Sunday, September 6, 2020

 

மைசூர் மன்னர்களும்

வீர சைவமும்

(K. V. சிவசுப்பிரமணியன், B. A.)

மைசூர் ராஜ்பத்தை உடையார் பரம்பரையினர் ஆட்சி புரிய ஆரம்பித்த காலத்தில் கன்னட நாட்டில் வீரசைவமதம் எத்துணைச் சிறப்புடன் விளங்கியது என்பது பற்றிய சில சரித்திரக் குறிப்புகளைக் கீழே ஆராய்வோம்.

      கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17-ஆம் நூற்றாண்டிலும் சங்கம சமயமெனப்படும் வீர சைவ சமயமானது சீருஞ் சிறப்பு முற்று விளங்கியது. விரூபாட்ச பண்டிதர் என்னும் பெரியாரியற்றிய சென்ன வசவ புராணம் அஞ்ஞான்று வீரசைவ சமயம் அந்நாட்டி லெந்நிலையிலிருந்த தென்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. விஜயநகர மன்னருள் ஒருவராகிய சதாசிவராயர் காலத்தில் நடந்த "தலைக்கோட்டை யுத்தம்" (1565-ம் ஆண்டு) இந்துதேச சரித்திரத்தில் முக்கியமானதோர் நிகழ்ச்சியாகும். அத்தகைய யுத்த நிகழ்ச்சிக் காலத்தில் வீரசைவ மதம் சீர்கேடுற்றிருந்த தென்றும், கி. பி. 1584-ம் ஆண்டில் வீரவசந்த பூபாலன் என்னுமாசன் தென் கன்னட நாட்டில் காவிரிக்கரையில் பசவபட்டினம் என்பதைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிய ஆரம்பித்தபின் இச் சமயமானது மிக உன்னத நிலையை எய்திய தென்றும் மேலே குறிப்பிட்ட சென்ன வசவபுராணம் கூறுகின்றது. பட்டினத்திலும் அதைச் சார்ந்த பிரதேசங்களிலும் வீரசைவ சித்தாந்தத் தையும் வசவ தேவரது கொள்கைகளையும் பரப்புவான் வேண்டி அம்மன்னன் காலத்தில் பல மடங்களும் ஆலயங்களும் கட்டப்பெற்றன. அம்மடங்களில் வீற்றிருந்த தலைவர்கள் சிவனது பெருமையையும் வீரசைவ நெறிகளையும் பற்றி ஆங்காங்கே பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டனர். வீர வசந்தன் காலத்தி லேற்பட்ட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்நிகழ்ச்சிகளை வலியுறுத்துகின்றன.

      பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலெழுந்த கருநட நாட்டுக் குறுநில மன்னர்கள் வீரசைவ மாஹேஸ்வரர்களால் வீரசைவ சித்தாந்தத்தை உபதேசிக்கப்பெற்று "உடையார்'' என்னும் பரம்பரைப் பட்டமும் கொண்டு சைவநெறி நின்றொழுகுவாராயினர். “உடையார்'' எனும் சொல் ''சீமான்" (Lord) என்று பொருள் படுமென்ப. அதற்கு முன்னரே வீரசைவ நெறியைப் பின்பற்றி பொழுகினவர்களாகிய மைசூர், உம்மத்துர், தலைக்காடு, அம்மா சாவடி முதலிய விடங்களில் அரசாண்டு வந்த சிற்றரசர்கள் நீண்ட காலமாக உடையார் என்றே வழங்கப்பட்டு வந்தனர்.

      விஜயநகரத்தில் பல வம்சத்தினர் அரசு புரிந்தனர். அவைகளுள் அரவீடு வம்சத்தைச் சேர்ந்த அரசர்களது ஆட்சிக்காலத்தில் வீரசைவ மதம் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. அவர்க ளாட்சியில் சீரங்கப் பட்டினத்தில் (இப்போது Seringapatam என வழங்குகின்றது) பெரும்பாலோர் வீர சைவர்களாகவே விளங்கினர். இந்த சந்தர்ப்பத்தில் முக்கிய மான சில கல்வெட்டுகளையும் இதர வரலாறுகளையும் கவனிப்போம்.

(1) விஜயநகரில் ஆட்சி புரிந்த இராமாயன் காலத்தில் கங்காதர தேவர் என்னும் கீர்த்தி வாய்ந்த மஹந்த்துக்கு (திருப்பதி போன்ற பெரிய தேவஸ்தானங்களுக்கு மஹந்த் என்று பெயர்) தொகணாம்பி என்னு மூரில் நன்செய் புன்செய் நிலங்களைத் தானம் செய்த காக 1576-ம் ஆண்டில் சாசனம் மூலம் அறிவித்தான். கங்காதரதேவர் மடாலயமும் வீரசைவ அன்ன தான சாலையும் நஞ்சன்கூடு பெரிய மடத்தின் ஆதிக்கத்திற் குட்பட்டது.

(2) வீரசைவ சங்கமர்களுக்கு அன்ன தானம் செய்வதற்காக சீவன சமுத்திரம் என்னுமிடத்சிலுள்ள வீர சைவாலயத்தில் இலிங்காயுத மடமொன்று கட்டுவதற்காக 1004-ம் ஆண்டில் திருமலைராயன் என்னும் மன்னனா லளிக்கப்பட்டதாகக் கல்வெட்டொன்று காணப்படுகிறது. திருமலைராயன் இராமராயனது தம்பி எனத் தெரிகிறது.

(3) வெங்கடபதிராயன் (Venkata I) என்னு மரசனது தண்டத் தலைவர்களுள் ஒருவன் 1605-ஆம் ஆண்டில் சாசன மொன்று வெட்டுவித்தான். அரகோதாரம் என்னும் நாட்டை ஆண்டுவந்த அவன் தனது குடும்ப தேவதையாகிய வீரேஸ்வரர் அல்லது வீரபத்திரருக்கு ஆராதனையின் பொருட்டு கொஞ்ச நிலத்தை தானமாக அளித்தான் என அச்சாசனம் குறிப்பிடுகின்றது.

(4) திருமலராயனால் மற்றொரு சாசனமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மழலவாடி எனும் நாகப் பிரதேசத்திலுள்ள சில நிலங்களை அன்ன தானி மல்லிகார்ஜுன தேவ மடாலயத்திற்கு உபயோகமாகும்படி சஞ்சராஜப் பட்டினத்திலுள்ள உருக்திரகணர் என்பவருக்கு திருமலைராயன் லட்சத்துத் தொண்ணூற்றாறாயிரம் சங்கம தேவதைகள் முன்னிலையில் தானமாக வழங்கினான் என ஒரு சாசனம் காணப்படுகிறது. அவன் காலத்துப் பிறிதோர் சாசனத்தால் சீரங்கப்பட்டண மடாதிபதியான இலிங்கண்ணா என்பவருக்கு ஒரு கிராமம் முழுதும் இனாமாக அளித்தானெனத் தெரிகிறது. நமது ஆராய்ச்சிக் செடுத்துக் கொண்ட கால எல்லையுள் வீர சைவமேயன்றி பிற மதங்களும் சிறப்புற்று விளங்கின வென்றும், அவையும் அரசாகளா லாதரிக்கப்பட்டனவென்றும், மக்களுள்ளே சமயப்பூசல்கள் நிகழ்ந்தில வென்றும் தெரிகிற இனி, 16-ஆம் 17-ம் நூற்றாண்டுகளில் கன்னட நாட்டிலிருந்த மன்னர்கள் ஒரு சிலரைப்பற்றித் தனித்தனியே ஆராய்வோம்: -

      கந்தர்வ நரசராஜ உடையார்:- (1638-59) இம் மன்னன் காலத்தில் எல்லா மதங்களும் சிறப்புற்றிருந்தன. தனது தலைநகரில் பசவேஸ்வரர் ஆலயமும் அதற்கு முன்புறம் அழகியதோர் சிங்கார மண்டபமும் கட்டப் பெற்றதாக 1642-ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற சாசனமொன்று கூறுகின்றது. 1648-ம் ஆண்டுக் கல்வெட்டின்படி பஸவேசர் தூணும் (பஸவ ஸ்தம்பம்) மண்டபமும் மட மும் கட்டப்பட்டதாக அறிகிறோம். பசவேசர் என்பார் திருநந்தி தேவரின் அவதாரமாய் இப்பூமியில் தோன்றி வீரசைவ சமயத்திடையே காணப்பட்ட போலி யொழுக்கங்களைத் தகர்த்தெறிந்த பெரியார். தேவராஜ உடையார் (1659-73):- இவனும் தன் தந்தையைப் போல் வீரசைவ சமயத்தில் பேரன்பு பூண்டவன் இவன் விரக்த மடமெனும் வீரசைவப் பள்ளியொன்று நிறுவினான். குனிகல் மடத்தைச் சேர்ந்த கக்கேரி தொண்டட்ட சித்தேஸ்வர சுவாமிகளுக்கும் கிட்டூர் எனுமிடத்திலுள்ள லிங்காயுது கம்பர மடத்திற்கும் நிலங்களைத் தானம் செய்தான்.

      சிக்க தேவராஜ உடையார் (1673-1704) இவனும் தனது மூதாதையர் களைப் போலவே வீரசைவப்பற்று மிக்கவனாய் விளங்கினான். 1763-ம் ஆண்டில் அவன் வெளியிட்ட சாசனம் ஹுல்லம் பள்ளியிலுள்ள மல்லிகார்ஜுன சுவாமிக்கு திருவிழா நடத்துவதற்காக ரேவணாராத்ய மடத்தலைவரான உருத்ர முனி தேவா ராத்யருக்கு 212-வராகன் பொன் தானமளித்ததாகக் கூறு கிரது. மல்லிகார்ஜுன சுவாமியை ஸ்ரீசைலத்திற்கு எழுந்தருளச் செய்வதற்கு அப்பொன் செலவு செய்யப்பட்டது. ஸ்ரீ சைலத்திற்கு யாத்திரை போய் வந்த பின் இம்மன்னன் மல்லிகார்ஜுனரது பிரசாதத்தைப் பெற்றான். அப்பிரசாதத்தின் மஹிமையால் தனது ராச்சியத்தில் கலகங்களும் புரட்சிகளும் ஏற்படாமல் அமைதியாக அரசாள முடிந்தது என்பது சிக்க தேவராஜனின் நம்பிக்கை. அவனது ஆட்சிக் காலத்தில், அழகு சிங்கார ஆரியர் என்ற வைணவ குருவின் தொடர்பாலும் உபதேசத்தினாலும் அவன் வைணவனாகிச் சில ஆண்டுகளில் உயிர் நீத்தனன்.

      இங்ஙனமாக 17-ம் நூற்றாண்டில் உடையார் குலமன்னர்கள் வீர சைவ ஆலயங்கட்கும் மடங்கட்கும் ஆக்கமளித்து வந்தனர். இன்றுங்கூட மாட்சிமை தங்கிய மைசூர் மன்னவர்கள் வீரசைவ சமயத்திற்குப் பேராதரவளித்து வருவது கண் கூடு.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment