Sunday, September 6, 2020

 மொழி நூற் புலவரும் முது மொழியும்

 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய அறிஞர் தமிழ் மொழியின் பல துறைகளையும் ஆராய்ந்து அறியத் தலைப்பட்டார்கள். மொழி நூல் முறையில் (Philology) தமிழ் மொழியை ஆராய்ந்து அதன் தனிப் பெருமையை உணர்த்தினார் சிலர். தமிழகத்தில் முற்காலத்தில் வழங்கிய வட்டெழுத்தின் வரலாற்றையும் பிற்காலத் தமிழ் எழுத்தின் வாலார்றையும் ஆராய்ந்து தமிழின் தொன்மையை விளக்கினார் சிலர். நெடுந்திரை ஆழிவாய்ப்பட்ட பழந்தமிழ் நாட்டின் பரப்பையும் சிறப்பையும் ஆராய்ந்து அறிவித்தார் சிலர். கல்லிலும் செம்பிலும் அமைந்த சாசனங்களைக் கற்றும், மண்ணுள் மூழ்கி மறைந்த பழம்பொருள்களை அகழ்ந்தெடுத்தும் தமிழகத்தின் பழைய வரலாற்றை அறியமுயன்றார் சிலர். தமிழ் மொழியிலமைந்தவிழுமிய அற நூல்களை மேலை நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்தமைத்தார் சிலர்.

 

இவ்வறிஞர் வரலாற்றை அறிவதன் முன்னமே, அக்காலத்தில் தமிழ் இருந்த நிலையினை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். தொன்று தொட்டு இந்நாட்டில் வழங்கிவரும் தமிழ் மொழியை ஆதிசிவன் தோற்றுவித்தான் என்று ஆன்றோர் கூறி மகிழ்ந்தார்கள். முத்தமிழ் முனிவராய அகத்தியர், இறைவன் அருள் பெற்று மூன்று கவடாய் முளைத்தெழுந்த முதுமொழிக்கோர் விரிந்த இலக்கணம் அருளிப் போந்தார். அம்முனிவரது நன் மாணவராகக் கருதப்படும் தொல்காப்பியனார், தொல்காப்பியம் என்னும் பெயரால் ஓர் சிறந்த இலக்கணம் செய்தருளினார். அகத்தியமும் தொல்காப்பியமும் தமிழ் மொழியில் எழுந்த காலத்து, ஆரிய மொழி பெரும்பாலும் பாரத நாட்டின் வடபால் அமைந்த நிலங்களிற் பரவி நின்றது. வடநாட்டில் வழங்கியமொழியை வடமொழி யென்றும் தென் நாட்டில் வழங்கிய மொழியைத் தென்மொழி யென்றும், அழைத்தார்கள். வட மொழியையும் தென் மொழியையும் அக்காலத்து அறிஞர் இருவேறு தனிமொழிகளாகக் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. தென்மொழி போலவே வடமொழியும் தொன்மை சான்ற மொழியென்றும், செம்மை சான்ற மொழி யென்றும் கருதுவாராயினர். வடமொழியைப் பாணினி முனிவற்கு வகுத்தருளிய இறைவனே, தென் மொழியைக் குறுமுனிக்கு அறிவுறுத்தார் என்று கூறியமைந்தார்கள். தமிழ்மொழியில் ஒப்புயர்வற்ற நூலாய் விளங்கும் திருக்குறளைத் தமிழ் மறையென்றும், பொது மறையென்றும் போற்றினார்கள். இப்பொது மறையைப் புகழப்
போந்த புலவரொருவர்,

 

“ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது

சீரி தெனவொன்றைச் செப்பரித்தால் – ஆரியம்

வேதமுடைத்து தமிழ் திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து."


என்று புகழ்ந் துரைத்துப் போந்தார். செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே என்று மற்றொரு புலவர் புகழ்ந்துரைத்தார். ஆகவே இருமொழியும் நிகர் என்னும் கொள்கையே சங்கத்துச் சான்றோர் கொள்கை என்பது இன்னோரன்ன மொழிகளால் இனிது விளங்கும். தமிழ் நாட்டிற் பரவிய சாக்கிய மதத்தையும் சமண மதத்தையும் வேரறுத்து மீண்டும் சிவநெறி பரப்பத் தோன்றிய சைவச் சான்றோரும், வைணவ நெறியை நிலை நிறுத்திய ஆழ்வார்களும், ஆரியத்தையும் அருந்தமிழையும் வேற்றுமையின்றிப் போற்றுவாராயினர். பண்ணார்ந்த பைந்தமிழிற் பாமாலை பாடிய இப்பெரியார், ''ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' என்று இறைவனைப் போற்றும் முறையே இதற்குப் போதிய சான்றாகும்.

 

இருமொழியையும் நிகரென்று கருதிய இப்பெரியார் காலத்திற்குப் பின், வடமொழி தெய்வமொழியென்னும் கருத்து மெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் நுழைவதாயிற்று வடமொழியில் அமைந்த இதிகாசங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. வான்மீக முனிவர் வடமொழியில் எழுதிய ஆதி காவியத்தைத் தமிழ் மொழியில் அமைக்கப் போந்த கல்வியிற் பெரிய கம்பர், "தேவபாடையின் இக்கதை செய்தவர்'' என்று முதனூல் செய்த முனிவரைப் புகழ்ந்துரைத்தார். வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி யென்பான் தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான் என்று வடமொழிக் கவிஞரை வாயாரப் புகழ்ந்துரைத்தார். வடமொழி தேவர் மொழியாதலால் விழுமிய மொழியென்றும், தமிழ்மொழி மக்கள் மொழியாதலால் தாழ்ந்த மொழியென்றும் கருதும் முறை மெல்ல மெல்ல எழுந்தது. டமொழியிலமைந்த புராண நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கப் புகுந்தார் சிலர். வட நூல் முடிபுகளுக்கிணங்க வலிந்தும் நலிந்தும் தமிழ் நூல்களுக்கு உரை செய்யத்தலைப்பட்டார் சிலர். நன்னூல் செய்த பவணந்தியாரும், சின்னூல் செய்த
குணவீரனாரும், வீரசோழிய மியற்றிய புத்தமித்திரனாரும் வடநூல் இலக்கணப் போக்கைத் தழுவி எழுதுவாராயினர். தமிழ் நாட்டிலமைந்த ஊர்ப்பெயர், மலைப் பெயர்களையும் வடமொழியிற் பெயர்த்து வழங்கத் தலைப்பட்டார் பலர். இவ்வாறாக வடமொழி உயர்ந்ததென்றும் தமிழ் மொழி தாழ்ந்ததென்றும் கற்றாரும் கல்லாரும் கருதினமையால், தமிழ் என்னும் சொல்லே வட மொழியின் சிதைவென்னும் கொள்கை தமிழ் நாட்டிற் பரவுவதாயிற்று. திராவிடம் என்னும் வடசொல்லே திராமிடம், திராமிளம், திரமிளம், தமிளம் தமிழ் ஆயிற்றென்று இலக்கண நூலோர் எடுத்துரைப்பாராயினர். தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுந்ததே என்று பிரயோக விவேகம் கூறுவதாயிற்று. தமிழ் தனிமொழி யன்று என்றும், வடமொழியே தமிழுக்குத் தாய்மொழி யென்றும் இலக்கணக் கொத்துரைத்த தேசிகர் எழுதுவாராயினர்.

“ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென்
அறையவும் நாணுவர் அறிவுடையோரே
வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக.”


என்று தமிழ் மொழியைத் தனிமொழி யென்று கருதும் கருதும் கொள்கையைத் தேசிகர் இழித்துரைத்தார். பிரயோக விவேகமும் இலக்கணக் கொத்தும் பதினேழாம் நூற்றாண்டில் எழுந்தனவாம்.

 

இத்தகைய கொள்கைகள் வேரூன்றி நின்ற தமிழ் நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேல் நாட்டின் ஒளி வீசுவதாயிற்று. காலையில் எழும் கதிரவன் போல், கால்டுவெல் என்னும் மொழி ஏற்புலவர் இந்நாட்டில் தோன்றினார். தென் தமிழ் நாடாய திருநெல்வேலியலமைந்த இடையன்குடி யென்னும் சிற்றூரைத் தம் இருப்பிடமாகக் கொண்ட இவ்வறிஞர், உலகவழக்கினும் நூல் வழக்கினும் அமைந்த அருந்தமிழ் மொழியை ஆர்வமுறப்பயின்றார். இவ்வாறு கால்டுவெல் தமிழ் மொழியைக் கற்றுவருங் காலத்து மலையாள மொழியை குந்தார்த்தார் என்னும் மேலை நாட்டறிஞர் மொழி நூல் முறையில் ஆராயத் தலைப்பட்டார். கர்நாடக நாட்டில் வழங்கிய கன்னட மொழியைக் கிட்டல் என்னும் கலைவாணர் கற்கத் தொடங்கினார். ஆந்திரமொழியை ஆர்டன் முதலிய மேலைநாட்டறிஞர் ஆராய முற்பட்டார். தமிழ் மொழியின் ஆழத்தையும் அகலத்தையும் ஆராய்ந்தறிந்த கார்டுவெல்லாசிரியர், நாற்றிசையினின்றும் நல்லொளி வீசக் கண்டு மகிழ்ந்தார். தமிழோடு மிகுந்த தொடர்புடைய மலையாள மொழியை முட்டறுத்துக் கற்ற குந்தார்த்தர் என்னும் மொழிநூற் புலவர், மலையாள இலக்கணமும், மலையாள அகராதியும் எழுதிப் போந்தார். கன்னட மொழியை நிலைகண்டுணர்ந்த கிட்டல் என்னும் கலைவாணர் தாம் ஆராய்ந்தறிந்த உண்மைகளை அரிய கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார். ஆந்திர மொழியை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்த ஆர்டன் என்னும் ஆசிரியர், தெலுங்கு மொழியின் இலக்கணம் தெரிவிப்பாராயினர். இவ்வாராய்ச்சிகளின் பயனாக, கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் தமிழ் மொழியொடு நெருங்கிய தொடர்புடைய மொழிகள் என்பது வெள்ளிடைமலை போல் விளங்குவதாயிற்று. இந்நான்கு சிறந்த மொழிகளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளேயாயினும், அவற்றுள் மிகத்தொன்மையும் செம்மையும் வாய்ந்த மொழி தமிழே என்பது ஆசிரியர் கால்டுவெல் உள்ளத்தில் தெள்ளிதின் விளங்கிற்று.

 

இவ்வாறு திராவிட மொழிகளின் ஒற்றுமை அறிந்த ஆசிரியர், உலகில் வழங்கும் மற்றைய செம்மொழிகளையும் பொதுவுற கோக்கிப் போந்தார். இவ்வுலகில் வழங்கும் மொழிகளை, மூன்று குடும்பங்களாக மாக்ஸ் முல்லர் என்னும் பேராசிரியர் முன்னரே வகுத்திருந்தார். ஆரியம், துரானியம், சிமிட்டியம் என்னும் பெயாகள் மூன்று குடும்பங்களுக்கும் முல்லரால் கொடுக்கப்பட்டன. இவ்வகையில், இலத்தீன் கிரீக், சமஸ்கிருதம ஆதியமொழிகள் ஆரிய வகுப்பின் பாற்படும். துங்கேசியம், மங்கோலியம், துருக்கியம், பின்னியம் முதலிய மொழிகள் துரானிய வகையின் பாற்படும். அரேபியம், அரமேயம், ஈபிரேயம் முதலிய மொழிகள் சிமிட்டியவகையின் பாற்படும். இவ்வாறு மூன்று கிளையாய் முளைத்தெழுந்த முதுமொழிகளின் இயல்களை, ஆசிரியர் கால் ஓவெல் ஆராய்ந்தபொழுது திராவிட மொழிகள் துரானிய மொழிகளோடு நருங்கிய தொடர்புடையனவாக இருக்கக் கண்டார். ஆரிய குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளும் பல கூறுகளில் ஒத்திருப்பினும், அவற்றுள் அடிப்படையான வேற்றுமை அமைந்திருக்கக் கண்டார். பாரத நாட்டில் வடமொழியும் தென் மொழியும் நெடுங்காலமாக நெருங்கிப் பழகி வந்த பான்மையால் வடமொழியனின்றும் பல சொற்கள் தென் மொழியில் இடம் பெற்றாற்போல் தென்மொழியினின்றும் பல சொற்கள் வடமொழியில் வழங்கும் தன்மையை விளக்கிக் காட்டினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் விழுமிய நூலின் வாயிலாக ஆசிரியர் கால்டுவெல் இவ்வரிய உண்மைகளை வெளி
யிட்ட காலத்து, மேற்கூறிய டாக்டர். குந்தார்த்தார் என்பவர், வடமொழியிற் காணப்படும். திராவிட அம்சங்கள். என்று ஒரு சிறந்த சிறந்த கட்டுரை வரைந்து வெளிப்படுத்தினார். டாக்டா கிட்டல் என்னும் அறிஞரும், வடமொழி நிகண்டுகளில் காணப்படும் திராவிட அம்சம், என்று ஒரு சிறந்த கட்டுரை எழுதிப் போந்தார். இவ்வாறு மூன்று அறிஞர் மூன்று திராவிட மொழிகளை முட்டறுத்துக் கற்று, ஒரு முடிவிற்கு வந்த முறைமை அறிஞர் கருத்தைக் கவர்வதாயிற்று.

 

வட மொழி அகராதியில் காணப்படும் சொற்கள் அனைத்தும் ஆரியச் சொற்களேயாம் என்று கருதும் கொள்கை மொழி நூல் முறைக்கு மாறுபட்டதாகும் என்று இம்மூவரும் திண்ணமாய் எடுத்து மொழிந்தார்கள். ஆரிய குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பிய மொழிகளில் காணப்படாத சொற்களும், கூறுகளும், வடமொழியிற் காணப்படுமேயாயின், அச்சொற்களும் கூறுகளும் இந்நாட்டு மொழிகளினின்றும் வடமொழியிற் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று கார்ல்கவெல் ஆசிரியர் எடுத்துரைத்த காரணம் கற்றறிந்த மாந்தர் மனத்தில் பதிந்தது. ஒப்பிலக்கணமென்னும் நூலின் அனுபவத்தில். தென்மொழியினின்றும் வடமொழியிற் சென்று சேர்ந்தனவாகக் கருதக்கூடிய முப்பத்திரண்டு சொற்களை, ஆசிரியர் கால்டுவெல் மொழி நூல் முறையில் ஆராய்ந்து எழுதியுள்ளார். இவ்வாராய்ச்சி மொழித் திறமுணரும் மாணவர்க்குப் பெரும்பயன் விளைவிப்பதாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment