Sunday, September 6, 2020

 

லோகமான்ய பாலகங்காதர திலகர்

 

பண்டைப் பெருமை வாய்ந்த நம் பாரத நாட்டில் தோன்றிய தலைவர்களில் லோகமான்ய பாலகங்காதர திலகரும் ஒருவராவர். நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல கஷ்டங்களை அனுபவித்து இந்தியர்களுக்குத் தேசபக்தியும், சுதேச உணர்ச்சியும் ஏற்படும்படி செய்த உத்தமர் லோகமான்ய திலகரேயாவர். அப்பெரியவர், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகச் செய்திருக்கின்ற அரிய ஊழியங்களை நாம் என்றும் மறக்கவே முடியாது. இந்தியப் பொதுமக்களின் அரசியல் அறிவை வளர்க்க அப்பெரியார் செய்த முயற்சிகள் எண்ணில். சுயநலங்கருதாமல் பொது நலங்கருதிப் பலவித கஷ்டங்களை அனுபவித்த அட்பெரியாரின் தூயவாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களைப் பற்றியும், அவர்கள் நடத்தி வந்த சிறந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்களது அரிய ஊழியங்களைப் பற்றியும் படிப்பதனால் நம் தமிழ் மக்கள் திருந்தித் தங்களது வாழ்க்கையைத் தூய்மை யடையும்படி செய்து கொள்ளலாம்.


 பிறப்பு.

 

இந்தியர்களுக்குப் புத்துயிரளித்த லோகமான்ய பால கங்காதர திலகர் 1856 – ம் வருஷம் ஜூலை மாதம் 23 - ந் தேதியன்று மகாராஷ்டிரதேசத்தில் உள்ள இரத்தினகிரி என்ற நகரில் கௌரவம் வாய்ந்த ஒரு சித்பாவன் பிராமண குடும்பத்திலே பிறந்தார். அவரது தந்தையான இராமச்சந்திர திலகர் முதலில் கொஞ்சகாலம் இரத்தினகிரியிலுள்ள பாடசாலையில் உதவி உபாத்தியாயராக இருந்து பிறகு தானா நகரிலும், புனா நகரிலும் கல்வி இலாக்கா உதவி இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இலக்கணத்திலும் திரிகோணமிதி என்கிற கணிதசாஸ்திரத்திலும் அவர் ஒரு சிறந்த அறிஞராக விளங்கிவந்தார். இலக்கண சம்பந்தமாகவும், திரிகோணமிதி என்ற கணிதசாஸ்திர சம்பந்தமாகவும் அவர் பல அரிய நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார். இளமையிலிருந்தே திலகர், மிகுந்த அறிவுடையவராகவும், சாமர்த்தியமுள்ளவராகவும், தைரியமுள்ளவராகவும் இருந்து வந்தார். அக்காலத்தில் அவரது ஞானத்தையும், அறிவையும் கண்டு பலர் வியந்தனர். அவருக்குப் பதினாறு வயது ஆவதற்கு முன்பே அவரது தந்தையார் ஈசன் திருவடி நிழலை யடைந்தார். திலகரின் பால்யத்திலேயே அவரது அன்னையும் இறந்து போய்விட்டார். தந்தை இறந்ததும் லோகமான்யதிலகர் தாய் தந்தையற்ற பிள்ளையாய் விட்டார்.


 
கல்வி.

