Sunday, September 6, 2020

 

மானும் வேடனும்

(ப. காளியண்ணன்.)

பழங்காலத் தமிழ் மக்களின் ஆண்மை, அறம், அன்பு, அருள் மிகுந்த பண்புகள் இன்று நம் எண்ணத்தில் ஊறவும், எழுச்சியாய் மாறவும், இலக்கியங்கள் செய்யும் அரிய துணையை என்னால் எடுத்து இவ்வளவு என இயம்ப இயலுமோ? இருப்பினும், சீத்தலை சாத்தனார் கல்லா மகன் ஒருவன் பால் எழுந்த இரக்க உணர்ச்சியை ஒருவாறு தீட்டிக் காட்டுவதை இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

வெயிலின் வெம்மை மிகுந்து தோன்றும் வேனிற் காலத்திலே, நண் பகலில், கான் யாறோவென மான்களும், மரைகளும் மயங்குமாறு, கானல் வீசிய ஒரு காட்டில், சூல்கொண்ட பெண் மானொன்று, தாகத்தால் நெடுந் தூரம் ஓடி ஓடிப் பார்த்தும், தண்ணீர் இல்லாமையால், நாவறண்டு, உடல் வெதும்பிக் கால்கள் தளர்ந்து, ஒரு மரத்தின் நிழலில் வந்து நின்றது. நின்ற மானை வில்லுங்கையுமாய் வேட்டையாட வந்த வேடனொருவன் கண்டு, அதன்மேல் அம்பொன்றை யேவினான். அவ் வம்பு வயிற்றில் பட்டுப் பாய்ந்து ஊடுருவிச் சென்றது. அவ்வேதனையால், அது தரைமேல் சாய்ந்தது. மனந்துடிதுடித்து உடல் பதறி, ஆவி துறக்கும் அந்நிலையில் ஒரு குட்டியை யீன்று, தன் சோகம் நிறைந்த குரலில் அம்மாவென அக்குட்டியை யழைத்தது. அம் மானின் செவ்வரிபரந்த கண்ணிலே நீர்த்துளிகள், முத்து முத்தாய் நிலத்தில் விழுந்தன. அதை அவ்வேடன் கண்டான். அதன் பக்கத்தில் கிடந்த கன்றின் மேலும் அவன் பார்வை சென்றது.

அவ் விளமான் கன்றின் வதனம், கள்ளங் கபடறியாத ஒரு குழந்தையின் முகம் போல், அவன் அகக்கண்ணிற்குக் காட்சி யளித்தது. உடனே அவன் அகங்குழைந் துருகிற்று. மயிர் கூச்செறிந்தது ; தொண்டை யடைத்தது. கண்ணில் நீர் தேங்கி மிதந்து நித்திலமென்ன உதிர்ந்தது.

அம் மானைப் பின்னு மவ்வேடன் நோக்கினான். இவனையும், அது தன் இளகிய பார்வையால் பார்த்தது. ஆவி பிரியும் அமயம், ''ஐயா! என் அன்பிற்குரிய இக்குட்டியை யார் காப்பாற்றுவார்? இத் துன்பங் காணாவாறு இதை யீனுமுன் தான் என்னைக் கொல்லொகாதா? ஐயா! நான் உமக்கு ஒரு தீங்குஞ் செய்யவில்லையே! என்னை எது கருதிக் கொன்றனை அது குறிப்பால் உணர்த்துவதுபோல் வேடன் உணர்ந்தான். மறுமுறையும் அம்மான், ஒடுங்கிய குரலில், தன் கன்றை நினைத்து அம்மாவெனக் கத்தியுயிரைவிட்டது. அருகு கிடந்த மான்கன்றும் அம்மா! அம்மா) வெனவலறிற்று. ஆறுதலளிக்கும் தன் அன்னையின் உயிர் நீங்கியதை அஃதறியுமா? அது தாயைச் சுற்றிச்சுற்றி வருவதைக் கண்டான் கானவன். கோவேன வாய்விட்டுக் கதறி மண்ணில் வீழ்ந்தான். வீழ்ந்தவன் உயிரானது, தன் உடலோடு தொடர்பு கொள்ளாது ஓடி மறைந்தது. இவ்வேடனின் இரக்கம் நமக்கு இறும்பூது ஊட்டுகிறதன்றோ!

ஆகவே, அவ்வனசரன், காவிய வின்பம் நுகர்ந்த கவிஞனா யிருந்து, அக் கானகம் சென்றிருப்பின், அம்மானோடு மழகும், அதன் மருண்ட பார்வையும், குரலது கேட்டு, குட்டியுந்துணையும் அதனருகே குதித்து வருவதும், இயற்கை நிறைந்த காட்டிலே அவைகளின் இன்ப வாழ்வும் அவன் கண்ணையு மனத்தையுங் கவர்ந்து அன்பில் வீழ்த்தி, அமைதியிலாழ்த்தி, சிந்தனையில் திளைக்கச் செய்து, இன்ப வூற்றெடுத்து ஓடி, ஒரு கவியாகி, அவலக்கவலையில் அழுந்தி நிற்கும் மக்களுக்கு அது, மன மருந்தாய் வந்து தவுமன்றே! மேலும் அவன் போர்க்கருவி தாங்கிப் புறப்படான். கொலைத்தொழில் செய்ய ஒருப்படான். அறத்தொழிலால் பொருளீட்டி உடலை ஓம்புவன். எவ்வுயிர்க்கும் இரக்கம் காட்டி, இன்பொடு கலந்த அன்பு வாழ்வு வாழ்ந்து, தன்னையடுத் தாரையும் அறநெறியிற் செலுத்தி, பெருநெறி பிடித்தொழுகும் பெருமகனாய்ப் பிறங்குவ னன்றோ!

இவ் வரலாற்றை,

நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும்

சூள்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்

கானவே ட்டுவன் கடுங்கணை துரப்ப

மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப்

பயிர்க்குரல் கேட்டதன் பான்மையனாகி

யுயிர்ப்பொடு செங்கணுகுத்த நீர்கண்டு

ஓட்டியெய்தோ னோருயிர் துறந்ததும்"

 

என மணிமேகலை யாசிரியர், சில அடிகளால் சோகந் ததும்ப அழைத்துக் காட்டுகிறார்.

ஆகவே, அழியாத இயல்பும், ஆன்றோர் விரும்பி யடையும் ஏற்றமும், எழுமையுந் தொடரும் இயல்புமுடைய பொருள், கல்விப் பொருளே யாகலான் , நந்தாய் மொழிக் கலைப்பொருளால், அருட் செல்வத்தை வளர்க்கவும், அதன் இன்பமும் அமைதியும் நிறைந்த அழகில் ஒன்றி யுவகை யடையவும், தமிழ் அன்பர்கள் தக்கார் துணைகொண்டு முயல்வார்களாக.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment