Sunday, September 6, 2020

 முந்நதியும் முத்துறையும்

 

 

பாரத நாட்டின் தென்பாலமைந்த பரந்த நிலங்களில் பண்டைக்காலந் தொட்டு வாழ்ந்துவரும் மக்கள் தமிழரே யாவர். பழுமரச் சோலைகள் செறிந்த விழுமிய தென் மலையின் செழுமையையும், மஞ்சுலாவிய மலைகளிற் பொங்கிப் பொங்கிப் பொழிந்த அருவி நீர் கஞ்சமலர்ச்சுனை கடந்து ஆறாகப் பாய்ந்த அழகினையும் கண்டறிந்த பண்டைத் தமிழ் மக்கள் வளமார்ந்த தென்னாடு வாழ்க்கைக்கு ஏற்றதாகு மென்று தேர்ந்தார்கள். ஆறுகளின் இருமருங்கும் அமைந்த காடுகளை அழித்து நாடாக்கினார்கள். ஆறில்லா ஊருக்கு அழகில்லை" என்னும் பழமொழியும் அக்காலத்தே எழுவதாயிற்று.

 

பாண்டி நாடும் வையை ஆறும்.

 

வேங்கடமலையை வட எல்லையாகவும் குமரித் துறையைத் தென் எல்லையாகவும் கொண்டு திகழ்ந்த தமிழகம் முந்நாடுடைய நன்னாடாய் விவிளங்கிற்றென்பது பழந்தமிழ் நூல்களால் இனிது விளங்கும். முடியுடை வேந்தர் மூவரது அடியின் கீழமைந்த முந்நாடுகளும் முறையே முந்நதிகளை உயிர் நிலையாகக் கொண்டு விளங்கிய தன்மை அறிந்து மகிழத்தக்கதாகும். பாண்டிநாடே பழம்பதியாகு மென்று முன்னோர் புகழ்ந்துரைத்த தென்னாட்டில் ''வையை'' என்னும் நதி பொய்யா நதியாய்ப் பொலிவுற்றிருந்தது. தென் தமிழ் நாடொன்று கல்வியிற் பெரிய கம்பர் புகழ்ந்துரைத்த "நெல்வேலி" நாட்டில் பொன் திணிந்த புனல் பெருக்கும் பொருனையெனும் திருந்தி வற்றாத நதியாய் வளஞ்சுரந்தளித்தது. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அருங் கோடையிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் உயரிய நலம் வாய்ந்த இவ்விரு நதிகளையும் புலவர்கள் பலவாறு புகழ்ந்துரைத்தார்கள். வளமார்ந்த பாண்டி நாட்டின் உயிராய் விளங்கிய வையை யாறு முற்காலத்தில் புனல் நிறைந்த பெரு நிதியாய் இலங்கிற்றென்பது பழந்தமிழ் நூல்களால் இனிதறியப்படும். பைந் தமிழ் வளர்த்த பாண்டியன் நாட்டைப் பண்புறச் செய்த இவ்வாற்றின் பெருமையை;

"புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி."


என்று சிலப்பதிகாரம் அருளிய கவிஞர் செஞ்சொற்களால் எழுதிப் போந்தார். செந்தேன் பிலிற்றும் செழுஞ்சோலைகளினிடையே பூவாறுபோற் பொலிந்து தோன்றிய வையை ஆற்றை “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி" என்று பெருந்தமிழ்க் கவிஞர் புகழ்ந்துரைத்த நயம் அறிந்து போற்றத்தக்கதாகும். அதிராச் சிறப்பின் மதுரை மூதூரை அலங்கரித்து நின்ற ஆற்றைத் தமிழாறாகவே கண்டு அறிஞர் உள்ளம் தழைத்தார்கள். பண்ணார்ந்த தமிழ் கேட்டுப் பண்புற்ற வையை யாற்றின் வண்மையைப் பரிபாடல்களிற் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.


சோழ நாடும் பொன்னி ஆறும்.

 

இனி, பாண்டி நாட்டின் வடபாலமைந்த சோழ நாட்டை நீர்நாடாக்கிய பெருமை பொன்னி யென்னும் பொய்யா நதிக்கே உயரிதாகும். கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கிய "கரிகாற் சோழன்'' என்னும் திருமாவளவன், காவிரியின் இருமருங்கும் கரையமைத்து நிலவளம் நிறைந்த சோழ நாட்டில் நீர்வளமும் நிலவச் செய்தான் என்று பழந்தமிழ்க்காதை பாரித்துரைக்கின்றது. இருமருங்கும் கா விரித்து, எம்மருங்கும் வளம் விரித்த காவிரியாறு கவிஞர் கருத்தைக் கவர்வதாயிற்று. அற்றாரழி பசி தீர்த்து ஆருயிர் ஓம்பிய அவ்வாற்றின் பெருமையை;


"கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலையாதிரியாத் தண்டமிழ்ப் பாவை.'


என்று சீத்தலைச் சாத்தனார் செம்மைசான்ற மொழிகளாற் சிறப்பித்துப் போந்தார். அந்நதியின் நலம் அறிந்த நல்லோர், சோழ நாட்டைப் பொன்னி நாடென்றும், காவிரி நாடென்றும் புகழ்ந்துரைப்பாராயினர். அவ்வாற்றங்கரையில் அமைந்த அழகிய சோலைகளில் தோகை விரித்து ஆடிய மயில்களையும், மறைந்து நின்று கூவிய மணிக்குயில்களையும் “இளங்கோவடிகள்'' புகழ்ந்துரைக்கும் முறை புதியதோர் இன்பம் அளிப்பதாகும்.


"பூவார் சோலை மயிலாடப்

புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மாலை அருகசைய

நடந்தாய் வாழி காவேரி."


என்று நற்றமிழ்க் கவிஞர் நலமுறப் புனைந் துரைத்தார். வெயில் நுழையாச் சோலைகளில், குயில்கள் நுழைந்து கூவும் இனிமையும்; மஞ்சு தவழும் சோலைகளில், மயில்கள் தோகைவிரித்தாடும் மாண்பும் கவிஞர் மனத்தைக் கவர்ந்து விழுங்கிய தன்மை இம்மொழிகளால் இனிது விளங்கும்.

 

 

 

சேர நாடும் பேரியாறும்.

 

இனி மலை நாடாய சேரநாடு மலைவளம் மிகுந்த நாடென்பது சொல்லாமலே அமையும். வேழமும் வேங்கையும் விரும்பித் திரியும் மலை நாட்டில் "பேரியாறு என் னும் பெருந்தி பாய்ந்து வளம் பெருக்கியது. மஞ்சுசூழ்ந்த மலையினின்றும் அழகுற வழிந்திறங்கிய அருவியின் விழுமிய காட்சியையும், அவ்வருவி நீர் பெருகி ஆறாய்ப் பரந்தோடிய பான்மையையும் கண்டு களிகூர்ந்த தண்டமிழ்க் கவிஞர்,


"நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரி யாறு ........


என்று புகழ்ந்து மகிழ்ந்தார்.


தொண்டை நாடும் பாலாறும்.

 

தமிழகத்தில் முந்நாடுகளும் முந்நதிகளால் வளம் பெற்றவாறு, பின்னர் தோன்றிய நன்னாடுகளும் ஆறுகளாலேயே அருஞ்சிறப்புற்றன; சான்பே றார் மிகுந்த நாடென்று நல்லிசைப் புலமை மெல்லியலாராற் சிறப்பிக்கப் பெற்ற "தொண்டை நாடு" பாலாற்றின் இருமருங்கும் வளர்ந்து திகழ்வதாயிற்று. "பால் நினைந்தூட்டும் தாய்போல், நீர் சுரந்து பயிர் வளர்க்கும் நீர்மை வாய்ந்த ஆற்றினைப் "பாலாறு " என்று தமிழ் மக்கள் புகழ்ந்துரைத்த நயம் போற்றுதற்குரியதாகும். இவ்வாற்றின் வண்மையாற் செழிப்புற்ற வளநாட்டின் பெருமையை;


"பாலாறு வளஞ்சுரந்து நல்கமல்கும்
பாளைவிரி மணங்கமழ் பூஞ்சோலை தோறும்
காலாறு கோலி இசைபாட நீடு
களி மயில்நின்றாடும் இயற்றொண்டை நாடு.''


என்று நல்லியற் கவிஞர் நயம்சான்ற மொழிகளால் புகழ்ந்துரைத்தார்.

 

பாலாற்றின் நீர்வளத்தால் நிமிர்ந்தெழுந்த சோலைகளில் நால்வகை மலர்களும் நறுமணங் கமழும் என்றும், அம்மலர்களில் மதுவுண்டு தேக்கிய வண்டுகள் பண்ணார்ந்த பாட்டிசைக்குமென்றும், அவ்விசையினை நுகர்ந்து இன்புற்ற தோகை மயில்கள் ஒகையுற்று ஆடுமென்றும், கவிஞர் எழுதியமைத்த செஞ்சொல் ஓவியம் கற்போர் கருத்தை அள்ளுகின்றது.


நதியே நாட்டின் உயிர்.

 

இவ்வாறு நானிலத்தில் நிலவும் நலமார்ந்த நதிகளை நாட்டின் உயிராகக்கருதுதல் கவிவழக்காகும். "காவிரி நாடன்ன கழனி நாட்டின்" ஆற்றணி கூறப்போந்த அருந் தமிழ்க் கவிஞராய கம்பர்;

"தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணற் றடங்கள் தோறும்
மாதவி வேலிப்பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயதன்றே.''


என்று புகன்ற பொருளுரையில் இவ்வுண்மை பூத்திலங்கக் காணலாம். மரங்கள் செறிந்த காட்டு வழியாகவும், மகரந்தம் உதிரும் சோலை வழியாகவும், பூக்கள் நிறைந்த பொய்கை வழியாகவும், பூகம் நிறைந்த வனங்கள் வழியாகவும், பரந்து பாய்ந்த நதி, அந்நாட்டின் உயிர்போல் உலாவிற்றென்று கம்பர் கட்டுரைத்த உண்மை கனிந்த நயம் சான்றதாகும். ஆகவே பழம் பெருமை வாய்ந்த எகிப்தியர் நாகரிகம் நீலநதிக் கரையில் வளர்ந்து சிறந்தாற்போன்று பழந் தமிழ் மக்களது நாகரிகம் முற்கூறிய நதிகளைச் சூழ்ந்து முளைத்தெழுந்த தென்று கருதுதல் மிகையாகாது.


தமிழகமும் துறைமுகமும்.

 

இங்ஙனம் நாகரிகத் துறையில் நனிசிறந் தோங்கிய தமிழ் மக்கள் கலந்தரு செல்வமும் பெற்றுக் களித்திருந்த முறை அறியத்தக்கதாகும். நீலத்திரை சுருட்டும் நெடுங்கடலில் நாவாயோட்டி நலமுற்ற பழந்தமிழர் பெருமை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுந்த நூல்களில் இனிது விளங்குகின்றது. "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்னும் தெள்ளிய பொருளுரை இந்நாட்டிற் பொன்னேபோற் போற்றப்பட்டது. திரைகடல் கடந்து மீண்ட மக்களைத் தீண்டத்தகாதாரென்று தமிழ் மக்கள் தள்ளினாரல்லர். வேற்று நாடுகளிலிருந்து வாணிகங்கருதி வந்தடைந்த மக்களை வேறுபடுத்தி வைத்தாரல்லர். கடல் கடந்து வந் ந்த யவனரும், சோனகரும், பூம்புகார் நகராய காவிரிப்பூம் பட்டினத்தில் மணிமாட மாளிகைகள் அமைத்து, தமிழ் மக்களோடு வேற்றுமையின்றிக் கலந்துறைந்த தன்மை பழந்தமிழ் நூ ல்களிற் பளிங்கு போலிலங்குகின்றது. நடையுடைகளில் வேறுபட்ட யவனர் பூம்புகார் நகரில் நீரோடு நீர் சேர்ந்தாற்போல் நற்றமிழ் மக்களோடு கலந்துறைந்த அழகினைக் குறிக்கப்போந்த இளங்கோவடிகள்,


"கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்கு நீர் வரைப்பும்.''


என்று எழுதிப் போந்த முறை எண்ணும் தொறும் இன்பம் பயப்பதாகும்.


கொற்கைப் பெருந்துறை.

 

மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகத்தில் சிறந்த துறைமுகங்கள் முற்காலத்தில் அமைந்திருந்தன. நான்மாடக்கூடலென்று நல்லோரேத்தும் மதுரைமா நகரம் பாண்டி நாட்டின் தலை நகராய் அமைவதன் முன்னமே "கொற்கை' என்னும் துறைமுகம் மாறனுக்குரிய மணி நகராய்த் திகழ்ந்தது. "கொற்கைக் கோமான்" என்று பழந்தமிழ் நூல்கள் பாண்டியனைக் குறிக்கக் காணலாம். இக்காலத்தில் சீரிழந்த சிற்றூராகக் குறுகி நிற்கும் கொற்கை, முற்காலத்தில் பொருனை யாறு கடலொடு கலக்கும் துறையில் களித்து இலங்கிற்று. கொற்கைத் துறையில் விளைந்த முத்து கொற்றவர் முடிமேல் இலங்குவதாயிற்று. அழகினுக் கழகு செய்யக்கருதிய அயல் நாட்டு மாதர் கொற்கையில் குளித்த முத்தைக் காதிலும், கழுத்திலும் அணிந்து மகிழ்ந்தார்கள். ''தென்னாடு முத்துடைத்து" என்னும் பெருமை பன்னாடுகளிலும் பரவத்தலைப்பட்டது.


போன்னிப் பெருந்துறை.

 

இன்னும் காவிரியாறு கடலொடு கலந்த துறையில் காவிரிப்பூம் பட்டினம் கவினுறத் திகழ்ந்தது. ஆழநெடுந்திரை ஆழி கடந்துவந்த கலங்கள் அத்துறையில் அழகுறக் களித்து உலாவின. கடலிற் செல்லும் கலங்களுக்குத் துறை காட்டக் கலங்கரை விளக்கம்'' அமைந்திருந்தது. நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், ஈழத்துணவும், காழகத்தாக்கமும் ஏனைய அரும்பெரும் பொருள்களும் பூம்புகார்த் துறையில் மலிந்திருந்த மாண்பினைப் புலமைசான்ற மக்கள் புகழ்ந்துரைத்தார்கள். பொன்னி நாட்டைப் பொன்னாடாக்கிய கரிகால் வளவன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலை நகராக்கி வாணிபச் செல்வத்தை வளர்த்தான் என்று அவன் வரலாறு கூறுகின்றது.


முசிரிப் பெருந்துறை.

 

சேரமன்னன் ஆளுகையில் அமைந்த மலை நாட்டில் “முசிரித் துறை" சிறந்த துறை முகமாய் இலங்கிற்று. மலை நாட்டில் விளைந்த மிளகின் சுவையறிந்த மேற்புல மக்களாய யவனர் முசிரி நகரில் பொன்னைச் சொரிந்து கலங்களிற் மிளகேற்றி மீண்டனர் என்று கவிஞர் புகழ்ந்துரைத்தார். மரக்கலத்தால் மாநிதியம் பெற்று மிளிர்ந்த முசிரியை, "வளங்கெழு முசிரி'' என்று பாவலர் பாராட்டிப் போந்தார். இம்மூன்று சிறந்த துறைமுகங்களும் முற்காலத்திய யவன ஆசிரியர்கள் எழுதிப்போந்த சரித்திரங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் விளைந்த ஆரமும் அகிலும், அரிசியும் மிளகும், தோகையும் முத்தும், தந்தமும் தேக்கும், வெளிநாட்டு அங்காடிகளில்
விலையுயர்ந்த பொருள்களாக மதிக்கப்பட்டன.


குடியேற்ற நாடுகள்.

 

கருங்கடலில் அஞ்சாது சென்ற தமிழ் மக்கள், சிங்களம் புட்பகம் சாவக்மாதிய தீவகங்களிலும் குடியேறி வாழ்ந்தார்கள். "தேனக்க வார்பொழில் மாநக்கவாரத்" தீவுகளிலும், மலேய நாட்டிலும் சென்று சேர்ந்தார்கள். இவ்வாறு கடல்சூழ்ந்த நாடுகளிலும் தமிழ் மணம் கமழத் தொடங்கிற்று. தமிழ் நாட்டின் பெருமை கூறப்போந்த கவிஞர் ஒருவர்;


"சிங்களம் புட்பகம் சாவகமாதிய

தீவு பலவினும் சென்றேறி -அங்குத்

தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு.”

 

என்று சாற்றும் மொழிகளைக் கேட்ட தமிழ் மக்கள் உள்ளம் தழைத்து நிமிர்வதாகும். கடற்கரை யோரத்திலமர்ந்த கலிங்கமென்னும் நாட்டில் வாழ்ந்த நன்மக்கள் தாய் நாட்டினின்றும் போந்து, கடல் சூழ்ந்த நிலங்களிற் பெருந்தொகையினராய்க் குடியேறினார்கள். இவர்களைப் பிறநாட்டு மக்கள் "கலிங்கர்'' என்றழைத்தார்கள். கலிங்கர் என்னும் சொல் களிங்கர் என்றும், கிளிங்கர் என்றும் மாறுவதாயிற்று. இன்றும் இப்பெயர் இந்திய மக்களைக் குறிக்கும் பெயராய்ப் பல தீவங்களில் வழங்கும் பான்மை அறியத்தக்கதாகும். "முயற்சி திருவினையாக்கும்' என்னும் பொருளுரையைப் போற்றித் தூக்கம் கடிந்து தொழில் புரிந்த முற்காலத் தமிழர் வாழ்க்கை இக்காலத்திய மாந்தர்க்கு இணையற்ற ஊக்கம் அளிப்பதாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுலை ௴

 



 

No comments:

Post a Comment