Sunday, September 6, 2020

ரொமானிய ஆட்சியில் பிரிட்டானியர் அடைந்த நன்மை தீமை 

பொடீஸியா கலகத்தினால் விழிப்படைந்த ரொமானியர் சுமார் கி. பி. 150-450-வரையில் சமாதான முறையில் பிரிட்டானியரை ஆளத் தலைப்பட்டனர். ஜனங்கள் பெரும்பாலும் சமாதானத்தையனுபவித்தனர். நாகரிகத்தில் தேர்ச்சி பெற்ரனர். நாட்டின் பொருளாதார நிலையிலும் விசேஷ அபிவிருத்தி யேற்பட்டது. அக்காலத்திய பிரிட்டனுக்கு நம் நாட்டில் தஞ்சாவூர் ஜில்லாவுக்குத் தென்னிந்தியாவின் சிங்காரத்தோட்டம் என்ற சிறப்புப்பெயர் ஏற்பட்டதே போன்று, "வடபாகத்தின் தானியக களஞ்சியம்" என்ற சிறப்பும் உண்டாயிற்று. முதலாவதாக ரொமானியர் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த நிலங்களைச் சார்ந்த காடுகளை யழிதது, சதுப்பு நிலங்களைப் பண்படுத்தி, விவசாய யோககியமுள்ள நிலங்களாகச செய்து கொண்டனர். பிரிட்டனியத தலைவர்கள் பலரும் தத்தம் நாடுகளில் செய்யத் தலைப்பட்டு விவசாய யோககியமான நிலங்களின் பரப்பளவு அதிகம் ஆக்கினர். அடுத்து ரொமானியரின் தேர்ந்த விவசாய முறைகள் பிரிட்டனில் பிரிட்டனியரால் அனுஷ்டானத்தில் கொண்டு வரப்பட்டு தானிய விளைவு அதிகமாக ஹேதுகரமாயிற்று.

 

மூன்றாவதாக ரொமானியர் வசிக்கும் பிரதேசங்களில் பட்டணங்கள் உண்டாகி, புதிய புதிய நாகரிக வீடுகள் கட்டப்பட்டதைப் போல் பிரிட்டானியத் தலைவர்களுடைய பிரதேசங்களிலும் பட்டணங்களும் நாகரிக வீடுகளும ஏற்பட்டன. அதற்கு மேலாக, ஒவ்வொரு பட்டினத்திற்கும் போக்கு வரவு சௌகரியமாக இருக்க நல்ல சாலைகள் போடப்பட்டன. நதிகளுக்குப் பாலங்கள் கட்டப்பட்டன. சாலைகளில் பிரயாணம் செய்வதற்கு பந்தோபஸ்துகளும் உண்டாயின. இவ்விதமாகப் போக்குவரவு சாதனங்கள் சரியாகவே வியாபாரம் அபிவிருத்தியாகிச் செல்வப் பெருக்கம் ஏற்பட்டது. இதில் பிரிட்டானியருக்கு உண்டான சந்தோஷம அளவில்லை.

 

ஆறாவதாக, செல்வப்பெருக்கம் உண்டாகவும் ஏற்பட்ட பணத்திற்குச் செலவு வகை உண்டாகுமாறு நாகரிக வாழ்வில் ஈடுபட விரும்பிய பிரிட்டானியர், ரொமானியரைப் போல உடுக்கவும், ஆபரணங்கள் செய்து கொள்ளவும், பொழுது போக்கவும், உண்ணல் ஆடல் பாடல்களில் ரொமானிரைக்கைப்பற்றவும் தொடங்கி, அதிலும் தேர்ச்சி பெற்றனர். மேலும் தங்களை ஆளுபவருடைய மதமான கிறிஸ்தவ மதத்தை யனுஷ்டிக்கத் தொடங்கி அவர்களைப் போல மாதா கோவில்களைக் கட்டி, பள்ளிக் கூடங்களையும் ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடைய பாஷைகளையும் கலைகளையும் கற்றுத் தேர்ந்து வரலானார்கள்.

 

இவ்வாறு நாகரிகத்தில் தேர்ந்து சிறந்த பிரிட்டானியர்களிடம் மலைவாசிகளாகிய பிரிட்டானியரும், ஸ்காட்ஸ், பிக்ட்ஸ் என்ற ஆதிதாயாதிகளும் இந்தப் பளபளப்பு பிரிட்டானியரிடம் பொறாமை கொண்டு தங்கள் மலை வாசங்களிலிருந்து அடிக்கடி இவர்களுடைய பிரதேசங்களைத் தாக்கிக் கொள்ளையடித்து வரலாயினர். அவ்விதம் அவர்கள் வராதவாறு ஆளும் ரொமானியர் ஆங்காங்கு கோட்டைகளையும், அரண்களையும் மதில் சுவர்களையும் கட்டி ஆயுதபாணிகளான வீரர்களை வைத்துக் காவல் காத்து வந்தனர்.

 

தவிரவும் கடைசியாகப் படித்துத் தேர்ந்து, யுத்தப் பயிற்சியிலும் சிறந்த பிரிட்டானியர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் இதர பாகங்களைக் காக்க உத்தியோகங்களில் எடுக்கப்பட்டனர். பிரிட்டானிய வீராடங்கிய சிறந்த சேனைகளும் அப்படியே அயல் நாடுகளில் சம்பளம் பெற்று வந்தன. ஆனால் எவ்வித நன்மையும் உடன் பிறந்த தீமையின்றியிருப்பது கிடையாதென்பது வெளிப்படை. காடுகள் அழிக்கப்பட்டு நிலங்களைப் பன்படுத்தும் காரியங்களில் அநேக ரொமானிய புத்திசாலிகளுக்குப் பெரிய சம்பளங்கள் கிடைக்க ஏற்பாடாயிற்று. ஒரு உபத்திரவ காலத்தில் ஒளிந்து கொள்ளக்கூடிய இயற்கைப் பாதுகாப்புக்களைப் பிரிட்டானியர் இழந்தனர்.

 

விளைந்த தானியங்களை சௌகரியமான விலை கிடைக்கும் பிரதேசங்களில் விற்கச் சுதந்தரமின்றிப் பெரும்பாலும் ரோமுக்கே அனுப்பப்பட்டு வந்ததனால் ரொமானியரால் கொடுக்கப்பட்டதே விலையாகும். ஆனால் பேர் மட்டும் "பெத்தபேர்'' கிடைத்தது.

 

போக்குவரவு சாதனங்களினால் தானியம் சுலபமாக நாட்டைவிட்டு வெளியேறி உள்நாட்டு ஏழைக் குடிகளுக்குத் தானியப் பொருள் விலை கிராக்கி ஏற்பட்டது சகஜமும் பிரத்தியக்ஷனுபவமுமன்றோ? தவிரவும் போக்குவரவுக்குரிய சாதனங்கள் சேனைகள் நடத்துவதற்கும் சுலபமாக இருந்ததோடு அரைகுறையாகக் கிடந்த தேசாபிமானம் நசிக்கவும் ஹேதுவாயிற்று. பின்னென்ன தான் ஆகும்?

 

புதிய பட்டணங்கள், புதிய வீடுகள், புதிய உடைகள், புதிய ஆபரணங்களை யடைய, ரொமானிய கட்டட வேலைக்காரர்கள், ரொமானிய உடைதைப்போர், ரொமானிய தங்க வேலைக்காரர்கள், ரொமானிய கட்டட நிர்மாணஞ் செய்பவருக்கு வந்த கொஞ்ச லாபமும் பங்கிடப்பட்டது! நாகரிகத்தின் விலை கொஞ்சமாயிருக்குமா? ரொமானியப் பழக்க வழக்கங்கள் மலிந்து பிரிட்டானியர் பூராவும் உருமாறினர். அந்நிய நாகரிகப் பித்தம் தலைக்கேறி விட்டது.

 

அன்னிய நாகரிகப் பித்தத்தினால், எற்படக்கூடிய திடபல நஷ்டம், சோம்பல் வாழ்வில் ஆசை, களியாட்டங்களில் பொழுது போக்க இச்சை முதலிய அண்ணன் தம்பிமார்களும் சேர்ந்தனர். ஏதேனும் கொஞ்சம் இருப்பினும் கல்வியபிவிருத்தியில் உண்டான உத்தியோகப் பைத்தியம், பிரதேசப் பிரயாண இச்சை, ஸ்வதேச வெறுப்புக்கள் பூர்த்தியாகக் காலியாக்கின.

 

இதைக் கண்டு புழுங்கும் சில தேசாபிமானிகளின் கொதிப்பைப் பயமுறுத்தி யடக்க ஆங்காங்கு கட்டப்பட்ட அரண்களும் அவைகளிலுள்ள வீரர்களும் தயாராயிருந்தனர் என்பதைச் சொல்லாமலே வாசகர்கள் அறிவர்.

 

ஆகப் பலமிழந்த கோழையராகி, தாய்த் திருநாட்டுக்கு இன்னல் வர்துற்றபோது கையை விரிக்கவும், தற்காப்பு இன்றி அநாதைகளாய்ப் பரிதவிக்கவும் நேர்ந்த விபரம் அடுத்த கதையில் விளங்கும்.

 

(நன்மை தீமையொன்றும் ஆய்ந்து பாராது கேவலம் கண்மூடித்தனமாக நவ நாகரிகப் பித்தத்தில் மூழ்கிவரும் நம் ஆண் பெண் இளைஞர்கள் சரித்திர உண்மையை நன்குணர்வார்களாக! உள்ளதை உள்ளவாறு உரைத்து பாரத நாட்டின் சீரையும் சிறப்பையும் சிதையாது காக்கப் பாடுபட்டுவரும் ஆனந்தனும் அதன் அன்பர்களும் சிறந்து வாழ இறைவன் திருவருள் புரிக!)

 

ஆனந்த போதினி – 1932 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment