நமக்கு ஞானமுண்டாகிறது. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுதவேண்டும்! இவ்வனுபவங்களில்லையேல் நாம் ஒன்றையும் அறியமுடியாது.

 

ஆனால் மனத்திற்குச் சக்தியேயில்லை யென்பதில்லை. மனத்தில் படும் அனுபவங்களைத் திரட்டி அவைகளைத் தொகுத்து அர்த்தம் செய்து கொள்ளக்கூடும். இன்னொன்று: சில குணங்கள் வஸ்துக்களிலேயே யிருக்கின்றன. கனம், சுற்றளவு, அமைப்பு முதலியன இதுபோல்வன. மற்றபடி வர்ணங்கள், சப்தங்கள், ருசி முதலியன மனத்திலிருக்கின்றன. ஒரு வஸ்துவின் கனமும் சுற்றளவும் அதனுடையவைதாம். அவைகளை அதில் புகுக்க முடியாது. ஆனால் வர்ணம் அப்பொருளிலேயே அவசியம் பதிந்திருப்பதன்று. குதிரை சிவப்பு, கருப்பு, வெள்ளை முதலிய வர்ணங்களாகப் பலவிதமாக விருக்கலாம். மேலும் கண்ணை மூடிக்கொண்டு விட்டால் வர்ணம் நமக்குத் தெரியாது. மூக்கை மூடிக் கொண்டு விட்டால் வாசனை தெரியாது. ஆகையால் வாசனையும் நமது மனதிலிருக்கும் பொருள்.

 

சில விஷயங்கள் நமக்கு வெளியில் ஒருபொருளு மில்லாமலேயே தெரியறது. நாமிருக்கிறோம். நம்முடைய இருப்பை எப்படி அறிகிறோம்? இது நமக்கு இயற்கையிலேயே தெரிய வருகிறது. மனத்திலேயே இவ்வெண்ணம் உதிக்கிறது. கடவுளின் உண்மையை எப்படி யறிகிறோம்? நம்முடைய. இருப்பை யறிகிறபடியே, ஆதியிலிருந்து ஒரு பரம்பொருள் இருக்கவேண்டு மென்று நமக்குத் தெரிகிறது. இவ்வுலகம் இருப்பதற்கு ஒரு காரணம் வேண் டாமா? உலகம் காரணமில்லாமல் வந்திருக்க முடியாது. ஒவ்வொரு விஷயத் திற்கு ஒரு காரணமுண்டு, உலகத்திற்கும் ஒரு மிருக்க வேண்டும். இதுவே கடவுள்.

 

மற்ற விஷயங்களை ஸ்பரிசம் முதலியவற்றால் தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டு, மனத்தால் அவைகளைத் திரட்டி யறிய வேண்டும். அதாவது மனத்திற்கு ஒருவித சக்தியிருக்கிற தென்றாலும், வெளிப் பொருள்களையே அது அறியக்கூடும். வெளிப் பொருள்கள் தனித்தனி குணங்களை மனத்தில் பதியவைக்கின்றன. அக்குணங்களைத் தகுந்த விடங்களில் பொருந்தச் செய்து அறிவது மனத்தின் சக்தி.

 

லாக் என்பவவருடைய கொள்கை இன்னதென்று கண்டோம். விஷயங்களை நாம் அறிய அவை நம்மால் அனுபவிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு பொருளைப் பார்த்தா லொழிய அது இருப்பது நமக்குத் தெரியாது. ஒருவன் பேசுவதைக் கேட்டாலொழிய அவன் இருப்பது தெரியாது. ஒரு பொருளைத் தொட்டாற்றான் அதன் தன்மை தெரியும். பொருள்களின் குணங்கள் நமது இந்திரியங்களின் மூலமாய் நமக்குத் தெரி சில குணங்களை நமது மனமானது பொருள்களில் புகுத்தி அவற்றிற்குக் குணங்களைத் தருகின்றன. இந்த குணங்களெல்லாமின்றிப் பொருள்கள் தனியே யிருக்க முடியுமா? லாக் என்பவர் கூடும் என்றே சொன்னார். குணமில்லாமல் தனியே நிற்கும் வஸ்துவின் பெயர் 'ஜடம்' என்றார். இப் பொருள் குணங்களைப் பெற்றுப் பல உருவங்களாகத் தோன்றுகின்றன. குணங்கள் தனியே நில்லா. இவைகளுக்கு உறைவிடம் 'ஜடப் பொருள்' என்றார்.

 

இவருக்குப் பின் வந்த தத்துவ ஞானியின் பெயர் பார்க்ளீ. இவர் இருபத்தைந்து வயதிலேயே விசேஷ கல்வித் திறமடைந்து தமது தத்துவத்தை வெளியிட்டார். லாக் குணங்களால் பொருள்களை யுணர்கிறோ மென்றார். குணங்கள் நமது இந்திரியங்களில் பதிந்து, பொருள்களை யறியச் செய்கின்றன. உதாரணமாக, வீதியில் விசேஷ ஊர்வலம் போகிறது, நமது கண்கள் அதைப்பார்த்தா லொழிய அது போவது தெரியாது. ஒரு சத்தம் கேட்கிறது. இதற்கென்ன அர்த்தம்? நமது காதுகள் சத்தத்தைக் கேட்கின்றன. ஒரு பொருள் நம் மேல் படுகிறது. அதாவது நமது தேகம் அதனை ஸ்பரிசிக்கிறது. ஒரு வஸ்பது ருசியாக விருக்கிறது. என்ன அர்த்தம்? நமது நாக்கு அதனைச் சுவைக்கிறது. இவ்வனுபவங்களிலிருந்து என்ன தெரிகிறது? குணங்களை யறிய நாம் அதாவது குணங்களை யறியக் கூடிய சித்தமுள்ள ஜீவன் ஒன்று இருக்க வேண்டும். இந்த ஜீவனின்றிக் குணங்களை யறிய முடியாது. லாக் குணங்கள் தங்க ஜடப் பொருள் வேண்டுமென்றாரே, நாம் இன்றி ஜடப்பொருள் இருந்தென்ன இல்லாவிட்டா லென்ன? ஜடப்பொருள் இருக்கிறதென்றால் அதையும் நாம் பார்க்கிறோ மென்று தானே அர்த்தம். நாம் பார்க்காமல், கேட்காமல், ஸ்பரிசிக்காமல் இருக்கக்கூடிய வஸ்து ஒன்று மில்லை. ஆகையால் குணங்களிருக்க வெளியில் ஒரு வஸ்து வேண்டுவதில்லை. மனமே அவசியம். பொருள் இருக்கிறது என்பதற்கு நாம் அதை அனுபவிக்கிறோ மென்று தான் அர்த்தம்.

 

அதாவது பார்க்ளீ வெளியுலகத்தையே அதாவசிய மாக்கி விட்டார். வேண்டியதெல்லாம் மனமும், மனத்தால் அநுபவிக்கப்படும் குணங்களுமே. உலக மிருக்கிறது என்பதற்கு உலகத்தைப் பார்க்க ஒரு ஜீவனிருக்கிறதென்று ஒரு பொருள். இப்போது நாம் தூங்கும் போது உலகமெங்கு போய் விடுகிறது? அதைப்பார்க்க ஜீவனில்லையே எனில் “நாம் பார்க்காவிட்டால் நம்மைப்போலுள்ள மற்ற ஜீவன்க ளிருக்கின்றனவே. ஒன்றாவது பார்த்துக்கொண்டிருக்கும். மேலும் உலகத்தின் ஒரு பகுதியில் மனிதர் தூங்கினாலும் இன்னொரு பகுதியிலுள்ளோர் விழித்திருக்கிறார்கள். உலகம் அவர்களால் உய்க்கப்படுகிறது.''

 

இதென்ன விந்தை! உலகம் மனிதனை அதாவது மனத்தையா நம்பியிருக்கிறது! அப்போது மனிதனுக்குத் தோன்றியவாறு ஒருலகத்தை நிர்மாணித்துக் கொள்ளக் கூடாதா? அப்படி நிர்மாணித்துக் கொள்ளின் நாம் ஒருவரோடொருவர் பேசுவது எங்ஙனம்? உலகம் கற்பனை யென்றால் உலகத்தின் அங்கங்களாகிய நாமும் கற்பனை யல்லவா? கற்பனை எப்படித் தன் வீட்டையே இடித்துக் கொள்ளலாம்? என்று சொல்லக்கூடும். அதற்கு பார்க்ளீ " இவ் விபரீத அர்த்தம் பொருந்தாது. ஜடப்பொருள் தனியே இருக்கமுடியாதென்று சொன்னது வாஸ்தவம். ஆனால் சித்த ஸ்வரூபமான ஜீவன்க ளிருக்கலாமென்பதில் தடையில்லை. ஏன்? அவையிருப்பது அவைகளுக்கே தெரியும். வேறொருவர் அவற்றை அறிய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஜீவன்கள் இஷ்டப்பிரகாரம் உலகத்தை நிர்மாணிக்காம லிருக்கும் பொருட்டே கடவுளென்னும் முழு சித் ஸ்வரூபமொன்று இருக்கிறது. இக் கடவுளே உலகத்தை அறிகிறார். ஆகையால் ஜனங்கள் விழித்திராமற் போனாலும் கடவுள் சதா உலகத்தை அனுபவிப்பதால் அது இருக்கிறது. மேலும் அவர் நம்முடைய மனங்களை நிர்மாணித்து இன்ன இன்ன குணங்கள் தோன்றவேண்டும் என்று திட்டஞ் செய்திருக்கிறார். இத் திட்டத்தை மீறுதல் முடியாது. மீறுவானேன்? கடவுளின் செய்கைகளைக் கேள்விக் குட்படுத்தலாமோ? இல்லை. கடவுளின் இருப்பைக் குறித்து தான் ருஜு கேட்க வேண்டுமா? கடவுளின் இருப்பையறிய உலகத்தை நோக்க வேண்டும். ஒரு மனிதன் இருக்கிறான் என்றால்என்ன அர்த்தம்? அவன் செய்யும் வேலைகள் இன்னவை யென்று கொள்வது - அதாவது அவன் செய்கைகளைக் கொண்டு அவன் இருக்கிறான் என்கிறோம். அதே மாதிரி உலகத்தின் அதிசயங்களைக் கண்ணுறும் மாந்தர் கடவுள் இருக்கிறார் என்பதைக் குறித்துக் கிஞ்சித்தும் சந்தேகமடையார்.

 

லாக்கின் தத்துவம் பிரத்தியக்ஷப் பிரமாணம். பார்க்ளீ பிரத்தியக்ஷத்தையும் மனத்தோடு இணைத்து மனமின்றி உலகில்லை யென்றார். பார்க்ளீக்குப் பின் வந்த ஹியூம் என்பவர் உலகம் மனம் இரண்டையுமே சந்தேகித்தார்.

 

பார்க்ளீ சொற்படி குணங்களே உண்மை. குணங்கள் தவிர வேறு ஜடப் பொருள் இல்லை. ஆனால் பார்க்ளீ உலக மிருப்பது கடவுளின் திட்ட மென்றார். திட்டம் என்பது என்ன? காரிய காரண சம்பந்தம். மொன்று இன்றிக் காரியம் ஒன்றும் நடைபெறாதென்று அவர் சொன்னார். கடவுள் காரணம், உலகம் காரியம் என்றார். அப்படியே நாமும் சில விஷயங்களைக் காரண காரிய சம்பந்தமாகக் கொள்கிறோம். இம்மாதிரி சம்பந்தத்தை ஊகித்தறிகிறோமா அல்லது கண் கூடாகக் காண்கிறோமா? ஊகிக்க முடியா தென்பது நிச்சயம். ஏனெனில், எந்த விஷயத்தை யறியவும் பிரத்தியக்ஷமாய்க் காண வேண்டும். ஆகையால் காரண காரிய சம்பந்தம் பிரத்தியக்ஷமாகக் கண்டாலொழிய வாஸ்தவமாகக் கொள்ளலாகாது. நாம் பார்ப்பது காரியம் - காரணம் - இரண்டு தனி விஷயங்கள். ஒன்றுக்கு முன் ஒன்று. ஒன்றோடொன்று இவ்வளவே. ஒன்றின் காரணம் இன்னொன்று என்று காண்பதில்லை. பகல் - இரவு மாறி மாறி வருகின்றன. ஆனால் இரவின் காரணம் பகல் எனலாமா? மின்னலும் இடியும் ஒன்றாக உண்டாகின்றன. ஒன்றின் காரணம் ஒன்று என்று சொல்வது எங்ஙனம்? ஆகையால் காரண காரியம் என்பது நம்முடைய வழக்கமே யொழிய பிரத்தியக்ஷமில்லை. பிரத்தியக்ஷமாகக் காணாத வஸ்துக்கள் நம்முடைய இருப்பு, கடவுளின் இருப்பு. ஆகையால் இவைகளையும் உண்மையாகக் கொள்ள முடியாது. இதைச் சற்று ஆராய்வோம். நம்மை எடுத்துக் கொள்வோம். நம்முடைய அனுபவங்கள் ஒன்றின் பின் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம்மைப் பற்றி நாம் அறிவது நம்முடைய அனுபவங்களே. நம்முடைய அனுபவங்களன்றி நமக்கு இருப்பில்லை. அந்தந்த க்ஷணத்தில் அனுபவிக்கும் அவஸ்தைகள் சேர்ந்து 'நாம்' என்று நினைக்கிறோம். ஆனால் இவ்வனுபவங்களை ஒருங்கே சேர்ப்பது தவறு. பிரத்தியக்ஷமாகக் காணுவதில்லை. அதை எப்படி ஒன்றாகக் கூட்டலாம்? இரவு படுத்து நித்திரை செய்கிறோம். காலையில் எழுந்தவுடன் நாம்தான் இரவு படுத்துக் கொண்டோமென்று எவ்வாறு அனுமானிக்கலாம்? கூடாது. நம்முடைய அனுபவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக உண்டாகின்றன. ஒன்றை ஒன்று உண்டாக்குவதில்லை. இதே மாதிரி, கடவுள் ஒரு திட்டமும் செய்யவில்லை. அவரைப் பிரத்தியக்ஷமாகக் காணாதவரையில் அவர்தான் உலகத்தை நிலைநிறுத்துகிறாரென்று எவ்வாறு கூறுவது?

 

ஒவ்வொருவரும் அறிவது அவரவர் மனத்தில் படும் அனுபவங்களையே யொழிய பொது உலகத்தையல்ல. பொது உலகந்தான் இருக்க முடியாதென்று ஏற்படுகிறதே. ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவங்களைத் திரட்டியெடுக்க முடியாதென்றும் தெரிகிறது. மேலும் ஒவ்வொருவனுடைய அனுபவமும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், ஒருவருக்குச் சரியென்தோன்றுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தோன்றும்.

 

இவைகளிலிருந்து என்ன தீர்மானத்திற்கு வரவேண்டி யிருக்கிறது? நாம் ஒன்றையும் அறியமுடியாது. அறிந்தாலும் சரியா தப்பா வென்று பரிசோதிக்க முடியாது. அப்படிப் பரிசோதிக்க 'நாம்' என்று ஒரு பொருள் இல்லை. கடவுளுமில்லை: என்னமோ மனிதன், என்னமோ உலகம், என்னமோ அனுபவம் என்றார் ஹியூம்.

 

லாக் உலகம் மனம் இரண்டும் மெய்; உலகமின்றி மனத்திற்கு ஞானமுண்டாகா தென்றார். அதாவது அவருக்கு உலகம் பிரதானம். பார்க்ளீக்கு மனமே பிரதானமாய்த் தோன்றிற்று. மனமின்றி வஸ்துக்கள் இருக்க முடியாது தான். ஆனால் மனத்தினுள்ளேயே இருக்கும் எண்ணங்கள் அனுபவங்களாகிய இவையே உண்மை. ஆனால் இவ்வனுபவங்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்படாமல் நிற்கின்றன. இவற்றினின்றும் என்ன ஞான முண்டாகப் போகிறது? ஒன்றையுமே அறிய முடியாது! உவமையாக லாக் உலகத்தைக் கட்டினார், பார்க்ளீ மனத்தைப் பலப்படுத்தினார், ஹியூம் இரண்டையும் இடித்துத் தள்ளி மனிதனுக்கு ஒன்றும் அறிய முடியாதென்று தீர்மானித்தார்.

 

மேனாட்டுத் தத்துவம் இத்தனை தூரம் சென்ற பின் மறுபடியும் தன்நிலையை அடைந்தது. இம்மானுவெல் கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவஞானியின் விசேஷ தத்துவத்தை இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். தினந்தோறும் ஒவ்வொரு வேலையையும் குறித்த நேரத்தில் தவறாது செய்து முடித்து விடுவார். காலையில் எழுந்திருப்பது, உண்பது, படிப்பது, உலாவப்போவது எல்லாம் ஒவ்வொரு நேரத்தில் செய்து முடிப்பார். இவர் சாயங்காலம் நாலரை மணிக்குத் தவறாது உலாவப் போவதைப் பார்த்து அவ்வூர் ஜனங்கள், இவர் கிளம்பினவுடன் மணி நாலரை ஆயிற்றென்று கடிகாரங்களைத் திருப்பிக் கொள்வார்களாம்! உருவத்தில் இவர் சர்வ சாதாரணமா யிருப்பினும், இவருடைய தத்துவத்தின் விசேஷத்தை அளவிட முடியாது. இதை இன்னொரு கட்டுரையில் ஆராய்வோம்.

 

ஹியூம் என்பவர் உலகத்தையும் அனுபவத்தையும் சின்னாபின்னப்படுத்தி விட்டார். ஞானமென்பதே முடியாத விஷயம். நாம் பார்ப்பது, கேட்பது முதலியன தனித்தனி அங்கங்கள். ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமல் அவ்வப்போது உதிப்பது. உடனே மறைந்து விடுநமது அனுபவம் விறகுக் கட்டைகள் போல் கட்டப்பட்டதே தவிர ஒற்றுமையுள்ள தில்லை என்று அவர் கருதினார்.

 

கான்ட் என்பவர் ஹியூம் சொல்வது வாஸ்தவந்தான் என்றார். அனுபவம் நாம் கண்களால், செவிகளால், ஸ்பரிசத்தால், மோப்பத்தால் அல்லதுநாக்கினால் அடையக்கூடுமே யவ்லாது வேறு வழியில் பெற முடியாது. ஒவ்வொரு தோற்றமும், ஒவ்வொரு ஒலியும், ஒவ்வொரு வஸ்துவும், ஒவ்வொரு வாசனையும், ரஸமும் தனிப்பொருளே யல்லாது சம்பந்தமுள்ளதல்ல. ஆயனும் இந்தக் காரணத்தினாலேயே நமது அனுபவம் சம்பந்தமற்ற தெனச்சொல்லி விடலாமா? நான் எழுது கோலைப் பிடித்திருக்கிறேன். கையைக் காகிதத்தின் மேல் ஊன்றி சில சைகைகள் செய்கிறேன். சிறிது நேரத்தில் காகிதத்தின் மேல் எழுத்துக்கள் தோன்றுகின்றன. இங்கே மூன்று தனித் தோற்றங்கள் இருக்கின்றன. பேனாவைப் பற்றியிருப்பது. காகிதத்தின் மேல் கையை ஓட்டுவது. மூன்றாவது எழுத்துக்கள் இருப்பது. இம்மூன்றுக்கும் சம்பந்தமில்லையா? எழுத்து எப்படி வந்தது? நான் எழுதினதால். நான் எழுதுவது எழுத்துக்கள் தோன்றுவதோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

 

ஹியூம் இதை ஒத்துக் கொள்வார். இருக்கட்டும். இப்போது எழுதிய காகிதத்தை நான் பார்க்கிறேன். நான் எழுதவில்லை. எழுதியதையும் பார்க்கவில்லை. ஆயினும் எழுத்துக்களை யாராவது எழுதியிருக்க வேண்டுமென ஊஹித்துக் கொள்ளலா மல்லவா? ஹியூம் “இது தவறு. இன்னொருவன் எழுதியதை நீ பார்க்காத மட்டில் நீ எப்படி இன்னொருவன் எழுதியிருக்க வேண்டும் எனலாம்?'' என்பார். கான்ட் இதற்குச் சமாதானமாக “அதுதான் மனிதனின் வேலை. அனுபவமென்பது அவ்வப்போது ஆரம்பித்து முடிந்து போகும் விஷயமல்ல. ஒன்றை நன்றாய் அறிந்த பிறகு மறுபடியும் அதைப் பார்க்குமளவிலேயே தெரிந்து கொள்ளலாம். மனம் பெறும் அனுபவத்தைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்காமல் அதன் சாராம்சத்தைக் கிரஹித்து பின்னால் உண்டாகும் அனுபவத்தை யடைகிறது. ஒரு மனிதனைப் பார்க்கிறோம். அவன் நமது சினேகிதன் என்று தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை அன்னியனாகக் கருதிச் சினேகம் பிடிக்க எண்ணினோமானால் நமது ஆயுட்காலம் போதாது. இரவு படுத்துக் கொள்கிறோம். காலையில் எழுந்திருப்பது நாமில்லாமல் வேறு யாராவதாக மாறிவிட்டால் அப்புறம் உலகத்தில் வசிப்பதெப்படி? முதலாவது நாம் மாறிவிட்டோமென்பது எப்படித் தெரிகிறது. வாஸ்தவமாக மாறிவிட்டிருந்தால் நாம் மாறியதை அறிந்திருக்க முடியாது. நேற்றைய ஞாபகம் கொஞ்சமேனு மிருந்தால் தான் வித்தியாசம் வெளிப்படையாகும். ஆகவே மாறுவதாகயிருந்தாலும் நமக்கும் நேற்று நாமாக இருந்த மனிதனுக்கும் அவசியம் சம்பந்தமிருத்தல் வேண்டும். அதாவது அனுபவம் மாறிக் கொண்டே யிருந்தாலும், சில விஷயங்கள் மாறாமலிருக்கின்றன. இம்மாறா விஷயங்கள் கண்களுக்குப் புலப்படாமலிருந்தாலும் அவை இருக்கின்றன வென்பதில் சந்தேகமில்லை. இவை இருக்கின்றன வென்றால் ஆகிருதி கொண்டு எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கின்றனவென்று அர்த்தமில்லை. இருப்பு என்றால் உருவத்தோடு இருப்பென்பது தப்பு தத்துவம். உருவத்தோடு இருக்கும் பொருள்களையே நாம் அறியக்கூடும். ஆயினும் அனுபவத்தில் மனம் உருவமற்ற அழிவில்லாத, நிரந்தர உண்மைகளைஊஹித்தறிகிறது. ஒரு மனிதன் நுனி மரத்தினின்றும் அடி மரத்தை வெட்டுகிறான். நாம் அவனை ''அடே, முட்டாள்! கீழே விழுவாய்!'' என்கிறோம். ஏன்? முன்னொரு முறை அவன் விழுந்ததை நாம் பார்த்திருக்கிறோமா? அல்லது நாம் அவ்வாறு செய்து விழுந்திருக்கிறோமா? அன்று. சில விஷயங்களிலிருந்து நாம் பொதுவாக இது போன்ற காரியங்களைச் செய்தால் இப்படி யிப்படி யாகுமென ஊஹித்தறிகிறோம். இதைக் கொண்டே நாம் புத்திமதி சொல்ல இயல்கிறது. ஏன்? இந்த மனிதன் ஒரு கால் விழாமல் நுனி மரத்திலேயே நின்றிருந்தால்? அப்படியாகாது. இவன் விழுந்தே தீருவான்.

மனம் ஊகித்துக் கொள்ளும் சக்திவாய்ந்தது. ஊகிப்பா தெனில் கான்ட் மனம் அச்சுப் போன்ற சில சட்டங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறதெனலா மென்றார். மண்ணை எடுத்து உருவமாகச் செய்ய அச்சு தயாராய் வைப்பது போல் மனமானது அச்சு அல்லது சட்டமெனச் சொல்லக்கூடிய சில விதிகளை ஸ்தாபித்துக் கொள்கிறது. அனுபவமாகிய மண் இச்சட்டத்திற்குள் புகுந்து நமக்கு ஞானத்தைக் கொடுக்கிறது. ஹியூமைப் போல் கான்ட்டும் ஞானம் அனுபவத்தாலன்றி அடையமுடியாதென்று அறிந்தார். ஆனால் ஹியூம் அதோடு நின்றுவிட்டார். கான்ட் அனுபவத்தை மனம் புலன்களால் மாத்திரமல்ல ஊஹித்தும் அறிகிறதென்றார். மனம் ஞானத்தை அடைகிறது. இம்மனம் மாறுவதில்லையா? மனமும் மாறும். அனுபவ மதிகமாக அதிகமாக மனம் மாறித்தான் ஆகும். ஆயினும் மாறுதலிலும் நித்தியத்துவ மிருக்க வேண்டு மெனக் கூறப்பட்டது. இந் நித்தியத்துவம் யாருடைய அம்சம்? 'நான்' என்று நம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்கிறோமே அதுவே நித்தியம். 'நான்' என்றும் சாஸ்வதம். எவ்வளவு மாறுதலிருந்த போதிலும் 'நான்' இருக்கும். நானும் என்னைப் போன்ற ஏனைய மனங்களும் ஒரே உலகத்தை யறிவதால் எல்லா மனங்களும் ஒரே மாதிரியா யிருக்கின்றன. எனக்கு உண்மையானது வேறொருவனுக்குப் பொய்யாயிராது. அப்படியிருப்பின் இருவரில் ஒருவர் அபிப்பிராயம் தவறாக இருக்கவேண்டும்.

 

இன்னொன்று. நாம் அனுபவிக்கும் உலகம் அநித்தியமானது. கண்ணை விழித்து இமை கொட்டுவதற்குள் மாறிவிடுகிறது. சென்ற க்ஷணத்திற்கு இப்போது நான் சிறிது மாறி விட்டேன். இந்த சாஸ்வதமற்ற உலகமா நமக்கு உண்மை ஞானந் தரக்கூடியது? கான்ட்' இல்லை' யென்றார். இந்த உலகம் தோற்றம், மாயை என்று அவர் அபிப்பிராயப்பட்டார். நாம் காணமுடியாத சாஸ்வத உலகமொன்று இருக்கிறது. அதன் உருவமே நாம் அனுபவத்தில் காண்கிறோம்: அந்த உலகத்தை நாம் பார்க்கவே முடியாது, நம்முடைய கண்கள் சூரியனைக் காணமுடியாதல்லவா? அதுபோல் அந்த உலகத்தைப் பார்த்தால் நமது மனம் கூசும். ஆகையால் நமது அவயவங்கள் கிரஹிக்கக் கூடியபடி ஒரு தோற்றமிருக்கிறது. இதுவே நம்முடைய உலகம். அதற்கு அவர் பெனாமினான் (Phenomenon) என்றும், நித்தியமான உலகத்திற்கு நூமினான் (Noumenon) என்றும் பெயரிட்டார்.

 

சாதாரணமாக நாம் கடவுள் ஒருவர் இருக்கிறாரென நினைக்கிறோம். இதற்கு ஆதரம் என்ன? நாம் அவரைக் கண்ணால் பார்க்கிறோமா? அவர் பேசுவதைக் கேட்கிறோமா? இல்லை. நமது அனுபவம் தோற்றத்தாலல்லவா ஏற்படுகிறது. இத்தோற்றத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அவ்விஷயமே யில்லையெனச் சொல்வது தவறாகாது. ஆகவே கடவுள் இல்லையெனில் பொருந்தும். கான்ட் இப்படியே சொல்கிறார். கடவுளை நிரூபிக்க மனத்தால் முடியாது. ஆனால் இத்தனை பேர் மனதில் கடவுள் என்ற எண்ணம் குடி கொண்டிருக்கிறதே. அதன் காரணமென்ன? இது என்ன பித்தமா? அன்று. மனம் மனம் கடவுளை யோசனையால் நிரூபிக்க முடியாததால் யோசனை இன்னொன்று இருக்க வேண்டு மென்று ஏற்படுகிறது. இது நம்பிக்கை கடவுள் இருக்கிறாரென்று நாம் நம்புகிறோம். கான்ட் இதைப் புது மாதிரியாக நிரூபிக்கிறார்.

 

உலகத்தில் மிகப்பெரிய மிக அரிய வஸ்து எது? நல்ல மனம். நல்ல மனமென்றால் என்ன? சுயநலமே கிஞ்சித்தும் பாராட்டாத மனமே நல்ல மனம். ஒருவன் பெரிய பணக்காரன் 'தன்னுடைய பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கிறான். இது நல்ல மனமாகுமா? ஆகாது. பரம ஏழையாயிருக்கிறான். இரவு மெங்கோகயெனத் தெரியாது. கட்டுச்சாதம் கையில் வைத்திருக்கும் போது இன்னொருவன் கேட்கக், கொடுத்து விடுகிறான். இதுவே நல்ல மனம் அப்படித்தான் கொடுக்கச் சக்தியில்லை. கொடுக்க வேண்டுமென எண்ணமிருந்தாலும் போதும். அதுவும் நல்ல மனமே. ஒரு மனிதன் சதா பிணியால் வருந்துகிறான். அவனுக்கு நடக்கவும் சக்தியில்லை. அவன் கண்ணெதிரே ஒரு குழந்தை குளத்தில் விழுந்து விடுகிறது. அதை எடுக்கப் போக முடியவில்லை. இருப்பினும் அதை எடுக்க வேண்டுமென எண்ணம் கொண்டதே நல்ல மனத்திற்கு அறிகுறி. இந்த நல்ல மனம் ஸ்வயமாகப் பிரகாசிக்கும் ரத்னத்தைப் போன்றது. ஏன்? ஒரு தூண்டு கோலுமில்லாமல் தானாகவே ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறது. ஒரு வியாபாரி சாமான்களை நியாயமாகவே விற்கிறான், பெரியவனாயினும் சரி குழந்தையாயினும் சரி எல்லோருக்கும் ஒரேமாதிரி சரக்குகளைக் கொடுக்கிறான். ஆயினும் இவனுக்கு நல்ல மனதென்று சொல்ல முடியாது. ஒருகால் இப்படிச் செய்தால்தான் வியாபாரம் சீராக நடக்குமென எண்ணியிருந்தாலோ? அவன் யதார்த்தமாகவே லாபம்வரினும் நஷ்டம்வரினும் நியாயத்திற்குக் கட்டுப்படவேண்டும் என்று உள் மனதோடு செய்தால் தான் நல்ல மனதுடையவனெனலாம்.

 

இப்படிப்பட்ட ஸ்வயம்பிரகாசமான நல்ல மனம் வேறொன்றிற்கும் கட்டுப்பட்டதல்ல. தானே சில விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடப்பதால் அதற்குப் பரிபூர்ண சுயராஜ்ய மிருக்கிறது. கான்டின் தத்துவத்தில் முக்கியமான பதம் ‘கடமை.' இக்கடமை வேறொருவர் கட்டாயத்திற்காக இல்லை. மனம் தன்னுடைய ஆட்சிக்கே கட்டுப்பட்டுத் தான் சரியாக நடக்கவேண்டுமெனத் தானே ஒருவர் ஏவலின்றி ஒரு காரணத்தை உத்தேசித்ததாக இல்லாமல் அறிந்து கடமைகளை விதித்துக் கொண்டு அதன்படி நடக்கிறது. இப்படிப்பட்ட நல்ல மனம் இந்த அநித்திய உலகவாசியாக இருக்கக்கூடுமா? முடியாது. அது அந்த சாஸ்வத உலகத்தின் வாசியே. இது ஒரு மனம் மாத்திரமல்ல. அனேக மனங்கள் அங்கிருக்கின்றன. ஒவ்வொன்றும் தன்னுடைய ஆட்சிக்கே கட்டுப் பட்டது. ஆயினும் கடமை ஒரேவிதமானதால் எல்லா மனங்களும் ஒருவிதத்தில் இந்தக் கடமைக்கு அடிமைகள் எனலாம். இந்த திவ்ய உலகத்தைச் சரிவர நடத்தக் கடவுளிருக்க வேண்டும். கடவுள் சித்ஸ்வரூபி. அவருக்கு இந்த மாய உலகில் சம்பந்தங் கிடையாது. மனிதராகிய நாம் இரு வுலகங்களிலும் சம்பந்தமடைந்திருக்கிறோம். அவர் அப்படியன்று. ஆகையால் இவ்வுலகத்தின் விஷயங்களைக் கொண்டு அவர் இருக்கிறாரென்றாவது இல்லையென்றாவது ரூபிக்கக்கூடாது. சில ரஸாயன நிபுணர்கள் இவ்வுலகத்தின் அதாவது இயற்கைப் பொருள்களைக் கொண்டே விஷயங்களின் தாத்பரியத்தை அறியலாமென்றும் கடவுள் அவசியமில்லை யென்றும் வாதிக்கிறார்கள். கான்ட் இவ்வாதம் சுத்த தவறு என்றார்.

 

கான்ட் நாம் காணும் உலகம் வேறு உலகத்தின் தோற்றம் என்றார். அத் திவ்ய உலகம் நம்மால் காண முடியாதது. ஆபினும் அதுதான் உண்மை ஞானம் தரக்கூடியது. இந்த ஞானத்தை கிரஹிக்க நமது மனத்திற்குச் சக்தி யிருக்கிறது. ஆனால் நமது சிந்தனையும் அவ்வுலகமும் வேறன்று. நமது மனத்தில் உதிக்கும் எண்ணங்கள் அவ்வுலகத்தைப்பற்றியளவே. ஆகையால் நமது எண்ணம் தான் அந்த உலகமும் என்றுகூடச் சொல்லலாம். நமது எண்ணம் என்பது என்ன? நம்முடைய அனுபவம்
தான். நமது அனுபவத்தில் தோன்றாதது நமக்குத் தெரியாது, நம்மால் அறிய முடியாது. நாம் கேள்விப்படாததைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? நாம் பார்க்காததைக் குறித்து நமக்கு அபிப்பிராய மென்ன விருக்கும்? தத்துவ ஆராய்ச்சியின் நோக்கம், எண்ணம் அனுபவத்தை ஒத்திருக்கிறதா, அனுபவம் பூர்ண (குறைவற்ற) அனுபவந்தானா வென்பதைக் கண்டு பிடிப்பது தான்.

 

எண்ணம் என்பது ஒரு மனதினுடைய குணாதிசயம். ஆனால் மனம் என்றால் ஒரு குறித்த மனி, தனுடைய மனமல்ல. ஏன்? ஒருவனுடையதாயின் அவன் நினைத்தபடி எண்ணுவான். உலகத்தை நினைத்தபடி நிர்மாணித்துக் கொள்வான். இதைத் தடுக்கவே, கான்ட் உண்மை உலகம் ஒன்று, நமது புலன்களுக்குத் தோன்றும் உலகமொன்று என்று யோசித்தார்.

 

கான்டிற்குப் பின்வந்த பிஷ்டெ (Fichte) என்பவர், இரண்டு உலகங்களில்லை, ஒன்று தான். அவ்வுலகத்தை அறிவது நமது மனம் அதாவது 'அஹம்' (Ego) என்று சொல்லப்படும் 'நான்' என்றார். இந்த 'அஹம்' தனி மனிதனல்ல. மனிதன் என்றால் 'அஹம்' என்று பொருள். இவ்வஹம் உலகத்தைச் சிருஷ்டிக்கிறது. தனக் கிஷ்டம்போலவா? அன்று, அன்று. 'அஹம்' என்பது சாக்ஷாத் 'சித்'. இச் 'சித்' யாதென பிஷ்டெ தெளிவாகச் சொல்லவில்லை. இதையே கடவு ளெனலாம். எதற்காக உலகத்தைச் சிருஷ்டிக்கிறது? தன்னை அடக்கிக் கொள்ளவே. அதாவது தனக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாவிட்டால் தன்னிஷ்டப்படி யோசிக்கத் தோன்று மென்று ஒருலகத்தைத் தானே நிர்மாணித்துக் கொள்கிறது. செய்துகொண்டு அதை ஆராய்ந்து அறிகிறது. அறிந்து தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறது. மனிதன் சிலகர்மாக்களை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறான். இவைகளைச் சரிவரச் செய்து முடிக்க, மனம் (அஹம்) உண்டாக்கும் உலகமே சாதனம்.

 

பிஷ்டெக்குப் பின் ஷெல்லிங்கு (Schelling) என்பவர் அவருடைய தத்துவத்தைப் பரவச் செய்தார். ஆனால் அப்படிச் செய்வதில் இவர், உலகத்தை மனம் செய்வதாயும், மனம், உலகத்தின் ஓரரிய பொருளாகவும் எடுத்துக்கொண்டார். இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படுகின்றன. மனம் உலகத்தைச் சிருஷ்டித் திருந்தால், எப்படி உலகத்தின் அம்சமாக விருப்பது ஆகையால் ஷெல்லிங்கு உலகமும் மனமும் கடவுளின் அம்சங்களெனத் தீர்மானித்தார்.

 

கான்டிற்குப் பின் வந்த முக்கிய தத்துவ ஞானி ஹேகல் (Hegel) என்பவர். இவரது தத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டு இன்றைக்கும் அனேகர் ஆராய்ச்சி செய்கின்றனர். இவருடைய முக்கிய கருத்து வளர்ச்சி' என்று சுருக்கமாய்ச் சொல்லலாம். 'பாகற்காய் நட சுரைக்காய் முளைக்காது.' இரண்டாவது நம்முடைய சகவாசம் எப்படியோ அப்படியே நம்முடைய குணாதிசயமும். ஒரு மனிதன் நல்லவன் கெட்டவன் என்பது அவன் வாசம் செய்யும் ஸ்தலத்தையும் அவனுடைய சாதாரண சினேகிதர்களையும் பொருந்திருக்கிறது. ஏனெனில், இவையெல்லாம் அவனுடைய உண்யை ஸ்வரூபத்தை விளக்குகின்றது. மனம் உலகத்தைச் சிருஷ்டி செய்வதில்லை, மென்பது ஒன்று. தனியாக இல்லை. நம்முடைய அனுபவமே உலகம். ஆனால் அனுபவம் வளர்ந்து கொண்டே யிருக்கிறதே! ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அனுபவமில்லை. ஏதோ காற்று வீசுகிறது. உடனே அதன் தேகம் கூசுகிறது. பசி யெடுக்கிக்கிறது. உடனே அழுகிறது. அழுதார். ஆகாரம் கொடுக்கிறார்கள். அதன் அனுபவமெல்லாம் இவ்வளவே. சில மாதங்கள் சென்றதும் அதற்குச் சில புதிய விஷயங்கள் தெரிகின்றன. அதாவது அதன் அனுபவம் அதிகமாயிற்று. சில வருஷங்களான பின் இன்னும் அனேக விஷயங்கள் தெரிகின்றன. அனுபவம் மறுபடியும் விஸ்தாரமாயிற்று. அனுபவம் முதலில் உண்டாகிறதே அதை வைத்துக்கொண்டே புதிய அனுபவத்தை நிர்ணயிக்கிறோம். உதாரணமாக பால் வெண்மையா யிருப்பதை ஒரு குழந்கை பார்க்கிறது. சரி, வெண்மையான வஸ்துக்களெல்லாம் பால் என்று ஒரு சம்பிரதாயம் வைத்துக் கொள்கிறது. சில தினங்கள் சென்று வீட்டிற் சுண்ணாம்பு பூசக்
பூசக் கொண்டு வந்தார்களானால், இதென்ன, சுவரில் பாலைப் பூசுகிறார்களே யென யோசிக்கிறது. யாராவது உண்மையை வெளியிட்ட பின், வெளுத்ததெல்லாம் பாலல்ல வென்பது அதற்குத் தெரிகிறது. இப்படியே அனுபவம் வளர்கிறது. புதிய அனுபவம் உண்டாகும்போது நாம் அதை நமது பழைய அனுபவத்தோடு ஒத்திட்டுப் பார்க்கிறோம், சரியாகவிருந்தால் அதை கிரஹித்துக் கொள்கிறோம். இல்லையேல் தள்ளிவிடுகிறோம். இல்லை புதிய அனுபவமே உண்மை யென்று திட்டமாகத் தெரிந்து விட்டால், நமது பழைய அனுபவத்தையே மாற்றிக்கொள்ளுகிறோம். உதாரணமாக, ஒரு மனிதன் வெகு நல்லவனென்று இதுவரையில் நமக்குள்ள அனுபவத்தில் தெரியவருகிறது. அவன் ஒரு தீய தொழிலைச் செய்துவிட்டானென்று கேள்விப்பட்டால் நாம் ''சே, அவன் அப்படிச் செய்பவனல்லன்'' என்று யோசிக்கிறோம். அதாவது இப் புதிய அனுபவம் முன்னனுபவத்தோடு முரண்படுவதால் புதிய அனுபவத்தைத் தள்ளிவிடுகிறோம். ஆனால், நாமே
கண்கூடாக, இம்மனிதன் தீய செய்கையைப் பார்த்து விட்டிருந்தோமானால் அப்போதென்ன? நாம் முன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்கிறோம். உலகமென்பது ஒரு படக்காட்சி போன்றது. அது நமக்குத் தோன்றிக் கொண்டே போகிறது. நாம் அதைக் கிரஹிக்க வேண்டும். கிரஹிப்பதென்றால் தனித்தனியாகப் பிட்டு, ஒன்றோடொன்று சம்பந்தமில்லாமல் கிரஹிப்பதல்ல. எல்லாவற்றையும் ஒன்றாய்த் திரட்டி ஒருங்கே கிரஹிப்பது. நமக்கிருக்கும் அனுபவம் சிறிதாயினும் மகத்தாயினும் அதை ஒழுங்கு படுத்தவேண்டும். இதுவே மனத்தின் முக்கிய தொழில். ஏனெனில் முழுப்பொருளுக்கே அர்த்தமுண்டு. ஒரு கடிகாரத்தை எடுத்துக் கொள்வோம். கடிகாரம் என்பது முகம், எண்கள், இருகைகள், முட்கள், சக்கரங்கள் எல்லாம் சேர்ந்தவையாயினும், ஒவ்வொரு பாகமும் தன்னுடைய ஸ்தானத்திலிருந்தாற்றான் அர்த்தமுண்டு. அம் முழுப்பொருள் அப்போது தான் கடிகாரம் என்று பெயர் பெறும். ஆனால் கடிகாரம் மாத்திரம் தனியாக கருதப்படாது. கடிகாரத்தை உபயோகப்படுத்தும் மனிதனல்லால், அது எதற்குப் பிரயோஜனம்? ஆகையால் பெரிய உலகத்தில் கடிகாரம் ஓரம்சந்தான். இப்படியாக வஸ்துக்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட் டிருப்பதை அறிவதே ஞானம்.

 

ஞான மெப்படி உண்டாகிற தென்று மேலே சொல்லப்பட்ட ஏற்கனவே ஏற்பட்ட அனுபவமே அளக்கும் கருவி. புதிய அனுபவமே அளக்கப்படும் வஸ்து. அளவு சரியாயில்லாவிட்டால் தள்ளிவிடுகிறோம், சரியாயிருந்தால் ஸ்வீகரிக்கிறோம். ஹேகல் வித்தைகள் எல்லாவற்றையும் இம்மாதிரி மூன்றாகப் பிரித்து, ஒன்றை விட ஒன்று மேலான அனுபவத்தைக் குறிக்கிறதென்று சொல்லியிருக்கிறார்.

 

அன்பர்களே! இவருடைய தத்துவத்தை மேலே சொல்லப்புகின் வெகுசிரமமாக விருக்கும். இவர் தத்துவம் அவ்வளவு நுட்பமானது. ஹேகலுக்குப் பிறகு எத்தனையோ பெரிய தத்துவ ஞானிகள் இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய தத்துவங்களைச் சுருக்கமாகச் சொல்வது முடியாத காரியம். இவர்களில் சிலர் கான்டையும் சிலர் ஹோலையும் பின் பற்றி யிருககிறார்கள். ஆனால் இருதிறத்தாரும் தற்காலம் மேன்மேலும் ரஸாயன சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டு மேலே யோசிக்கிறார்கள். இவ்வரிய தத்துவக்களைத் தற்சமயம் ஆராய்ந்து அவற்றின் சாராம்சத்தை எடுத்துரைக்க சாவகாசமில்லை. ஆயினும் சீக்கிரத்தில் அவகாசம் ஏற்படும் என்ற நம்பிக்கையினால் மேனாட்டுத் தத்துவத்தை ஹேகல் பெருமானோடு நிறுத்தலாமென்று யோசிக்கிறேன். ஈஸ்வரன் இதற்குக் கருணை புரிவா னெனப் பிரார்த்திக்கின்றேன். மேனாட்டுத் தத்துவத்தை முழுவதும் எடுத்துச் சொல்வது என்போன்றார்க்கு வெகுசிரமம். ஆயினும் தமிழ்நாட்டு மக்களுக்கு மேனாட்டு அரிய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்றே அரைகுறையாகவாவது எடுத்துச் சொல்லத் துணிந்தேன். பிழைகள் இருப்பினும் க்ஷமித்துக் கொள்ளும்படி அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

முற்றிற்று.

 

ஆனந்த போதினி – 1931, 1932 ௵ -

ஜுலை, ஆகஸ்ட்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, ௴

 

 

 

 

No comments:

Post a Comment