Monday, August 31, 2020

 

கோபம் ஆகாது

(க. சிதம்பரம் பிள்ளை)

மனிதனுடைய உள்ளத்தின் கிளர்ச்சிகள் பலவகைப்படும். ஆனால், அக்கிளர்ச்சிகளை தண்மை வெம்மை என்னும் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். மனதின் தண்மை நிலையில் பிறப்பவை அன்பு, தயை, பொறுமை, பணிவு, நட்பு முதலிய நற்குணங்கள். அதன் வெம்மை நிலையிற் பிறப்பவை கோபம், அகங்காரம், பொறாமை, பகைமை முதலிய தீக்குணங்கள்.

வெம்மை நிலையிற் பிறக்கும் தீக்குணங்கள் எல்லாவற்றுள்ளும் மிகக் கொடியது கோபம். மனிதனைத் திடீரென ஆபத்திற் கொண்டுபோய் வீழ்த்தி விடுவதில் கோபத்தைப் போல் கொடியது வேறொன்று இல்லை.

“'நாமெவ்வளவு, அவன் எவ்வளவு? நம்மைச் சிறிதும் மதியாமல் அவமதித்துப் பேசவல்லவா செய்துவிட்டான்' என்று மனம் மட்டும் நினைத்த விட்டாற் போதும். வந்துவிட்டது கோபம்! கோபத்தைக் கண்டவுடனே, முன் பின் எண்ணிப் பார்க்கும் பகுத்தறிவும் ஒளிந்து கொள்கிறது. கோப வெறியில் எதை எதையோ செய்துவிடுகிறான். பின் அது காரணமாக என்னென்னவோ தொந்தரவுகளெல்லாம் நேரிட்டு விடுகின்றன!

ஏன்! நம்மை ஒரு பொருட்டாக மதிப்பவர்களும் இருக்கட்டும்; மதியாமல் இழிவாக எண்ணக் கூடியவர்களும் இருக்கட்டுமே. மதிக்கவில்லையே என்று அவர் மேல் கோபத்தைச் செலுத்தி, பின் அவர்களும் தாமும் ஏன் ஒன்றுபோல் அவஸ்தையை அடைய வேண்டும்!

அசங்கியப் பொருள்களை மொய்க்கக்கூடிய கேவலம் ஈயும்கூட வல்லவா நமது தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அதற்காக அந்த ஈயைக் கோபிக்கிறோமா? இதை எண்ணிப் பார்த்தால் தம்மை இகழும் அறிவில்லா தார்மேல் கோபம் கொள்ளுதல் முறையாகுமா?

"மதித்திறப் பாரும் இறக்க; மதியா

மிதித்திறப் பாரும் இறக்க, - மிசித்தேறி

ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்

காயும் கதம் இன்மை நன்று"

 

[இறக்க = நடக்கட்டும் - அதாவது இருந்து கொண்டிருக்கட்டும். கதம் = கோபம்.]

மனிதன் காத்துக்கொள்ள வேண்டிய செய்கைகள் பலவற்றுள்ளும் மிக முக்கியம் நாவைக் காத்துக் கொள்வதுதான். அறிவில்லாத ஒருவன்
அப்படி நாவைக் காத்துக் கொள்ளாமல் நம்மை வைதுவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நம் மனதுக்கு அது எப்படி இருக்கும்? மிக வருத்தமாக இருக்குமல்லவா? அப்படித்தானே நாம் ஒருவனைக்கோபித்து வையும்போது அவனுக்கும் இருக்கும். இதை மட்டும் நினைத்துப் பார்த்தால் ஒருவனுக்குக் கோபம் வரலாமா?

"காவா(து) ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்

ஓவாதே தன்னைச் சுடுதலால், - ஓவாதே

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து"

[ஓவாது = நீங்காமல், கழத்து = கோபித்து]

நாம் ஒருவனைக் கோபித்தால் அதனால் நமக்கு ஏதேனும் துன்பம் வரும் என்றிருந்தால்தானே கோபிக்கக்கூடாது? எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய நிலைமை நமக்கிருக்கும்போது, பிறனொருவன்மீது கோபங் கொண்டால் என்ன?

அப்படியல்ல; இன்னொருவன்மேல் கோபத்தைச் செலுத்தத்தக்க வலிமை இல்லாதவர் கோபத்தை அடக்கிக்கொள்வதில் வியப்பு என்ன இருக்கிறது? அவ்வித வலிமையுள்ளவர் அக்கோபத்தை அடக்கிக்கொள்வது தான் பெருமை.

வயது முதிர்ந்த கிழவனொருவன் ‘சிற்றின்ப ஆசையை வெறுத்துவிட்டேன்' என்று சொல்வதிலும், பணக்காரனொருவன் 'தருமத்துக்காகப் பொருளுதவி செய்தேன்' என்று சொல்வதிலும் ஆச்சரியம் என்ன இருக்கிறது? காம இச்சையை அனுபவித்து மகிழும் பருவத்தையுடைய வாலிபனொருவன் அவ் ஆசையை அடக்கி வைப்பதும், ஏழை ஒருவன் தனது சிறிய வருவாயில் ஒரு பகுதியை தருமத்திற் செலவிடுவது மல்லவோ சிறப்பு.

"இளையான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள்

இல்லான் கொடையே கொடைப்பயன்; - எல்லாம்

ஒறுக்கும் மதுகை உரன் உடை யாளன்

பொறுக்கும் பொறைய பொறை"

 

[கிளை பொருள் = பெருகக்கூடிய திரவியம், கொடை= தருமம், ஒறுக்கும்= அழிக்கவல்ல, மதுகை உரன் = மிக்க வலிமை]

“கோபம் என்பது மனதின் ஒருவசைக் கிளர்ச்சிதானே. மனிதனுடைய வாழ்வில் பல சம்பவங்களும் நேரும்போது ஒருவேளை அக்கோபம் வரும்படியான செயல்கள் ஏற்பட்டுவிட மாட்டாவா?' என்கலாம்.

உண்மையே ஆஞல், அந்த வகையில் கோபங்கொள்ள நேர்ந்து விடும் பட்சத்திலும் உள்ளம் தூய்மை யடைந்த அறிவாளிகளாக இருந்தால், அவர்களுடைய அக்கோபமானது, தண்ணீரைக் காய்ச்சும்போது மட்டும் அது சூடாகி, பின் எப்படி அச்சூடு தானே தணிந்து கொள்கிறதோ அது போல், வேருறொருவர் ஆற்றாமலே தானே தணிந்துவிடும்.

அறிவில்லாத கீழோர்களுக்கு வரும் கோபம் அப்படியல்ல. பல நாள் நீடித்து நின்று, எவர் தணித்தாலும் தணியாமல், அதற்குக் காரணமா விருந்தவர்களை சமயம் வாய்க்கும்போ தெல்லாம் அது தொந்தரவுகள் செய்துகொண்டே இருக்கும்.

“நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும்; - அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல்தானே தணியுமே,

சீர்கொண்ட சான்றோர் சினம்"

[நெடுங்காலம் ஓடினும் = வெகுநாள் சென்றாலும், வெகுளி = கோபம், பரக்கும் = பின்னும் அதிகரிக்கும், அடுங்காலை = காய்ச்சும்போது]

கோபம் வந்தகாலத்தில் மட்டுமல்ல. சாதாரண காலத்தில் கூட அசங்சியமான சொற்களை பேச்சுக்கு இடையில் உபயோகிப்பது சிலருடைய குணம். ஆனால், எந்தக் காலத்திலும் மேன் மக்களுடைய வாயிலிருந்து அப்பேர்ப்பட்ட சொற்கள் வரவே கூடாது. அப்படி வரவிடுவது மேலோர்களுக்கு அழகல்ல.

'வைதவனைத் திருப்பி வைவதில் தப்பு என்ன இருக்கிறது?' என்கலாம். கடித்த நாயைத் திருப்பிக் கடித்தவர்கள் உண்டா? வைதவனைத் திருப்பி வைவது கடித்த நாயைத் திருப்பிக் கடிப்பது போலத்தான்.

“கூர்த்தநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்

பேர்த்துமாய் கௌவினார் ஈங்கில்லை; நீர்த்தன்றிக்,

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு?"

 

      [கூர்த்து = கோபங்கொண்டு, பேர்த்து = திருப்பி, நீர்த்தி அன்றி = நல்ல சொற்களைப் பேசாமல்.]

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 



No comments:

Post a Comment