Sunday, September 6, 2020

 

மொழி

 

 ஒருவர், தம் கருத்தினை மற்றொருவர்க்கு உணர்த்துவதற்குக் கருவியாவது மொழியாம். அம்மொழிதான் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு எனப் பலவகையதாம். இப் பலவற்றுள்ளும் 'தமிழ்' குணகடல், குமரி, குடகம், வேங்கடமென்னும் நான்கு எல்லையினிடையே பழமையாகி வழங்கி வருவதொன்றாம். இத்தன்மையதாய இம்மொழி யென்றுந் தன் நிலையில் தளராமற் றழைத்தோங்க அது வழங்கும் எல்லைக்கண் வாழ்ந் திருந்தவர்கள் தத்தம் எல்லையில் அறிவு கூர்ந்தியற்றிய நூல்களோ சொற் பொருளின் பங்களில் எல்லையில்லாதவைகளாம். அவற்றை யவர்கள் தம் பின்னோர்க்கு எய்ப்பினில் வைப்பாக வைத்து இசைகொண்டனர். அன்றியும், அவர்கள் தமது நிலத்து மக்கள் சான்றோராவதற்குத் தக்கவை யிவை யெனத் தம் நூலின்கண் உய்த்துணர்வார் உணரக்காட்டியதுடன் மொழி வளர்ச்சிக்குக் காரணமாவனவற்றுள் பிறமொழிக் கருத்துக்களையும் சொற்களையும் தாம் கண்ட இலக்கண இலக்கியங்களினிடை விளங்க வைத்து அம்மொழிகள் நிலைபெற வாழ்ந்து வந்தனர்.


      ''இலக்கியங்கண்டதற்கிலக்கணமியம்பல்'' (நன். பத. 14) இலக்கண மாதலின் " என்றுமுள தென் தமிழியம்பி யிசை கொண்ட " (கம்ப - அகத் - 47) வராகிய அகத்தியனார் முதலிய பலரும் தத்தம் நூற்கண் நுண்ணறிவினவ ரியற்றிய பன்னூற்களைபு முய்த்துணர்ந்து விதி விலக்குகள் விதித்தனர். இக்காலத்தில் எந்நூலினும் முன்னூலாகக் கொள்ளும் பெருமை வாய்ந்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்துள்,


 ''இயற்சொற் றிரிசொற் றிசைச் சொல் வட சொலென்
 றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே''
  எனவும்,         (தொல். சொல் - எச். 1.)


 ''வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''
எனவும்        (தொல். சொல் - எச். 4)

 

''சிதைந்தனவரினும் இயைந்தன வரையார்'          (தொல். சொல் - எச். 6.)


எனவும் சூத்திரங்கள் தோன்றலின், தொல்காப்பியம் தோன்றிய காலத்திற் றானே தோன்றிய விலக்கியங்கள் இச்சூத்திரங்கள் தோன்றியமைக் கிடந் தந்தனவாதல் வேண்டும். பயிலப் பயில் வின்பஞ் சுரப்பனவாய், அறியுந் தோறும் அறியுந்தோறும் அறியாமையே காண விருப்பனவாய், ஆன்ற அறிவினர் அளித்த பன்னூல்களுக்கும் உரையளித்த ஆசிரியர்கள் ஆங்காங்குத் தாம் கண்ட சொற்கள் இம்மொழியின, இவ்வாறாயின எனக் கூறி ஆதார மான விதிகளும் விளங்கக் கூறினர். இந்நெறியின் முன்னோரும், அம் முன்னோர்தம் வழியே நூற்கள் கண்ட பின்னோரும் பிறமொழிக் கருத்துக்களையும் சொற்களையும் ஆட்சி செய்து வந்தவராதல் குன்றின் மீதிட்ட விளக்காம்.

 

 

ஒரு மொழிக்கண் பிறிதொரு மொழி கலத்தற்குக் காரணம் பலவாம். ஒரு நிலத்தவர் பிறிதொரு நிலத்தவருடன் கலத்தலின்றித் தனித்தவராய் வாழ்வாராயின் அப் பிற நிலத்தவர் மொழியும் பழக்க வழக்கங்களும் தனித்தவரைச் சாரா. வர்த்தகத்தாலோ, வேற்றரசரின் ஆட்சி காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஒரு நிலத்தில் வாழ்பவர் பிறிதொரு நிலத்தில் வாழ்பவருடன் கலத்தல் கூடின் அவர் தம் மொழிகளும் ஒன்றோ டொன்று கலவாதிருத்தல் கூடுமோ? மேலும் ஒரு தேசத்துப் பொருள் மற்றொரு தேசத்துக்குச் செல்லின் சென்றவிடத்தும் தன் தேசத்தில் தனக்கு வாய்த்த பெயரை யல்லவா அப்பொருள் வகிப்பதாகின்றது. இத் தொடக்கத்துப் பலகாரணங்களால் மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதல் இயல்பே யென்பது தேற்றம். நிற்க: -

 

முன், தென்மொழியினர், வடமொழியினருடன் தொடர்புடையராய் வாழ்ந்ததனானே வடமொழிச் சொற்கள் பல தென்மொழிக்கண் விரவப் பெற்றன. வடமொழியில் பல துறையினையும் பற்றிய நூல்கள் பல பல்லாற்றானும் பரந்தனவாய்க் குறைவேதுமின்றி நிரம்பியிருந்தன. அதனாலே, அலங்காரம் அறிவிப்பனவும், தருக்கந் தெரிவிப்பனவும், சாத் திரஞ் சாற்றுவனவுமாகிய நூல்கள் பலவும் வடமொழியினின்றுந் தென் மொழிக்கு மொழிபெயர்க்கப் பெற்றன. மொழி பெயர்த்தார் பலரும் வட மொழிக்கண்ணும் தென்மொழிக்கண்ணும் புலமை மிக்கிலராயின் வட மொழி நூற்கருத்துக்களைச் செவ்விதின் உணர்ந்து கண்டோர் புகழத் தற்சமத்தானும் தற்பவத்தானும் மரூஉவின் பாத்தியானும் சொற்களைப் பிரயோகஞ் செய்யும் வன்மையுடையவராவரோ? 'மேருமந்தரர் புராணம், சூளா மணி' யொத்த நூல்களைப் பயின்றாருக்கு அந்நூலாசிரியர்கள் வடமொழிச் சொற்களை ஆண்டிருக்குஞ் சதுரப்பாடு சாமானியமானதென்று கூறுதல் ஆகுமோ? பயின்றார், அவர்தம் அறிவின் நுண்மையினையும் ஆட்சிச் சொற்களின் பெருமையினையும் கண்டு கண்டு களிப்பென்னுங் கடலில் மூழ்குதலின்றி வேறு நினைப்பும் கொள்ளுதற் பான்மைய ராவரோ? பண்டைப் புலவருள் பலரும் இருமொழிக்கண்ணும் வல்லுநராயிருந்தனராதல் தொல்காப்பியத்தினுக்குப் பாயிரம் பகர்ந்த பனம்பாரனார்', தொல்காப்பியனாரை 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' எனலானும், அத்தொல்காப்பியத்தின் சொற்பகுதிக்கே யுரை யுதவினாரை' வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர்' எனலானும் பகவத் குணானுபவத்திலாழ்ந்த ஆழ்வார்கள் அருளிய திவ்யபிரபந்தத்திற்கு வியாக்கியானமிட்டருளிய நல்லறிஞர்கள் மணிப் பிரவாள நடை கண்டிருத்தலானும் தெளிவாம். ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கு உரை விரித்தாருள் ஒருவராய' பெரிய வாச்சான்-பிள்ளை', தம் உரைக்கிடையில் 'பன்னருஞ் சிறப்பிற் பவணந்தியெனும் நாமத்திருந்தவத்தோன்'' (நன். பாயிரம்) அருளிற் றந்த நன்னூற் சூத்திரங்கள் பலவற்றை யாட்சிக்குக் கொண்டமை குறிப்பின், அவர்தாம் வைணவப் பற்றுடையாரேனும் அது புறமதத்தினர் புகன்ற நூலே யெனினும் இலக்கணமே கூறுவதாய், எல்லோருக்கும் ஒப்பமுடிந்த தொன்றாயவதனைப் பொன்னெனப் போற்றியருளிய நடுநிலை விளங்குவதன்றோ?

 

ஆக இதுவரை கூறியதனான் மொழிகள் ஒன்றுடனொன்று விரவப் பெறு மென்பதும், முன்னோர் பலர் வடமொழி தென்மொழிகளில் பயிற்சி பெற்றார் என்பதும், அன்னார் வடமொழிக்கண் உள்ள பலதுறைப்பட்ட பன்னூல்களைத் தமிழ்ப்படுத்தினார் என்பதும், அவர் ஒருமொழிக்கண் வைத்த பற்றினராய்ப் பிறிது ஒரு மொழியினை வெறுத்தனரல்லர் என்பதும் தெளிவாம். இனித் தற்காலத் தமிழர் கொள்கை தெளிவாம்.

தற்காலத்துத் தமிழ்ப் பயிலுநரிற் சிலர், முன்னவர் கொண்ட கொள்கைக்கு முரணுவாராவர். அவர் தமிழ்மொழி பிறமொழியினுதவியின்றித் தானே தனித்து நிற்கற் பாலதென்பர்; தனித் தமிழானே பேசவும், எழுதவும் முயற்சிப்பர். இம்முயற்சியாற் சொற்களை எளிதிற் பிரயோகஞ் செய்தற்கு முடியாமையும், ஒருவாற்றான் முடிவு பெறினும் சகடம் சமனிலா நெறியிற் செல்லுதல் ஒக்கும் நடையுமே ஏற்படும் பலனாகும். எனினும் தமிழானே எதுவும் ஆம் என்னும் கொள்கையினர் முயற்சி அவர்களுக்கு எவ்வளவிற்குப் பயனளிக்கும் என்பதனை இது பொழுது சொல்லுதற் கில்லை.

 

வடமொழிக் கலப்பே யிருத்தலாகாதென்னுங் கொள்கையோடு பல்லாண்டுகளாக நின்று விரவிவரும் வடமொழிச் சொற்களைத் தள்ளி, தமிழ்ச் சொற்களையே வழக்கிற் கொணர ஊக்குமவர் பன்னூல்களினுங் காணும் பிரயோகங்களையும் தள்ளுவரோ? கொள்ளுவரோ? அறியேம். தள்ளுவராயின், பெருகிய அளவில் வடமொழிச் சொற்களைத் தற்சமதற் பவமரூஉவின் வகைகளான் பிரயோகஞ் செய்யப் பெற்று நிலவும் 'சூளா மணி' , 'மேருமந்தரர் புராணம்' போன்றவும், தண்டியலங்காரம், சந்திரா லோகம்' போன்ற அலங்கார நூல்களும்,

 

''பொற்பமர் தெய்வ மொழிப்பாகு பாடும்

பொது வெழுத்தாய்ப்

பற்பல வாகித் திரிவதுஞ் சாற்றினர்

பண்டுணர்ந்தோர்

முற்பகர் நூலுட் சிறுபான்மை பேர்க்கு

மொழி பெயர்த்தாம் தற்பவந்

தற்சமமே பெரும் பான்மையுஞ்

சாற்றினமே"

 

எனக்கூறிய சுப்பிரமணிய தீக்ஷித ரியற்றிய பிரயோக விவேகமும்,

 

ஸ்ரீ சுவாமிநாததேசிகர்,

 

 ''வடமொழி யிலக்கணஞ் சிலவகுத் தறிந்து
 தொல்காப்பியத்தினுந் தொல்காப் பியத்தினும்
 அருகிக் கிடந்ததைப் பெருக வுரைத்தனன்''


எனக்கூறி வழங்கியருளிய 'இலக்கணக்கொத்தும்' வழக்காறற் றொழிதல் வேண்டுமென்ப தறியக்கிடக்கின்றது. அவர் இங்குக் காட்டிய சில நூல்களையும் பிற நூல்களையும் இறந்துபடாமற் காத்தல் வேண்டு மென்ற கொள்கையினைக் கொள்வாராயின் தமிழ் தனித்தமிழே யாகுதல் வேண்டும் என்ற கொள்கை தானே விலக வேண்டியதாகின்றது. இந்நிலையில் கொள்வ தூஉம் தவிர்வது உம் யாதென்பது நடுநிலை யுடையார்க்கே புலனாம்.

 

மேல், தமிழ் தனித்தமிழேயாதல் வேண்டுமென்பார், பிற தேயத்தார் தத்தம் மொழியினை வளர்க்கும் வகையினை ஒரு நொடிப் பொழுது ஊன்றி நோக்குவாராயின் தம் கருத்தினை மாற்றுவராவர் என்பது ஒரு தலை. இந்து தேசமெங்கும் இராஜபாஷையாய் வாழ்ந்து வரும் ஆங்கிலமொழி தனி மொழியாகுமோ? கிரீக், லத்தின் முதலிய பாஷைகளின் கலப்பே கொண்டதாய்ப் பரவிய பாஷையே யன்றோ? அவ்வாறாகவும் ஆங்கிலம் பேசுநர் தம்மொழியினைத் தனிமொழியாக்கக் கருதுகின்றிலரே? அவர், தம்மொழி மேன்மேலும் பெருகப் பலதேச மொழிகளையும் அந்த அந்த நிலத்து நூல்களையும் ஆய்ந்து தம் பாஷையைப் பெருக்கிக் கொள்கின்ற பெருமையை யென்னென்பது! தமிழைத் தனித்தமிழாக்க முயலுநர் அன்னார் தம் சிறந்த இக் குணத்தினைக் கொள்ளாமே அவர்தம் நடையுடை பாவனைகளை மட்டுங் கொள்கின்ற கொள்கைக்குக் காரணம் ஈதெனத் துணிதற்கில்லை.


 ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் தாமியற்றிய இலக்கணக் கொத்'தில்


 ''தொல்காப் பியந் திரு வள்ளுவ ராதி நூல்
 வடமொழி நியாயம் வந்தன சிலவே
 தமிழி னியாயந் தந்தன பலவால்''


 ''வடநூல் வழிகல வாதே தமிழைத்
 தனியே நீர்தராத் தன்மை யென்னெனி
 னிலக்கண மிலக்கிய மேது நிமித்தஞ்
 சாத்திரஞ் சூத்திரந் தந்திர வுத்தி
 பகுதி விகுதி பதமே பதார்த்தம்
 ஆதி யந்த மகார மகார
 முதாரண மாத்திரை யுவமை யுருவகம்
 விகற்பஞ் சந்தி விதியலங்காரங்
 கால மிலேசங் காரகம் ஞாபகம்
 விசேடணம் விசேடியம் விகாரமதி காரங்
 குணங்குணி யாதியாஞ் சொற்கோ ளன்றியும்

 பிறிதினியை பின்மை நீக்குதல் பிறிதி
 னியைபு நீக்குத லென்னு மிலக்கண
 முதலாப் பலவா மொழிபெயர்த் தனவுங்
 கொண்டனர் பண்டைய ருண்டோ வின்றோ
 வன்றியுந் தமிழினூற் களவிலை யவற்று
 ளொன்றே யாயினுந் தனித்தமி ழுண்டோ?''

 

எனக் கூறிப் போந்ததனை யுணர்வார்க்குத் தமிழைத் தனிமொழியாகக் கொள்வதா, முன்னோர் கொண்ட முறையே முறையாகக் கொள்வதா வென்பது உணர்தற் பாலதாம்.

 
 
N. திருவேங்கடத்தையங்கார்,

தமிழ்ப் பண்டிதர்.

 C. R C. High School, Purasawalkam,

குறிப்பு: - ஸ்ரீ பெரும்பூதூர்த்தாலுகா, பொண்டூர் போர்ட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் V. ஸ்ரீநிவாசன் என்பவர், சென்ற நப்பசி மாதம் வெளியான நமது சஞ்சிகையின் 153ம் பக்கத்தில் தமிழினருமை கான மகுடமிட்டு வந்துள்ள வியாசத்தில் ஐயம் கொண்டு தமிழ் இயற்கை முதன்மொழியாவது எப்படி? அது முதன்மொழியாயின் தமயந்தியின் சுயம்வரத்திற்கு வந்திருந்த பல தேசத்தரசர்கள் ஒருவரோடொருவர் அம்மொழியால் வார்த்தையாடாமல் எல்லோருக்கும் பொது மொழியான வடமொழியால் ஏன் பேசவேண்டும்?'' என்றும், அதற்காதாரமாக நைடதத்தினின்றும் ''.............. பற்பல தேயவேந்தர் தொகுதலிற் பாடைதேர்வான், அற்புட னெவருந் தேவ பாடையி னறைவர்........'' என்னுஞ் செய்யுளைக் காட்டியும், மற்றும் அது'' சிவன் திருமால் முதலிய தேவர்களும் பேசுதற்குரியதும், வேதங்களுக்கு நெடிது கால் முற்பட்டதுமானது என்றால், அரிச்சந்திரன், ''உலகுயிர்க்கெல்லாம் பசுபதி ஒருமுதலாயின், அலகில் சீருடையவன் மொழிமறையெனின்", என்று ஏன் கூறவேண்டும்? என்றும், தமது சந்தேகத்தை அறிந்தோர் நீக்க வேண்டும் என்றும் கேட்கிறார். அவர் கொண்ட ஐய நிவர்த்திக்கும் ஒருவாறு ஆதாரமான 'மொழி' என்னும் இந்த வியாசத்தைக்கண்டு ஐயம் நீங்குவாராக

 

ப – ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment