Saturday, August 29, 2020

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

முன்னொரு காலத்துக் கோதாவரி நதிக்கருகில், 'புஷ்பபுரி' என்றும், பிரமபுரம்' என்றும் பெயருடைய நகரங்க ளிரண்டுண்டு. அவை, கல்வியாலும் செல்வத்தாலும் கைத்தொழிலாலும் வர்த்தகத்தாலும் மேன்மை பெற்றவை. அந்நகரங்க ளிரண்டினையும் ஆண்டு வந்த 'இராஜ திலகன்' என்னுமாசன், கல்விக்கு உறைவிடம், கற்றோர்க்கு அருங்கலன், வறியோர்க்குப் பெருநிதி, கருணைக்கு அருங்கடல், அறத்துக்கு நற்றோழன், மறத்துக்குக் கடும்பகை. இவ்வாறு சிறந்து விளங்கா நின்ற அவ்வரசன் செங்கோல் செலுத்தி வருநாளில், மாதம் மும்மாரிபெய்தமையால், அப்பட்டணங்க ளிரண்டும் நீர்வள நிலவளங்களாற் செழித்து விளங்கின.

 

அவற்றுள் புஷ்பபுரி என்ற நகரத்தில், 'தேவதத்தன்' என்னும் ஓர் அந்தணனும், பிரமபுரமென்றநகரத்தில் தேவராதன்' என்னும் ஓர் அந்தணனு மிருந்தார்கள். அவர்கள் கல்வியிற் கரைகண்டோ ராயினும், வறுமைப்பிணியால் வருத்தமுற்று வந்தனர். ஆதலின், அவர்கள் தினந்தோறும் பற்பல இடங்களிற் சென்று பிச்சையெடுத்துச் சீவனஞ் செய்ய வேண்டுவதாயிற்று. அவ்விருவரில் தேவராதன் பெருங்குடும்பி. அவன் மனையாளோ கற்புக்கரசி, கணவனையே கடவுளாகக் கருதுந்தன்மையள்; அவனது குறிப்பறிந்து நடக்குங் குணவதி, பொறுமையே தனக்குப் பூஷணமாகக் கொண்ட பெண்மணி. இவ்வாறு குணச்சிறப்புடைய அம்மங்கை, கணவன் நாள்தோறும் பிச்சையெடுத்துக் கொணரும் அரிசியைச் சமைத்துக் கடவுளுக்கு நைவேத்தியம் செய்து, கொழுநனுக்கும் மக்களுக்கும் அளித்துப் பின்பு, ஏதேனும் ஒரு சிறிது மிஞ்சுமாயின் அதனைத் தான் அருந்துவாள்.

 

இவ்வாறாக, தேவராதன் தான் பிச்சைக்குச் செல்லுகையில், கடவுளை நம்பினோர் கைவிடப்படார்,'' என்று சொல்லிக் கொண்டே செல்வது வழக்கம். தேவதத்தனோ என்றால், அவன் கடவுளிடத்து அத்துணை நம்பிக்கை கொண்டவனல்லன். இங்ஙனம் தேவராதன் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்ட இராஜதிலகன், அதன் உண்மையைச் சோதிக்கக் கருதி, தன் மந்திரியினிடம் ஆலோசிப்பானாயினான். இங்ஙனம் பலநாள் கழிய, அப்பால், ஒருநாள் தேவதத்தன் தன் வழக்கப்படி பிச்சைக்குச் சென்றபோது, அரசன் மாளிகைக்குச் சென்றான்.

 

அரசன், ஒரு பூசணிக்காயின் மேற்பக்கத்தில் ஓரங்குல அகலம் துளையொன் றுண்டாக்கி, அக்காயினுள் ளிருக்கும் விதைகளை எடுத் தெறிந்துவிட்டு, அத்துளை வழியே பல பொன் நாணயங்களை அதனுட் செலுத்தி, பின்பு அத்துளையைக் கண்ணுக்குத் தெரியாதபடி மூடி, அதனை அத்தேவதத்தனிடம் கொடுத்து அனுப்பினான். அது பெற்ற தேவதத்தன், அக்காயுடன் தன் இல்லம் நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் தேவராதனைச் சந்தித்தான். உடனே தேவதத்தனுக்கு, "இந்தக் காயைக் கொண்டு செல்வதில் இவ்வளவும் நமக்கு உபயோகமாவ தில்லையே? வீணேதானே அழியும். ஆதலின், இதனைத் தேவராதனுக்குக் கொடுத்தால், இது முற்றும் பயன்பெறு மன்றோ? அவனோ பெருங்குடும்பி, ஆதலால், இதனை அவனுக்கே கொடுத்து விடல் வேண்டும்'' எனும் எண்ணம் உதிக்க, அவன் அங்ஙனமே அதைத் தேவராதன் கையிற் கொடுத்துச் சென்றான்.

தேவராதன், அதனைத் தன் வீடு கொண்டு சென்று, மனைவிபாற் கொடுக்க, அவள் உடனே அதனைத் திருத்துகையில் அதிலிருந்த பொன்நாணயங்கள் பலபல வென்று கீழே விழுந்தன. அதுகண்ட அம்மாது, அச்சமும் வியப்புங்கொண்டு தன் கணவனுக் கறிவிக்க, அவன் அதனுண்மை யறியாதவனாதலின், திடுக்கிட்டு, "இது ஏதோ தெரியவில்லையே? இதனை நாம் வைத்துக்கொள்ளல் வீண்பழிக்கன்றோ காரணமாகும்? ஆதலால், தேவதத்தனிடத்திலேயே இதனைச் சேர்த்துவிடல் வேண்டும்" எனக்கருதி, அவனைத் தேடிச்சென்றான். தேவராதன் தேவதத்தனை எங்குங்காணப் பெறாமையால் மனக்கவலையோடு அரசனிடம் அணுகி, நிகழ்ந்தவற்றைக் கூறினான்.

 

அரசன், தேவராதனுடைய உண்மை யுடைமைக்கும், தேவதத்த னுடைய தயாகுணத்துக்கும் வியந்தமையோடு, கடவுளை நம்பினோர் பெறலாகும் பேறுகளை நினைந்து நினைந்து மகிழ்வானாயினான். அப்பால் அரசன், தேவதத்தனையும் வருவித்து, தான் செய்த செய்கையின் உண்மையை விளக்கி, தேவராதனையே பொன் நாணயங்களைப் பெறுமாறு செய்து தேவதத்தனுக்கும் சிறிது பொருள் கொடுத்தனுப்பினான். பிறகு, இருவரும், தம்முள் சிறிதும் கலகங்கொள்ளாமல், இல்லஞ்சென்று இன்பமாய் வாழ்ந்தனர்.

 

ஆதலின், என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! எக்காலத்தும் தெய்வத்தை நம்பினோரே உயர்ந்தவராவர். கடவுள் பாற்சிறந்த நம்பிக்கை கொள்ளாத தேவதத்தன், தான் அளவற்ற பொன் நாணயங்களைப் பெற்றும், அவற்றை அனுபவிக்கப் பெற்றிலன்; கடவுளையே நம்பினவனான தேவராதனே அவற்றை அனுபவிக்கப் பெற்றான். ஆகவே, கடவுளை நம்பினோர், ஒருகாலமும் கைவிடப் படமாட்டார்; என்பதை நீங்கள் திட்டமாகத் தெரிந்து கொள்வதோடு இதர விஷயங்களிலும் சரிவர நடந்து கொள்ள வேணுமாய் வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

எஸ் - எம். பிள்ளை,

 கூத்தூர், நாகப்பட்டணம் தாலூக்கா.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

 

No comments:

Post a Comment