Sunday, September 6, 2020

 

மிருகபலமும் ஆன்மசக்தியும்

 

 உலகில் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்கு, அல்லது ஒரு விஷயத்தில் பிரவேசித்து ஜெயமடைவதற்குச் சக்தி அதாவது வல்லமை வேண்டும். இதுவே பலம் என்பதும். இந்த அண்ட ரண்ட சராசரங்களை யெல்லாம் சிருட்டித்து, இரட்சித்துச் சங்காரம் செய்யும் கடவுள் தாமும் தமது சக்தியினாலேயே அக்கிருத்தி யங்களைச் செய்கிறார். அவரிடமுள்ள சக்திக்கு அபின்னா சக்தி என்று பெயர். அதாவது அவரிடமிருந்து பிரிக்கப்படாத சக்தி (அக்கினியில் உள்ள சூடு போன்றது). அதற்கே பரை அல்லது பராசக்தி யென்னும் நாமங்களுமுண்டு. உலகில் விருத்தியுண்டாவது பெண்பாலினிடமே. ஆண்டவன் காரணமாக விருந்து பொருளீட்டினும் உணவு முதலியவைகளைத் தயாரித்து யாவரையும் போஷிப்பது மாதர்களே. ஆகையால் உலகங்களையெல்லாம் ஈன்று அளிக்கும் அம்மகாசக்தி பெண்பாலாக உருவகப்படுத்தப் பட்டது. புருடனும் மனைவியும் பரஸ்பர அன்பினால் உடலிரண் டும் உயிரொன்றும் என்னுமாறு ஐக்கியப்பட்டிருப்பது போல், அம்மகாசக்தியும் ஈசுரனினின்றும் பிரிபடாது ஐக்கியப்பட்டிருப்பதால், அவருடைய மனைவி யெனறு கூறப்பட்டதேயன்றி, சாதாரணமாக மானிடரிலுள்ள புருடன் மனைவி போன்ற தன்மையில்லை. இதையுணரும் அறிவிலார் கடவுளுக்கு உலகினர் போல் மனைவி யுண்டென்று கூறப்பட்டதாக எண்ணி யிடர்ப்படுவர்.

 
      ''பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி

* *    *     *     *     *     *     *     
      வாரணி சடைக்கடவு ளாரணி யெனப்புகழ
      வகிலாண்ட கோடி யீன்ற
      வன்னையே பின்னையும் கன்னியென மறைபேசும்
      ஆனந்த ரூபமயிலே


 என்று தாயுமானவர் அருளியது கவனிக்கத்தக்கது.

 

இனி உலகில் பெரிய காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள் உபயோகிக்கும் சக்தியைப்பற்றி கவனிப்போம். மனிதரின் வல்லமையில் தேகபலம், மனோபலம் என்று முக்கியமான இருவித சக்திகளுண்டு. சில காரியங்களுக்குத் தேகபலம் ஒன்றே போதும். வண்டியிழுக்கும் மிருகத்திற்கு வேண்டியது போல் மூட்டை சுமக்கும் மனிதனுக்கும் வேண்டியது தேகபலம் ஒன்றே. சில காரியங்களுக்கு தேகபலத்தோடு மனோபலம் அல்லது புத்தி பலமும் வேண்டும். விசேஷமாய்க் கைத்தொழிலாளிகள் போன்றவர்களுக்கு இவை இரண்டும் வேண்டியவைகளே.

 

உலகில் மனோபலம் புத்தி பலத்தால் தொழில் செய்வோர்க்கே
 அதிக ஊழியமும், கௌரவமும் உண்டு, அவர்களுக்குச் சாதாரண இயற்கையான தேகபலமே போதுமானது. தேகபலத்தினும் மனோபலமே சிறந்தது. அதனினும் சிறந்த சக்தியொன்றுண்டு. அதுதான் ஆத்மசக்தியென்பது. நாம் மேலே கூறிய மிருகபலம் என்பது தேகபலமும் மனதின் தமோகுணத்தைச் சேர்ந்த ஆத் திரம், உரோஷம், மிருகத்தைப்போன்று தனக்கு நேரிடும் ஆபத் திற்கு அஞ்சாத முரட்டுத்தனம், கடின சித்தம் முதலியவை சேர்ந் ததாகும். அதைக் கையாளுபவரிடம் தமது நோக்கத்தை யீடேற்றிக்கொள்ள வேண்டும், அல்லது இச்சித்தபொருளைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணமேயன்றி, நீதியாவது, இரக்கமாவது, கடவுள் சிந்தனையாவது இராது. காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு மானைக் காணும் வேங்கைக்கு "நாம் அதைப் பிடித்தடித்துத் தின்ன வேண்டுமென்ற ஒரே யெண்ண மட்டும் உண்டன்றி, அய்யோ நமது பசிக்காக நிரபராதியாகிய அதை யேன் நாம் கொல்ல வேண்டும், அதைக் கொன்று விட்டால் தம் தாயின் வரவை யெதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் அதன் குட்டிகள் பரிதவிக்குமே, இந்த நம் செய்கை கடவுளுக்கொவ்வா தல்லவா, என்பது முதலிய சிந்தனையே அதற்குக் கிடையாது. இதைப்போலவே மனிதர்களிலும் மிருகபலத்தைக் கொண்டே காரியசித்தி பெறுவோருண்டு. மேல்நாட்டார் ஆற்றிவுடைய மக்களேயாயினும் மிருக பலத்தையே பெரும்பான்மையும் கையாளுகிறார்கள். தங்கள் தீட்சணியமான புத்திவல்லமையையும் மிருகபலத்தைப் பல வழிகளில் விர்த்திசெய்வதிலேயே யுபயோகிக்கிறார்கள். அவர்கள் ஆஸ்திகர்கள் என்றே கருதப்படினும் அவர்களிடம் தெய்வசிந்தனை மிகக்குறைவே. ஆன்மார்த்த நூற்பயிற்சியவர்களிடம் இல்லையென்றே கூறலாம். ஆகவே ஆன் மசக்தி என்ற ஒரு இணையற்ற வல்லமை நமக்குள்ளாகவே அவ்வியக்தமான (வெளிக்குத் தோற்றப்படாத நிலைமையிலிருக்கிறது என்ற உணர்ச்சி யவர்களிடம் காணப்படுவதில்லை.

 

கடந்த மகா ஐரோப்பாயுத்தமே அதற்குப் போதிய சான்றாகும். அந்தப் பெரும்போருக்கு என்ன காரணமென்று ஆராயப்புகுந்தால், தக்க காரணமே கிடைக்காது. ஸர்வியா நாட்டின் இராஜகுமாரன் ஒருவன் கொல்லப்பட்டானெனின், அதற்காக அவனைக் கொன்ற ஆளை அல்லது ஆட்களைத் (நாற்பதைம்பது பேர் இருந்தாலுமிருக்கட்டும்) தண்டித்தால் போதுமன்றோ. அதை விட்டு அதிற் சம்பந்தப்படாத பெரிய தேசங்களெல்லாம் யுத்தத்தில் பிரவேசித்து இலக்ஷக்கணக்கான ஜனங்களை மாளச் செய்து பல தேசங்களுக்கும் சொல்லொணா துன்பங்களை விளை வித்ததற்குக் காரணம் என்ன? சண்டைக்கு முன் ஒவ்வொரு நாடும் தன் தன்வரையில் க்ஷேமமான நிலைமையிலேயே யிருந்ததன்றோ. அப்படியிருக்க எக்காரணம்பற்றி அத்தகைய துன்பங்களை யுண்டாக்கிக்கொண்டார்கள்?

 

பேராசையும், இன்னொருவன் நம்மிலும் அதிக பலமடையலாகாது, மற்ற தேசங்களை யெல்லாம் அடக்கி நம் ஆணையே கடல் முழுமைம்கூட செல்லத்தக்கதாக விருக்க வேண்டும் என்ற பொறாமையும் அகங்காரமுமே அந்த யுத்தத்திற்குக் காரணம்.

 

அவர்களும் நம்மைப்போல் ஒரு மதத்தை யனுசரிக்கும் ஆஸ்திகர்களாக விருக்க அவர்களிடமேன் ஈசுரசிந்தனை முதலிய ஆன்மார்த்த விஷயங்கள் திருப்தியாயில்லை யெனின் கூறுதும். மேல் நாட்டார் அனுசரிப்பது கிருஸ்துமதம், கிருஸ்து கீழ்நாட்டிலிருந்தே அங்கு சென்று தமது மதத்தை யவர்களுக்குப் போதித்தார். அக்காலத்தில் அந்தநாட்டார் நாகரீகமற்ற முரடர்களாயிருந் தார்கள். அத்தகையோருக்கு ஏகமூர்த்தியாகி எங்கும் நிறைந்த ஒரு கடவுளே உளர் என்பதைப் போதிப்பதே அவசியமானதாக விருந்தது. ஏசுகிருஸ்து கூறிய உபதேசங்களின் பொருள்களையுணரக் கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. ஆகையால் மத போதனையால் அவர்கள் இலௌகீக விஷயங்களில் திருத்தமடைய வில்லை. அவர்கள் தங்களுடைய மிருகத்தன்மையான நடக்கைகளில் ஒருவித சீர்திருத்த மடைந்தார்கள் என்று மட்டும் கூறலாகும். அச்சீர்திருத்தமும் வெளிப்பகட்டு மட்டு முடையதே. அவர்களுடைய இலௌகீக ஆசாரங்களும் ஒழுக்கங்களும் மதசம்பந்த மானவையல்ல. ஏசுவின் நடக்கைகளையும், போதனைகளையும் மானிடராகிய இவர்களே எப்படி பொருட்படுத்திக் கொண்டார்களோ அப்படி அதையே சித்தாந்தமாக வைத்துக் கொண்டார்கள். அதனால் ஒருவர் போதித்த அம்மதத்தில் இரண்டு பிரிவுகளையுண்டாக்கிக் கொண்டு, இரு கட்சிகளும் குரூரமாய்ச் சண்டையிட்டுக் கொண்டார்கள். சொல்பகாலத்திற்கு முன்பிருந்து தான் ஏசு கூறிய உபதேசங்களின் உண்மைக்கருத்தைக் கொஞ்சம் கொஞ்சம் யறியத்தொடங்கி யிருக்கிறார்கள்.

 

இவர்கள் சூக்கும புத்தி ஜடசாத்திரங்களில் வேலை செய்வதிலேயே யுபயோகப்படுத்தப்பட்டது. ஆதிமுதல் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதும், ஒரு நாட்டாரையின் னொரு நாட்டார் கொள்ளையடிப்பதும் சிறைபிடித்துக்கொண்டு போவதுமாக விருந்தார்கள். அதனால் ஒவ்வொரு நாட்டாரும் கொலைக்கஞ்சாது தைரியத்தோடு யுத்தம் செய்யும் சுபாவமுடையவர்களாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காகவே பல விதக் கொலைக்கருவிகளையும் அமைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். தங்கள் சூக்கும் புத்தியை யித்தகைய காரியங்களுக்கே உபயோகிப்பதால் இதில் முதல்தர வல்லமையுடையவர்களாகி விட்டார்கள். ஒவ்வொரு நாட்டாரும் மிருகபலத்தால் மற்ற எல்லாரையும் அடக்கித் தாங்களே உலகில் தலைமையதிகாரம் செலுத்த வேண்டும் என்ற ஆவலுடையவர்ளா யிருக்கிறார்கள்.

 

மேல் நாட்டார் இந்த விஷயத்தில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறினார்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆன்மார்த்த விஷயங்களில் பின்னடைந்துவிட்டார்கள், தங்கள் சூக்கும புத்தியைக் கொண்டு, சற்றும் சந்தடியுண்டாக்காமல் ஒரு விநாடியில் பன்னிரண்டு முறை சுட்டு பன்னிரண்டு பேரைக் கொல்லத்தக்க துப்பாக்கியை எப்படிச் செய்யலாமென்று சிந்தித்து முடிப்பதில் ஏராளமான பணத்தையும் வருடக்கணக்கான காலத்தையும் செலவழிக்க உடன்படுவார்கள். ஆனால் மனநாசம் என்பதென்ன? அதை யெவ்வாறடைவது? என்ற கிஞ்சித் நினைவேனும் அவர்கள் மனதில் முளைப்பது முயற்கொம்பேயாகும்.

 

மிருகபலத்தின் பெருமையிவ்வாறிருக்க இனி மனோசக்தி ஆன் மசக்திகளைப்பற்றி கவனிப்போம்.

 

மனோசக்தி அல்லது மனோபலம் என்பது அலையும் மனதையகத்தடக்கி அது நம் இஷ்டப்படி நடக்கும்படி செய்தல். அத்தகைய மனம் எக்காரியம் எப்படி முடிய வேண்டுமென்று பிரியப்படுகிறதோ, அப்படியே யக்காரியம் முடியும். மனதினிடத்தில் அபாரமான சக்தி அடங்கியிருக்கிறது. அதையடைவது கஷ்ட சாத்தியமாகும். எனெனில் பேராசை, பொறாமை, கெட்ட எண்ணம் முதலிய தீய பூண்டுகளை யெல்லாம் பறித்தெறிந்தால் தான் மனமாகிய பூமி சுத்தமடைந்து அதில் நடப்படும் வித்து முளைத்து பலன் தரும். இதில் எவ்வளவு ஈர சிந்தனையும் ஈசுரனிடம் நம்பிக்கையு முண்டோ அவ்வளவிற்கவ்வளவு பலனுண்டாகும். மனோசக்தியில் ஆத்மசக்தியின் பிரகாசம் தாக்காவிடின் அது ஒன்றுமே செய்யமுடியாது, ஏன்? அது இல்லையென்றே கூறலாம். சூரியன் மேகத்தின் பின்னிருந்து வெளிச்சம் காட்டுவது போன்றது மனோசக்தி, மேகம் கலைந்தபின் சூரியன் தன் கிரணங்களை வீசி ஒளியளிப்பது போன்றது ஆன்மசக்தி. ஆசையற்ற தன்மையும் சுயநலம் கருதாத குணமும், பொறுமை, சாந்தம், பிறர் நலத்திற்கு எதையும் தியாகம் செய்தல், ஜீவகாருண்யம், அஹிம்சாதர்மம் முதலிய குணங்கள் அமைந்த விடத்தில் தான் ஆன்மசக்தி வெளிப்படும்.

 

ஆன்மசக்தி தெய்வ சக்தியே யெனலாம். மனதின் இரஜோ தமோகுணங்கள் ஒழிந்து மனங் களங்கமற்ற உள்ள மானபோது தான் ஆத்மசக்தி விளங்கக்தொடங்கும், ஞானிகளிடம் அச்சக்தி பூரணமாகப் பிரகாசிக்கிறது. ஆன்மசக்தியுடையோர்க்கு மற்ற எல்லோருடைய மனதையும் கிரகிக்கும் சக்தியுண்டு. அதனால்தான் மகான்கள் பல்லாயிரம் ஜனங்கள் தங்கள் சொற்படி நடக்கு மாறு செய்கிறார்கள். அவர்கள் சிந்தனை யெதுவும் ஈடேறும்.

 

ஆன்மசக்தி, ஆன்மஞானம் முதலியவைகளுக்கு நமது புண்ணிய பூமியாகிய பரதகண்டமே தாய் வீடாகும். ஆன்மசக்தியின் முன் மிருகபலம் தலையெடுக்க முடியாது. நம் நாட்டில் பூர்வீகத்தில் ஆன்மசக்தியுடையோர் அனேகர் இருந்தார்கள். அச்சக்தியால் அவர்கள் அரிய காரியங்களைச் செய்தார்கள். நம் முன்னோர் மிருகபலத்தை வெறுத்தார்கள். அவர்களுக்கு அது அவசியமாகவும் இருந்திருக்கவில்லை. ஏனெனில், முற்காலத்தில் கல்வியென்றால் ஆன்மார்த்தக் கல்வியென்றே பொருள். குருவினிடம் சீடன் கல்விகற்கச் சென்றால், இலக்கண இலக்கியத்தோடு வேதங்கள். வேதாங்கங்கள், உபநிஷத்துக்கள், நீதிநூற்கள், இதிகாசங்கள், புராணங்கள், முதலியவைகளே யவனுக்குப் போதிக்கப்படும், சீடர்கள் கல்விகற்பதோடு சதாசாரங்களிலும், சுயத்தியாகத்திலும் பழக்கப்படுவார்கள். குருவை ஈசுவரனாகப் பாவித்துப் பணி விடை செய்வார்கள். பணிவிடையென்றால் குருவின் வீட்டில் எத்தகைய வேலையும் செய்வார்கள். குருவின் வேஷ்டிகளைத் துவைப்பார்கள்; அவர் மாடுகளை மேய்த்து வருவார்கள்; விறகு பொறுக்கி வருவார்கள். மேலும் கல்வி முடியு மட்டும் (கிட்டத்தட்ட முப்பது வயதுவரையிலேனும்) பிரம்மசரிய விரதத்தை யனுஷ்டித்து வந்தார்கள். இக்கால மாணவர்கள் இவற்றைக் கேட்டால் அருவருப்பும் நகைப்பும் அடைவார்கள் என்று கருதுகிறோம். அக் காலத்திய மாணவர்கள் அவ்வாறு நடந்துகொண்டிருந்ததால் ஆடம்பரமற்ற சுகமும் க்ஷேமமுமான வாழ்க்கையோடு திடமும், சுகமும், தீர்க்காயுளும் பெற்று ஞானிகளாய் இம்மை மறுமைப் பலன்களை யடைந்தார்கள்.

 

இக்காலத்திய மாணவர்கள் கற்கும் கல்வியோ கல்வியென்ற பெயர்க்கே உரியதல்ல. மேல்நாட்டு ஆடம்பரமான நாகரீக மயக்கத்தில் சிக்கி ஈசுர சிந்தனையில்லாதவர்களாய் உலக சம்பந்தமான ஜடப்பொருள்களையன்றி வேறு சிந்தனையில் மனம் செல்லாதவர்களாய், ஆன்மார்த்த கல்வியைப் பற்றிய சிந்தனையேயில்லாதவர்களாய் வாழவேண்டிய மார்க்கத்தில் செல்கிறார்கள். நம் முன்னோரது ஆசார ஒழுக்கங்களும், ஆடம்பரமற்ற அடக்கமான வாழ்க்கையும் இவர்களுக்கு இழிவானவைகளாய்த் தோன்றுகின்றன. காலையில் பழஞ்சாதம் சாப்பிடுவது மிக்க அநாகரீகமென்றும் காபி, ரொட்டி சாப்பிடுவது நாகரீகமென்றும் கருதுகிறார்கள். இவற்றின் குணங்களிலுள்ள தாரதம்மியத்தைக் கவனித்தாவது நடப்போம் என்ற சிந்தனையும் இவர்களிடமில்லை. பன்முறை சிறந்த வைத்தியர்களும், அறிவாளிகளும் அவற்றைப்பற்றி பத்திரிகைகளில் வரைந்தாலும் இவர்கள் அதைச் சட்டை செய்வதில்லை.

 

இவர்கள் ஆன்மசக்தியைப்பற்றி நினைப்பதேயில்லை. ஏனெனில் இவர்கள் கல்வியில் அதற்கு இடமில்லை. இவர்களுடைய உபாத்தியாயர்களோ அதைப்பற்றி போதிக்கும் நிலைமையிலில்லை. நம் நாட்டார் மிருகசக்தியாவது பெறுவதற்கும் வழியில்லை. தாமே தமது தற்காப்பிற்காகக்கூட ஒன்றைச் செய்யச் சுயாதீனமின்றி " போடு திம்மா மூன்று கரணம்'' என்றால் போடவேண்டிய நிலைமையிலிருப்பவர்கள், எவ்வித ஆயுதப்பயிற்சியும் பெறாது தடுக்கப்பட்டிருக்கிறவர்கள், எவ்வாறு மிருகபலமேனும் பெறுவது? ஆன்ம சக்தி பெறும் மார்க்கம் நம் கையிலிருக்கிறது. அதை நாம் பெறாதபடி தடுக்க ஒருவராலும் முடியாது. அதிலோ நம்மவர்க்குச் சிந்தை செல்வதில்லை. இரண்டு சக்தியு மில்லாமலிருப்பவர்களின் கதி என்னாகும். திரிச்சங்கு சொர்க்கமா? அதுவும் ஆத்மசக்தியா லன்றோ உண்டாக்கப்பட்டது.

 

நம் தாய் நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் பின்னால், அதற்காக வேலை செய்யவேண்டியவர்களாகிய நம் சந்ததியா ரன்றோ தகுதியான வழியில் பயிற்சி செய்யப்படவேண்டும். அவர்கள் இப்போது செல்லும் சீர்கேடான கீழ்நோக்கு வழியி லேயே செல்லும்படி விடப்படுகிறவரையில் நம் நாடு ஒருபோதும் பூர்வீக உன்னத நிலையை யடையாது. இக்காலத்தில் தாய்தந்தை யருக்கே அதைப்பற்றிய கவலையில்லை. அவர்கள், மேல் நாட்டு நாக ரீகத்தில் தம் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பயிற்சி செய்வ தில் மட்டும் ஆவலுடையவர்களாக விருக்கிறார்கள். அப்படிச் செய் வதுதான் தம் மக்களை உருக்கத்தோடு சிறப்பாக வளர்ப்பதென்று எண்ணுகிறார்கள். " தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும் " என் பதைக் கவனிப்பதில்லை. இந்த விஷயத்தில் சிறத்தை யெடுத்துக் கொண்டு நம் மக்களுக்குத் தக்க கல்வியைப் போதிக்கும் முறை களை யுண்டாக்கக்கூடிய உயர்ந்த பதவிகளிலிருக்கும் நம்மவர்க்கே இதில் அக்கரையில்லை யெனில் நாம் யாரைத்தான் சரணடைவது? கருணாநிதியாகிய பரம்பொருள் தான் இனி நம்மவர்க்கு நல்வழி காட்டி யருளவேண்டுமாய் அவரையே சரணடைவோமாக.


 ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ ஜுலை ௴

 

No comments:

Post a Comment