Sunday, September 6, 2020

 

முடவன் முழுக்கு

(கார்த்திகேயன்)

 

வைத்தீஸ்வரன் கோவில் சந்நிதானத்தின் முன்னே திறந்த வெளியில் ஒரு தள்ளுவண்டி கிடக்கின்றது இரு கால்களும் முடமான ஒரு மனித உடல் முடங்கிக் கொண்டிருக்கிறது அந்த வண்டியில். காலற்ற அந்த அகதிக்கு மூன்று கால்களுள்ள அந்தச் சின்ன வண்டியே சொந்தம் போலும்!

 

அதே தள்ளு வண்டியில் அந்த ஏழை மூன்று தினங்களாக அசைவற்றுக் கிடந்தான்: மூச்சு இருப்பதற்கு அடையாளமாக அவனது விலா எலும்புகள் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன. வாயில் புகுவது கூட உணராதவாறு பிரஞ்ஞையற்றுக் கிடந்தான். அவன் மீது வெயில் காய்ந்தது; காற்று வீசிப் புழுதியும் படிந்தது. அவன் உடல் அசைய வில்லை.

 

ஆலயத்தினுள் நுழையும் சிவநேசச் செல்வர்களிற் சிலர் நிமிர்ந்த தலையுடனும், நேர் நோக்குடனும் சென்றனர்; வேறு சிலர் அந்த எளியனைக் கண்டும் காணாதவர் போல் நடந்து கொண்டனர். மற்றும் சிலர், "எந்த க்ஷேத்திரத்திற்குச் சென்றாலும் இந்தத் தொல்லை தான்" என்று முகம் சுளித்தனர். இன்னும் சிலர் "ஐயோ பாவம்!" என்று அங்கலாய்த்தனர். ஆனாலும் ஒருவராவது அவனருகிற் சென்று அவன் குறை விசாரித்தறிந்திலர்.

 

மூன்றாம் நாள் இரவு, ஊரடங்கும் நேரம். திடீரென வானத்தே மேகங்கள் கவிந்தன.
புயல்போல காற்று சீறியெழுந்தது. மின்னல் இருளை வெட்டி மறைந்தது. குமுறிய மேகம் மழை கொட்ட
வுந் தொடங்கியது. வீதி நெடுக மழைத்தாரை அருவிபோல பெருக்கெடுத் தோடியது.

 

மழைத்தாரையில் வண்டி புழுதி நீங்கிச் சுத்தமாயிற்று. அந்த ஏழையும் குளித்து மூழ்கிப் புனிதமானான். இடையிலிருந்த அந்த ஒரே உடையும் நனைந்து துப்புரவாயிற்று. இவ்வளவும் அவன் அறியான். ஊணற்று உணர்ச்சியற்றுக் கிடந்த அவன் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

 

தூற்றல் நின்றது. திடீரெனப் பிரபஞ்சங்களை யெல்லாம் வெள்ளியாக்கி விட்டதுபோல ஒரு பிரகாசமான மின்னல் எழுக்தது. அடுத்த சில விநாடிகளில் அண்டம் பொடி படுவதுபோல ஒரு பேரிடி அதிர்ந்தது. அந்தத் தள்ளுவண்டியருகே இரு திவ்ய புருஷர்கள் தோன்றினர். அவ்விருவரும் தேவர்கள் என் பதைக் காட்ட அவர்களைச் சுற்றி ஒரு பேரொளி வட்டம் சுழன்றது.

 

அவ்விரு தேவர்களும் அந்த முடவனைக் கருணை ததும்ப நோக்கினர்.

 

'நம் சந்நிதானத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான் போலிருக்கிறதே!''

 

“அப்படி விட்டால் அது உம் பெயருக்குப் பழி சூட்டுவதாகும். வைத்திய நாதரா யிருந்தும் அவனது முடத்தை நீர் நீக்காவிடில் என்ன பயன்?''

 

"அதைப்பற்றி இன்று கனகசபையில் பிரஸ்தாபித்தபோது, சபாநாதர் அவன்பால் அருள்பாலிக்கத் திருவுளங் கொண்டுள்ளார்."

 

“அப்படியானால் இவனை உடனே அனுப்பிவையும். உடல் மெலிந்து கிடக்கும் இவன் எப்படிச் சிதம்பரம் செல்வான்?"

 

“இதோ இவனை எழுப்பி உணவளிப்போம்...... அன்பா! இந்தப் பிரசாதத்தை உண்டு சிதம்பரம் செல்வாயாக! சிற்றம்பலத்தில் உன் குறை நீங்கும். வழியில் வரும் இடையூறுகளைக் கண்டு கலங்காதே! தயங்காமல் உன் வண்டியுடன் புறப்படு!"


அவ்விரு புண்ணிய புருஷர்களும் அந்தர்த்தியானமாயினர்.

 

முடவன் கனவு கண்டவன் போல் விழித்துக்கொண்டு நாலு திசையும் நோக்கினான். தன் பக்கத்தே ஒரு முடிச்சு இருக்கக்கண்டு அதை அவிழ்த்துப் பார்த்தான். தெய்வீக மணமும், சுவையும் கொண்ட அந்த தேவப் பிரசாதத்தைக் கண்டு அதிசயித்து இறைவனருளை வியந்தவாறு உண்டான்.

 

அப்பால் சோர்ந்த அவன் உடம்பில் ஒரு புதுசக்தி புகுந்தது போல் விருந்தது. மனிதனளவுக்கு மேற்பட்ட ஒரு நூ வன்மை அவனுக்கு உண்டாயிருப்பது போல் தோன்றிற்று.

"ஈசா! இதுவும் நின் செயல் தானோ! இந்த ஏழையின் பிரார்த்தனையையும் நிறைவேற்றத் திருவுளங் கொண்டாயோ! கருணாமூர்த்தியே! தீராத நோயை தீர்த்துவைக்கும் தீன தயாளா!" என்று துதித்துத் தன் இரு கரங்களையும் குவித்து வணங்கினான். பின்னர், “உன் ஆணைப்படி செய்வேன். பின், நீ விட்ட வழி காண்பேன்" என்று எண்ணி வண்டிச் சக்கரங்களைக் கைகளால் சுற்றினான். வண்டி ஒருமுறை சுழன்று நின்றது.

 

'கனகசபாபதி' என்று மீண்டும் அவன் கை வைத்தபோது வண்டி கடகடவென்று ஓடத் தொட்ங்கியது. சக்கரங்கள் அவன் கழற்று முன்னே அவை விரைந்து சுழன்று ஓடத்தலைப்பட்டதைக் காண அவன் கொண்ட பேரானந்தத்திற்கு ஓர் எல்லை. இல்லை.

 

அவனுக்கு அதிக் சிரமம் இல்லாமலே வண்டி கொள்ளிடக்கரை வந்து சேர்ந்தது. கொள்ளிட நதியிலோ வெள்ளம் கரை புரண்டோடியது. அது கண்ட அவன், “ஐயோ! இதற்கு என் செய்வேன்!'' என்று ஒரு கணம் மலைத்துப் போனான். உடனே, “வழியில் வரும் இடையூறுகளைக் கண்டு கலங்காதே" என்ற தேவ கட்டளை நினைவுக்குவா, "எம்பெருமானே! நீயே துணை '' எனச் சொல்லிச் சக்கரங்களை உருட்டினான்.

கடலில் தள்ளப்பட்ட அப்பர் சுவாமிகளுக்குக் கல் புனையானது போல, கொள்ளிட நதியில் அந்தத் தள்ளுவண்டி முடவனுக்குத் தெப்பமாயிற்று. சக்கரங்கள் பிரவாகத்தைக் கிழித்துக் கொண்டோடி எதிர்க்கரை ஏறியது.

 

சிதம்பரத்திற்கு ஒரு காத தூரத்திற்கப்பால் அவன் சென்ற போது வண்டி மேலும் செல்லமாட்டாது நின்றது. இரவில் அகாலமாகிவிட்ட படியால் அவன் உணர்வு தடுமாறியது. தன்னை மறந்து கண்களை மூடினான்.

 

பின்னர், அவன் விழித்தபோது தன் வண்டியுடன் ஸ்ரீ நடராஜப் பெருமானது சந்நிதானத்துக் கெதிரில் இருக்கக் கண்டான்.  அப்போது ஆலயக் கதவுகளைத் திறந்த மெய் காப்பாளர்கள் வண்டியில் கிடந்த இந்த முடவனைக் கண்டு திகைத்துப் போயினர். அப்பால் அவன் அங்கு வந்து சேர்ந்த வரலாற்றைக் கேட்டபோது இறைவனது அருள் திறத்தை எண்ணியெண்ணி மகிழலாயினர்.

 

அன்று எம்பெருமானுக்கு நடந்த ஆறுகால பூஜைகளையும் கண்டு முடவன் ஆனந்த பரவசனானான். அவனது திரிகரணங்களும் சபாநாயகனது திவ்ய ரூபத்திலேயே ஒன்றி யிருந்தன.

 

இரவு அர்த்தசாம பூஜை ஆன பிறகு ஆலயக்கதவுகள் யாவும் திருக்காப்பிடப் பிட்டன. முடவன் மட்டும் அங்கேயே தங்கியிருக்க தீக்ஷதர்கள் அனுமதியளித்தனர்.

 

மூன்றாம் யாமத் தொடக்கத்தில் கர்ப்பக்கிருக வாயிலருகே ஓர் ஒளிவட்டம் உண்டாயிற்று. அது, சிறிது சிறிகாக விரிந்து கண்ணைப் பறிக்கும் ஒரு பெருஞ் சோதி வட்டமாக மாறியது. வண்டியிற் கிடந்த முடவனுடைய ஊனக்கண்கள் அப் பேரொளிப் பிழம்பைப் பார்க்கக் கூசின.

 

அந்த ஜோதித் தட்டினின்றும் ஒரு திவ்ய மலர்க்கரம் நீண் சுவர்ண மயமான அந்த மோகன காத்தில் ரத்தினங்கள் பதித்த திருவாபரணங்கள் பல சுடர்விட்டொளிர்ந்தன. அம்முடவன் குஞ்சித பாதங்களின் நினைவே உள்ளத்தில் கொண்டவாறு தன்னை மறந்து கிடந்தான்.

 

'அன்பனே! முன்னம் துவாபர யுகத்தில் ஒருமுறை அன்பன் ஒருவனுக்கு முடத்தை நீக்கி யருளினோம். இந்தக் கலியுகத்தில் உன் குறையை நீக்க உடன்பட்டோம்.
மாயூரம் சென்று காவிரியில் ஸ்நானம் செய்து எழுந்து இதோ இந்தப் பொட்டணங்
களில் ஒன்றைப் பிரித்து அதனுள்ளிருக்கும் ஒளஷதத்தை நீரிற்கலந்து பருகுவாயாக. மற்ற இரு பொட்டணங்களையும் தீராதநோயுற்று அவதியுறும் மக்களுக்கு அளித்துக் காப்பாயாக!''
என்று திருவாக் கொன்று எழுந்தது. உடனே கனக சபாபதியின் காற்சிலம்பொலியும் கேட்டது. பொட்டணங்கள் முடவன் கரத்தே வந்து விழுந்தன. அந்தப் பெற்கரம் மறைந்தது.
அதைச் சூழ நின்ற ஜோதிப்பிழம்பும் கரந்தது. முடவன் உணர் விழந்தான்.

 

அப்பால் அவனுக்குப் பிரஞ்ஞை வந்தபோது முன்னே வண்டி ஓடாமல் நின்ற இடத்தில் தான் வந்திருக்கக் கண்டான். அப்போது கிழக்கு வெளுத்து சூரியோ தயமும் தொடங்கி விட்ட்தால் அவன் மெல்ல நிமிர்ந்துட்கார்ந்து இறைவனை மனதிலே தியானித்து வண்டியைத் தள்ளலானான். வண்டியும் முன்போலவே ஓடத் தொடங்கியது.

 

வழியில் நின்ற பெரிய ஆலமரம் ஒன்று திடீரென முறிந்து வண்டி மீது கவிழ்ந்து விட்டது. வளைந்த கிளைகளி னிடையே வண்டி அகப்பட்டுக் கொண்டது கண்டு முடவன் மனங் கலங்கினான். இறைவனைத் தியானித்து வணங்கி யிருந்தான்.

 

சற்று நேரத்தில் அவ்வழியே வந்த ரஸ்தா மேஸ்திரி மரம் விழுந்து கிடப்பதுகண்டு ஆட்களைக் கொணர்ந்து அதைத் துண்டாடி அப்புறப்படுத்தினான். முடவனை வண்டியுடன் மெல்லத் தூக்கி அப்பால் விடச் செய்தான்.

 

வந்த பேராபத்தும் இறைவன் அருளால் நீங்கப்பெற்று வண்டடியைச் செலுத்த, அதுவும் விரைவில் கொள்ளிடக்கரையைக் குறுகியது. முன்போல கடவுளாணையால் அது நதியில் மிதந்துறு கரையேறி காழியம்பதியை ய்டைந்தது. பத்துநாழிகைப் போதில் மாயூரம் சென்று காவிரிக்கரையைக் குறுகியது

 

கரையில் வண்டியினின்றும் இறங்கிக் கைகளால் படிகளைத் தாண்டி நீரை யடைந்தான்.

 

ஸ்ரீ சிதம்பரநாதனை மனதில் தியானித்தவண்ணம் வணங்கிப் பின் நீரில் மூழ்கியெழுந்து பொட்டலத்தைப் பிரித்து அத்தேவமருந்தை நீரிற் கொட்டிப் பருகினான்.

 

ஆ! என்ன விந்தை! என்ன அற்புதம்! அவன் குறை கால்கள் இரண்டும் நீண்டு வளர்ந்து அவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன. அவனது கரிய மேனி பொன்மேனியெனப் பொலிந்து தோன்றியது. சற்று முன் கைகளால் தவழ்ந்து சென்ற அம்முடவன் இப்போது கால்களால் நடந்து சென்ற காட்சியைக் கண்ட் மக்கள் அனைவரும் அவனைச் சுற்றி கூடிவிட்டனர்.

 

'முடவனுக்கு ஜே!" என்ற கோஷம் வானைப் பிளந்தது. அவன் இதய மலரில் பொன்னம்பலவனின் ஆனந்தக் கூத்து நிகழ்ந்து கொண்டிருந்தது


 ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment