Sunday, September 6, 2020

 

மானிடர் ஜன்ம – கர்த்தவ்யம்

 

ஜனகர் சுகர் முதலிய மகான்கள் அரைநிமிஷமும் ப்ரம்ம வ்ருத்தியின்றி இருந்ததில்லையென்று சாஸ்திரம் கூறுகிறது. நாமும் அப்படியே நமது சக்திக்குத் தக்கபடி மேன்மேலும் ப்ரம்மாப்பியாஸம் செய்ய வேண்டுமென்பதும், ப்ரம்ம வ்ருத்தியின்றி அரைநிமிஷம் கழிப்பினும் அம்மட்டில் காலம் வீணே கழிக்கப்பட்டதென்பதும் மேற்படி கூற்றிலிருந்து ஏற்படுகின்றன.

 

காரணமும் வெளிப்படையே. ஸமஸ்தப்ரபஞ்சமும் அவித்யா விலாஸ மென்பதும் அத்வைத ப்ரம்மவஸ்துவே ஸத்யமென்பதுமன்றோ வேதத்தின் கோஷம்! ப்ரம்ம ஞானந்தான் ஞானம். ப்ரம்ம வித்தைதான் வித்தை. வித்தைக்குள் அத்யாத்ம வித்தை நான்' என்று கீதையில் பகவான் கூறவில் லையா? ஆத்ம மாத்ரமாயுள்ள ப்ரம்மஸாக்ஷாத்காரம் தான் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியால் குறிக்கப்பட்டுள்ள ஸர்வாதீத மோன ஸ்திதியாகிய கைவல்யம். ஆதலால் ஸத்குருவை அடைந்து நம் ஸ்வரூப அஞ்ஞானத்தை நிவர்த்தித்துக் கொண்டு ஸதா ஸ்வரூபானு சந்தானம் செய்தலாகிய ப்ரம்மாப்யாஸம் செய்து ஈற்றில் ப்ராம்மீ ஸ்திதியை அடைவதே நாம் பகுத்தறிவுள்ள மானிட ஜன்மம் எடுத்ததன் பலனாக இருக்கவேண்டுமேயன்றி மற்ற எக்காரியமும் கானல் ஜலத்தை நாடிச்சென்ற கதையாகும்.

 

இம்மாதிரி ஆத்ம விசாரம் செய்து ஆத்மஞானவாயிலாக பவபந்த நிவர்த்தியாகிய மோக்ஷஸாம்ராஜ்யத்தை அடைவது, ஆகார நித்ராபயமைது னாதிகளைக் காட்டிலும் விசேஷமாக ஞானத்தை யுடைத்தாய மானிட ஜன்மாவிற்கே ஸாத்யமான துபற்றி, நரஜன்மம் கிடைப்பதே அரிதென்றும் புண்ய வசத்தால் கிடைத்த அந்த ஜன்மாவை ப்ரம்மவஸ்துவில் ஈடுபடச் செய்யாமல வீணாக்குவதை விட அறியாமை மற்றொன்றில்லை யென்றும் பெரியோர் கூறியிருக்கின்றனர். மானிடஜன்மத்திலும் புருஷஜன்மம் மேலென்றும் அதிலும் தருமப்படி நடப்பது மேலென்றும் அதிலும் வித்வானாயிருப்பது மேலென்றும் அதிலும் ஆத்மா னாத்ம விவேகம் பெறுவதுமேலென்றும் அதிலும் ப்ரம்மானுபவம் மேலென்றும் அதிலும் ப்ரம்மமாகவே யிருப்பது மேலென்றும் ஸோபானங்கள் போல் ஒன்றுக் கொன்று மேலானதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மானிடப்பிறவியின் இத்தகைய மேன்மையை யுன்னியே யன்றோ ஒளவை 'அரிது அரிது மானிடராதலரிது' என்றும், தாயுமானவர் 'எண்ணரிய பிறவிதனில் மானிடப்பிறவிதான் யாதினு மரிதரிது காண்' எனவும் அறைந்திருக்கின்றார்கள்!

 

இவ்வளவு அரிதான மானிட ஜன்மாவின் காலம் எவ்வளவென்று - பார்க்கப்புகின் மிக அல்பமே. அந்த அல்பகாலத்திலும் நித்திரையிற் பாதிபோகின்ற தென்றும், மற்றப் பாதியிற்பாதி பாலியத்திலும் வார்த்தி கத்திலும் போகின்ற தென்றும், மீதியானது வியாதி, பிரிவு, துக்கம், சேவை முதலியவைகளிற் செலவழிக்கப்படுகின்ற தென்றும், ஜீவன் அலையைப்போல் சஞ்சலமாயிருக்கையில் பிராணிகளுக்கு சௌக்யமேதென்றும் ஆன்றோர் கூறியிருக்கின்றனர். ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் 'பஜகோவிந்தம்' என்னும் கிரந்தத்தில், 'ஒருவன் பாலனாயிருக்கும் போது விளையாட்டில் ஆசையுள்ளவனா யிருக்கின்றான்; யுவாவாயிருக்கும் பொழுது ஸ்திரீகளிடத்தில் ஆசைகொண்டவனா யிருக்கிறான்; கிழவனாக இருக்கும்பொழுது கவலை யுடையவனாக இருக்கிறான்; ஸர்வோத்தமமான பரப்ரம்மத்தினிடத்தில் ஒருவனும் ஆஸக்தியுள்ளவனல்ல' என்றும், அதே கிரந்தத்தில் அவர்'பொருள், ஜனம், யௌவனம் ஆகிய இவைகளால் அகங்காரமடையாதே. காலம் எல்லாவற்றையும் நிமிஷத்தில் அபகரிக்கின்றது. மாயாசக்தியால் செய்யப்பட்ட இந்த ப்ரபஞ்சத்தை விட்டு பரமாத்மஸ்வரூபத்தை விசாரித்தறிந்து கொண்டு அப்பரமாத்மஸ்வரூபத்தை யடைவாயாக' என்றும் போதித்திருக்கின்றனர். 'ஆசையாலும், கர்மாவினாலும், பலவித எண்ணங்களாலும் கட்டப்பட்டவனாய் நரன் தன் ஆயுள் க்ஷணிப்பதை அறிவதில்லை' யென்று பிறிதோரிடத்திற் பகரப்பட்டிருக்கிறது.
 

சாஸ்திரங்களாலும் மகான்களாலும் இவ்வாறு பலவிதமாக எச்சரிக்கப்பட்டும் நாம் அரிதான நம் ஜன்மாவை வீணாக்கிக் கொண்டால் அதனினும் மதி கேடுளதோ? ஆதலால் மானிட ஜன்மம் அடையப்பெற்ற பாக்கியவான்கள் எல்லோரும், அடுத்த க்ஷணத்தில் ஜீவித்திருப்போமென்பதற்கு ப்ரமாணமின்றி யதும் புன்னுனிமேல் நீர் போன்றதுமாகிய இவ்வாழ்வைச் சதமென்றெண்ணி 'ஆத்மவிசாரம் பின்னால் செய்து கொள்வோ'மென்று காலத்தைத் தள்ளிப் போடாமல், அரைநிமிஷமும் வீணாக்காமல், பக்குவஞானிகளின் உத்தம லக்ஷணங்களாகிய சாந்தம், திதிக்ஷை, ஆசையின்மை, ஸமசித்தம், இந்திரிய நிக்ரஹம், ஸர்வாத்மபாவனை முதலியவைகளை அனுபவத்தில் மெள்ள மெள்ளக் கைப்பற்றி, ஸத்குரு அனுக்ரஹித்தபடி ஆத்மானுசந்தானத்தை இடைவிடாதியற்றி ஈற்றில் (ஒரு ஜன்மத்திலேனு மாகு அல்லது பல ஜன்மத்தினிறுதியிற்றானாகுக) மோக்ஷத்தை அடைவதே பரம முக்யமான கர்த்தவ்யம்.

 

ஸர்வலோக குருவாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவ்வாறாக அருள் புரிவாராக!

 

ஓம் தத் ஸத்


 அ. நாராயணஸ்வாமி,
B. A., B. L.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜுன் ௴

 

 

 

 

No comments:

Post a Comment