Sunday, September 6, 2020

 வணிக தர்மம்


[ஆங்கிலப் பேரறிஞராகிய
Ruskin ஆசிரியர் எழுதிய "Unto This Last'' என்னும் நூலின் மொழி பெயர்ப்பு.]


"கண்ணிற் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே ஆயினும் - தண்ணளியால்
மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படை மற்று
என் செய்யும் ஆணல் லவர்க்கு.”

 

தேசத்துச் செல்வத்தை ருத்தி செய்யும் தொழில் உடைய வணிகர் கடமை இன்னதென ஆராய்ந்தோம். இப்பொழுது செல்வம் ஆவது யாது? என்பதை ஆராய்வோம்.

 

''செல்வம" என்பது ஏற்றத்தாழ்வு குறிக்கும் பதமே என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். வடக்கு எனவே தெற்கு என்பதும் பெறப் படுதல் போல், செல்வம் என்பது தனக்கு எதிராகிய வறுமை உண்மையையும் குறிக்கும். செல்வம் என்பது தனிப்பண்பைக் குறிப்பது போலவும், சில யுக்தமான முறைகளைக் கையாளுவதால் யாவரும் செல்வர்களாக முடிபும் என்றும் கருதுபவர்கள் போல் பலர் பேசுகிறார்கள். ஆனால் ''செல்வம்' என்பது மின்சாரம்போல் சமனநிலை இல்லாத வழியே சக்தி பெறுகின்றது. ஒரு பொருளில் எங்கும் சமமாக மின்சாரம் பரவி இருக்கும் போது அம் மின்சாரசக்தி காரியப்படமாட்டாமல் வாளா கிடக்கின்றது. இதனை மாற்றி ஒருபுறம் விதி (Positive) சக்தியும் மறுபுறம் மறை (Negative) சக்தியும் முனைவுறுத்தப்பட்ட போதே இச்சக்தி தொழிற்படும். இதுபோலவே, உன் கையில் உள்ள ஒரு பொன்னுக்குச் சக்தி உன் அயலவர் ஒரு பொன் இல்லாமையினாலேயே ஏற்படுகின்றது. பிறர் அப்பொன்னை விரும்பாவிடின் அதனால் உனக்கு ஆம் பயன் ஒன்றுமில்லை. அதற்கு உள்ள சகதி எல்லாம் மற்றவர் தேவையையும் விருப்பத்தையும் பொறுத்ததே. ஆகவே, நீ செல்வனாவதற்கு உபாயமாவது நிச்சயமாகவே உன் அயலவனை வறியவனாகவே வைத்திருக்கும் உபாயமே.

 

இருவகைச் செல்வத்தில் ஒரு வகையான இவ்வியாபார செல்வம் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றியது. இது தனி மனிதர்கள் சட்ட பூர்வமாக அல்லது தார்மிகமாக வேறு மனிதர்களின் உழைப்புக்கு உரிமையோ மேலதிகாரமோ ஈட்டியிருப்பதைக் குறிக்கும்.

தேசப் பொருளாதாரச் செல்வமாவது, தகுந்த காலத்திலும் இடத்திலும் பிரயோசனமான அல்லது இன்பகரமான பொருட்களை ஆக்கி, அவை பழுதுறாமற் காத்து, தக்கபடி பகுத்து நுகர்வதேயாகும். உரிய காலம் தவறாது அருவி வெட்டும் உழவன், நல்ல மரத்தில் கப்பல் செய்யும் தச்சன், பதமாகக் குழைத்த சாந்தில் நல்ல கல்லை வைத்து வீடு கட்டும் சிற்பி, வீட்டில் உள்தட்டு முட்டுச் சாமான்கள் பழுதுறாமற் காத்து அட்டிற் சாலையிலும் வீண் செலவு இல்லாது ஓம்பும் இல்லக்கிழத்தி, தன் குரலைப் பழக்கிச் சரியான நிலையில் வைத்திருக்கும் பாடகன், இவரெல்லாம், முடிவான, உண்மையான கருத்தில் தேச பொருளாதார விருத்திக்குத் தம் பணி புரிபவரே; இவர் எல்லாம் தேசத்தின் செல்வத்தையும் நல்வாழ்வையும் சதா விருத்தி செய்பவரே.

 

செல்வம் இரு திறப்படும். வியாபாரச் செல்வம் பிறர் உழைப்புக்கு உரிமையைக் குறிப்பது. பொருளாதாரச் செல்வம் ஜீவாதாரமான பொருட்களின் தொகுதியைக் குறிப்பது.

 

வியாபாரச் செல்வம் ஒருபுறத்தில் செல்வமோ உரிமையோ குறிக்கும் அவ்வளவுக்கு மறுபுறத்தில் வறுமையோ கடனோ குறிப்பதாகும். ஆகவே, வியாபாரச்செல்வம் இருப்பது தேசத்தின் பொருளாதார நிலையிலோ நல்வாழ்விலோ அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதையே குறிக்கும் என்பதற்கில்லை. ஆயினும், இவ்வியாபாரச் செல்வம் (உழைப்பிற்கு உரிமை) ஏறக்குறைய எப்பொழுதுமே உண்மைச் சொத்து (ஜீவாதாரமான பொருட்களும் அவற்றை ஆக்குதற்கான கருவிகளும்) ஆக மாற்றிக்கொள்ளக் கூடியதாகவும், உண்மைச் சொத்து உழைப்பை ஆளும் உரிமையாக உடனே மாற்றிக்கொள்ளக் கூடாததாகவும் இருப்பதால், நாகரிகம் வாய்ந்த தேசங்களில் பெரும்பான்மையும் செல்வம் என்பது வியாபாரச் செல்வத்தையே குறிப்பது ஆயிற்று. தங்கள் உடைமை இவ்வளவு என்று கணக்கிடுங்கால் மனிதர் தம் பொன்னின் மதிப்பை அது கொண்டு வாங்கக்கூடிய ஆடு மாடு நிலம் புலங்களைக் கொண்டு அளவிடுவதை விட்டு, தம் ஆடு மாடு நிலம் புலங்களை, அவற்றை விற்றுப் பெறக்கூடிய பொன்னின் அளவைக்கொண்டு மதிப்பிடுவாராயினார்.

 

மனித சமுகத்தில் இந்நினைவு பயின்று வருதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உழைப்பை ஆளும் உரிமை இன்றி உடைமைகள் ஒருவனுக்குப் பயன் படா. ஒருவனுக்கு ஆங்காங்கு மண்ணில் பொற்பாளங்கள் உள்ள தாய் பலவிதப் பயிரும் வளர்தற்குற்ற செழிப்புள்ள பெரிய நிலப்பரப்பும், அதில், கணக்கில் அடங்காத பசு மந்தைகளும், வீடுகளும், தோட்டங்களும், சோலைகளும், பிரயோசனப்படக்கூடிய பல பொருட்கள் நிறைந்த கருவூலங்களும் இருப்பதாகவும், கூலி வேலை செய்வதற்கு ஆள் மாத்திரம் கிடைப்பதில்லை என்றும் கொள்வோம். கூலிக்கு ஆள் வருவதென்றால் யாராவது வறியவராக இருந்து அவனது பொன்னையோ தானிய தவசங்களையோ விரும்பி
அவற்றிற்காக வேலை செய்ய வரவேண்டும். இவனது பொன்னையோ பொருளையோ விரும்புபவர் (வறியவர்) எவருமே இல்லை என்றும், இதனால் கூலிக்கு  ளே கிடையாது என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியாயின், இவன் தனக்கு வேண்டிய உணவைத் தானே பாகஞ்செய்து கொள்ள வேண்டும்; தன் உடைகளைத் தானே சுத்தஞ்செய்துகொள்ள வேண்டும்; தன் நிலத்தைத் தானே உழுதல் வேண்டும்; தன் பசுக்களைத் தானே மேய்த்தல் வேண்டும்; இன்னும், கனக்கு வேண்டிய வேலைகளை யெல்லாம் தன் கையினாலேயே செய்து முடிக்க வேண்டும். இவன் நிலத்தில் உள்ள பொன்னும் மணியும் ஆண்டுள்ள கூழாங்கற்கள்ளவே பயன் படும். கருவூலங்களில் உள்ள நுகர் பொருட்களும் இவன் அவற்றை உபயோகிப்பது முடியாத காரியமாகையால் பயனின்றி அழியும். இன்னொரு மனிதன் உண்பதினும் உடுப்பதினும் அதிகமாக இவன் உண்பதும் உடுப்பதும் இயலாத காரியம். இவன், வாழ்க்கையில் சர்வ சாதாசௌகரியங்களைப் பெறவே கடுமையாக உழைக்க வேண்டும். ஆகவே முடிவில் இவன் வீடுகளை நன்னிலையில் வைத்திருக்கவோ, நிலம் முழுவதையும் பண்படுத்தி வைத்திருக்கவோ முடியாமையால் அவை பாழடையும். இவன் ஏழைபோல ஒரு சிறு குடிலையும் தோட்டத்தையுமே நன்னிலையில் வைத்திருந்து அனுபவிக்க முடியும். சூழவள்ள பாழ் நிலத்தைத் தனது என்று சொல்வது தன்னைப் பரிகசிப்பதற்கான நிலைமைக்கு வந்து விடும்.

 

மனிதரில் மிகப் பேராசை பிடித்தவரும் கூட இத்தகைய செல்வத்தை இந்நிலைமையில் ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்றே கருதுகிறேன். செல்வத்தின் பெயரால் மனிதர் விரும்புவது பிற மனிதரை ஆளும் பெருமையே. மிகச் செம்பாகமான கருத்தில்: தமக்கு வேண்டியபடி கூலியாள் வியாபாரி, சித்திர வினைஞன் ஆதியவர்களின் உழைப்பைச் செலுத்தும் சக்தியும் - இன்னும் விரிவான கருத்தில் ல்லனவம் தீயனவும் இவை இரண்டும் அல்லனவும் ஆகிய பல்வேறு காரியங்களை முடிக்கத் தேச ஜனங்களிற் பெருந்தொகையினரை ஏவி நடத்தும் உரிமையுமே செல்வத்தை விரும்புவோரது குறிக்கோள் ஆகும். இத்தகைய செல்வத்தின் சக்தி அதற்கு அமைவோரின் வறுமையின் அளவுக்குச் சரியொக்கக்கூடியோ குறைந்தோ இருக்கும். நம்மோடொத்த செல்வம் உடையவராய் அரிய பொருள் ஒன்றுக்கு நாம் கொடுக்கும் விலை தாமும் கொடுக்கக்கூடியவர்களாயுள்ள தனிகர் தொகைக்கு எதிரொக்கத் திரிவதாகவும் இருக்கும். உதாரணமாக, ஒரு பாடகன வறியவனாயின், அவனுக்குப் பரிசில் தருபவர், ஒருவரே இருந்தால் அவன் குறைந்த பரிசிலுக்குப் பாடுவான்; இருவர் அல்லது பலர் இருந்தால் பணம் அதிகம் தருவார்க்கே தன் இன்னிசையை அளிப்பான். ஆகவே தாதாவின் செல்வத்தின் சக்தி, (- தன் மேலெல்லையை அடைந்தபோதும் விகலமானதும் சந்தேகாஸ்பதமானதுமான இச்செல்வாக்கு -) முதலில் பரிசிலனது வறுமையையும், பின்தாதாவோடொத்த செல்வம் உடையர்களாய்த் தாமும் இசை கேட்க முந்தும் தனிகர் தொகையின் குறைவையும் பொறுத்ததே. ஆகவே, சாதாரண கருத்தில் செல்வம் தேடுவதாவது தனக்குப் பணம் சேர்ப்பது மட்டுமல்ல; தன்னிலும் குறையவே பிறர் பணஞ் சேகரிக்க முடியுமாறு செய்வதுமாம். நிதானமாகக்கூறுமிடத்து, நமக்குச் சாதகமாக, கூடிய அளவு சமத்துவ ஹீனத்தை ஆக்கிக் கொள்வதே செல்வம் தேடுவதாம்.

 

இனி, இத்தகைய சமத்துவ ஹீனம் தன்னிலேயே தேசப் பொது ஜனங்களுக்கு நன்மையோ தீமையோ தருவதாகாது. இச் சமத்துவஹீனம் தப்பாமல் நன்மையே தரும் என்னும் தவறான கருத்தே பொருளாதார சம் பந்தமாகப் பெரிதும் வழங்கும் போலிக் கொள்கைகட் கெல்லாம் ஆதாரம். இவ்விஷயத்தில், என்றும் மாறாத நிரந்தரமான விதி யாதெனில், இச் சமத்துவ ஹீனத்தால் நன்மை ஏற்படுவது, முதலில், இதை ஏற்படுத்தக் கை பாளப் பட்ட முறைகளையும், பின்னர் எந்த நோக்கத்தை நிறைவேற்ற இச் சமத்துவ ஹீனம் உபயோகிக்கப்படுகிறது என்பதையும் பொறுத்ததாகும். அநீதியான முறைகளால் ஏற்பட்ட சமத்துவ ஹீனம் அது ஆக்கப்பட்டபோது நிச்சயமாகவே அதற்கு இடம் அளித்த தேசத்திற்குத் தீங்கு விளைத்துள்ளது. அநீதியாகப் பிரயோகிக்கப்படும் போது அவ்வாறு பிரயோகிக்கப்படும் செல்வம் தான் உள்ளவரையும் இன்னும் அதிக தீமையே விளைவிக்கும் என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால், நீதி தவறாமல் உண்டாக்கப்பட்ட சமத்துவ ஹீனமோ ஆக்கப்படும்போது தேசத்துக்கு நன்மை அளிக்கும்; தகவுற உபயோகிக்கும்போது இன்னும் அதிக உதவியே புரியும்.

 

முயற்சியும் செங்கோன்மையும் உள்ள நாட்டில், பலதரத்து ஆற்றலுடைய பலவேறு மனிதர், தம் சச்தியைப் பூரணமாக உபயோகித்தறிந்து, பல்வேறு தேவைகளுக்குத் தகவறிந்து உபயோகித்தலால், அவர்கள் தொழிலின் தன்மைக்கும் அத்தொழிலாலாகும் பயனுக்கும் ஏற்பப் பிரதிபலன் பெறுவர். இதனாலாம் சமத்துவ ஹீனங்கள் தம்மில் வேற்றுமை யுடையனவாமன்றி முரண்படுவன அல்ல.

 

மடி மிகுந்து நல்லாட்சி குன்றிய தேசத்தில், பலதரத்து அழிவுறு நிலைகளும், துரோகத்தின் வெற்றிகளும், தமக்கு ஏற்ற பெற்றி (முறையே) அமைவும் ஆட்சியும் பொருந்திய ஒரு முறையை வகுக்கின்றன; ஒன்றுடன் ஒன்று இசைந்து ஒழுங்கு தழைக்கும் பலதரத்துச் சக்திகட்குப் பதில், காதகத்தாலும் துரதிர்ஷ்டத்தாலும் முறையே உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன.

 

ஒரு தேசத்தில் செல்வம் உலவுவது உடம்பில் செந்நீர் உலவுவதற்கொப்பாம். இன்ப உணர்ச்சியாலும் நல்லுழைப்பாலும் தேகத்தில் இரத்தம் வேகமாக ஓடுவதுமுண்டு. இன்னொரு காரணத்தால், (சுர முதலிய நோய் மிகுதி காரணமாக) இரத்தம் வேகமாக ஓடுவதுமுண்டு. ஒன்று ஆரோக்கியமுற்ற நல்வாழ்வைக் குறிக்கும்; மற்றது மரணம் சமீபித்து இருப்பதற்கு அறிகுறி.

 

இவ்வுண்மை ஏகதேசமாக அன்றி முற்றுவமை ஆகப் பொருந்தும். இரத்தம் உடம்பில் ஓரிடத்தில் தங்கி நிற்பது தேகசுகத்திற்குக் கேடே ஆவது போலத் தேசத்திலும் செல்வம் ஒருபுறத்தில் ஒதுங்கிக் கிடப்பதும் தேச பொருளாதாரம் சரியான நிலைமையில் இல்லை என்பதைக் குறிக்கும்.

 

இனி, இச்சமத்துவ ஹீனங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைக் கூடியவரை
சிக்கல் இல்லாத நிலைமையில் செல்வம் தொகுக்கப்படும் வழிகளுக்கு இரண்டொரு உதாரணங் காட்டி அவ்வுதாரண முகத்தால் ஆராய்வாம்.

 

கடலில் உடைந்துபோன கப்பல் ஒன்றிலிருந்து இருவர் தப்பி நீந்திச் சென்று குடிமனையே இல்லாத ஒரு தீவிற் சேர்ந்ததாகவும், அவர்கள் ஆண்டுத் தம் உழைப்பைக் கொண்டே உயிர் வாழவேண்டி இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம்.

 

இருவரும் தேகசுகம் உடையவராய் விடா முயற்சியுடன் பிணக்கின்றி உழைத்தால் இருவரும் தனித்தனி வசதியான வீடு கட்டிக்கொள்ளலாம்.
நாளடைவில், பண்படுத்தப்பட்ட நிலமும், கருங்கால உபயோகத்துக்கெனச் சேமிக்கப்பட்ட பல்வகைப் பண்டங்களும் இவர்கள் சொத்து ஆகும். இவை எல்லாம் உண்மைச் செல்வம் அல்லது உடைமைகள் ஆம். இருவரும் ஒப்ப உழைத்தால் இருவருக்கும் சரிசமமான பங்குக்கு உரிமை உண்டு. இவர்கள் பொருளாதாரமெல்லாம் இவ்வுடைமைகளைப் பத்திரமாகப் பேணுவதும் நியாயமாகப் பங்கிடுவதுமே யாம்.

சிறிது காலத்தின் பின். இவ்விருவரில் எவராவது, பொது உழைப்புத் திருப்திகரமாகப் பலன் தரவில்லை என்று கருதி, பண்படுத்திய நிலத்தைப் பகிர்ந்து, இருவரும் தம் தம் நிலத்தில் தனித்தனி பயிர் செய்வதென்று முடிவு செய்வதாகக் கொள்வோம்.
இவ்வாறு பிரித்துக் கொண்டபின் அதி முக்கியமான (பயிர் நடுகை அல்லது அறுவடை போன்ற) ஒரு வேலை செய்யும் பருவத்தில் ஒருவன் நோய்வாய்ப்பட் டிருப்பதாகக் கொள்வோம். இயல்பாக இவன் மற்றவனைத் தனக்காகத் தன் வேலையைச் செய்யும்படி கேட்பான்.

 

மற்றவன், "இப்பொழுது நான் இந்த வேலையை உனக்காகச் செய்கிறேன். ஆனால் நீ இன்னொரு சமயம் இவ்வளவு வேலை எனக்குத் தரவேண்டும். நீ வேலை செய்யச் சக்தி உள்ளவனாய் வந்தபின், நான் இப்போது உன் வயலில் வேலை செய்யும் அவ்வளவு நேரம் நீயும் என் வயலில் வேலை செய்து தருவதாக வாக்குறுதி செய்தல் வேண்டும்" என்று கேட்டால் அது முற்றிலும் நியாயமே.

 

இந்நோய் பல காரணங்களால் சில வருடங்களுக்கு நீடித்திருப்பதாகவும், வருடா வருடம் மற்றவனுடைய உதவி தேவையென்றும் ஒவ்வொரு முறையும் தனக்குச் செய்த அளவு வேலை தான் மற்றவன் கேட்டபொழுது அவனுக்குச் செய்து தருவதாக நோயாளி வாக்குறுதி செய்த தாசவும் கொள்வோம். இவன் நோய் தீர்ந்து வேலை செய்யக்கூடியவ னாயபோது இவர்கள் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? ஒரு "தேசம்'' ஆகக் கருதப்படும் இடத்து, நோய் இல்லாமல் இருந்தால் இவர்கள் ஈட்டியிருக்கக்கூடிய செல்வத்தினும் ப்போது இவர்கள் பால் உள்ள செல்வம் குறைந்தே இருக்கும்; இடைக்காலத்தில் நோயுற்றவன் உழைப்பினாற் பெற்றிருக்கக்கூடிய செல்வம் எவ்வ
ளவோ அவ்வளவு குறைந்திருக்கும். அவனது நண்பன் தேவையால் உந்தப்பட்டு வழக்கத்துக்கு அதிகமாகவே உழைத்தானாயினும், இறுதியில் அவன் இருவர் செய்யக்கூடிய வேலையைத் தனியே செய்வது அசாத்தியம். இருவர் வயல்களும் சொத்துக்களும் இதனாற் சிறிது நட்டமுறவே நேரும்.

 

இவ்வாறு தேசத்தின் செல்வ நிலை குறைந்ததோடு, இருவர்க்கு மிடையில் உள்ள தொடர்பிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கும். நோயுற்றிருந்தவன் சில வருடங்களுக்குத் தன் உழைப்பை மற்றவனுக்கு உரிமையாக்கியிருப்பது மட்டுமல்ல, இவன் சேமித்து வைத்திருந்த பண்டங்களும் செலவு செய்தாகிவிடும். இவன் உணவுக்குச் சில காலத்துக்கு மற்றவனையே நம்பி யிருக்க வேண்டும். இவ்வுதவியைப் பெறுவதற்குத் தன் வருங்கால உழைப்பை இன்னும் அதிகமாக அடைமானம் ஆக்குகிறான்.

 

இவ்வாக்குறுதி பிறழாமல் நிறைவேற்றப்படுமாயின் (- நாகரிகம் வாய்ந்த நாடுகளில் இவை சட்டங்களால் வற்புறுத்தப்படும்-) இதுவரை இருவருக்கு மாக வேலை செய்தவன் இப்போது விரும்பினால் வேலை செய்யாமல் சோம்பலாகக் காலங் கழித்துக் கொண்டு, மற்றவன் செய்து தீர்க்கவேண்டிய கடன் வேலையைச் செய்விப்பது மட்டுமன்றி, இப்போது அவனுக்கு வேண்டிய உணவு உடை முதலியன உதவுவதற்கு இன்னும் அவனுடைய உழைப்பை அளவிற்கு அதிகமாகவே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

 

இதில் முதலிலிருந்து கடைசிவரை சட்ட விரோதமானது எதுவும் இல்லை.
ஆனால் இத் "தேசத்தில் புதிதாக வந்திறங்கும் அந்நியன், விருவரில் ஒருவன் வியாபார செல்வம் உடையவனாகவும், மற்றவன் அவ்வகையில் வறியவனாகவும் இருக்கக் காண்பான். ஒருவன் சோம்பலாகக் காலங்கழிப்பதையும், மற்றவன் இருவருக்கும் உழைத்துத் தன் உணவு உடை முதலியவற்றையும் சுருக்கி, தூர காலத்திலாவது தன் கடனைத் தீர்த்து முடித்து இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெறலாம் என்னும் ஆவலுடன் கடுமையாக உழைப்பதையுங் கண்டு பெரிதும் ஆச்சரியப்படுவான்.

 

இது, வியாபார செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணமாக, பல மனிதர்களிடையே சமத்துவ ஹீனம் ஏற்படும் பல வழிகளில் ஒன்றுக்கே உதாரணமாகும். இவ்வுதாரணத்திலேயே இருவரில் ஒருவன் ஆதியிலேயே சோம்பலினால் வேலை செய்யாமல் தற்பொழுதையே சுகத்திற்காகத் தன் வருங்கால உழைப்பை அடைமானமாக்கி யிருக்கலாம். அல்லது, தன் வயலைச் சரியாக விளைவிக்காமல், மற்றவனிடம் உணணவும் உதவியும் பெற, வருங்கால உழைப்பை அடைவு படுத்தியிருக்கலாம். இச் சமத்துவ ஹீனம் ஏற்படும் வழி எதுவாயினும், (தேச) பொருளாதார செவத்தின் குறைவினாலேயே வியாபாரி செல்வம் (=பிறர் உழைப்புக்கு உரிமை) ஏற்படுகின்றது என்பதை மனதிற் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

 

சாதாரணமாக உலகத்தில் வழங்கும் வியாபார முறைகளுடன் இன்னும் அதிக ஒப்புமையுள்ள இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
குறித்த தனிக் குடியரசில் இருவர்க்குப் பதில் மூவர் இருப்பதாகக் கொள்வோம். இவர்கள் மூவரும் அவ்வூரில் ஒன்றுக்கொன்று தூரமான மூன்று இடங்களில் தனித்தனி பயிர் செய்யப் பிரிந்து செல்கின்றார்கள். இதில் ஒரு பாகத்தில் விளைந்த பொருள் மற்றப் பாகத்தில் வசிப்பவருக்குப் பரஸ்பரம் தேவை என்றும், மூவரில் ஒருவன் மற்றவர்களுக்கும் தனக்கும் வசதிக்காக இந்த அவசியமான பொருட்களை இடம் பெயர்க்கும் வேலையைத் தான் மேற்கொண்டு, அதற்குக் கூலியாகத் தான் கொண்டு சேர்க்கும் பொருளில் நியாயமான பாகம் பெறுகிறான் என்றும் கொள்வோம்.

 

இந்தத் தூதன் இரு பகுதிக்கும் அவசியம் வேண்டிய பொருட்களைக் கொண்டு சேர்த்தால் கிருஷகம் சிறப்பாக நடைபெறும்; கூடிய அளவு செல்வம் அச்சிறு சமுகத்துக்குக் கிடைக்கும்.

 

ஆனால், இத்தரகன், தன் மூலமாகவன்றிக் கொடுக்க வாங்க இவர்களுக்கு வேறு வழி இல்லை என்று கண்டு, தன்னை நம்பி ஒருவன் ஒப்புவித்த பொருளை உரிய காலத்தில் மற்றவனிடம் சேர்க்காமல் வைத்திருந்து, இவன் இப்பொருளை அத்தியாவசியமாகத் தேவைப்படும் காலம் பார்த்திருந்து, கஷ்டத்துக்குட்பட்ட விவசாயி தன் பொருளெல்லாம் கொடுத்தும் இதனைப் பெற வேண்டிய நிலைமையிலிருத்தல் கண்டு, அப்பொருள் எல்லாம் பெற்றுக் கொண்டு கொடுப்பானாயின், இவ்வாறு இருதரப்பிலும் காலம் பார்த்து இரு விவசாயிகளின் சேமப் பொருளில் பெரும்பாகத்தைக் தன தாக்கிக் கொள்ளலாம் என்பது சுலபமாக விளங்கும். இவ்வாறு தன தாக்கிய பொருளைச் சேமித்து வைத்திருந்து, விளைவு குறைந்த (அல்லது இல்லாத) வருடத்தில் இப்பொருள் கொண்டு இரு தோட்டங்களையும் தான் வாங்கி மற்றிருவரையும் தனக்குக் கூலிவேலை செய்பவராக்கிக் கொள்ளலாம். இதுவும் வியாபார செல்வத்தைப் பெருக்கும் வழியே.

 

ஆனால், இதில் முன் உதாரணத்தினும் அதிகமாகவே பொருளாதார செல்வம் குறைவடைந்திருக்கும். தரகன் நியாயமான கூலி போ துமென்று காலந் தவறாமல் பொருட்களைக் கொண்டு சேர்த்தால், கிருஷியும் சிறப்பாகச் செய்யப்பட்டு விளைவும் அதிகமாக இருக்கும். ஆனால் காலந்தவறி அக்கிரமவிலைக்கு இவன் பொருட்களை விற்கத் தொடங்கியதால் கிருஷிகம் எவ்வளவு தடைப்படுத்தக் கூடுமோ அவ்வளவும் தடையுறுத்தப்பட்டு விளைவும் மிகச்சுருங்கியே இருக்கும். வேண்டிய போது அவசியமான பொருட்கள் கிடையாமையாலும், தங்கள் உயிர் வாழ்வுக்கே இரவு பகல் உழைப்பதன்றி நிரந் தோமான லாபம் இல்லாமற் போவது கண்டு விவசாயிகட்கு உண்டாகும் ஊக்கக்
குறைவாலும், அவர்கள் விளைவிக்கும் பொருட்களின் அளவு குறைந்தேவிடும்.
ஈற்றில், வியாபாரி தன் உடைமையாகத் தொகுத்துக் கொண்ட சொத்து, அவன் நியாயமான கூலி மட்டுமே பெற்றுத் தன் வேலையைக் கிரமமாகச் செய்திருந்தால் அவன் கையிலும் விவசாயிகள் கையிலுமாகச் சேர்ந்திருக்கக்கூடிய பொருளின் அளவில் எத்துணையோ பங்கு குறைந்தே இருக்கும்.

 

ஆகவே, தேச பொருளாதார செல்வத்தாலாம் நன்மை மட்டுமல்ல. அச்செல்வத்தின் அளவும் நீதியைப் பொறுத்ததே. தொகுக்கப்பட்ட செல்வத்திரளைக் கண்டு, அது இருப்பது கொண்டே, அது, தான் இருக்கும் தேசத்- திற்கு நன்மையையோ தீமையையோ குறிக்கின்றதென்பதைக் கூறமுடியாது. வியாபார செல்வம் இருப்பது நேர்மையான முயற்சி, அபிவிருத்தி உறும் சக்தி, ஆக்க சாதுரியம் இவற்றைக் குறிக்கலாம்; அல்லது சோம்பல் மீதூர்ந்த சம்பிரமம், இரக்கமில்லாக் கொடுமை, அழிவு சூழும் வஞ்சம் இவற்றைக் குறிக்கலாம். சில திரவியங்கள், நன்றாக முற்றிலும் விளைந்த நெற்கதிர் அகால மழையால் நனைந்து அழிவதுபோல, அழிவுக்கே காரணமாக, ஏழைகள் கண்ணீரால் நனைந்து, பாரமாக இருக்கும். சில பொன் தனக்கு இயல்பாக உள்ள ஒளியினும் அதிகமாகவே வெயிலில் இலங்கும்.

 

இவையெல்லாம் பொருள் தேடப் புகும் ஒருவன் "வெறுந் தர்ம விதிகள்'' என்று இகழ்ந்து, விரும்பினால் அலக்ஷியஞ் செய்யக்கூடியவை அல்ல. இவை கணிக்க முடியாதவி தமாகப் பணத்தின் மதிப்பைத் தப்பாமல் கூட்டியோ குறைத்தோ பாதிப்பனவாய், செல்வத்தினின்று பிரிக்க முடியாத அதன் பண்பு

 

ஒரு தொகைப் பணம் ஆக்க வேலையால் தொகுக்கப்பட்டது; - இன்னொரு தொகை அழிம்பால் தொ தொகுக்கப்பட்டது; தொகுக்கப்பட்ட பொருளினும் பன்மடங்கு பொருளை அழித்துத் தொகுக்கப்பட்டது; எத்தனையோ வலிமிக்க கைகளை வலி மடக்கி, எத்தனையோ பலமிக்க மனிதரது தைரியத்தை அழித்து, எத்தனையோ ஆக்க வேலைகளைத், எடுத்துச் சேர்க்கப்பட்டது. மரக்ககலத்தை வஞ்சனையாற் பாறைகளினிடை வரச் செய்து, கலத்தினின்றும் பொறுக்கி எடுத்த ஒரு கைப்பிடி பொன்-களத்தில் இறந்த வீரர் மார்பிலிருந்து பாசறை வேலைக்காரன் கழற்றி எடுத்த கந்தற் கட்டு.

 

"மலிந்த இடத்தில் வாங்கி ஒறுத்த இடத்தில் விற்கவேண்டும்" என்று சாதாரணமாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். மலிந்த இடத்தில் வாங்கவதா? ஆம்; ஆனால் அம்மலிவு வந்த வகைதான் என்ன? உங்கள் வீதி தீப்பற்றி எரிந்த பின் அங்கு கரி மலிவாக இருக்கலாம்; பூகம்பத்தால் அழிந்த தெருவில் கரி மலிவாகலாம். ஆயினும் இதுகொண்டு வீடுகள் எரிவதும் பூகம்பத்தால் அழிவதும் தேசத்துக்கு நன்மை என்று கருதுபவருமுண்டோ?

 

ஒறுத்த இடத்தில் விற்பதா? ஆம் மெய்யாகவே; ஆனால் இந்த ஒறுபுத்தான் எதனால் ஏற்பட்டது? இன்று உன் ரொட்டியை ஒரு விலைக்கு விற்றாய். யாருக்கு? நாளை உணவே வேண்டாதான் இன்று மரணமடையுந் தறுவாயில் இருப்பவனுக்கு அவன் கையி துள்ள கடைசிக் காசைப் பெற்றுக் கொண்டு கொடுத்தாயா? அல்லது நாளை நீ குடியிருக்கும் வீட்டைத் தனதாக்க் கொண்டு உன்னை அடிமைப்படுத்த இருக்கும் தனிகனுக்கு விற்றாயா?
அல்லது நீ உன் சேமநிதி எல்லாம் இட்டு வைத்திருக்கும் பாங்கியைக் கொள்ளையிடச் செல்லும் மறவனுக்கு விற்றாயா?

 

இவை எல்லாம் நீ அறிவது அசாத்தியம். ஒரு விஷயமே நீ அறிய முடியும். அதுதான் நீ உன் பொருளை விற்பதில் நேர்மையாகவும் நீதியாகவும் நடந்து கொண்டாயா என்பதே. இவ்வளவும் நீ பார்த்துக் கொண்டாற் போதுமானது. இவ்வாறே இவ்விஷயங்களெல்லாம் நீதி என்னும் பெரிய தத்துவத்திற் சென்றடைகின்றன. இந்நீதியைக் குறித்து அடுத்த பத்திரத்தில் விவரிப்போம். இப்பொழுது மூன்று விவயங்களை மட்டும் மனதிற் பதித்துக் கொள்ள வேண்டும்.

 

பிறர் உழைப்பை ஆளும் உரிமை இன்றி உடைமைகள் ஒருவனுக்குப் பயன்படா என்பதும் பணம் இவ்வுரிமையைத் தருவதனாலேயே மதிக்கப்படுகிறதென்பதும் முன் காட்டப்பட்டன. ஆனால், பிறர் உழைப்பு எப்பொழுதும் பணத்தினால் மட்டும் கட்டுப்படுவதல்ல. பணத்தின் சக்தி எப்பொழுதும் விகலமும் சந்தேகாஸ்பதமான துமாம். பணத்தாற் பெறமுடியாத எத்தனையோ பொருட்கள் உண்டு; பணத்தாற் காக்க முடியாத பொருட்களும் பொன்னை விலை கொடுத்துப் பெறமுடியாத எத்தனையோ இன்பங்கள் மனிதர்க்கு அளிக்கலாம்; பொன்னால் விலை மதிக்கவோ கைம்மாறளிக்கவோ முடியாத விசுவாசமும் மனிதரிடம் காணலாம்.

 

இன்னும் பணத்தின் பிரயோசனம் பிறர் நமக்கு அமைந்து நடப்பதேயாதலால், இந்த அமைவுக்குக் குறைவு வரின் பணம் பயனற்றதாமன்றோ?

 

கூலி சரியாகக் கிடைக்கவில்லை என்று நாள்தோறும் கூலிக்காரர் பிணம் கினால், முதலாளியின் செல்வாக்கு எத்தகையது?

 

கூலிக்காரர் பசியால் மெலிந்து முகஞ்சுருங்கிக் கந்தை யணிந்து கலங்குவது கண்டார் அவ்வீட்டுத் தலைவன் பெயரளவிலும் காகிதத்திலுமே செல்வன் எனக் கருதுவது இயல்பே யன்றோ?

 

இறுதியாக, மனிதரை ஆளும் மாண்பே செல்வமாதலால், எத்தனை பேர்க்கு நிழல் அளிப்பதோ அத்துணை பெரிய தன்றோ செல்வம்? ஆழ யோசிக்குமிடத்து இம்மனிதரே செல்வம் - பரியை அடக்கி நடத்த உபயோகிக்கும் கடிவாளம்போல, இம்மனிதரை நம் வழிப்படுத்தி நடத்த நாம் உபயோகிக்கும் பணம், எவ்வளவுதான் இலங்குவதாயினும், இம்மக்கள் இக் கடிவாளமும் கசையடியும் இல்லாமலே வழிநடத்தப்படுவாராயின், முற்றும் பயனற்றதாதலும், இம்மக்களே பயன் தாவும் பெறவும் வல்லராதலும் காணலாம்.

 

செல்வநாடி செந்நிறம் வாய்ந்ததன்றிப் பொன்னிறம் வாய்ந்ததல்ல; மக்கள் உடம்பில் அமைந்ததன்றி மண்ணிலும் மலையிலும் அமைந்ததல்ல. மக்கள் உடம்பே மணியினும் பொன்னினும் மாண் பயன் பெரி துடைத்து. மனிதர்க்கு இன்பம் அளிப்பதே பொருளால் ஆம் பயன். மக்கள் யாக்கையைச் சுருக்கி மகிழ்ச்சியைக் கெடுத்துப் பொருள் தேடி அடையும் பயன் யாதுமில்லை.

 

இந்த உண்மைகளைத் தேச மக்கள் உணர்ந்து கடைப் பிடித்தல் வேண்டும். மாதர்களும் பொன்னினும் மணியினும் புனைந்த அணிகலங்களை மதியாது, மங்கலமாகிய தம் மனைவாழ்க்கைக்கு நன்கல மாவார் நன் மக்களே என்னும் பொருளுரையைத் தேர்ந்து உறுதி கொள்வாராக.

 

5. வளர் பொருள்


"வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்”

 

அசேதனமாகிய பொருளுக்கு வளர்ச்சி இயையுமாறில்லை. பின், வளர் பொருள் என்பதன் கருத்து யாது? மக்களது உடல் வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் கருவியாகும் பொருளே வளர் பொருள் எனப்பட்டது. இப்பொருட்களைத் தேடித் தேசமக்களது உபயோகத்துக்கு அளிப்பதே வணிகர் தொழில் என்பது முன்னர்க் கூறப்பட்டது.

 

ஒரு பொருளின் பயன் அதைக் குறித்த நமது நினைவையும் அப்பொருளின் அளவையும் பொறுத்ததல்ல; அதைப்பற்றி என்ன நினைத்தாலும், அதில் எவ்வளவு தேடிக் கொண்டாலும், இவற்றால் அப்பொருளின் பயன் மிகுவது மில்லை; குறைவதுமில்லை. அது பிரயோசனப்படும்; அல்லது பிரயோசனப் படாது. எவ்வளவு நன்மதிப்பும் எவ்வளவு இகழ்ச்சியும் அப்பொருளுக்கு இறைவன் அளித்துள்ள சக்தியை உயர்த்தவோ தாழ்த்தவோமுடியாது. தேசத்தினர்க்கு வாழ்க்கைக்கு ஆதாரமாகும் பொருட்களை விரும்பித் தேடவும், அழிவுக்கு வழிகாட்டும் பொருட்டு பொருட்களை வெறுத்து அழிக்கவும் கற்பிக்கும் ஏலே உண்மைப் பொருளாதார சாஸ்திரமாம்.

 

அறியாமையால், தம் நல்வாழ்வுக்கு அவசியமாகாத பொன், வெள்ளி இரத்தினங்கனங்களை அரும்பொருள்கள் எனவும், அந்நல்வாழ்வுக்கு அத்தியாவசியமான காற்று, நீர், வெளிச்சம் சுத்தம் முதலியவற்றை அலட்சியமாகவும், இன்ப வாழ்வுக்கே இன்றியமையாத மனவமைதி, நம்பிக்கை, அன்பு ஆதியவற்றைப் பொன் வெள்ளி முத்து ஆதியவற்றுக்கு விற்கத் தகுந்த பொருட்களாகவும் கருதி மயங்கும் மனிதர்க்கு வெறும் வெளிப்பகட்டு இது எனவும் உண்மையிற் பொருளாவது இதுவே எனவும் காட்டித் தெருட்டுவதே பொருளாதார சாஸ்திரத்தின் நோக்கம்.

 

செல்வமுடைமையாவது யாது? "உபயோகமுள்ள பொருட்களை ஈட்டித் தொகுத்து வைத்திருத்தலே செல்வமுடைமையாம்'' என்று சாதாரணமாகப் பதில் கிடைக்கும். இதில் "உடைமை '' என்பதன் பொருள் என்ன? "உபயோக முள்ள" என்பதனாற் குறிக்கப்படுவது யாது?

 

முதலில் "உண்மை” யை எடுத்துக் கொள்வோம். மைலன் (Milan) நகரத்துக் கிறிஸ்தவப் பெருங் கோவிலின் இரு பாரிசங்களுஞ் சந்திக்குமிடத்தில் காரலோ பரோமியோ என்னும் பக்த சிரேஷ்டாது உடம்பு தைலமூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் கையில் ஒரு பொற்பிரம்பும் மார்பில் மரகதத்தால் இழைத்த ஒரு சிலுவையும் உண்டு. இவை உபயோகமுள்ள பொருட்களே எனக் கொள்வோம். இவற்றை அவ்வுடம்பு "வைத்திருக்கின்றது" எனலாமா? இவை அதற்கு உரியவைதாமா? அல்லவெனின், உயிரிலாஉடம்புக்கு "உடைமை" பொருந்தாதெனின், உடலில் எத்துணை உயிர்ப்பு உடைமை பாராட்டப் போதியதாகும்?

 

கலம் ஒன்று உடைந்தபோது பிரயாணி ஒருவன் இருநூறு பொன்னை இடுப்பிற் கட்டிக் கொண்டான். பிறகு அவன் கடலில் அப்பொன்னுடன் அமிழந்து கிடக்கக் காணப்பட்டான். அவன் பொன்னுடன் (அதன் பாரத்தால்) அமிழும்போது அவன் பொன்னைவைத்திருந்தானா? அல்லது பொன்அவனை வைத்திருந்ததா?

 

அப்பொன் தன் பாரத்தால் அவனை அமிழ்த்துவதற்குப் பதிலாக அவன் தலையில் அடித்து, பைத்தியத்தையோ அல்லது வேறு தீராத வியாதியையோ வருவித்தால் அது அவனது "உடைமை” ஆகுமா? இவ்வாறே இன்னும் உயிர்ப்பும், உணர்வும், உபயோகிக்கும் திறமையும் வரவர அதிகரிக்கும் பல தரத்து உதாரணங்கள் கூறலாம்.

 

பலர், பொருளைத் தம் ''உடைமை" ஆக்கிப் பயன் துய்க்கப் புகுந்து, முடிவில் தாமே பொருளுக்கு அடிமை ஆகி அழிவு உறுதல் கண்கூடு. பொருளும் அதனைத் தக்கபடி உபயோகிப்பவனுக்கே பயன் தரும். பொருளை உபயோகிக்கும் தகைமை இல்லாதவழி பொருள் பயன் தருவதில்லை.

 

“நாம் உபயோகிக்கக்கூடிய பொருட்களைத் தொகுத்து வைத்திருப்பதே செல்வ முடைமையாம்'' என நமது வரை விலக்கணத்தைத் திருத்திக் கொள்வோம். இத்திருத்தம் அதி முக்கியமானது. பொருள் உபயோகமுள்ள தாக இருந்தால் மட்டும் போதாது; அதனை நாம் உபயோகிக்கக் கூடியதாக இருக்கவும் வேண்டும்.

 

இனி, உபயோகமும் உபயோகிப்பவன் தகுதியைப் பொறுத்ததேயாம். ஒரு பொருளை நல்வழியில் உபயோகிக்கலாம் அல்லது துர்விநியோகம் செய்யலாம். அளவாக அறிந்து உபயோகித்தால் உடம்புக்கு நன்மை தரும்; பல பதார்த்தங்கள் அளவு சிறிது மிகினும் நோய் தருவனவாம். ஒருவன் கையில் நன்மைக்குக் கருவியாவது இன்னொருவன் கையில் தீமைக்கே கருவியாம்.

திருவுடையான் கைப்பட்ட திருவே உபயோகப் படுவதாம். உடமைக்கு ஆண்மை இன்றியமையாதது. பொருளைச் சேர்ப்பதுடன் அதனை ஆளும் தன்மை (ஆண்மை) யையும் தேடிக்கொள்ள வேண்டும். பொருட்களைப் பகுத்து அளிக்குமிடத்து ஒவ்வொரு பொருளையும் அவ்வப் பொருளை உபயோகிக்குந் தகுதி உடையவரிடம் கொடுப்பதே தேச பொருளாதார விஞ்ஞானமாம்.

 

ஒரு தேசத்தின் செல்வத்தை மதிக்குமிடத்து ஆண்டு உள்ள பொருளை மட்டுமல்ல, அப்பொருளை வைத்திருப்போர்களின் தகுதியையும் கணிக்க வேண்டும். செல்வர் எனக் கருதப்படுபவர் பலர் உண்மையில் அவர்களது பணப்பெட்டிகளை ஒத்தவரே. பொருளை ஆளும் தகைமை சிறிதும் இல்லாத இவர்கள் ஒரு காலத்தும் செல்வத்தாலாம் பயன் கொள்ள மாட்டார்கள்.

 

பாசி படிந்த குளமும், ஆற்றிற் சுழியும் மற்றும் பயனற்றனவாய்-மக்களை அல்லது கால் நடைகளை அமிழ்த்தவே கிடப்பனவாயிருந்தும், ஆறு வற்றிய காலத்து வேறு நீர் கிடையாதபோது நீர் உதவக் கூடியனவாதல் போல, இவர்களிற் சிலர் வைத்திருக்கும் பொருள் சாதாரண காலங்களில் சற்றும் பயன் படாது அல்லது தேச பொருளாதார விருத்திக்குத் தடையே புரிந்து தேசத்திற் பெரும் பஞ்சம் வந்தபோதே பயன்படும் தன்மையதாம்.


“பிறர்க்கு தவி செய்யார் பெருஞ் செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்-- பிறர்க்கு தவி
செய்யாக் கருங்கடனீர் சென்று புயன் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு"


என்னும் ஆப்த வாக்கியத்திற்கு இலக்காகப் பிறர் மூலமாகவே பயன் படும் செல்வம் உடையர் சிலர்.

 

தகவிலான் கைப்பட்ட தன்மையால் "நல்லார் கட்பட்ட வறுமையின் இன்னா" தாய், "ஆக்கம்" ஆகும் தன் இயல்பு இழந்து, "அழிவு" ஆகித் தன் னைச் சூழ அழிவும் துன்பமும் பரப்பும் பொருளும் உண்டு.

 

தாம் இருக்கும் வரை தமது செல்வத்தை எதற்கும் பயன்பட வொட்டாராய், வெறுமே காலஹாணங்களாக இருப்பவரும் சிலர். தேசம் அளவுக்கு மிஞ்சி வேகமாகச் செல்லுந்தகையதாயின், இவர்கள் அந்த வேகத்தைத் தணித்தலால் இவர்களாற் சிறிது பயன் உண்டு.

 

பொருளும் ஆண்மையும் ஒருங்கு சேர்ந்த வழியே "ஆக்கம்'' ஆகும் ஆயின், "இரு வேறுலகத் தியற்கை திருவேறு, தெள்ளிய ராதலும் வேறு" என்றபடி இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இயைவது அரிதாகின்றது.

 

ஆண்டகைமை உடையான் பொருளை அலக்ஷியமாகக் கருதி இகழ்ந்து தள்ளும் இயல்புடையான். பொருளும் ஆண்மைக் குணத்தை அரித்துத்தின்னும் சுபாவம் உடையது. தேச பொருளாதார சாஸ்திரத்தின் கஷ்டமெல்லாம் ஒன்றை யொன்று அழிக்கும் பாங்குடைய இவை இரண்டையும் ஒருங்கியைத்து வளர்ப்பதிலேயாம்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ -

மார்ச்சு, ஏப்ரல், ஜுன் ௴

 

 


 

 

 

No comments:

Post a Comment