 

தந்தையை இழந்த நான்கு மாதங்களுக்குப்பிறகு அவர் மெட்றிகுலேஷன் பரீட்சையில் தேறினார். பின்னர் அவர் தமது சுற்றத்தார்களின் ஆதரவு பெற்று டெக்கான் உயர்தரக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வந்தார். 1876 - ம் ஆண்டில் அவர் பி. ஏ. பரீட்சையில் கீர்த்தியுடன் தேறினார். பிறகு அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து அங்கு சட்டங்களைப்பற்றிப் படித்து வந்தார். 1879 - ம் வருஷத்தில் அவர் எல். எல். பி. என்ற சட்டபரீட்சையில் சிறப்புடன் தேறினார். கலாசாலையில் படித்துவந்த காலத்திலேயே அவருக்குப் பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது. அவர் அந்த அறிஞர்களுடன் பல பெரிய விஷயங்களைப்பற்றி அடிக்கடி வாதிப்பது வழக்கம். கல்லூரியில் படித்து வந்த நாட்களிலிருந்தே அவருடைய மனதில் பெரிய எண்ணங்களும், காரியங்களும் உதிக்க ஆரம்பித்தன. அந்தப் பெரும் எண்ணங்கள் நாளடைவில் வளர்ந்து அவரது மனதில் வேரூன்றிவிட்டன. பூனாநகரிலுள்ள பர்கூஸன் கலாசாலைக்குத் தலைவராக இருந்த ஸ்ரீமான் அகர்கார் 1877 - ம் ஆண்டு முதல் திலகருக்குச் சிறந்த நண்பராக இருந்தார்.


 தேசசேவை.

 

லோகமான்ய திலகரும் அகர்காரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்த காலத்தில் அவர்கள் இருவரும் அடிக்கடி " தாங்கள் நாட்டிற்கு எவ்விதத் தொண்டாற்றலாம் " என்று யோசித்து வந்தனர். தூக்கம் என்பது கூட இல்லாமல் பலநாட்கள் இவ்விஷயமாக அவர்கள் யோசித்து வந்தார்களென்று பலர் கூறுவதுண்டு. அரசாங்கத்தின்கீழ் யாதொரு உத்தியோகமும் ஏற்றுக் கொள்ளுவதில்லையென்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டனர். மகாராஷ்டிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி போதிக்க ஒரு பாடசாலையை ஏற்படுத்த வேண்டுமென்று அவ் விருவரும் பெரிதும் விரும்பினார்கள். இவர்களது யோசனைகளையும், தீர்மானங்களையும் கேட்டுப் பலர் இவர்களை எள்ளி நகையாடினர். பெரிய காரியங்களைச் செய்வதற்கு இந்த இளைஞர்களால் முடியுமோ என்று பலர் பரிகசித்தனர். ஆனால் லோகமான்யரும், அகர்கரும் அவைகளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சீக்கிரத்தில் இவ்விருவருக்கும் ஸ்ரீமான் விஷ்ணு கிருஷ்ண சிப்ளங்கர் என்ற பெரியாரின் நட்பு கிடைத்தது. சிப்ளங்கர் பல காலம் வரையில் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து வேலை பார்த்து வந்தவர். பிறகு அவருக்கு அரசாங்க உத்தியோகத்தில் வெறுப்பேற்பட்டு விட்டது. எனவே அவர் தமது உத்தியோகத்தை வெறுத்துத் தள்ளி, ஒரு பாடசாலையைச் சிறந்த முறையில் அமைத்து அதைத் தனியாக நடத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் பூனா நகருக்கு வந்து சேர்ந்தார். பிறகுதான் சிப்ளங்கரின் நட்பு லோகமான்ய திலகருக்கும், அகர்கருக்கும் கிடைத்தது. இம்மூவரும் சேர்ந்து புதிதாக ஒரு பாடசாலையை ஏற்படுத்தும் விஷயமாக யோசித்தனர். அப்பொழுது இவர்களுக்கு சிறந்த அறிஞரும், அஞ்சாத நெஞ்சுப் படைத்த வருமான ஸ்ரீமான் எம். பி. நாம் ஜோஷி என்ற பெரியாரின் நட்பும் உதவியும் கிடைத்தன. 1880 - ம் வருஷம் ஜனவரி மாதம் இரண்டாந் தேதியன்று லோகமான்ய திலகர், விஷ்ணுசாஸ்திரி, நாம் ஜோஷி ஆகிய இம்மூவரும் சேர்ந்து பூனா நகரில் '' புதிய ஆங்கில பாடசாலை'' என்ற பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்கள். அவ்வருஷம் ஜூன் மாதத்திலேயே சம்ஸ்கிருதத்தில் சிறந்த பாண்டித்தியம் பெற்று விளங்கிய ஸ்ரீமான் ஆப்ட் என்ற பெரியாரும் அவர்களுடைய முயற்சியில் கலந்து கொண்டார். 1880 - ம் ஆண்டில் ஸ்ரீமான் அகர்கார் எம். ஏ. பரீட் சையில் தேறினார். பின்பு அவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவ்வைந்து பேர்களும் தேசநன்மையைக் கருதித் தங்களது வாழ்நாட்கள் முழுவதும் உழைக்க உறுதி செய்து கொண்டனர். பிறகு ''மராட்டா' என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் ''கேஸரி'' என்ற மகாராஷ்டிர வாராந்தப் பத்திரிகையையும் இவர்கள் நடத்த ஆரம்பித்தனர். இவ்விரண்டு பத்திரிகைகளும் தழைத்தோங்கிப் பிரபலமாயின. இன்றும் அவ்விரு பத்திரிகைகளும் மகாராஷ்டிரதேசத்தில் செல்வாக்குடன் நிலவி வருகின்றன.

 

பின்பு ஸ்ரீமான் விஷ்ணுசாஸ்திரி அந்தப் பத்திரிகைகளை அச்சிடுவதற்காக ''ஆரிய பூஷணம்'' என்ற ஒரு பெரிய அச்சுக்கூடம் ஏற்படுத்தினார். சித்திரத் தொழிலில் நாட்டிலுள்ளவர்களுக்குத் தகுந்த பயிற்சியைக் கொடுக்க ஒரு சித்திரகலாசாலையையும் ஏற்படுத்தினார். இந்த ஐந்து பேர்களும் அந்த ஸ்தாபனங்களைப் பற்றிய காரியங்களைச் செய்து கொண்டே கொஞ்சகாலம் கழித்தனர். லோகமான்ய பாலகங்காதர திலகர் ''மராட்டா' பத்திரிகைக்கு ஆசிரியராகவும், ஸ்ரீமான் அகர்கார் ''கேசரி'' பத்திரிகைக்கு ஆசிரியராகவும் அமர்ந்து உழைத்து வந்தனர். அவர்கள் இருவரும், பொதுஜனங்களுக்குள் தேசபக்தியும், சுதேச உணர்ச்சியும் ஏற்படும்படி அடிக்கடி அரிய பல விஷயங்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி வந்தனர். ''மராட்டா'',"கேசரி' பத்திரிகைகள் பரவப்பரவ ஜனங்களுக்குள் நாளுக்குநாள் சுதந்திர உணர்ச்சி வலுத்து வந்தது.

 

காங்கிரஸ் தொண்டு.

 

பிறகு அவர் இராஜீய விஷயங்களில் மிகவும் தீவிரமாகத் தலையிட்டு உழைக்க ஆரம்பித்தார். தேசநன்மையைக் கருதி உழைத்து வந்த காங்கிரஸ் மகாசபையின் தக்ஷண கமிட்டிக்கு அவர் பல ஆண்டுகள் வரையில் காரியதரிசியாக இருந்து ஊழியம் செய்துவந்தார். பத்தாவது காங்கிரஸுக்கும் லோகமான்ய திலகரே காரியதரிசியாக இருந்து உழைத்து வந்தார். ஆசார சீர்திருத்த மகாநாடும் காங்கிரஸ் பந்தலிலேயே நடைபெறு மென்று கேள்விப்பட்டதும் அவர் அந்தவேலையிலிருந்து விலகிக்கொண்டார். பம்பாய் மாகாண கான்பரென்ஸுக்கு அவர் பலசமயங்களில் காரியதரிசியாக இருந்து தேசத்தொண்டு செய்துவந்தார். பம்பாய் மாகாணத்தில் நடைபெற்ற முதல் ஐந்து கான்பரென்ஸுகள் லோகமான்ய திலகரின் முயற்சிகளினாலேயே நடைபெற்றன. 1893 - ம் வருஷத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பெரிய சச்சரவேற்பட்டது. அப்போது திலகர் அவ்விருவகுப்பினர்க் குள்ளும் ஏற்பட்டிருந்த விரோதத்தையும், வேற்றுமைக் குறைவுகளையும் நீக்கி அவர்களுக்குள் ஒற்றுமையும், சினேகப் பான்மையும் ஏற்படும்படி செய்தார்.

 

பம்பாய் சர்வகலாசாலையார், பம்பாய்ச் சட்டசபைக்கு லோகமான்ய திலகரை இருமுறை தங்களுக்குப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனுப்பினார்கள். 1895 - ம் வருஷம் அவர் பம்பாய் நகரசபைக்கு ஓர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் நகரசபையில் அங்கத்தினராக இருந்த காலத்தில் நகரவாசிகளின் நன்மையைக் கருதி அவர் பல அரிய ஊழியங்களைச் செய்திருக்கின்றார்.

 

பொது ஜனங்களுக்கு நாட்டு உணர்ச்சியை உண்டாக்க அவர் பெரிதும் உழைத்து வந்தார். பெரிய வீரர்களின் பொருட்டு விழாக்களைக் கொண்டாடுவதனால் ஜனங்களுக்குத் தேசபக்தி அதிகமாகு மென்பதை அறிந்து அவர் மகாராட்டிர வீரரான சிவாஜிக்கு விழாக் கொண்டாட வேண்டுமென்று அடிக்கடி தமது பத்திரிகைகளில் எழுதிவந்தார். ராய்கஞ்ச் என்ற இடத்திலிருந்த சிவாஜிவீரரின் உருவச்சிலையையும், கோட்டையையும் பழுதுபார்க்க வேண்டு மென்று அவர் 'கேஸரி'' பத்திரிகையில் எழுதியதும் அதற்காகச் சுமார் 20000 ரூபாய் வரையில் அவருக்குக் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு திலகர் அந்த சிவாஜிவீரரின் உருவச்சிலையையும், கோட்டையையும் பழுது பார்த்து, அவருடைய ஞாபகார்த்தமாகப் பலப்பெரும் விழாக் கொள்டாட்டங்களை நடத்தினார்.

 

தற்காலம் நாட்டில் போதிக்கப்பட்டு வருகின்ற கல்விமுறையில் திலகருக்கு வெறுப்பு அதிகம். இந்தியர்கள் மேன்மையுற வேண்டுமானால் சிறந்த முறையில் அவர்களுக்குக் கல்வி போதிக்கப்படவேண்டும் என்ற விஷயமாக அவர் அடிக்கடி தமது "மராட்டா'' பத்திரிகையில் பல சிறந்த கட்டுரைகளை எழுதிவந்தார். ஹிந்து மதத்திலும், ஹிந்துப் பெரியோர்களிடத்திலும் திலகருக்கு அளவுகடந்த அன்பும், பக்தியும் உண்டு. ஹிந்துக்கள் தங்களது மதக்கோட்பாடுகளின்படி நடந்து தங்களது பெரியார்களைப் போற்றி வந்தால், ஹிந்து மதமும், சமூகமும் சிறப்புற்றோங்கி வளருமென்று லோகமான்ய திலகர் நம்பியிருந்தார். 1896 - ம் ஆண்டிலே பம்பாய் மாகாணத்தில் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஏழைஜனங்கள் பஞ்சத்தினால் பீடிக்கப் பட்டுப் பலவித கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். திலகர் அந்தக் கொடிய மாகபஞ்சத்தினால் பீடிக்கப்பட்டு வருந்தும் ஏழைஜனங்களைக்காக்க மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துவந்தார். தானியக் கடைகளைப் பல இடங்களிலேற்படுத்தி அவற்றில் எளியஜனங்களுக்கு விலைசரசமாக உணவுப் பொருள் கிடைக்க அவர் ஏற்பாடு செய்தார். நாகப்பூரிலும், ஷோலாம்பூரிலு முள்ள நெசவுக்காரர்கள் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டுக் கஷ்டப் படுவதைக்கண்டு அவர், அவர்களுடைய கஷ்டங்களை நீக்கப் பல விதத்திலும் முயன்று வந்தார். 1897 - ம் வருஷத்தில் பம்பாய் மாகாணமுழுவதும் பிளேக் என்ற கொடிய நோய்பரவியது. அந்தநோயைப் பரவாமல் தடுக்க, திலகர் பூனாநகரில் பல வைத்தியசாலைகளை ஏற்படுத்தி ஜனங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார். தமது உயிருக்கும் அஞ்சாமல் அவர் அக்காலத்தில் எளியவர்களுக்குச் செய்த உதவிகள் அளவிடக் கூடியவைகளல்ல. 1895 - ம் வருஷம் ஜூன்மாதம் 13 - ந்தேதி சிவாஜியின் உற்சவம் கொண்டாடப்பட்டது. 15 - ந்தேதியன்று, அவர் சிவாஜியின் பெருமைகளைப் பற்றிக் கூறியவைகளையும், தூங்கிக்கிடந்த மகாராஷ்டிரர்களை விழித்துக் கொள்ளும்படி செய்ய அவர் கூறிய மொழிகளையும், ''கேஸரி'' பத்திரிகையில் எழுதி வெளியிட்டார்.


 
மீண்டும் சிறைவாசம்.


      ௸ ஜூன்மாதம் 22ந்தேதியன்று மிஸ்டர் ராண்ட் என்பவரும், லெப்டினண்ட் அபஸ்ட் என்பவரும் ஒரு மகாராஷ்டிர பிராமணச் சிறுவரால் கொலையுண்டனர். இக்கொலைக்குத் திலகர் தமது ''கேஸரி'' பத்திரிகையில் எழுதி யுள்ள கட்டுரைகளே காரணம் என்று அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். திலகரிடத்தில் முன்பே அரசாங்கத்தாருக்கு அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டிருந்தன. 'கேஸரி'' பத்திரிகையை அடக்க வேண்டு மென்று அவர்கள் எண்ணங்கொண்டு ஷை ஜூன் 27 - ந்தேதி யன்று லோக மான்ய திலகரைப் பம்பாயில் கைது செய்தார்கள். பிறகு பம்பாய் ஹைகோர்ட் டில் விசாரணை நடந்தது. அதில் லோகமான்யருக்குப் பதினெட்டுமாதம் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டது. அந்தவழக்கு சம்பந்தமாக அவர் பிரிவி கௌன்ஸிலுக்கு மனுச் செய்து கொண்டார். அதனால் யாதொருபயனும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் திலகரிடத்தில் அதிகமதிப்பும், கௌரவமும் வைத்திருந்த அறிஞர் மாக்ஸ்முல்லரும், வில்லியம் ஹண்டர் என்பவரும் அவரை விடுதலை செய்துவிடவேண்டு மென்று மகாராணிக்கு மனுச்செய்து கொண்டதன் மேல் அவர் கைது செய்யப்பட்ட ஒருவருஷ காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார்.

 

சிறைவாசம் செய்ததன் பயனாக அவரது உடல்நிலை மெலிந்து அவருக்குப் பலகஷ்டங்கள் ஏற்பட்டன. அதனால் அவர் கொஞ்சகாலம் தமது தேக சௌக்கியத்தைக் கருதி சிங்க்ஹாட் என்ற இடத்தில் காலங்கழித்து வந்தார். பிறகு 1898 - ம் வருஷம் அவர் இச்சென்னையில் நடைபெற்ற காங்கிரஸுக்கு வந்து இங்கிருந்து இலங்கை முதலிய இடங்களுக்குச் சுற்றுப்பிரயாணம் செய்தார்.

 

சிறையிலிருந்து வந்த காலத்தில் அவர் ருக்வேதத்தை ஆராய்ச்சி செய்து வந்தார். 1898 - ம் ஆண்டில் சிறையிலிருந்து விடுதலையடைந்து சிங்ஹாட்டில் தங்கியிருந்த பொழுது 'வடதுருவத்தில் வேதத்தின் இடம் " என்ற ஓர் அரிய நூலை எழுதி முடித்தார். அந்த நூலைச் சிலகாலம் வரையில் அவர் வெளியிடவேயில்லை. பின்பு 1903 - ம் வருஷம் மார்ச்சுமாதத்தில் அச்சிறந்த நூலை வெளியிட்டார். அந்த நூலைப் போற்றிப் புகழாதார் ஒருவருமேயில்லை.

 

பின்பு அவர் நாளுக்குநாள் காங்கிரஸிலீடுபட்டு, தேசத் தொண்டு செய்வதற்கு ஆரம்பித்தார். அக்காலத்தில் லார்டு கர்சன் துரைமகனார் இந்தியாவுக்கு இராஜப்பிரதிநிதியாக இருந்து வங்காளப் பிரிவினைத் திட்டத்தை ஏற்படுத்தினார். வங்காளப் பிரிவினைத் திட்டம் அக்காலத்திலிருந்து வந்த ஜனங்களுக்குள் ஆத்திரத்தையும், தீவிர உணர்ச்சியையும் எழுப்பிவிட்டது. லார்டு கர்ஸனின் வங்காளப் பிரிவினைத் திட்டத்தையும், அடக்குமுறைகளையும் கண்டு லோகமானிய திலகர் காங்கிரஸில் அமிதவாதக் கட்சியென்ற ஒரு தீவிர தேசீயக்கட்சியை ஏற்படுத்தினார். இக்கட்சியினர்கள் மிதவாதிகளைப்போல் அரசாங்கத்தைக் கெஞ்சாமல் சுயமதிப்புள்ளவர்களாய், சுதேசீயத்தைக் கைக்கொண்டு, அன்னிய சாமான்களைப் பகிஷ்கரித்து, சட்டமறுப்பு முதலிய வழிகளைக் கையாண்டனர். அந்தக் கட்சிக்கு லோகமான்ய பாலகங்காதர திலகரே தலைவராகச் சிறந்து விளங்கினார். மிதவாதக்கட்சியினர் திலகரின் கட்சிக்கு விரோதமாகத் தங்கள் காரியங்களைச் செய்து வந்தனர். லோக மான்ய திலகர் நாட்டில் தமது கட்சியைப் பலப்படுத்த மிகவும் பாடுபட்டு உழைத்து வந்தார். 1907 - ம் ஆண்டில் சூரத் நகரில் டாக்டர் ராஷ்பிஹாரி கோஷ் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற காங்கிரஸில் இரண்டு தனிக் கட்சிகள் ஏற்பட்டுக் காங்கிரஸ் கலைந்து போய்விட்டது. பலர், திலகரினால் தான் காங்கிரஸ் கலைந்தது என்று அவரை, வாயில் வந்தபடி தூற்றினார்கள். ஆனால் சூரத் பிரிவினைக்குக் காரணம் பாலகங்காதரதிலகர் அல்லர். அதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை.

 

அவரது மூன்றாவது சிறைவாசம்.

 

சூரத் பிரிவினை ஏற்பட்டதிலிருந்து அரசாங்கத்தார் லோகமான்ய திலகரின் மேல் வெறுப்படைந்தவர்களாய் அவர்மீது தங்கள் கவனத்தைச் செலுத்தி வந்தனர். லார்டு கர்சன் துரை மகனார் வங்காளத்தை இரண்டு பிரிவாகப் பிரித்துவிட்டுச் சென்றது இந்தியர்களுக்குள் ஆத்திரத்தையும், மனக் கொதிப்பையும் உண்டு பண்ணி விட்டது. அதன்பயனாக வங்காளத்தில் பல இடங்களில் சில்லறைச் சச்சரவுகளும், குழப்பமும் ஏற்பட்டன. அரசாங்கத்தார், பலரைத் தங்களது அடக்குமுறைச் சட்டங்களினால் அடக்க ஆரம்பித் தார்கள். அதனால் இந்தியா முழுவதும் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டது. 1908 - ம் வருஷத்தில் முசவர்ப்பூர் என்ற இடத்தில் இரண்டு ஐரோப்பியப் பெண்மணிகள் "பாம்" என்ற வெடிகுண்டினால் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அரசாங்கத்தாருக்கு மிகுந்த பீதியையும், அச்சத்தையும் உண்டு பண்ணி விட்டது. அப்பொழுது இந்தியாவில் நடைபெற்றுவந்த ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகளெல்லாம் அடக்குமுறையைக் கையாளும்படி அரசாங்கத்தினரை வற்புறுத்தி எழுதி வந்தன. இந்தியப் பத்திரிகைகளெல்லாம் அடக்கு முறை கூடாதென்று கண்டித்தெழுதிவந்தன. ஆனால் அரசாங்கத்தார் வங்காளத் தலைவர்களில் பலரைக் கைதி செய்தும், நாடு கடத்தியும் வந்தனர். அச்சமயத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர் அரசாங்கத்தினரின் அடக்கு முறையைப் பலமாகக் கண்டித்துத் தமது பத்திரிகைகளில் எழுதி வந்தார். அப்படி இவர் எழுதி வந்தது அதிகாரவர்க்கத்தினருக்குப் பிடிக்கவில்லை. 1908 - ம் வருஷத்தில் பம்பாயில் அரசாங்கத்தார் லோகமான்ய பாலகங்காதர திலகரைக் கைதி செய்தனர். அப்பொழுது திலகர் பம்பாய்ச் சட்டசபையில் ஓர் அங்கத்தினராக இருந்தார். அரசாங்கத்தார் அவரைக் கைதி செய்ததுடன் நில்லாமல் பூனா நகரிலுள்ள அவரது வீட்டையும், ''கேஸரி'',''மராட்டா'' பத்திரிகைகளின் கார்யாலயங்களையும் சோதனை செய்தனர். இராஜத்துவேஷமான விஷயங்களைப் பத்திரிகைகளில் எழுதியதாக அரசாங்கத்தார் திலகரின் மீது இராஜத்துவேஷ வழக்குத் தொடுத்தனர். நீதிபதி அவரை ஜாமீனில் விட மறுத்துவிட்டார். அவரது வழக்கு 1908 - ம் வருஷம் ஜூலை மாதம் 12 - ந் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்ச்சியாக எட்டு நாட்கள் வரையில் நடந்தது. லோகமான்ய திலகர் தமது கட்சியை எடுத்துக் கோர்ட்டில் வாதித்துத் தமது வழக்கை நடத்தினார்; 8 நாட்கள் வரையில் லோகமான்யர் தமது கட்சியைப்பற்றி விடாமல் வாதித்தார். சட்ட ஞானத்தில் சிறந்து விளங்கிய அவரது வாதத்தைக் கேட்டு, கோர்ட்டிலிருந்த நீதிபதிகள் திகைத்துப் போயினர். கடைசி வரையில் தாம் குற்றவாளி அல்ல என்பதை லோகமான்யர் நீதிபதிகளுக்கு நன்கு விளக்கிக் காட்டினார். ஆனால் ஜூரிகளில் ஏழுபேர் ஐரோப்பியர்கள், இருவர் பார்ஸிகள். நீதிபதி அவர் வழக்கின் சாராம்சத்தைத் தொகுத்து ஜூரிகளுக்கு எடுத்துச் சொன்னார். அந்த ஏழு ஐரோப்பிய ஜூரிகளும் திலகர் குற்றவாளிதான் என்று கூறினார்கள். இரண்டு பார்லி ஜூரிகளும் அவர் குற்றவாளியல்ல என்று கூறினர். ஏழு ஐரோப்பிய ஜூரிகளின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதி திலகருக்கு ஆறு வருடம் தீபாந்தர சிட்சையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

 

தீர்ப்புச் சொன்ன அன்றிரவு பம்பாயில் உண்டான குழப்பத்திற்கு அளவேயில்லை. மறுநாள் கடைகளெல்லாம் மூடப்பட்டன. தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் எல்லோரும் வேலை நிறுத்தஞ் செய்தனர். எங்கும் ஜனங்களுக்குள் கலகமும் கலக்கமும் ஏற்பட்டன. உடனே அரசாங்கத்தார் திலகரை பர்மாவிலுள்ள மாண்டலே என்ற இடத்தில் கொண்டு போய்க் காவலில் வைத்தனர்.

 

திலகர் சந்தோஷமாக அந்தத் தண்டனையை ஏற்று அனுபவித்தார். சிறையிலிருந்து வந்த காலத்தில் அவர் பகவத்கீதையை ஆராய்ச்சி செய்து வந்தார். சிறையிலிருந்து வெளி வந்ததும் அவர் தமது ஆராய்ச்சியை "கீதாரஹஸ்யம்" என்ற பெயருடன் ஒரு நூலாக வெளியிட்டார். அந்த நூலின் பெருமையைப் பற்றிப் புகழாதார் இல்லை. அப்புஸ்தகத்தின் பிரதிகள் ஒரு வாரத்தில் அனேக ஆயிரம் செல்வாயின.

 

1914 - ம் வருஷம் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை யடைந்ததும் அவர் மறுபடியும் தீவிரமாகத் தேசிய வேலைகளைச் செய்துவந்தார். பிறகு ஐரோப்பிய மகாயுத்தம் ஆரம்பமாயிற்று. லோகமான்ய திலகர் நாட்டில் தமது கட்சியைப் பலப்படுத்தினார். யுத்தம் ஆரம்பமானதும் அவர் சுய ஆட்சிக் கிளர்ச்சியை ஆரம்பித்து இந்தியா சுயராஜ்யத்தை அடைய வேண்டுமென்று பெரிதும் உழைத்து வந்தார். அக்காலத்தில் லோகமான்யரின் முயற்சியினால் இந்தியா முழுவதும் சுய ஆட்சிக்கிளர்ச்சி பரவியது. நாட்டு மக்கள் தங்களது உண்மை நிலையை அறிந்து விட்டனர். இப்படியே லோகமான்யர் தேசசேவை செய்வதிலேயே தமது வாழ்நாள் முழுவதையும் செலவழித்துப் பலவித கஷ்டங்களை அனுபவித்தார். கடைசியில் அவரது தேகம் அசௌக்கியம் அடைந்தது. அவர் 1920 - ம் வருஷம் ஆகஸ்ட்டு மாதம் முதல் தேதியன்று ஆண்டவன் திருவடி நிழலையடைந்தார். அவரது ஆத்மா, சாந்தி அடைக. இப்பெரியாரின் சிறந்த வழிகளைத் தமிழ் மக்கள் பின்பற்றுவார்களாக.

 

திரு. கே. சுப்பிரமண்யம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵

செப்டம்பர், நவம்பர், டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment