Sunday, September 6, 2020

 

வணக்க முறை

 

 உத்தம செயல்களிலேயே ஊக்க முற்றுள்ள நமது பரத கண் டத்தில் வணக்க முறையானது தொன்று தொட்டு ஒழுங்குபெறக் கையாளப் பெற்றுவரும் விஷயம் யாவரும் அறிந்த தொன்றாம். வணக்கமூறை யென்பது கடவுளிடத்தும் பெரியவர்களிடத்தும் நாம் பயபக்தி விசுவாசத்துடன மனம வாக்கு காயங்க ளென்னும் திரிகரண சுத்தியாய் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கத்தைத் தெரிவிக்கும் பத்ததியாம்.

 

இம்முறை மனவொடுக்கத்தை நாளடைவில் உண்டுபண்ணத் தக்கது. “கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை, எடுக்க வல்லதும்” மனமே யல்லவா? அந்த மனம்போகும் போக்கில் நாம் போகாதபடி, நாம் போகவேண்டிய போக்கில் அதை நிறுத்த வேண்டியதே நமது கடமை. இக்கடமைக்கு வணக்கமுறைதான் ஆதாரமானது. ஆகையால் அவ்வணக்கமுறையை நாம் ஒருபோதும் கைநழுவவிடக் கூடாது.

 

தேவாலயத்திற்குத் தெய்வ வணக்கஞ் செய்யச் செல்லும் போது நாம் அனுசரிக்க வேண்டிய முறையைச் சிறிது கவனிப்போம்: கோயிலுக்குப் போகுமுன் ஸ்நானம் செய்ய வேண்டும்; ஸ்நானம் செய்ததும் தோய்த்து உலரவைத்த வேஷ்டியை உடுத்துக் கொண்டு சந்தியாவந்தனஞ் செய்தல் வேண்டும். பிறகு தேங்காய், பழம், தாம்பூலம், கற்பூரம், புஷ்பம் முதலியவைகளைத் தட்டிலேந்திக் கொண்டு பாதசாரியாகத் தேவாலயத்திற்குச் செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கினவுடன் அங்கிருக்கும் தீர்த்தத்தில் கை கால்களைச் சுத்தப்படுத்தி ஆசமனம் புரிந்து கோபுரதரிசனஞ் செய்ய வேண்டும். பிறகு தேவநாம ஸ்மரணையுடன் ஆலயத்தினுட் புக வேண்டும். புகுந்ததும் பலிபீடம் துஜஸ்தம்பம் ஆகிய இவற்றைக் கைகூப்பித் தொழவேண்டும். அப்பால் சிவாலயமானால் ரிஷபதேவரையும், விஷ்ணு ஆலயமானால் பெரிய திருவடிகளையும் நமஸ்கரித்து உள்ளே செல்வதற்கு ஆஞ்ஞைபெற்று, அபிஷேக நிவேதனசமயம் அல்லாத சமயத்தில் திருச்சந்நிதிக்கு முன் ஆண்மக்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்மக்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, ஒன்பது, பனிரண்டு முறை செய்தல் வேண்டும். அதன்பின் சந்நிதானத்தினுட்புகுந்து, துவாரபாலகரை வணங்கி அவரனுமதிகொண்டு சந்நிதானமடைந்து ஆங்குள்ள அர்ச் சகரிடம் தாம் கொண்டுபோன நிவேதனப் பொருள்களைக் கொடுத்து, அவர் தேவாராதனை செய்ய நாம் கடவுளைத் தரிசித்து, தெய்வத்திற்கு நமதுபுறத்தைக் காட்டாமல் திரும்பவேண்டும்; திரும்பிக் கரங்களைக் குவித்து மந்திரோச்சாரண ஸ்தோத்திரங்களைச் செய்து கொண்டு மூன்று முதல் இருபத்தொன்று வரை ஒற்றையாகக் கடவுளைப் பிரதக்ஷணங்கள் செய்யவேண்டும். அவ்விதமே தேவியார் சந்நிதியுட் புகுந்து நான்கு முறை நமஸ்காரஞ்செய்து அம்மையைத் தரிசித்துப் பிரதக்ஷணஞ் செய்துகொண்டு வீட்டிற்குத் திரும்பல் வேண்டும்.

 

ஆலயத்துள் ஆசாரமில்லாமல் போதல் கூடாது. மலம், சலம், எச்சில் இவற்றை விமோசனஞ் செய்யலாகாது. மூக்குச் சிந்தல், தாம்பூலம் தரித்தல், பலகாராதி சாப்பிடல், சயனங் கொள்ளுதல், ஆசனத்திருத்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர்முடித்தல், சிரசிலும், தோளிலும் வஸ்திரம் தரித்துச் செல்லுதல், நிர்மாலியத்தை மிதித்தல், கடத்தல், ஸ்தூபி, துவஜஸ்தம்பம், விக்கிரகங்களின் நிழல் இவற்றை மிதித்தல், தாண்டுதல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், விளையாடல், சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் நடுவே குறுக்கிடல், ஒருமுறை இருமுறை சுவாமியை வலம்வரல், அகால தரிசனஞ் செய்தல், அபிஷேக நிவேதன காலங்களில் தரிசித்தல்; சுவாமி வீதியுற்சவம் கொண்டருளும் போது கோயிலுட் புகுந்து தெய்வத்தை வணங்குதல் ஆகிய இவை கூடாவாம். ஆலயத்தில் வாசலில்லா வழியால் நுழைந்துபோதல் தகாது. கறுப்புக் கம்பளிப் போர்வையுடன் செல்லுதலும் குற்றம். வெளிச்சமில்லா இடத்தில் மலர்மாலை தொடுத்தலும் உதவாது. பகவானுடைய சொத்துக்களை நம்பொருட்டு உபயோகப்படுத்திக் கொள்ளுதலும் தவறு. இவ்வாறு சிவாலய தரிசனவிதி, பிரபன்னபாரிஜாதம் கூறுவதைக் கவனித்து வணக்கமுறையைக் கைப்பற்ற வேண்டும்.

 

தேகாரோக்கியத்திற்கும் இவ்வணக்கமுறை நல்ல மருந்தாகும். இதனை நமது நாடு கையாளுவதுபோல் வேறெந்த நாடும் அத்துணைச் சிறப்பாகக் கையாளவில்லை. மகம்மதியரும் தமது பள்ளிவாசலுக்குப் போனதும், பாதரட்சையை வெளியில் கழற்றிவிட்டு உள்ளே சென்று அங்குள்ள தீர்த்தத்தில் கைகால் முதலியவற்றைச் சுத்திசெய்துகொண்டு வணக்கஸ்தானத்தின் முன் முழங்காலிட்டு நெற்றித்தலம் தரையிற் பொருந்தக்குனிந்து வணங்கும் நல்ல பழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் வணக்கமும் சிறந்ததே. இப்படி வணங்குவதால் இராஜஸ தாமஸ குணங்கள் நசித்து சத்துவகுணந் தலையெடுக்கின்றது. அது நன்மைகள் பலவற்றிற்கும் அனுகூலமாகின்றது.

 

மேல் நாட்டாரின் வணக்கமுறையோ இராஜஸ குணத்தோடு கூடியது. அவர் உடுத்தவுடுப்புடனும் பாதரட்சையுடனும் இருந்தபடியே ஒற்றைக்கையை நெற்றித் தலத்தில் பட்டதும் படாதது மாகக்காட்டி வணங்குகின்றனர். அவர்களுடன் பழகிய நம்மவரிற் பலர் நம் பூர்வீகரின் கொள்கையை அறவே விடுத்து மேல்நாட்டாரைப் போலவே வணங்கும் முறையைத் தழுவி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு மனவொடுக்க முண்டாவது அரிதாகின்றது. மன வொடுக்க மேற்படாதபோது சாந்தம், தயை முதலிய நற்குணங்கள் பிரகாசிக்க இடமில்லாமற் போகின்றது. ஆகையால் இப்பழக்கத்தை விட்டு நமது முன்னோர் அனுசரித்து வந்த முறையையே நம்மவரனை வரும் கையாண்டு வந்து நம்தேச முன்னேற்றத்தை அபிவிர்த்தி செய்ய எல்லாம் வல்ல இறைவன் முன்னின்று கடாக்ஷித் தருளு வானாக. சுபம்.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

 

No comments:

Post a Comment