Sunday, September 6, 2020

 

முன்னேற்றம் என்பது என்ன?

(பண்டிதை – அசலாம்பிகை அம்மையார்.)

இம்மொழி பொதுவாக நோக்குமிடத்துப் புதிய புதிய துறைகளில் ஆர்வம் கொண்டு அவற்றைப் பின்பற்றுவது என்னும் கருத்து குறிப்பாகத் தோன்றுகிறது. சற்று ஊன்றிக் கவனிக்குமிடத்து நெடுநாளைக்கு முன் நிலவியிருந்த வழக்கங்களையே மீண்டும் பின்பற்றுவதென்பது புலப்படும். இதன்படி பார்த்தால் பின்னோட்டமேயாகும்.

முற்பட்ட காலத்தில் சிறப்பாகக் கருதிக் கையாண்டு வந்த முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென்கிற உணர்ச்சி பொதுமக்கள் கவனத்தில் முளைத்திருக்கிறது. இப்புதிய விருப்பம் முன்னேறுகையில் அப்படியே கலப்படமின்றிப் பரிண மிக்க முடியாது. இடைக்காலத்தில் மக்கள் மனதைக் கவர்ந்து நின்ற பல மாறுதல்களில் சிலவாவது இப்பின்னோட்டமாகிய முன்னேற்றத்தோடு கலந்து வருவதியற்கையே. - புதிய வெள்ளம் புரண்டு வரும்பொழுது நெறியில் இடம்பெற்றுக் கிடந்த குப்பை கூளங்களும் அசுத்தங்களும் அடித்துக்கொண்டு வருவதை நாம் சாதாரணமாகக் காண்கிறோம். அதுபோல ஜனநாயக முன்னேற்ற வெள்ளத்திலும் ஊறிக் கிடந்த இடைக்காலத்திய பயனற்ற உணர்ச்சிகள் பிரிக்க முடியாமல் கலந்து நிற்கின்றன. 'இராமன் செய்ததைச் செய்; கிருஷ்ணன் சொன்னதைக் கேள்' என்பது அறிஞர் கட்டுரை.

இதன் பொருளென்ன? நவ யௌவன வயதில் எல்லாச் சுகங்களையும் இணையற்ற ஏகாதிபத்தியப் பெரும் பதவியையும் துறந்து வனம்புகுத மலர்ந்த முகத்துடனும் துணிந்தது இராமன் செயல். இன்றும் இனியென்றும் இராமபிரானுக்குக் குன்றாப் புகழைத் தருவது இந்த தியாகமேயாகும். தியாகத்தின் பெருமை எவ்வளவு சதுர் யுகமாயினும் மழுங்கக்
கூடியதல்ல.

பிறகு கிருஷ்ணன் சொன்னதைக் கேள் என்பதின் கருத்தென்ன?

“பயன் குறியாது கடமையைச் செய்" என்பதே கீதா சாஸ்திரத்தின் முத்திரை. ஆத்மா ஒன்று உண்டென்கிற பிரக்ஞை உள்ளவரையில் உனக்குரிய கடமைகளை விருப்பு வெறுப்பின்றிச் செய்ய நீ கடமைப்பட்டவன் என்பதே முடிவு. சோம்பேறி வேதாந்தம் பேசிப் பிறர்க்குப் பாரமாயிருக்க எவருக்கும் உரிமை கிடையாதென்பது அதன் கருத்து. இங்கே
தியாகம் செய்பவர் சுயநலம் அனைத்தையும் தியாகம் செய்யலாமே தவிர கடமையைத் தியாகம் செய்யக்கூடாது. தியாக்குக் கடமை கிடையா தென்று புகல்வராயின் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவராவர். அங்கனமாயின் இராமன் வனம் சென்றபோது தமது வில்லாகிய கோதண்டத்தை அயோத்தியில் உள்ள ஆயுத சாலையிலேயே வைத்துவிட்டுப் போயிருக்கலாம். தியாகமென்பது தன்னலத்தை மட்டில் கைவிடுவதாக முடிகிறதே யல்லது பரோபகாரச் சேவையைக் கைவிடுவதாகவில்லை. தன்னலம் தேயத்தேய பொதுநல சேவை வளர்ச்சி பெறுகிறது. தியாக மென்பது இயற்கையின்படி அரும்பும் ஆசைகள் அனைத்தையும் தயங்காமல் வெறுக்கும் ஆண்மைக்கே பொருந்தும். அங்ஙனமின்றி மூவாசைகளில் ஒன்றன் பொருட்டு மற்றொன்றைத் துறப்பதற்குப் பெயராகாது. பெண்ணின்பம் வேண்டிப் பதவியைத் துறப்பதையும், பொருள் நகைக்காகப்
பெண்ணைத் துறப்பதையும் தியாகமாக ஒருசிலர் கருதுவதாயின் அது தியாகமென்னும் பெயரையே அசுத்தப் படுத்திய தாகும். ஈண்டு உதாரணமாகச் சுட்டிய இராமன் தியாகத்தின் மகுடமாக ஒளிர்ந்தும் கடமையை ஆற்றினான். அடுத்தபடி கடமையைப் பயன் குறியாது செய் என உணர்த்திய கிருஷ்ணன் எப்பற்று மின்றி எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டான்.
பன்னிரண்டு வயது முடியுமுன் அம்மானாகிய கம்ஸனைக் கொன்றதாகச் சரிதம் கூறுகிறது. இந்தப் பன்னிரண்டு வயதுக்குள் சமவயதுள்ள கோபியர்களுடன் கோகுலத்தில் விளையாடி யிருக்கிறார். தேவர்களெல்லாம் கோபிகைகளாகப் பிறந்து பக்திப் பிரேமையினால் கண்ணனிடம் கட்டுண்டது உண்மை. இதனைக் காலக்கிரமத்தில் சரித்திரம் எழுதுவோர் கேவலம் சிற்றின்பக்களமாக மாற்றினர்; ராஸக்கிரீடை என நடிக்கவும் தொடங்கினர். கிருஷ்ணன் ருக்மணிதேவி முதலிய பல பெண்களை உலக பாவனைப்படி மணந்து மக்களை மீன்ற சதைகளும் பக்த பராதீனனாச விருந்து அவரவர் விருப்பங்களை நிறைவேற்றி வைத்த நடிப்பேயன்றிப் பந்தத்தால் அன்றென்பது நன்கு சிந்திப்போர்க்கு விளங்கும். பாகவதத்தை மொழிந்தவர், சுகப்பிரம்மம் என்னும் உதாரணம் ஒன்றே கண்ணன் தெய்வீகத் தகுதிக்குச் சான்றாகும் என் றருளினர். நமது மகான் இராமகருஷ்ண பரமஹம்ஸர் உயிரற்று கருகிய பிண்டமாக உத்தரையின் கெர்ப்பத்தில் பிறந்த அபிமன்யுவின் சிசுவை நான் நித்திய பிரமசாரியாக இருப்பது உண்மையானால் இது உயிர்பெற் றெழக்கடவது என்று கூறிக் கரத்தால் பரிசித்ததும் உயிர் பெற்றதாகவும் அதே காரணத்தால் பரீட்சித்து மகாராஜன் எனப் பெயர் பெற்றதாகவும் கூறும் சரித்திர உண்மையைத் தமிழ்நாட்டில் உணராதார் மிகுதியும் இரார். பற்று தலின்றிக் கடமையைச் செய்யும்படி போதித்த கண்ணன் அபிமன்யு வதத்திற்குத் தானே வழி செய்தார் என்பது ஒன்றே சொன்னபடி செய்து காட்டிய உதாரணமாகும். பாண்டவர்கள் பெற்ற
வெற்றிக்குக் கண்ணன் காரணமெனப் பொதுவாகக் கருதப்படுகிறதாயினும், உண்மையில் பாண்டவர் பெற்ற தோல்விகளுக்கும் கண்ணனே காரணன் என்பதைத் துருவிக் காண்பதில்லை. இளம் பஞ்சபாண்டவர்களை முடித்ததும் கண்ணன் தானே. இவ்வுதாரணங்களால் நாம் அறியவேண்டிய தென்ன? தியாசத்தில் நிஷ்காமிய கடமையை பம், நிஷ்காமிய கடமையில் தியாகத்தையும் காண்கிறோம். தற்காலம் தேச விடுதலைக்குக் கர்த்தர்களாகிய லோகமான்யரும் உலக சிரேஷ்டரும் கைக்கொண்ட ஆயுதங்கள் மேலே ராமகிருஷ்ணர்கள் கையாண்ட தியாகமும் கடமையம் தான் என்பதை உன்னிப் பார்க்குங்கால் நமது முன்னேற்றமென்பது மிக மிகப் பிற்பட்ட காலத்தில் வேதவியாசர் என்னும் சரித்திர ஆசிரியரால் எழுதிவைச் கப்பட்டிருந்த தொன்மை முறைகளே என்பது விளங்கும்.

சமீபத்தில் சிவ கிராமத்திலிருந்து மகாத்மா “மௌனத்திலிருந்து பிறந்த ஆக்ஞை'' என மகுடமிட்டு வரைந்திருக்கும் கட்டுரையில் ''காங்கிரஸ் மகாசபைக்குச் சேர்ந்துள்ள கூட்டப் பெருகினால் வெற்றியில்லை. அதில் உண்மையாக ஒரு சிலர் செய்த தியாகமே வெற்றிக்குக் காரணம்" என விளக்கியுள்ளார். இது தான் உண்மை. பேச்சும் எழுத்தும் மக்களை ஊக்குமே தவிர முடிவான வெற்றியைத் தரமுடியாது. புனிதமான தியாகந்தான் பாரதபூமிக்கு அன்றும் இன்றும் விடுதலையை அளிக்கவல்லதாய் விளங்குகிறது.

இராமன் இரண்டாவது யுகத்தில் பரிபூர்ண தியாகி (இளமனைவியோ டிருந்தும் புலனடக்கல்) ஆகி வழிகாட்டினான். அக்கனமிருந்தும் கடமையைச் செய்ததை நன்கு உணர மக்கள் தவறி அவரவர் மட்டில் நற்கதி பெறமுயல்வது ஒன்றே கடமையெனக் கருதத் தொடங்கினர் தெள்ளிய அறிவில்லாத பாமரர்களை உய்விக்கும் பரந்த கருணை மறைந்தது. அவ்வித நிலைமையைப் போக்கவே மூன்றாவது யுகத்தில் அவரே கண்ணனாக அவதரித்தது முற்றுந் துறந்த ஞானிக்கும் கடமையண்டு. அதைச் செய்தே தீர்தல் வேண்டும் என்று வலியுறுத்தித் தானும் செய்து காட்டினார். பிரம்மஞானிகளில் தலைசிறந்த ஜனகர் அரசராகவே இருந்தார். சைவ உலகில் கழறிற்றறிவார் நாயனார் அவ்வண்ணமே பற்றின்றி அரசுரிமையை யேற்றார். இத்தகைய உதாரணங்கள் பலவள. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றி மத வாதிகளின் முரண்பாடுகளைப் போக்கி உண்மை நிலை பெறச் செய்ததோடு விவேகாநந்தர் என்னும் சிஷ்யர் அகத்தே ஞான ஒளியை யேற்றி மேல்நாடுகளுக்கும் காஷாய உடையடன் சென்று அங்குள்ள அந்தகாரத்தைப் போக்கி வெளிச்சம் உண்டாக்கி வர அனுமதித்தார். தற்காலம் சமூக சுதந்தரப் பேற்றினைப் பாரதமக்கள் பெறும்படி செய்ய, லோகமானிய பாலகங்காதர திலகரும் மகாத்மா காந்தியடிகளும் தோன்றினர். முற்காலப் பெரியோர் வலியுறுத்திய தியாகாக்கினியிற் குதித்தும், கடமைக் கடலில் மூழ்கியும் நேரடியான வெற்றி பெரல் அரிதென வுணர்ந்து கால நிலைக்கேற்ப அஹிம்ஸை யெனும் மூன்றாவது ஆயுதத்தையும் ஏந்தினர். அந்த
அஹிம்ஸையும் அஹிம்ஸா பாமோதர்ம: என வேதத்தில் மொழித்ததே - உண்மையான தியாச புத்தியும் பற்றற்ற கடமையில் உறுதியும் உள்ளவர்களே அஹிம்ஸையாகிய ஆயதத்தைத் தாங்க முடியுமாதலின் மகாத்மாவே அதைத் தாங்கிக் கடன் ஆற்றுகிறார், ஆற்றும்படி பல பக்குவிகளைத் திரட்டுகிறார்.

சாதாரணமான பொதுமக்கள் வாழ்க்கைத் துறைகளில் சகிக்க முடியாத மாறுதல்கள் நுழைந்தும் செயல்கள் பிறழ்ந்தும் கோணியதினால் போலி யின்பம், பகட்டு விருப்பம், வறுமை, சோம்பல்யாவம் களைகள் போல் வளர்ந்துவிட்டன. இயற்கை யன்னைக்கு அறிவுடை மக்களைப் போல் அறிவில்லாப் பேதை மக்களும் உரிமைப் புதல்வர்களேயன்றோ?

ஈன்ற தாய் விவேகிகளான புதல்வர்களிடம் காட்டும் கவலையைவிட அவிவேகிகளான மக்களிடமே அதிகக் கவலை காட்டுவதியல்பு. – அவ்வாறே நமது பாமா சகோதரர்களைத் தவறான வழிகளிலிருந்தும் திருப்பி உய்விக்கச் செய்யும் பொறுப்பு மேதையுள்ள சகோதார்களின் கடமையாகும். இதுவே அன்னைக்கு உவப்பான பணி. இதைச் செய்யும் பொருட்டே கால தேவதை காலதேச வர்த்தமானங்களுக்கேற்ற தலைவர்கள் சிலரைத் தோற்று விக்கின்றது. இவர்களே தன்னல மறந்து பொதுஜன சேவை புரியும் தியாகிகள் சன்மார்க்களாவர்- இவர்களே தற்காலம் பாரதநாட்டை விழிப்பிக்கவும் உயிர்ப்பிக்கவும் செய்து வரும் லோகமான்யரும் மகாத்மாவும் அவர் வழி பேணி நிற்கும் அன்பர்களுமாவர்.

முந்தியவர் 'நாம் அடிமைகளல்ல. சுதர் தரமென்பது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருதல் வேண்டும்' என்பதான எண்ணத்தையும் விருப்பத்தையும் மக்களிடம் எழுப்பினார். அவ்வாறு உணர்த்தியதற்காக அவர் நினைக்கவு முடியா துன்பங்களுக்குள்ளாகி தன் வாழ்வையே பலி கொடுத்தார். அவர் சிறிதளவும் மனம் சோரவில்லை.

அவரால் எழுப்பப்பட்ட ஆசையைப் பூர்த்தி செய்ய வழி கோல முற்பட்டார் மகாத்மா காந்தி யடிகள்.

 

“மானம் குலம் கல்வி வண்மை – அறிவுடமை

தானம் தவ முயற்சி தாளாண்மை – தேனின்

கசி வந்த சொல்லியர் பாற்கா முறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்''

 

என்ற ஔவையார் வாக்கின்படி நாட்டில் பசிப்பிணி தாண்டவமாடும் படி வறுமை குடிகொண்டது. கைத்தொழில் நாசமாகிச் சோம்பல் இடம் பெற்றது. இயந்திரங்கள் எங்கும் பரவின், இவைகளைப் போக்கி வேத காலத்திலிருந்து இருடியர்கள் புனிதமாக மனதை ஒருமைப்படுத்துவதற்காகவும் கைக்கொண்டதாக ருக்வேதத்தில் கூறப்படும் நூற்றல் தொழிலைத் தற்கால மக்கள் கைக் கொள்ளும்படி அடிகள் வற்புறுத்தினார். இது மிக மிகப் பின்னோட்டமே யென்பது பரதேசிச் சாமான்களைப் பகிஷ்கரித்து சுதேசிச் சாமான்களையே ஆதரிக்கச் சொல்வதும் பழம் பாடமே.

இயந்திரங்களை அணுகாது கைக்குத்தரிசியைப் புசிப்பதே சிறப்பென வலியுறுத்தி வேண்டுவதும் பழங்கால முறையே.

சுதேசிப் பொருள்களை வாங்க விழைவோர் பலர் இருந்தாலும் அவைகளை உற்பத்தி செய்ய முன் வருவோர் இல்லையென்றே கூறலாம். இது குறையைப் போக்கவே சமீபத்தில் ஆரம்பத்திலிருந்தே கைத்தொழிற் கல்வியைப் பள்ளிகளில் புகுத்த முயன்றிருக்கிறார். புதிய முறைகளில் பழமையை அழிக்காமல் உதவக் கூடியவைகள் உளவேல் அவை ஆக்கந்தரத் தடையில்லை.

'பெரியாரே உலகம். உலகமே பெரியார் என்பதை நன்குணர்ந்து அன்னார் கற்பிக்கும் வழி நின்று நன்மை பெற நாட்டு மக்கள் நல்லுடலும் நல் உளமும் ஓம்புதல் இன்றியமையாததென்பதைச் சிந்தியாமல் இருப்பதற் இல்லை. பெரியார் கட்டளையை ஏற்று ஊக்கத்தோடு முயற்சியில் இறங்க நல்லுடலும் நல்லுளமும் முக்கிய சாதனமாகும். அவ்விரண்டும் ஒழுக்கத்தைக் கட்டாயமாக ஓம்பினாலன்றி அடையக் கூடியவைகளல்ல. இத் தகுதிகளைப் பெற வொட்டாமல் தடுப்பதற்குப் பல வழிகள் உளவாயினும் மதுபானமும் சிலனப்படக் காட்சிகளும் முதன்மையானவைகள் என்பது மறுக்க முடியாததாகும். இவைகளால் விளையும் அபாயம் க்ஷணத்திற்கு க்ஷணம் கட்டுக் கடங்காமல் வளர்ச்சி பெறுகிறது. முந்தியதான மது பானம் விரைவிலேயே நாட்டை விட்டு வெளியேறு மென்கிற நம்பிக்கை தற்கால காங்கிரஸ் ஆட்சி முறையின் வரப்பிரசாதமாக ஏற்பட்டிருக்கிறது. மற்றொன் றாகிய படக் காட்சிச் சாலைகளில் நல்லுணர்ச்சியைப் பாழ்படுத்தக் கூடிய ஆட்சேபகரமான கதைகளையும் அருவருப்புக்கிடமாகிய ஹாஸ்யங்களையும் அவசியம் தடுத்தல் வேண்டும். அடியோடு இந்த உயிரற்ற நிழல் ஆட்டம் எடுபடும் சாலம் ஒன்று ஏற்படுமாயின் அதைவிடச் சிறந்த சன்மார்க்க வளர்ச்சிக்கு ஆக்கந்தருவது வேறில்லை யென்று கூசாமற் கூற மிக்க விற்பன்னர்களால் சாதாரண மக்களுக்கு பக்தியையும் நீதியையும் புகட்டும் நோக்கங்கொண்டு கதா காலட்சேபங்கள் ஆதியில் ஏற்பட்டன. அம் முறை அறவே மறைந்து வருவது கண் கூடு. அதிலும் எளிதான முறையில் காடகங்களும், பதுமையாட்டங்களும் கல்வி யறிவில்லாத மக்களுக்குக் களிப்பூட்டி வந்தன. அவைகளெல்லாம் மறைந்துவிட்டன. அவைகளின் அடிச்சுவடுகூட தற்கால யுவர்கள் உணர இடமில்லை.

சமயோசிதமாகவும் சந்தர்ப்ப அநுகூலமாகவும் காலட்சேப விற்பன்னர்கள் மனோதர்ம உலகில் தங்கள் மேதையைக் காட்டி சபையை இன்புறச் செய்துவந்த காலத்தில் அவர்கள் சாதுரிய சக்தியின் அருமையை அநுபவித்த முதியர் இன்னும் பலர் உளர். - அவர்களுக்கு தற்காலத்திய உயிரற்ற உடலற்ற உளமற்ற நிழலாட்டம் எங்ஙனம் இனிக்கும்?

இன்பமாக நோக்கும் தற்கால யுவர் யுவதிகளை இவைகள் எவ்வளவு தூரம் மாறுபடச் செய்து ஸாரமற்ற சக்கைகளாக்கி விட்டதென்பதை அறிவிற் சிறந்தவர்களும் ஒழுக்கப் பற்றுடையவர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

தற்காலம் இச் சினிமாப் பித்தர்கள் சமூக மதிப்பில் மிகவும் இழுக்குற்று வழுக்கி வீழ்கின்றனர் என்பது வெளிப்படை.

புது வெள்ளம் புரண்டு வருகையில் இடையிற் றோன்றி ஊறிய அசுத்தங்கள் கலந்து நிற்பது இயற்கை யென நாம் மேலே குறிப்பிட்டதும் இதைத் தான்.

கைத்தொழில் வளம் பெற்று கட்குடி யொழிந்து மக்கள் தலை தூக்கினாலும் ஒழுக்கத்தை வேரறுக்கும் கேவலமான படக் காட்சிகள் கட்டாயம் தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் நாடு நன்மலர்ச்சியின் பயனைப் பெற முடியாது. அவ்வாறாயின் பழயன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி மாறி, புதியன கழிதலும் பழயன புகுதலும் வழுவல எனப் புதுக்கப்படலாம்.

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment