Sunday, September 6, 2020

 மூட பக்தியின் சிறப்பு

 

“பக்தி வலையில் படுவான் காண்க'' என்பது மெய்யன்பர் அருள் மொழி. 'பக்தி நம்பிக்கை ஆகிய இவற்றின் மூலம் நம்முடைய லக்ஷயத்தை சுலபமாக அடையலாமே யொழிய, தர்க்கம் புரிவதால் எந்நாளும் அதை அடைய முடியாது'- என்பது ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்ஸாது மணிமொழி. பகவத்பக்தி இல்லாத ஜன்மம் வீண் என்பதையே நற்சமயங்கள் எல்லாம் அறிவுறுத்துகின்றன. அவரவர் மனப் பக்குவ நிலைக்கேற்ப பக்திமுறைகளும் பலவகைப்பட்டனவாக இருக்கின்றன. அவற்றுள் எம்முறையைக் கைப்பற்றினும், இறைவனிடம் என்றும் குன்றாத திடநம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்பெறுதல் கூடும். தர்க்க ஞானத்தில் சிறந்த விஞ்ஞானிகள் கூடப் பிரமித்து நிற்குமாறு, உறுதியான நம்பிக்கை உடைய பாமரர்களது மூட பக்தியினால், இன்றும் அருஞ்செயல்கள் பல நிகழ்ந்து வருகின்றன.

 

தன்னைப் பற்றிய அகங்காரம் இருக்கும் வரை, பக்தியால் பயன் எதுவும் விளையாது. வருஷங்கள் பலவாக பல சாத்திரங்களையும் பெரிதும் முயன்று மூளையில் ஏற்றிக் கொண்டும் கர்வம் நீங்கப் பெறாத பண்டிதர்கள் செய்யும் படாடோப பக்திக்கும், எழுதப் படிக்கத் தெரியாதிருந்தும் உறுதியான நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்து வருபவர்களான பாமரர்கள் செய்யும் மூடபக்திக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு.

 

'வெள்ளம் பெருகிச் செல்லும் ஒரு நதியைக் கடந்து செல்ல வேண்டியிருந்த மாணாக்கன் ஒருவன், செய்வகை யறியாது திகைத்துத் தனது குருவிடம் சென்று நின்று முறையிட்டான். அவரும், 'ஆசார்யர் திருவடிகளே சரணம்' என்று ஒரு ஓலைத் துணுக்கில் எழுதி, அதை அவனிடம் கொடுத்து 'இதன் உதவியால் நீ வெள்ளத்தைக் கடந்து செல்வாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். அதில் உறுதியான நம்பிக்கையுடன் கூடியவனாக அம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அவ்வாற்றில் நீந்திச் சென்ற அச்சீடன் விரைவில் கரையேறிச் சென்றான். அதைக் கண்டிருந்த அக்குரு, 'நமது கால்களுக்கும் இவ்வளவு மகிமை இருக்கின்றதா' என்று பெரிதும் வியந்தவராய், 'என் திருவடிகளே சரணம்; என் திருவடிகளே சரணம்'- என்று கூறிக்கொண்டே ஆற்றில் இழியவும், கழுத்தளவு நீரில் சென்றவுடன் தமது விருப்பத்துக்கு எதிர்மாறாக அவ்வெள்ளப் பெருக்குக்குத் துணை செல்ல நேர்ந்தது என்று ஒரு கதை சொல்வதுண்டு. அது கற்பனைக் கதையேயாயினும், உணர்ந்து கொள்ள வேண்டிய பேருண்மையும் அதில் இல்லாமற் போய் விடவில்லை,
 

காலையும் மாலையும் இராமர் பட்டாபிஷேகப் படத்தின் எதிரில், 'மகாபக்தி சிரத்தையோடு சுந்தர காண்ட பாராயண முதலிலும் முடிவிலும் தேங்காய் பழம் சுண்டல் முதலியவைகளுடன் தீபாராதனை. தாளம் மத்தளம் தம்பூர் முதலிய பக்க வாத்தியங்களுடன் பகவத் பஜனை. இவ்வித ஆடம்பரங்களுடன் பக்தி'யில் ஈடுபட்டிருப்போர் பலரது மனங்களில், வெளி நடிப்புக்கு எதிர்மாறான பலவகைப்பட்ட இழிந்த எண்ணங்கள். எழுதப் படிக்கத் தெரியாது. ராகத்தோடு நீட்டி நீட்டிக் கூறும் புராணப் பிரசங்கமும் நெஞ்சில் பதியாது; ராகதாளங்கள் பிசகாது பலர் தலையாட்டும் படி பாடவும் தெரியாது. அத்தகையவர்கள் சிற்சில சமயங்களில் செய்யும் மூடபக்தி, பண்டித மணிகளும் பாகவத சிரோமணிகளும் பரிகசிப்பதாசுவும் இருக்கும். இருந்தாலும், அப்பாமரர்களது மூடபக்தியால் நிகழ்ந்து வரும் அற்புதச் செயல்களைக் கண்டு, சிற்சில சமயங்களில் படேபடே பாகவத சிரோமணிகளெல்லாங் கூட பெரிதும் பிரமித்து நிற்கின்றனர்.

 

பீமசேனன் பெருந் திண்டிக்காரன் என்றும், பகவத் பக்திக்கும் அவனுக்கும் இமய மலைக்கும் குமரி முனைக்கும் இடையிலுள்ள தூரம் என்றும் பரிகசிக்கப்படுவதுண்டு. மற்றெல்லோரையும் விட தன்னிடமே கண்ணபிரானுக்கு அதிக அன்பு என்று அர்ச்சுனனுக்கு நிரம்ப கர்வம். ஒரு சமயம் கண்ணபிரானோடு அர்ச்சுனன் கைலாயம் சென்றானாம். அக் கைலையில், வாடிய மலர்களை - நிர்மால்யங்களை - பல வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்த கிங்கார்கள் சிலர், அவைகளைப் பல போர்களாக குவித்துக் கொண்டிருந்தார்களாம். அது கண்டு பிரமித்து நின்ற அர்ச்சுனன், அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டவை என்று அவர்களை வினவலும், அக்கிங்கரர்கள் 'யாரோ பூலோகத்தில் பீமசேனனாம். அவன் பகவானுக்கு தினந்தோறும் செய்து வரும் மானஸ பூஜையில், ஒவ்வொரு நாளும் இவ்வளவு நிர்மால்யங்கள் குவிந்து விடுகின்றன. இவற்றைக் கொண்டு வந்து போர்களாகக் குவிப்பது எங்களுக்குப் பெரியவேலை ஆகிவிட்டது' என்று பதிலிறுத்தனராம். அதைக் கேட்ட அர்ச்சுனன் மனம், எவ்விதம் திடுக்கிட்டிருக்கக் கூடுமென்பதைக் கூறவும் வேண்டுமோ?

 

தமிழ்நாட்டுக் கிராமங்களில், தற்காலத்தில் மாரியம்மன் பிரசித்தி பெற்ற தெய்யம். அம்மாரியாயி கோயிலிலே, வேதபாராயணம் இல்லை; திருவிழாக்காலங்களில் பிராமண சந்தர்ப்பணை இல்லை; பக்க வாத்தியங்களுடன் நடைபெறும் தாசிக்கச்சேரியும் அங்கில்லை; செந்தலைப் புலிகளாய போலீஸ் வீரர்களின் தடபுடல்களும் அங்கில்லை. ஆனால், அவ்வம்மனுக்கு பிரார்த்தனை செலுத்தும் பாமர ஜனங்களது செயற்கருஞ் செயல்கள், மிக்க பிரமிப்பை விளைவிப்பனவாக இருக்கின்றன. நமது உடலில் ஒரு சிறு ஊசி குத்திவிட்டால், 'ஐயோ! அப்பா! வலிக்கிறதே!' என்று கத்துகிறோம். மாரியம்மன் கோயிலிலோ, அவ்வம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்ட பலர், தத்தமது மார்பிலும் வயிற்றிலும் கைகளிலும் சிறு சிறு ஊசிகள் பலவற்றை குத்திக் கொண்டு, அவ்வூசி முனையில் எலுமிச்சம்பழம் ஒன்றையும் செருகிக் கொள்கின்றனர். அவ்வளவோடு அமையாது முதுகின் நடுவில் இரு சிறு கொக்கிகளைக் குத்திக் கொண்டு அவற்றில் கட்டப்பட்டுள்ள கயிறுகளால் அழகிய சிறு பூந்தேர் ஒன்றையும் கொண்டு தெருத் தெருவாகச் சுற்றி வருகின்றனர். அதனால், அவர்களது உடல்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுவதில்லையாம்.

என்ன கோரமான காட்சி இது! பெரிய பெரிய பட்டினங்களிலே, அழகிய கட்டிடங்களிலே ஏவலாட்கள் பலர் பணிகேட்டு நிற்க மெத்தை தைத்த சோபாக்களிலே அமர்ந்து மின்சார விசிறிக் காற்று வாங்கிக் கொண்டு குஷாலாய் 'பொழுது கழிக்கும் நவீன நாகரிகஷோக்காளிகள், மேற்குறிப்பிட்ட பிரார்த்தனைக்காரர்களது அற்புதச் செய்கைகளைச் சிறிது சிந்தித்துப் பார்ப்பார்களா? அப்பிரார்த்தனைக்காரர்கள் ஜால வித்தைகளில் தேர்ந்தவர்கள் என்று சொல்லி விடத் துணிவு கொள்வார்களா? வேதாந்த சித்தாந்த தத்துவ புராண விசாரம் சிறிதளவும் செய்தறியாத பாமரஜனங்கள், தெய்வத்தின் பெயரால் அத்தகைய அற்புதச் செயல்களைச் செய்து வருவது எதனால்? கள்ளம் கபடறியாத மனமார்ந்த - உறுதியான – தீவிர நன்னம்பிக்கையினாலேயே அல்லவா? ஆகவே, அன்பர்காள்! இன்று நமக்கு வேண்டுவது என்ன? நம்பிக்கை! நம்பிக்கை!! நம்பிக்கை!!!

 

தமிழகத்தில் 'வேடுவர்' என்பதொரு சாதியினர் இருக்கின்றனர். அவர்களது பேச்சும் வாழ்வும் மற்றவர்களால் பரிகசிக்கக்கூடியனவாக இருக்கும். அவர்கள் வழிபடுவது கன்னிமார் 'என்னும் தேவதைகள். இரவுகளில், அவர்கள் கூட்டமாகக் கூடி உட்கார்ந்து கொண்டு பாட்டுகள் பல பாடிக் கொண்டு அவர்களது இஷ்ட தேவதைகளைக் குறித்து தோத்திரம் செய்து கொண்டிருப்பது வினோதமானதொரு காட்சியாகும். சில சமயங்களில் அவர்கள் விசேஷ பூஜைகள் செய்வதுண்டு; அப்பொழுது அவர்களில் ஒருவன் மீது ஆவேசம் வந்துவிடும். அவ்வாவேசக்காரன் குதித்தெழுந்து தலையைச் சுற்றிக் கொண்டே,

 

வைக்கிறேன் வைக்கிறேன் இன்னிங்களே! வைக்காத பூட்டிங்களே!

கொத்தோடே வாயப்பயம் கொண்டு படைக்கிறேன் இன்னிங்களே!

 

என்று பாடிக் கொண்டே மற்றவர்களை அதட்டுவான். அவர்கள் பெரிதும் அஞ்சியவர்களாய் 'ஆத்தே கன்னியம்மா அல்லாத்தையும் பொறுத்துக்கணு - என்று வேண்டிக்கொண்டு, அக் கன்னியம்மையின் சிலையை அலங்கரித்து எடுத்துக் கொண்டு ஊர்கோலமாகக் கொண்டு வரத் தொடங்குவர். அவ்வாவே சக்காரன் சாமியின் முன்னே ஆடிக்கொண்டே வருவான்; வீடுதோறும் அச் சாமி நின்று கொண்டே வரும். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஆடிக் கொண்டே வரும் அவ்வாவேசக்காரன், தனது வலக்கையை உயரத் தூக்கிக் காட்டுவான். அருகிலிருக்கும் ஒருவன் தனது கையில் பிடித்திருக்கும் சணற் கயிற்றினால் உறுதியாகப் பின்னப்பட்ட நீண்ட சாட்டையினால் பளார் பளார் என அவனது கையில் ஓங்கி அடிப்பான்; சில சமயங்களில் அக்கையில் இரத்தம் பீரிட்டு ஒழுகுவதும் உண்டு. ஆயினும், அவ்வாவேசக்காரன் அதனால் சிறிதும் சலிப்படைவதில்லை. நவீன நாகரிகச் செல்வச் சீமான்களே! இவ் வற்புதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

 

பாண்டவர் தேவியாகிய பாஞ்சாலி அம்மையார், தற்காலத் தமிழ் நாட்டில் பலருக்குக் குலதெய்வமாக இலங்குகின்றாள். அத் திரௌபதி அம்மன் திருவிழாக்களிலே 'நெருப்பு மிதிக்கும் திருவிழா' மிக்க வியப்பை விளைவிப்பதாகும். அத் திருவிழாவில் நெருப்பு மிதிப்பதாக அம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்ட ஆடவர்கள், குறிப்பிட்ட தினத்தன்று நீராடி, சேலை ரவிக்கை நகைகள் முதலிய அணிந்து பெண் வேடம் பூண்டு ஆலயத்தை அடைவர். சுமார் பத்தடி நீளம் பரப்பப்பட்டு கொளுத்தப்பட்ட விகுக் கட்டைகள் 'தக தக' வென்று தணலாகி ஜ்வலித்துக் கொண்டிருக்கும். அப்பிரார்த்தனைக்காரர்கள் திரௌஅம்மனைத் துதித்துக் கொண்டே, சாதாரண தரைமீது நடந்து செல்வதே போல் அத்தணல் மீது நடந்து செல்வர். அதனால் அவர்களது கால்கள் சற்றும் கொப்புளங் கொள்வதுமில்லை. தீயில் தோன்றிய திரௌபதி அம்மனை வழிபடும் அன்பர்கட்கு, இன்றும் அத் தீ குளிர்ந்திருக்கின்றது போலும்! ஆடவர்களே யன்றி சின்னஞ் சிறுவர்களும் கூட அவ்வாறு அந் நெருப்பின் மேல் நடந்து செல்வதுண்டு. நமது விரலில் சிறிதளவு நெருப்புச் சுட்டுவிட்டாலும், உடனே கொப்புளம் உண்டாகி பெரிதும் வருந்துகின்றோம் அல்லவா? பத்துப்பன்னிரண்டடி நீளம் பரப்பப்பட்ட நெருப்பின் மேலே அவர்கள் அவ்வளவுஉற்சாகத்துடன் நடந்து செல்வது எவ்வாறு சாத்தியமாகின்றது? அவர்கள் அம்மனின் சக்தியில் கொண்டுள்ள தளரா நம்பிக்கையினாலேயே அல்லவா அவ்வரிய செயலும் எளிதாகின்றது! ஆகவே, அன்பர்காள் பக்தி நெறியில் வெற்றிபெற வேண்டுமாயின், நமக்கு வேண்டுவது என்ன? நம்பிக்கை! நம்பிக்கை!! நம்பிக்கை!!!

 

 

 

செந்தமிழ் நாட்டின் வட எல்லையாகிய திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாள் சந்நிதியிலேயே, இடைவிடாமல் 'கோவிந்தா! கோவிந்தா !!' என்று கோஷித்துக் கொண்டும், பிரகாரங்களில் தேங்கி நிற்கும் சேற்றையும் ஜலத்தையும் தூசுகளையும் பொருட்படுத்தாது தரையில் படுத்துக் கொண்டு உருண்டு உருண்டு சென்றவாறு 'அங்கப்ரதட்சிணம்' செய்து கொண்டும், பெருமாள் சேவையை முன்னிட்டுக் கோயிற் சேவகர்கள் தமது முதுகின் மேல் அடிக்கும் தோல்பட்டை அடிகள் பலவற்றையும் பொறுமையுடன் சீரிய சத்தியாக்கிரகிகளே போல் சகித்துக்கொண்டும் வரும் பாமர ஜனங்களது மூட பக்திக்கும், எந்த இடத்தில் ததீயாராதனை நடக்கின்றதோ என்று இராமாநுஜ கூடங்கள் தோறும் தேடித் திரிந்து வாடிவருந்தும் பட்டைத் திருமண் பன்னிரண்டும் அணிந்த பாகவத சிரோமணிகளுடையவும் பந்திக்கு முந்திக்கொள்; படைபிந்திக்கொள் 'என்றதற் கிணங்க சந்தர்ப்பணை நடக்கும் இடங்களில்

 

 

இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே எழுந்தருளியிருந்து உதர நாராயணனுக்கு வஞ்சனை செய்யாது கொண்டமட்டும் 'அம்சை பண்ணியருளி 'உண்ட களைப்புத் தீரக் கும்பலாக உட்கார்ந்து’ தாம்பூல பஞ்சாதி' ஓதும் ஸ்வாமிகளுடையவும் சாஸ்த்ரோக்த 'பக்திககும் எவ்வளவு வித்தியாசம்! வடக்கு மலையானுக்கு மகிழ்வூட்டக் கூடியது பாமரர்களது கபடற்ற மூடபக்தியா? பாகவதர்களுடையவும் ஸ்வாமிகளுடையவும் படாடோப பகதியா? தம்மைப் பற்றிய காவமும் உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசும் கள்ள மனமும் நீங்காதவரை, எவ்வளவு பகதியாக நடிப்பினும் என்ன பயன்? படித்த அறிஞர்களின் கர்வம் அகலாத பக்தியை விட, படியாத பாமரர்களின் கர்வம் அறியாத பக்தி எவ்வளவோ சிறந்த தல்லவா? இது பற்றியே போலும் தாயுமானவரும், ''கல்லாத பேர்களே நல்லவர்கள் நலலவர்கள்; கற்றும் அறிவில்லாத என் - கன்மத்தை என் சொல்கேன்? " - என்று அருளிச் சென்றார்.

 

மேலும், மூடபக்தி உடையவர்களைத் திருத்துவது மிக்க எளிது. ஆனால், வித்யாகர்வமுடைய படாடோப பக்தர்களைத் திருத்துவது மிக்க கடினம். உள்ள உண்மைகளை எடுத்து விளக்கிக் காட்டினால், அவை கர்வமற்ற பாமரர்களது மனதில் படிவது போல் கர்வம் மிக்க ஆடம்பர பக்தர்களது அகத்தில் எளிதில் படிவதில்லை. " ஆணியானது கல்லுக்குள்ளே நுழையாது; மண்ணுக்குள்ளே சுலபமாக நுழையும். அதுபோல, மகான்களின் போதனைகள் பிரபஞ்சத்திலே தடித்துக் கடினமாக இருக்கின்ற மனத்துக்குள்ளே நுழை விசுவாசமும் நம்பிக்கையும் இருதயத்துள் நுழைந்து விடும் " - என்னும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரது அருள்மொழிகள் ஈண்டு கவனிக்கத் தக்கன.

கோழிகள் ஆடுகள் முதலிய ஏழைப்பிராணிகள் அநியாயமாகப் பலியிடப்பட்டு வரும் கொடுமை மட்டும் நீங்கிவிட்டால், மாரியம்மன் திரௌபதியம்மன் முதலிய தேவதைகளின் கோயில்கள் எவ்வளவோ சிலாகிக்கத் தகுந்தனவாகும். மாமிசத்தில் நாம் கொண்டுள்ள பேராசையை தெய்வத்தின் மீது ஏற்றி, 'பலி கொடுக்கா விட்டால் சாமிக்குக்கோபம் மிகுந்து பலவித துன்பங்களை உண்டாக்கிப் பெரிதும் வாட்டிவிடும்' என்று பாமரர்களைப் பயப்படுத்தி, எண்ணிறந்த ஏழைப்பிராணிகளை கொல்வித்து வரும் படுபாவிகளான பூசாரிகளின் மிருகத்தன்மை வாய்ந்த இழிசெயல்களால், கபடமற்ற மூடபக்தியின் பெருமைக்குப் பேரிழுக்கு உண்டாகின்றது. அதன் பயனாக, சீவகாருண்ய சீலர்களான உண்மை அன்பர்கள், அக்கோயில்களைக் காணுந்தோறும், கலியுறு தெய்வச் சிறிய வெங்கோயில் கண்டகாலத்திலும் பயந்தேன் என்ற வள்ளலார் அருளியவாறு அஞ்சி அகன்று விடுகின்றனர்.

 

செந்தமிழ் நாட்டுப் பக்தர்களே! எளிய மக்களை எள்ளி நகையாடும் இயல்பினரே! கற்றும் கர்வம் அகலாத கண்ணியவான்களே! கர்வமற்ற - கபடமற்ற - மனமார்ந்த - உண்மை யன்புடைய- தீவிர நம்பிக்கையுடைய - மூடபக்தியின் பெருமையை உணராது அதைப் பரிகசியாதீர்கள்! மனமார்ந்த - உறுதியான நன்னம்பிக்கையினால் செயற்கரும் செயல்களும் எளிதில் நிறைவேறுதல் கூடும்' என்பதை உணருங்கள்! 'மூடபக்தி' க்குப் பேரிழுக்கை உண்டாக்கும் உயிர்ப்பலியிடும் கொடிய பழக்கத்தைத் தமிழ்நாட்டினின்றும் விரைவில் விலக்க முயலும் பணியில் தீவிரமாகத் தலைப்பட்டு உழைக்க முன் வாருங்கள். உள்ளம் தூய்மையாகவும் கர்வமற்றதாகவும் இருப்பின், இறைவனது இன்னருள் எய்தப் பெறுவது உறுதியாகும். திருவருள் முன்னிற்க.!

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 

 

 

   

No comments:

Post a Comment