Sunday, September 6, 2020

 

மோக்ஷத்திற்கு நான் போனால் போகலாம்

 

 ஒரு காலத்தில் ஞானவிசாரம் செய்துகொண்டிருந்த இருவர்தெருத்திண்ணை மேல் உட்கார்ந்திருந்தபோது "மோக்ஷத்திற்குநான் போவேன்'' என்று ஒருவன் கூற மற்றவன் "இல்லை யில்லை, நான்றான் போவேன்'' என்று கூற, இவ்வாறு இருவரும் வாதாடிக் கொண்டிருக்கையில், அச்சமயம் வீதி வழியே ஜலம் எடுத்துச் செல்லும் ஒரு மாது இவர்களுக்குக் கேட்கும் வண்ணம் ''மோக்ஷத்திற்கு நான் போனால் போகலாம்'' என்று கூறிக்கொண்டு சென்றதாகவும், அவள் மொழிகளைக் கேட்ட இருவரும் மிக்க நாணமும் வியப்பும் அடைந்து, அம்மாதின் பின்னாலேயே அவளது வாசஸ்தலத்திற்குச் சென்று'' அம்மையே ! நாங்கள் பல வருடங்களாகச் சாத்திர ஆராய்ச்சி செய்தும் எங்களில் யார் மோக்ஷத்திற்குச் செல்வோமென்று தெரியாம லலைகிறோம். அப்படியிருக்கத் தாங்கள் போகலாம் என்று கூறியது எவ்வாறு?'' என்று கேட்டதாகவும், அதன்மேல் அம்மாது தான் கூறியதன் பொருளைத் தெளிவாய் உரைத்ததாகவும் கர்ணபரம்பரையாக ஒரு கதை கூறுவதுண்டு.

 

இப்போது'' மோக்ஷத்திற்கு நான் போனால் போகலாம்'' என்று அம்மாது கூறிய வார்த்தைகளில் நான் என்பதற்குப் பொருள் தான் என்பதல்ல. அதாவது அம்மாது தான் வேண்டுமாயின் போகலாம் என்று கூறவில்லை. மற்றபடி என்ன பொருளில் கூறினாளெனில் இயம்புகிறோம். இங்கு "நான் போனால்'' என்ற தொடருக்கு ''நான் என்கிற அகங்காரம் ஒழிந்தால்'' என்பதே பொருளாகும்.

 

இனி இந்த நான் என்னும் அகங்காரத்தின் தன்மைகளைக் கவனிப்பாம். உலகில் நான் என்ற உணர்ச்சி சகல மனிதர்க்குமுண்டு. அதுவே அகங்காரம் என்பது. இதுவே ஜன்மத்திற்கு வித்தாவது. ஒருவரிடம் இது எவ்வளவு அதிகமாகத் தடித்திருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அஞ்ஞானம் அதிகமாகும். இந்தஅகங்காரம் மூலப் பிரகிருதியின் தமோ குணத்திலுண்டானது. மனதின் ஐந்து குணங்களில் ஒன்றாயிருப்பது. சூக்கும பூதங்களில் பிருதிவி யம்சமானதால் பிருதிவியைப் போன்று கடினத்தன்மையுடையது. இந்த அகங்காரமே கோபம், கடின சித்தம் முதலிய கொடிய குணங்களுக்கு வித்து போன்றது. இதுவே பரமான்மாவினின்றும் ஆன்மாவை வேறு பிரித்திருப்பது.

 

அகங்காரமே அறிவை மயக்கி விடுவது. நடுநிலைமையினின்றும் பிறழச் செய்வது. சாதாரணக் கல்வியும், பொருளும் பெரும்பாலும் இந்த அகங்காரத்தை யதிகரிக்கச் செய்கின்றன. இது தூணைத்துரும்பாக்கும், துரும்பைத் தூணாக்கும். அகங்காரமுடையவன் தனக்கு மேற்பட்டவர்களைக் கூடச் சற்றும் இலக்ஷியம் செய்யான்.'' அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னை யறியான் போலும். என்னிடமா அவன் ஜபம் செல்லும்? ஆகட்டும் விட்டேனா! அவன் தெய்வ பக்தி என்னை அசக்க முடியுமா?'' என்று யாவரையும் அற்பமாக வெண்ணிப்பேசுவான். இந்த அகங்காரம்மிகக் கொடியது என்பதையும் இதன் பூரண சொரூபத்தையும் இதை யெதிரிட்டொழித்த ஞானிகளே நன்றாக அறிவர். மனதின் சொரூபம் இன்னதென்றே யறியாதவர்கள், மனதை யடக்க முயற்சி செய்யாதோர், மனதை வேறு பிரித்தறியச் சக்தியில்லாதோர், வீண் தற்பெருமைக்காக வாவது " என்ன மனம்? மனம் நாம் எப்படிச் சொன்னால் அப்படிக் கேட்கிறது. நம்மை விட்டா மீறிப் போய்விடும்? நாம் வேண்டு மென்றால் வேண்டும், வேண்டாமென்றால் வேண்டாம். மனம் என்ன இதைக் கட்டாயம் செய்யென்று அடிக்குமோ?...'' என்று கூறுவது வழக்கம். ஆனால் மனதை யடக்கமுயன்ற முமூட்சுவுக்கே எல்லாவற்றையும் விட அலையும் மனப்பேயை யகத்தடக்குதல் தான் மிகக் கஷ்டமானது என்ற உண்மை தெரியும்.

 

ஈசுவரன் ஆன்மாவோடேயே சதா கலந்து நிற்கிறான், அவனை யன்றி ஆன்மா இல்லை என்ற சங்கதியே யுணராதவன், உள்ளிருக்கும் பரம் பொருளை யறிய முயலாதவன், ஈசுவரனிடத்தில் பக்தியைப் பெருக்க வேண்டியதற்கு அவசியமான சரியையாதிகளைச் செய்யாது, உண்பதும் உறங்குவதுமே ஜன்மமெடுத்ததன் பயன் என்றெண்ணி உலகச்சேற்றில் அழுந்திக் கிடக்கும் அறிவிலி, ஈசுவரனைத் தெரிசிக்கத் திருக்கோயிலுக்குச் செல்லும் ஒருவனைக் கண்டால் 'சே சே! அங்கே கோயிலில் என்னவிருக்கிறது. நாம் செய்து வைத்த கல் உருவம், பஞ்சலோக உருவம் தான் இருக்கின்றன. எல்லாம் இங்கே நமக்குள் இருக்கிறது'' என்று மார்பைத் தட்டிக் கூறுவது வழக்கம். இத்தகைய மூடர்களைச் சாதாரணமாய் உலகிற் காணலாம். இதுவும் அகங்காரத்தின் செயலே யாகும்.


 அகங்காரத்தைப் பற்றித் தாயுமான சுவாமிகள்,

 
''ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
      வாணவத் தினும் வலிதுகாண்
 அறிவினை மயக்கிடு நடுவறிய வொட்டாதி
      யாதொன்று தொடினு மதுவாய்த்
 தாங்காது மொழிபேசு மரிகரப் பிரமாதி
      தம்மொடு சமான மென்னும்
 தடையுற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
      தன்னிலசை யாது நிற்கும்


என்ற பாசுரத்தில் நன்கு விளக்கிக் காட்டி யிருக்கிறார். 'நான்' என்ற அகங்காரமே மற்ற மாயா காரியங்களுக்கும் மூலமாகும். இதனானே பலவிதத் துன்பங்களும், பிறப்பிற்குக் காரணமாகிய வனைத்தும் உண்டாகும். நினைப்பு மறைப்பும் எண்ணிக்கையிலடங்காத பல மாயா காரியங்களுமுண்டாகும். இவ்விஷயத்தைப் பற்றி தாயுமானவர்,


''நானென்னு மோரகந்தை யெவர்க்கும் வந்து
 நலிந்தவுடன் சகமாயை நானாவாகித்
 தான் வந்து தொடருமித்தால் வளருந் துன்பச்
 சாகரத்தின் பெருமையெவர் சாற்ற வல்லார்

 *     *      *      *      *            *''


என்ற பாசுரத்திலும், இதை யடுத்த இரண்டு பாசுரங்களிலும் கூறி யருளியதைக் காண்க. இந்த 'நான்' என்ற அகங்காரத்திற்குச் சகோதரன் போல் துணையாக விருப்பது 'எனது' என்ற மமகாரம். இவையே அகப்பற்றென்றும் புறப்பற்றென்றும் கூறப்படும். இவையே பிறவிப் பெரும்பிணிக்கு வித்தாயுள்ளவையாதலின் இவை யொழிந்தாலன்றிப் பிறவி யொழியாது. முத்திகூடாது.


''யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
 குயர்ந்த வுலகம் புகும் "                              
என்றனர் நாயனார்.


''யானென தென்னுஞ் செருக்கொழி யாமையி னெவ் வுயிர்க்கு
 மீன வகக்கர ணங்குவி யாது பின் னிச்சைவழி
 வானகம் மண்ணகம் பாதல மூன்றினும் மாறிவரும்
 யானென தென்செருக் கற்றோர் தொழுங்கச்சி யேகம்பனே''     

 

(வள்ளலார் - சிவாகமக்கச்சிமாலை)


 இந்த 'நான்' என்பது சவ்விகற்ப சமாதி வரையில் தொடர்ந்துநிற்கும். ஆண்டு இதையே தற்போத மென்பது. இது ஒழிந்த பின்பே நிர்விகற்ப சமாதியில் ஆனந்தோதயமுண்டாகும். பிறவி வேர் அறும்.


 "நானென நிற்கு ஞான ஞான மன் றந்த ஞானம்
 மோனமா, யிருக்க வொட்டா மோனமின் றாகவே தான்
 தேனென ருசிக்கு மன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ண ம்
 வானென நிறைந் தானந்த மாகடல் வளைவ தின்றே''
 

என்றும்,

  
''நீயற்ற வந்நிலையே நிட்டையதில் நீயிலையோ
 வாயற் றவனே மயங்காதே - *   * ''
என்றும், தாயுமானவர் அருளினர்.

 

அந்த நான் என்ற தற்போத மொழிந்த நிலையே இரண்டற்ற அத்துவித நிலையாகும். இதையே மாணிக்கவாசகர் "அப்பா செத்தே போயினேன்'' என்றும், "சென்று சென்று தேய்ந்து தேய்ந்தொன்றாம் திருப்பெருந் துறை யுறை சிவனே'' என்றும், பட்டினத்தடிகள் "செத்தாரைப் போலே திரி'' என்றும், "தூங்காமற்றூங்கி'' என்றும் கூறியருளினார்கள்.

 

பிறவிக்கு வித்தாகிய இத்தகைய 'நான்' என்ற அகங்காரம் ஒழிக்கத்தக்கதே பென்பது நன்கு விளங்குகிற தன்றோ - அனாதியாகிய இது ஒழியுமோ? எப்படி யிதை யொழிப்பது? எனின், அநாதியாயினும் இது ஒழியும். இதை யனுபவமா யொழித்த நம்முன்னோராகிய மகான்கள் இதை யொழிக்கும் மார்க்கத்தையருளியே யிருக்கிறார்கள். நம் முன்னோர் போல் தம் சந்ததியார்க்கும், ஏன், உலகில் அனைவர்க்குமே, என்று மழியாதபரமானந்த பொக்கிஷத்தை வைத்தவர்கள் உலகில் வேறு யாருமிலர் என்று திட்டமாய்க் கூறலாகும்.

 

இந்த அகங்காரம் அநாதியாயினும் செயற்கையே யன்றி யியற்கை யன்று. ஆன்மாவிற்கு ஆனந்தம் அநாதி யியற்கை. ஆணவம் அல்லது அஞ்ஞானம் அநாதி செயற்கை. செயற்கையொழியும்; இயற்கை யொழியாது.

இந்த அகங்காரம் அல்லது ஆணவம் கூடியே ஆன்மாவைப் பரமான்மாவினின்றும் பிறித்து விட்டது.


''அறிவுரு வாயவென்னை யாணவ மாதி கூடிப்
பிறிவறி யாதநின்னைப் பிரித்துத் தான் முழுதுமாகி
நெறியினை மறைத்துப் பொல்லா நீசருக் கடிமையாக்கிச்
செறியிரு ணின்றதென்னே திருப்புலி வனத்துளானே "                

(வள்ளலார்)


இத்தகைய 'நான்' என்ற அகங்காரம் நீங்குவ தெவ்வாறெனின், ஞானத்தால் நீங்கும். இதைப்பற்றி விரிவாய்க்கூறின் அதுவே ஒரு நூலாகும். ஆதலின் குறிப்பாய்க் கூறி இதை முடிக்கிறோம்.
 

இந்த'' நான்'' தேகாதி இந்திரியங்கள் கரணங்களோடு கூடி, நான் கர்த்தா போக்தா, நான் சொர்க்க நரகங்களை யனுபவிப்பவன் என்று எண்ணியிருப்பது. உண்மையில் இந்த 'நான்' நாமல்ல - மயக்கத்தால் இதை நாமென்றெண்ணி யிருக்கிறோம் எப்படி யெனில், ஒரு பிராம்மணன் திடீலென்று மூளையிலுண்டான ஒரு கெடுதியால் இறந்த காலம் யாவும் மறந்து, தான் புலையன் என்று எண்ணிக் கொண்டு பறைச்சேரியில் போய் வசிப்பது போல்.

 

ஒரு வைத்தியன் அவனுடைய மூளையிலிருக்கும் குற்றத்தை நீக்கி விட்டால் உடனே அவனுக்குப் பழைய நினைவு வந்துவிடும். அப்போது " அடடா ! நாம் பிராம்மணனாயிற்றே! இதென்னஅனாசாரம் " என்று பதைபதைத்து சேரியை விட்டோடிப் பிராயச்சித்தம் செய்து கொள்வான்.

 

அது போன்றே, குரு உபதேசத்தால் உண்மையான 'நான்' என்கிற ஆன்மாவைத் தரிசித்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும். நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் ஒழியும். ஏனெனில் சாக்ஷி மாத்திரமா யாகிய ஆன்ம சொரூபமே நாமென்றுணர்ந்ததே'' நாமரூபமாகிய எவற்றோடும் நமக்குச் சம்பந்தமில்லை. நாம் சச்சிதானந்த சொரூபம், இவை அநுர்த ஜடதுக்கம்'' என்று விளங்கி விடும். அதன்மேல் ஆன்மா பரமரன்மாவில் இலயமடையும். முடிவில் 'நான்' என்ற கிஞ்சித் இருப்பாகிய தற்போதமும் அகண்டாகாரத்தில் இலயமாக ஆன்மா பிறப்பிறப்பற்ற நித்தியானந்த மாகிய முத்தியடையும்.

 

ஆதலின் மெய்யான 'நான்' என்கிற அறிவு சொரூபமாகிய ஆன்மாவை யறிவதே 'நான்' என்ற அகங்காரத்தை யொழிக்கும் மார்க்கமாம். அது ஒழிந்தால் முத்தி சித்திக்கும். பகவான் நமக்கு இம்மனிதப் பிறவியை யளித்தது தன்னை யடையவேயாதலால் ஒவ்வொருவரும் அகங்காரத்தை யொழித்துத் தன்னை யறிய முயல வேண்டும். அச்சிந்தனை யில்லையேல் நமக்கும் மிருகபட்சியாதிகளுக்கும் பேதமின்றாம்.

ஓம் தத்ஸத்.

ஆனந்த போதினி – 1924 ௵ - டிசம்பர் ௴

No comments:

Post a Comment